Saturday 31 December 2016

சாமத்தில் முனகும் கதவு

சாமத்தில் முனகும் கதவு” கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதை தொகுப்பு. இந்த ஆண்டு வாசகசாலை வாசகர்களால் சிறந்த சிறுகதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. இவரின் கதையை முதன் முதலாக இப்போது தான் வாசிக்கிறேன்.

இந்த தொகுப்பில் பதினெட்டு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான கதைகள் வாழ்வியல் துயரங்களை சொல்கிறது என்றாலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கும் மொழியில் ஆசிரியரின் கதைகள் ஒவ்வொன்றும் ஆழ்மனதில் அடுத்தடுத்து உணர்வலைகளை எழுப்பி சில நிமிடம் ஸ்தம்பிக்க செய்கிறது.

சிறுவனின் பார்வையில் சொல்லும் ”கைக்கு எட்டிய வானம்” கதையிலும், ”ட்ரேடு” கதையிலும் சிறுவர்களின் உலகத்துக்குள் நுழைந்து சொல்லி செல்லும் இடத்திலும் பேண்டஸியும், குழந்தைகளின் பயமும், குழந்தைகள் பெற்றோர்களால் படும் மனக்கஷ்டங்களும், அதிலிருந்து வெளியே வர அவர்கள் கையாளும் உபாயத்தை முதல் கதையிலும், குடும்பத்தார் மீது ஏதோ ஒரு கணத்தில் துளிர்விடும் வெறுப்பு ஆலகால விஷமாக உள்ளேயே தங்கி விடுவதை ட்ரேடு கதையிலும் பதிவு செய்திருக்கிறார்.

”வெளவால்கள் உலவும் வீடு”, “அப்ரஞ்ஜி” இரண்டு கதையின் மாந்தர்களை போன்ற மனிதர்களை நான் தரிசித்திருக்கிறேன். மனித மனத்தின் சிக்கு பிடித்த மனதை துல்லியமாக பதிவு செய்திருப்பார் இதில் ஆசிரியர். குடித்தே தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு அண்ணன், அவன் மீது அலாதி பிரியம் வைத்திருக்கும் அவன் தம்பி அண்ணனின் இறுதி நாட்களின் போது அவனை காண வருகிறான். தம்பியின் நினைவிலிருந்து மேலேழும்பும் அண்ணனின் நினைவு, தன்னுடைய சிறுவயதில் எல்லாரையும் கவனித்து கொண்ட அண்ணன், கவனிப்பாரற்று கந்தல் துணியாக கிடப்பதை கண்டு ஆற்றாமையிலும், இயலாமையிலும் மனம் வெதும்புகிறான்.

உள்ளூரிலேயே இருக்கும் சகோதர சகோதரிகள் எட்டி கூட பார்க்காமல் இருப்பது, தம்பியை பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல அண்ணன் இறந்து விட அவனுக்கு இறுதி சடங்கை செய்கிறான் தம்பி. உயிருடன் இருந்த வரை அந்த வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்காத  உடன் பிறந்தவர்கள் அந்த பரம்பரை விட்டுக்காக எட்டி பார்க்கிற போது எரிச்சலைடையும் தம்பி அதிரடியாக முடிவு எடுப்பதுடன் கதை முடிகிறது. இந்த கதை மனிதர்களின் சுயநலத்தை அப்பட்டமாக பதிவு செய்கிறது.

அது போல அப்ரஞ்ஜி கதை தொன்னூறு வயது விதவையின் கதையை பேசுகிறது. இந்த அப்ரஞ்ஜிகளை எண்பது தொன்னூறுகளில் பார்த்திருக்கிறேன். கல்யாண வீடுகளில் வேலை செய்தும், சாதாரண நாட்களில் ஒரு காபிக்காகவும் ஐந்து ரூபாய் காசுக்காகவும், ஒரு மரக்கால் மாவை முறுக்கு சுற்றி கொடுக்கும் அப்ரஞ்சிகள், அப்பளம் இட்டுக்கொடுக்கும் அப்ரஞ்ஜிகள், துளி கூட அவர்கள் உழைப்பை உரிஞ்சுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்களிடம் பத்திய லேகியம் இடிக்கும் வேலையிலிருந்து, பூ கட்டி வாங்கி கொள்வது உட்பட ஏகப்பட்ட வேலைகளை வாங்கிக்கொள்வர். நீ இல்லைன்னா ஒரு வேலையும் ஓடல என அங்கலாய்த்து, ஒரு வேலை பாக்கி இல்லாமல் வாங்கி கொண்டு, வீட்டில் மிச்சம் மீது இருக்கிறதை கொடுப்பதையே பெரிய தானமாக கொடுக்கும் மகராசிகள் தான் பெரும்பாலான மனிதர்கள்.

உன்னை போல உண்டா என்று கொண்டாடும் அதே வாய், அவர்கள் ஒரு பத்து ரூபாய் பணத்தை தயங்கி தயங்கி கேட்டால், சொத்தையே கேட்டது போல முணு முணுத்து கடுகடுக்கு மனிதர்களை பார்த்திருப்பதால் அப்ரஞ்ஜி கதை மனதை நெகிழச்செய்தது.

எறும்புடன் ஒரு கதை புனைவு தான் எனும்போதும் வாசிக்கும் வாசகனை  எறும்பின் நியாயத்துக்குள் கொஞ்சம் ஹாஸ்யமாக கடத்த முனைந்திருக்கிறார். அது போல புனைவு வகை எழுத்தை அழுத்தமாக சொல்லி இருக்கும் வருகை கதையும் என்னை ஈர்த்த கதைகள். எறும்பு கதைக்குள் எறும்பை பேச விட்டு மனிதனின் குணத்தை பதிவு செய்திருக்கும் ஆசிரியர் புலி கதையில் சமூகத்தின் குணத்தை பதிவு செய்திருப்பதாக தான் நான் பார்க்கிறேன். வாசிப்பவர்களை பொறுத்து இது வேறுபடலாம் என்று தோன்றுகிறது.

முகங்கள் கதை மிக சுவராஸ்யமான கதை. எனக்கு மனித முகங்களை நினைவு வைத்துக்கொள்வது போல கடினமான விஷயம் ஏதுமில்லை. இதில் ஆசிரியர் ஒவ்வொருவர் முகத்தையும் வகைமை படுத்தி, ஒப்பு நோக்கி நினைவு கொள்ளும் மனிதனை பற்றி பேசுகிறார். இணையம் மூலம் பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட அப்போது அவர்கள் முகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆச்சரிய தக்க வகையிலும், சில முகம் அதிர்ச்சி தரும் வகையிலும் இருக்கிறது. இதிலிருந்து மீளாமல் இருக்கும் ஆசிரியரின் நீண்ட நாள் நெருங்கிய நட்பு ஒருவரை பற்றி தகவல் தெரிய அவரை காண கஷ்டப்பட்டு அவர் இருக்கும் இடத்தை தேடி செல்லும் ஆசிரியர் வீட்டுக்கு அருகில் போனதும் நட்பாக இருந்த அந்த பிம்பத்தின் மீது வேறு பிம்பத்தை பொருத்தும் தைரியம் இல்லாமல் திரும்பி விடுவதாக கதை முடியும்.. கொஞ்சம் ஆழமாக இதற்குள் இருக்கும் உளவியலை யோசித்தால் நம்மால் சில மாற்றங்களை ஜீரணிக்கமுடியாத தன்மையை இந்த கதை பிரதிபலிப்பதாக கொள்ளலாம்.

வாசமில்லா மலர் கதை பதிவு செய்யும் பெண்ணின் பொறாமை என்னும்  இருண்ட பக்கத்தை பதிவு செய்கிறது. ஒரு அக்கா, தங்கைகளுக்குள் ஏற்படும் பொறாமையை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். சில பெண்களிடம் இருக்கும் இந்த குணங்களை, அழகு தரும் கர்வத்தையும், கூட பிறந்தவளை கூட அலட்சியப்படுத்துவதையும், அகங்காரத்தையும் சந்திரகலா என்கிற கேரக்டர் மூலமும், பெண்ணிடம் இருக்கும் இன்னொரு குணமான எதையும் வரும் போக்கில் எதிர்கொள்ளும் பெண்ணின் குணத்தை சூர்யகலா என்ற இரு சகோதரிகள் மூலம் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

மாங்காச்சாமி கதையும் வேறோரு தளத்தில் பேசுகிறது. கூட்டுக்குடும்பத்தின் சிதைவுக்கு காரணமாக இருக்கும் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. ஆனால் அந்த குழந்தையை வெளியில் வெறுத்தாலும் உள்ளுக்குள் அந்த குழந்தை மீது இருக்கும் பாசம் வெளிப்படும் இடம் ஆச்சரியப்படுத்துவதுடன், மனித மனதின் ஆழத்தை எளிதில் இனம் காண முடியாததை பேசுகிறது.

வாசலில் நின்ற உருவம் கதையில் படுத்த படுக்கையாய் கிடக்கும் மனிதன், இறப்பை எதிர்கொள்ளும் நொடிகளுக்கு முன் இருக்கும் சில காலம் வரை அவனுக்கு நடக்கும் மனப்போராட்டமும், ஒருகட்டத்தில் மரணம் அவனை சுவீகரிக்க கையாலாகத்தனத்துடன், அதனை எதிர்கொள்ள பயந்து ஆனால் வேறு வழியின்றி மரணத்தின் பிடிக்குள் இழுத்துச்செல்லப்படும் மனிதனின் கதை.

இத்தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு உணர்வை அழுத்தமாக பதிவு செய்கிறது. மொழியும் நடையும், கதையை கொண்டு செல்கிறது என்றாலும் சில கதைகளில் நடை தொய்வாகவும் இருக்கிறது. சாமத்தில் முனகும் கதை வீரியமான கதை என்றாலும் அது தீவிர இலக்கிய வாசகர்களுக்காகவே எழுதப்பட்டது போல தோன்றியது. பிணவாடை கதையும் இதே உணர்வை ஏற்படுத்தியது. எளிய கதையை  அடர்த்தியான மொழி நடைக்குள் புதைத்து வைத்தது போன்ற உணர்வு.. மற்றபடி பல்வேறு உணர்வுகளை, பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் அழகாக பதிவு செய்திருக்கும் விதம் வாசிப்பவர்களை பொறுத்து பல்வேறு சுவைகளையும், பல்வேறு கோணங்களையும் முன் வைக்கும் ஒரு தொகுப்பு..

