Friday 29 July 2016

அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ

வரலாறுகள் எல்லாமே ரத்தததால் தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரத்தத்தை மதங்கள் தான் ரத்தக்காட்டேறியாக உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன். இத்தனை வரலாறுகள் பார்த்த பின்னும் ரத்தம் குடிக்கும் மதத்தின் தாகம் மட்டும் தணியவில்லை.

மதம் மனிதனை பிளவுப்படுத்தியது போல வேறேதுவும் பிளவுப்படுத்தவில்லை. . மதக்கலவரம் என்ற பெயரில் மனிதன் தன் மனதின் வக்கிரங்களை, குரூரங்களை நிறைவேற்றிக்கொள்கிறான். மதம் மனிதனின் மூளையை மழுங்கடித்துள்ளது என்பதை மாண்ட்டோவின் எழுத்துகள் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இவரின் கதைகளை வாசித்து முடிக்கும்போது, மனிதத்தை நேசிக்கும் மனது, மதத்தின் மீது  அசூயை காட்டுகிறது. 

சாதத் ஹசன் மண்ட்டோ இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பான காலகட்டத்தில் பிறந்தவர். உருது எழுத்தாளரான இவர் 1947-ஆம் ஆண்டு  இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மதம் ஆடிய கோரத்தாண்டவத்தினை மிகச் சரியாக எம் மதச்சார்புமின்றி நடுநிலையாக தமது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ. வேறு வழியின்றி பாகிஸ்தானில் வாழ வேண்டிய நிர்பந்தத்தால் கனத்த இதயத்தோடு பாகிஸ்தான் சென்றவர்.

எழுத்தாளர்களுடன் ஒட்டி பிறந்த வறுமையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இறுதி வரை வாழ்ந்தார். மண்டோவின் எழுத்து நடையில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும் அப்போது வெளி வந்த  மனித மனதின் இருண்ட பக்கங்களும், அதை தாங்கி கொள்ள முடியாமல் மனிதம் நேசிப்பவர்கள் இருபக்கமும்  இயலாமையுடன் அல்லாடியதையும், நல்ல பண்புகள் கொண்டவர்களையும் மதம் என்னும் டிராகுலா  கடித்து வைக்க அவர்களும் ரத்த காட்டேறிகளாக அலைந்ததை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

“திற” கதை ஆபாசம் என்று நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு வழக்குகளை சந்தித்ததாம். உண்மையை என்றுமே நமது சமூகத்தால் ஏற்க முடியாமல் தான் இருந்திருக்கிறது. பெண்ணின் மீதான அத்தனை துவேசங்களும், பாலியல் வக்கிரங்களும் கலவரங்களில் தான் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. எந்த வரலாற்று போரையும், இன மத கலவரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

மதக்கலவரத்தில் தன் குடும்பத்தை பறிகொடுக்கும் சிராஜூதின், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் மனிதர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமில் தன் மகளை தேடுகிறார். ஆனால் அவள் இல்லை . அப்போது அங்கிருக்கும் இளைஞர்கள் வண்டியில் சென்று தங்கள் மக்களை அழைத்து வர செல்கிறார்கள். அவர்களிடம் தன் மகளின் அடையாளத்தை கூறி தேட சொல்கிறார். கண்டிப்பாக தேடி அழைத்துவருகிறோம் என்று ஆறுதல் சொல்லி செல்லும் அவர்கள் வெற்றி பெற அல்லாவின் பெயரால் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை காண்கின்றனர் , அவள் இவர்களது வாகனத்தை கண்டவுடனேயே மிரண்டு ஓடுகிறார். அவரை சமாதனப்படுத்தி தந்தையை பற்றி சொல்லி அழைத்து வருகின்றனர். நம்பிக்கையடைந்து இவர்களுடன் வண்டியில் ஏறும் அந்த பெண் தனது கைகளால் மார்பகத்தை மூடியபடி அவஸ்தையுடன் பயணிக்கிறார். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவன் தனது கோட்டை கழட்டி கொடுக்கிறான்.

நாட்கள் நகர்கின்றன. சிராஜூதின் அங்கிருந்து புறப்படும் வண்டிகளிடம் தன் மகள் அடையாளத்தை சொல்ல தேட சொல்லி அவர்களை ஆசிர்வதித்து அனுப்புகிறார். அப்போது ஒரு பெண் மயக்கத்துடன் தண்டவாளம் அருகே கிடப்பதாக அகதிகள் தங்கி இருக்கும் மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வருகின்றனர். தன் மகள் என்பதை அடையாளம் கண்டு சிராஜூதின் அருகே ஓடி டாக்டரிடம் என் மகள் என்று கதறுகிறார்.

டாக்டர் பெண்ணின் நாடித்துடிப்பை பார்க்க அது அடங்கி இருக்கிறது என உதட்டை பிதுக்குகிறார். சிராஜூதினிடம் “திற” என்று ஜன்னலை பார்த்து கூறுகிறார். அப்போது இறந்த உடலின் கைகள் திற என்ற சத்தத்தை கேட்டவுடன் தன்னிச்சையாக தனது இடுப்பில் இருக்கும் சுடிதாரின் நாடாவை அவிழ்த்து துணியை கீழே இறக்க அவரது தந்தை டாக்டரிம் என் பொண்ணு உயிரோட தான் இருக்கா என கதறுகிறார்.

அந்த பெண்ணையே பார்த்து  கொண்டிருந்த டாக்டருக்கு வியர்த்து கொட்டுகிறது. இதை விட போரின் போது பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை சொல்ல முடியுமா? முஸ்லீம் முஸ்லீம் பெண்ணை கற்பழித்தான், இந்து முஸ்லீம் பெண்ணை கற்பழித்தான் என்று எல்லாம் நான் பார்க்கவில்லை.. இங்கு பெண் என்பவள் மதமாக, இனமாக எல்லாம் பார்க்கப்படவில்லை. ஆணின் வக்கிரத்துக்கும், குரூரத்துக்கும், வெறியாட்டத்துக்கும் மதங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, ஆண்டாண்டு காலமாக ஆண் பெண்களை சிதைப்பதை தான் பார்க்கிறேன்.

எந்த மதமும், எந்த இனமும் பெண்களை மதித்ததில்லை. மதிப்பதாக சொல்வது எல்லாம் அப்பட்டமான பொய்.. எந்த மதத்தில் பிற பெண்ணை சிதைக்க சொல்லி இருக்கிறது. ஆனால் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நடக்கும் எல்லா கலவரத்திலும் அதிகபட்ச வன்முறையை எதிர்கொள்வது பெண்கள் தான்.  இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் மதத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் பெண்கள் மதத்தை உதறி வெளியே வர வேண்டும், எல்லா மதமும் பெண்ணுக்கு அநீதி தான் இழைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது இந்த கதையை வாசித்து முடித்த போது. 

இந்து, முஸ்லீம், இரண்டு மதங்களுமே மதம் கொண்டு ஒன்றை ஒன்று வெட்டி சாய்த்ததை பதிவு செய்திருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் மாண்ட்டோ.

சஹாய் கதையில் ஆசிரியர் பதிந்திருக்கும் வரிகள் வைர வரிகள்

/// ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லீம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம்  பேர் இறந்து போனதில் துயரம் கொள்ள எதுவுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது கொல்லப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் ஒரே வகையை சேர்ந்தவர்கள் தான். ஒரு லட்சம் இந்துக்களை கொன்றதன் மூலம் இந்து மதத்தை அழித்துவிட்டதாக முஸ்லீம்களும், ஒரு லட்சம் முஸ்லீம்களை கொன்றதன் மூலம் இஸ்லாம் மதத்தை அழித்துவிட்டதாக இந்துக்களும் மகிழ்ச்சியில் நடனமாடலாம்.  உண்மையில் ஆயூதங்களால்  மதத்தை ஒழித்துவிடலாம் என நினைப்பவர்கள் முட்டாள்கள். ///////

”அவமானம்”  பாலியல் தொழிலாளியான சுகந்தி என்பவரின் கதை. வயிற்றுப்பிழைக்காக உடலை விற்றாலும், காதல்லுக்காக ஏங்கும் கனவு காணும் பெண். காமத்தையும், குரோதத்தையும் அகத்தில் சுமந்து கொண்டு அலையும் மனிதர்களை பற்றி பேசுகிறது கதை. தன் உடலை விற்று பிழைப்பவளிடம் சுரண்டி பிழைக்கும் பெண் தரகர், தைரியமாக பல வக்கிர வாடிக்கையாளர்களை சாமர்த்தியமாக எதிர்க்கொள்ளும் சுகந்தி, மனிதத்தையும் அன்பையும் தன்னை சுற்றிலும் படரவிட்டு தன் வாழ்வை பற்றி பெரிய பிரக்ஞை இல்லாமல் தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் ஆண்களை அவர்கள் சொல்வது பொய்யென்று தெரிந்தும் யாராவது தன்னை காதலித்துவிடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் காத்து கொண்டிருக்கிறாள்.

