Tuesday 29 September 2015

எதிர்பார்ப்பு

அதிகாலையின் அழகை
மாலை வெயில் வரையும் ஓவியத்தை
முழங்கா இரவின் ஓசையை
முற்றுப்பெறா கவிதையின் தவிப்பை
முயங்கிட தவிக்கும் காதலை
மழலலைகளின் வெட்கத்தை
மனதை கரைக்கும் இசையை
மௌனிக்க வைக்கும் உன் பார்வையை
இதழோரம் மின்னும் குறுநகையை என
பகிர ஆயிரமுண்டு
கேட்கும் மனதும்
உணரும் இதயமும்
வாய்க்கும் பொழுதுகளை
எதிர்பார்த்தபடி
கடக்கிறேன் இந்த நாளையும்.

வெள்ளை யானை - ஜெய மோகன் புத்தகம் பற்றிய பார்வை

“வெள்ளை யானை” ஆசிரியர் ஜெயமோகன். புனைவு என்ற போதிலும் வரலாற்று வகையாக தான் பார்க்க முடிகிறது. சென்னையாக இப்போது மருவி நிற்கும் மதராசிப்பட்டினத்தின் கதை மதராசிப்பட்டினத்தின் வளமையை சொல்லவில்லை மாறாக இருண்ட பகுதிகளை சொல்லியுள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஐஸ் ஹவுஸ், பக்கிங்க்ஹாம் கால்வாய், சென்னை துறைமுகம், சென்ட்ரல் போன்ற அழகிய கட்டடிடங்களின் பின்னால் புதைந்திருக்கும் அழுகிய வரலாறு மனதை கனக்க செய்கிறது. 1876 – 1878 ஆண்டுகளில் தமிழகத்தில் மதராஸில் ஏற்பட்ட பெரும்பஞ்சம் அப்பஞ்ச்ததில் இறந்து போன பல இலட்சம் மனிதர்களை அவர்களின் அந்த நிலைக்கு காரணமாக அப்போது இருந்த ஆங்கிலேய ஆட்சி அவர்கள் பொருட்களை நம் வளத்தை கொள்ளை அடித்தார்கள் என்றால் அவர்களுக்கு துணையாக நின்றது பேராசை பிடித்த இந்தியர்கள். ஜாதி என்ற ஒன்று எவ்வளவு கோரமான முகத்துடன் அப்போது ஆட்சி புரிந்து பல இலட்சம் உயிர்களை எந்த கருணையுமின்றி கொன்று குவித்தது என்பதை நாவலை வாசிக்கும் போது உணர முடிகிறது.. இந்தியாவின் கால்வாசிப்பேர் பஞ்சம் கொள்ளை நோய்களில் இறந்தார்கள். இறந்து போனவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்..

இந்தியாவின் முதல தொழிற்சங்க போராட்டம் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் நடத்தியது என்கிற வரலாற்று உண்மை. ஆனால் தலித்துகளால் நடத்தப்ட்ட இது இடைநிலை ஜாதி ஆட்களாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் உயர்சாதி குத்தகைக்காரர்க்ளாலும் நசுக்கபட்டதாக திரு. வி .க. அவர்கள் செவிவழிச செய்தியாக கேட்டதை சொல்லியிருக்கிறார்.
எய்டன் பைர்ன் என்ற ஐரீஸகார ஆங்கிலேய பிரபுவின் கீழ் மதராஸப்பட்டினம் இருந்ததாக ஆரம்பிக்கும் நாவல் அவரின் பார்வையிலேயே செல்கிறது.
காலை அலுவலகத்துக்கு குதிரையில் செல்லும் அவர் வழியில் இரண்டு மனிதர்கள் சாட்டையால் அடிக்கபடுவதை பார்த்து நிறுத்தி விசாரிக்க தொடங்க அவரை சாட்டையால் அடிக்கும் கங்காணி நீலமேகம் அவர்கள் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் என்றும் வேலை செய்யாமல் தப்பி ஓடிவந்துவிட்டதற்கு தண்டனை தருவதாக சொல்ல எய்டன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு இல்லை என்று சொல்லி அடிப்பட்டு கீழே கிடக்கும் அவனை தூக்க சொல்கிறார். அவன் தீண்டத்தகாதவன் தொட முடியாது என்று மறுக்க எய்டன் இது என் ஆணை என்று சொல்லும்போதும் எந்த சலனமும் காட்டாமல் நீலமேகம் தொட மறுத்து நிற்கும்போது அப்போதிருந்த தீண்டாமை விஷம் எந்தளவு கொடியது என்பது வாசிப்பவர்களுக்கு மெல்ல மெல்ல உறைக்க தொடங்குகிறது.