Friday 2 December 2016

நாற்பதின் தொடக்கம்

முன்னுச்சியிலும் காதோரத்திலும் நரை
அரும்ப தொடங்கி விட்டது.
முகத்தின் பொலிவும் மெல்ல மங்குகிறது
எப்போது வேண்டுமானாலும் வருவேன்
என் இஷ்டத்துக்கு கொட்டி தீர்ப்பேன்
முடிந்தால் கட்டுப்படுத்திப் பார் என சவால் விடுகிறது
மாதாந்திர உதிரப் போக்கு
உணர்வுகளை மேலும் கீழும் நகர்த்தி
சூறாவளியாய் சுழன்று
சந்தோஷத்தின் உச்சத்துக்கும்
துயரத்தின் விளிம்புக்கும்
வெறுமையின் சூனியத்துக்கும்
அடுத்தடுத்து பயணித்து
ஆட்டம் காட்டுகிறது மனம்
வலியில் துவண்டு விழும்
உடலை கோர்க்கும் வலிமையை
சிதறடித்து கைகொட்டி சிரிக்கிறது வயது.
மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்காமல்
இழுத்தடிக்கிறது இயலாமை
நாற்பதின் ஆரம்பத்தை
அழுந்த பதிவு செய்கிறது காலம்..
வலியில் துவண்டு சரியலாம்
உணர்வுகளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
இழப்பது அறியாமல் இழக்க நேரிடலாம்
வீழ்ந்தாலும் இழந்தாலும்
வீறு கொண்டு எழ தைரியமுண்டு
வெல்லும் ஆற்றலை வளர்க்க
நெஞ்சில் உரமுண்டு.
இதோ மனக்கண்ணில் விரிகிறது
என் பிரபஞ்சம்
பாலினம் கடந்து கைகுலுக்குகிறேன்.
தனித்து பயணிக்க பழகுகிறேன்
குடும்பத்துக்குள் முடக்கிய சிறகுகளை
மெல்ல மெல்ல சீர் செய்கிறேன்.
எனக்கான வெளியை தேடி
பறக்க ஆயுத்தமாகிறேன்.
நரை சிறகுக்கு அழகு சேர்க்கிறது
கைக்குலுக்கும் கரங்கள்
வலுசேர்க்கிறது என் உலகுக்கு
உடலின் தளைகள் அறுபட
ஆசுவாசம் அதிகமாகிறது
எனக்கே எனக்கான உலகு
கை நீட்டி வரவேற்க
கம்பீரமான புன்னகையோடு
பயணப்பட ஆயுத்தமாகிறேன்.......

Thursday 10 November 2016

பதினொரு நிமிடங்கள் - பாவ்லோ கொய்லோ

பதினொரு நிமிடங்கள் (லெவன் மினிட்ஸ் - Eleven Minutes) - பாவ்லோ கொய்லோ (Paulo Coelho)-வின் புத்தகம். தமிழில் க.சுப்ரமணியன் எதிர் வெளியீடு.

விபச்சாத்தை தனது தொழிலாக செய்த மரியா என்ற பெண்ணின் கதையை பேசுகிறது நாவல். பிரேசிலில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து மரியாவுக்கு புரியாத வயதில் ஒரு காதல் வருகிறது. ஆனால் அது தோல்வியில் முடிய காதல் குறித்த ஏக கற்பனையில் இருந்த மரியா அந்த வலியால் துவண்டு போகிறாள்.  ஆனாலும் உண்மையான காதலுக்கு ஏங்குகிறாள். பள்ளி படிப்பு முடிந்தவுடன் அந்த கிராமத்திலேயே ஒரு கடைக்கு வேலைக்கு போகிறாள். அவள் அழகில் மயங்கும் அந்த கடை முதலாளி அவளை காதலிக்கிறான். ஆனால் அவள் கனவோ நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறது.

ஓரளவு பணம் சேர்த்து பக்கத்தில் இருக்கும் ரியோ நகரத்தை நான்கு நாட்கள் சுற்றி பார்க்க செல்கிறாள். அவளிடம் நல்ல உடையோ, செருப்போ கூட இல்லை. இவளிடம் இருக்கும் அரத பழசான ஒரு நீச்சலுடையில் குளிக்க இவளின் அழகை வைத்து நல்ல வியாபாரம் செய்யலாம் என நினைக்குமொருவன் இவளை ஜெனீவாவுக்கு கூட்டி செல்கிறான். அங்கு காபரே டான்ஸராக ஒப்பந்த ஆளாக இவள் வேலை செய்ய நகர வாழ்க்கை இவள் நினைத்தது போல சந்தோசமாக இல்லை. டான்ஸராக போதிய பணம் சம்பாரிக்க முடியாது என்பதை உணர்ந்து ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் ஒப்பந்தத்தால் அங்கேயே தங்க நிர்பந்தம்.

சில நாளிலேயே சந்திக்கும் ஒருவன் மூலம் இவளை ஜெனீவாவுக்கு அழைத்து வந்தவனை வழக்கு போடுவேன் என மிரட்டி கொஞ்சம் பணத்துடன் அவன் விடுதியிலிருந்து வெளியேறுகிறாள். பெரிய மாடலாக வர முயற்சிக்க ஆனால் பணம் சம்பாரிக்கும் நிர்பந்தம் இவளை விபச்சாரியாக மாற்றுகிறது.

பல ஆண்களை சந்தித்தாலும், பாலுறவை ஒரு தொழிலாக வாடிக்கையாளரை திருப்திபடுத்த என்னவெல்லாம் செய்யலாம் அதன் மூலம் அதிகம் பணம் சம்பாரிப்பது என்கிற ரீதியிலேயே சிந்திக்கிறாள். பாலுறவு அவளை பொறுத்தவரை விருப்பு வெறுப்பெல்லாம் கடந்த ஒன்றாக தான் பார்க்கிறாள். அவள் ஆசை எல்லாம் கொஞ்சம் பணத்துடன் பிரேசில் சென்று பண்ணை ஒன்று, வீடு, அம்மா அப்பாவுடன் என்பதாக குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பாரிக்க வேண்டிய பணம் ஒன்றே லட்சியமாக இருக்கிறது.

ஓரளவு பணம் சம்பாரித்து ஊருக்கு திரும்ப முடிவெடுக்கும் நேரம் வரும் போது இரண்டு ஆண்களை சந்திக்கிறாள். இருவராலும் பெரிதும் ஈர்க்கப்படுகிறாள். அதில் ஒருவன் ஓவியன், மற்றொருவன் சாடிஸ்ட். சாடிஸ்ட் மூலம் அவள் காணும் உலகை, வலியின் மூலம் உணரும் உணர்வை தான் உச்சம் என்று நினைக்க ஓவியன் அது இல்லை உண்மையான வலி எது என்பதை அவளை உணர வைக்கிறான். வோட்காவின் துணையுடன் அடையும் உச்சத்தை கேள்விக்குள்ளாக்கும் ஓவியன், அவளுக்கு வேறு விதத்தில் உச்சம் காட்டுகிறான். ஓவியன் , சாடிஸ்ட் இருவரின் மூலமும் இரு வேறு அனுபவங்களை பெறுகிறாள் மரியா. வீனஸ் இன் ஃபர் கதையின் சில இடங்க்ளை மேற்கோடிட்டு காட்டி சாடிஸ்ட் கூறும் வார்த்தைகளும் உண்மைக்கு பக்கத்திலேயே இருக்கிறது உண்மையைவிட கவர்ச்சிகரமாக. 

ஒவியனை காதலித்தாலும், ஒரு அவ நம்பிக்கையிலேயே இருக்கிறாள். மரியாவின் அகப்போராட்டங்களும், பாலுறவு குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது எல்லாம் வார்த்தைகளில் கூற முடியாது. ஓஷோவின் சாயல் கொய்லாவிடம் இருந்தாலும் உணர்வுகளை சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் பாவ்லோ.

பெண்ணின் உச்ச கட்டத்தை ஆராய்ச்சிக்கெல்லாம் உட்படுத்தாமல், வேறு விதமாக அதன் மூலம் ஆன்மாவின் இருப்பை உணர செய்யும் முறையை மரியாவின் மூலம் நுணுக்கமாக ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். என்ன அறிவு தளத்தில் உச்சமாக சுதந்திரத்தை விரும்பினாலும், அதை பிறருக்கு கொடுக்க நினைத்தாலும், பொறாமை உட்பட அனைத்து உணர்வுகளையும் எதிர்கொள்ளும் இடத்தில் பெண்மையின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறார். அறிவாக சிந்தித்து காதல் வலி கொடுக்கும், சுதந்திரத்தை பறிக்கும் அந்த இனிக்கும் உறவு அலுத்துப்போகும்  என்று பலவற்றையும் குழப்பிக்கொள்ளும் மரியா ஓவியனை பிரிய நினைத்து அவனை விட்டு பிரேஸிலுக்கு விமானம் ஏறுகிறாள். ஆனால் இன்னொரு பக்கம் அவனுடன் இருக்க ஏங்கி கொண்டு தன்னை வந்து தடுத்து அணைத்து கூட்டி செல்ல மாட்டானா என்று ஏங்கியவாறே ஒரு இரண்டாம் கட்ட மனநிலையில் பயணிக்கிறாள். அவள் தடுமாற்றத்திலும், எதிர்பார்ப்பிலும் அனைத்து பெண்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார். ஓவியனுடனான பாலுறுவு உச்சத்தின்  மூலம் ஆன்ம சந்திப்பை நிகழ்த்தி இருந்தாலும் சினிமா பாணியில் காதலை எதிர்பார்க்கும் அவள் மனதை அதை நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தும் ஓவியன் என்று நிறைவான முடிவு.

பாலுறவின் வலி, இழப்பு , மேன்மை என்று அனைத்து நுணுக்கங்களையும், பெண்ணின் நுட்பமான அகச்சிக்கலையும், உடல் சிக்கலையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பேசுகிறது நூல். நூலகரகராகவும், மரியாவின் ஒரே தோழியாகவும் வரும் பெண்ணுக்கும் மரியாவுக்குமிடையேவான பாலுறவு குறித்த உரையாடல்கள் மூலம் பெண்களின் பிரச்சனைகளை அலசி இருக்கும் விதம் அருமை.   பாலுறவின் புனிதத்தை ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு பின்  புத்தகத்துக்கு பின் கிட்டதட்ட அதே கருத்தையொட்டி இருக்கும் பதினொரு நிமிடங்கள் பாலுறவு குறித்தான தெளிவான புரிதலை தருகிறது.


ஆசிரியர் சில இடங்களில் அதிகமாக சில உணர்வுகளை குழப்பியிருப்பது போல தோன்றினாலும் இதில் கூறப்பட்டிருக்கும் பாலுறவு குறித்த பார்வைகளும், மரியாவின் தன்னை கண்டடைய எடுக்கும் முயற்சியும், அவளின் துணிவும், சிந்தனை குழப்பமும் அதற்கு விடை தேடும் விதமும் , சுதந்திர உணர்வும் அனைத்தையும் தொடர்புபடுத்தி கூறப்பட்டிருக்கும் விதமும் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்க தூண்டும்.  

