Sunday 22 December 2013

நாற்பதுகளில்

மனதின் குப்பைகளை
கழிவிரக்கங்களை
வன்மம், துரோகங்கள் என
வேண்டாத பாரத்தை
எல்லாம் சுமந்து
உள்ளுக்குள்
அகத்தில் பேயாட்டம் ஆடி
உதிரம் கண்ட பின்
எல்லாம் அடங்கி
மூளை(லை)யில் சுருண்டு
அணைத்து ஆறுதல்படுத்தும்
அன்புக்கு ஏங்கி
என ஒரு சூறாவாளியை
நாற்பதை தாண்டிய பெண்கள்
ஒவ்வொரு மாதமும் கடக்கின்றனர்..
இந்த சூறாவளிக்கு சிக்காமல்
தப்புபவர்கள் வெகு சிலரே...

ப்ரியம், பிரிவு

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ
எல்லாம் மறந்து தொலைக்கும்

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை...
***********
சாகும் வரை கைவிடமாட்டேன்
என்று கைபிடித்து
சொன்ன ஒற்றை வார்த்தை
சாகா வரம் பெற்று
நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
முட்டி மோதுகிறது
ஒவ்வொரு சண்டைக்கும் பின்பான
உன் விலகல்களின் போது..
 
 
 
 

Wednesday 18 December 2013

மலரும் நினைவுகள் 2


சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு

ஊர் பயணம். என் குழந்தைகள் இருவருக்கும் பள்ளி விடுமுறை. வீட்டில் இருந்து புறப்படும் போதே திட்டு..இவ்வளவு தான் மூட்டை கட்ட முடியுமா? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி வச்சிருக்கியா..உனக்கு என்ன அம்மா மகாராணி மாதிரி கைய வீசிட்டு போவ நான் இல்லை எடுத்துட்டு வரணும்..என்ன என்ன போர்ட்டர்னு நினைச்சியானு.. நான் வேணும்னா ஒரு பெட்டி இல்ல பை எடுத்துக்றேங்க (ஃபார்மாலிட்டிக்கு தான்) என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு சொல்ல..

ஒண்ணும் வேணாம் பிள்ளைகளை பத்திரமா கூட்டிட்டு பேர் பார்த்து ஏறுனு ஒரு உறுமு உறும சரி இப்போ எது சொன்னாலும் டோஸ் விழும்னு பேசாம பசங்கள கூட்டிட்டு கம்பார்ட்மண்ட் பார்த்து ஏறி உட்கார்ந்தேன்.. இவர் மெதுவாக பின்னால் (திட்டிகிட்டே தான் வந்திருப்பாரு) வந்தார். அப்போது கூட்டத்தில் வந்த யாரோ ஒருவரின் ஸுட்கேஸ் வீலில் எங்கள் பை மாட்டி அவர் இழுத்து செல்ல என் கணவர் இருந்த இடத்திலிருந்து காலை மட்டும் முன்னே நகர்த்தி பையை இழுக்க முற்பட அப்போது எதிர்பாராதவிதமாக என் கணவர் பேண்ட் தையல்விட்டு விட்டது...உடனே என் கணவர் கையால் பையை கெட்டியாக பிடித்து கொண்டு ஸூட்கேஸ் ஆசாமியை நோக்கி குரல் கொடுத்து ஒரு வழியாய் பையை வாங்கிவிட்டார்..அங்கிருந்து என்னை நோக்கி கோபமாக குரல் கொடுக்க..நான் ஏற்கனவே கம்பார்ட்மென்டில் ஏறிவிட்டதால் பை மாட்டின டென்சன்ல தான் திட்றாங்க போலனு நினைச்சுகிட்டு பசங்க பக்கம் திரும்பிகிட்டு எங்க சீட்ல போய் உட்கார்ந்துட்டேன் (எனக்கு பேண்ட் தையல் விட்டது ஜோசியமா தெரியும்). அவர் அங்கேயே பை திறந்து மேலாக இருந்த லுங்கியை எடுத்து கட்டினவுடன் தான் எனக்கு ஒரளவு விஷயம் யூகிக்க முடிந்தது....

டென்ஷன்ல அவர் முகம் போன போக்கு. அவர் லுங்கிய எடுத்து பேண்ட் மேலேயே என்னை திட்டிகொண்டே கட்டிய விதம் ஆகியவற்றை பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியல..சிரித்தா நான் தொலைந்தேன். பசங்க பார்த்து சொன்னாலும் அவ்ளோ தான்..சீட்டுக்கு அடியில் ஏதோ தேடுறாப் போல குனிந்து சிரித்துவிட்டு கஷ்டபட்டு முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு அவர் கம்பார்ட்மெண்டில் ஏறும் போது பேக் வாங்கி சீட்டிற்கு எடுத்து சென்றேன்......ஒன்றும் பேசல.. அவர் ரியாக்சன் பார்க்க எனக்கு சிரிப்பு வேறு அடக்கமுடியல...அப்புறம் அவர் வேறு பேண்ட் மாற்றி கொஞ்சம் அசுவாசமடையும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தேன்...
 
அப்புறம் இந்த டெய்லர் சரி இல்லை  இனி வேற டைலர்கிட்ட பேண்ட் தைக்க குடுக்கணும் இல்லங்க என சீரியசாக முகத்தை வைத்துகொண்டு அப்பாவியாய் நான் சொன்னவுடன் அவரும் டென்ஷன்லாம் போய் சிரிச்சிட்டாரு.....அன்று முதல் இன்று வரை ட்ரெஸ் எடுத்து வைக்கும்போது ஏங்க எதுக்கும் ஒரு வாட்டி கால நல்லா நீட்டி செக் பண்ணிக்குங்க என சொல்ல தவறுவதில்லை... அவரும் என் மண்டையில் குட்ட (செல்லமாக தான்) தவறுவதுமில்லை. :)

மலரும் நினைவுகள் 1

என் திருமணத்தின் முன்
என் வீட்டில் நடந்த சுவையான நிகழ்வுகள்,
இன்றைய கால கட்டத்தில் அரிதான...
இனி வரும் காலகட்டத்தில் காணவே முடியாத விஷயங்கள்...