இங்கு நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களின் பின் புலம், அவர்கள் ஊரில் எப்படி இருந்தார்கள, அவர்களின் நிலை, இங்கு எப்படி இருக்கிறார்கள என்பதெல்லாம் நாவல் வாசிக்க வாசிக்க தெரிந்து கொள்ள முடிகிறது. கொடுங்கோலாட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இருந்த போதும் அவர்களின் கொடுங்கோலுக்கு கொஞ்சம் கூட குறைச்சலில்லாமல் மனிதாபிமானமில்லாமல் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தி நம் மக்களையே சுரண்டிய கொடுமை அதிகம். ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் மனசாட்சியுடன் நடந்து கொண்ட ஒரு அதிகாரி எய்டன். முதலில் ஜாதி பிரச்சனை ஜாதி பிரிவுகள் புரியாமல் குழம்பிய ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநலத்திற்காக அந்த ஜாதி பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதும் ஆங்கிலேயர்களின் துணையுடன் உயர் ஜாதி இந்துக்களும் இடைநிலை சாதிகாரர்களும் சேர்ந்து தலித்துகள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித இனம் மொத்தமும் மனிதன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்...

அடிப்பட்ட ஐஸ்ஹவுஸ் தொழிலாளி விவகாரத்தில் இறங்கும் எய்டன் அந்த ஐஸ்ஹவுஸ் சென்று பார்க்க அங்கு தலித்துகள் எந்த பாதுகாப்பும் குளிருக்கு குறைந்த பட்ச காலணிகள் கூட இல்லாமல் வேலை செய்வதையும் பார்த்து அதிர்ச்சியாகி விசாரணை தொடங்க அந்த விசாரணை செல்லும் திசை தான் நாவல். அந்த தலித்துகளை பற்றிய விவரங்களை எய்டனுக்கு சொல்லும் காத்தவராயன் மூலம் தலித்துகளின் நிலை எய்ட்னை அதிர்ச்சி கொள்ள செய்ய அவர்கள் இடம் நோக்கி பயணிக்கிறான். கோரைப்புல் குடிசையில் ஈரத்தில் அவர்கள் இருக்கும சேரியை பார்த்து அதிர்ச்சியடையும் எய்டன் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பாதிரியாரை சந்திக்கிறான்.

அவர் சொல்ல செங்கல்பட்டு செல்கிறான் பஞ்சம் பற்றி அறிக்கை தயாரிக்க. வழியில் அவன் காணும் காட்சிகள் நாம் மனிதர்களாக பிறந்து உயிரோடு இருக்க வெட்கப்பட வேண்டிய காட்சிகள் முகத்தில் அறைய மிகுந்த மன உளைச்சலுடன் எய்டன் விவரங்கள் சேகரித்து வருகிறான். அப்போது அவனுக்கு வண்டியோட்டியாக வரும் டேவிட் பேசும் அத்தனையும் பச்சை உணமையாக எய்டன் நெஞ்சில் அறைகிறது.