Saturday 5 November 2016

ஜப்பானிய சிறுகதை - தினம் நகரும் சிறுநீரக வடிவக்கல்


 தினம் நகரும் சிறுநீரக வடிவக்கல் – ஹருகி முரகாமி ஆங்கில மொழிபெயர்ப்பு – ஜே ரூபின் தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்

“ஒரு ஆண் தன் வாழ்நாளில் சந்திக்கும் பெண்களில் மூன்றுபேர் மட்டுமே அவனுக்கு அர்த்தமுள்ள உறவாக, முக்கியமானவர்களாக இருப்பார்கள், அதற்கு அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை” என்று பதின்பருவத்தில் இருக்கும் மகன் ஜூன்பேக்கு அவன் தந்தை கூறுகிறார். தந்தை மீது அளவு கடந்த நேசம் இல்லை எனும்போதும் அவரின் அந்த வார்த்தை ஆழமாக ஜூன்பே மனதில் பதிந்து விடுகிறது.

ஜூன்பே பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். நிறைய பெண்களை சந்திக்கிறான். அதில் ஒருவள் மீது அதிகம் ஈர்க்கப்படுகிறான். அவள் தான் அந்த மூன்று பெண்களில் ஒருவள் என்று  முடிவு செய்யும் அவன் அவளிடம் காதலிப்பதை சொல்லும் முன் அவள் இவனிடம் இருந்து விலகி விடுகிறாள். அவளை தனது மனதிலிருந்து நீக்க பெரும் போராடத்தை சந்திக்கிறான் ஜூன்பே.

அதன்பிறகு ஒவ்வொரு புதிய பெண்ணைச் சந்திக்கும்போதும் அவன் தன்னையே கேட்டுக் கொள்கிறான் இந்தப்பெண் எனக்கு அர்த்தமுள்ள உறவாக இருப்பாளா? என்ற கேள்வி அவன் மனதை ஊசலாடவைக்கும். தனக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகளே இருப்பதால் கவனமாக பெண்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறான். மேலும் முதல் பெண்ணின் விலகல் கொடுத்த வலி மீண்டும் ஏற்படாமல் இருக்க தன்னை தயார் செய்து கொள்கிறான்.

நிறையப் பெண்களுடன் பலவீனமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் பிறகு விலகுவதும் வாழ்க்கை முறையாக்குகிறான். ///ஒரு பெண்ணுடன் பழகி ஆராய்வதும் பிறகு குறிப்பிட்ட தருணத்தில் அந்த உறவு தன்னளவில் தானாக பலவீனப்பட்டு விலகுவதுமாக இருந்தது. ஆனால் எந்த உறவும் பிரச்சனையிலோ அல்லது சண்டையிலோ முடிந்ததில்லை. ஏனெனில், அவன் விலகுவதற்குக் கடினமான பெண்களைத் தேர்வதில்லை. ///

பட்டப்படிப்பை முடித்து வெளியில் வரும்போது அவன் தந்தையுடன் ஏற்பட்ட கடுமையான விவாதத்தால் அவருடனான உறவை முறித்துக்கொள்கிறான். ஆனால் அவரின் ‘மூன்று பெண்கள்’ விதி, அதன் அடிப்படை சரியாக விளக்கப்படாவிட்டாலும் கூட, அவனுள் விடாப்பிடியாக பிடித்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு எழுத்தாளராகி சில கதைகள் எழுதுகிறான். அப்போது அவனது முப்பத்தி ஒரு வயதில் அவனை விட ஐந்து வயது மூத்த பெண்  கிர்ரீ என்பவளை சந்திக்கிறான். அவள் பால் ஈர்க்கப்படுகிறான். அவளுடன் நெருங்கி பழகுகிறான். அவளும் இவனை விரும்புகிறாள். இருவரும் உறவு கொள்கிறார்கள். ஆனால் அவள் உறவு கொண்ட மறுநாள் அதிகாலை இவன் கண் விழிக்கும் முன்னே எழுந்து சென்றுவிடுவாள் ..நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று அவன் யூகத்துக்கே விட்டுவிடுவாள்.

இருவரின் உறவும் தொடர்கிறது. ஜூன்பே அவளை நேசிக்க் தொடங்குகிறான். ஒரு நாள் உறவு முடிந்து உரையாடல் நடக்கிறது. அப்போது நீ வேறு ஒரு பெண்ணை விரும்புகிறாய் தானே என்கிறாள் . ஆமாம் என்கிறான். பிறகு நீளும் உரையாடலில் கிர்ரீ , “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஜுன்பே. நீ என்னைக் கவர்கிறாய், நாம் இவ்வாறு இருக்கும்போது சந்தோஷமாகவும் அமைதியாகவும் உணர்கிறேன். ஆனால் அதன் அர்த்தம் நான் இதை தொடர விரும்புகிறேன் என்பதல்ல என்கிறாள்.

அவன் தலைகோதிவிட்டு கொண்டே ஏன் தொடர விரும்பவில்லையா என்கிறான்

“என்னால் ஒரு முழுமையான உறவில் அன்றாடம் உழல முடியாது. உன்னுடன் மட்டும் என்றல்ல: யாருடனும், நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் முழுமையாக ஈடுபட விரும்புகிறேன். நான் யாருடனாவது வாழ்ந்து கொண்டிருந்தால் – யாருடனாவது உணர்வுபூர்வமான பிணைப்பிலிருந்தால் – என்னால் அதைச் செய்ய முடியாது போகலாம். எனவே இது எப்படியிருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என நான் விரும்புகிறேன்”

ஜுன்பே சில வினாடிகள் யோசித்து, “நீ உன் கவனம் சிதறுவதை விரும்பவில்லையா?”

“ஆமாம், அதேதான்”

“உன் கவனம் சிதறினால், உன் சமநிலை குலையலாம், அது உன் முன்னேற்றத்திற்குத் தடையாகலாம்.”

”மிகச்சரி.”

”எனவே அந்த ஆபத்தைத் தவிர்க்க நீ யாருடனும் வாழ விரும்பவில்லை.”

அவள் தலையசைத்து, “குறைந்தபட்சம் இந்தத் தொழிலில் இருக்கும் வரை”

”ஆனால் அது என்ன வேலை என்று சொல்லமாட்டாய்”

”ஊகித்துச் சொல்”
என்று சொல்கிறாள். ஆனால் கடைசி வரை அவனால் அவள் செய்யும் வேலையை ஊகிக்கவே முடியவில்லை.

அப்போது ஒரு சிறுகதை எழுதி பாதியில் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை பற்றி ஜூன்பே அவளிடம் சொல்கிறான். கதையை பற்றி அவளிடம் பேச பேச அவன் திணறிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து  கதை நகர ஆரம்பித்து விடுகிறது. கதை தன்னை தானே எழுதிக்கொள்கிறது என்கிறார் ஆசிரியர்.

அந்த கதை ஒரு  பெண் மருத்துவர் கோடை விடுமுறைக்காக சுற்றுலா செல்லும் போது ஒரு அழகிய சிறுநீரக வடிவ கல்லை பார்க்கிறாள். அதை எடுத்து வந்து மேஜையில் வைக்கிறாள். அது பேப்பர் வெயிட் போல பயன்படுத்துகிறாள். இரவு அவள் வைத்து செல்லும் இடத்தில் இல்லாமல் மறுநாள் காலை அந்த கல் வேறு ஒரு இடத்தில் இருக்கும். இது அவளை ஆச்சரியப்படுத்துகிறது இத்துடன் நிறுத்தியிருந்த கதையை கிர்ரீயுடன் பேச ஆரம்பித்த பின் கதையை பற்றிய சிந்தனை ஆக்ரமிக்கிறது.

அவள் சென்ற பின் தொடர்ந்து ஐந்து நாட்கள் கதை எழுதுகிறான். இவனது கவனம் கதையிலேயே இர்க்கிறது. எழுத தொடங்கும் போது கதை வேறு தளம் நோக்கி நகர தொடங்குகிறது.  கதையில் அந்த மருத்துவரின் சிந்தனை கல்லை சுற்றியே போக மற்ற எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்குகிறாள். மெல்ல மெல்ல புற உலகிலிருந்து அந்த கல் அவளை பிரிக்கிறது. பின் சட்டென கல் உணர்த்துவது எதை என்பதை உணருகிறாள். பின்னர் அந்த கல்லை ஆழ்கடலுக்குள் தூக்கி எறிந்து வந்துவிடுகிறாள்.

அவள் வாழ்வின் புதிய ஆரம்பம் அது. அந்தக்கல்லை எறிந்ததும் அவளுக்குள் ஒரு மலர்ச்சி உண்டாகிறது. அடுத்த நாள் மருத்துவமனைக்குச் செல்கையில் அந்தக்கல் அவள் மேசையில் அவளுக்காகக் காத்திருக்கிறது. அது எப்போதும் எங்கே இருக்குமோ சரியாக அதே இடத்தில் என்று எழுதி கதையை முடிக்கிறான். முடித்தவுடன் அதை கிர்ரீயிடம் பகிர நினைத்து அவளை அழைக்கிறான். ஆனால் அவள் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

அதன் பின் இவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை தொடர்பு கொள்ளவேமுடியவில்லை. அந்த சிறுகதை பிரசுரமாகிறது. அதை படித்தால் தன்னை தேடி வருவாள், தொடர்பு கொள்வாள் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவள் முற்றிலுமாக விலகிவிடுகிறாள்.

கிர்ரீயின் விலகல் அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமான வேதனையை அவனுக்கு தருகிறது.  அவனுக்கு விருப்பமான இசையோ அல்லது அவன் விரும்பும் எழுத்தாளர்களின் புதிய புத்தகங்களோ அவனை அமைதிப்படுத்தவில்லை.

அதன்பிறகு எதேச்சையாக வானொலியில் அவள் குரலை கேட்கிறான். அது அவள் குரல் என்று அடையாளம் கண்டு பிடிக்கும் போது அவள் ஒரு நேர்காணலில் தன்னை பற்றி சொல்கிறாள். ஆண்கள் செய்யும் ஒரு சாகச வேலை அவளை ஈர்க்க அதை விருப்பத்துடன் அவள் செய்வதை பற்றிய பேட்டி. அந்த பேட்டியில் அவள் தன் மன ஓட்டங்களை சொல்கிறாள். அவளின் காதல் அவள் வேலையில் உள்ளதை சொல்கிறாள். அவளுக்கும் அவள் ஆசையான தொழிலுக்குமிடையில் யாரும் வரமுடியாது என்று சொல்லும் போது பொறாமையாக உணர்கிறான். ஆனால் எப்படி பொறாமைப்பட முடியும் என்று அமைதி கொள்கிறான்.