மாது என்கிறவன் வாடிக்கையாளராக அறிமுகமாகி காதலிக்கிறேன் என்கிறான். ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும் நீ இந்த தொழிலை விட்டுவிடு நான் ஊரிலிருந்து உனக்கு பணம் அனுப்புகிறேன் என்கிறான். சில முறை நீ இந்த தொழில் பார்த்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு செல்லும் அவன் பணம் அனுப்ப மாட்டான். மறுமுறை வரும் போது சுகந்தியிடமே ஏதாவது காரணம் சொல்லி பணம் வாங்கி செல்வான். ஆனால் பணம் எப்படி வந்தது என்று கேட்க மாட்டான். நெருங்கி இருக்கும் சமயங்களில் அவளை தனது உடைமை போல பேசுவான். ராம்லால் தரகர் ஏமாறாதே காசை பத்திரப்படுத்து என்று எச்சரிக்கிறான். ஆனாலும் இவள் மாதுவை காதலிக்கிறாள், அவன் காதலிக்கிறேன் என்று சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக

சுகந்தியின் வீட்டிற்குள் நுழைய மறுத்து , ஆனால் அதே நேரம் பெண்ணிடம் சுகம் அனுபவிக்க காரை எடுத்துக்கொண்டு தெரு முனையில் காத்திருக்கும் கண்ணிய மனிதர் சுகந்தியின் முகத்தை பார்த்தவுடன் நோ என்று சொல்லி அவளை நிராகரிக்கும் இடத்தில் தான் கதை அகத்துக்குள் பிரயாணிக்க ஆரம்பிக்கிறது.  அவளால் அந்த அவமானத்தை ஜீரணிக்க முடியவில்லை . அவமானத்தில் குமைகிறாள். கண்ணாடியில் வந்து தன்னை பார்க்கிறாள். எவ்வளவோ சமாதனப்படுத்தி தனக்குள் நடக்கும் போரட்டத்தில் துவள்கிறாள்.

அப்போது மாது வருகிறான் அவசரமாக ஏதோ பணத்தேவை என்று. ஆணின் சுயநலம் மனதையும் , புத்தியையும் ஒரு சேர தாக்க அப்போது சுகந்தி அவனை கேள்விகளால் குதறி எறிந்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள். தன்னை சுரண்டும் மொத்த ஆண் வர்க்கத்தையும் உதறி நிராகரிக்கிறாள் மாதுவை விரட்டுவதன் வாயிலாக என்பதாக தான் பார்க்கிறேன். இறுதியில் அவள் வீட்டில் இருக்கும் சொறிநாயுடன்  நிம்மதியாக கட்டிலில் உறங்குகிறாள்.. கதையின் மையமே அவளை நிராகரிக்கும் ஒரு ஆண் மூலம் அவள் கனவுலகத்தில் இருந்து யதார்த்தத்துக்கு வருவது தான். மிக கடுமையான அவமானம் மனிதனை என்ன செய்யும் என்பதாகவும் பார்க்கிறேன்.

சில்லிட்டுப் போன சதைப்பிண்டம் ஐஷர் சிங், தனது மனைவி குல்வந்த கெளர்ரை சில நாட்கள் கழித்து சந்திக்க வருகிறான். அவனிடம் மனைவி இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தாய், கலவரத்தில் நீயும் கலந்து கொண்டாயா என்று வார்த்தைகளால் துளைக்கிறாள். இல்லை என மறுக்கும் அவன் மனைவியுடன் உறவு கொள்ள அவளை முன்விளையாட்டுகளால் மகிழ்வித்து அவள் கேட்கும் கேள்வியில் இருந்து திசை திருப்புகிறான். ஆனாலும் அவள் மனதில் அந்த கேள்வி குடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் முன்விளையாட்டுகளால் குல்வந்த்தை உச்சத்துக்கு கொண்டு சென்று அவன் இயங்க முற்படும் போது முடியாமல் துவளுகிறான்.

இருவருக்கிடையே இதுவரை அப்படி நடந்ததில்லை ஆதலால் வேறு யாரோ ஒருவளுடன் ஐஷர் உறவு கொண்டு தன்னிடம் இருந்து மறைக்கிறான் என அவனை உலுக்கி எடுக்கிறாள் குல்வந்த்... யார் அவள் சொல் சொல் என அவனை கிர்வானி என்ற ஆயூதத்தால் ரத்தம் வர காயப்படுத்துகிறாள். அவைகளை மெளனமாக ஏற்கும் அவன் உனக்கு என் மீது இரக்கம் வரவில்லையா, உண்மையை சொல்லிவிடுகிறேன் என ஆரம்பிக்கிறான் .

கலவரத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றில் ஆறு பேர் இருந்தார்கள் அவர்களில் ஐந்து பேரை  இந்த கிர்மானியால் தான் வெட்டிக்கொன்றேன். ஆனால் அதில் ஒரு பெண் இருந்தாள். அவளை மட்டும் தோளில் தூக்கு போட்டுக்கொண்டு புதர் பக்கம் வந்து அவளை இறக்கினேன். முதலில் முன்விளையாட்டுகளுடன் ஆரம்பிக்க நினைத்த நான் அதன் பின் அலட்சியமாக என்று சொல்ல வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினான். கேட்டுக்கொண்டிருந்த குல்வந்தின் தசைகள் தீயாய எரிய அவனை எரிப்பது போல பார்க்கிறாள். மேலே சொல்ல முடியாத ஐஷர் அவள் இறந்து கிடந்தாள். சில்லிட்டு போன சதைப்பிண்டத்தை தவிர வேறு ஒன்றுமில்லை என்று சொல்லி முடிக்கும் போது ஐஷர் கையும் சில்லிட்டு போகிறது.

நான் சொல்லியிருப்பது தொகுப்பில் உள்ள மனதை உலுக்கி எடுத்த மூன்று சிறுகதைகளை மட்டுமே ..மிக முக்கிய கதையான சஹாய் பற்றி சொல்வது கடினம். . மனிதனின் தெய்வ குணத்தை விட மிருக குணத்தை மதம் எவ்வாறு தூண்டிவிடுகிறது என்பதை அலசி இருக்கும் ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது உணர முடியும். இந்து முஸ்லீம் என்ற பிரிவினை இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் மனதில் கலவரம் என்ன மாதிரி விஷத்தை ஊற்றுகிறது என்பதை ஜூகல் என்பவன் மூலமும் முஸ்லீம்களால் இறந்து போகும் ஒரு இந்து தரகர் மூலம் ஆன்ம விழிப்பு பெறும் மும்தாஜ் மூலமும் சொல்லி ஜூகல் இறுதியில் அந்த தரகரின் ஆன்மா தனக்கும் வேண்டும் என்பதாக முடியும்..

மண்ட்டோ உங்கள் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். முகத்திலறையும் உண்மைகளை, நமது நல்லவர்கள் பிம்பத்துக்குள் வைத்திருக்கிற பாசி படிந்த மத நம்பிக்கையை நிர்தட்சண்யமாக கேள்விகள் கேட்கிறார். முக்காடிட்டு ஒளித்து வைத்திருக்கிற இருண்ட பக்கத்தை எழுத்தின் மூலம் போகிற போக்கில் விலக்கி வெளிச்சம் பாய்ச்சி மனித அகத்தை படம் பிடித்து காட்டுகிறார்.