பஞ்சம் பற்றிய அறிக்கை தயார் செய்து பஞ்சம் தீர ஒரு ஆறு மாதம் இங்கிருந்து எந்த தானியமும் ஏற்றுமதி செய்யாமல் இருந்தால் போதும் என்ற தீர்வுடனும் கவர்னரை சந்திக்க எய்டன் செல்கிறான். ஆனால் அங்கே இருக்கும் அதிகாரிகள் செய்யும் சூழ்ச்சிகள், இந்திய குத்தகைக்காரர்களின் சுயநலம் எல்லாம் அதை செய்யவிடாமல் தடுப்பதுடன் எய்டனையும் வேறு ஊருக்கு மாற்றல் செய்கிறது.

ஆனால் அதற்குள் காத்தவராயன் விருப்பத்துக்கு இணங்க ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை போராட வைக்க எய்டன் எடுக்கும் முயற்சியும், தலித்துகள் முதன் முதலாக உரிமை குரல் எழுப்புவதும் அது முரஹரி ஐயங்கார் என்பவரால் நசுக்கப்படுவதும் அதற்கு அவர் சொல்லும் காரணமும் அப்போது மேட்டுக்குடி மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

காத்தவராயன் அவரிடம் தயவு செய்து எங்களை மனிதர்களாக பாருங்கள் நாங்கள் செத்து அழிந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்ல அவன் எதிரில் நின்று பேசியதே பாவம் என்பது போல பேசும் முரஹரி அவர்கள் கடவுள் உருவாக்கிய சட்டங்களை மீறினார்கள் இதோ நிற்கிறானே இவன் அணிந்திருக்கும் இந்த வெள்ளை உடைக்காகவே இவன் கூட்டத்தை கடவுள் கொன்றழிப்பார். கடவுளுக்கு மனிதர்கள் எங்கே நிற்கவேண்டும் என்று தெரியும் என்று கொதித்து பேச காத்தவராயன் ஆம் கடவுள் இருக்கிறார் என்று தான் நானும் நினைக்கிறேன் இல்லாவிட்டால் மாடுதின்பவர்கள் உங்களுக்கு எஜமானர்களாக வந்திருக்க மாட்டார்கள் உங்கள் பெண்களை அவர்களுக்கு கொடுத்து அறைக்கு வெளியே நீங்கள் கூழைக்கும்பிடு போட்டு நின்றிருக்க மாட்டீர்கள் என்று சொல்லும்போது உறைக்கும் உண்மை கனமானது.

காத்தவராயன் மூலம் தலித்துகளின் அந்த கால வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். மனிதம் செத்த இந்தியர்களும் இருந்திருக்கிறார்கள் மனிதாபிமானத்துடன் இருந்த வெள்ளையர்களும் இருந்திருக்க்றார்கள் என்பதை நாவல் வாசித்து முடிக்கும் போது உணர முடியும்.

காத்தவராயன், டேவிட் இருவர் மூலமும் தலித்துகளின் நிலையை அழுத்தமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். எய்டன், பாதர் பரண்ணன் மூலம் மனிதாபிமானம் உள்ள ஆங்கிலேயர்களின் மனிதத்தையும், மரிஸா மூலம் அப்போது இருந்த ஆங்கிலோ இந்திய பெண்களின் நிலையையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியை நியாயப்படுத்தவில்லை ஆசிரியர் ஆனால் அந்த ஆட்சியில் இருந்த மனிதாபிமானமிக்க அதிகாரியை பற்றி சொல்லி இருக்கிறார்.  அந்த மனிதாபிமானம் எப்படி ஆங்கிலேய அதிகாரிகளாலும், நம் சுயநல முதலைகளாலும் குதறப்படுகிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.. இது ஆங்கிலேயே ஆட்சியை ஆதரிக்கும் நாவல் அல்ல...நாவல் அது சொல்லும் அரசியல், தத்துவம், கோட்பாடுகள் எல்லாம் குறித்து வேறு ஒரு பதிவாக இட வேண்டும்...

