Monday 13 June 2022

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

 

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். ஆசிரியர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இவரின் தனிமையில் நூறு ஆண்டுகள் வாசிக்க முயற்சி செய்து பாதி கூட தாண்ட முடியவில்லை. அந்தளவு கடினமாக இருந்தது. இவர் எழுதிய இந்த நாவல் 95 பக்கங்களே கொண்ட குறுநாவல் என்பதால் வாசிப்போம் என்று ஆரம்பிக்க, பெயரில் ஆரம்பித்து, சூழல் வரை கதைக்குள் உட்புகுவது கடினமாக இருந்தது. அதற்கு காரணம் இந்த ஆசிரியரின் எழுத்து நடையா அல்லது மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கலா எதுவென்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

இது க்ளாஸிக் வகை என எதன் அடிப்படையில் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு பெண் திருமணத்திற்கு முன் கன்னி தன்மை இழந்துவிட்டதை, அவள் கணவன் முதலிரவில் அறிந்து கொண்டதால் அவளை அவள் தாய் வீட்டிற்கு அந்த நள்ளிரவே அனுப்பி வைக்க, அந்த பெண்ணை அவள் வீட்டில் உள்ளோர் யார் காரணம் எனக்கேட்க சந்தியாகோ நாஸர் என்கிறாள்.

தன் குடும்பத்திற்கு அவமானம் தேடி தந்த சந்தியாகோவை கொல்வதற்காக அப்பெண்ணின் இரட்டை சகோதரர்கள் அவனை கொலை செய்கிறார்கள். அவனை கொலை செய்யப்போவதை முன்பே பலர் அறிந்திருந்தும், அவன் சாவை தடுக்க முடியாமல் ஏதேதோ தற்செயல் நிகழ்வுகள் நடக்கிறது .

அவன் தான் கன்னித்தன்மை இழக்க காரணம் என்பதும், அவள் ஏன் அவன் பெயரை சொன்னால் என்பதும் தெரியவில்லை. அனைத்திற்கும் மேலாக எந்த கணவன் (அவனை அவள் திருமணம் ஆகும் வரை காதலிக்கவே இல்லை) அவளை தாய் வீட்டிற்கு திருமணமான அன்றே அனுப்பி வைக்கிறானோ, அவனை உயிருக்கு உயிராக காதலித்து 2000க்கு மேலான கடிதம் எழுதி அவனுடன் 27 வருடங்கள் கழித்து இணைகிறாள்.

நடப்பது நடந்தே தான் தீரும் என்ற எளிய விதியை கூற ஆசிரியர் ஏன் இப்படி ஒரு கடினமான எழுத்து நடையை மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. இதை மர்ம நாவல் என்றும் வகைப்படுத்த முடியவில்லை. எழுத்து நடையில் கையாளப்பட்டிருக்கும் உத்தி ஆசிரியரின் தனித்தன்மையாக கூட இருக்கலாம். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையை முற்றிலும் ஏறகட்ட தான் இந்நாவல் உதவியது.

No comments:

Post a Comment