Friday 28 November 2014

ஜனநாயகம்



ஜனநாயகத்தின் மிக பெரிய கோட்பாடு அல்லது ஆதார கொள்கை மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம். அதாவது நம்மால் நமக்காக நாமே தேர்தெடுக்கும் அரசாங்கம். மன்னராட்சி என்பது தனிப்பட்ட் ஒரு குடும்பத்தின் ஆட்சியாக சுய குடும்ப நலமாக போய்விdaட கூடாது என்று பொதுநல அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகத்தின் பேரால் இந்தியாவில் நடப்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

மன்னராட்சி என்றால் அதிகாரத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கடவுள் வாக்கு போல விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும். மன்னரின் நலமே மக்கள் நலம். மன்னர் அவர் தம் குடும்பம் சுகமாக வாழ மக்கள் அடிமைகளாக உழைத்தே ஆகவேண்டும். உழைப்புக்கு தகுந்த கூலி பற்றி மூச் பேச கூடாது அதற்கு பதிலாக மன்னர் அவருடைய பிறந்த நாளிலோ அல்லது அவரது மகாராணி ஆசை நாயகி பிறந்தநாளிலோ, அல்லது பண்டிகைகளின் போதோ நாம் உழைத்து கொடுத்த பணத்திலிருந்து நமக்கு சாப்பாடு, துணிமணிகள் சில சமயம் ஏதோ கொஞ்சம் காசும் தருவார். நாம் உழைத்து கொடுத்ததை தான் அவர் தின்றது போக நமக்கு தருகிறார் என்று அறிவு கூட இல்லாமல் கிடைத்தற்கு மகிழ்ந்து பக்கத்தில் இருப்பவரை விட நமக்கு தேவலாம் என்று நம்மை போல கையேந்தும் இன்னொருவரை ஒப்பிட்டு திருப்தி அடைந்து விடலாம்.

இப்படியே இருந்துவிட கூடாது என்று சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு சிலரால் போராடி பெறப்பட்டது தான் ஜனநாயகம். ஆனால் அதன் பெயரால் நடப்பது என்ன? முன்பு மன்னருக்காக உழைத்த மக்கள் இப்போது கட்சிகளுக்காக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? இதை மக்கள் யோசிக்கவே கூடாது. அப்போது தான் ஆட்சியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியும். மன்னராட்சி என்றால் சிரச்சேதமோ, கழுவேற்றமோ செய்து விடலாம் யோசிப்பவர்களை. ஆனால் ஜனநாயகத்தில் எல்லாருக்கும் கருத்துரிமை இருப்பதால் அது சாத்தியபடாது அதனால் என்ன செய்யலாம் சிந்திக்கவே விடாமல் செய்துவிடலாம். அவ்வப்போது நாயுக்கு எலும்பு துண்டை வீசுவது போல சில சில்ல்றைகளை இறைத்து மொத்தத்தை சுருட்டி கொள்ளலாம். அதற்கு மக்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டும்.

இலக்கியம், கலை, கதை  எல்லாம் உழைக்கும் மக்களின் களைப்பை போக்குகிறதா? மக்களை மெய் மறக்க செய்கிறதா? அப்போது அவைகளை வைத்தே மூளை சலவை செய்துவிடலாம். மெல்ல மெல்ல ஜனநாயகத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இலக்கியம் கலைத்துறையில் இருப்பவர்களையே வைத்தே செய்யலாம். இலக்கியம் கலை கதை எல்லாம் உண்மை என்பது போன்ற மாயை உருவாக்கபப்ட்டது. மெல்ல மெல்ல அதை உருவாக்குபவர்கள் அல்லது அதில் பங்கேற்றவர்கள் கடவுளாக அலல்து கடவுள் போல சித்தரிக்கப்பட்டார்கள்.  அதன் பின் மக்களை சிந்திக்க செய்ய விடாமல் இருப்பது கடினமா என்ன? அவரவர் நம்பும் கதையின் நாயகர்களை தெய்வமாக்க அடுத்தவர்கள் நம்பும் நாயகர்கள் தெய்வம் இல்லை என்று நிரூபிக்க நடக்கும் சண்டையில் கடவுளர்கள் எல்லாம் சுகமாக குளிர் காய மக்கள் அவர்கள் நம்புவர்களை கடவுளாகக முனைப்பாக இருக்க அதை தாண்டி சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது??

மன்னராட்சி காலத்தில் பொங்கி போராடியவர்கள் கையில் சுலபமாக கலையும், இலக்கியமும் கொடுத்து நாயகர்களாக செய்துவிட்டார்கள். நாயகர்களை மக்கள் சிறு தெய்வமாக்கி கொண்டாட அந்த புகழின் மயகத்தில் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் அடிப்படை சிந்தித்தலே அடிப்பட்டு போய ஆட்சி செய்யும் கடவுளின் அடியாளாக மாறிப்போனார்கள். சிந்திக்க தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பதவி, பட்டம், பரிசு என்ற பெரிய பெரிய மீன்களும், மக்களுக்கு இலவசங்கள் என்ற சிறிய மீன்களும் வீசப்பட சுறாவை விழுங்கி ஏப்பமிட்டு கொண்டு சுகமாக ஆட்சியாளர்கள் .

மக்களின் சிந்தனை எல்லாம் யார் அதிக மீன்கள் (இலவசங்கள்) தருகிறார்கள் என்ற ரீதியில் மழுங்கடிக்கப்பட்டுவிட. சிந்திக்கும் தைரியமாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் அவர்களுக்கு ஆதாயம் தரும் கடவுளின் ஏஜெண்டுகளாக அவதாரமெடுக்க.அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை மக்கள் சமூகம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாத்வீகமாக நேர்மை, நியாயம் என்று போராடும் இவர்களை இந்த ஏஜென்ட்டுகள் பிழைக்க தெரியாத முட்டாள்கள் என்றும் கொஞ்சம் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பவர்களை, போராடுபவர்களை தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி அதை தமது அறிவால் மக்களை நம்ப செய்யும் வேலைகளை செய்து வருகிறார்கள்..

ஆக மன்னராட்சி மக்களாட்சியாக மாறாமல் கட்சிகளின் ஆட்சியாகவும் இல்லாமல் கட்சியில் இருக்கும் ஒரு குடுமபத்தின் ஆட்சியாக மாற அந்த கட்சியின் தலைவர்கள் கடவுளர்களாக மாறி அவரவர் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எல்லா வளமும் நம்மிடம் இருந்து பிடுங்கி கொடுத்து செழிப்பாக நாம் எந்த கடவுளிடம் சொத்து அதிகம் என்று கணக்கெடுத்து இந்த கடவுளை விட அந்த கடவுளிடம் சொத்து குறைவு என்று சண்டையிட்டு கொண்டு இருக்கிறோம். அடிப்டையில் அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை மறந்து.

