Monday 13 June 2022

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

 

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். ஆசிரியர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இவரின் தனிமையில் நூறு ஆண்டுகள் வாசிக்க முயற்சி செய்து பாதி கூட தாண்ட முடியவில்லை. அந்தளவு கடினமாக இருந்தது. இவர் எழுதிய இந்த நாவல் 95 பக்கங்களே கொண்ட குறுநாவல் என்பதால் வாசிப்போம் என்று ஆரம்பிக்க, பெயரில் ஆரம்பித்து, சூழல் வரை கதைக்குள் உட்புகுவது கடினமாக இருந்தது. அதற்கு காரணம் இந்த ஆசிரியரின் எழுத்து நடையா அல்லது மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கலா எதுவென்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

இது க்ளாஸிக் வகை என எதன் அடிப்படையில் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு பெண் திருமணத்திற்கு முன் கன்னி தன்மை இழந்துவிட்டதை, அவள் கணவன் முதலிரவில் அறிந்து கொண்டதால் அவளை அவள் தாய் வீட்டிற்கு அந்த நள்ளிரவே அனுப்பி வைக்க, அந்த பெண்ணை அவள் வீட்டில் உள்ளோர் யார் காரணம் எனக்கேட்க சந்தியாகோ நாஸர் என்கிறாள்.

தன் குடும்பத்திற்கு அவமானம் தேடி தந்த சந்தியாகோவை கொல்வதற்காக அப்பெண்ணின் இரட்டை சகோதரர்கள் அவனை கொலை செய்கிறார்கள். அவனை கொலை செய்யப்போவதை முன்பே பலர் அறிந்திருந்தும், அவன் சாவை தடுக்க முடியாமல் ஏதேதோ தற்செயல் நிகழ்வுகள் நடக்கிறது .

அவன் தான் கன்னித்தன்மை இழக்க காரணம் என்பதும், அவள் ஏன் அவன் பெயரை சொன்னால் என்பதும் தெரியவில்லை. அனைத்திற்கும் மேலாக எந்த கணவன் (அவனை அவள் திருமணம் ஆகும் வரை காதலிக்கவே இல்லை) அவளை தாய் வீட்டிற்கு திருமணமான அன்றே அனுப்பி வைக்கிறானோ, அவனை உயிருக்கு உயிராக காதலித்து 2000க்கு மேலான கடிதம் எழுதி அவனுடன் 27 வருடங்கள் கழித்து இணைகிறாள்.

நடப்பது நடந்தே தான் தீரும் என்ற எளிய விதியை கூற ஆசிரியர் ஏன் இப்படி ஒரு கடினமான எழுத்து நடையை மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. இதை மர்ம நாவல் என்றும் வகைப்படுத்த முடியவில்லை. எழுத்து நடையில் கையாளப்பட்டிருக்கும் உத்தி ஆசிரியரின் தனித்தன்மையாக கூட இருக்கலாம். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையை முற்றிலும் ஏறகட்ட தான் இந்நாவல் உதவியது.

Tuesday 7 June 2022

என் பெயர் சிவப்பு

 

 

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக். இந்த புத்தகத்தை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் வாசிப்பதற்காக எடுத்தேன். ஆனால் நாவலின் கடினத்தன்மையும், அதன் களமும், காலசூழலும், என்னை நாவலுக்குள் நுழைய விடவில்லை. எனவே புத்தகத்தை தூக்கி தூர வைத்துவிட்டேன். ஓரானின் பனி நாவலை என் மகன் பரிசாக தர அதை வாசிக்க அந்த புத்தகத்தின் மூலம் ஆசிரியர் எனக்குள் வெளிச்சமிட்டு காட்டிய அகத்திறப்புகள் அவர் எழுத்தின் மீது காதலை கொடுத்தது. இன்றும் பனி நாவலை நான் வாசித்த சிறந்த நாவல்களுள் ஒன்று என்று கூறுவேன். பனியின் கதை மாந்தர்களான இஃபெக், கா, கடிபே, நீலம் என பலரும் உறைந்து போயுள்ளனர்.