ஜுன்பே பலமாதங்கள் கிர்ரீ தன்னைத் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கிறான், அவளிடம் பேசுவதற்கென்று அவனிடம் நிறைய விஷயங்கள் இருந்தன, நகரும் சிறுநீரக வடிவக்கல் உட்பட. ஆனால் எந்த அழைப்பும் வரவில்லை, அவனின் அழைப்புகளும் அவளிடம் சேரவில்லை. மற்ற பெண்களின் உறவை ஜூன்பே எப்படித் துண்டித்துக் கொண்டானோ அப்படி அவள் அழகாக துண்டித்து கொண்டதாக நினைக்கிறான். உறவு முடிந்துவிட்டதோ என மருகுகிறான். பின் மீண்டும் ஆறு மாதம் காத்திருக்க முடிவு செய்கிறான். அப்போது சிறுகதைகளாக எழுதி குவிக்கிறான்.

ஜுன்பே அவளின் வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்வான், வேறு எந்தப்பெண்ணிடமும் உருவாகாத ஒரு உணர்ச்சி, ஆழமான உணர்ச்சி, தெளிவான கனமான உணர்ச்சி. இன்னமும் ஜுன்பேவால் அது என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை, குறைந்தபட்சம் எதனோடும் மாற்றிக்கொள்ள முடியாத உணர்ச்சி. கிர்ரீயை அவன் மீண்டும் சந்திக்காமலே போய்விட்டாலும்கூட, இது அவனோடு எப்போதும் இருக்கும். உடலின் ஏதோவொரு மூலையில் – எலும்புகளின் மஜ்ஜைகளுக்குள்ளாக – அவளின் இருப்பில்லாததை உணர்வான். வருட முடிவில் ஜுன்பே தன் மனதைத் தேற்றிக்கொள்கிறான்.

அவளைப் பட்டியலில் இரண்டாவதாக வைத்துக்கொண்டான், அர்த்தமுள்ள உறவை அளித்த மற்றொரு பெண். இரண்டாவது தோல்வி. இன்னமும் ஒன்றுதான் மீதமிருக்கிறது, ஆனால் இப்போது பயமேதுமில்லை. எண்கள் முக்கியமில்லை, இந்த வரிசைக்கும் அர்த்தமேதுமில்லை. இப்போது அவனுக்குத் தெரிந்துவிட்டது, மற்றொருவரை விரும்பி மனதால் முழுமையாக ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம், அதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என்று உணர்கிறான்.

ஒரு நாள் காலையில் அந்தப் பெண்மருத்துவர் தன் மேசையில் சிறுநீரகவடிவக்கல் இல்லாததைக் கவனிக்கிறாள். அவளுக்குத் தெரியும்,  அது மீண்டும் திரும்பி வரப்போவதில்லை.

இதில் சிறுநீரகக்கல் அந்த ஆசிரியரா ஜூன்பேவா ? இல்லை கிர்ரீயா?






Saturday 22 October 2016

பாரபாஸ் - பேர் லாகர்க்விஸ்ட்

”பாரபாஸ்” (Barabbas by Pär Lagerkvist) ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்ட நாவலை தமிழில் க.நா.சுப்ரமணியம் மொழிப்பெயர்த்திருக்கிறார். அன்னம் வெளியீடு. மிகச்சிறிய நாவலான “பாரபாஸ்” ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. 142 பக்கங்கள் மட்டுமே. புனைவு நூல் என்னும்போதும் ஆசிரியர் எந்த கட்டத்திலும் வாசிப்பவரை புனைவு என்ற நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு பாரபாஸுக்குள் வாசிப்பவரை கடத்தி விடுகிறார்.

 

உலகம் முழுவதும் இன்று பரவி இருக்கும் கிருஸ்துவ மதத்தின் ஆதி இயேசு கிருஸ்து காலத்துக்கு நாவல் இட்டு செல்கிறது. பாரபாஸ் ரோமானிய ராஜ்யத்தில் கொள்ளையன்.  எந்த நம்பிக்கைகளும் இல்லாதவன். திருட்டுக்காக சிறையில் தண்டனை  அனுபவித்து கொண்டிருப்பவன். சிறிது நாளில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்க போகிறவன்.

 

ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் அதிர்ஷ்டம் அவன் விடுதலையாகிறான், விடுதலை ஆகி வாழ்நாள் முழுதும் எண்ணச்சிறையில் சிக்கி உழல போவது அறியாமல். அவனுக்கு பதில் சிலுவையில் அறைய ரோமப் பேரரசு இயேசுவை தேர்ந்தெடுக்கிறது. இயேசுவே  திருடனுக்கு பதிலாக தன்னை ஒப்புக்கொடுக்கிறார்.

 

விடுதலைப்பெற்றதை நம்பமுடியாதவனாக பாரபாஸ் சிறையிலிருந்து வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பதிலாக யாரை சிலுவையில் அறைகிறார்கள், தன் விடுதலைக்காக யார் தன்னை ஓப்பு கொடுத்தது  என்று பார்ப்பதற்காக சுலுவை சுமந்து வீதி வழியாக செல்லும் அந்த மரணக்கைதிகளின் பின்னால் இயேசுவின் நம்பிக்கையாளர்கள் அரற்றிக்கொண்டே செல்ல  பாரபாஸ்சும்  உடன் செல்கிறான்.

 

கொல்கோதா மலைக்குன்றின் மீது அறையப்படுகிறார் கடவுளின் மைந்தன். அவரை கடவுளின் மைந்தனாக தான் அவரின் சீடர்கள் சொல்கிறார்கள். சிலுவையில் அறையப்படும் அவரை பார்க்கும் கணத்தில் இருந்து, எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எந்த வரையறையும் இல்லாமல் தன் இஷ்டத்துக்கு வாழும் அவன் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் தொடங்குகிறது. அவரது உயிர் பிரியும் நொடியில் திடீரென இருட்டு உருவாகி பின் வெளிச்சம் வருகிறது. குழப்பமடைகிறான் பாரபாஸ்.

 

பாரபாஸால் கடவுளின் மகனாக அவரை நம்பவும் முடியவில்லை. கடவுளின் மகனாக  இருந்தால் ஏன் அந்த தண்டனையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை என்று சந்தேகம் எழுகிறது.  மிகுந்த சந்தேகத்தோடும் குழப்பத்தோடும் இருக்கும் அவன் இயேசுவின் நம்பிக்கையாளராக அந்த இடத்துக்கு வரும் உதடு பிளந்த ஒரு பெண்ணுடன் ஊருக்கு திரும்புகிறான். தனது சகாக்களை பார்க்கிறான், அவர்கள் இவன் விடுதலையானதை கொண்டாடுகிறார்கள். உதடு பிளந்த பெண் அந்த கூட்டத்தில் ஒட்ட முடியாமல் வெளியேறி விடுகிறாள்.  குடி, பெண்களுடன் சல்லாபம் என மூழ்குகிறான் பாரபாஸ் ஆனாலும் மனதின் ஓரத்தில் அவன் பார்த்த காட்சி ஓடி சித்ரவதை செய்கிறது.

 

இறந்த கடவுளின் மகன் பற்றிய விவரங்களை தேடி ஊருக்குள் அலைகிறான். அப்போது அவரின் நம்பிக்கையாளர்கள் பலரை சந்திக்கிறான். அவர்கள் முதலில் அவனை வெறுக்கிறார்கள் ஆனாலும் கடவுளின் மகனை பற்றிய விவரங்களை கூறுவதுடன், அவரின் சாதனைகளை வானளாவ புகழ்கிறார்கள். இவன் பார்த்த காட்சியை கூட பன்மடங்கு பெரிதாக்கி கூறுகிறார்கள். இவன் அதை மறுக்கிறான். உதடு பிளந்த பெண் கடவுள் உயிர்தெழுந்து வருவாள் என்று கூறுகிறாள் நம்பிக்கையுடன். அவர் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் அதிகாலை பாரபாஸ் சென்று கல்லறை பக்கம் புதர் ஒன்றில் ஒளிந்து பார்க்கிறான். உதடு பிளந்த பெண்ணும் வருகிறாள். ஆனால் அப்படியான அதிசயங்கள் எதுவும் நடக்கவில்லை.. என்ன நடந்திருக்கும் என்று பாரபாஸ் எளிதில் யூகிக்கிறான் ஆனாலும் உதடு பிளந்த பெண்ணின் நம்பிக்கையை சிதறடிக்க விரும்பாமல் அவள் உயிர்பெற்று எழுந்ததாக சொல்வதை ஏற்றுக்கொண்டு மவுனமாக கடக்கிறான்.


இறந்தவரை உயிர்பித்திருக்கிறார் என்கிறார்கள். நம்ப மறுக்கிறான் பாரபாஸ். அவனை அந்த செத்து பிழைத்த மனிதரிடம் அழைத்து போகிறார்கள். அவரிடம் பேசிய பின்னர் மேலும் வெறுமை சூழ்கிறது பாரபாஸ்க்கு. மெல்ல மெல்ல நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும், வெறுமைக்கும், குற்ற உணர்வுக்கும் இடையில் ஊசலாட தொடங்கி நடைபிணமாகிறான்.


எதற்குமே பயப்படாத, எதையுமே நம்பாத பாரபாஸ்சின் நிலையை கண்டு வெறுத்து போகும் அவனின் கூட்டாளிகள் அவனை துரத்த முனைகிறார்கள். ஆனால் பாரபாஸ் தானாகவே அவர்களிடம் இருந்து பிரிந்து செல்கிறான். எங்கெங்கோ அலையும் அவன் அடிமையாக சுரங்க வேலையில் பணி புரிகிறான். அங்கு வேறு ஒரு கைதியான் ஸஹாக் என்பவனுடன் இவன் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். யாருடனும் எதுவும் பேசாமல் யாருடனும் ஒட்டாமல் இருக்கும் பாரபாஸ் ஸஹாக்குக்குடன் கொஞ்சம் பேசுகிறான்.  கடவுளின் மகன் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஸஹாக்கிடம் தான் அந்த மனிதரை பார்த்ததாக கூறுகிறான். இதனால் அவன் பாரபாஸ்சுடன் அதிகம் பேசுகிறான். ஆனால் பாரபாஸ் தனக்கு பதிலாகதான் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை மறுத்துவிடுகிறான். அவரை பார்க்காமலே அவரை கொண்டாடி சிலாகிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான் பாரபாஸ்.

 

அடிமையான ஸஹாக் எழுதப்படிக்க தெரியாத போதும் அவரின் பெயரை தனது கழுத்து அடிமை முத்திரையின் பின் பக்கம் பொறித்து கொள்கிறான். பாரபாஸ்சுக்கும் அதை பொறித்து கொடுக்கிறான். சுரங்கத்தில் கடவுளை நினைத்து ப்ரார்திக்கிறான். பின்னர் சுரங்கத்தில் இருக்கும் அடிமை ஓட்டி ஒருவனால் வயல் வேலைக்கு மாற்றப்படுகிறார்கள் இருவரும். கடவுளால் தான் இது நடந்ததாக கூறும் ஸஹாக் கடவுள் அடிமை தளையை மீட்டெடுக்க கடவுள் வருவார் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான்.

