Friday 30 January 2015

“பாகிஸ்தான் போகும் ரயில் ”, - புத்தகம் பற்றி



“பாகிஸ்தான் போகும் ரயில், குஷ்வந்த் சிங் எழுதியது தமிழில் ராமன் ராஜா. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பாதிப்பை இரண்டு நாடுக்கும் இடையில் எல்லையாக இருக்கும் ஒரு விவசாய கிராமத்தில் சீக்கியர்களும், முஸ்லீம்களும் உறவாக நட்பாக நெருக்கமாக பழகும் நட்பை அரசாங்கமும், அதிகாரிகளும் தங்கள் சுயநலத்துக்காக மக்களை சுரண்ட இந்த பிரிவினையை பயன்படுத்தி கொண்டார்கள் என்பதை எல்லாம் குஷ்வந்த் சிங் தன்னுடைய எழுத்து நடையில் அனாயசமாக சொல்கிறார்.

இக்பால் என்ற கம்யூனிஸ்ட் அறிமுகமும் ஆரம்பத்தில் தன்னை இந்து என்றோ முஸ்லீம் என்றோ சொல்லாமல், இந்திய மக்கள் கட்சி உறுப்பினாராக தொண்டு செய்பவராக,  வரும் அவர் சிந்தனையும் பேச்சும் அறிவுத்திறனும் பின் சிறைபிடிக்கப்பட அவர் படித்தவர் என்பதால் அவருக்கு கிடைக்கும் மரியாதையும், சிறையில் இருந்து அவர் விடுபட்ட பின் கலவரத்தால், ஊரே கிட்டத்தட்ட பீதியில் இருக்க உயிர் பயத்தில் அவரின் கொள்கைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட சுயநலமாக மதமில்லை என்றவர் சீக்கியர் என்று கூறிக்கொண்டு அதற்கு அவர் தரும் தன்னிலை விளக்கம், மெத்த படித்த அறிவாளிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். குஷ்வந்த் சிங்.

பாகிஸ்தானில் இருந்து ரயிலில் அடைத்து வரும் இந்து சீக்கிய பிணங்கள், கொதித்து எழும் இங்கிருக்கும் சீக்கியர்கள், பாகிஸ்தானுக்கு முஸ்லீம்களை ஏற்றி போகும் ரயிலை அதே போல முஸ்லீம்கள் பிணத்துடன் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க திட்டம் தீட்டுகிறார்கள். அன்று பாகிஸ்தான் போகும் ரயில் அந்த நிலையத்தில் நிற்கும்போது ஒருவர் விடாமல் கொன்று குவிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். எந்த படிப்பறிவுமில்லாத ஒரு திருடன், கொள்ளைக்காரன், ஜக்காத் சிங்  தனி ஒருவனாக வெறிபிடித்த தன் சக சீக்கியர்களிடம் தன் உயிரை தந்து  அந்த ரயில் அந்த நிறுத்தத்தில் நிற்காமல் பாகிஸ்தான் போக வழி செய்கிறான். அவன் மேல் ஏறி பாகிஸ்தான் நோக்கி ரயில் பயணம் தொடர்ந்தது என்று முடித்திருப்பார் ஆசிரியர்.

ஹூக்கும் சந்த என்கிற மாஜிஸ்திரேட், அவரின் வாழ்க்கை முறை, ரயில் முழுக்க வந்திறங்கிய பிணங்களை பார்த்த பின் அவர் அடையும் மன உளைச்சல், ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை, ஒரு பதினாறு வயது பாகிஸ்தானி பெண் மீது அவருக்கு ஏற்படும் இனம்புரியா உணர்வு என்று அவரின் மன கூறுகளை ஆசிரியர் கூறியிருக்கும் விதம் படித்து பார்த்தால் ஹூக்கும் மீது கோவம் வந்தாலும் இன்னொரு பக்கம் பரிதாபம் வரும்...

நம் கண் முன் உலகறிவில்லா ஒரு அமைதியான விவசாய கிராமத்தையும், மக்கள் தங்களுக்குள் எந்த பெரிய வியாக்யானங்களும் இல்லாமல் சகோதரத்துடன் மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவதையும், கடைசி வரை உணர்வால் ஒன்றுபட்டு இருக்கும் அவர்களை, அதிகாரிகள் தங்கள் சுயநல சுரண்டலுக்காக தங்கள் அறிவால் எப்படி எல்லாம் திரித்து பிரிக்கிறார்கள் என்று குஷ்வந்த் சிங் சொல்லி இருக்கும் விதம் அருமை.