பாரதி புத்தகாலயம் வெளியீடான இதை தமிழில் மொழிப்பெயர்த்திருப்பவர் ராமானுஜம். 

Thursday 28 July 2016

Black walls - சீன கதை


Black Walls - Liu Xin Wu

கறுப்பு சுவர்கள் - தமிழில் - தி. இரா. மீனா

கோடைக்காலத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு ஒண்டு குடித்தனக்காரர் செய்யும் செயல் மற்ற குடித்தனக்காரர்கள் மனதில் என்ன விதமான ஊகங்களையும் பயத்தையும் கிளப்பிவிடுகிறது என்பதையும், ஒரு சின்ன சம்பவத்தை அழகான கதையாக தொகுத்து தரமுடியும் என்பதையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஜியோ என்கிற முப்பது வயதிருக்கும் மனிதர் தனியாக பல குடித்தினங்கள் வசிக்கும் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் , அநாவசியமாக யாருடனும் பேசமாட்டார். ஆனால் அதே நேரம் எதிர்படும் எவர் கேட்கும் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் சொல்லுவார். அங்கிருந்த மற்றி குடித்தனக்காரர்களுக்கு ஜியோவின் மீது விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை என்றே பழகி வருகின்றனர்.

நாட்கள் இவ்வாறாக கடக்க ஒரு நாள் காலை அவர் செய்யும் ஒரு செயலால் அந்த வீட்டின் அத்தனை குடித்தனக்காரர்களும் பரபரப்பாகிறார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் வெளியே கிளம்பிவிடுகிறார்கள். அவர்கள் வெளியே செல்வதையும், அங்கிருப்பவர்களின் நிலையையும் ஆசிரியர் சொல்லும் போது சீனாவின் மத்திய தர வர்கத்துக்கும், இந்திய மத்திய தர வர்க்கத்துக்கும் அதிக பேதமில்லை என்பதை உணர முடிகிறது.

ஜியோ தனது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க தொடங்குகிறார். அதை காணும் குடித்தினக்கரார்கள் அதிர்ச்சியும் குழப்பமுமாக அந்த வீட்டில் இருக்கும்  ஜாவோ என்கிற அரசாங்கப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற ஒருவரின் அறையில் நிறைய குடித்தனக்காரர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
ஜாவோவிடம் ஜியோ தனது அறைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். ஜாவோவுக்கு குழப்பமாகவும் அதே நேரம் அனைவரும் தனது வீடு தேடி வந்தது சந்தோசமாகவும் இருக்கிறது. ஏனென்றால் அவர் பணியில் இருந்தபோது அவரை தேடி நிறைய பேர் வந்து புதிய விஷயங்களை சொல்லிவிட்டு போவார்கள். அவர் மனைவியும் ஒரு கமிட்டியில் தலைவியாக இருந்து பரபரப்பாக செயல்பட்டவள். அதனால் இருவருக்கும் இந்த பரபரப்பு பிடித்து போகிறது.

ஆம் கறுப்பு பெயிண்ட் அடிப்பது சரியில்லை என ஜாவோ சொல்ல அவரது மனைவி ஆமாம் என ஆமோதிக்கிறார்.

ஜாவோ வந்தவர்களை அறையில் உட்கார சொன்னதுடன் போலீசுக்கு சொல்லலாம் என்கிறார்.

அவர் பதவியில் இருந்த போது என்றால் இதை ஆலோசனையாக சொல்லாமல் முடிவாக செய்திருப்பார் .ஆனால் மாறிவிட்ட அரசியல் சூழலால் தற்போது போலீஸ் நிலையம் போவதில் அவருக்கு குழப்பமிருக்கிறது.

உடனே ஒருவர் இதை போலீசுக்கு சொல்லகூடாது என்கிறார். ஒருவர் தன்னுடைய அறைக்கு பெயிண்ட் அடிப்பதில் தலையிட நமக்கு என்ன உரிமை என்கிறார்.

அவரை முறைத்து பார்க்கிறார்கள் ஜாவோ குடும்பத்தினர். சாதாரணத் தையல்காரன்!சில வருடங்களுக்கு  முன்பு வாயே திறக்காதவன், எந்த எதிர்ப் பையும் காட்டாதவன் இப்போது எதிர்த்துப் பேசுகிறான். வீட்டிலேயே சிறு வியாபாரம் செய்யும் வசதி வந்திருக்கிறது.கலர் டீவி வீட்டில் இருக்கிறது அதனால் தான் குரல் ஏறுகிறது என்று இருவரும் நினைத்தனர்.. 

ஆசிரியர் ஆட்சி மாற்றத்தால் தொழிலாளர்களின் வசதிகள் கூடியிருப்பதை இந்த கதையின் உள்ளீடாக சொல்கிறார். சீனாவின் அரசியல் மாற்றங்களை கதை நெடுகிலும் பிரதிபலிக்கிறது.

பின்னர் ஜியோவுக்கு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது அதனால் தான் எவரும் செய்ய துணியாத ஒரு செயலை செய்கிறார் என்கிறார்கள். இதற்கிடையே ஒருவர் போய் அவரிடம் கேட்டு வரலாம் என்கிறார்கள். ஆனால் போய் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. இறுதியில் ஜாவோவே சென்று கேட்கிறார். அதற்கு ஜியோ வேலையை முடித்துவிட்டு வந்து பதில் சொல்கிறேன் என்கிறார். இதனால் ஜாவோ தொங்கிய முகத்துடன் தனது அறைக்கு திரும்புகிறார்.

கறுப்பு சுவர் அங்கிருக்கும் அத்தனை குடித்தனக்காரர்களையும் அமைதி இழக்க செய்கிறது. கறுப்பை அடித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், மன அழுத்தத்துக்கு உள்ளானவர் என்று பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் மன உளைச்சலுக்கும் மனஅழுத்தத்துக்கும் ஆளாகிறார்களே தவிர ஜியோ தனது வேலையை ரசித்து செய்கிறார் என்பதை தான் ஆசிரியர் சொல்ல வருவதாக பார்க்கிறேன்.

அப்போது ஜாவோவின் பேரன் லிட்டில் பட்டன் ஜியோவை பற்றி மிக அருமையான மனிதர், என்றும் அவர் என்னவெல்லாம் பேசினார் என்றும் விளக்கிவிட்டு, அங்கிருந்தவர்களிடம் ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிக்கிறார். நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.பிறகு அதைப் பற்றி நீங்கள் எல்லோரும் ஏன் பேச வேண்டும்?” சிரித்துக் கொண்டே அப்பாவித்தனமாகக் கேட்க எல்லாரும் அமைதியாகிறார்கள்…
எல்லோரும் செயல்களை செய்யாமல் ஒரு மனிதன் தனித்தியங்க தொடங்கினாலே அவனை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதாகவும் கொள்ளலாம்.
சிறுவர்களுக்கு தெரியும், அவர்கள் சாதாரணமாக கடக்கும் ஒரு விஷயத்தை பெரியவர்கள் எப்படி பூதாகரமாக்குகிறார்கள் என்பதாகவும் கொள்ளலாம்.
வெறும் காலையில் ஒரு இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களுக்குள் அரசியல், சராசரி மக்களின் மனநிலை என எல்லாவற்றையும் அழகாக சொல்லியிருக்கும் விதம் . இந்த கதையை வாசிக்க வாசிக்க ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கோணம் என பல நுணுக்கங்கள் புரிபட தொடங்குகிறது………




Old man at the bridge.

ஆங்கில மூலக் கதை: எர்னஸ்ட் ஹெமிங்வே Old man at the bridge.


பாலத்தில் ஒரு கிழவன் - தமிழாக்கம்: எம்.நரேந்திரன்


போரின் காரணமாக அனைத்து சொத்துகளையும் தங்கள் சொந்த மண்ணில் விட்டுவிட்டு வெளியேறும் சாமானியர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பெரும் செல்வந்தர்கள் கூட நாடோடி போல தங்கள் கைகளில் எடுத்து செல்ல முடிவதை எடுத்துகொண்டு மிச்சத்தை ஊரிலேயே விட்டு செல்லவேண்டிய நிர்பந்தத்தை போர்கள் ஏற்படுத்துவது பற்றிய உணர்வு வலி மிகுந்தது.