எனது திருமணத்தின் போது வீட்டிலேயே அதிரசம், திரட்டு பால்,, கைமுறுக்கு (சுத்து முறுக்கு) என அனைத்தும் செய்தார்கள்..வீட்டின் இரண்டாம் கட்டில் உள்ள முற்றத்தில், காலவாய் அடுப்பில் அதிரசம் சுட்டு திறந்த வெளி முற்றத்தில் ஆற வைப்பதற்காக, மூங்கில் ப்ளாச்சுகளை நெருக்கமாக வைத்து, அதன் மீது வைக்கோல் பரப்பி (அந்த கால டிஷ்யு) அதன் மீது வைத்து எடுத்து வைப்பார்கள்..வீட்டிலேயே ஆட்கள் உரலில் மாவு இடித்து அதிரசம் செய்வார்கள்...அத்தை, 2 சித்தி, 2 பெரிம்மா என அனைவரும் உட்கார்ந்து சுவையாக பேசிக் கொண்டு பாட்டியின் மேற்பார்வையில் ஆளுக்கு ஒரு வேலையாக மாற்றி மாற்றி செய்வார்கள்....நானும் ஏதாச்சும் செய்கிறேன் என்றால்,, கல்யாணப் பொண்ணு அடுப்பு பக்கமே வரக் கூடாது எனக் கடிந்து கொள்வார்கள்..திரட்டு பால் எங்கள் பக்கம் தேங்காயில் செய்வார்கள்..கிட்டதட்ட நூறு காய்களுக்கு மேல், முற்றத்தில் உரித்து போட, தாழ்வாரத்தை சுற்றி ஆட்கள் உட்கார்ந்து தேங்காய் துருவி, (கிரைண்டர்) அரைத்து, பின் பெரிய பித்தளை உருளியில் கொட்டி, என் திருமணத்திற்கு திரட்டு பால் செய்வதற்காகவே செய்த மரதுடுப்பை வைத்து எங்கள் உறவினர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் கிண்டியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.....இப்போது இது எல்லாமே நினைவாக மட்டுமே உள்ளது...

இன்று சிரமமே இல்லை எல்லாம் பணம் கொடுத்தால் காண்டிராக்டர்கள் செய்து விடுகிறார்கள்..வட நாட்டு உணவிலிருந்து, மேற்கத்திய உணவு வரை., அழைப்பிலிருந்து தாம்பூலம் வரை...........ஆனாலும் ஏதோ இழந்தாற்போல் இருக்கிறது.....

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம்:

அன்று:

அடுக்களை தாண்டி வெளியே வராதே
பெண்ணக்கு படிப்பு எதற்கு?
சமைக்க கற்று கொள்
அனைவரயும் அனுசரிக்க கற்று கொள்
யாரயும் நிமிர்ந்து நோக்காதே
ஆணுக்கு தேவை அதுவே......

அதற்கு பின்:

கல்லூரிக்கு செல், பட்டம் பெறு
பட்டம் பெற்ற பெண் தான்
கல்யாணச் சந்தையில் விலை போவாள்
குழந்தைக்கு வீட்டுப்பாடம் முதல்
வங்கி பரிமாற்றம் வரை
அடுக்களை முதல் அனைத்தும்
படித்தவள் திறம் பட நிர்வகிக்க முடியும்.........

இன்று:

பட்டம் பெறு, ஆணுக்கு நிகராய் வேலைக்கு போ
ஊதியத்தை அப்பாவிடமோ, அண்ணாவிடமோ
சமர்த்தாக சேர்த்து விடு....
நண்பர்கள் எல்லாம் அளவோடு நிருத்திகொள்
இல்லையென்றால் திருமணத்தில் பிரச்சனை வரும்...
திருமணத்திற்கு பின்
ஊதிய கணக்கை கணவனிடம் சேர்த்து விடு....
அழகு நிலையம் செல்வது முதல்
நண்பர்கள் வரை அனைத்திற்கும்
அனுமதியும் சுதந்திரமும் உண்டு
கணவனின் மேற்பார்வையில்...
ஆனால்.........
கணவனுக்கு இஷ்டம் இல்லை என்றால்
அனைத்தயும் விட்டு விட வேண்டும்.........

பெரும்பாலும் பெண்ணின் நிலை இப்படி இருக்க
ஊடகங்கள் முதல், பத்திரிக்கைகள் வரை
உடை முதல் பேச்சு வரை அனைத்திலும்
பெண் சுதந்திரம் முன்பை விட
அதிகமாக இருப்பதாக பெருமையுடன்
பீற்றிக்கொள்கிறோம்....

Thursday 12 December 2013

லவ் யூ

சில வருடங்கள் முன் நான் வேலைக்கு வந்த புதிதில் ஒருவர் வந்து என்னிடம் ஐ லவ் யூங்க என்றார் நான் சரிங்க என்று சொல்ல அவர் சற்று தடுமாறினார்..அதன் பின் நான் என் வேலையை கவனிக்க நான் உண்மையாவே லவ் பண்றேங்க அப்படின்னு சொன்னார்...நானும் சரிங்க என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க மேடம் நீங்க ஒண்ணுமே சொல்லலையே என்று கேட்டார்...நான் என்னங்க சொல்ல முடியும் யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் லவ் பண்ணலாம் இதெல்ல்லாம் உங்க உரிமை என்று சொல்ல அவரால் மேலே பேச்சை தொடர முடியாமல் திணறினார்...

நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா என்று கேட்டார்..நான் நிறைய பேரை லவ் பண்றேன் அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்டேன்..அப்ப என்னை லவ் பண்ண மாட்டீங்களா என்று கேட்க நான் அவரிடம் லவ் அப்படின்னா என்னங்க என்று கேட்க? உயிருக்கு உயிராய் நேசிப்பது லவ் என்றார்...அப்படின்னா சாகற வரைக்குமா என்று கேட்க அவர் ஆம் என்றார்...சரி அப்படின்னா யார் சாகிற வரைக்கும் என்றேன்...சிறிது முழித்து பின் நான் சாகிற வரை என்று சொன்னார்....ரொம்ப சந்தோசம் அப்படியே செய்ங்க என்று சொல்ல நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலை என்று முறைக்க நான் அவரிடம் என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக நீங்க தான் சொன்னீங்க...சாகிற வரைக்கும் நேசிங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அப்படின்னு சொல்லிட்டு சிரித்துவிட்டு சென்று விட்டேன்...

ஊர் பழக்கம்

ஏரியா விட்டு ஏரியா மாறினாலே சில பழக்கவழக்கங்கள் கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஆரம்பத்தில் கொடுக்கிறது...

அதில் ஒன்று வா, போ என்று கூப்பிடுவது..சென்னையில் பெரியவர் சிறியவர் அனைவரையும் சர்வ சாதாரணமாக வா போ என்று கூப்பிடுவது முதலில் அதிர்ச்சியாய் இருந்தது...அப்புறம் பழகிக்கொண்டேன்...

அதற்கடுத்து அதிர்ச்சி திருமண வீட்டில் நடந்தது...எங்கள் பக்கம் திருமணத்திற்கு வந்தவர்களை சாப்பிட வாங்க வாங்க என்று கூப்பிட்டு பந்தி நடக்கும் இடம் வரை அழைத்து சென்று சாப்பிட சொல்லுவோம்...அது போல அவர்கள் விடை பெறும் போது சாப்ட்டீங்களா என்று கேட்க்காமல் இருக்க மாட்டோம்..

