Thursday 18 August 2016

நியாயங்கள்

தூக்கம் பிடிக்காத நள்ளிரவில்
மின்மினிப்பூச்சிகளின் ஒளியில்
சில் வண்டின் இரைச்சலில்
மெல்ல மெல்ல
உயிர்பெற்று எழுகின்றது 
உன்னுடன் கழித்த பொழுதுகள்.
வெளியேறும் வழி தெரியாத
அடர் கானகத்துள் கைக்கோர்த்து
ஒருவருக்குள் ஒருவர் பயணித்த தூரம்
அறியாமல் பிரவேசித்துவிட்டு
பேசவியலா உணர்வுகளை
மனதில் தேக்கியபடி பிரிய முயலுகிறோம்
அறுத்தெறியவும் மனமில்லை
புறந்தள்ளவும் கூடவில்லை
நினைவுகளோடு போராடவும் முடியாமல்
விழி நீரை துடைக்கவும் விருப்பமின்றி
இயலாமையை சுமந்தபடி
வெறிக்கிறேன் இந்த இரவை…

========================== 

நான்..
பிடிவாதக்காரி
பொறாமை பிடித்தவள்
திமிர் பிடித்தவள்
ஆயினும்
உன் ஆழ் மனத்தின் விகாரங்களுக்கும்
கௌரவத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்
என்னைத் தான் இரை கொள்கிறாய்
ஏக்கங்களை கேட்டுவிட்டு
உண்மை அன்புக்கு ஏங்குவதாக கூறி
என் அன்பில் குளிர் காய்ந்து
கனவுகளை கூட விட்டுவைக்காமல்
கபளீகரம் செய்துவிட்டு
எனக்குரியதை தர ஏனோ மறந்து போகிறாய்.
இழப்புகளுடனும் ஏக்கத்துடனும்
கழியும் பொழுதுகள்
இடைவிடாது இம்சிக்கிறது
உன் முகத்து புன்னகையில்
தெரிந்தது
எனை அடைந்த பூரிப்பா
இல்லை
ஆக்ரமித்த அலட்டலா
விடைதெரியாத கேள்வியின்
வெம்மையில் வீழ்கிறேன் எனக்குள்..

=======================

விழி விரித்து
வாங்கிய முத்தத்தில்
வியர்க்கும் உதடுகளின் ஈரத்தை
மார்பில் ஒற்றி எடுக்கிறேன்
தலை கோதும் விரல்களின் ஸ்பரிசத்தில்
கண் மூடி கிறங்குகிறேன்
முற்றுபெறா இரவை 
முடித்துவைக்கிறது உன் நுதல் முத்தம் 

Saturday 13 August 2016

The Seventh Man - Japanese short story


Haruki Murakami – Japanese – English translation – Jay Rubin

தமிழில் – இரா. சோமசுந்தரம்

பத்துவயது சிறுவன் ஒருவனின் மனதில் ஏற்படும் பாதிப்பு எந்த வயது வரை தொடர்கிறது என்பதையும், அந்த பாதிப்பிலிருந்து மீள சம்மந்தப்பட்டவர்களே தான் கடினமாக போராடி மீள வேண்டும் என்பதையும் கதை பேசுகிறது.
கடற்கரை கிராமத்தில் வசிக்கும் ஒரு பத்துவயது சிறுவன் அவனது நண்பன் ”க” என்பவனுடனும் அவனது நாயுடனும் புயல் கரை கடக்காமல் அதே நேரம் மையத்தில் இருக்கும்போது ஏற்படும் அமைதியின் போது கடற்கரை செல்கிறான். அவன் தந்தை காற்று அடிக்க தொடங்கினால் வீட்டுக்குள் வந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கையுடன் தான் வீட்டுக்கு வெளியே செல்கிறான்.

புயலின் தாக்கத்தால் குலைந்து போயிருக்கும் கிராமத்தை பார்த்தவாறே கடற்கரைக்கு செல்கிறான். கடற்கரை மணலில் ஏகப்பட்ட பொருட்கள் சிதறுண்டு கிடக்க ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்து பார்வையிட்டு தூக்கி எறிந்து செல்கிறார்கள். ”க” சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவன். இருவரும் கடற்கரையில் இருக்கும் போது பூமியிலும் சுற்றிலும் ஏதோ ஒரு பய உணர்வை திடீரென்று சிறுவன் உணர்கிறான். கடல் திடீரென ஏதோ ராட்சஸ உருவம் கொண்டு விழுங்க பார்ப்பது போல திகில் ஏற்பட  நண்பன் “க”வை எச்சரிக்கிறான். வா ஓடிவிடுவோம் என்று ஆனால் அவன் சொல்வதாக நினைக்கிறானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தை வருகிறதா இல்லையா என்று அவனுக்கே சந்தேகம் வருகிறது.