அறிவால் ஆக கூடிய பயன் என்ன என்பதற்கு இக்பால் இறுதியில் தனக்குள் பேசிக்கொள்ளும் விதம் போதும். மெத்த படித்த பேச்சால் அறிவால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைக்கும் ஒருவனால் வெறி பிடித்தலையும் தன் கூட்டத்தை கட்டுபடுத்த தெரியாமல் கையாலாகாத்தனத்துடன் பார்த்து தான் பத்திரமாக உயிருடன் இந்த பட்டிகாட்டை விட்டு நாகரீகமான டில்லிக்கு போக வேண்டும். தன உயிர் முக்கியம் என்று நினைக்க, எந்த அறிவும் இல்லாத ஒருவன் தன் உயிரை துச்சமாக நினைத்து அறிவால் முடியாததை தன உணர்வால் சாதிப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.

அதிகாரிகளின் சுரண்டல், மக்களின் அறியாமை அதை உப்யோக்படுத்தி கொள்ளும் அரசாங்கம், தன் உயிரை பெரிதாக மதிக்காமல் உணர்வால் வாழும் மக்கள், ஒரு கிராமம் எப்படி இருக்கும் என்பதை எழுத்தின் மூலம் நம்மையும் அந்த கிராமத்துக்கே இட்டு செல்கிறார் ஆசிரியர். காதலுக்கு மதமில்லை என்பதை ஜக்காத் சிங், நூரன் காதல் மூலம் சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக மனதை உலுக்கி போடும் இந்த புத்தகம். ரயிலில் ஏற்றப்பட்டவர்கள் அனுபவித்த சித்ரவதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பமே அதிர்ச்சியாக இருக்க அப்படியே அதை கடந்துவிட்டேன் படிக்காமல்.. இனத்தின் பெயரால், மதத்தின பெயரால், மொழியின் பெயரால் தான் எத்தனை எத்தனை கொலைகள்....வரலாறு அழுத்தமாக சொல்லி கொண்டு தானிருக்கிறது ரத்தம் படிந்த கறையை கதையாக ஆனாலும் இன்னும் நமக்கு பிடித்த மதம் போனபாடில்லை......

Thursday 22 January 2015

வெளிச்சம்

தொலைக்காட்சியில் சட்டென தோன்றி மறையும்
பெயர் தெரியா நடிக,நடிகையின் முகபாவமோ
துள்ளல் இசையோ
மழலை மாறா குழந்தையின் முகமோ
போதுமானதாக இருக்கிறது
ஒளியிழந்த
இருண்டபொழுதுகளில்
மின்னலாய் கணநேரம்
ஒளி தந்து செல்ல..

வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி - புத்தகம் பற்றி

வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதியது. தமிழில் ரா. கிருஷ்ணையா. ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை இயற்கையை ரசித்து கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன் ஒரு நாள் இரவு வீடு திரும்பும் போது கால்வாயின் கிராதியை பிடித்து கொண்டு நிற்கும்  “நாஸ்தென்காவை பார்க்கிறான். நெருங்கி சென்று பார்க்கும் போது அவள் அழுதுகொண்டு இருப்பது தெரிகிறது. 

நாயகன் சென்று விசாரிக்க ஒன்றுமில்லை என்று அவனை கடந்து சென்றுவிடுகிறாள்.ஆனால் கண்டதும் காதல் வயப்படும் நாயகன் அவள் பின் செல்கிறான். வேக வேகமாக செல்லும் நாஸ்தென்கா எதிரே வரும் குடிகார கனவானால் பதட்டமடைய எதிர்பக்கம் அவளை பார்த்தபடியே வந்து கொண்டிருக்கும் நாயகன் ஓடிச்சென்று அவள் கைப்பற்றி கொள்கிறான். இருவரும் பேசி கொள்ள ஆரம்பிக்க நேரமாகிவிட்டது மறுநாள் இரவு சந்திப்பதாக சொல்லி நாஸ்தென்கா விடைபெறுகிறாள். இரவு முழுதும் அறை திரும்பாமல் நாயகன் இன்ப களிப்பில் மறுநாள் இரவுக்காக காத்திருக்கிறான்.