எங்கள் வீட்டில் திருமண வேலை உதவிக்காக வரும் அக்கம் பக்கத்தினர் கூட சாப்பிடும் நேரம் அவர்கள் வீட்டில் சென்று அழைத்தால் தான் சாப்பிடுவார்கள்...இல்லை என்றால் உதவி செய்துவிட்டு சரியாக அந்த நேரம் வரும்போது  நழுவி விடுவார்கள்....

ஆனால் சென்னையில் உறவினர்கள் அல்லாது முதல் முறையாக நண்பர்கள் திருமணம் செல்ல  பந்திக்கு கியூவில் நிற்பதை பார்த்து செம ஷாக்....என்னங்க இது என்று கேட்க என் கணவர் இங்கு எல்லாம் அப்படி தான் என்று சொல்ல எனக்கு சாப்பாடே வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக்கலாம் என்று திருமணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்...அதன் பின் ரொம்ப யோசித்து தான் திருமண வீடுகளுக்கு செல்வேன்... தற்போது அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போவதால் அரட்டை அது இதுவென்று அவ்வளவாக தெரியவில்லை... தனியாக பெரும்பாலும் செல்வதில்லை.....ஆனாலும் இன்னும் சென்னையில் திருமண வீடுகளில் சாப்பிட தயக்கம் இருக்கவே செய்கிறது....

ஆர்கெஸ்ட்ரா

டிவி எல்லாம் எல்லா வீடுகளையும் எட்டி பார்க்காத எண்பதுகளின் ஆரம்பம்..எங்கள் தெருவில் ஒருவரின் திருமணத்திற்கு முதன் முதலாக இசை கச்சேரி..அதுவரை கச்சேரி என்றால் நாதஸ்வரம, கர்னாடக இசை தான் இருக்கும்...ஆனால் முதன் முதலாக இவரின் திருமணத்தில் சினமா பாடல்கள் பாடும் ஆர்கெஸ்ட்ரா....தெருவை அடைத்து பந்தல்.. 

எங்கள் வீட்டில் இருந்து மூன்றாவது வீடு அவர்களுடையது..அப்போது எல்லாம் திருமண் மண்டபங்கள் இந்த அளவு பேசன் ஆகாத கால கட்டம்..வீடுகளில் தான் திருமணங்கள் நடக்கும் ..எங்கள் தெருக்களில் உள்ள வீடுகள் எல்லாம் பெரும்பாலும் சுற்று கட்டு வீடுகள்..வாசல் பக்கம் ஒரு தெருவிலும் கொல்லை பக்கம் அடுத்த தெருவிலும் முடியும்...எங்கள் வீட்டிற்கு சமீபத்தில் தான் மேடை... தெரு எல்லாம் சேர்கள் போட்டு ஏக தடபுடல்...நான் அந்த வயதில் வீட்டில் இருந்து பள்ளி தவிர வேறு எதற்கும் வீட்டு வாசற்படி தாண்ட தடை...

எனக்கு முதன் முதலாக இசை நிகழ்ச்சி நேரில் பார்க்க ஆசை நான் என் அம்மாவிடம் கேட்டால் முடியவே முடியாது என்று சாதித்துவிட்டர்கள்.. அதன் பின் கெஞ்சி கூத்தாடி திண்ணையை விட்டு கீழே கால் வைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து நாங்கள் ஒரு 6 - 7 ஒத்த வயது பெண்கள் எல்லாரும் சம்மதம் வாங்கி என் அம்மா எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் லைட் வைக்க கூடாது என்று தெருவில் லைட் போடுவோரிடம் சொல்லி ஒரு வழியாக எல்லாரும் இசை கச்சேரி கேக்க தயாரானோம்..அதற்கு நாங்கள் கெஞ்சிய கெஞ்சல் இருக்கே .....என்னவோ எங்களை தூக்கிட்டு ஓடிடுவாங்க அப்படின்ற மாதிரி எங்களுக்கு காவலுக்கு மத்திம வயது பெண்கள் திண்ணையின் ஓரத்தில்...

கச்சேரி ஆரம்பிக்கும் முன் சரியான மழை ..ச்சே என்று ஆகிவிட்டது..மழையை திட்டி கொண்டே இருந்தோம்..ஒரு வழியாக மழை நின்று மாலை ஐந்து மணிக்கு மேல் கச்சேரி ஆரம்பித்தது..இருட்டிய பின் தான் வீட்டு வாயிற்படியில் இருந்து திண்ணையில் உட்கார அனுமதி...முதலில் பக்தி பாடல் ஆரம்பித்து காதல் பரிசு படத்தில் இருந்து வரும் ஒரு பாடலுடன் ஆரம்பித்து அப்போதைய மோகன் ஹிட்ஸ் , சின்ன பூவே மெல்ல பேசு பாடல்கள் என மாற்றி மாற்றி பாட.. நாங்கள் திண்ணையில் சிலை போல உட்கார்ந்து இருந்தோம்...ஹப்பா என்ன ஒரு ஆனந்தம். என் வாழ்வில் அதன் பின் பல இசைக்கச்சேரிகள் கேட்டிருக்கிறேன்.. ஆனால் அந்த சந்தோசம் அதன் பின் இல்லை..இப்பொது எல்லாம் மைக்ரேன் தலை வலியால் சின்ன ஹாலில் வைக்கும் ஹை டெசிபல் சவுண்டு எபெக்ட்ல ஐயோ எப்போ வெளில போவோம் என்று ஆகி விடுகிறது..............இதை கேட்கவா அன்று அவ்வளவு கெஞ்சி கூத்தாடி பர்மிசன் வாங்கினோம் என்று தோன்றுகிறது...

அம்மா

என் அம்மாவும் அப்பாவும் காசி சென்று திரும்பி வந்தார்கள்... அவர்களை அழைத்து வர ரயில்வே நிலையம் சென்றிருந்தேன்... ரயிலில் இருந்து இறங்கியவுடன் என் அம்மா அப்பாவின் கையை பிடித்து என் கையில் குடுத்துவிட்டு ஒரு மாதிரி கண் கலங்க நின்றார்கள்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை..என் கணவர் இருந்ததால் என் அம்மா எதுவும் பேசவில்லை....

பின் வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் குளித்துவிட்டு சாப்பிட்டு அப்பா வந்த அசதியில் தூங்க....நானும் அம்மாவும் சற்று நேரம் பேசினோம்...சற்று நேரத்திற்கு எல்லாம் அம்மா அழ ஆரம்பிக்க என்னம்மா என கேட்க ...