Saturday 19 September 2015

முரண்

கவிதைகளில் கரைந்தேன்
கதைகளில் நிறைந்தேன்
கொண்டாட்டங்களில் திளைத்தேன்
கனவுகளற்ற தூக்கத்தில் மகிழ்ந்தேன்
உன் குரல் காதின் மூலம் இதயம் தொட்டபோது
மனம் எனை பார்த்து குறுநகை புரிந்தது

Friday 18 September 2015

மனதின் ஓரத்தில்

வட்டம், கட்டத்திற்குள் அடங்காமல்
நேர்கோடாகவும்
சில சமயம் வளைந்தும், நெளிந்தும்
மேடு பள்ளம் குதித்தும்,விழுந்தும்
விழுந்த வேகத்தில் எழுந்துமாய்
வாழ்க்கையை வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன் .


சாதனையும் செய்யவில்லை
சாதிக்கும் எண்ணமும் ஏதுமில்லை ..
வரலாற்றில் பேர் இல்லாவிட்டால் என்ன
யாரோ ஒருவரின் மனதின்
ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருப்பேன்
காரணமேதும் இல்லாவிட்டாலும் ..

இரவு - ஜெயமோகன் நாவல் பற்றிய ஒரு பார்வை.

இரவு ஜெயமோகனின் நாவல். தமிழினி பதிப்பகம். முதலில் இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்பதில் மிகப்பெரிய ஐயம் உண்டு என்ற போதிலும் அப்படி ஒரு உலகத்துள் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவதே இப்படைப்பின் வெற்றி.

மலையாள கரையோரம் ஒதுங்கி, தென்னை கூட்டத்தின் நிழலை, காயலின் அழகை, கடுஞசாயின் சுவையை, புட்டின் மணத்தை, நிசாகநதி பூவின் மணத்தை நுகர்ந்துவிட, அந்த இரவின் தனிமையை அதன் அழகில் நம்மை கரைத்து கொண்டுவிடும் எண்ணத்தை அவர் எழுத்து நடையில் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெயமோகனின் மேற்கத்திய தத்துவத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியை, கிருஸ்துவ மதத்தின் மீதான அவரது எள்ளலை இந்த நாவலிலும் பட்டும் படாமல் தொட்டிருக்கிறார்.

கொஞ்சம் கூர்ந்து கதையை உள்வாங்கினால் திருமூலர் பட்டினத்தார் ஆகியோரின் பெண்கள் பேய்கள் என்ற வாக்கியத்தை ஒட்டியே கிட்டத்தட்ட பயணித்திருக்கிறார்.

ஆனால் மிக ஜாக்கிரதையாக நீலிமா பாத்திர படைப்பை கையாண்டிருக்கும் விதத்தில் யட்சி என்று குறிப்பிட்ட போதிலும் நீலிமாவின் பாத்திரத்தின் யதார்த்த பெண்ணின் உணர்வுகள் அன்பின் ஆழம் வெறுப்பின் ஆழம் போன்ற சிலவற்றை அப்பட்டமாக காட்டும் இடங்களில் அப்பாத்திரத்தித்தை நம்மில் ஊடுருவ செய்கிறார்.

நீலிமா, சரவணன், மேனன், நாயர், தோமா, கமலா, காயல், முகர்ஜி, சுவாமிஜி, பாதிரியார் தாமஸ் என்று எல்லாரின் மூலமும் நம் சிந்தனைக்குள் ஊடுருவி மனிதர்களின் தேடலுக்கு பின் இருக்கும் அபத்தங்களை ஆனால் தேடல் என்பது தவிர்க்க முடியாது சிலரை அலைக்கழிப்பதை சொல்ல முனைந்திருக்கிறார். உண்மைக்கு மிக அருகில் நெருங்கி பார்க்க முனைபவர்கள் சந்திக்கும் ப்ரச்ச்னைகள் ஆபத்தான கத்தி முனையில் நடந்து பழகியவர்களுக்கு சாதாரணமாக நடக்க முடியாமல் போகும் அவஸ்தையை சொல்லியிருக்கிறார்.