 

ஸஹாக் வேறு யாரையோ ப்ரார்திப்பதை அறிந்து கவர்னர் மாளிகைக்கு பாரபாஸ்சுடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறான்.  விசாரணை நடத்தும்போது பாரபாஸை நீயும் அந்த ஏசுவை நம்புகிறாயா என கேட்க இல்லை என்று பாரபாஸ் மறுத்துவிடுகிறான். ஆனால் ஸஹாக் மரண தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் அவரை கடவுளாக ஏற்பதை கைவிட மறுக்கிறான். அவன் ரோம அரசை கடவுளாக தொழாமல் வேறு ஒரு வரை கடவுளாக தொழுததற்காக கவர்னரால் சிலுவையில் அறையப்படுகிறான்.


பாரபாஸை அரசுக்கு விசுவாசமானவன் என்று வேறு எளிய வேலைக்கு மாற்றிவிடுகிறார்கள். பின்னர் கவர்னருடன் ரோம் நகரம் செல்கிறான். ரோம் நகரின் பகட்டும், பளபளப்பும், சொகுசும் எதாலும் இவன் மனதின் வெறுமையை  துடைக்க முடியவில்லை. பாரபாஸை சுற்றி இயேசுவை கண்மூடித்தனமாக நம்புபவர்கள் இருந்தபோதும் பாரபாஸுக்கு கடைசி வரை நம்பிக்கை இல்லை..இறுதியில் தீ விபத்து ஏற்படுத்தியதற்காக சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறான். இறக்கும் முன் “என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” என்று இறுதியில் சொல்கிறான்.


யாருக்கு அளித்தான் தன் ஆன்மாவை என்ற கேள்வியில் தொக்கி நிற்கும் சிந்தனையில் கிளர்ந்தெழுகிற உணர்வில் தான் நாவல் பயணிக்கிறது.


நாவலில் இயேசு பிறப்பதற்கு முன்னிருந்த ஆட்சிகளில் மன்னர்கள், ஆட்சியாளர்கள், மக்களை அடிமைப்படுத்தி செய்த அநியாயங்கள், கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் மத பூசாரிகள் செய்த அநியாயங்கள், அடிமைப்பட்டு சித்ரவதை பட்டு கிடந்த மக்கள் அரசரை கடவுளாக ஏற்காமல் தங்களை மனிதராக நடத்தும் ஒரு சக்திக்காக காத்திருந்திருந்திருந்திருக்கின்றனர். அப்போது இந்த அநியாயங்களை கண்டு அவர்களுக்காக மனம் இரங்கிய ஒருவரின் பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். அவரை கடவுளின் மகனாக, தங்களை மீட்க வந்தவராக நினைக்கிறார்கள். 


இந்த கதை நாத்திகம் பேசுகிறதா, ஆன்மீகம் பேசுகிறதா? வாசிப்பவன் எந்த பக்கம் செல்ல வேண்டும் எதையும் ஆசிரியர் தீர்மானிக்கவில்லை.. ஆசிரியரே இயேசுவை கடவுளாகவும் இல்லாமல் மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில்  ஊசலாடி இருப்பதை பாரபாஸ் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக தான் பார்க்கிறேன். இதற்கு உதாரணமாக கல்லறையிலிருந்து இயேசு உயிரோடு எழுந்ததாக கூறப்படும் இடத்தில் பாரபாஸ் மூலம் தெரிவிக்கும் யூகம்…


இறுதிவரை பாரபாஸ் யாரையும் நம்பவில்லை. மிகப்பெரிய தத்துவ விசாரம் எதுவுமில்லை நாவலில். ஆனால் குற்ற உணர்வோ, வெறுமையோ, பயமோ, நம்பிக்கையின்மையோ  எது ஒன்றோ மனிதனின் ஆன்மாவை  சட்டென தாக்கி ஆணி அடித்தது போல அவன் சிந்தனைகள் அதனை விட்டு நகராமல் அதனுள்ளே உழன்றால் என்னவாகும்..பாரபாஸ் அப்படியான ஒரு உணர்வில் தான் ஆணி அறையப்படுகிறான். பாரபாஸை அலைக்கழிக்கும் உணர்வு என்ன குற்ற உணர்வா? பயமா?  சாவின் மீதான பயம் அவனை அலைக்கழிக்கிறதா? அனேகமாக எல்லாருக்குள்ளும் ஒரு பாரபாஸ் இருக்கிறான். நாம் பலவற்றின் மூலம் அவன் வெளியே வந்துவிடாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறோம் என்றே தோன்றியது நாவல் வாசித்து  முடிக்கும் போது.


அன்பு, காதலில் நம்பிக்கையற்ற ஒரு பிறவி அவன் என்பது போல தோன்றினாலும், உதடு பிளந்த பெண் உயிருடன் இருந்த போது அவளை பெரிதாக நேசிக்காமல் காமத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தி கொள்கிறான் முதலில். பின்னர் அவளிடம் அவனுக்கு சுரக்கும் உணர்வுக்கு பெயர் என்ன? அவள் கல்லால் அடித்து கொல்லப்பட அந்த தண்டனை தந்தவனை குத்தி கொன்றுவிட்டு அவளின் உயிரற்ற உடலை எடுத்து சென்று அடக்கம் செய்யும்போது பாரபாஸ்சிடம் தோன்றும் உணர்வுக்கு பெயர் என்ன???   


கிருஸ்து நேசிக்க சொன்னதாக தான் அவரின் நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதனின் குற்ற உணர்வு மூலமும் தியாகத்தின் மூலமும் எவரையும் மாற்ற முடியுமா என்ற ஐயப்பாடுக்கு விடை தெரியவில்லை. ஆனால் காந்தி சுதந்திரத்துக்காக போராடியபோது ஆங்கிலேயரின் குற்ற உணர்வை தூண்ட எடுத்த ஆயுதம் அகிம்சை தானே.. குற்ற உணர்வுக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறதா. சரியான விதத்தில் தூண்டப்படும் குற்ற உணர்வு மனிதனை இவ்வளவு அலைக்கழிக்குமா? ஆனால் இறுதிவரை பாரபாஸ்சிடம் ஏற்பட்ட உணர்வு என்ன என்பதை ஆசிரியர் அறுதியிட்டு கூறவே இல்லை. வாசகனின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். பாரபாஸ்சுக்கு இந்த உலகம் வழங்காத கருணையை, இயேசு வழங்காத அமைதியை அவனது இறப்பு தருகிறது…











Friday 14 October 2016

அந்நியன் - ஆல்பெர் காம்யூ

”அந்நியன்”  ஆல்பெர் காம்யூ எழுதிய  ப்ரெஞ்ச் நாவலை ஸ்ரீராம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.  க்ரியா பதிப்பகம் வெளியீடு. இந்நாவலின் கதை பற்றி ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் மனிதன் என்பவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று இந்த சமூகம் விதித்திருக்கும் வரைமுறைகளில் இருந்து விலகி செல்பவன் இந்த உலகில் வாழ தகுதியில்லாதவனாக முடிவு செய்யப்படுகிறான்.

நூற்றி ஐம்பது பக்கங்களுக்குள் முடிந்துவிடும் இந்த புத்தகம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்று தான் சொல்ல வேண்டும். கதை நாயகனான் மெர்ஷோவின் அம்மா இறந்துவிடுகிறாள், அவளை காணச்செல்கிறான் மகன் எந்த உணர்வுமில்லாமல், அவனை அவனின் தாயின் மரணம் பாதிக்கவில்லை . தாயின் மீது வெறுப்பா என்றால் இல்லை. அவன் தாயின் மரணத்தை ஏற்றுகொள்கிறான் அவ்வளவு தான். அவனுக்கு அழுகை வரவில்லை மிக இயல்பாக இருக்கிறான் இறந்து கிடக்கும் தாயின் அருகில்.மறுநாள் அவன் தாயின் ஈமச்சடங்கு நடக்கிறது. மெர்ஷோவுக்கு அதெல்லாம் அர்த்தமற்றதாக தோன்றுவதுடன், அவை எல்லாம் போலித்தனமாக இருக்கிறது. அந்த இடத்தை விட்டு அகன்றால் போதுமென்று நினைக்கிறான். அழாமல் வெகு இயல்பாக இருக்கும் அவனை இந்த சமூகம் விசித்திரமாக பார்க்கிறது.  

தாயின் அடக்கம் முடிந்தவுடன் வீட்டுக்கு வரும் அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லை. வீட்டுக்கு வருகிறான் நன்கு தூங்குகிறான், சாப்பிடுகிறான், அவன் அறையில் இருந்து தெருவை வேடிக்கை பார்க்கிறான், பின் மறுநாள் தன் தோழியை வரசொல்லுகிறான். அவளுடன் சினிமாவுக்கு செல்கிறான், விளையாட்டுகளில் ஈடுபடுகிறான் விடுமுறை முடிந்து அலுவலகத்துக்கு சென்று வழக்கம்போல காரியங்களை கவனிக்கிறான்.

நாயகனின் இந்த போக்கு குழப்பத்தை கொடுத்தாலும், கொஞ்சம் நம் மனதை திறந்து ஆழமாக பயணித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நாமும் ஓரளவு மரணங்களை கடந்து தான் வந்திருப்போம், அந்த மரணங்களில் துயரங்கள் இருந்திருக்கலாம், வலி இருந்திருக்கலாம் ஆனால் நிகழ்ந்துவிட்ட மரணத்தின் சடங்கில் நம் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை எந்த முகமூடியும் இல்லாமல் அலசி இருக்கிறார் ஆசிரியர்.

அடுத்து நாயகனின் தோழி அவனை காதலிக்கிறாள், திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்கிறாள். காதலிக்கிறேன், எப்போதும் காதலிப்பேன் என்று எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் நீ விரும்பினால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். பெண்ணின் உடல் இன்பம் தேவையாக இருக்கிறது ஆனால் காதல் பற்றி எல்லாம் அவனுக்கு பெரிய பிரச்சனை இல்லை. திருமணம் செய்வதும் செய்யாததும் ஒன்று தான் அவனை பொறுத்த வரை.

மெர்ஷோ நல்லவனா, கெட்டவனா என்று முடிவுக்குள் வாசிப்பவர்களை இழுத்து செல்லாமல் நாயகனின் போக்கில் அவன் எண்ணங்களை, அவன் செயல்களை விவரிக்கிறார். அதிகம் யாருடனும் பேசுவதில்லை, பேசுபவர்களுடன் உண்மையாக தான் பழகுகிறான். எதற்கும் உணர்ச்சி படுவதில்லை. நான் இப்படி என்று காதலி உட்பட யாரிடமும் அவன் புரியவைக்க முயற்சிக்கவில்லை.

வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவனா என்றால் அப்படியுமில்லை, பெரிய எதிர்பார்ப்போ, பெரிய லட்சியங்களோ இல்லாமல் அந்தந்த கணங்களில் வாழ்கிறான் இன்னும் சொல்லப்போனால் சந்தோசமாகவே. அவன் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் ஒருவன் நண்பனாக ஏற்றுகொள்வதாக கூறி அவனை அழைத்துசெல்கிறான் அவனின் காதலி துரோகம் செய்துவிட்டதாக புலம்பும் அவன் அவளை அவமானப்படுத்த விரும்புகிறான். ஒரு கடிதம் எழுத மெர்ஷோவின் உதவியை நாடுகிறான். மெர்ஷோவும் செய்கிறான்.

அதே குடியிருப்பில், சொறி நாய் ஒன்றை மட்டும் துணையாக வைத்து கொண்டு வாழும் மனிதனுடனும் அவன் இயல்பாக பழகுகிறான். அவன் தாயை முதியோர் இல்லத்தில்  விட்டதை பற்றி கேட்கும் போது எங்கள் இருவருக்குள்ளும் பேச விஷயங்கள் இல்லை, மேலும் எனக்கு மிகப்பெரிய பொருளாதார வசதியுமில்லை இல்லத்தில் இருந்தால் அவள் வயதையொத்த மனிதர்களுடன் இருப்பதில் வெறுமை இல்லாமலாவது இருப்பாள் என்கிறான். அவரும் ஆமோதிக்கிறார்.

இந்நிலையில் புதிதாக நண்பனானவுடன் தன் காதலியுடனும் விடுமுறை நாளை கழிக்க கடற்கரை செல்கிறான். மிக சந்தோசமாக குடித்து, காதலியுடன் நீந்தி விளையாடி களிப்புற்று இருக்கும் அவன் ஒரு அரேபியனை எதிர்பாராமல் கொலை செய்துவிடுகிறான். திட்டமிட்டு எல்லாம் அந்த கொலை நடக்கவில்லை. ஒரு சின்ன தகராறு கொலையில் முடிகிறது. முதல் பாகம் கொலையுடன் முடிகிறது.

இரண்டாம் பாகம்  கொலையான அவன் கைதாகி அவன் மீது நடக்கும் வழக்கு, விசாரணைகள் , விசாரணையின் முடிவு  அவ்வளவு தான். ஆனால் இந்த அத்தியாயத்தில் இந்த சமூகத்தின் பொதுபுத்தியையும் அதில் இருந்து விலகி இருப்பவனை சமூகம் பார்க்கும் பார்வையையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதி. மனம் நம்மை இயக்குகிறது என்று தான் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மனம் மட்டுமா நம்மை இயக்குகிறது. நம்மை சுற்றியுள்ள புறச்சூழல்களே நம்மை இயக்கிறதோ என்று சந்தேகம் மெர்ஷோ கொலையானதை நினைத்து பார்க்கும் போது வாசிப்பவருக்கு தோன்றுகிறது.

மெர்ஷோவை கொலை குற்றத்துக்காக விசாரிக்கிறார்கள் நீதிமன்றத்தில், கொலையை விட்டுவிட்டு மெர்ஷோவின் குண இயல்புகளை விசாரிக்க தொடங்குவதில் மெர்ஷோ சலிப்படைகிறான். அவன் செய்த கொலை பற்றிய விசாரணைகளவிட அவன் தாய் இறந்த போது இயல்பாக இருந்தது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போதும், அவன் தாய் இறந்த மறுநாளே பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது, தாயின் மரணத்தில் அழாதது, தாயின் சடலம் அருகில் அவன் காபி குடித்தது என்று நுணுக்கமாக அவன் சராசரிகளில் இருந்து வேறுபட்டு இருப்பது அலசப்படுகிறது. தெய்வ நம்பிக்கை இல்லாதவன் என்பதும் அவனுக்கு எதிராக போகிறது.  அப்படி இருந்ததாலேயே அவன் மனிதன் இல்லை அவன் கொடூர மனம் கொண்டவன் என்று அவனுக்கு கொலை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.

சிறை வாசத்தில் அவன் வாழ்க்கையும், அதனை அவன் எதிர்கொள்ளும் விதமும், அவனது எண்ண ஓட்டங்களும் விவரித்திருக்கும் விதத்தில் நம்மையும் அறியாமல் நம் சுய அலசலுக்குள் நுழைந்துவிடுகிறோம். இறுதி வரை பாவ மன்னிப்பு கேட்க சொல்லும் அவனை சந்திக்க நினைக்கும் பாதிரியாரை சந்திக்க மறுக்கிறான். சந்திக்கும்போது அவரிடம் நாயகன் முன் வைக்கும் விவாதத்தின் உண்மை நம்மையும் கேள்வி கேட்க வைக்கிறது. இறுதிவரை கடவுள் நம்பிக்கையை ஏற்க நாயகன் யாராக இல்லை.

நாயகன் சமூகத்தின் பொதுபுத்தியில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறான். அதுவொன்றே அவனுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு போதுமானதாகிறது.

அந்நியன் உணர்வுபூர்வமாக பாதிக்கும் வகை கதையில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் அந்நியனை நமக்கு அடையாளம் காட்டுகிறது.


Wednesday 5 October 2016

சஹீர் = பாவ்லோ கொய்லோ

"சஹீர்" பாவ்லோ கொய்லோவின் நாவலை தமிழில் குமாரசாமி மொழிப்பெயர்த்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடு. சஹீர் என்பது ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர், அதனுடன் அந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் அது நமது ஒவ்வொரு எண்ணத்தையும் சிறிது சிறிதாக ஆக்ரமிக்க துவங்கும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அது புனிதமான நிலையாகவோ பைத்தியக்காரத்தனமான நிலையாகவோ கருதிக்கொள்ளலாம்.

இந்த நாவலை அப்படியே கதையாக சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு பிரபல எழுத்தாளரின் மனைவியான எஸ்தர் (நிருபர்) திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறாள். அவள் காணாமல் போன பின்னர் தான் அவளை எந்த அளவு நேசித்திருக்கிறோம் என்பதை உணருகிறான். அவளை தேடி பயணப்படுகிறான். இறுதியில் அவளை கண்டடைகிறானா இல்லையா என்பதாக கூறலாம். ஆனால் அப்படி கூறமுடியாத அளவு உணர்வுத்தளங்களுடன், நம் அகத்துக்குள் ஆழமாக பயணிக்கிறது கதை. எஸ்தரான தன் காதல் மனைவியை கண்டடைவதன் மூலம் இந்த உலகின் பேரன்பை கண்டடைகிறான். அவளை புறவயமாக தேடும் பயணத்தில் தன் அகத்தையும் ஆத்மாவையும் உற்று நோக்குகிறான். 

எஸ்தர் காணாமல் போகும் போது சராசரி கணவனின் மனநிலையிலும் அதற்கு சற்று மேலான மனநிலையிலுமாக மாறி மாறி பயணிக்கிறார் எழுத்தாளர். பத்து வருட தாம்பத்யத்தில் நடந்தவற்றை அசைபோடுகிறார். முதலில் தானாக விலகி சென்றவளை தான் ஏன் தேட வேண்டும் என்று நினைக்கும் அவர் நாளாக நாளாக எஸ்தரின் நினைவால் முழுதும் ஆக்ரமிக்கப்படுகிறார். அதை சஹீர் என்கிறார். எவ்வளவோ முயன்றும் இவரால் அவள் நினைவில் இருந்து வெளியே வரமுடியவில்லை .

பிரபலமான எழுத்தாளருக்கு பணம், புகழ், அந்தஸ்து எல்லாமிருந்தும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்ப்பது போன்ற சிந்தனையால் அலைக்கழிக்கப்படுகிறார். இதனிடையே மேரி என்ற பெண்ணுடன் உறவு ஏற்படுகிறது. நடிகையான அவர் தனது பக்கத்துவீட்டுக்காரனை தீவிரமாக காதலித்து அதில் தோல்வி அடைந்தவர். இவர்கள் இருவரும் சந்திக்க இவர்களுக்குள் உறவு வளர்கிறது. ஆனாலும் எழுத்தாளரின் மனதில் எஸ்தர் ஏன் தன்னை விட்டு விலகினாள் என்ற கேள்வியும் அவளிடம் அது பற்றி விசாரித்துவிட்டால் தான் அதன் பின் நிம்மதியாக இருக்கலாம் என்றும் முடிவுக்கு வருகிறார்.

பிரிவதற்கு முன் மிக்காயில் என்ற மொழிப்பெயர்ப்பாளனாக அவளுடன் இருந்த இளைஞன் ஒருவனை பற்றி எஸ்தர் பேசியது தெரியவர அவனுடன் சென்றிருப்பாளோ என்று சந்தேகப்படுகிறார். இதனிடையே கிழிக்கும்காலமிது, தைக்கும் நேரமிது என்ற நாவலையும் எழுதுகிறார். அதில் கையெழுத்திட்டு அளிக்கும் ஒரு விழாவில் மிக்காயிலை சந்திக்கிறார். அவனிடம் மனைவி இருக்குமிடம் குறித்து விசாரிக்கிறார். அவன் தோழன் தான் காதலன் இல்லை என்று தெரியவரும்போது ஆசுவாசமடைகிறான். அவனுடனும் இல்லை என்றும் அவள் அவனுடைய ஊரான  கஜகஸ்தானில் இருப்பதாக கூறுகிறான் . அவனுக்கும் தன் மனைவிக்கும் உடல் ரீதியான தொடர்பு பற்றி விசாரிக்க அது பற்றி கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறும் அவன் அவள் தன் கணவரை நேசிக்கிறாள் என்கிறான்.

அதன் பின் மிக்காயிலின் உலகத்துக்குள் நுழைகிறான். மிக்காயிலின் உலகம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் தத்துவமும், உள்நோக்கிய அகப்பயணமும் சார்ந்தது. மிக்காயில் மூலம் நாம் பயணிக்கும் இடங்களில் பலவற்றில் நம் அகத்தேடலின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. காக்கா வலிப்பு வரும் மிக்காயில் தன்னை பற்றி சொல்லும் பல விஷயங்கள் அறிவியலுக்கும், ஆன்மீகத்துக்கும், உளவியலுக்கும் ஊடாக மாறி மாறி பயணிக்கிறது. மிக்காயில் உலகம் அறியும் எழுத்தாளர் அவனிடம் ஒரு வழியாக அவள் இருக்கும் முகவரியை, வரைபடத்தை பெற முயல்கிறார். அதனை மறுநாள் அவரது வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லி விடைபெறுகிறான். மறுநாள் ஒரு விருந்தில் கலந்துகொள்ள செல்லும் எழுத்தாளர் விபத்தை எதிர்கொள்கிறார்.