ஒரு நாடகபாணியில் தன்னை பற்றி விவரித்து சொல்கிறான் நாயகன். அமைதியாக கேட்கும் நாஸ்தென்கா பிரமாதமாக பேசுகிறீர்கள் ஆனால் சாதாரணமாக பேச முடியாதா ஏதோ புத்தகத்தில் உள்ளதை வாசித்து காட்டுவது போல இருக்கிறது என்று  சொல்ல மன்னிக்கவேண்டும் எனக்கு வேறு மாதிரி பேச தெரியாது என்கிறான் நாயகன். அவன் கதையை கேட்டு அவனை ரசித்து நட்பாக வரித்து கொள்ளும் நாஸ்தென்கா தன கதையை சொல்கிறாள்.

கண் தெரியாத பாட்டியுடன் வசிக்கும் அவள் வீட்டின் மச்சுக்கு குடிவரும் இளைஞனுடன் அவளுக்கு ஏற்பட்ட காதலை ஒரு வருடமாக அவனுக்காக காத்திருப்பதை சொல்கிறாள். அவர் ஊருக்கு சென்று திரும்பி வரும்போதும் இதே காதலுடன் இருந்தால் பாட்டியுடன் பேசி ஏற்று கொள்வேன் என்று சொல்லி பிரிந்து சென்றதையும் இப்போது வந்துவிட்டார் ஆனால் தன்னை சந்திக்கவில்லை என்பதையும் சொல்கிறாள். இதை கேட்ட நாயகன் நான் வேண்டுமானால் அவரை போய் பார்த்து பேசவா என்று கேட்க பின் அது நன்றாக இருக்காது கடிதம் எழுதி தா அதை சேர்பிக்கிறேன் என்கிறான். தன் உள்ளத்து உணர்வுகளை கொட்டி கடிதம் எழுதி முகவரியும் தந்து அதை சேர்ப்பிக்குமாறு நாயகனிடம் தந்துவிட்டு மீண்டும் மறுநாள் இரவு சந்திப்பதாக சொல்லி செல்கிறாள்.

மூன்றாம் நாள் இரவும் சந்திக்கிறாள். அவள் மனம் துள்ளி குதிக்கிறது சந்தோசத்தால் நீங்கள் என்னை காதலிக்காதவராக நண்பராக தன்னலமற்றவராக இருப்பதால் உங்கள் மேலும் பாசம் பொங்குகிறது. நான் நேசிப்பவரின் மேல் இருக்கும் பிரியத்தை உங்களிடமும் கடைசி வரை கொண்டிருப்பேன் என்று கூறுகிறாள். அதன் பின் நாயகன் அவளை காதலிப்பதை சொல்ல அவள் குழப்பமும் அதே நேரம் சொல்ல முடியா உணர்வில் இருப்பதை அவனுக்கு விளக்குகிறாள். அவள் காதலனை எதிர்ப்பார்த்து வராமல் ஏமாற்றத்தில் அழுகிறாள். கடிதம் கிடைத்திருக்காது என்று சமாதானம் சொல்கிறான் நாயகன்.

மறுநாள் இரவு மழை சந்திக்க விடாமல் போக அதற்கு மறுநாள் நாஸ்தென்காவை சந்திக்கிறான். அப்போதும் அவள் காதலன் வராமல் போக ஏமாற்றத்தில் தவிக்கும் நாஸ்தென்கா இனி அவர் மீது எனக்கு காதலும் இல்லை அவரை நான் மறந்துவிடுவேன் என்று அதற்கு மேல் பேச முடியாமல் அழுகிறாள். மனம் பொறுக்காமல் அவளை தேற்ற வார்த்தைகள் அன்றி நாயகன் வாயடைத்து நிற்கிறான். 
அதன் பின் இருவருக்கும் நடக்கும் உரையாடல் எல்லாமே எல்லாமே சொல்ல வேண்டும். ஆனால் அதை வாசித்து தான் அனுபவிக்க முடியும். அவ்வளவு நுணுக்கமான உணர்வுகளை வார்த்தைகளாக கோர்த்திருக்கிறார் ஆசிரியர். நாஸ்தென்காவின் அந்த உணர்வு சிக்கலும், மனப்போராட்டமும் அந்த உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் அவள் எடுக்கும் நிலையில்லா முடிவும் என்று அநேக பெண்களின் உணர்வுகளின் உருவமாய் இருக்கிறாள் 