ஜனநாயகத்தின் நிலை இப்போது எதில் வந்து முடிந்திருக்கிறதென்றால் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலை போய் திருடியவர்களில் யார் குறைவாக திருடி இருக்கிறார்கள், அலல்து தவறு செய்தவர்களில் யார் குறைவாக செய்திருக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலையில். ஆட்சியாளர்கள் அபாரமாக தங்கள் உணர்ச்சி பேச்சுக்களால் உணர்வு குமுறல்களால் உண்மையை நாம் என்றும் அறிந்து கொண்டுவிடாமலே செய்துவிட்டார்கள்.. நாமும் வாய் பிளந்து செம்மறி ஆட்டு கூட்டமாக சிந்திக்கவே தோன்றாமல் உண்டு, உடுத்தி, வாழ்ந்து செத்து மடிகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..

பயணம்

ஒட்டி பழகினாலும் ஒட்டாமல் பழகினாலும் மனதில் எஞ்சும் வெறுமையை எதை கொண்டு துடைத்தெறிவது என புரிவதில்லை.

கொடும்பசியில் பலர் மாள, தீராத நோயால் பலர் அவதியுற, குடும்பமே இல்லாத சோகத்தில் பலர் உலவ எல்லாம் இருக்கும் உனக்கென்ன கேடு என்பது போன்ற அறிவார்ந்த பேச்சுக்கும் ஏச்சுக்கும் குறைவில்லை.

கொடும்பசியால் வாடுபவர்களும், தீராத நோயாளிகளும், குடும்பமே இல்லாதவர்களுக்கும் தங்களை மாய்த்து கொள்ளவும் அழுவதற்கும் தங்களை தேற்றி கொள்ளவும் காரணங்கள் இருக்க எந்த காரணம் கொண்டும் விளக்கமுடியா ஊமை உணர்வின் அரற்றல் காதில் விழுவதில்லை. 

ஏற்கனவே மாட்டிகொண்ட கழட்ட முடியாத முக மூடிகளால் மூச்சு திணறி உயிர் பிதுங்கி கொண்டிருக்க மேலும் இரண்டு முகமூடிகளை மாட்டிகொண்டு மௌனமாக கடக்க சொல்லும் அக்கறைக்கும் பஞ்சமில்லை.

நாசூக்காய் உணர்வதை வெளிப்படுத்தி, நல்லவர் என்று பெயரெடுக்கும் வித்தையோ, ஒன்றும் தெரியாத போதும் எல்லாம் தெரிந்ததாக அலட்டிக்கொள்ளும் வித்தையோ கை கூடவில்லை.

என்னை கொன்று தின்னும் உணர்வறியாமல், என் கண் கொண்டு என்னை குத்தி எகத்தாளமாக கைகொட்டி வேடிக்கை பார்த்து சிரித்துச்செல்லும் சிரிப்புக்கு அளவில்லை..

வயிறும், யோனியும் மட்டுமே நினைவில் நிறுத்தி வாழ்க்கையை கடந்துவிடவோ கரைத்திடவோ மனமுமில்லை..

உணர்வு பொய், அறிவு மெய், உடலது பொய், மனமதும் பொய் எல்லாம் மாயையே என்ற ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் தரும் குழப்பங்களிலுருந்தும் விடுபட முடிவதில்லை.

காற்றில் பறக்கும் சிறகாய் எல்லா இடங்களிலும் அமர்ந்தமர்ந்து எங்கு போய் சேர என்ற தெரியாமல் சிறகின் இறக்கைகள் கிழிய மேலே பறக்கவும் முடியாமல் கிழிந்த இறக்கைகளுடன் மேலும் கீழும் அல்லாடி மிச்ச இறக்கைகளும் கிழிந்து வெறும் குச்சியாய் மண்ணில் வீழ்ந்து மக்கிவிட இடம் தேடி பயணிக்கும் பயணம் நின்றப்பாடில்லை..

சூடிய பூ சூடற்க



நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல். சிறுகதைகளின் தொகுப்பு. பனுவல் சென்ற வாரம் சென்ற போது, இந்த நாவல், முத்துலிங்கத்தின் “அக்கா, ஜி.நாகராஜனின் “நாளை மற்றொரு நாளே வாங்கி வந்திருந்தேன். நாஞ்சில் நாடனின் “கான் சாகிப் கொடுத்த உணர்வு நாஞ்சில் நாடானை முதலில் வாசிக்க தூண்டியது.

“கொங்கு தேர் வாழ்க்கை என்ற கதையில் சென்னையில் இருக்கும் லைன் வீடுகள் குறித்தான அவரது அனுபவமும் பார்வையும் கோணமும் படு யதார்த்தம். நான் சென்னை வந்த புதிதில் ஒரு புரோக்கர் கொண்டு போய் அப்படி ஒரு வீடு காண்பிக்க காமன் டாய்லெட் என்ற வார்த்தையே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அங்கு இருப்பவர்களின் வாழ்க்கை முறையை வாழ்வில் காணா சமுத்துவம் உலாவும் இடங்கள் லைன் வீடுகள் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் வாடகை விடுபவர்களிடம் நடந்து கொள்ளும் முறை எல்லாம் கூறி அதில் வசிக்கும் ஒரு முதியவரின் நாதஸ்வர வாசிப்பை அதன் பின்புலத்தில் அவரின் கதையை என்று மனதை குலுக்கி போடும் வார்த்தைகளால் சொல்லியிருக்கிறார்.

“யாம் உண்பேம் என்ற கதையில் வடமாநிலத்தின் ஒரு கிராமத்தில் பருவ மழை பொய்த்ததால் வயிற்ருக்கு இல்லாமல் வறுமை பிடுங்கி திங்க தன் தந்தையை விட்டுவிட்டு மகன் தன் மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்கிறான். வறுமையின் நாக்கு மனிதர்களை சுட்டு பொசுக்குவதை கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்து குடும்பமே இறந்த பின் தன்னை மட்டும் விட்டு போன பிள்ளையை நினைத்து அழ கூட வலுவில்லாது ரயிலில் ஏறும் முதியவர் “கன்பத் சக்காராம் நாத்ரே பசி தாங்காமல் ரயில் பிரயாணி ஒருவர் சாப்பாட்டை யாசகமாக பெற அவர் உபயோகிக்கும் வார்த்தை “அமி காணார், அமி காணார் “ அதன் அர்த்தம் எனக்கு தா அல்ல, நான் தின்பேன் என்றல்ல நாம் உண்போம் என்பதாகும். தூய சங்கத்தமிழில் “யாம் உண்பேம் அது அந்த பிரயாணியின் வாழ்வில் நாத்ரேயின் குரல் மிச்ச வாழ்க்கைக்கும் மந்திரமாக ஒலிப்பதாக முடித்திருப்பார்.

