Friday 28 November 2014

சூடிய பூ சூடற்க



நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல். சிறுகதைகளின் தொகுப்பு. பனுவல் சென்ற வாரம் சென்ற போது, இந்த நாவல், முத்துலிங்கத்தின் “அக்கா, ஜி.நாகராஜனின் “நாளை மற்றொரு நாளே வாங்கி வந்திருந்தேன். நாஞ்சில் நாடனின் “கான் சாகிப் கொடுத்த உணர்வு நாஞ்சில் நாடானை முதலில் வாசிக்க தூண்டியது.

“கொங்கு தேர் வாழ்க்கை என்ற கதையில் சென்னையில் இருக்கும் லைன் வீடுகள் குறித்தான அவரது அனுபவமும் பார்வையும் கோணமும் படு யதார்த்தம். நான் சென்னை வந்த புதிதில் ஒரு புரோக்கர் கொண்டு போய் அப்படி ஒரு வீடு காண்பிக்க காமன் டாய்லெட் என்ற வார்த்தையே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அங்கு இருப்பவர்களின் வாழ்க்கை முறையை வாழ்வில் காணா சமுத்துவம் உலாவும் இடங்கள் லைன் வீடுகள் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் வாடகை விடுபவர்களிடம் நடந்து கொள்ளும் முறை எல்லாம் கூறி அதில் வசிக்கும் ஒரு முதியவரின் நாதஸ்வர வாசிப்பை அதன் பின்புலத்தில் அவரின் கதையை என்று மனதை குலுக்கி போடும் வார்த்தைகளால் சொல்லியிருக்கிறார்.

“யாம் உண்பேம் என்ற கதையில் வடமாநிலத்தின் ஒரு கிராமத்தில் பருவ மழை பொய்த்ததால் வயிற்ருக்கு இல்லாமல் வறுமை பிடுங்கி திங்க தன் தந்தையை விட்டுவிட்டு மகன் தன் மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்கிறான். வறுமையின் நாக்கு மனிதர்களை சுட்டு பொசுக்குவதை கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்து குடும்பமே இறந்த பின் தன்னை மட்டும் விட்டு போன பிள்ளையை நினைத்து அழ கூட வலுவில்லாது ரயிலில் ஏறும் முதியவர் “கன்பத் சக்காராம் நாத்ரே பசி தாங்காமல் ரயில் பிரயாணி ஒருவர் சாப்பாட்டை யாசகமாக பெற அவர் உபயோகிக்கும் வார்த்தை “அமி காணார், அமி காணார் “ அதன் அர்த்தம் எனக்கு தா அல்ல, நான் தின்பேன் என்றல்ல நாம் உண்போம் என்பதாகும். தூய சங்கத்தமிழில் “யாம் உண்பேம் அது அந்த பிரயாணியின் வாழ்வில் நாத்ரேயின் குரல் மிச்ச வாழ்க்கைக்கும் மந்திரமாக ஒலிப்பதாக முடித்திருப்பார்.

“கடவுளின் காலில் ஒரு காலிழந்த பிச்சைக்காரன் ரயில் பிரயாணத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவனுடைய வாழ்க்கை பற்றி “பரிசல் வாழ்க்கையில் ஒரு குருக்களின் வறுமை கதை இந்த இரண்டுமே வறுமையை  வறுமையில்லாமல் சொல்லி இருக்கிறது.

“கதை எழுதுவதன் கதை “கும்பமுனி முறித்த குடைக்காம்பு “தேர்தல் ஆணையத்துக்கு திறந்தவெளிக் கடிதம்  “மணமானவருக்கு மட்டும் கதைகளில் வட்டார வழக்கும் ஹாஸ்யமும் ஒரு சேர நம்மை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

சூடிய பூ சூடற்க ஒரு பியூனின் வாழ்க்கை, “ செம்பொருள் அங்கதம் ஒரு சர்கரை வியாதி உயரதிகாரியின் வாழ்க்கை முறை பற்றியது.
“தன்ராம் சிங் கதை தான் என்னை ரொம்ப நேரம் பாரத்தில் அழுத்தியது. நாம் மாதம் ஒரு முறை சந்திக்கும் கூர்க்காக்களின் வாழ்க்கை முறை பற்றி.. போக வேண்டிய இடத்துக்கு ஒரு அரை மணி நேரம் தாமதமானாலே டென்சனாகும் நாம் படிக்க வேண்டிய கதை. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு போகும் அவர்கள் போகும்போது பதினைந்து இருபது பேர் சேர்ந்து பயணிப்பார்கள்.
பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் பின் இறங்கி மாறி பாட்னா, பரூணி, மன்சி மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ்ஸில் ஐம்பது கிலோமீட்டர் போக நான்கு மணி நேரமாகுமாம். பிறகு மலைப்பாதையில் தலைச்சுமடாகவும் மட்ட குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை, காலை எட்டு மணி முதல் பிற்பகல் நாலு வரை மலைபயணம். பின் மலைக் கிராமம் ஒன்றில் கிடை. பனிப்பொழிவு, பாறைகள் கொடுங்குளிர் எல்லாம் தாண்டி தான் போக வேண்டும். 

இரயிலிலும் முன்பதிவு பழக்கமில்லை ஜெனரல் கோச்சில் சேர்ந்தாற்போல தடுப்புகளில் இடம் பிடித்து கொள்வார்கள். பயணத்துக்கு சுட்டு எடுத்து போகும் ரொட்டி, அடுத்த ரயிலுக்கு காத்த்ருக்கும்போது தேவைக்கு மறுபடியும் தட்டி கொள்வது மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு என்று நீளும் பயணம் படிக்க படிக்க நாம் ஒன்றுமில்லாத சிறு தாமதத்துக்கு அலட்டுவது மனதில் வந்து போகிறது.
பதினைந்து இருபது நாட்களுக்கு ஒன்று என வரும் கடிதங்களில் சில சாவை சுமந்து கொண்டு வரும். தந்தியும், தொலைப்பேசியும் உதவாத மலை பிரேதசங்கள் . தாய், தகப்பன், குழந்தைகள் இறந்து போனாலும் உடன் பிறப்புகள் இறந்து போனாலும் பத்து நாள் கழித்து வரும் தபால் தான். தகவல் தெரிந்து போனால் கூட மேலும் ஒரு பத்து பதினைந்து நாள்.

அதனால் அப்படி இறந்தவர்களுக்கு மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் சேதி போய் ஞாயிற்றுக்கிழமை காலை கடற்கரையில் கூடி மர நிழலில் வட்டமாய் அமர்ந்து கண்கள் கலங்க இறந்தவர்களை நினைவு கூறி, சடங்குகள் செய்து, தீ வளர்த்து, அதில் தகவல் வந்த கடிதம் எரித்து பின் அந்த சாம்பலை கடலில் கரைத்து மொட்டை அடித்து, கடலில் குளித்து அவரவர் நினைவு சுமந்து பிரிந்து போவார்களாம். படித்த போது கண் கலங்காமல் மனது கனக்காமல் இருக்க முடியாது. 

கண்டிப்பாக தனராம் சிங் படித்தால் கூர்க்காக்கள் மீது ஒரு மரியாதையும் வாஞ்சையும் வரும்....

No comments:

Post a Comment