அந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும், ஓரானின் எழுத்தின் மீதான காதலும் என் பெயர் சிகப்பை மீண்டும் வாசித்தே தீர வேண்டும் என்ற உந்துதலை தந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான நேரமும் மனமும் இப்போது தான் கை கூடியது. நான் எதிர்ப்பார்த்த அகத்திறப்புகள் இந்நாவலில் கிடைக்கவில்லை என்பதுடன், புத்தகத்தை முடிக்க ரொம்ப சிரமமாக இருந்தது. பாதியிலேயே நிறுத்திவிடலாம் என்று பலமுறை தோன்றிய போதும், எழுத்தாளரின் எழுத்துநடையின் மீதிருந்த காதல் தான் முழுவதும் வாசிக்க வைத்தது.

பதினாறாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகர இஸ்லாமிய நுண்ணோவியர்களின் உலகம் தான் நாவலின் மையக்கரு. ஓவியங்களின் புதிய முயற்சிகளை புகுத்தும் ஒரு சாராரும், அது மரபுக்கு எதிரானது, கடவுளை நிந்திக்கும் செயல் என்றும் அவர்களுக்குள்ளாகவே பிளவுப்பட்டு, மரபை நேசிப்பவர்கள் புதிய முயற்சிகளை ஆதரிப்பவர்களை கொலை செய்வது, இறுதியில் கொலைக்காரன் பிடிபடுவதும் என்று நாவல் பதினாறாம் நாற்றாண்டின் துருக்கி, இஸ்தான்புல் நகரத்துக்கு நம்மையும் இழுத்து செல்கிறது.

துருக்கியின் வரலாறை ஓரளவாவது படித்திருந்தால் தான் ஓரான் பாமுக்கை எளிதில் உள்வாங்க முடியும், பனி நாவலிலேயே இது ஒரளவு பிடிப்பட்டிருந்தாலும், பதினாறாம் நூற்றாண்டுக்குள் பயணி ப்பது சற்று கடினமாக தான் இருந்த்து. காரணம் நுண்ணோவிய உலகம். ஓவியம் பற்றிய அரிச்சுவடி கூட தெரியாத எனக்கு பக்கம் பக்கமாக நீளும், ஓவியக்குறிப்புகள், சித்திர சுவடிகள், நிறங்கள், அதன் நுட்பங்கள் எல்லாம் பெரும் ஆயாசத்தை தந்தன. எளிய நடை மொழிப்பெயர்ப்பு மட்டுமே இந்நாவலுக்குள் ஓரளவாவது தட்டு தடுமாறி பயணிக்க செய்தது.

ஒரு ஓவியத்திற்கான குறியீடுகள், விதிமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு பின்னுள்ள மதத்தின் பற்று அல்லது தீவிரத்தன்மையும், அதனை விட்டு சற்றே விலக முற்படுபவர்களுக்கு நேரும் முடிவுகள் நம்மை திகிலடைய செய்கின்றன.. இஸ்லாம், புனித குரான், நபிகள், தீர்ப்பு நாள், இறையுணர்வு பக்தியாக அல்லாமல் அச்சமாக நெஞ்சில் ஆழமாக விதைக்கப்படுவது என பலவற்றை ஓரான் நமக்குள் கடத்தியிருக்கிறார்.

நான் பிரேதம் என கிணற்றுக்குள் கொலை செய்ய்ப்பட்டு கிடப்பவனின் குரலாக தொடங்கும் நாவல் அவனை கொலை செய்தவனை கண்டுபிடிக்கும் வரை அந்நாவலின் வரும் மாந்தர்கள் ஏன் நுண்ணோவிய சித்திரம் குரலாக கூட நாவல் முழுமையும் ஒலிக்கிறது.

கருப்பு என்கிற மனிதன் பல ஆண்டுகள் கழித்து தனது காதலி ஷெகூரேவை சந்திக்க வருகிறான். அவன் காதலியின் தந்தை எனிஷ்டே தான் மரபு ஓவியங்களில் இருந்து அப்போதைய நவீன ஓவியங்கள் மீது காதல் வயப்பட்டு சுல்தானின் உதவியுடன் நுண்ணோவியர்களை காசுக்காக மரபு மீறிய ஓவியங்களை வரைய சொல்கிறார். இதன் காரணமாக வசீகரன் என்பவனும், அவனை தொடர்ந்து அவ்வொவியங்களை காசுக்காக வரைய செய்த எனிஷ்டேவும் கொல்லப்படுகின்றனர்.