“கடவுளின் காலில் ஒரு காலிழந்த பிச்சைக்காரன் ரயில் பிரயாணத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவனுடைய வாழ்க்கை பற்றி “பரிசல் வாழ்க்கையில் ஒரு குருக்களின் வறுமை கதை இந்த இரண்டுமே வறுமையை  வறுமையில்லாமல் சொல்லி இருக்கிறது.

“கதை எழுதுவதன் கதை “கும்பமுனி முறித்த குடைக்காம்பு “தேர்தல் ஆணையத்துக்கு திறந்தவெளிக் கடிதம்  “மணமானவருக்கு மட்டும் கதைகளில் வட்டார வழக்கும் ஹாஸ்யமும் ஒரு சேர நம்மை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

சூடிய பூ சூடற்க ஒரு பியூனின் வாழ்க்கை, “ செம்பொருள் அங்கதம் ஒரு சர்கரை வியாதி உயரதிகாரியின் வாழ்க்கை முறை பற்றியது.
“தன்ராம் சிங் கதை தான் என்னை ரொம்ப நேரம் பாரத்தில் அழுத்தியது. நாம் மாதம் ஒரு முறை சந்திக்கும் கூர்க்காக்களின் வாழ்க்கை முறை பற்றி.. போக வேண்டிய இடத்துக்கு ஒரு அரை மணி நேரம் தாமதமானாலே டென்சனாகும் நாம் படிக்க வேண்டிய கதை. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு போகும் அவர்கள் போகும்போது பதினைந்து இருபது பேர் சேர்ந்து பயணிப்பார்கள்.
பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் பின் இறங்கி மாறி பாட்னா, பரூணி, மன்சி மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ்ஸில் ஐம்பது கிலோமீட்டர் போக நான்கு மணி நேரமாகுமாம். பிறகு மலைப்பாதையில் தலைச்சுமடாகவும் மட்ட குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை, காலை எட்டு மணி முதல் பிற்பகல் நாலு வரை மலைபயணம். பின் மலைக் கிராமம் ஒன்றில் கிடை. பனிப்பொழிவு, பாறைகள் கொடுங்குளிர் எல்லாம் தாண்டி தான் போக வேண்டும். 

இரயிலிலும் முன்பதிவு பழக்கமில்லை ஜெனரல் கோச்சில் சேர்ந்தாற்போல தடுப்புகளில் இடம் பிடித்து கொள்வார்கள். பயணத்துக்கு சுட்டு எடுத்து போகும் ரொட்டி, அடுத்த ரயிலுக்கு காத்த்ருக்கும்போது தேவைக்கு மறுபடியும் தட்டி கொள்வது மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு என்று நீளும் பயணம் படிக்க படிக்க நாம் ஒன்றுமில்லாத சிறு தாமதத்துக்கு அலட்டுவது மனதில் வந்து போகிறது.
பதினைந்து இருபது நாட்களுக்கு ஒன்று என வரும் கடிதங்களில் சில சாவை சுமந்து கொண்டு வரும். தந்தியும், தொலைப்பேசியும் உதவாத மலை பிரேதசங்கள் . தாய், தகப்பன், குழந்தைகள் இறந்து போனாலும் உடன் பிறப்புகள் இறந்து போனாலும் பத்து நாள் கழித்து வரும் தபால் தான். தகவல் தெரிந்து போனால் கூட மேலும் ஒரு பத்து பதினைந்து நாள்.

அதனால் அப்படி இறந்தவர்களுக்கு மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் சேதி போய் ஞாயிற்றுக்கிழமை காலை கடற்கரையில் கூடி மர நிழலில் வட்டமாய் அமர்ந்து கண்கள் கலங்க இறந்தவர்களை நினைவு கூறி, சடங்குகள் செய்து, தீ வளர்த்து, அதில் தகவல் வந்த கடிதம் எரித்து பின் அந்த சாம்பலை கடலில் கரைத்து மொட்டை அடித்து, கடலில் குளித்து அவரவர் நினைவு சுமந்து பிரிந்து போவார்களாம். படித்த போது கண் கலங்காமல் மனது கனக்காமல் இருக்க முடியாது. 

கண்டிப்பாக தனராம் சிங் படித்தால் கூர்க்காக்கள் மீது ஒரு மரியாதையும் வாஞ்சையும் வரும்....

Wednesday 26 November 2014

டால்ஸ்டாய் சிறுகதைகள்

 " டால்ஸ்டாய் சிறுகதைகள்" தொகுப்பு ஒன்று வாசித்தேன்.. அதில் "சகோதரிகள்", " ஒரு ஏஞ்சலின் கதை" வாழ்வில் மட்டுமா வேற்றுமை" என்ற மூன்று சிறுகதைகளும் ஒவ்வொரு தளம்..

" சகோதரிகள்" கதையில் கப்பலில் நாலு வருடம் சுற்றும் ஒருவன் நான்கு வருடம் கழித்து தரையில் காலடி எடுத்து வைத்து உல்லாசமாக இருக்க பொது மகளிர் விடுதிக்கு நண்பர்களுடன் செல்கிறான் அங்கே தன் தங்கை என்று அறியாமலே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவளிடம் பேசி கொண்டு இருக்கும்போது அவள் தங்கை என்று தெரிந்தவுடன் அதிர்ந்து அதன் பின் செய்யும் ரகளையுடன் முடித்து இருக்கிறார்..

எனக்கு மிகவும் பிடித்தது " " ஒரு ஏஞ்சலின் கதை" ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கதை.. " மனிதன் எதனால் வாழ்கிறான்? மனிதனுக்கு தெரியாமல் எது வைக்கப்பட்டிருக்கிறது? தாயும் தந்தையும் இல்லாவிட்டால் குழந்தைகள் உயிர் வாழுமா? எனபதை தெரிந்து கொண்டு வர கடவுளால் அனுப்பப்பட்ட அவரின் ஊழியர் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி வீட்டுக்கு வந்து அவனுடன் இருந்து கேள்விகளுக்கு விடை தெரிந்து கொண்டு புறப்பட்டு செல்வது பற்றிய கதை...