அப்பாக்கு காசியில் ஜுரம் வந்துவிட்டது....பாசை தெரியாத ஊரில்  என்ன தான் நம் ஊர்காரர்கள்  நிறைய பேர் இருந்தாலும் என்னால் தாங்க முடியவில்லை...ஹாஸ்பிடலில் காண்பித்து ட்ரீட்மென்ட் எடுத்து தங்கியிருக்கும் இடம் வர எல்லோரும் கோவில், கடை என செல்ல தனிமை ரொம்ப பயமுறுத்தியது.... அம்மா எனக்கு போன் செய்ய முயல அப்பா கூடவே கூடாது.... கமலிக்கு தெரிஞ்சா ரொம்ப பயப்புடுவா அதனால் ஒன்னும் சொல்லாத.... எனக்கு சரி ஆயிடும்... யாருக்கும் சொல்லாதே என சொல்ல...என் அம்மா தனித்து ஏகப்பட்ட மன கஷ்டத்துடன் அப்பா சரி ஆகும் வரை இருக்க.. அங்கு எங்கள் ஊர்காரர் ஒருவர் கயாவில் தொலைந்து இரண்டு நாட்கள் கழித்து வேறு யாரோ முகம் தெரியாதவரின் உதவியுடன் இவர்களை அடைய இவர்களை பார்த்தவுடன் அந்த அம்மா கதறி அழுது அப்பா என்னை ஊர்ல கொண்டு பத்திரமா சேர்துடுடா என  சொல்ல என் அம்மாவின் பயம் அதிகமாகி இருக்கிறது ...

ஓரு வழியாக அவர்கள் காசியில் இருந்து கல்கத்தா வர... இரயிலில் இவர்களுடன் பயணம் செய்த ஒரு பெண்மணி இரயிலில் இறந்த்விட்டார்... அவர் கணவர் ஐயோ என்ன ஊர்னு கூட தெரியலையே இங்க  வந்தா உயிர் போகணும்..... நான் இனிமே என்னடி பண்ணுவேன் ... உன் பையன் பொண்ணு கேட்டா நான் என்னடி சொல்றது என்று அந்த பெண்ணின் கணவர்  ட்ரைன்னில் கதற... என் அம்மா அரண்டு விட்டார்கள்..... காசி முடித்து எல்லோரும் ராமேஸ்வரம் செல்வதாக ஏற்பாடு.... என் அம்மா சம்ப்ரதாயம் பார்ப்பர்கள் ... ஆனால் அங்கு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் என் அம்மாவை உலுக்கி  போட்டுள்ளது....இந்த பத்து நாட்கள் தனிமையில் அவர்கள் சேர்த்து வைத்த துக்கம், அழுகை, பயம்  புரிந்து என் அம்மாவின் கையை பிடிக்க சிறிது நேரம் அழுது தீர்த்தார்கள்.........

அப்பாக்கு உடம்பு முடியாம போனோன ரொம்ப பயந்துட்டேன்டி...எதாவது ஒன்னுனா கங்கைலையே நானும் விழுந்து போய் சேர்ந்துடுனும்னு நினைச்சேன்டி என அழ....என் அம்மாவின உணர்வு புரிந்து ஒன்னும் இல்லம்மா  விடு என்று சொல்லும்போதே கண்ணீர் உடைப்பெடுக்க.....சில பல நேரங்களில் கண்ணீர் மட்டுமே உணர்வுகளை வெளி கொணர்வதை நமக்கு பெரும் ஆறுதலாக இருப்பதை உணர முடிந்தது ......

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே நியாபகம் வருதே பொக்கிஷமாய் நெஞ்சில் புதைந்த நினைவுகள்......................

கோடையில் காலை சாப்பிட்ட கை காயும் முன் திண்ணையிலும் தெருவிலும் ஆட்டம் போட்டது..

பிற்பகலில் வீட்டு கொல்லை பக்கத்தில் மரநிழலில் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்டது...

இரவில் முற்றத்தில் உறவினர்கள் எல்லாருக்கும் ஊட்டிவிட சாப்பிட்ட தயிர் சாதத்தின் ருசி..

சித்தி, அத்தை, பாட்டி யாரையாவது கதை சொல்ல கெஞ்சி கதை கேட்டு கொண்டே தாழ்வாரத்தில் உறங்கிய நாட்கள்..

..பூ சடை தைத்து, (தாழம்பூ சடை, மல்லி பூ வைத்து தைத்த சடை) போட்டோ எடுத்து எல்லாருக்கும் சடையின் அழகு காண்பித்து வலம் வந்த நாட்கள்.

புளி ஆட்கள் அறிய அவர்களிடம் எனக்கு தான் புளியாங்ககொட்டை என்று மல்லுக்கு நின்றது..திருக்கையில் உளுந்து நெறிக்க நானும் சுத்துறேன் என்று திருக்கை வாங்கி அச்சு உடைத்தது...உலக்கையில் பயிறு குத்த அவர்கள் அஸ் அஸ் என்று மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே குத்துவதை கண் கொட்டாமல் பார்ப்பது...

பத்தயாத்தில் நிரப்பி இருக்கும் நெல்லை எடுக்க கீழே இருக்கும் பலகையை நான் தான் திறப்பேன் என்று திறக்க போட்டி போடுவது...குமித்து வைக்கும் நெல்லில் ஏறி குதிப்பது...அதை காலால் அலைந்து காய வைப்பது..

வைக்கோல் போரில் ஓடி பிடித்து விளையாடியது..மாமரம் ஏறி ஒளிந்து கொண்டது.. பக்கத்து வீட்டு பாப்பு கண்ணாத்தா கத்த கத்த ஓட்டில் ஏறி ஓடியது..(உடைந்த ஓடுகளுக்காக அவர் வீட்டில் வந்து திட்ட அம்மாவிடம் வாங்கிய அடி)

மாட்டுவண்டியில் (எனக்கு விவரம் தெரிந்த சிறு வயதில் மாட்டு வண்டி தான்.) கம்பியை ஒட்டி உட்கார சண்டை பிடித்தது...

வீட்டிலேயே தயாரித்த நன்னாரி சர்பத்..

பெரிய பலாப்பழங்கள்  வாங்கி அப்பா அதை அறுக்க எல்லாரும் முற்றத்தில் உட்கார்ந்து போட்டி போட்டு சாப்பிட்டது..

சித்திரை தேர் திருவிழாக்கள் , மகாமக குளக்கரையை சுற்றி போடப்பட்டிருந்த கடைகளில் சிறு சிறு பொருட்கள் வாங்கி மகிழந்த நாட்கள்..

வீட்டை ஒட்டி இருக்கும் பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை துணைக்கு அழைத்து கொண்டு அடித்த லூட்டிகள்...