ஷெகூரே ஏற்கனவே திருமணமாகி, போருக்கு சென்ற கணவர் திரும்பாமல் இருக்க, கணவர் வீட்டில் கணவரின் தம்பி ஹசனிடமிருந்து தப்பிக்க தந்தை வீட்டில் தனது இரு குழந்தைகளுடன் அடைக்கலமாகிறாள். அப்போது அவளின் நினைவாக திரும்பி வரும் கருப்பு அவளை திருமணம் செய்ய துடிக்கிறான். ஹஸனும் அவளை அடைய துடிக்கிறான். இருவரின்பாலும் ஈர்ப்பும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதும், தந்தையின் மரணத்திற்கு பின் கருப்பை நிபந்தனையுடன் திருமணம் செய்துக்கொள்ளும் செகூரே, அதன் பின்னும் பாதுகாப்பின்மை காரணமாக குழப்பத்துடனே இருப்பதும், அவளின் உணர்வுகளை ஆசிரியர் மிக நுட்பமாக கூறியிருக்கிறார்.

இந்த புத்தகம் இருவரை மிக ஈர்க்கலாம். ஒன்று ஓவியத்தின் மீதும் பண்டைய ஓவிய கலையின் மீது ஈடுபாடு உடையவர்களையும், இரண்டாவது துருக்கியின் பண்டைய வரலாறை கலை வடிவாக தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பவர்களையும். மற்றவர்கள் இதை முழுமையாக வாசிப்பது கடினம் என்றே நினைக்கிறேன். எனக்கு இஸ்லாமிய மதத்தின் தொன்மையையும், அது மனிதர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் பின் புலத்தையும் புரிந்து கொள்ள உதவியது.

நாவல் – என் பெயர் சிகப்பு, ஆசிரியர் – ஓரான் பாமுக், தமிழில் – ஜி. குப்புசாமி, பதிப்பகம் – காலச்சுவடு.

Monday 25 April 2022

பாதி இரவு கடந்து விட்டது


அமிதபா பக்‌ஷியின் ஆங்கில நாவலை பாதி இரவு கடந்து விட்டது என சுபத்ரா தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நவாப் கால மாங்கே ராம் என்கிற மல்யுத்த வீரனின் வாழ்க்கையில் இருந்து கதை தொடங்கி, அவன் மகன் பர்சாதி, ராம்தாஸ் என முடிகிறது.மல்யுத்தம் குறித்து பெருமிதமும், அதன் மீது அளப்பரிய காதலும் கொண்ட அப்பாவியான மாங்கே ராமை, கால சூழல், லாலா மோதி சந்த் என்ற பணக்காரர் குடும்பத்துக்குள் அடியாளாகவும், விசுவாசமான வேலைக்காரனாகவும் உழல வைக்கிறது.

கதையை எழுதிய அமிதபா பக்‌ஷி பற்றி தெரியவில்லை. ஆனால் அவர் ராமாயணத்தின் வைத்திருந்த மையல் தெரிகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை கதையாக வரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஜமீன்காலம், பின் ஆங்கில ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த காலம், அதன் பின் 70கள் வரையான அரசியல், ஆன்மீகம், இலக்கியம், அகவயம், புறவயம் அனைத்தையும் வாழ்வியல் வழியாக பதிவு செய்ய முனைந்திருக்கிறார். ஆனால் அதிக ஆன்மீகம் மற்றும் ராமனின் அருமை பெருமைகள் விளக்கத்தாலும் பல இடங்களில் கதை மையத்தில் இருந்து விலகி செல்கிறது.

முதல் பகுதியில் லாலா மோதிசந்தில் ஆரம்பித்து அவரது வாரிசுகள், அதற்கடுத்த தலைமுறை என ஒரு பணக்கார வியாபார குடும்பம், மாங்கே ராம், அவனை தொடந்து, அவன் மகன், பேரன் பரம்பரை பரம்பரையான விசுவாச வேலைக்காரனாக என்னென்ன அடைகிறார்கள், என்னென்ன இழக்கிறார்கள். அதில் மல்யுத்த வீரனான மாங்கே ராம் கம்பீரத்தை தனது பண பலத்தால் நுட்பமாக அடித்து ஒடுக்கும் லாலா, ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மாங்கே அந்த ஒடுக்குதலை பெண்கள் விவகாரத்தில் செலுத்தி எவ்வாறு தணித்து கொள்கிறான்.