மூன்றாவது கதை மனிதர்கள் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் சாவில் கூட எப்படி வேற்றுமை பணக்கார சீமாட்டி ஒருவர் இறப்பும், வண்டி ஒட்டி ஒருவரின் இறப்பும், இறந்த பின் முன்னவரின் கல்லறை கல் நடப்பட்டு இருப்பதையும் பின்னவரின் கல்லறையில் முளைத்து கிடக்கும் புல் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்த்துக்கான ஆதாரம் என்று சொல்லி ஒரு சிலுவையாவது நட்டு வைப்பதற்காக மரம் வெட்டி வர செல்லும் வண்டி ஓட்டியின் உறவினன் மரம் வெட்டுகிறான்..மரம் வீழ்ந்து கிடக்கிறது..

"உயிருடனிருந்த மரங்களில் இலைகளும் கிளைகளும் உயிரற்று கீழே கிடக்கும் வெட்டுப்பட்ட மரத்தை கண்டு மகிழ்ச்சியுடன் அசைந்தாடின" என்று முடித்திருப்பார்...
 
"டால்ஸ்டாய்" யின் புள்ளி குதிரை கதை படிக்க படிக்க உங்களை அறியாமல் அந்த குதிரையுடன் ஒன்றிவிடுவீர்கள்.. குதிரை தன் வரலாறை கூறுவது போல சொல்லி கடைசியில் அதை தோலுக்காக கொலை செய்து உரிக்கும் போது கூட அது அப்பாவித்தனமாக அதை உணராமல் ஒரு விடுதலை உணர்வுடன் இறப்பது என்று ரொம்ப அழகா சொல்லி இருப்பார்.. கண்டிப்பாக கதை வாசிக்கும்போது நீங்கள் உங்களை குதிரையாக உணர்வீர்கள்... மனதை பாராமக்கிய "புள்ளி குதிரை" .. இனி எங்கே குதிரை பார்த்தாலும் இந்த கதையில் உள்ள ஏதோ ஒரு வரி நினைவுக்கு வரும்..
 

"சுமித்ரா" - கல்பட்டா நாராயணன் - தமிழில் கே.வி. ஷைலஜா

"சுமித்ரா" கல்பட்டா நாராயணன் எழுதி கே.வி. ஷைலஜாவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல். வம்சி வெளியீடு..இந்த புத்தகம் ஒரு நண்பர் வீட்டில் எதேச்சையாக புரட்டி பார்க்க வாசிக்க தொடங்கிய போதே சுமித்ராவை முழுதும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

கதையின் ஆரம்பம் சுமித்ரா என்கிற முப்பத்தி எட்டு வயது பெண் இறந்து கிடப்பதில் தொடங்குகிறது.அவளின் இறப்பு செய்தி கேட்டு அவளை பார்க்க வருபவர்களின் பார்வையில் சுமித்ரா வாழந்த கால கட்டம் கொண்டு வரப்படுகிறது.அவளின் கணவன், அவள் நண்பன், தோழி, அவள் பழகும் இயல்பான அக்கம் பக்கம் மனிதர்களின் பார்வையில் என்று அழகாக நகர்கிறது.

கதை வாசிக்கும்போது நம்மை அறியாமல் நாமும் சுமித்ராவின் வாழ்க்கைக்குள் சென்று உட்கார்ந்து கொள்கிறோம். அதில் வரும் "புருசோத்தமன், கீதா, மாதவி, கருப்பி, பாத்திரம் விற்கும் பொதுவாள், மறக்கவே முடியாத தாசன் என்று கதை மாந்தர்களும், பழங்கலம் வீடும் திண்ணையும், அவர்களின் உணவும், எல்லாம் எல்லாம் சேர்ந்து மனதுக்கு சொல்ல முடியா சுகந்தம் தருகிறது.

சுமித்ரா இறந்துவிட்டாள் என்று ஆரம்பிக்கும் கதையை வாசித்து முடிக்கும் போது சுமித்ரா உயிர்பெற்று நம்மிடம் வாழ தொடங்குகிறாள்.... கவித்துவமான எளிமையான நாவல்...

கூந்தப்பனை - சு. வேணுகோபால்


கூந்தப்பனை" புத்தகம் குறித்து எல்லாரும் விமர்சனம் எழுதி அதை படித்ததில் இருந்து அந்த புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டனர். ஒரு வழியாக புத்தகம் கிடைக்க வாசிக்க ஆரம்பிக்க அந்த புத்தகம் நான்கு குறுநாவல்களை உள்ளடக்கியது. முதல் கதை " கண்ணிகள்" விவசாயம் சார்ந்த வாழ்வியல் அந்த மனிதர்களை ஆட்டிவைக்கும் வட்டிக்கு விடுபவர்கள் அவர்களால் தோட்டம் இழக்கும் மனிதன் பற்றிய கதை..

கூந்தப்பனை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முதல் கதை முடிந்தவுடன் நேராக கடைசி கதையான அதற்கு சென்று விட்டேன்.. முற்றிலும் புதிய கதை களம். அதில் சதீஷ் என்கிற ஆண்மையற்ற ஒருவனின் மன உணர்வுகள் அவனது மனைவி லதாவின் மன உணர்வுகளை வெகு யதார்த்தமாக விவரித்து சென்று இருக்கிறார் சு. வேணுகோபால்..அதுவும் சதீஷ் தங்கி இருக்கும் விடுதியில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் அந்த கிழவன் கேரக்டர் செம. சந்தோசம் பற்றி அவர் கேரக்டர் வாயிலாக ஆசிரியர் சொல்லும் அத்தனையும் படு யதார்த்தம்.....

" சாவு என்பது பேரமைதி"  இறந்தகால இயக்கத்திற்கும் எதிர்கால இயக்கத்திற்கும் இடையில் கிடக்கும் ஓய்வே சாவு விழிக்காதிருந்தால் நினைவுகளின் சாவு, நான் இறந்தபின்னும் உலகம் இயங்குகிறது என்ற வரிகள் அழகு

ஆனால் அக உணர்வுகள் அக உலகம் தாண்டி புற உலக கதையை சொல்லும் இடங்களில் ஒரு நீட்சி தெரிகிறது. அது கொஞ்சம் தோய்வை கொடுக்கிறது சில இடங்களில்... ஆனால் அக உணர்வுகளில் உண்மையும் யதார்த்தமும் அதை புறந்தள்ள வைத்து விடுகிறது.


"கூந்தப்பனை" புத்தகத்தில் இருக்கும் "வேதாளம் ஒளிந்திருக்கும்", "அபாய சங்கு" இரண்டும் செம. கூந்தப்பனை கதை கரு தெரிந்த்விட்டதால் ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் வாசித்தேன்.. ஆனால் எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல் வாசித்ததாலோ என்னவோ இந்த கதைகள் ரொம்ப உள்ளே இழுத்து கொண்டது.. வேதாளம் ஒளிந்திருக்கும் கதை ஒரு கீழ் தட்டு கணவன் மனைவிக்குள் சண்டையும் அதை சமரசம் செய்து வைக்க செல்லும் மனிதன் இருவர் பக்க நியாயங்களை பார்த்து தன்னை தானே செதுக்கி கொள்வதுமாக நகர்கிறது.