சரவணன், சுவாமிஜி, பாதிரியார் தாமஸ், நீலிமா, முகர்ஜி அனைவரும் உண்மையை வேறு வேறு கோணங்களில் அடைய முற்படுபவர்களாக தான் இருக்கிறார்கள். பாதைகள் வேறு வேறு. நீலிமா ஆசிரமத்தோடோ பாதிரியின் கொள்கைகளோடோ தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளாதவளாக காட்டிகொண்டாலும் தன்னை வனங்களில் இருட்டில் உலவும் யட்சியாக கூறிக்கொண்டு அவள் மனத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் நிர்வாணமாக கொட்டி சரவணனை வெறுத்து ஒதுக்குவது போல பேசினாலும் அவனின் அன்புக்கு ஏங்கும் பாத்திர படைப்பாக பெண் உணர்வின் பிரதிபலிப்பாக பார்க்கிறேன்..

சரவணன் நீலிமா காயலில் அந்த இரவின் தனிமையில் புணர்வதை காமம் தாண்டிய ஒரு உணர்வாக சொல்லியிருப்பார். இறுக்கி அணைத்து கொள்ள எல்லா எண்ணங்கள் வடிந்தன. உடல் அதன் புராதனச் சடங்கை செய்ய ஆரம்பித்தது எதற்க்காக அது தன்னை அவ்விதம் திரட்டி உருவம் கொண்டிருக்கிறதோ அதை எதற்க்காக அது உண்கிறதோ, எதற்க்காக உடுத்துகிறதோ, எதற்க்காக உறங்குகிறதோ அதை , எங்கே அது தன்னை உடல் மட்டுமே என உணர்கிறதோ அதை என்று சொல்லும் இடத்தில் மனதின் சிந்தனையோட்டத்தின் ஆழம் உணர முடியும்.

தனியாக காயலில் நடுஇரவில் அவன் தோமாவுடன் பயணிக்கும் போது அவனுக்கு ஏற்படும் உணர்வு நிலை அதற்கு பின் இருக்கும் தத்துவத்தை சுவாமிஜி விளக்குவது, சுவாமிஜிக்கும் சரவணனுக்கும் கமலா வீட்டில் நடக்கும் உரையாடல் அதன் தொடர்ச்சியாக சரவணன் கலந்து கொள்ளும் அந்த இரவு நேர பூஜை, அதற்குள் பிரயாணிக்கும் முழுதாக ஏற்கவோ முழுதாக புறக்கணிக்கவோ முடியாத அவனின் மனநிலை, குழப்பத்தில் அவனுக்கு ஏற்படும் மயக்கம், அதன் பின் முகர்ஜியுடனான தர்க்கவாதம் எல்லாமே அழகாக பின்னபட்டிருக்கிறது.

சரவணனின் சராசரி குழப்பங்களும் மேனன், நாயர், தாமஸ் ஆகியோருடனான தர்க்கவாதத்தின் மூலம் அவன் தெளிந்து தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், இரவு உலகத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு தப்பித்து ஓட முயற்சிப்பதும் பின் திரும்புவதும் என்று சரவணன் பல இடங்களில் நம் உணர்வுகளை ஒட்டியே பயணிக்கிறான்.

சுவாமிஜிகும் கமலாவுக்கும் உள்ள உறவு அதனால் ஆசிரமத்தில் நடக்கும் கொலை, அதற்கு பின் சரவணனின் மனதில் நடக்கும் போராட்டங்கள், நீலிமா அவனை எந்த குற்ற உணர்வும் இன்றி பிரிந்து செல்ல சொல்லி எழுதும் கடிதம், அதை பார்த்த பின் அவனுக்கு ஏற்படும் விடுதலை உணர்வு அவன் எடுக்கும் முடிவு என்று கதையை முடித்திருப்பதில் இரவு தனித்திருக்கிறது..