எழுபத்திஆறு வயது முதியவர் ஒருவர் தொங்கு பாலத்தை ஒட்டிய சாலையோரத்தில் தூசி படிந்த ஆடைகளோடு அமர்ந்திருக்கிறார். பாலத்தின் முடிவு வரை சென்று எதிரிகள் எவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறார்கள் என்று பார்த்து வர செல்லும் ஒரு அதிகாரி மேடான சாலையை கடக்க, கோவேறு கழுதைகளுடன் திணறும் மக்களையும்,  அவர்களுக்கு உதவும் இராணுவ வீரர்களை பார்த்தபடி அந்த கிழவரையும் கடந்து பாலத்தின் மறு முனை சென்று பார்த்து வருகிறார்.

அனைவரும் அடி மேல் அடி எடுத்து நகர்ந்து செல்ல கிழவர் மட்டும் உட்கார்ந்த இடத்தில் இருந்து அசையாமல் தூரத்தில் வெறித்து பார்த்தபடி இருக்கிறார். அவரை நெருங்கும் அதிகாரி எங்கிருந்து வருகிறாய் என்கிறார். கிழவர் சான் கார்லோஸில் இருந்து வருவதாக கூறி புன்னகைக்கிறார்.  பின் என்னிடம் இரண்டு ஆடுகள், ஒரு பூனை மற்றும் நான்கு ஜோடி புறாக்கள் இருந்தன அவற்றை பராமரித்து அதனுடன் இருந்து வந்தேன். ஆனால் அவைகளை விட்டுவிட்டு என் நகரத்தை விட்டு வந்துவிட்டேன் . என் நகரத்தில் இருந்து வெளியேறிய கடைசி ஆள் நான் தான் என்கிறார்.

அவைகளை அங்கேயேவா விட்டு வந்தாய். ஏன் என்கிறார்.

அதிகாரிகளால் அப்படி நிர்பந்திக்கப்பட்டேன் என்கிறார்.

பின் அதிகாரி , உனக்கு குடும்பம் ஏதும் இல்லையா என கேட்க, கிழவர் தான் வளர்த்த விலங்குகள் மட்டும் தான் என்கிறார். பூனைக்கு ஒன்றும் நேராது ஆனால் மற்றவை தான் என்று பெருமூச்சுவிடுகிறார்.

அதிகாரி எத்தகைய அரசியல் சார்புடையவன் என கேட்க எந்த அரசியல் கோட்பாட்டையும் சேராதவன் நான் என்கிறார். ஆனால் பனிரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்திருப்பதை சொல்கிறார். இனி நடக்க முடியாது என்கிறார்.

இந்த ஒரு வரியில் கதையில் மொத்த உணர்வும் சொல்லப்பட்டுவிடுவதாக தான் உணர்கிறேன். எந்த அரசியல் கோட்பாடும் இல்லாதவர்கள் கூட அரசியல் கோட்பாடுகள் காரணமாக யாரோ சண்டையிட, அதில் சம்மந்தமே இல்லாதவர்கள் தங்கள் அமைதியை, நிம்மதியை இழந்து அநாதையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை சொல்வதாக தான் ஆசிரியர் உணர்த்துகிறார்.

அதிகாரி நின்று நிதானிக்க இது இடமில்லை , முடிந்தால் வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு செல்லுங்கள் என்கிறார்.

இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துவிட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டிகளெல்லாம் எங்கே போகின்றன என கேட்கிறார்.

பார்சிலோனா என்கிறார் அதிகாரி. அங்கே எனக்கு யாரையும் தெரியாது இருந்தாலும் நன்றி என அதிகாரியிடம் கூறுகிறார். // இந்த வரிகள் சுமந்திருக்கும் வலி நுட்பமானதும் கொடுமையானதும் கூட.

போரினால் யாரும் எதுவும் தெரியாத ஊருக்கு அகதிகளாக குடிபெயரும் வலியை கிழவர் மூலம் ஒட்டுமொத்தமாக வார்த்தைகளே இல்லாமல் உணர வைத்துவிடுகிறார். 

மீண்டும் வெறித்த பார்வையுடன் தான் விட்டு வந்த விலங்குகளுக்காக கவலைப்படுகிறார்.  அதிகாரி எழுந்து கிளம்ப சொல்கிறான். எழுந்து கிளம்ப முயற்சிக்க முடியாமல் கிழவர் கீழே உட்காருகிறார். மெல்ல விலங்குகளை பற்றி முணுமுணுக்கிறார்.

அந்த கிழவருக்காக செய்ய ஒன்றுமில்லை என்பதாக கதை முடிகிறது.

கதை முடியும்போது அந்த அப்பாவி கிழவனின்  உணர்வுக்குள் ஆசிரியர் நம்மை கடத்தியிருப்பார்.



யானை வேட்டை

An elephant shooting - George orwell -

தமிழில் யானை வேட்டை 



இந்த கதை உணர்த்தும் நுட்பமான உணர்வுகள் பல. ஜார்ஜ் ஆர்வெல் ஆட்சி பீடத்தில் இருந்த ஐரோப்பிய மனநிலையயும், அவர்களுக்கு கீழ் அடிமைப்பட்டு கிடந்தவர்களின் மனநிலையும் ஒப்பு நோக்கி இருக்கும் விதமும், அதில் மனசாட்சியுள்ள அதிகாரிகளின் நிலைமையும் நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு காவல் துறை அதிகாரியாக வருகிறார் ஒரு ஆங்கிலேயர். பர்மியர்களின் ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வை எதிர்கொள்ளும் அவர் உண்மையில் ஆங்கிலேயர்களை வெறுக்கும் ஆங்கிலேயராக இருந்தபோதும் பர்மியர்களை பொறுத்தவரை அவர் ஒரு ஐரோப்பியர் என்பதே வெறுப்பதற்கு போதமானதாக இருக்கிறது. பர்மியர்கள் கூட்டமாக கூடும் இடங்களில் எல்லாம் ஐரோப்பியர்களை கேலி செய்வதை ஒன்றையே செய்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி நினைக்கிறார். அவர்களின் செயல்களும் அவ்வாறாக தான் உள்ளது. ஆனால் ஆங்கிலேயர்களை கேலி செய்வதை தாண்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் அளவு கூட தைரியமில்லாத கோழைகளாக தான் பர்மியர்கள் இருப்பதாக நினைக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக இருந்து ஆங்கிலேயரின் அத்தனை நாற்றங்களை அருகில் இருந்து பார்த்ததால் , பல நாட்டு கைதிகளின் பயம் அப்பிய முகங்கள் அவரின் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை தந்தாலும் அவரால் தெளிவான முடிவெடுக்க இயலாமல் அந்த வேலையில் இருந்தும் விடுதலை பெற்று செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணி புரிகிறார். பிரிட்டிஷ் அரசின் ஏகாப்திய கொடுங்கோல் ஆட்சியின் மீது அளவு கடந்த வெறுப்பு அதே நேரம் மகிழ்ச்சி என்பதும் அந்த கொடுங்கோல் மூலம் தான் கிடைப்பதாக என்று இருவேறு மனநிலையால் அலைக்கழிக்கப்படுகிறார்.

இப்படி தெளிவில்லாத சிந்தனையில் காலம் தள்ளிய காவல்துறை அதிகாரிக்கு மதம் பிடித்த யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதாக தகவல் வருகிறது. யானையை தேடி புறப்படுகிறார் தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியுடன். யானை வயலில் இருப்பதாக சொல்ல அதிகாரி அங்கு செல்கிறார். மக்கள் கூட்டம் துப்பாக்கியை பார்த்தவுடன் பெரும் ஆராவரத்துடன் அவரை பின் தொடர்கிறது. உண்மையில் அதிகாரிக்கு யானையை கொல்லும் எண்ணமில்லை பாதுகாப்புக்காக தான் துப்பாக்கியை எடுத்து செல்கிறார்.  யானை இருக்குமிடத்தையறிந்து அங்கே சென்று யானைக்கு சில அடி தூரம் தள்ளி நிற்கிறார்.