அப்போது மேரி அவரை கவனித்து கொள்கிறாள். இதனிடையே மேரி எழுத்தாளரின் மனதில் எஸ்தர் தான் இருக்கிறாள் என்று தெரிந்தும் தீவிரமாக அவனை காதலிக்கிறாள். விபத்தில் ஓய்வில் இருக்கும் எழுத்தாளர் எஸ்தருக்கும் அவருக்குமான பிரிவு எங்கிருந்து தொடங்கியது என்பதில் தொடங்கி தன் வாழ்வை சுய அலசலில் திரும்பி பார்க்கிறார். அவருக்கும் எஸ்தருக்கும் இடையில் நடந்தவற்றை அசை போடுகிறார்.

/// நான் மாலை முழுதும் உங்கள் அருகே இருந்தேன். ஆனால் நான் என்ன செய்தேன் என்பது உங்களுக்கு தெரியாது. நீங்கள் கூறிய ஒன்றை நான் உறுதி செய்ய வேண்டும், உங்களைப் பற்றிய புகழ்ச்சியான கதை ஒன்றை கூற நான் தேவைப்பட்டபோது என்னிடம் பேசினீர்கள்.
நாம் இதை காலை பேசலாம்
நான் இதை வாரங்கள், மாதங்கள் இரு வருடங்களாக செய்கிறேன். நான் பேச முயல்வேன், தவிர்ப்பீர்கள்.
உங்கள் புத்தகங்களில் அன்பின் முக்கியம், மகிழ்ச்சி துள்ளல் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் எனக்கு முன்னால் இருப்பது தான் எழுதுவதையே படிக்காத ஒருவரா? நான் என்ன சொல்கிறேன் என்று காது கொடுத்து கேட்ட மனிதன் எங்கே?
நான் திருமணம் செய்த அந்த பெண் எங்கே?
உங்களுக்கு எப்போதும் ஆதரவு, ஊக்கம் அளித்து வந்த ஒருத்தியை பற்றி பேசுகிறீர்களா? அவள் உடல் இங்கே தான் இருக்கிறது. ஆனால் அவள் ஆத்மா வாசல் கதவருகே போகத் தயாராகி நின்று கொண்டிருக்கிறது.
நீங்கள் திருமணம் செய்து கொண்டிருந்த பெண் வாழ்க்கைப்பற்றி குதூகலித்திருந்தாள். ஆசை கற்பனைகளில் குதியாட்டம் போட்டிருந்தாள். இப்போது அவள் வெறும் இல்லத்தரசியாக மாறிக்கொண்டிருக்கிறாள்////

நடந்ததை எல்லாம் அசைப்போடும் அவர் மிக்காயிலை சந்தித்து கஜகஸ்தான் போவதை பற்றி சொல்ல செல்கிறார். பிச்சைக்காரர்கள் என்று சமூகத்தாரால் பார்க்கப்படும் ஹிப்பிகள் மாதிரியான குழுவினருடன் எழுத்தாளருக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. அது மேலும் அக வாசல்களை திறக்கிறது. மிக்காயில் தன்னையும் அழைத்து செல்லுமாறு கோரிக்கை வைக்கிறான். எழுத்தாளர் மறுக்க கெஞ்சுகிறான். பின்னர் அவனையும் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார்.

மெல்ல மெல்ல பிரச்சனையின் மையப்புள்ளி புரிய தொடங்க மேரியிடம் சொல்லி பிரிகிறார். மேரியின்  உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் மிக அருமை. தீவிரமாக எழுத்தாளரை காதலித்தாலும் அவன் மனம் எஸ்தரிடம் இருப்பதை உணர்ந்து விதியை நொந்து பிரிகிறாள். அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடல்களின் போது மேரி அவளின் காதலையும் , அவஸ்தையையும், ஏமாற்றத்தையும் விவரிக்கும் இடமும், அடிவிழும் என்றால் விழும், அது என்னை தரையில் சாய்க்கட்டும், என்னை குப்புறத்தள்ளட்டும், ஆனால் ஒரு நாள் மீண்டெழுவேன் என்று கூறுகிறாள்.

அப்போது எழுத்தாளர் நீ வேறு யாரையாவது கண்டுபிடிப்பாய் என்கிறான்.
கண்டிப்பாக நான் கண்டுபிடிப்பேன், நான் இளமையாக, அழகாக, புத்திசாலியாக, ஆசைப்படும்படி இருக்கிறேன். ஆனால் உங்களுடன் சேர்ந்து இருந்து நான் அனுபவித்ததை மீண்டும் அனுபவிப்பேனா என்கிறாள்.

அவன் நாம் சேர்ந்திருந்தபோது நான் உன்னை காதலிக்கவே செய்தேன் என்கிறான்.
தெரியும், ஆனால் நான் விடைபெறுதல்களை வெறுப்பவள் என்று கூறி பிரிகிறாள்.

அதன் பின்னர் கஜகஸ்தானுக்கு மிக்காயிலுடன் பயணிக்க தொடங்க அந்த ஊரில் தோஸ் என்கிறவனை சந்திக்கிறான். அதன் பின்னர் எழுத்தாளருக்கு ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும் அகம் சார்ந்து அவருக்குள் நிகழும் மாற்றங்கள் மதம் குறித்தான பலவும் வாசித்து மட்டுமே உணர முடியும். இறுதியாக எஸ்தரை சந்திக்க அவள் தங்கி இருக்கும் வீடு வரை சென்றுவிட்டு எழுத்தாளர் அடையும் உணர்வு போராட்டம், பின் அவளை சந்திக்க அவள் இவனுக்காக காத்து கொண்டிருந்ததையும், தான் எடுத்த முடிவு தவறோ என்று வருத்தப்பட்டு குழம்பியதையும், கருத்தரிப்பதையும் சொல்கிறாள். கருவுக்கு காரணமானவன் வேறு ஒருவன் என்கிறாள். ஊருக்கு அழைக்கிறான் கணவர், வேறு குதிரைக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறான் மிக்காயிலிடம், பின்னர் போர் முனை நிருபர் வேலை வேண்டாம் என்கிறான், வயிற்றில் வளரும் குழந்தை எதிர்காலத்துக்காவது என்கிறான். இந்த குழந்தைக்கு நீங்கள் பொறுப்பில்லையே என்கிறாள். அவளை புரிதலுடன் அணைக்கிறான். இந்த  இடத்தில் எப்படி விவரித்தாலும் கதையை முழுவதும் வாசித்தவர்களால் மட்டுமே உணர முடியும். பின் எஸ்தரை ஊருக்கு கூட்டி செல்கிறார்.

ஓஷோவின் பிரதிபலிப்பை இவரது எழுத்தில் பல இடங்களில் உணர்ந்தேன். நான் சஹீரின் கதையை மட்டுமே மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த புத்தகம் விளக்கும் தத்துவம், இது விளக்கும் மனித மனம் மதம், ஆன்மீகம் குறித்த விவரணைகள் எல்லாம் வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.  இந்த புத்தகம் வாசிக்கும்போது, நம் ஆத்மாவின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.  


அவரின் சில வரிகள் கீழே

காட்டில் தீ பரவுகிறது. இருவர் அதனூடாக ஓடி இறுதியில் தீ இல்லாத பகுதிக்கு வந்து ஆசுவாசமடைகிறார்கள். அருகே ஆறு ஒடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ஒருவர் முகம் கரி பிடித்து அழுக்காகவும், மற்றொருவர் முகம் தெளிவாகவும் இருக்கிறது. இதில் யார் முதலில் முகத்தை கழுவுவார்கள்?

சந்தேகமென்ன அழுக்கடைந்தவன் தான்.

இல்லை. அழுக்கானவன் எதிரில் இருக்கும் தெளிவான முகத்தை பார்த்து தானும் அவ்விதம் இருப்போம் என நினைக்கிறான். ஆனால் தெளிவாக இருப்பவன் அழுக்கானவன் போல இருப்பதாக நினைத்து முதலில் முகம் கழுவ எத்தனிப்பான்.

நான் எல்லா பெண்களிடமும் என்னை தான் தேடியிருக்கிறேன். அவர்களின் வசீகரமான முகங்களை பார்த்து அதில் நான் பிரதிபலிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதே நேரம் அவர்கள் என் முகத்தில் இருந்த அழுக்கை பார்த்தனர். எவ்வளவு புத்திசாலியாகவும் தன்னம்பிக்கை உடையவர்களான போதும் என்னில் பிரதிபலித்த அவர்களை பார்த்து தாங்கள் இருப்பதைவிட மோசம் என நினைத்தனர்.
=======

நான் உங்களை நேசிக்கும் அளவு நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை கேட்கும் தைரியமில்லை. நான் எப்போதும் ஒரு பாசமிகு உறவில் இருக்க வேண்டும் என உணர்வேன். ஆனால் ஏன் ஆண்களுடன் இப்படிப்பட்ட சலிப்பான உறவு கிட்டுகிறது?

===========
அன்பும் காதலும் மற்றவர்களிடம் தேட வேண்டியது இல்லை. அது நம்மிடம்தான் இருக்கிறது. அதை அடைவதற்குத்தான் இன்னொருவர் தேவைப்படுகிறார்..

===========

இரு வேறுபட்ட இயல்புகளில் இருந்து காதல் பிறக்கிறது. முரண்பாட்டில் காதல் வலுவாக வளர்கிறது. எதிர்கொள்தலிலும் உருமாறுதலிலும் காதல் பேணப்படுகிறது.

==========

மனிதச் சித்ரவதைகளிலேயே கொடுமையானது சிலுவையில் அறையப்பட்டு சாகும்வரை அதிலேயே இருந்து சித்ரவதை அனுபவிப்பது. .ஆனால் இப்போது ஒரு சித்ரவதை கருவியை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து மக்கள் அதை தங்களின் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். படுக்கை அறை சுவரில் மாட்டி வைக்கின்றனர். அதை ஒரு சம்யக்குறியீடாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இப்படித்தான் பல குறியீடுகளை நாம் அறிவோம். ஆனால் அதன் பொருளை நாம் மறந்துவிட்டோம்.

நாகரீக மேம்பாடு, மனித உறவுகள், நம் நம்பிக்கைகள், நம் தேச வெற்றிகள், ஆகியவை திரித்துச்சொல்லப்பட்ட கதைப்பொருட்கள்.

========

பெண்கள் எப்போதும் நிலையான தன்மையையும் நம்பிக்கையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நானோ சாகசத்தையும் புதிரையும் எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஆனால் உன் தோழமையை விரும்புகிறேன்.