பயம் துரத்த ஓட தொடங்கிய அவன் அலை உள்ளே வராமல் இருக்க போடப்பட்டிருக்கும் தடுப்பணை பக்கம் ஓடுகிறான். அப்போது ராட்சஸ அலை ஒன்று வருகிறது. அது “க”வை இழுத்து கொள்கிறது. தூர இருந்து பார்க்கும் சிறுவன் மிரட்சியில் பயத்தில் அதிர்கிறான். அந்த அலை தடுப்பணை தாண்டி அடித்தாலும் அணையின் பொருட்டு சிறுவன் அதில் சிக்காமல் தப்பிக்கிறான்.
தன் கண் முன் தன் நண்பனை கடல் உள்ளே சுருட்டிக்கொண்டதை திகிலுடன் பார்த்து உறைந்து நிற்கும் போது அடுத்த அலை வருகிறது. 

ஆனால் இவன் அந்த அலையில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் அப்படியே நிற்கிறான். ராட்சஸன் போல வந்த அந்த அலையின் நுனியில் அவன் நண்பன் “க” வின் உருவம் விகாரமாக அவன் கையை பற்றி இழுக்க முயல்வதாக அவனுக்கு மனதில் பதிகிறது. பயந்து நடுங்கி கீழே விழுகிறான். அந்த உருவம் இவன் மனக்கண்ணை விட்டு மறையாமல் போய்விடுகிறது. அதன் பின் இவனை கடற்கரையில் கண்டெடுக்கும் பெற்றோர்கள் இவனை காப்பாற்றுகிறார்கள். நீண்ட நாள் காய்ச்சலுக்கு பிறகு குணமடைந்தாலும் சிறுவன் முன்புபோல இல்லை . அதேபோல “க” வின் உடலும் கிடைக்கவில்லை.

சிறுவனுக்கு நாம் முயன்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் ஆனால் தன் நண்பன் இறப்புக்கு தான் காரணம் என்ற எண்ணம் ஆழ வேரூன்றுகிறது. மேலும் தன் நண்பன் இதற்காக தன்னை ஒருபோதும் மன்னிக்க போவதில்லை என்று உள்ளுக்குள் புழுங்க தொடங்குகிறான்.

சிறுவனின் கண் முன் அவன் நண்பன் அலையின் நுனியில் இருந்துகொண்டு கரம் நீட்டி அழைப்பதான பிம்பமே தோன்றுகிறது. தூங்கினாலும் கனவிலும் இதே வேறு ரூபத்தில் தொடர்ந்தது. கடல் இவனை உள்ளுக்குள் இழுத்து செல்வதாகவும் அங்கே நண்பன் “க” சிரிப்புடன் வரவேற்பதாக கனவு கண்டு நள்ளிரவில் அலறி அடித்து எழுவான். பின்னர் அந்த ஊரில் இருக்கமாட்டேன் என சிறுவன் கூற அவன் பெற்றோரும் வேறு சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரி முடியும் வரை பெற்றோர் சென்று பார்ப்பார்கள் அவன் அந்த ஊருக்கு வராமல் இருக்கிறான்.

பட்டம் பெற்று வேலைக்கு போய் தனியாக வசிக்கிறான். ஆனாலும் அந்த கனவுகள் அவனை விடாமல் துரத்துகின்றன. அவன் அந்த சம்பவத்தை மறந்துவிடாத அளவுக்கு அந்த கனவு அவனை தொடர்ந்து இம்சைபடுத்துகிறது.  பயங்கரம் அவன் எலும்பில் தங்கி இருந்தது. யாரிடமும் பகிர முடியாத திகிலாக தொடர்ந்ததால் திருமணம் கூட செய்துகொள்ளாமல் தனியே வசிக்கிறான்.  கிட்டத்தட்ட நாற்பது வயது வரை எந்த கடற்கரைக்குமே அதற்கு பிறகு போகாமல் இருக்கிறான். கடற்கரை மட்டுமல்லாமல், ஆறு, குளம், ஏரி, படகு சவாரி எதுவுமே செய்ய பயப்படுகிறான் கனவு பலித்துவிடுமோ என்று.