யானையை பார்த்தவுடனே அதை சுடக்கூடாது என முடிவு செய்கிறார். அது அமைதியாக புல்லை மேய்ந்து கொண்டிருக்க, இன்னும் சற்று நேரம் கண்காணித்துவிட்டு  பாகன் வந்து பிடித்துகொள்ளட்டும் என்று திரும்பிவிடலாம் என நினைக்கிறார். மீண்டும் யானையை பார்க்க அது அமைதியாக இருக்கிறது. இவர் திரும்ப நினைக்க கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேருக்கும் குறையாத பர்மியர்கள் இவர் யானை சுடப்போவதை வேடிக்கையை காணும் உற்சாகத்துடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரியை பிடிக்காதபோதும் அவர் கையில் இருக்கும் துப்பாக்கியை மந்திரகோலாய் நினைத்து அதை கையில் வைத்திருக்கும் அதிகாரியை நாயகனாய் பார்க்கிறார்கள் என்பது அதிகாரிக்கு புரிகிறது.

இப்போது யானையை சுடவேண்டி அந்த இரண்டாயிரம் பேரின் ஆசைகளும் அவரை அழுத்துவதை உணர்கிறார். ”///// ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன். அவன் அப்போது போலியாகிறான், பயனற்ற ஒரு பொம்மை ஆகிறான், ‘சாகிபு’ என்கிற ஒரு சம்பிரதாய உருவத்தை ஏற்றுக்கொள்கிறான். பின் தன் வாழ்நாள் முழுவதும் உள்ளூர் வாசிகளை திருப்திப்படுத்துவதிலேயும், கவருவதிலேயும் அவன் செலவிடுகிறான். எந்தவொரு நெருக்கடியிலும் அவன் உள்ளூர்க்காரர்கள் சொல்லுவதைச் செய்ய வேண்டும். அவன் ஒரு முகமூடி அணிந்துவிட்டான். அவன் முகமும் அதற்குப் பொருத்தமாக வளைந்து கொடுக்கிறது. நான் யானையை சுட்டே தீர வேண்டும்! ////////

///இத்தனை தூரம் வந்த பின், கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு, சுற்றி இரண்டாயிரம் பேர் வேடிக்கை பார்க்க, ஒன்றுமே செய்யாமல் பின் வாங்கித் திரும்பினால்/// இந்த கூட்டம் சிரித்தே கொன்றுவிடும் என நினைக்கிறார். ஆனாலும் ஏனோ அதிகாரியின் மனம் யானையை சுடுவதை ஏற்க முடியாமல் தடுமாறுகிறார். பல்வேறு யோசனைகளுக்கும் மனப்போராட்டத்துக்கும்  பிறகு யானையை சுட முடிவெடுக்கிறார். யானையை எப்படி சுட்டால் உடனே உயிர் பிரியும் என்பது தெரியாமல் உத்தேசமாக சுடுகிறார். இதனால் யானை சாகாமல் மரண வலியில் போராடுகிறது.

ஒரு பூதாகரமான மிருகம் அவர் கண் முன்னால் நகரவும் தெம்பில்லாமல், சாகவும் சுரத்தில்லாமல், சுருண்டு கிடப்பதையும், அதன் மரண பிளறலும் பார்த்து அதிகாரியின் மனம் நடுங்குகிறது. உடன் தன் துப்பாக்கியால் பல முறை சுடுகிறார். ஆனாலும் யானை இறக்காமல் அதிகாரியை சித்ரவதை செய்கிறது. என்ன செய்ய என்று தெரியாமல் அதிகாரி கிளம்பி விடுகிறார். அரைமணி நேரம் போராடி யானை உயிரை விடுகிறது. ஆனால் முழுதும் இறப்பதற்குள்ளேயே அதன் எலும்பு வரை பர்மியர்கள் மழித்துவிடுகிறார்கள்.

யானையின் சொந்தகாரனான இந்தியன் ஆவேசமாக இருந்தபோதும் அவனால் ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆனால் ஐரோப்பியர்கள் இந்த யானை சுட்டதில் இருவேறு கருத்துகளை வைத்திருந்தார்கள், சுட்டது சரி  என்றும், ஒரு கூலித்தொழிலாளியை யானை கொன்றது என்பதற்காக யானையை சுட்டது அசிங்கம் என்றும், அந்த தொழிலாளியை விட யானை அதிக மதிப்புடையது என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் யானையை சுட்டது தான் பர்மியர்கள் முன் முட்டாளாகிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக எனும் உண்மை தான் யாருக்கும் தெரியாமல் போய்விட்டதாக நினைக்கிறார் அதிகாரி.





Sunday 24 July 2016

the monkey's paw - W.W. Jacobs

The Monkey’s paw - W.W.Jacobs எழுதியது http://gaslight.mtroyal.ab.ca/mnkyspaw.htm


வொய்ட் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். தந்தையான வொய்ட்டும், அவரது மகனான ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளையாட்டில் மகன் தந்தையை தோற்கடிக்கிறான். தாயும் மகனும் தந்தையை கிண்டல் செய்ய அப்போது விருந்தினராக வொய்ட்டின் ராணுவ நண்பர் மோரிஸ் வீட்டுக்கு வருகிறார்.

மோரிஸ் பல நாடுகள் சுற்றிவருபவர் ஆதலால் அவரது அனுபங்களை கேட்பதில் வொயிட் குடும்பம் ஆர்வமாக இருக்கும். மோரிஸிடம் வொயிட் ஒருமுறை இந்தியாவை சுற்றி பார்த்து வரவேண்டும் என்று கூறுகிறார்.

மோரிஸ் வேண்டாம் என்கிறார்..

ஆனால் வொயிட் அங்கிருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் கேள்விப்பட்டதில் இருந்து  பார்த்தே ஆகவேண்டும் போல உள்ளது. அன்று ஒரு நாள் குரங்கின் பாதம் என்று ஏதோ சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிட்டாயே அதை பற்றி சொல்லு என்கிறார்.

மோரிஸ் உடனே அதை பற்றி தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை விடு என அவசரமாக மறுக்கிறார்..

குரங்கின் பாதமா , வித்தியாசமா இருக்கே என ஆச்சரியத்துடன் வொயிட்டின் மனைவி கேட்க அது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி என்று வைத்துகொள்ளுங்கள் என்று பேச்சை மாற்ற தேநீர் கேட்கிறார்..

ஆனால் கண்கட்டு வித்தை என்றவுடன் அதீத ஆர்வமான வொயிட்டின் குடும்பம் அவரிடம் மேலும் விவரம் கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.

மறுக்க முடியாத மோரிஸ் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாடம் செய்யப்பட்ட  குரங்கின் பாதத்தை எடுத்து வொயிட்டின் மகன் ஹெர்பர்ட்டிடம் கொடுக்கிறார். அதை பார்த்து வொயிட்டின் மனைவி பயந்து பின் வாங்குகிறார்..

அந்த பாதத்தை பார்த்து வொயிட் இதில் என்ன சிறப்பு என்கிறார்.

இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. ஒரு சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் விதிப்படி தான் அமைகிறது, அமையவேண்டும். விதியை மீறி விளையாட நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று உலகுக்கு சொல்ல நினைத்தார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கினார் என்கிறார் மோரிஸ்.

அப்படி என்ன சாபம் என்கிறான் ஹெர்பர்ட்

இந்த பாதம் மூன்று வரங்களை மூன்று பேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்ல்து என்கிறார் மோரிஸ்.

அப்படின்னா நீங்க ஏதாவது கேட்டிருக்கீங்களா கிடைத்ததா என்கிறார் வொயிட்.
கேட்டேன் கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் இது வேண்டாம் என்று என்னிடம் கொடுத்துவிட்டார் என்கிறார்.

நீங்கள் இதில் வரம் ஏதும் கேட்க போகிறீர்களா? எதற்காக வைத்திருக்கிறீர்கள் என் வொயிட் கேட்க . ஒரு நினைவுக்காக என்று சொல்லிய மோரிஸ் சட்டென அதை தூக்கி கணப்படுப்ப அருகில் எரிகிறார். சட்டென பாய்ந்து அதை எடுக்கிறார் வொயிட்.