கமலி ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணலாம் இல்லையா எப்படி உன்னால இப்படி எல்லாத்தையும் மறக்க முடியுது என்று நேற்று என் ஊரில் இருந்து பால்ய நண்பன் போன் செய்த போது அவனுடன் அடித்த எல்லா லூட்டிகளும் மறக்காமல் நியாபகம் வந்தது... :) :) :)

அப்பார்ட்மெண்ட் அலப்பரைகள்

நாடுகளுக்கு இடையில் மட்டுமா எல்லைகோடுகள்
மொட்டை மாடியில் 

துணி காய வைக்கும் கொடிகளுக்கும்
பொருட்கள் காயவைக்கும் இடத்திற்கும் கூட
எல்லை கோடுகள் உண்டு..
எல்லை தாண்டி வருவது வரவேற்கப்படுவதில்லை இங்கும்

அனைவருக்கும் முகங்கள் பரிச்சியம்
தினமும் பார்ப்பதால் 
பார்த்தவுடன் உதட்டில் நெளியும் 
சிரிப்பும் பரிச்சியம் 
நாகரிகம் என்பதால் 
ஆனால் பெயர் தான் பரிச்சியமில்லை .........

மழை தான் பெய்கிறதோ 
என்று ஆவலுடன் ஜன்னலை 
எட்டிபார்க்க வைக்கின்றன
ஏ.ஸி களில் இருந்து சொட்டும் நீர்...

பத்திரிக்கைகார்களுக்குள் ஒற்றுமை உண்டோ இல்லையோ
விசிறி அடிக்கப்படும் பத்திரிகைளில் 
எதிர் பிளாட் ஹிந்துவும், தந்தியும் 
என் வீட்டு டைம்ஸ் ஆப் நொவ்வும், தினமலரும்
ஒற்றுமையாக கலந்து கிடக்கும்....

வாய்க்கால் வரப்பு தகராறு
என்னவென்று தெரியாத 
இன்றைய தலைமுறையினருக்கு..
அது தான் பார்க்கிங் தகாராறாக 
உருமாற்றம் அடைந்துள்ளது
என்று சொல்லாமல் சொல்லும் பெரியவர்கள்

ஆபிஸ் ரூல்ஸ்

Office Rule no : 5

உங்களுக்கு வேலையே இல்லை என்றாலும் ரொம்ப பிஸியாக இருப்பதாக காட்டிகொள்ளவேண்டும்...உயரதிகாரிகள் கால்ஸ் அட்டண்ட் செய்யும் போது உடனே அட்டெண்ட் செய்யாமல் கொஞ்சம் நேரம் கழித்து அட்டெண்ட் செய்ய வேண்டும்....அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகளை பற்றி மறக்காமல் ஜாடையாக சொல்லிவிடவேண்டும் (உதாரணமாக நான் அந்த வொர்க்ல பிஸியா இருந்ததால் தான் சார்/மேடம் கால் அட்டெண்ட் பண்ண லேட்டாயிடுச்சு அப்படின்னு)

Office Rule no. 4:

கொடுத்த வேலையை சீக்கிரமாக வேகமாக முடித்துவிட்டால் பாராட்டு கிடைக்காது...வேறு சில வேலைகளும் சேர்த்து தரப்படும்..அவங்ககிட்ட கொடுங்க ஃபாஸ்ட்டா முடிச்சிடுவாங்கனு .....அதை பாராட்டு என்று நீங்கள் நினைத்தால் தொலைந்தீர்கள்

Office Rule No: 3 

உங்களுடன் பணிபுரிபவர்கள் கூறும் ஜோக் மொக்கையாக , புளித்து போனதாக, 1008 வது முறையாக கேட்டாலும் அப்படியா என சிரிக்க வேண்டும்...அதுவும் அவர் உங்களை விட ஒரு நாள் சீனியர் என்றாலும்....இல்லையென்றால் நான் தான் இவளுக்கு வேலை செய்யவே சொல்லி கொடுத்தேன்..என்னமா அலட்டுது பாரு, ரொம்ப மேதாவின்னு நினைப்பு, திமிர் பிடிச்சது போனற பட்டங்களை சுமக்க வேண்டி வரும்...தேவையா??

Office Rule No: 2

உங்களை விட சீனியர் அதிகாரிகள் நட்பாக பேசுகிறார்கள் என்று அவர்களிடம் நீங்களும் சரிக்கு சரியாக அரட்டை அடித்தால் , மாற்று கருத்து சொல்லும் போது ஆப்பு நிச்சயம்... 

Office Rule No. 1

உங்களுக்கு உங்கள் வேலை தாண்டி அடுத்தவரின் வேலைகள் தெரிந்திருந்தாலும் தெரியாதது போல தான் காட்டி கொள்ளவேண்டும்...
.

காதல்

நடந்தால் 
அமர்ந்தால் 
கிடந்தால் 
விடிந்தால்..
உன்னை நினைத்து 

சிரித்து, சிரித்து ...
பேசி பேசி ...
அணைப்பில் சிலிர்த்து
மனதில் குழைந்து
ரகசியம் இல்லையென்று
மனதுக்குள் மாய்ந்து

கண்மூடி கனவுகள் கண்டு
கண் திறந்திருக்கும் போதும்
கற்பனையில் வாழ்ந்து
எல்லாம் நீ என ஆன பின்
சலிப்பு வந்தது ஏனோ???

நம்மை மறந்து மாய்ந்து 
இருந்தது காதலா?
இல்லை இந்த சலிப்பு தான் காதலா?
விடை தெரியா கேள்விகளில்
காதலும் ஒன்று...............

**********


சலசலவென்று வாய் மூடாமல் 
பேசும் என்னை 
குறுகுறுவென பார்க்கும் ஒரு 
பார்வையால் மௌனிக்க வைக்க 
உன்னால் மட்டுமே முடியும்....
********

பெண்

பெண்ணை மலர் என்று சொன்னோம் தீயிலிட்டு பொசுக்கினோம் ..
பெண்ணை கிளி என்று சொன்னோம் சிறகு முறித்து கூண்டில் அடைத்தோம்..

பெண்ணை மான் என்று சொன்னோம் வேட்டையாடி கொன்றோம்
பெண்ணை தெய்வம் என்று சொன்னோம் தெருவில் போட்டு அடித்தோம் ..

பெண்ணை அழகு என்று சொன்னோம் அமிலம் ஊற்றி ரசித்தோம்
பெண்ணைத் தாய் என்று சொன்னோம். ஜடமாக்கினோம். ... 

பெண்ணை மனைவி என்று சொன்னோம் அடிமை ஆக்கினோம்.
பெண்ணை சகோதரி என்று சொன்னோம் விலை பேசினோம்..
அதனால் இனி பெண்ணை பெண் என்றே சொல்வோம்

Wednesday 11 December 2013

ஊடல்

கையுடன் கை கோர்த்து கொள்ள 
மனம் துடித்தாலும் 
விரல்கள் விலகி வெட்கம் காக்கும் ....

