Saturday 31 October 2015

சொல்ல மறந்த கதைகள் - புத்தகம் ஒரு பார்வை.

முருகபூபதியின் “சொல்ல மறந்த கதைகள்” புத்தகம் மலைகள் பதிப்பக வெளியீடு. இது கதை அல்ல கட்டுரை தொகுப்பு. இப்புத்தகத்தை விமர்சிக்க இயலாது. இப்புத்தகம் நெடுகிலும் போருக்கு முந்திய இலங்கை அரசியலையும், போர் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியலையும் அவற்றுடன் பத்திரிகைகள் நிலையையும் கூடவே இலக்கிய அன்பர்களையும் இயக்கங்களை சார்ந்தவரையும் ஆசிரியருக்கும் அவர்களுக்குமிடையேயான நிகழ்வுகள் அத்துடன் உண்மை சம்பவங்கள் எல்லாம் சேர்த்து தொகுத்திருக்கிறார்.

கட்டுரை தொகுப்பு முழுதும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை முறை, எழுபதுகளில் ஆரம்பித்து அவர்களது நிலை, இலங்கை கலாச்சாரம், அம்மக்களின் வட்டார வழக்கு, என்று ஒரு அழகிய தமிழை புத்தகம் நெடுகிலும் உணர முடிந்தது.

பிழிய பிழிய அழ வைக்க முயற்சிக்காமல் போரின் வலியை நடுநிலையோடு சொல்லி இருக்கிறார். இப்புத்தகம் உண்மையில் எனக்கு இலங்கை பிரச்சனையை முற்றிலும் நான் நினைத்திருந்த கோணத்தில் இருந்து வேறு கோணத்தில் பார்க்க உதவியது. போர் நிறுத்தி இருந்த சமாதான கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் இயக்க தலைவர்கள் சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்டது ஆகியவற்றை சம்பவங்களாக தொகுத்து அதற்கு பின் இருந்த மனிதம் பற்றி ஆசிரியர் சொல்லியது போரை தாண்டியும் மனிதம் இருந்த மனிதர்களை உணர வைத்துள்ளது.

வியட்நாம் தேவதை கிம்புக்குடன் (வியட்நாம் மீது அமெரிக்க படை குண்டு வீசிய போது தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடி வந்து பதிமூன்று வயது சிறுமி) புத்தகத்தை முடித்திருகிறார். கிம்புக்கின் மூலம் ஆதிக்க நாடுகள் வளர் இளம் நாடுகளில் தொடுக்கும் போர்கள் மூலம் பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள் பற்றியும் கிம்புக்கின் சந்திப்பு பற்றியும் அவரின் உரையாடல் குறித்தும் எழுதிய கடைசி அத்தியாயத்தில் கொஞ்சம் கண் கலங்கி தான் போனது.

Wednesday 21 October 2015

"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" புத்தகம் ஒரு பார்வை..



"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" வா.மு.கோமு எழுதியது. பெரும்பாலும் நான் எழுத்தாளரை பற்றி யார் சிலாகித்தாலும் விமர்சித்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் எழுத்து எனக்கு வாசிப்பின்பத்தை தருகிறதா.. உண்மைக்கு பக்கத்தில் இருக்கிறதா. புனைவாக இருக்கும்பட்சத்தில் எழுத்து நடை என்னை ஈர்க்கிறதா என்று தான் பார்ப்பேன். வா.மு. அவர்களை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் தான் வாசித்தேன். புத்தகம் பிடித்திருக்கிறது என்று ஒரு பதிவு எழுதிய பின் தான் அவர் எழுத்து பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் இருப்பது தெரிய வந்தது.. ஆனால் என்ன இந்த நாவல் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை இன்னும் சொல்ல போனால் ஒரு பெண்ணாக நான் அவ்வளவு எளிதில் பயணிக்க முடியாத ஒரு உலகத்துக்கு அவர் எழுத்தில் பயணிக்க முடிந்தது
..
சிம்ரன் சரத்குமார் நடித்திருக்கும் அரசு படத்தில் ஆரம்பகாட்சியில் ஒரு குடிக்காரர் தெருவில் கோடு கிழித்து ரகளை செய்வார். எல்லாரும் பயந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திவிட சிம்ரனும் சாத்திவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பார். இது போன்ற ஒரு நிகழ்வு என் சிறுவயதில் நடந்திருக்கிறது. நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன். புரியாத அந்த வயதில் சிரிப்பாக வேடிக்கையாக இருக்கும். ஏன் குடிப்பவர்கள் எல்லாம் விநோதமாக நடக்கிறார்கள் பேசுகிறார்கள் என்று  நிறைய விடை தெரியா கேள்விகள். பக்கத்தில் சென்று பார்க்கும் ஆர்வமிருந்தாலும் பயமிருக்கும். நம்பர் பெயரிட்ட கள்ளுக்கடைகளை கடக்கும் போது பயத்துடன் பார்த்து கடப்போம்..