உண்மைன்னா அது கடல். கடல் மாதிரி அது வந்துட்டே இருக்கிறப்போ நமக்குள்ள இருக்கிற எல்லா பொய்யும் கொஞ்சம் கொஞ்சமா நாமே அறியாம கரைஞ்சு போயிடுதுல்ல அது தான் சரியான வழி. எதுக்கும் அதுக்கான பரிணாம காலகட்டம் இருக்கு அதுக்கான அவகாசத்த நாம கொடுக்கணும் போல இந்த நாவலில் வரும் நிறைய வரிகள் நம் அகத்தேடலை உண்மையை அப்பட்டமாக பேசுகிறது

Tuesday 15 September 2015

கோபி கிருஷ்ணனின் படைப்புகள் ஒரு பார்வை.

    கோபி கிருஷ்ணனின் படைப்புகள் மொத்தமும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. 86 சிறுகதைகள், நான்கு குறுநாவல்கள், சமூகப்பணி சார்ந்த அவரது பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள் நேர்காணல் என்று கோபிகிருஷ்ணனின் படைப்புகள் மூலம் அவரது வாழ்க்கையும் அக உணர்வுகளையும், உளவியல் சிக்கல்களையும், சமூகம் தனி மனிதன் திணிக்கும் நிர்பந்தங்களை அதனால் ஏற்படும் மன அதிர்வுகளை என்று நாம் சாதாரணமாக கடக்கும் நிகழ்வுகளுக்கு பின் இருக்கும் உலகத்தை அவரது பார்வையிலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மூலமும் நமக்கு மிக எளிமையான ஒரு நடையில் தெளிந்த நீரோட்டமாக காண்பித்திருக்கிறார்..

    பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகள், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், மனச்சிதைவுகள் அது குறித்த பலரின் கட்டுரைகள், மனச்சிதைவு மனிதர்கள் மீது சமூகம் காட்டும் புறக்கணிப்பு, மருத்துவர்கள் சிலரின் அலட்சியம், சிலரின் அன்பு அரவணைப்பு என்று மனநோயாளிகளின் உலகை அவர்கள் மேல் காட்ட வேண்டிய அன்பின் அவசியத்தை உணர செய்கிறார் தம் எழுத்துகள் மூலம...

    மத்திய தர மக்களின் ஒண்டு குடித்தன வாழ்க்கையை, அதில் இருக்கும் பிரச்சனைகளை கூட மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்திருக்கும் கோபி சில கதைகளில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருந்தாலும் எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார். பல இடங்களில் அவர் வெறும் பார்வையாளாராக காட்சிகளை அப்படியே விவரித்து செல்லும் போது அந்த காட்சி கண் முன் விரிகிறது..சகல சம்பத்துகள் கதையில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கோவில் செல்லும்போது அவரது பார்வையில் கோயிலை பற்றி விவரித்திருப்பார்.. அந்த கதையை வாசிக்கும்போது ஒரு கோயில் சார்ந்த காட்சிகள் அப்படியே கண் முன் விரியும்..மிகவும் பச்சையான வாழ்க்கை மற்றும சில கதைகளில் ஒண்டி குடித்தனத்தில் குடியிருப்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பிரச்சனைகளை சொல்லும் போது இப்படியும் மனிதர்களா என்று துணுக்குறாமல் இருக்கமுடியாது..

    ஈடன் தோட்டம் தொட்டு இறையுணர்வுக் கூட்டம் ஊடாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை எனற கதையில் காமம் அது சார்ந்த வக்கிரம், பாலியல் உணர்வுகள் நீக்கமற எங்கும் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் . முடியாத சமன் கதையும் வேறு சில கதைகளும் முழுக்க பாலியல் பிரச்சனைகளால் அல்லது ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளால் மன்பிறழ்வுக்கு ஆளான மனிதர்களை பற்றி பேசுகிறது..