நெஞ்சுக்குள் சொல்ல ஆயிரம் 
இருந்தாலும் வார்த்தையாய் 
சொல்ல சில அபத்தங்களே எஞ்சி நிற்கும் .....

உன்னில் கரைந்திட மனம் விழைந்தாலும் 
பொய் கோபம் கொண்டே 
பொழுதுகள் கரையும் ..

பனி போல படர்ந்திருக்கும் சோகம்
உன் சிறு அணைப்பில்
உருகிடும் என்பதை உணரும் நாளும் எந்நாளோ

பைக் தொலைந்த கதை

நானும் என் பெரிய மகனும் ஒரு முறை ATM -ல் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தோம்.. அந்த இடம் சற்று நெரிசலான இடம், பேங்க், ரிஜிஸ்தர் ஆபீஸ், எல்லாம் பக்கம் பக்கமாக இருக்கும் இடம்..என் பையன் பைக்கை பூட்டிவிட்டு வர இருவரும் சென்றோம் பணம் எடுத்துவிட்டு , பக்கத்தில் இருந்த ஒரு கடையில் போன் டாப்-அப் போட்டுவிட்டு திரும்பி பார்த்தல் எங்கள் பைக்கை காணவில்லை....

5 நிமிடம் கூட ஆகி இருக்காது ... எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..என் மகன் மா அப்பாக்கு போன் போடுமா என்று சொல்ல...நானும் போனில் என் கணவரிடம் விஷயத்தை சொன்னேன்.. எங்கு என்று கேட்டார்.. இடத்தை சொன்னேன்..என் கணவர் அங்கு நீங்கள் பைக் நிறுத்திய இடத்தில் நம் பைக் போல வேறு எதுவும் இருக்கா என கேட்க....(எனக்கு பைக் நம்பரே தெரியாது ) என் மகன் ஆமாம் பா என சொல்ல.. என கணவர் நீ அங்கேயே சற்று நேரம் இரு .. யாராச்சும் பைக் மாற்றி எடுத்து போய் இருப்பார்கள்.. வருகிறார்களா பார்.. இல்லை என்றால் நான் ஆபீஸ் விட்டு வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்யலாம்.. என்னோட அனுமானம் மாற்றி தான் எடுத்து போய் இருப்பர்கள்...பைக் பக்கத்திலேயே இரு..... பதட்டபட வேணாம் அம்மாவை வீட்டுக்கு போக சொல்.. நான் இன்னும் அரை மணியில் வந்துவிடுகிறேன் என்றார்கள்..

எனக்கு வீட்டிற்கு செல்ல மனமில்லை.. என் பையனுடன் நின்று கொண்டிருந்தேன் அந்த பைக் பக்கத்தில்.. அப்போது ஒரு கார் வந்து நின்றது..... காரில் இருந்து ஒரு வயதானவரும் ஒரு நடுத்தர வயது மனிதரும் எங்களிடம் வந்து உங்கள் பைக் எங்களிடம் தான் இருக்கு என பையன் தெரியாமல் மாற்றி எடுத்து வந்து விட்டான்.. வண்டலூர் அருகில் பைக் அடிபட்டுவிட்டது.. நான் அப்போது தான் கவனித்தேன் அது என்னுடைய பைக் இல்லை என்று.. நான் ரிஜிஸ்டர் முடித்து காரில் சென்றதால் அப்போது கவனிக்கவில்லை.. நீங்கள் எங்களுடன் காரில் வாருங்கள் உங்கள் பைக் ரிப்பேர் செய்து கொண்டிருகிறார்கள்.. முடிந்தவுடன் எடுத்து வந்து விடலாம் என்று சொல்லி அந்த பைக்கை அந்த நடுத்தர வயது மனிதர் எடுத்தார்.. வயதானவர் காரை ஓட்ட நானும் என மகனும் பின்னால் ஏறிவிட்டு ரொம்ப சந்தோசமாக என கணவரிடம் பைக் கிடைச்சிடுச்சு நான் வெங்கடேஷ் கூட போறேன் பைக் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொன்னவுடன் என கணவரிடம் வாங்கினேன் செம டோஸ்....

அறிவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும், கார் நம்பர் என்ன என்று கேட்க நான் " ஞே" என்று முழிக்க... காரில் யார் யார் இருகிறார்கள்... நீ எதற்கு அவர்கள் பைக் எடுத்து செல்ல அனுமதித்தாய். எங்கள் வண்டியை இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு உங்கள் வண்டியை எடுத்து போங்கள் என்று சொல்ல வேண்டியது தானே... நான் காரில் ஒரு வயதானவர் மட்டும் தாங்க என்று சொல்ல .. காரில் எந்த வழிய வரீங்க.. பைக் எங்கு விபத்து நடந்தாக சொன்னார்கள்..அவர் பெயர் என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க நான் தெரியாது என்று சொல்ல..சரி நீ காரை ஒட்டுபவரிடன் zoo கிட்ட நிறுத்த சொல்ல நான் அதற்குள் அங்கு வந்து விடுகிறேன்... அதற்க்கு மேல் கார் நிற்கவில்லை என்றால் வண்டி கதவை திற என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அவருடைய நண்பர்களுடன் ஆபீஸ் ஜீப் வாங்கி zoo பக்கத்தில் நின்று இருந்தார்.. நாங்களும் அங்கு வர.என்னை ஒரு முறை ..நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன்...

ஒரு வழியாக பைக்கை மெக்கானிக் வந்து பழுது பார்த்து எங்களிடம் ஒப்படைத்து, அவர்கள் பேசி எல்லாம் நல்லபடியாக முடிந்து நாங்கள் வீட்டுக்கு வந்த பின் என் கணவர் சரியான டோஸ் .." நீ படிச்சிருகியே மூளைய கொஞ்சம் கூட யூஸ் பண்ண மாட்டியா.. யாராச்சும் வாங்க உங்க பைக் நாங்க வச்சிருகொம்ன உடனே அவங்க கூட போவியா.. பைக் காணா போன டென்ஷன் என்ன பண்ணலாம்னு யோசிக்ரதுகுள்ள நீ கார்ல முன்பின் தெரியாதவங்க கூப்ட்டாங்க போறேன்னு சொல்ற.. evening 4.30 மணில இருந்து மனுசன பைத்தியம் புடிக்க வச்சிட்ட.. நான் எதனு யோசிப்பேன்..என்று கத்த.. அமைதியாக உக்காந்திருந்தேன்....