ஆசிரியரின் இந்த கதை அத்தகைய சாக்னா கடை எனப்படும் பாரில் காலை முதல் இரவு வரை நடபபவை, அந்த கடையில் குடிக்க வருபவர்கள், அவர்களுக்கு பரிமாறும் இரண்டு விடலைப்பையன்கள், ஓவ்வொரு டேபிளில் அமர்பவர்கள், ஊருக்கு புதிதாக வருபவர்கள், வாடிக்கையாளர்கள், எல்லா வயதிலும் ஆண்கள் அவர்கள் பிரச்சனைகள் என்று ஒரு லோக்கல் பாரை அவர்கள் வாழ்வை அருகில் இருந்து பார்த்த உணர்வை ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார்.

அவரின் எழுத்தில் மத்திய வர்க்க, அதற்கும் கீழ் இருக்கும் கொங்கு மக்களின் எளிய வாழ்க்கை முறையும் அவர்களின் யதார்த்த பேச்சையும் ஆசிரியர் அழகாக பதிந்திருக்கிறார். முதல் அத்தியாயம் தான் அதீத பாலியல் தூக்கலாக இருந்தது. இப்படி தான் இருக்கும்போல என்று நினைத்து கொண்டு இருக்க அது கனவு என்று சொல்லி அடுத்த அத்தியாயத்திற்கு நகர அடுத்த அத்தியாயத்திலிருந்து ய்தார்த்ததுக்குள் ஆசிரியர் நுழைந்து விடுகிறார்.
ஒவ்வொரு டேபிளில் வருபவர்கள் கதைகள் பெரும்பாலான கதையில் வருபவர்களுக்கு பெயர்கள் இல்லை. ஆனால் அது ஒரு குறையாக தெரியாத அளவு  சம்பவங்களை கதைகளாக கோர்த்து  கொங்கு நடையில் ஆசிரியர் அழகாக நகர்த்தி செல்கிறார்.

பெண்கள் நுழைய முடியா இடத்துக்குள் அங்கு வருபவர்களின் பிரச்சனைக்குள் பெண்ணின் கதைகளை ஆண்களின் பார்வையில் சொல்கிறார். அதில் உண்மை இருக்க கூடும் புனைவாகவும் இருக்கலாம் ஆனால் உண்மைக்கு பக்கத்தில் எடுத்து சென்றிருப்பதை ஏற்க தான் வேண்டி இருக்கிறது.. சம்பவங்களை கதையாக கோர்த்திருக்கும் விதம் அதையும் தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு புரியும் எளிய நடையில் பாலியலிலும் அந்த உணர்வை மங்க செய்யும் ஹாஸ்யத்தை அதிகம் சேர்த்து வாசகருக்கு மனதிலும் இதழிலும் ஒரு மென் புன்னகையை எழுத்தில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்....

Thursday 8 October 2015

உணர்வுகள் ..

கருண்ட மேகம் சூல் கொள்ளும் பொழுதிலெல்லாம்
பெருமழையை எதிர்நோக்கி காத்திருக்க
வெறும் தூரலாகவோ ஈரகாற்றாகவோ
கடந்து போகிறாய் ..

************

வேடிக்கை பார்த்து தொலைந்த பின்னும்
கைப்பொருளை வாய்பேச்சில் ஏமாந்து பறிகொடுத்த பின்னும்
வழி தெரியாமல் பாதை மாறி சென்ற பின்னும்
அமுதசுரபியாய் எஞ்சியிருக்கும் குழந்தைமை
உயிர்ப்புடன் மீட்கிறது என்னுலகை..

**************

என் ஆகிருதியின் உணர்வுகளனைத்தையும்
நீ வரைந்த பெண்மையின் ஒழுங்குக்குள்
பத்திரமாக பொதிந்து
பளபளக்கும் அறமெனும் பட்டு சுற்றி
என்னை தின்னும் கேள்விகளால்
வேள்வி வளர்த்து
கையாலாகா எண்ணங்களால் நெய்யூற்றி
பொதிந்ததனைத்தையும் எனக்குள்ளேயே 

பிறரியாமல் எரியூட்டியாகிவிட்டது
சாம்பலாகிவிட்ட உணர்வுகளின் அடியில்
கனன்று கொண்டிருக்கும் ஆதி வன்மம்
லேசான வாடைக்கு சீண்டப்படும் பொழுதுகளிலெல்லாம்
என் உதிரம் கொண்டே
நெருப்பை தணியசெய்கிறேன்
தற்காலிகமாக..