- பாசம்கிறது மனசுக்குள்ள காச்சு தொங்குறதெல்லாம் பொய்யிடா.. நாம நடந்துக்குறதில்ல தான் பாசம் தங்குது. அத மெயின்டெயின் பண்ண தெரியனும். அது தான் வாழ்க்கை ஒளிச்சு வச்சிருக்கிற ரகசியம்.

- அவரவர் நிலையில் நிற்கும்போது வாழ்க்கை வைத்திருக்கும் சிக்கல்கள் உண்மையாக இருக்கிறன்றன. அந்த சிக்கல்களில் பயமும் சுயகௌரவங்களும் உள்ளுக்குள் கண் விழித்திருக்கின்றன

- விதம்விதமான தனிமைகள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டுதான் வந்திருக்கின்றன. சில தனிமைகள் பிரத்தியாருடன் பகிர்ந்து சமநிலையை தேடிக்கொண்டதும் ஆசுவாசப்பட்டிருக்கின்றன.சில தனிமைகள் சொல்ல முடியாமல் ததளிக்கச் செய்கின்றன. நிகழ முடியாத விஷயங்கள் மனதைப் புரட்டி அலைகழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப்போய் விடுகின்றன. சிதறியதில் மிச்சம் மீதியை நினைவில் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்து விடுகிறபோது ஓர் அமைதி மட்டும். சொல்ல முடியாத அமைதி....

ஊற்றெடுக்கும் சலனங்களில் தான் எத்தனை வகைகள் .

நிறைய நிறைய வரிகள் மனதை கரையவைக்கிறது..

"கான் சாகிப் " - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைகள் தொகுப்பு "கான் சாகிப்" படித்தேன். ஆரம்ப கதைகள் பெரிதாக ஈர்க்கவில்லை. வட்டார வழக்கு பிடிபட சற்று நேரம் எடுத்து கொண்டதோ என்னவோ. ஆனால் அடுத்தடுத்து கொஞ்சம் சுவராஸ்யமாக இருக்க கடைசி இரண்டு கதைகளும் "வங்கணத்தின் நன்று வலிய வகை" கதையும் "இடைவெட்டு" கதையும் படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை..

வங்கணத்தில் கதையில் ஒரு பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளரக்கும் நடக்கும் உரையாடல். எழுத்தாளரையும் பதிப்பகத்தாரையும் செய்திருக்கும் பகடி.. சான்சே இல்லை.. வட்டார வழக்கு கொள்ளை அழகு..அடுத்து இடைவெட்டில் செல்போன் உபயோகம் அவ்வளவாக தெரியாத ஒருவர் அதை வைத்து கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சனைகள என செம செம கலக்கல்..

ஆட தெரியாதவனுக்கு அறுபத்தேழு பெண்டாட்டி என்று செல்போன் இயக்க தெரியாதவனுக்கு அதன் பலன்கள் பற்றி தெரிந்தாவ போவது என்ன என்று..

ஒரு எப்.எம். ரேடியோவில் ஒரு கேள்விக்காக எழுத்தாளரான அவரிடம் பதில் கேட்டு ஆர் ஜே கேள்வி கேட்க குட் ஆப்டர் நூன், ஐ ஆம் பிரமோத் ஸ்பீக்கிங் ப்ரம் சலோ எப். எம் என துவங்க எதிர்முனையில் இவர்

" தாய்ளி, இப்பத்தான் எடின்பர்க்கில் இருந்து நேரா இறங்கி வந்திருக்கான், இங்கிலீஷ்ல கடுகு வறுக்கான்".....  இப்பம் பாரும் என அவருக்கு பதில் சொல்ல ஆரம்பிக்க படிக்கும் நமக்கு வயிறு புண்ணாகிறது. சிரித்து..

நாஞ்சில் நாடனை ரொம்ப பிடித்து இருக்கு, இன்னும் வாசிக்கணும்..எளிமையான கதை களம் அதை சுவை பட ரசிக்குமாறு எழுதி இருக்கிறார்...

ருஷ்ய சிறுகதைகள் தொகுப்பு

ருஷ்ய அமர இலக்கிய வரிசை " சோவியத் சிறுகதைகள்" தொகுப்பு வாசித்தேன். பெரிய பெரிய நாவல்கள் கொடுக்கும் தாக்கத்தை கவிதை போலும் சில சிறுகதைகள் கொடுத்துவிடுகின்றன... ஒவ்வொரு கதையும் வாசித்து முடித்த பின் அதன் தாக்கத்திலிருந்து வெளி வர அதிக நேரம் பிடித்தது. அந்த தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அதில் இரண்டு கதைகள் சுமார் ரகம் என்னளவில்.. மற்ற ஆறு கதைகளும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது..

பரீஸ் கர்பாதவ் எழுதிய " வெள்ளரி நிலத்தின் பிள்ளை பேறு" சிறுகதை. அவ்வளவாக மருத்துவ வசதி இல்லாத ஒரு தீவில் ஒரு பெண்ணுக்கு பிள்ளை பேறு சிக்கலாக ரேடியோ மூலம் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் சொல்ல ஒரு அனுபவமில்லா மருத்துவர் ரேடியோ மூலம் வரும் உத்தரவை கொண்டு பிரசவம் பார்க்கிறார். கதை நடந்த காலக்கட்டத்துக்கு நம்மால் செல்ல முடிவது தான் எழுத்தின் வெற்றி.

வ்லேந்தீன் கத்தாயேவ் எழுதிய "எங்கள் பிதாவே" சிறுகதை. பாசிஸ்டுகள் கொடுமையால் ஒரு யூத தாயும் மகனும் நகரம் முழுதும் தங்களை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று சுற்றுவதும். கடைசியில் போகுமிடம் தெரியாமல் ஒரு பூங்காவில் தங்கி குளிரால் விறைத்து காலை பிணமாக இருவரும் அள்ளி வண்டியில் போடப்படுவதுடன் கதை முடிந்து இருக்கும். காலை அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒலிக்கும் பரலோகத்தில் இருக்கும் பிதாவே அவர்கள் பிணமாக வண்டியில் தூக்கி போடும் போதும் ஒலிக்கும்..மனதை பிசைய செய்தது. இந்த கதை கொடுக்கும்  தாக்கத்தில் இருந்து வெளிவருவது ரொம்ப கடினம்..