    தணிக்கையிலிருந்து தப்பிய கதை வாசித்த போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பிலோமி என்ற பெண்ணின் மூக்கிற்க்காக அவளை காதலிக்கும் ஒருவனின் கதை.. மயிரே துணையில் ஊடாடும் மெல்லிய நகைச்சுவை செம... இது போல நிறைய சிறுகதைகளை அதில் அவர் சொல்லியிருக்கும் யதார்த்த உணர்வுகளை சிறுதிடுக்கிடலோடும், சிறு புன்னகையுடனும், சிறு அதிர்ச்சியுடனும், கொஞ்சம் சிந்தனையுடன் தான் கடக்க முடிகிறது.

    நாவல்களில் காத்திருந்த போது ஒரு தனித்துவமான கதை. ஒன்றுமே இல்லை தன மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் காத்திருக்கும் ஒரு மூன்று மணி நேரத்தில் அவர் காணும் காட்சிகள் சந்திக்கும் மனிதர்கள் என்று அவர் பார்வையில் விவரிக்கும் விதத்தில் அட நாமும் தான் இது போல காத்திருக்கும்போது பார்க்கிறோம் ஆனால் இதில் இப்படி ஒரு கோணம் இருக்கா என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை..
    சுய அலசல்கள் அதில் இருக்கும் நேர்மை. அவரது நேர்காணலில் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் விதம் கட்டுரைகளில் மனபிறழ்வு, மனச்சிதைவு குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு அது குறித்தான புத்தகங்கள் அவை முன்வைக்கும் பார்வைகள் என்று எந்த சமரசமும் இல்லாமல் தொகுத்திருக்கிறார்.
     -------------------------------------------------------

    கோபிகிருஷ்ணனின் படைப்புகள் முழுதையும் ஒரே புத்தகமாக வாசிப்பதில் சில சௌகரியங்களும் சில அசௌகரியங்களும் சேர்ந்தே இருந்தன. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த தடிமனான புத்தகத்தை சுமந்து சென்று படிப்பது கொஞ்சம் கடினம். பிரயாணங்களில் வாசிக்க முடியாது. ஆனால் இவரின் எழுத்துகள் எல்லாவற்றையும் வாசிக்கும்போது இவரின் எழுத்து நடையை அழகாக உள்வாங்க முடிகிறது.

    உளவியல் சார்ந்த தனி மனிதனின் சிக்கல்கள், பொருளாதாரம் சுமத்தும் வாழ்வியல் பிரச்சனைகள் அது பாதிக்கும் தனி மனித உளவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தனிமனிதன் மீது ஏற்படுத்தும் தாக்குதல்கள் என்று கோபி முழுக்க சுய மதிப்பீடுகளை உளவியல் சார்ந்து செதுக்கி இருக்கிறார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாது உண்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தி மிக எளிமையான அசத்தலான நடையில் நம் முகமூடியை கழட்டி நம்மை சுய மதிப்பீடு செய்ய உதவியிருக்கிறார். சற்றேறக்குறைய ஆதவனின் நடையை ஒத்திருந்தாலும் கோபியின் களம் முற்றலும் ஆத்வனில் இருந்து வேறு பட்ட களம். 

    ஒண்டிக்குடித்தனத்தில் வசிக்கும் சாதாரண சராசரி மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பின் இருக்கும் உளவியலை எல்லாம் எழுத்தில் கொண்டுவந்திருக்கும் கோபி எந்த சமாதனங்களும் இல்லாமல் அகம் சார்ந்த பிரச்சனைகளை நுணுக்கமாக விவரித்து செல்கிறார். நாம் சாதாரணமாக கடக்கும் நிகழ்வுகளுக்கு பின் இருக்கும் அசாதாரணங்கள் எல்லாம் வாசிக்கும்போது கோபியை பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

    மனிதனின் உளவியல் அதிகம் தெரிந்துகொள்ள மனிதர்களுடன் நெருங்கி பழகுவது மிகவும் மேலோட்டமாக ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.

    கோபிகிருஷ்ணனின் படைப்புகள் முழுமையாக வாசித்து முடிக்கும்போது மனிதர்களை பார்க்கும் பார்வை நம்மையறியாமல் மாறிவிடும் ..