***************

மென் தடவலுக்கும்
இதமான அணைப்புக்கும்
அன்பான பார்வைக்கும்
அழுத்தமில்லா முத்தத்துக்கும்
அக்கறை பொதிந்த வார்த்தைக்கும்
தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்க
அன்பின் பரிசாக கிடைப்பதென்னவோ
ஆறாத ரணங்களே
கிளறி வேடிக்கை பார்க்கும்
நேசம் தன்னை புதைத்திடவும் வழியில்லை
திரும்பிபார்க்காமல் கடந்திடவும் முடிவதில்லை
புரிதல் இல்லாத காதலில்
உடைந்து போகும் கணங்களில்
வெறுமை இழுத்தணைக்கும் பொழுதினிலெல்லாம்
மரணத்தை வேண்டியே தொடர்கிறது வாழ்க்கை......


***************

உனக்கும் எனக்குமான சண்டையில்
பெரும் வன்மமெதும் இருக்கபோவதில்லை
எல்லாம் மறந்து பேசி சிரிக்க போகிறோம் எனும் போதும்
கூர் ஊசியால் வார்த்தைகளை தைப்பதை நிறுத்துவதில்லை,

*****************

களைத்து கிடந்தவளின்
அருகமர்ந்து
கழுத்துவரை போர்த்தி
நெற்றியில் விழும் முன்மயிர் ஒதுக்கி
மெல்ல தரும் மென்முத்தத்தில்
உணர்கிறேன் காதலை.


***************

பார்க்க அழகாகவும
உடைத்து உள்புக கடினமாகவும்
சக்கர வியூகம் அமைக்கும்
ஆற்றல் உண்டு

பூ, விதை, பழம், முட்களுடன் அமைத்த
வட்டங்களை வேண்டியபோது விலக்கி
உள்ளும் புறமும் செல்லும்
தந்திரமும் அறிவேன்

பூவின் அழகில் ஈர்க்கப்ட்டு வரும் வண்டோ
பழத்தின் சுவையில் சபலப்பட்டு அமரும் சிறு உயிரோ
விதையை கொத்தி செல்லும் சிறு பறவைகளோ
முள்ளை கண்டு பயந்து பின்வாங்கும் உயிரினமோ
வியூகத்தின் ஆற்றலை அசைக்கமுடிவதில்லை

எல்லா வியூகங்களையும்
அழகாய் விலக்கி
நிராயுதபாணியாய் உள்புகும் அபிமன்யூவின் முன்
வியூகத்தின் ஆற்றல் செயலிழந்துதான் போகிறது.,.

****************

மழைக்கான முன்தயாரிப்பாக
சூரியனை மறைத்து
மேகங்கள் ஒன்றுதிரள்வது போல்
உள்ளுக்குள் இயலாமை மறைத்து
சேகரிக்கிறேன் வார்த்தைகளை
சந்திக்கும் வேளையில் பொழிய..
***********

தூரிகைகளின் தொடலுக்குள் சிக்கிகொள்ளாத
வானமொன்றை பத்திரமாக பொத்திவைத்திருக்கிறேன்
மழைபொழியும் தனித்த
இரவொன்றில்
ரகசியமாய் காட்ட...

*************

உடைந்து விழுந்த நேற்றிற்கும்
எதிர்பார்ப்புகள் நிறைந்த நாளைக்குமிடையில் ஊசலாடி
அனுபவிக்க வேண்டிய இன்றைய பொழுதை
குழந்தை கைப்பொருளாய் தவறவிடுகிறேன்
*************
பிறப்பின் நீட்சி மரணம் வரை
இருளின் நீட்சி வெளிச்சம் வரை
கற்பனையின் நீட்சி க(வி)தை வரை
உறவின் நீட்சி பிரிவு வரை
தேடலின் நீட்சி தான் தெரி(ளி)ந்தபாடில்லலை....


************ 

அதிகாலையின் அழகை
மாலை வெயில் வரையும் ஓவியத்தை
முழங்கா இரவின் ஓசையை
முற்றுப்பெறா கவிதையின் தவிப்பை
முயங்கிட தவிக்கும் காதலை
மழலலைகளின் வெட்கத்தை
மனதை கரைக்கும் இசையை
மௌனிக்க வைக்கும் உன் பார்வையை
இதழோரம் மின்னும் குறுநகையை என
பகிர ஆயிரமுண்டு
கேட்கும் மனதும்
உணரும் இதயமும்
வாய்க்கும் பொழூதுகளை
எதிர்பார்த்தபடி
கடக்கிறேன் இந்த நாளையும்.
*************** 

சேலை பிடித்துறங்கும்
சிறு குழந்தையின்
உறக்கம் கலையாமல்
மாற்று துணி கொடுத்து
மெதுவாய் விடுவித்து
விலகும் தாயைப்போல்
நீ என்னைவிட்டு விலகுதலை
உணராமல்
சேலையின் வாசத்தை
மனசுக்குள் தேக்கியபடியே
நீ அருகிலிருக்கும் நம்பிக்கையுடன் உறங்குகிறேன்...


.************