அலெக்சேய் தல்ஸ்தோய் எழுதிய ருஷ்ய இயல்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. போரில் தன் முகத்தை சிதைத்து கொண்ட ஒருவன் அவன் வீட்டுக்கு வருகிறான். ஆனால் தன் தாயிடம் பிள்ளை என்று அறிமுகபப்டுத்தி கொள்ளாமல் அவன் நண்பன் என்று சொல்லி கொண்டு ஒரு நாள் தங்குகிறான். அவன் காதலியிடமும் அவ்வாறே. ஆனால் அவனால் பொய்யாக இருக்க முடியவில்லை.. ராணுவத்துக்கே திரும்பி விடுகிறான். அவன் தாய் எழுதும் ஒரு கடிதம் அவனை உலுக்க அதன் பின் தாயும் காதலியும் அவனுடன் வந்து இணையும் கதை "ருஷ்ய இயல்பு" மட்டுமல்ல. உணர்வுபூர்வமான அம்மா, காதலியின் உணர்வுகள் எல்லா நாடுகளிலும் ஒன்று தான் என்று சொல்லாமல் சொல்லியது..

கன்ஸ்தாநதீன் பவுஸ்தோவ்ஸ்கய் எழுதிய இசைஞரின் பரிசு ஒரு இசை கலைஞரின் காதலை கவிதையாக சொல்கிறது.

யூரிய நகீபன் எழுதிய "கமரோவ்" ஒரு நான்கு வயது சிறுவனின் உலகத்துக்குள் உலவி ரசிக்கும் ஆசிரியர் நம்மையும் அந்த சிறுவனின் உலகத்துக்கு அழைத்து சென்று விடுகிறார். கதை வாசித்து முடித்த பின்னும் "கமரோவ்" உங்களுடன் என்றும் பயணிப்பான்.

செர்கெய் அந்தோனவ் எழுதிய காலையும் ஒரு காதல் கதை.

அந்திரேய் பிளதோனளின் எழுதிய என்ஜின் ட்ரைவர் பற்றிய கதை உளவியல் சார்ந்த கதை. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் வாசித்தேன்.

பரீஸ் பொலிவோய் எழுதிய காதல் கதை. உள்ளுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் எப்போதும் முட்டி கொண்டே இருக்கும் இருவரில் அந்த ஆண் அடிப்பட்டு கிடக்கும் போது அந்த பெண் கதறி அழும்போது அவர்களின் காதல் அவர்களுக்கே தெரிவது என்று வழக்கமான கதையை அழகிய நடையில் சொல்லி இருக்கிறார்.

"கிளியோபாட்ரா" ஆசிரியர் முகில்

கிழக்கு பதிப்பக வெளியீடான “ கிளியோபாட்ரா “ முகில் எழுதியது... இவருடைய “ யூதர்கள்” வாழ்க்கை வரலாறு புத்தகம் போன வருடம் கண்காட்சியில் வாங்கி வாசித்து இருக்கிறேன்.. எழுத்து நடையும் அதில் தொகுக்கப்பட்டு இருந்து வராலாற்று குறிப்புகளும் யூதர்களின் வாழ்க்கை முறையை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையின் வேர் எங்கிருந்து என்பது வரை அறிந்து கொள்ள முடிந்தது..

அதனால் “கிளியோபாட்ரா” முகில் எழுதியது என்றவுடன் வாங்கி விட்டேன்.. நேற்று மாலை வாசிக்க தொடங்கி இன்று காலை வாசித்து முடித்துவிட்டேன்.. கிளியோப்பட்ரா அழகி என்பதால் சீஸர், ஆண்டனி உட்பட மன்னர்கள் அவள் அழகில் அடிமைகளாக சாம்ராஜ்யம் இழந்ததாக வரலாற்றில் ஒற்றை வரியில் தெரியும்.. 

ஆனால் அதற்கு பின் இருந்த அந்த எகிப்திய அரசியின் ஆளுமை, தான் சொல்வதை மற்றவர்களை ஏற்றுகொள்ள செய்யும் சொல் வலிமை, அன்பால் காதலால் அடிபணிய செய்யும் வித்தை எப்படி நடந்துகொண்டால் காரியம் நடக்கும் என்ற புத்திகூர்மை. அவளது வாசிப்பு அறிவு..(எகிப்தியன் உட்பட ஆறு மொழிகள் சரளமாக பேச எழுத கற்றவள்) இவை எல்லாம் தான் அவளை பேரழகியாக உலகம் போற்ற செய்து இருக்கிறது.. அவளை பற்றிய ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் எகிப்திய மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறாள்... அவள் இறந்து இத்தனை வருடம் கழித்தும் இன்னும் அவரின் புகழ் மங்காமல் அவரை பற்றி இன்னும் வியக்க பேசவும் ஆராயவும் வைத்து கொண்டு இருப்பதே அவரின் ஆளுமையை காட்டுகிறது... வாசிக்க வேண்டிய புத்தகம்....

"தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை" - ஆசிரியர் அ. முத்துலிங்கம்

உலகின் பல நாடுகளை பணி நிமித்தமாக சுற்றி வந்திருக்கும்  ஆசிரியர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் பற்றி சுவைபட  இந்த புத்தகத்தில் கூறுகிறார் ...அதில் மேற்கு ஆப்பிரிக்கா பற்றி அவர் கூறியிருக்கும் இரண்டு சம்பவங்கள் அவரை மட்டுமல்ல நம்மையும் அதிசயிக்க வைக்கிறது...

ஆப்பிரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்ற போது எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி சொல்லி மாளாது. மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அவ்வளவு சொல்லும் படியாக இருக்காது. புத்தகங்கள் வாயிலாகவும் சினிமா வாயிலாகவும் நாம் நிறைய அறிந்துவைத்திருப்பதால். நான் மேற்கு ஆப்ரிக்காவில் நேரில் பார்த்து அதிசயித்த இரண்டு சம்பவங்களை சொல்கிறேன்.

ஒரு கடையில் வேலை பார்த்த இந்தியர் இறந்துவிட்டார். இங்கு இறந்தவர்களை சில நாட்கள் வைத்துவிட்டுப் பிறகு தான் புதைப்பார்கள். இந்தியரின் பிணத்தை இறந்த அன்றே மயானத்தில் எரித்துவிட்டார்கள். இதை பார்த்து ஆப்பிர்க்கர்கள் மிரண்டு போனார்கள். எட்டத்தில் நின்று பார்த்தார்கள். அவர்கள் கண்கள் குத்திக்கொண்டு நின்றன.