இதன் பின்னர் ஒரு நாள் தந்தை இறந்துவிட கிராமத்தில் இருக்கும் வீட்டை விற்றுவிட முடிவு செய்யும் சகோதரன் இவனின் சிறுவயது பொருட்களை எடுத்து செல்ல வர சொல்கிறான். அப்படி எடுக்க செல்லும்போது நண்பர் “க” சிறுவனாக இருந்த போது வரைந்த ஓவியங்கள் கத்தையாக அவன் கைக்கு கிடைக்கிறது. அதை பார்த்த போது பழைய பயங்கரம் தாக்கியது. அதை உடனே தூக்கி வீசிவிட நினைத்தவன் பின்னர் எடுத்து வைக்கிறான்.

மிகுந்த மன உளைச்சலிலேயே நாட்கள் கடக்க, பல நாள் போராட்டத்துக்கு பிறகு, அந்த ஓவியங்களை கையில் எடுத்து பார்க்கிறான். அப்போது தனது நண்பனின் ஒவியத்திறமையை துல்லியமாக உணர்கிறான்.  ”க”வின் ஆழமான உணர்வுகள் ஓவியமாக மலர்ந்திருப்பதை பார்க்கிறான். “க”வுடன் சிறுவனாக சென்ற இடங்கள் எல்லாம் இவன் மனக்கண்ணில் விரிகிறது. அதன் பிறகு வேலையில் இருந்து திரும்பியதும் தினமும் ஓவியத்தை எடுத்து பார்ப்பதை வழக்கமாக்குகிறான். பார்க்க அவனுக்கு ஏதேதோ புரிகிறது. தன் நண்பன் ஒருபோதும் அப்படி பார்ப்பவனில்லை தன் மனதில் இருந்த தெளிவின்மையால் தான் அப்படி தனக்கு தோன்றியதாக உணர தொடங்குகிறான்.

பின் மீண்டும் தனது ஊருக்கு அதே கடற்கரைக்கு வருகிறான். அந்த திண்டின் மீது உட்கார்ந்து பார்க்க தெளிந்த விவரங்களுடன் இவன் கண்ட கனவு போல தோன்ற எழுந்து கடலுக்கு அருகில் செல்கிறான். அவன் இதயம் வேக வேகமாக துடிக்க தொடங்கியது. பல்வேறு பயங்களும் எண்ணங்களும் அலைகழிக்க அவன் சமநிலை இழந்து கடலில் விழுகிறான். இதயம் தொண்டை வரை வந்து துடிக்க , கை கால்கள் செயலிழந்தன. ஆனாலும் அவன் எழுந்திருக்காமல் அதே நீரில் அப்படியே கிடந்தான். இனி நான் பயப்பட ஏதுமில்லை என்பது போல விழுந்து கிடக்கிறான்.

அவன் மனம் தெளிவடைகிறது. பயம் விலகுகிறது. பின்  மெல்ல எழுந்து வீடு திரும்புகிறான். அதன் பின்னர் அவனை துரத்திய பயங்கர கனவுகள் நின்றுவிடுகின்றது. வாழ்க்கையின் பெரும்பகுதி இந்த பயங்கரத்திலேயே கழிந்தாலும் இறக்கும் வரை அலறிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அச்சப்பட்டு கொண்டிருக்காமல் பயமின்றி இறக்க முடியும் என்பது ஆறுதலாக இருப்பதை உணர்கிறான்.


பயம் ஒன்று தான் பயப்படவேண்டியது என்பார்கள். ஆனால் அது பொய். ஒவ்வொருவருக்கும் இந்த பயம் ஏதோ ஒரு ரூபத்தில் வரவே செய்கிறது. ஆனால் அப்படி நாம் பயத்தை சந்திக்கும்போது நாம் அதுக்கு முதுகை காட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறோம் . நம்மிடம் இருக்கும் அற்புதமான பொருளை இந்த பயத்திடம் கொடுத்துவிட்டு வேறு ஏதோ ஒன்றிடம் சரணடைகிறோம் நான் அலைகளிடம் சரணடைந்ததை போல என கதை முடிகிறது. 