என் தோழமையை விரும்புகிறீர்கள். மிக முக்கியமான விஷயங்களை மறக்கலாம் என்பதற்காக என் தோழமையை எப்போதும் எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் நாடி நரம்புகளில் பரவசம் ஓடிக்கொண்டிருப்பதை உணரவே உங்களுக்கு விருப்பம். ஆனால் ரத்தம் தான் ஓட வேண்டும் என்பதை மறந்து போகிறீர்கள்.

===========

அடிமைத்தனத்தை போலவே சுதந்திரத்தின் விலையும் மிக அதிகம். ஒரே ஒரு வித்தியாசம், சுதந்திரத்தை பெறும்போது சந்தோசத்தையும், புன்னகையையும் கொண்டிருப்பீர்கள். ஆனாலும் அப்புன்னகையின் ஒளியை கண்ணீர் மங்கச்செய்துவிடும்..

===========
சுவாராசியமாக வேறு எதுவும் செய்யமுடியாதிருக்கும் சமயங்களில் பெண்கள் மனக்கிளர்ச்சியை எதிர்பார்த்திருப்பர், ஆண்கள் சாகசத்தை எதிர்நோக்கியிருக்கும் போது அது இப்படி முடியும். மறுநாள் எதுவுமே நடந்திராதது போல் இருவருமே பாவனை செய்து கொள்ள வாழ்க்கை தொடரும்.

மனதில் சோர்வும் தளர்ச்சியும் எவ்வாறு நேருகிறதோ, இன்னொரு பெண்ணுடன் படுக்கைக்கு செல்லவேண்டும் என்ற தூண்டுதலும் இயல்பாக நிகழ்கிறது. இந்த நேர்த்தியான இயக்கம், செயல் சிந்தனையில் விளைந்ததோ, ஆசையில் நிகழ்ந்ததோ இல்லை.

=============

Monday 12 September 2016

மூக்கு - முகம்மது பஷீர்

வைக்கம் முஹம்மது பஷீரின் “மூக்கு” சிறுகதை தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரின் மதில்கள் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மலையாள எழுத்தாளரான பஷீரின் இந்த பதினாறு கதைகளை குளச்சல் மு.யூசுப் மொழிப்பெயர்த்துள்ளார். இவரின் எழுத்து நடையில் தோணிக்கும் ஹாஸ்யமும், அங்கதமும் தனி இலக்கிய சுவை கொண்டது. முதல் கதையான ஜென்ம தினம் படித்த போது எழுத்தாளரின் வறுமையும் அதை அவர் தனது பிறந்த நாளில் எதிர்கொண்ட விதத்தையும் கனமாக பதிவு செய்தாலும் அந்த சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை கதை முழுவதும் விரவியிருக்கிறது.

ஐசுக்குட்டி என்ற கதை ஒரு பெண்ணின் எளிய ஆசையான டாக்டர் வந்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையும், அதற்காக பிரசவ வலியை பொறுத்து கொண்டு அவள் செய்யும் பிடிவாதமும், டாக்டர் வந்து பிரசவம் பார்த்தால் செலவாகும் என அவள் கணவன் இறைஞ்சுவதும் ஆனால் அதை ஏற்காத ஐசுக்குட்டியின் பிடிவாதத்துக்கு பின் இருக்கும், பெருமையாக பிறரிடம் பீற்றிக்கொள்ள என்று சில பெண்கள் செய்யும் செயலின் பின் உள்ள மனநிலையை பஷீர் ஆழமாக பதிந்திருக்கிறார்.

அம்மா கதை கொஞ்சம் சுதந்திரத்துக்கு முன் இருந்த அரசியல் பின்ணணியுடன் பயணிக்கிறது. அப்போதைய இளைஞர்களுக்கு காந்தியின் மீதும், காங்கிரஸ் மீதும் இருந்த அபிமானம், தண்டி யாத்திரைக்காக கல்லூரி இளைஞர்கள் பலர் அடிபட்டது, அந்த நேரம் சுதந்திர தாகத்தால் எழுத்தாளரும் வீட்டுக்கு தெரியாமல் வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது. சிறை அனுபவம் என விரிகிற கதையில் சிறை தண்டனை முடிந்து சில நாட்கள் கழித்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைகிற அவருக்கு அவர் அம்மா சாப்பிட்டியா மோனே என்று சொல்லி தட்டு வைத்து சோறு பரிமாறுகிறாள். சாப்பிட்டு முடித்த பின் நான் இன்று வருவேன் என்று எப்படி தெரியும் என அம்மாவை கேட்க , அவர் அம்மா சர்வ சாதாரணமாக சோறும், குழம்பும் வச்சுகிட்டு தினமும் காத்திருப்பேன் என்று கூறுகிறார். காலங்கள் பல உருண்டோடிய  பின்னும் அந்த தாயிடம் இருந்து வரும் ஒற்றை வார்த்தை உன்னை பார்க்க வேண்டும் என்பதாக கதை முடிகிறது.

மதங்களையும் அவற்றின் மூடநம்பிக்கைகளையும் எள்ளல் செய்திருக்கிறார் புனித ரோமம் சிறுகதையில் . பால்ஷரீஃப் என்ற புனித ரோமம் ஒன்றை காண்பதற்காக இலட்சகணக்கான மக்கள் முண்டியடிப்பதையும் உருவ வழிபாடை நிராகரிக்கும் இஸ்லாத்தில் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சில விஷயங்கள் நடப்பதை பஷீர் விவரித்திருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார்.

பூவன்பழம் கதை என்னை பொறுத்தவரை ஆணாதிக்க கதை. இலக்கியம் அதிகம் ஆண்களால் படைக்கப்பட்டதாலோ என்னவோ அவர்களை அறியாமல் சில கதைகளில் அவர்களின் ஆதிக்க உணர்வை சில எழுத்தாளர்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். பெண் தன்னையறியாமல் அடிமைத்தனமே சுகம் என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கு பின் அவளை அப்படி நம்ப வைப்பதில் ஆண்களின் பங்கு பெரிதாக உள்ளதே என்று கூறலாம்.

திருமணமான இளம் மனைவியான ஜமீலா தனது கணவர் இரவு வீட்டுக்கு வரும்போது பூவன்பழம் வாங்கி வர சொல்கிறாள். கணவர் ஏதேதோ வேலைகளில் முதலில் மறந்துவிடுகிறார். பின்னர் நினைவுக்கு வர கடை கடையாக தேடுகிறார், ஆனால் பூவன்பழம் மட்டும் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த ஆரஞ்சு பழத்தை வாங்கிகொண்டு இரவு வீட்டுக்கு வருகிறார்.

வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட ஆரஞ்சு பழத்தை மூட்டை கட்டி பத்திரமாக பாதுகாத்து மனைவி தனியாக இருப்பாளே என்று மனைவியை காண அந்த ஆற்று வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து இறங்குகிறார். ஒருவழியாக மிகுந்த சிரமப்பட்டு வீட்டை அடையும் அவர் மனைவியுடன் இரவு உணவு சாப்பிடுகிறார். உணவிற்கு பின் பூவன்பழம் கிடைக்கவில்லை ஆரஞ்சு தான் கிடைத்தது என்கிறார். மனைவிக்கு கோவம் தான் கேட்டதை வாங்கி வரவில்லையே என்று எனவே அதை நீங்களே சாப்பிடுங்கள் என கூறி படுக்க சென்று விடுகிறார்.

இவர் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து இதை கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிடு என்கிறார். ஆனால் ஜமீலா நான் கேட்டது பூவன்பழம் என்கிறாள். கணவர் கெஞ்சி சாப்பிட சொல்ல மறுக்கிறாள். பின் தின்றே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார். ஜமீலா திங்கலேன்னா அடிச்சே திங்க வைப்பீங்களோ என முறைக்க கணவர் எதுவும் சொல்லாமல் பிரம்பு எடுத்துவந்து அடித்து திங்க வைக்கிறார். பின் அப்படி அடித்தற்காக வருத்தப்படுகிறார். அதன் பின்கிட்டத்தட்ட அவரின் அடிமை போலவே வாழ்ந்து அதன் மூலம் கணவரின் அன்பு கிடைக்க நிறைய பிள்ளைகளை பெற்று இறுதியில் இருவரும் கிழவர் கிழவியாகி இதை நினைத்து சிரித்து பார்ப்பதாக கதை முடிகிறது. கதையில் இலக்கிய சுவையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக என்னால் இந்த கதையை சிலாகிக்க முடியவில்லை. அடித்து புரிய வைக்கும் அன்பை ஏற்கும் பெண்ணை ஜீரணிக்க முடியவில்லை.

நீல வெளிச்சம் கதை எனக்கு மிக பிடித்த த்ரில்லர் கதை. கதை ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை அடுத்து அடுத்து என்று பக்கங்களை விட்டு கண்களை நகர்த்த முடியாமல் கட்டி போட்டிருந்தார் எழுத்து நடையிலும், கதையை விவரித்த பாணியிலும்.

புத்தக தலைப்பான மூக்கு கதையில் மக்களின் முட்டாள்தனத்தை பகடி செய்திருக்கும் விதம் எந்த காலத்துக்கும் பொருந்தும். ஏனோ இந்த கதை வாசித்தபோது பலருக்கு வழங்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டங்களும், திடீரென சிலர் பிரபலமாகும்போது நடக்கும் கூத்துகள் எல்லாம் மனக்கண்ணில் வந்தன. 

பர்ர்ர்ர் !!!! சிறுகதை சாதாரண கதை தான்.. பதின்பருவத்தில் ஒருவனுக்கு ஒரு பெண் மீது இருக்கும் மிகப்பெரும் பிரமை எப்படி உடைகிறது என்பதை சொல்லியிருக்கிறார் பஷீர்.. ஹாஸ்ய நடையில் ....

வைக்கம் முகம்மது பஷீரின் இலக்கிய நயமும், ஹாஸ்யமும் வாசித்து முடித்த பின்னும் கண்டிப்பாக மனதை விட்டு அகலாது. கடவுள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் அதே சமயத்தில் மனிதனின் கையறு நிலையும், தெயவத்திடம் சரணாகதி அடைவதையும் எந்த கொள்கைக்குள்ளும் இல்லாமல் அப்படியே சொல்லி இருக்கிறார். பெரும்பாலான கதைகள் ஆசிரியரின் வாழ்க்கை அனுபவங்கள் என்றாலும், அவர் பார்த்த அவரை பாதித்த விஷயங்களையும் பதிந்திருக்கிறார். முக்ம்மது பஷீர் என்கிற இலக்கியவாதியின் நல்ல அறிமுகமாக இந்த சிறுகதை தொகுப்பை சொல்லலாம் . இந்த தொகுப்புகள் மூலம் ஆசிரியர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், இவரின் எழுத்து நடையும் அனைத்தையும் பகடிக்குள் கைகொணர்ந்திருக்கும் வித்தையும், பஷீரை தேடி தேடி வாசிக்க தூண்டும்.....