ஒரு ஆப்பிரிக்கர் பிறகு என்னிடம் பேசினார். இந்த இந்தியர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள், விறகுக்கட்டை எரிப்பது போல எரித்து தள்ளி விட்டார்கள். எங்கள் கிராமத்தில் மூன்று நாலு நாட்களாவது வைத்து மரியாதை செய்வோம். பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இருதயத்தையோ , ஈரலையோ ஒரு சிறு பகுதி எடுத்து உட்கொள்வோம். அப்போது அவர்கள் என்றென்றும் எங்களுடன் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லவா? இந்த சிறு மரியாதை கூடவா மரணித்தவருக்கு செய்ய முடியாது என்றார். நான் என்னத்தை சொல்வது?

இன்னொரு சம்பவம். நான் வசித்த இடத்தில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் வைரங்கள் விளைந்தன. ஆற்று படுகையில் இவை விளைந்ததால் கிராமத்தவர்கள் சிறு சிறு கும்பலாக கூடி அரித்து எடுப்பதை பார்க்கலாம். ஒரு முறை காரில் செல்லும்போது இப்படி மூன்று இளம் பெண்கள் ஆற்றில் கரையில் அரித்தபடி நின்றார்கள். மேலே ஒரு சட்டையும் கீழே லுங்கி போல ஒரு லப்பாவை அணிந்து கொண்டு. அது அழகான காட்சியாக இருந்தது. மொழிபெயர்ப்புகக்காக சாரதியையும் அழைத்து கொண்டு படம் எடுக்கும் நோக்கத்துடன் அவர்களிடம் போனேன். அவர்கள் வெட்கப்பட்டு நெளிந்தார்கள். இது பெரிய ஆச்சரியம். ஏனென்றால் அப்படி வெட்கப்படுவது அங்கே வழக்கமில்லை..

பிறகு விஷயம் புரிந்தது. மரத்தின் பின்னே சென்று சர்ட்டை கழற்றிவிட்டு இயற்கையான பிறந்த அழகுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். அவர்களுக்கு வெட்கமே இருக்கவில்லை.. வேலை செய்வதற்காக அவர்கள் அணிந்தது சர்ட். அசிங்கமாக அதை அணிந்தபடி படத்தில் காட்சி தர அவர்கள் விரும்பவில்லையாம்.

"முதல் ஆசிரியர்" - புத்தகம்

“முதல் ஆசிரியர்” சிங்கிஸ் ஐத்மாத்தவ், சோவியத் கிர்கீஸிய எழுத்தாளர், தமிழில் பூ. சோமசுந்தரம். கிர்கீசிய கிராமத்து பள்ளிக்கூட கட்டிட திறப்பு விழாவிற்கு வருகிற கல்வித்துறை அறிஞர் “அல்டினாய்” விழாவிலிருந்து குழப்பமும், தடுமாற்றமுமாக வெளியேற அதே விழாவிற்கு வந்த ஓவிய ஆசிரியர் இளைஞர் அவரின் பதற்றம் காராணம் கேட்க மௌனமாக சென்ற அல்டினாய் சில நாட்களில் எழுதுகிற தன வரலாற்று கடிதத்தின் மூலம் நாவல் வளர்ந்து முடிகிறது.

துய்ஷேன் என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் கிர்கிஸ்தான் மக்களிடம் படிப்பின் அவசியத்தை சொல்லி இவ்வளவு நாள் அடிமைகளாக இருந்தோம் இனி அடிமையாகாமல் இருக்க கண்டிப்பாக படிப்பு அவசியம் தேவை அதற்காக தனக்கு தெரிந்த அடிப்படை கல்வியை எழுத படிக்க தெரிந்ததை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க விரும்புவதாக ககூற கிராமத்தில் இடம் கூட தர மறுக்கின்றனர். எதற்கு படிப்பு அதெல்லாம் அதிகாரிகளுக்கு தான் விவசாயத்தை நம்பி இருக்கும் நமக்கு அதெல்லாம் அவசியம் இல்லாதது இதற்கு எல்லாம் செலவளிக்க தயாரில்லை என்று சொல்ல குன்றின் மீது இருக்கும் குதிரை கொட்டகை போதும் அதை சீர் பண்ணி குடுங்கள் என்று சொல்ல அதற்கும் மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்க தனி ஒருவராக அந்த கொட்டகையை சீர் செய்து கிராமத்து பிள்ளைகளை எல்லாம் பள்ளிக்கு தினமும் வந்து கூட்டி செல்கிறார்.

அல்டினாய் பதிமூன்று வயது சிறுமியாக அப்பா அம்மா இல்லாமல் சித்தப்பா சித்தி வீட்டில் வளரும் சிறுமி. அவர்களின் கொடுமையில் மூச்சு திணறி கொண்டிருந்தவளுக்கும் போராட்டத்துக்கு பின் பள்ளிக்கூடம் போக முடிகிறது.. கடும் பனியிலும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு பிள்ளைகளுக்கு தன்னால் இயன்ற அளவில் தனக்கு அவசியம் என்ற பட்ட முறையில் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன்படி படிப்பு சொல்லி தருகிறார். அவர் செய்தது ஒரு வீரச்செயல் கிராமத்தை விட்டு வெளியில் எங்குமே செல்லாத, பரம்பரை பரம்பரையாக படிப்பறிவே இல்லாத கிர்கீசிய குழந்தைகளுக்கு அந்த கிராமத்தை தாண்டி உலகம் இருக்கு என்பதை பேச்சிலும் கதையிலும் படிப்பிலும் துய்ஷேன் குழந்தைகள் மனதில் ஆழ பதிய வைத்தார்.
உடலை இறுக செய்யும் உயிரை குளிர வைக்கும் பனிக்காலம் வந்தாலும் அதை தாண்டி வசந்தம் வரும் என்ற துய்ஷேன், அல்டினாய் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக் அல்டினாய் எழுத படிக்க கற்கிறாள். இதறகிடையில் அவள் சித்தி அவளுக்கு மாப்பிளை பார்த்து அதுவும் இரண்டாம் தாரமாக ஒரு முரட்டு பண்ணையாருக்கு கட்டி வைக்க முற்பட துய்ஷேன் அவள் சித்தியிடம் அவள் குழந்தை அவளுக்கு எப்படி திருமணம் என்று சண்டையிட்டு அவளை பள்ளிக்கூடத்திலேயே தங்க வைத்து அவளை அந்த சோகத்தில் இருந்து மீட்க இரண்டு பாப்ளார் மரக்கன்றுகளை நட்டு அவளிடம் பேசும் இடம் கவிதை. காலங்கள் உருண்டோட கதை தூரத்தில் இருந்து தெரியும் அந்த பாப்ளார் மரத்தின் மூலம் தான் உயிர்பெறுகிறது..
துய்ஷேனை அடித்து அல்டினாவை தூக்கி சென்று விடும் முரட்டு பண்ணையார் அவளை பலாத்காரம் செய்ய இரண்டு நாளில் அவள் உடலில் வலுவில்லாமல் சுருண்டு விட ஆனால் மனதில் இங்கிருந்து தப்பியோட வேண்டும் அல்லது சாக வேண்டும் அடங்கி மட்டும் போக கூடாது என்று தப்பிக்க முயற்சிக்க இதனிடையில் துய்ஷேன் காவலர்களுடன் வந்து அவனை கைது செய்து இவளை மீட்டு கூட்டி செல்கிறார்.