அந்த நீண்ட இரவில் நாயகனுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நாளையே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று பேசிவிட்டு வீடு திரும்ப மனமில்லாமல் அவன் கையை பிடித்து கொண்டு வீடு திரும்பும் நாஸ்தென்கா அங்கே காதலனை குரல் கேட்டவுடன் ஒரே வினாடியில் ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டு அவன் அரவணைப்பினுள் பாயும் அதே கணம் திடுக்கிட்டு ஒடுங்கி போய் நின்றிருக்கும் நாயகனை பார்க்கிறாள். உடன் ஓடிவந்து நாயகன் என்ன நடைபெறுகிறது என்று உணரும் முன் அடங்காத ஆர்வத்தோடும், ஆசையோடும் முத்தமிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பவும் அவனிடம் பாய்ந்தோடி  அவன் கைகளை பற்றி அவனை தன்னுடன் அழைத்து செல்கிறாள்.

அதன் பின் அவள் நாயகனுக்கு எழுதும் கடிதம் சொல்கிறது நாஸ்தென்காவின் உள்ளக்கிடக்கை..கடிதத்தை மன்னிக்க வேண்டும், மறவாதிருக்க வேண்டும், காதலிக்க வேண்டும் உங்களுடைய நாஸ்தென்காவை என்று முடித்டிருப்பாள்.. நாயகன் அதை படித்து அழுது பின் தன்னை தேற்றி கொண்டு தனக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் க்ளாஸ். அவளுடன் பேசி கழித்த அந்த இரவை ஆயுட்கால முழுமைக்குமான ஆனந்தமாக வரித்து கொள்கிறான் நாயகன். 

கதை முழுதும் உணர்வுகளால் நிரம்பி வழிகிறது.. என்ன எழுதினாலும் வார்த்தைகளில் கதை கொடுத்த உணர்வை வடித்து விட முடியாது.. மிக நுணுக்கமாக நுண் உணர்வுகளுக்குள் பயணித்திருக்கிறார் ஆசிரியர். .கதையின் தாக்கம் மனதை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது.. மனம் நாஸ்தென்கா என்று அரற்றும் வாசித்து முடித்தவுடன்.....

Sunday 11 January 2015

சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - புத்தக விமர்சனம்



சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று ஆசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் – தமிழில் யூமா. வாசுகி.  

ஒரு பத்திரிகை நிருபரிடம் மலைகளில் சரக்கு ஏற்று செல்லும் லாரி டிரைவர் ஒருவர் தன் கதையை ஒரு இரயில் பிரயாணத்தில் பகிருவதில் கதை லாரி ட்ரைவரின் பார்வையில் தொடங்குகிறது.

மலைகளில் கடுமையான சவால்களை சந்திக்கும் தன் தொழிலை விரும்பி நேசிக்கும் டிரைவர் இலியாஸ் ஒரு கிராமத்தில் இருக்கும் கூட்டு பண்ணைக்கு செல்ல நேரிடும் போது அங்கு சந்திக்கும் அசேல் என்ற பெண்னை முதல் பார்வையிலேயே தன் காதலியாக வரித்து அவளுக்காக உருகி தவிப்பதில் ஆரம்ப்பிக்கிறது கதை. அவள் ஏற்கனவே வேறு ஒருவருக்கு நிச்சயமாகி இருக்க அப்போதும் அவளை காதலிப்பதை நிறுத்த முடியாமல் தவிக்கிறார். அசேலை தினமும் சந்திக்க கூட்டுபண்ணைக்கு தினமும் வருகிறார். அவளும் இலியாஸ் மீது காதல் கொள்ள ஒரு நாள் அவளை தான் ஒட்டி வரும் லாரியில் ஏற்றிக்கொண்டு ஊரைவிட்டு கூட்டி செல்கிறான். அவர்கள் செல்லும் போது அந்த உணர்வை ஆசிரியர் விவரிக்கும் விதம் அழகு.

வானமும், சாலையும் எங்களது மகிழ்ச்சியையும் தவிர வேறொன்றும் பிரபஞ்சத்தில் இல்லை  எங்கு போகிறோமென்று தெரியாமல், எதற்கு போகிறோமென்று தெரியாமல் நாங்கள் நீண்டு கிடந்த தொலைதூரம் சென்றோம்.. களைப்போ சிரமமோ இல்லை. ஒருவரையொருவர் பார்த்து ஒட்டியுரசி அமர்நிதிருப்பது பேரானந்தமாக இருந்தது.. உலகில் உள்ள அனைத்தும் ஜீவசக்தி பெறுவதாக தோன்றியது. என்று இன்னும் விரிவாக அழகாக விவரிக்கிறார்..மலையின் உச்சியில் இருக்கும் ஒரு ஏரிக்கரையில் மனமொப்பி இருவரும் இணைவதில் முடிகிறது.