வேண்டாம் அதை எறியுங்கள் என இரைஞ்சுகிறார் மோரிஸ். ஆனால் உனக்கு தேவையில்லை என்றால் நான் எடுத்து கொள்கிறேன் என்கிறார் வொயிட். வேண்டாம் நான் சொல்வதை கேளுங்கள் , அந்த வரங்களின் மூலம் வரும் விளைவுகள் கொடுமையாக இருக்கும் என்று எவ்வளவோ மன்றாடியும் வொயிட் செவிமடுக்க மறுக்கிறார்..

எப்படி வரம் கேட்க வேண்டும் அந்த பாதத்திடம் என கேட்க மோரிஸ் வழியை சொல்கிறார்.
மோரிஸ் விடைப்பெற்று சென்ற பின் அந்த பாதத்தை வைத்து குடும்பத்தினர் என்ன வரம் கேட்பது என்று வேடிக்கையாக பேசுகின்றனர். பிறகு இறுதியாக இருநூறு பவுண்ட் பணம் கேட்கலாம் என முடிவு செய்து அதே போல வரம் கேட்கின்றனர்.

அப்போது வொயிட்டின் கையை யாரோ முறுக்குவது போலவும், அந்த பாதம் நகர்வது போலவும் தோன்ற வொயிட் அதை குடும்பத்தாரிடம் கூறுகிறார். ஆனால் அது பிரமை என்று கூறுகின்றனர். பின்னர் அனைவரும் உறங்க சென்றுவிடுகின்றனர்.

மறுநாள் காலை மகன் தொழிற்சாலை செல்கிறான். பணம் வந்தால் எடுத்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கிண்டல் செய்துவிட்டு. அவன் சென்ற சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து வீட்டு கதவை தட்டுகிறார். வொயிட் கதவை திறக்க அப்போது அவர்கள் மகன் தொழிற்சாலையில் இயந்திரங்களுக்கிடையில் மாட்டி இறந்துவிட்டதை சொல்கிறார். வருத்தம் தெரிவிக்கும் நிறுவனம் நஷ்ட ஈடு தருவதாக சொல்கிறது. வொயிட்டுக்கு ஏதோ உறைக்க எவ்வளவு என்கிறார். இருநூறு பவுண்ட் என்கிறார் ஊழியர். இதை கேட்டு அதிர்ந்து போகின்றனர் அந்த தம்பதியர்.

மகன் இறந்து பத்து நாட்களுக்கு மேலான பின்னும் அந்த துக்கத்திலிருந்து  வொயிட்டின் மனைவி வெளிவர முடியாமல் போராட அவளுக்கு திடீரென குரங்கு பாதத்திடம் தன் மகனை திருப்பி தரும் வரம் கேட்கலாம் என்கிறாள். மூன்றில் ஒன்று தானே கேட்டிருக்கிறோம் இன்னும் இரண்டு மீதம் இருக்கிறது அல்லவா என்கிறாள். ஆனால் கணவர் விபரீத விளைவு வரும் என மறுக்கிறார். அதை காதில் வாங்காத அவள் மனைவி அந்த பாதத்தை கையிலெடுத்து வரம் கேட்கிறாள்.

பின்னர் படுக்கைக்கு சென்று படுத்துவிட நள்ளிரவில் இவர்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகிறது. மனைவியை கதவை திறக்க வேண்டாமென தடுக்கிறார். ஆனால் நம் பிள்ளை தான் வந்திருப்பான் அவனை கண்டு நாமே பயப்படுவதா என அவரை தள்ளிவிட்டு கதவை திறக்க படுக்கையறையில் இருந்து வாசல் நோக்கி ஓடுகிறாள். அவளை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த வொயிட் குரங்கின் பாதத்தை கையிலெடுத்து அவசரம் அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்கிறார். கதவு தட்டப்படுவது நின்றுவிடுகிறது……..

Wednesday 13 July 2016

மேடம் ப்வாரி - குஸ்தாவ் பிளாபெர்ட்


ப்ரெஞ்சு மொழியில் குஸ்தாவ் பிளாபெர்ட் எழுதிய மேடம்பவாரி (Gustave Flaubert - Madame Bovary) பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் எனினும் எக்காலத்துக்குமான பெண்ணின் உணர்வுகளை பேசுகிறது. இந்நூல் வெளியாகி கலாச்சார காவலர்களால்  ஏக சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி அவர்கள் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீதி விசாரணை எல்லாம் நடைபெற்று வெளிவந்த நூல்.

இந்த நாவல் களம் ப்ரெஞ்ச் என்றாலும், உலகில் இருக்கும் அனைத்து பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகிறது. ஒரளவு இன்று பெண்கள் வேலைக்கு சென்று தங்களின் தனிமையிலிருந்து வெறுமையிலிருந்தும் மீள கற்று கொள்ள தொடங்கிவிட்டார்கள் எனும்போதும் இன்றும் நீளும் பொழுதுகளை செய்வதறியாது பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கிக்கொண்டு மன நோய்மையுடன் காலம் கழிக்கும் பெண்கள் அநேகம். ஆனால் வெளியுலகிற்கு பெண்களின் உணர்வுகள் முழுமையாக தெரிவிக்க முடிவதுமில்லை, தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்பதான வாழ்க்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 


சார்லஸ் பவாரி ஒரு மருத்துவர், தாயின் வற்புறுத்தல் காரணமாக பணத்துக்காக தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். மருத்துவம் பார்க்க கிராமத்தில் ஒரு வீட்டுக்கு செல்ல அந்த வீட்டு பெண் எம்மா மீது காதல் கொள்கிறான்.  சில காலத்தில் மனைவி இறந்துவிட எம்மாவை திருமணம் செய்து கொள்கிறான்.


எம்மா பள்ளிகாலத்திலிருந்து அதிக காதல் புத்தகங்களை வாசித்து தனது வாழ்க்கை குறித்தும் காதல், திருமண வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கனவுகளை வளர்த்து கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறாள். சார்லஸின் சராசரித்தனம் அவளுக்கு திருமணமான சில நாட்களிலேயே சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அவளின் கனவு கோட்டைகள் சரிய சார்லஸை உள்ளுக்குள் வெறுக்க தொடங்குகிறாள்.


அப்போது ஒரு பிரபு வீட்டு விருந்துக்கு டாக்டரும் அவரது மனைவியும் அழைக்கப்பட, தனிமையில் அடைப்பட்டு கிடந்த எம்மாவுக்கு அந்த விருந்து மிகப்பெரும் உற்சாகத்தை தருகிறது. பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்து செல்லும் அவள் அந்த மாளிகையையும் ஆடம்பர வாழ்வையும் பார்த்து தான் கனவு கண்ட வாழ்க்கை அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் சராசரித்தனமும் எதார்த்தமும் முகத்திலறைய மனச்சோர்வுக்கு ஆளாகிறாள்.


எம்மாவின் விருப்பத்துக்காக பக்கத்தில் உள்ள சிறு நகரத்து குடியேறுகிறான் சார்லஸ். அங்கு கர்பிணியான எம்மா ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள். குழந்தை மேல் ப்ரியம் உண்டானாலும் குழந்தையால் அவளின் சூன்யத்தை, வெறுமையை துடைத்தெறிய  முடியவில்லை. 


அந்த சிறு நகரமும் எம்மா கற்பனை செய்த அளவு இல்லை. அப்போது அங்கு லியோன் என்கிற இளைஞனை சந்திக்கிறாள் எம்மா. கவிதைகளும், காவியங்களுமாக உலவும் அவனுக்கு அந்த சிறு நகரத்தில் தன் ரசனையை பகிர ஆள் இல்லா தனிமையில் வாடி வாழ்கிறான். எம்மாவின் அறிவும், கற்பனைவளமும், அழகும் லியோனை ஈர்க்கிறது. இருவருமே மோகித்தாலும், அதை வெளிப்படுத்தும் தைரியமில்லாமல் அவளை அடையவும் முடியாத விரகதாபம் தாங்க மாட்டாதவனாய் லியோன் அந்த ஊரை விட்டு வெளியேறுகிறான்.