வரும்வழியில் அவளை ஆற்றில் இறங்கி சோப்பு தந்து குளிக்க சொல்லும் ஆசிரியர் நடந்ததெல்லாம் மற அதை திரும்ப நினைச்சு பார்க்காதே குளி பாரம் குறையும் என்று சொல்லி குதிரையை மேய்க்க கூட்டி போகிறார். இரண்டு நாள் கழித்து புகைவண்டி நிலையம் அழைத்து செல்லும் அவர் தாஸ்கன்ட் நகரிலிருக்கும் அநாதைக குழந்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட சில குழந்தைகளோடு ஒரு ருஷ்ய பெண்மணியோடு அனுப்புகிறார்.
இறுதியாக் அங்கே அவர் அஸ்தினாவிடம் நீ ஓரடி கூட என்னை விட்டு பிரிய விடமாட்டேன் ஆனால் உனக்கு குறுக்கே நிற்க எனக்கு உரிமையில்லை நீ படிக்க வேண்டும். எனக்கொன்றும் அதிக படிப்பறிவு கிடையாது நீ புறப்பட்டு போ. நீ ஒரு நல்ல ஆசிரியராகலாம். இதோ இப்ப கிளம்ப போறே என்று நடுங்கும் குரலில் சந்தோசமா இரும்மா அஸ்தினாய் முக்கியமானது என்னன்னா படி படி என்று சொல்ல அஸ்தினாய் துக்கம் தொண்டை அடைக்க அழுகிறாள். நாம் நட்டோமே பாப்ளார் மரக்கன்றுகள் அவற்றை நான் பார்த்துக்குறேன் நீ பெரியவளாகி வரும்போது அவை எவ்வளவு அழகாக மாறுகிறது என்று பார் என்று சொல்லி அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ரயில் புறப்படும் போது “அஸ்தினாய்” என்று மனதின் அடியாழத்தில் இருந்து கத்தும் குரல் அஸ்தினாவின் காதில் மட்டுமல்ல நம் காதிலும் ரீங்காரிக்கிறது.

எவ்வளவோ இடர்பாடுகளை சநதித்து படித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து கிராமத்துக்கு வந்து துய்ஷேனை விசாரிக்க அவர் நடக்கும் யுத்தத்தில் பங்கேறக சென்றுவிட்டதாக கூற அவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் போக கிராமத்துக்குள் போகாமலே திரும்புகிறாள்.அவர் இறந்தாரரா உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாமல் காலம் உருண்டோட ஒரு முறை ரயிலில் பயணிக்கும்போது விளக்கு காண்பிக்கும் ஒருவர் அவர் ஜாடையில் தெரிய ரயிலின் அவசர சங்கிலியை பிடித்திழுத்து இறங்கி கதறி ஓடி வர அவர் வேறு யாரோவாக இருக்க மனதில் சுருண்டு விழுகிறாள். அதன் பின் திருமணம், குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள், தத்துவஞானத்தில் டாக்டர் பட்டம் பெறுகிறாள் பல இடங்களுக்கு செல்லும் அவள் கிராமத்திற்கு மட்டும் போகவில்லை.

அதன் பின் பள்ளி திறப்பு விழாவிற்கு வரும்போது துய்ஷேன் உயிரோடிருப்பது தெரியவர குற்ற உணர்வில் கூனி குறுகி உடனே புறப்படுகிறார். பள்ளிக்கு அவரின் பெயர் தான் வைக்க வேண்டும் நான் மீண்டும் வருவேன் அவரை சந்திப்பேன் என்பதாக சொல்லி நிறைவு செய்கிறார் கடித்ததை.. சிறிய நாவல் தான் ஆனால் அதன் தாக்கம் என்னுள் இருக்கிறது.. நமக்கு இன்று சாதாரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு பின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும், காதலும், கருணையும் மனிதமும் நிறைந்த மனிதர்களின் போராட்டமும் வலியும் நிறைந்திருக்கிறது என்று நம்மை யோசிக்க வைக்கும் கதை.

Monday 24 November 2014

தெரியாதது

கரை தொட்டு விளையாடும் அலைகள்
எப்போதும் சொல்வதில்லை
ஆழ்கடலில் புதைத்து குமைந்து கொண்டு
கொண்டிருக்கும் எரிமலையை பற்றி

தேவைகள்

தன்னை மறக்கும் காமம்
தேவையில்லா பொழுதுகளிலும்
விழி பார்க்கும் விழிகளும்
அது பேசும் மௌன மொழிகளும்
கன்னம் தாங்கி மூக்கை திருகி
விரல்களால் முகம் வருடி தரும்
மென் முத்தங்களும்
மயிலிறகால் தடவுவது போல்
தலை தடவி இறுத்தி
தோள் சாய்த்து
மார்பில் முகத்தை புதைத்து கொள்ளும்
அணைப்பும்
முதுகு முழுதும் பரவும் அழுத்தமும்
தேவையாக இருக்கிறது

Friday 21 November 2014

பாதை



வெற்று பாறையாய் இருந்த பொழுதுகளில்
அசைவற்று கிடப்பதே சாஸ்வதம் என்று எண்ணி இருந்தேன்..
போகிற போக்கில் யார் யாரோ சிறிது சிறிதாக நகர்த்த
சிற்ப கூடம் வரை வந்துவிட்டேன்.

சிற்ப கூடத்தின் அழகிய சிலைகள் பார்த்து மயங்கி சிலையாக மாறிட எத்தனிக்க
தன்னை தான் செதுக்கி கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாமல்
சிற்ப கூடத்தை விட்டு போக மனமுமில்லாமல்
சிற்பிகளின் பார்வை பட உளிகளுக்கு பக்கத்தில்..

சிலையாவேனோ இல்லை பாறையாகவே தங்கிடுவேனோ
பாறையாக தனித்திருந்த பொது இல்லாத ஏக்கம்
அழகிய சிலையாக மாறிய பாறைகளை
பார்த்து வருகிறது கூடவே இயலாமையும்...