மிக சந்தோஷமான தம்பதிகளாக வாழ்வை ரசிக்கும் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. இதற்கிடையில் அவரது தொழில் டிப்போவில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை தன்னால் சமாளிக்க முடியும்  என்று யார் யோசனையும் சட்டை செய்யாமல் எல்லாரின் எதிர்ப்பையும் மீறி  அங்கு இருக்கும் கதீஜா என்ற பெண்ணின் உதவியுடன் துணிச்சலான ஒரு காரியத்தில் இறங்குகிறார். ஆனால் அது படுதோல்வியில் முடிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வேலை இடத்தில் கேலிக்குள்ளாக மனம் வெதும்பி குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைக்க அப்போது உள்ளூர இலியாசை நேசிக்கும் கதீஜா ஆதரவாக இருக்க ஒரு கட்டத்ததில் தன்னிலை மறந்து அவளுடன் இணைகிறார்.

குற்ற உணர்வு தாக்க அசேலிடம் சொல்ல முடியாமல் தவித்து மருகி அதிகம் குடிக்க தொடங்க ஒரு கட்டத்தில் அசேலுக்கு இவரின் வேறு ஒரு பெண்ணுடனான உறவு தெரிய வர குழந்தையை தூக்கி கொண்டு பிரிகிறார். காதலி எங்கு போனாள் என்று தெரியாமல் தேடி அலைந்து பணி புரியும் இடத்திலும் இருக்க பிடிக்காமல் கதீஜாவை கூட்டி கொண்டு வேறு இடத்துக்கு பயணமாகிறான். இருவரும் சந்தோசமாகவே வாழ்ந்தாலும் காதல் மனைவியின் நிலை என்னவென தெரியாமல் மருகி ஒரு கட்டத்தில் கதீஜாவுடனும் வாழ மன்மொப்பாமல் கதீஜாவிடம் மன்னிப்பு கேட்டு அவளையும் பிரிகிறான்.

நான்கு வருடங்கள் உருண்டோடி இருக்க பழைய இடத்திலேயே திரும்பவும் பணிக்கு சேருகிறான். அவளை தேடி அவள் அம்மா வீட்டுக்கு போக அவளுக்கு வேறு ஒருவருடன் மணமாகி இருப்பது தெரிய வர வாழ்வு சூன்யமாகிறது. இருந்தாலும் நம்பிக்கையுடன் தன் தொழிலை நேசித்து வாழ்க்கையை நகர்த்தும் இலியாஸ் ஒரு சாலை விபத்தில் அடிபட அங்கு சாலை பணியாளர் இவனை அவர் வீட்டுக்கு கூட்டி செல்கிறார். அங்கு அசேலையும் தன் மகனையும் கண்டும் ஒன்றும் பேச முடியாமல் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அசேல் தவித்து மருகுவதை ஆசிரியர் அசத்தலாக சொல்லி இருக்கிறார்..

சொந்த மகனே மாமா என்று கூப்பிட அந்த மகனை காண்பதற்காக அந்த பகுதியில் தினமும் பயணித்து விளையாடும் மகனை சிறிது தூரம் லாரியில் உட்கார வைத்து ஒட்டி சந்தொசப்படுத்துகிறான். அந்த குழந்தை மட்டுமே தனது சந்தோசமாக வாழ்வை நகர்த்த அதற்கும் ஒரு முற்று புள்ளி விழுகிறது. இது லாரி ட்ரைவரின் பகுதி

அடுத்து அசேலை மணந்து கொண்டது எப்படி என்பதை அடுத்த பகுதியில் மணந்து கொண்டவர் நிருபரிடம் சொல்வதுடன் கதை முடிகிறது..

எல்லாரின் உணர்வுகளையும் உணர்வு போராட்டங்களையும் ஆசிரியர் கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல் அப்படியே விவரித்திருப்பது கூடுதல் பலம். நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் சில விஷயங்கள் மனதுக்கு கொடுக்கும் இதம் வார்த்தையில் சொல்ல முடியாது.. வாசித்து அனுபவிக்க வேண்டும்...