கடைசியில் வயதாகி படுத்த படுக்கையாக கிடக்கும்போதும் அவன் மருமகளிடம் தகாத முறையில் நடந்து அவளால் கத்தி குத்துக்கும் ஆளாகி இறுதியில் இறக்கிறான். அதற்கு பின் அந்த மருமகள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்படுவதை பிற்பகுதியிலும் ஆசிரியர் அழகாக பொருத்தியிருக்கிறார்.

கதையை முழுதுமாக இரண்டாம் பகுதி தாங்கி பிடிக்கிறது. இந்நாவலில் எனக்கு பிடித்த பகுதியும் கூட, சுபத்ராவின் மொழிப்பெயர்ப்பில் அந்த வாக்கியங்கள் வழியாக கடத்தப்பட்டிருக்கும் நுட்பமான உணர்வுகள் தான் என்னால் இந்நாவலை முழுதாக வாசிக்கவைத்தது. அதில் கதையில் லாலா மோதி சந்தின் இரண்டாம் மகனாக வரும் திவான் சந்தின் மீது அவனது அண்ணி ஸ்வர்ணதாவுக்கு ஏற்படும் ஈர்ப்பை, “ அவன் மீது தனக்கும் இயல்பானதும் மறுக்கப்பட்டதுமான ஒரு வகை ஈர்ப்பு இருக்கிறதென்பதை ஒப்புக்கொண்டாள்”என்ற வரிகளின் வழியாக அழகாக நமக்குள் கடத்தியிருப்பார். இதே போல அவளது தோழி கமலாவிற்கும் அவளுக்குமிடையே இருக்கும் நட்பிற்கு பின் ஒளிந்திருக்கும் போட்டி பொறாமையை அகதிறப்பாக ஆசிரியர் காட்டியிருப்பதை அதன் உணர்வு மாறாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.

அதேபோல இளவயது விதவையான கமலாவின் உணர்வுகளை, திவான்சந்தின் மீது அவளுக்கு ஏற்படும் காதல் உணர்வை , தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிந்த அவள், ஒருபோதும் அடைய முயல தேவையில்லாத பொருளின் மீது தான் கொண்டிருக்கும் விருப்பம், அதை சுதந்திரமாக நேசிக்கும் வாய்ப்பை தருகிறது என காதலுக்கான வேறு ஒரு விளக்கத்தை ஆசிரியர் கூறியிருப்பார்.

காதலின் இருப்பு ஒரு பெண்ணிடம் ஏற்படுத்துகிற உணர்வுகளும், அது கட்டுப்படுத்தஇயலாமல் பெருகி, வெளிப்படுகிற விதம் கண்டிப்பாக ஆபத்தாய் முடியும் என்பதையும் வாசித்த போது, நமது காதல் உணர்வுடன் பொருத்தி பார்க்க முடியாமல் கடக்க முடியாது.

ஸ்வர்ணலதா, கமலா, சகுந்தலா, திவான்சந்த் இவர்கள் வாழ்வியலை சொல்லும் பகுதிகளில் நிறைய அகதிறப்புகளை நிகழ்த்திய ஆசிரியர், அதன் பின் துளஸிதாஸர் ராமாயணத்தின் மீது கொண்ட மோகத்தை சொல்லவே அதிக பக்கங்களை எடுத்து கொண்டார்.

அதன் பின் தொடர்ந்த கதை குறிப்பாக கடிதங்களில் எல்லாம் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன உணர்வு. ஆசிரியர் நிறைய பக்கங்களை எழுதாமல் தவிர்த்து சுருக்கியிருக்கலாம். அதிலும் லாலாவின் மரணபடுக்கையின் போது நடக்கும் ராம பாராயணம் எல்லாம் இரக்கமே இல்லாமல் பல பக்கங்கள் நீள்கிறது. மொழியின் உதவியால் தான் நாவலை முழுக்க வாசிக்க முடிந்தது.

நாவல்: பாதி இரவு கடந்து விட்டது

ஆசிரியர்: அமிதபா பக்‌ஷி

தமிழில் : சுபத்ரா

Like
Comment
Share

0