லியோனியின் நட்பு மட்டுமே ஆறுதலாக இருந்த அந்த சிறு நகரத்தில் இருந்து அவனும் வெளியேறியதும் மீண்டும் எம்மா சோர்வுறுகிறாள். அப்போது அந்த ஊருக்கு விடுமுறை நாட்களை செலவிட வரும் ரூடால்ப் என்கிற இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். ரூடால்ப் பல பெண்களுடன் பழகும் குணமுடையவன் என்றாலும் எம்மாவின் பால் அதீதமாக ஈர்க்கப்படுகிறான். எம்மாவும் தன் லட்சிய காதலன் இவனாக தான் இருக்கமுடியும் என நம்பி அவனை நேசிக்கிறாள். சில நாட்கள் இன்பமாக அவளுடன் பொழுதை கழிக்கும் ரூடால்ப்க்கு எம்மா சலிக்க தொடங்குகிறாள். ஆனால் எம்மா அவனுடன் அந்த ஊரை விட்டு வெளியேற திட்டமிடுகிறாள். அதற்காக துணிமணிகள், பெட்டி, அங்கி என வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்குகிறாள்.


ரூடால்ப் எம்மாவை அழைத்து செல்லாமல் , பழக்க வழக்கங்களை நிறுத்தி கொள்வோம் என கடிதம் எழுதிவிட்டு தான் மட்டும் சென்றுவிடுகிறான். அவனை மிகவும் நம்பிய எம்மா மனமுடைந்து உடல் நிலையும் மோசமாக பாதிக்கப்படுகிறாள். பிறகு மெல்ல உடல்நிலை தேறி தெய்வ வழிப்பாட்டில் தன்னை நிலை நிறுத்தி தன் வெறுமையை போக்க தலைப்படுகிறாள். 


குடும்பத்திலும், தெய்வ நம்பிக்கையிலும் தன்னை கரைத்துக்கொள்ளும் மனைவி மீது பாசம் மேலிட, அவளுக்கு வெளியே செல்ல பிடிக்கும் என அவளை பக்கத்தில் உள்ள நகரத்தில் நடக்கும் இசைக்கச்சேரிக்கு அழைத்து செல்கிறான் சார்லஸ். அங்கு அவள் மீண்டும் பழைய காதலன் லியோனை சந்திக்கிறாள். லியோனின் மயக்கும் காதல் வார்த்தைகளிலும், அவனின் காதல் உறுதியிலும் அவள் மீண்டும் அவனை நேசிக்கிறாள். அவனை சந்திப்பதற்காக வாரம் ஒருமுறை அந்த நகருக்கு பியோனா கற்று கொள்ள போகிறேன் என சொல்லி வருகிறாள். செலவுக்காக வியாபாரியிடம் அதிகம் கடன் வாங்க தொடங்குகிறாள்.


சில நாட்கள் ஆரம்ப மோகம் கலைந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. இருவருக்கும் மன முறிவு வந்து பிரிகின்றனர். எம்மா பலவாறு சிதைகிறாள். அவள் கற்பனையில் வரித்த காதல் என்பது வெறும் கானல் நீர் , நிஜ வாழ்வில் கிட்டவே கிட்டாத ஒன்று என்று உணர தொடங்க, அதை அவளால் ஏற்க முடியவில்லை. அவள் வாங்கிய கடனுக்காக வீடு ஏலம் போகும் நிலை வர செய்வதறியாது திகைக்கிறாள். 


லியோனிடம் சென்று பணம் கேட்கிறாள். அவன் கைவிரிக்க அப்போது ஊருக்கு திரும்பியிருக்கும் ரூடால்ப்பிடம் சென்று கேட்கிறாள். அவனும் அவளுக்கு அவ்வளவு பெரிய தொகை தர இயலாது என்று கூற வெடித்து பைத்தியம் போல அழுகிறாள். என்னையே கொடுத்தேனே என் மானம் காக்க இந்த பணத்தை உன்னால் தர முடியாதா உன் வீட்டில் உள்ள இந்த தங்க தட்டை எடுத்து கொடுத்தால் கண்ணில்லாதவன் கூட எனக்கு தேவைப்படும் பணத்துக்கு அதிகமாக கொடுப்பான். உனக்கு மனமில்லை என்று வெடித்து அழுது வெளியேறுகிறாள்.


பின்னர் ஒரு வக்கிலை சந்திக்க அவன் அவளை விலையாக கேட்கிறான். ச்சீ என உதறி வரும் அவள் வாழ பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய தனிமையும், வெறுமையும் போக்க நுகர்வுக்கலாச்சாரத்தை நோக்கி ஓடுகிறோம். வாழ்வின் சூனியத்தை பாலியல் மூலம் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். ஆனால் அதுவும் இறுதியில் சலிப்பில் தான் முடியும் என்பதை உணராமலே.  

ஒற்றை வார்த்தையில் கேடு கெட்ட பெண்ணிற்கு இது தான் முடிவு என முடித்துவிடுபவர்கள் தான் அநேகம். ஆனால் ஒரு போதும்  எம்மாவின் தனிமையையும், வெறுமையையும், அவளது கற்பனைகளை வெளிப்படுத்த முடியாத, கனவுகள் சிதறடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது. இன்று வரை எம்மாக்கள் சிதைந்தும், மரித்து போன உணர்வுகளை சுமந்தலையும் உடலை சுமநது கொண்டு வெற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுபோல எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எம்மா போன்ற பெண்ணின் உணர்வுகளில் சுகமாக குளிர்காய்ந்துவிட்டு சுயநலமாக பறக்கும் ஆண்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள் 









Sunday 10 July 2016

" செம்மணி வளையல் " - அலெக்சாந்தர் குப்ரின்

" செம்மணி வளையல் " அலெக்சாந்தர் குப்ரின் எழுதி முகமது செரீப் மொழிபெயர்த்த ருஷ்ய நாவல். நாவல் என்று சொலவதை விட கதை என்று சொல்லலாம். மிகச்சிறிய கதை தான். ஒரு பெண் எதிர்பார்க்கும் காதலை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. சோகமான முடிவு.

ஒரு தலைக்காதல் தான் கதை கரு. சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் தான் வித்தியாசம். இந்த நாவலின் நாயகன் போல நிஜ வாழ்வில் பெண்ணை காதலிப்பவர்கள் இருக்கிறார்களா என்று சந்தேகம் தவிர்க்க முடியவில்லை.

வேரா என்கிற பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகன் அவள் திருமணமான பின்னும் விடாமல் தன் காதலை தொடர்கிறான். அவளின் பிறந்த நாளுக்கு யார் மூலமோ ஒரு கடிதமும் பரிசளிக்க செய்கிறான். எட்டு வருடங்கள் தொடர்ந்து விடாமல் செய்கிறான். அவள் கணவரிடம் அவ்வப்போது இதைப்பற்றி சொல்லி வந்தாலும் இருவருமே பெரிதுபடுத்தாமல் விடுகிறார்கள்.

எட்டாம் வருடம் அவன் விலையுயர்ந்த பொருள் அனுப்ப இதை தொடர்வது நல்லதில்லை முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என கணவரிடம் சொல்ல கணவர் அவள் சகோதரனுடன் சேர்ந்து அவன் முகவரியை கண்டுபிடிக்கிறார்கள்.

நேரில் அவனை சந்தித்து விசாரிக்க அவன் உணர்வை காதலை சொல்கிறான். அவன் உணர்வில் இருக்கும் உண்மை உணரும் வேராவின் கணவன் செய்வதறியாது திகைக்கிறான். அப்போழுது அவன் பேசும் வார்த்தைகள் அனைத்தும் நூற்றாண்டு கால பெண்ணின் காதல் ஏக்கங்கள். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டு இனி முற்றிலும் ஒதுங்கி விடுகிறேன் என அனுப்பி வைக்கிறான்.