Finger nails - Zoran Zivkovic


சமீபத்தில்  Finger nails – Zoran Zivkovic - serbian மொழியில் எழுதிய கதை. (ஆங்கிலத்தில் Alice Copple ) ஒன்றை வாசித்தேன். மிகவும் வித்தியாசமான கதை. ப்ராஸ்கோ என்கிற சிறுவன் தனது எட்டு வயதில் முதன் முறையாக நகங்களை வெட்டுகிறான் . அதுவரை அம்மா நகங்களை வெட்டி வர முதன் முறையாக அவன் வெட்டும்போது காயம்படாமல் அழகாக வெட்டியது அவனுக்கு மிக பெருமையாக இருக்க, வெட்டிய நகங்கள் அழகிய பிறை போல தெரிவதில் குதூகலமடைகிறான். அதை சேகரித்தால் என்ன என்று தொடங்க ஒரு கவரில் போட்டு அன்றைய தேதியை போட்டு ரகசியமாக பத்திரப்படுத்தி வைக்கிறான்


அம்மாவுக்கு தெரிந்தால் சேகரிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் அதை அம்மாவுக்கு தெரியாமல் பத்திரப்படுத்துகிறான். பின்னர் இரண்டு வாரங்களுக்கு பிறகு நகம் வெட்ட சிறிது யோசித்து அதையும் அன்றைய தேதியிட்டு ஒரு கவரில் போட்டு சேகரிக்கிறான். வெட்டிய நகங்களை வீசி எறிய மனம் வராமல் அப்படி செய்தால் தன் உடலில் இருந்து ஒரு பாகத்தையே இழப்பது போல தோன்ற தொடர்ந்து நகங்களை பத்திரப்படுத்தி சேகரிக்க ஆரம்பிக்கிறான்.
வருடத்துக்கு இருபது பைகளுக்கு மேல் சேர அதை யார் கண்ணிலும் படாமல் பத்திரப்படுத்தி வைக்க படாத பாடு படுகிறான் சிறுவனாக இருக்கும் வரை. இருபது வயதுக்கு மேல் பெற்றோரிடமிருந்து பிரிந்து வரும்போது மூன்று பெட்டி நிறைய நகங்களை கொண்டு வருகிறார். பயமின்றி நகங்கள் இருக்கும் பைகளை எடுத்து தேதி வரிசைப்படி அடுக்கி வைக்கிறார் தனது இடத்தில்.

பொக்கிஷம் போல பாதுகாத்து வரும் நகைகளை கவரில் போட்டு வைக்க மனமில்லாமல் 500 சிகரெட் பெட்டி வாங்குகிறார்.பின் அதில் அழகாக வரிசைப்படி நீண்ட நாட்கள் செலவழித்து அடுக்கி முடிக்கிறார். அப்போது அவரை பற்றி அவரே பெருமிதமாக உணர்கிறார். அடுக்கி முடித்து அந்த வரிசையை பார்க்கும்போது அழகாக தெரிய அந்த பெட்டியின் அழகுக்கு ஆசைப்பட்டு யாராவது எடுத்துக்கொண்டு போய்விடுவார்களோ, உள்ளே விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் என திறந்து பார்த்து ஒன்றுமில்லை நகங்கள் மட்டுமே இருப்பதை கண்டு தூக்கி எறிந்து சென்றுவிடுவார்களோ. அவர்களை பொறுத்த வரை இது குப்பை ஆனால் எனக்கு  என்று யோசிக்கும்போதே திகிலடைகிறார்.

உடன் அந்த பெட்டிகளை காப்பாற்ற வங்கியில் லாக்கர் வாடகைக்கு எடுக்கிறார். அதில் கொண்டு போய் சேர்த்தவுடன் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார். பின் மாதம் இரண்டு முறை புதிய நகங்களை வைத்துவிட்டு சரிபார்த்துவிட்டு வருவார். திடீரென ஒரு நாள் தம் வாழ் நாள் முழுவதும் வெட்டும் நகங்களை சேகரிக்க வங்கி பெட்டகம் போதுமா என்ற சந்தேகமும், தான் இறந்த பின் தன் நகங்களுக்கு என்ன நடக்கும் என்ற சந்தேகமும் மனதில் விஸ்வரூபமெடுக்க நிம்மதியின்றி பலவாறு பலநாள் யோசனைகள் செய்து வருகிறார்.
முடிவில் திடீரென அவருக்கு ஒரு ஞானோதயம் தோன்றுகிறது. நான் மரணமடைந்தால் தானே என் நகங்கள் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டும். நான் இறக்கவே கூடாது என்று முடிவெடுக்கிறார்.

இந்த கதை சொல்ல வரும் நீதியெல்லாம் வாசிப்பவர்களை பொறுத்து.. 


 லிங்க் http://www.infinityplus.co.uk/stories/fingernails.htm 


தமிழில் : க. ரகுநாதன் மொழி பெயர்த்திருக்கிறார்.