என் சிறிய பையன் அப்பா பைக் காணோம்னு டென்ஷன் ஆனது சரி.. அம்மா கார்ல போனதுக்கு ஏன்பா டென்ஷன் ஆனீங்க... யாராச்சும் அம்மாவை கடத்திட்டு போயடுவங்கலோனா??? என்கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி இருந்தா நான் சொல்லி இருப்பேன்ல அப்படினான்.. என்னடா செஞ்சுருப்பனு அவங்க அப்பா கேக்க.. "அம்மாவா பத்தி தெரியாதவங்க யாரும் கடத்திட்டு போனா கூட அம்மா டென்ஷன் ஆகி ருத்ர தாண்டவம் ஆடறத பார்த்தா உங்க அட்ரெஸ் தேடி கண்டு புடிச்சு அம்மாவை உங்க கைல ஒப்படைச்சுட்டு சாஷ்டங்கமா உங்க கால விழுந்து கலியுக தெய்வம் சார் நீங்கன்னு கும்பிட்டு போவாங்க பா", னு சொல்ல... நான் கோபமாக பக்கத்தில் இருந்த ஸ்பூனை எடுத்து என் பையன் மீது வீசினேன்.. அவன் நகர சோபாவில் உட்கார்ந்திருந்த என் கணவரின் மண்டையில் விழ .. எனக்கு இது தேவை தான்னு அப்பாவியாய் சொல்ல........ நான் என்னத்த சொல்றது    

Tuesday 10 December 2013

விமர்சனம்

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நமக்கே பிடித்த படங்கள் என்று சில இருக்கும் அதில் எனக்கு பிடித்த ஒன்று "மௌன ராகம்".. அதில் என் தோழிகள் எல்லாரும் கார்த்திக்கின் கேரக்டரை பிடிக்கும் என்று சொல்ல நான் கார்த்திக் கேரக்டரை ரசித்தேன் ஆனால் பிடித்தது மோகன் என்று சொல்லுவேன்..

ரேவதியை ஆரம்பத்தில் விரும்புவதாக இருக்கட்டும் அவர் விரும்பவில்லை என்று தெரிந்து விலகி நிற்கும் போது அந்த ,மோகன் கேரக்டர் உயர்ந்து நிற்கும் மனதில்... அதன் பின் ரேவதி மனம் மாறி மோகனை நேசிக்கும் போது முள்ளாய் மோகன் வார்த்தைகாளால் (ரேவதி முதலில் சொன்னது தான்) குத்தும் போது மட்டும் பிடிக்கலை என்று சொல்லி கொண்டு இருந்தேன் என் கணவரிம்... அவர் நீங்க வாய் இருக்குன்னு என்ன வேண்டுமானாலும் சொல்லுவீங்க அப்புறம் மனசு மாறுவீங்க நீங்க சொன்னத எல்லாம் மறந்துடணும் என்ன நியாயம்...அது ஏன் பொண்ணுங்க எல்லாம் நடக்காத ஒண்ணுக்கே ஆசைபடறீங்க என்று கேட்க... நான் ஆமாம் அப்படி தான் என்று சொல்லி வந்துவிட்டேன்.....

ஒரு படத்துக்கு முப்பது வருடம் கழித்து விமர்சனம் எழுதியவள் நானாக தான் இருக்க முடியும்..

அட்வைஸ்

ஒரு நண்பர் என்னிடம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் திருமணமும் செய்து கொள்ள போகிறேன் விரைவில் அந்த பெண்ணை காலம் முழுதும் சந்தோசமா வைச்சுக்கணும் நான் என்ன செய்யனும் என்றார்...

சும்மாவே நான் நாலு மணி நேரம் பேசுவேன் அவர் வேற என்ன மதிச்சு கேட்டாரா நானும் எனக்கு தெரிஞ்சது புரிஞ்சது எல்லாம் சொன்னேன்...

அவங்களுக்கு என்னலாம் பிடிக்கும்னு கேட்டு அத அவங்க எதிர்ப்பார்க்காத நேரத்துல செஞ்சு அசத்தனும்...அவங்க என்ன சொன்னாலும் சரி சரி ன்னு தலையாட்டனும்.. கரெக்ட்டா அவங்க வர சொல்ற நேரத்துக்கு வர சொல்ற இடத்துக்கு வந்துடனும்...அவங்களுக்கு நொறுக்ஸ் பிடிக்கும்னா கேட்காமலே வாங்கி கொடுக்கணும்,. இதெல்லாம் கல்யாணத்திற்கு முன்..

கல்யாணத்திற்கு பின் காலை அவர்கள் தான் முதலில் எழுந்து காபி கொடுக்கணும்னு எதிர்ப்பார்க்ககூடாது நீங்கள் எழுந்து காபி போட்டு கொடுத்து அசத்தனும்...எல்லா வேலையும் செய்யனும் நான் இத தான் செய்வேன் அத செய்ய மாட்டேன் அப்படி எல்லாம் சொல்ல கூடாது...கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணம் தான் ஆயிடுச்சே இவளுக்கு நாமே ஒரு பரிசு அதன் பின் எதற்கு பரிசு என்று சினிமா தனமா பேசி கஞ்சத்தனம் பார்த்து அவ பிறந்த நாளுக்கு கூட ஒண்ணும் வாங்கி தராம இருக்க கூடாது...முதலில் எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கணும்

எல்லாவற்றையும் விட அவங்கள சுதந்திரமா இருக்க விடனும்.. என்று சொல்ல...

நான் ஒண்ணே ஒண்ணு கேக்கலாமா என்றார், நானும் தாரளமாக என்றேன்...

பெண்கள் கல்யாணத்திற்கு ஆள் தேடறீங்களா இல்லை கொத்தடிமை தேடறீங்களா? என்று கேட்க நான் பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்
யாரை பார்த்து என்ன கேக்றீங்க என்று சத்தமாக கேட்டு நாங்கள் அடிமைகளை தேடுவதில்லை அடிமை மாதிரி உள்ளவங்கள தான் தேடுறோம்....அந்த வித்தியாசம் கூட தெரியாம நீங்க காதல், கல்யாணம் எல்லாம் ஆசைபட்டா என்று சொல்ல

அவர் ஐயோ சாமி ஆள விடுங்க எனக்கு காதல், கல்யாணம் எதுவும் வேண்டாம் நான் வடக்க இமயமலை தாண்டி எங்கனயாச்சும் ஓடி போறேன்....ஒண்ணு மட்டும் நிச்சயம் நான் கல்யாணம் பண்ண மாட்டேன் அப்படியே பண்ணினாலும் உங்க மாதிரி ஆளுங்க பார்வையில என் பொண்டாட்டியை காண்பிக்கவே மாட்டேன் அப்படின்னு ஓடிட்டார்.....இனி யாரும் அட்வைஸ் கேப்பீங்க....