இறுதியாக ஒரு கடிதம் வேராவுக்கு எழுதிவிட்டு பீத்தோவன் இசையின் சில பகுதியை அவளுக்கு சமர்பித்து தற்கொலை செய்து கொள்கிறான். செய்தி கேட்டு அவனை காண செல்கிறாள். பிணமாக இருக்கும் தலையை இடது கையால் நிமிர்த்தி வலது கையால் அவன் கழுத்தில் கைவைத்து அவனை பார்க்கும்போது ஒவ்வொரு பெண்ணும் கனவு காண்கிற காதல் தன்னை கடந்து போவதை உணர்கிறாள். அவன் நெற்றியில் முத்தம் பதித்து வெளியேறுகிறாள்.

பின் வீட்டுக்கு வந்து பீத்தோவனில் அவன் குறித்த பகுதியை வாசிக்க சொல்லி கேட்க இசையின் ஆன்மாவில் அவன் ஆன்மா ஒலிப்பது உணர்ந்து கடந்து போன காதலுக்கு கதறி அழுகிறாள்.

காதலின் இரு துருவங்களையும். பெண்களின் மனநிலை குறித்தும் பேசும் வேராவின் தாத்தா பகுதி அறிமுகம் இழுவை. ஆனால் பெண்களை பற்றி அவர் வைக்கும் காரணிகள் சில புறம் தள்ள முடியாதவை.

//// ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய நெஞ்சின் ஆழத்தில் ஒரே மனதுடன் எதையும் மன்னிக்க கூடிய, பணிவோடு தன்னை தியாகம் செய்யக்கூடிய அன்புகொண்ட காதலுக்காக கனவு காணலையா?

அது இல்லையென்றால் தான் பெண்கள் வஞ்சம் தீர்க்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் பெண் இணையற்ற சக்தியாக கைவரப் பெறுவார்கள். அவர்களின் ஆசைகளும் உணர்வுகளும் ஆண்களுக்கு சோகமான சட்டங்களாக மாறும். ஏனெனில் பல தலைமுறையாக ஆண்கள் காதலைப் போற்றவும், வழிபடவும் செய்யவில்லை. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இது அமையும். செயலும் எதிர்ச்செயலும் சமத்தன்மைக்கும் எதிர்தன்மைக்கும் இணையானவை.///

Friday 8 July 2016

ஓசூர் எனப்படுவது யாதெனின் - ஆதவன் தீட்சண்யா

ஓசூர் எனப்படுவது யாதெனின் ஆதவன் தீட்சண்யா எழுதிய புத்தகம். மலைகள் பதிப்பக வெளியீடு.
இது நாவலல்ல. கட்டுரையா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். இலக்கிய சுவை பெரிதும் இல்லை என்றாலும் சாரலாக அங்காங்கே இலக்கியம ஒரு நூலிழை போல பின்னி வருகிறது ஆரம்ப அத்தியாயங்களில். தன்னை தானே பகடி செய்து கொள்வது அவ்வளவு அழகாக வருகிறது இவரது எழுத்துகளில். அநேகமாக வாசிக்கிறேன் என்று இவர் செய்த கூத்துகளை ஆர்வகோளாறில் வாசிக்கும் நிறைய பேர் செய்திருக்க வாய்ப்புண்டு.
////புரிந்ததா, விளங்கியதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் தொகுப்பு நூல்களை எல்லாம் கூட படித்துக்கொண்டிருந்தேன் அல்லது படிப்பதாக காட்டிக்கொண்டிருந்தேன். சில வரிகளுக்கு சிவப்பு மசியால் அடிக்கோடிடுவது, ஓரத்தில் பெருக்கல் குறி இட்டு முக்கியப்படுத்தி காட்டுவது, ஏதாவது சில பக்கங்களின் முனைகளை மடித்து பொறித்து அலட்டி கொண்டதற்கும் பஞ்சமில்லை. ////
ஓசூர் பக்கம் இருக்கும் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஆசிரியரின் பயணமும் ஓசூரின் பயணமும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் தோழராக ஆரம்பிக்கும் ஆதவனின் இளமை பிராயம் ஓசூர் தொழிற்பேட்டையாக முழுமையாக வளர்ச்சியடையும் முன் எப்படி இருந்தது. அப்போது இருந்த அரசியல், 1980 களின் இறுதியில் நடந்த ஆசிரியர் வேலை நிறுத்த போராட்ட வரலாறு அதற்கு ஓசூர் மக்கள் அளித்த ஆதரவு, தொழிற்பேட்டையாய் உருவெடுத்த ஓசூர் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள், புவியியல் மாற்றங்கள், தொழிலாளர் பிரச்சனைகள், அதற்கு தீர்வு காண கம்யூனிஸ்ட் இயக்கம் எடுத்த முயற்சிகள், தொழிலாளரை ஒன்று திரட்டிய முறை அல்லது அவர்கள் ஒன்று சேர்ந்த முறை என்று ஓரளவு இந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாத வாசகன் கூட தெரிந்து கொள்ளுமளவிற்கு விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
ஓசூர் என்கிற இன்டஸ்ட்ரியல் ஏரியாவின் வளர்ச்சி உலக மயமாக்கல் வந்த பின் அடைந்த வீழ்ச்சி, கம்யூனிஸ்ட் தோழர்களின் பின்னடைவு, தொழிளாலர்களின் உளவியல் பிரச்சனைகள், அவர்கள் முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்ட முறை, அங்கிருந்த பூர்வகுடியினரையும், இயற்கை வளங்களையும் அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்க, மலையை கூட விட்டு வைக்காமல் கிரானைட்க்காகவும் கனிமங்களுக்காகவும் எல்லாம் தரை மட்டமாகி இருபது வருடங்களுக்குள் கண் முன் நடக்கும் மாற்றத்தின் வேகத்தை தடுக்கவும் முடியாமல் அதனை ஏற்கவும் முடியாமல் ஆதவனை போலவே நாமும் அதிர்ந்து போக தான் வேண்டியிருக்கிறது..
.
சங்பரிவார் போன்ற அமைப்புகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவ எடுத்து கொண்ட நடவடிக்கைகள், அதனை தடுக்காமல் அவர்களுக்கு சலாம் போடும் காவல்துறை, கள்ள மௌனம் காக்கும் அரசு என்று அவர் வைத்திருக்கும் பார்வை அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
///தொழிற்சாலைகளை வைத்து தான் ஒரு பகுதியை முன்னேறியதாகவோ, பின் தங்கியதாகவோ மதிப்பிடுகிறோம். இந்த மனநிலை காரணமாக யாருக்காக வளர்ச்சி, யாருடைய வளர்ச்சி என்ற கேள்வியை எழுப்பாமலேயே இப்படியான வளர்ச்சியின் பொருட்டு நாட்டின் கனிம வளங்களையும் அழிக்கப்படுவதையும், மக்கள் வாழிடங்களில் இருந்து துரத்தப்படுவதையும், வளர்ச்சியின் பெயரால் மறக்க விரும்புகிறோம்.///
நடுத்தர , மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் தங்களை சார்ந்தே சிந்திக்கிற எல்லாவற்றையும் அணுகுகிற இவர்களின் உளவியல் தான் இன்று உலகமயத்திற்கு துணை போகிறது என்றும இவர்கள் தம் மீது நிகழ்த்தப்படும சுரண்டல் விருப்பபூர்வமாக ஏற்கும் மனநிலைக்கு வந்த இவர்கள் அமெரிக்காவில் போய் வேலை பார்ப்பதை கனவாக கொண்டிருக்கும் இவர்கள் நாளை இவர்கள் நாளை அமெரிக்க ஆட்சி பொறுப்பேற்பதை கூட ஏற்றுக்கொள்வார்கள் என்று சாடியிருக்கிறார்.
கண்டிப்பாக இது படிக்க வேண்டிய புத்தகம். ... அங்காங்கு தொழில் மண்டலம், சிறப்பு பொருளாதார மண்டலம் அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், நம்மை சுற்றி நடப்பவற்றின் பின் நடக்கும் அரசியலையும், சமகால வரலாறையும், நாம் சுரண்டப்படுவதையும் பற்றி அடிப்படையில் சிலவற்றை புரிந்து கொள்ளவும், விழிப்புணர்வு அடையவும் உதவும்...