Wednesday 21 October 2015

"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" புத்தகம் ஒரு பார்வை..



"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" வா.மு.கோமு எழுதியது. பெரும்பாலும் நான் எழுத்தாளரை பற்றி யார் சிலாகித்தாலும் விமர்சித்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் எழுத்து எனக்கு வாசிப்பின்பத்தை தருகிறதா.. உண்மைக்கு பக்கத்தில் இருக்கிறதா. புனைவாக இருக்கும்பட்சத்தில் எழுத்து நடை என்னை ஈர்க்கிறதா என்று தான் பார்ப்பேன். வா.மு. அவர்களை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் தான் வாசித்தேன். புத்தகம் பிடித்திருக்கிறது என்று ஒரு பதிவு எழுதிய பின் தான் அவர் எழுத்து பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் இருப்பது தெரிய வந்தது.. ஆனால் என்ன இந்த நாவல் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை இன்னும் சொல்ல போனால் ஒரு பெண்ணாக நான் அவ்வளவு எளிதில் பயணிக்க முடியாத ஒரு உலகத்துக்கு அவர் எழுத்தில் பயணிக்க முடிந்தது
..
சிம்ரன் சரத்குமார் நடித்திருக்கும் அரசு படத்தில் ஆரம்பகாட்சியில் ஒரு குடிக்காரர் தெருவில் கோடு கிழித்து ரகளை செய்வார். எல்லாரும் பயந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திவிட சிம்ரனும் சாத்திவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பார். இது போன்ற ஒரு நிகழ்வு என் சிறுவயதில் நடந்திருக்கிறது. நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன். புரியாத அந்த வயதில் சிரிப்பாக வேடிக்கையாக இருக்கும். ஏன் குடிப்பவர்கள் எல்லாம் விநோதமாக நடக்கிறார்கள் பேசுகிறார்கள் என்று  நிறைய விடை தெரியா கேள்விகள். பக்கத்தில் சென்று பார்க்கும் ஆர்வமிருந்தாலும் பயமிருக்கும். நம்பர் பெயரிட்ட கள்ளுக்கடைகளை கடக்கும் போது பயத்துடன் பார்த்து கடப்போம்..


ஆசிரியரின் இந்த கதை அத்தகைய சாக்னா கடை எனப்படும் பாரில் காலை முதல் இரவு வரை நடபபவை, அந்த கடையில் குடிக்க வருபவர்கள், அவர்களுக்கு பரிமாறும் இரண்டு விடலைப்பையன்கள், ஓவ்வொரு டேபிளில் அமர்பவர்கள், ஊருக்கு புதிதாக வருபவர்கள், வாடிக்கையாளர்கள், எல்லா வயதிலும் ஆண்கள் அவர்கள் பிரச்சனைகள் என்று ஒரு லோக்கல் பாரை அவர்கள் வாழ்வை அருகில் இருந்து பார்த்த உணர்வை ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார்.

அவரின் எழுத்தில் மத்திய வர்க்க, அதற்கும் கீழ் இருக்கும் கொங்கு மக்களின் எளிய வாழ்க்கை முறையும் அவர்களின் யதார்த்த பேச்சையும் ஆசிரியர் அழகாக பதிந்திருக்கிறார். முதல் அத்தியாயம் தான் அதீத பாலியல் தூக்கலாக இருந்தது. இப்படி தான் இருக்கும்போல என்று நினைத்து கொண்டு இருக்க அது கனவு என்று சொல்லி அடுத்த அத்தியாயத்திற்கு நகர அடுத்த அத்தியாயத்திலிருந்து ய்தார்த்ததுக்குள் ஆசிரியர் நுழைந்து விடுகிறார்.
ஒவ்வொரு டேபிளில் வருபவர்கள் கதைகள் பெரும்பாலான கதையில் வருபவர்களுக்கு பெயர்கள் இல்லை. ஆனால் அது ஒரு குறையாக தெரியாத அளவு  சம்பவங்களை கதைகளாக கோர்த்து  கொங்கு நடையில் ஆசிரியர் அழகாக நகர்த்தி செல்கிறார்.

பெண்கள் நுழைய முடியா இடத்துக்குள் அங்கு வருபவர்களின் பிரச்சனைக்குள் பெண்ணின் கதைகளை ஆண்களின் பார்வையில் சொல்கிறார். அதில் உண்மை இருக்க கூடும் புனைவாகவும் இருக்கலாம் ஆனால் உண்மைக்கு பக்கத்தில் எடுத்து சென்றிருப்பதை ஏற்க தான் வேண்டி இருக்கிறது.. சம்பவங்களை கதையாக கோர்த்திருக்கும் விதம் அதையும் தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு புரியும் எளிய நடையில் பாலியலிலும் அந்த உணர்வை மங்க செய்யும் ஹாஸ்யத்தை அதிகம் சேர்த்து வாசகருக்கு மனதிலும் இதழிலும் ஒரு மென் புன்னகையை எழுத்தில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்....

1 comment:

  1. மிகவும் அழகான விரிவான விமர்சனம் -- முழுப் புத்தகத்தையும் படத்த திருப்தி ஒரே பக்கத்தில் இரண்டே நிமிடங்களில் கிடைத்து விட்டது .என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    ReplyDelete