மனிதர்கள்

பரதேசி படம் பார்த்து கொத்தடிமை வாழ்க்கை முறை பற்றி நிறைய பரிதாப்படுகிறோம்..ஆனால் அதற்கு நிகரான உழைப்பு சுரண்டல் நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது...கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு தான் கடந்து செல்கிறோம்...

நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது என் கணவருக்கு வேண்டியவரின் கம்பெனியில்..அது ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம்...ஒரு டிபார்மெண்ட் இன்சார்ஜ்ஜாக எனக்கு வேலை எனக்கு கீழ் இரண்டு பெண் பிள்ளைகள் வோர்கர்ஸ்ஸாக.. நான் வீட்டிலிருந்து அப்போது தான் பிராக்டிக்கலாக வெளி உலகம் வருகிறேன்...என் கணவர் மேல் பயமும் MD க்கு அவர் நெருக்கமானவர் என்பதாலும் என்னிடம் அனைவருமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தனர்..

எனக்கு கீழ் இருந்த இரண்டு பெண்களிடமும் பேச்சு கொடுக்க அவர்களில் ஒருவர் பி,எஸ் .சி பயோ கெமிஸ்ட்ரி முடித்திருந்தார் இன்னொருவர் டிப்ளோமா முடித்திருந்தார்...நீங்கள் இருவரும் படித்துவிட்டு ஏன் ஹெல்பராக வேலை செய்கிறீர்கள் இங்கு என்று கேட்டேன்..அதில் ஒருவர் பஸ் வசதி இல்லாத கிராமம் அந்த பெண் B.Sc., படித்திருந்தாலும் விவரம் தெரியாமல் பார்க்க வேறு சுமாராக இருந்தாள் அந்த பெண் காலை 4 - 5 மணிக்கே எழுந்துவிடுவாளாம் கம்பெனி பஸ் 6 மணிக்கு வரும் அதில் வந்துவிடுவேன் காலை மதியம் இரண்டு வேலையும் கம்பெனில டிபன் சாப்ப்பாடு, மாலை டீ பிஸ்கட் கொடுத்துடுவாங்க..வீட்டுக்கு போக 9 -10 ஆயிடும் ..500/- ரூபாய் என்பது என் குடும்பத்துக்கு பெரிய வருமானம் என்று சொல்ல நீ நான் படித்து இருக்கிறேன் எனக்கு வேறு வேலை கொடுங்க அப்படின்னு கேக்கலாமே என்று சொல்ல அதெல்லாம் அழகா இருந்தா தான்க்கா ஸ்டாப் இல்லைன்னா வோர்கர் தான் என்று சொல்ல...அதன் பின் நான் அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை இல்லாத நேரத்தில் கம்யூட்டர் பற்றி அடிப்படை சொல்லி கொடுத்தேன்...இது போல அந்த கம்பெனியில் பல இடங்களில் நிறைய விஷயங்கள் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னால் என் கணவருக்கும் தர்ம சங்கடம்...என்னால் முடிந்தது அந்த இரண்டு பெண்களுக்கும் ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு கிளம்ப வேண்டும் என்று HR டிபார்ட்மெண்ட்ல பேசி இருவரையும் வேறு ப்ராஞ்ச்க்கு ஸ்டாப்பா ப்ரொமொட் செய்து அனுப்பிவிட்டு நானும் ரிசைன் செய்துவிட்டு வந்து விட்டேன்...

எனக்கு தெரிந்து நிறைய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரி தான் பெண்கள் நிலை...கிராமங்களில் இருந்து பெண்களை இலவச பஸ், சாப்பாடு என்று கூட்டி வந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை உழைப்பை சுரண்டி எடுக்கிறார்கள்...இங்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட், அவருக்கு கமிஷன் எல்லாம் உண்டு....அதை விட அந்த பெண்களிடம் இருந்தும் ஒரு தொகை வேலைக்கு சேர்த்துவிட வாங்கி கொள்கிறார்கள்.... . மேற்பார்வையாளர்கள் 10,,000 மேல் சம்பளம் பெற இவர்கள் வெறும் 500க்கும் ஆயிரத்துக்கும் மாடு மாதிரி உழைக்கிறார்கள்..............

சுவராஸ்யமான மனிதர்கள்

நான் சந்தித்த சுவராஸ்யமான மனிதர்கள்:

நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த இடத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அருமையான சூழலில் வேலை கிடைத்தது.... அவ்வளவு அருமையான மனிதர்கள் படிப்பில், பண்பில் உயர்ந்தவர்களுடன் பணி புரிய என்னுடைய அலுவலக நேரம் அவ்வளவு சந்தோசமாக மாறியது....

மதிய உணவு இடைவெளி நேரங்களில் எவ்வளவு விஷயங்கள் அலசப்படும்..கிண்டல் , கேலி, உலக படிப்பு, உலக சாப்பாடு .ஆன்மிகம், காதல், லோக்கல் ஆஸ்பிட்டலில் நடக்கும் நிகழ்வுகள், என்று நான் தினமும் புதிதாக ஒவ்வொன்று தெரிந்து கொள்வேன்....அதிலும் என்னுடன் பணி புரிந்த ராம்குமார் (தற்போது கத்தாரில் பணி புரிகிறார்) பேசுவது அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும்...பெரும்பாலும் யாரையும் பேச விடாமல் அவரே முந்தி கொள்வார்...அவரின் பேச்சின் சுவராஸ்யம் காரணமாக நாங்கள் அவர் பேசுவதை கேட்கவே விரும்புவோம்...அவரது கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் நடந்தது என ஆரம்பித்து எங்கெங்கோ சென்று விடுவார், இடையில் சுபா நான் எங்க விட்டேன். (இவர் தற்போது ஆஸ்திரேலியாவில்) என்று கேட்க அவர் எடுத்து கொடுக்க இதற்க்கு தான் சுபா பக்கத்துல இருக்கணும் பாருங்க நீங்க எல்லாம் பேச்சு பராக்குல விட்டுட்டீங்க அவங்க கரெக்டா எடுத்து கொடுக்கிறாங்க என்று அவர்களையும் கலாய்ப்பார்.. எப்பவும் நான் தான் பேசணுமா நீங்க யாராச்சும் பேச கூடாதா என்று சொல்லி யாராவது பேச ஆரம்பித்தால் இவர் இப்படி தான் என்று தன் ரூட்டுக்கு பேச்சை கொண்டு சென்று விடுவார்... ..மிமிக்ரி எல்லாரையும் போல செய்வார்...சாப்பிடும் போது புரை ஏறும் அளவுக்கு எல்லாம் சிரித்து இருக்கிறோம்....

ஒரு முறை நான் சார் என்னை போல மிமிக்ரி பண்ணுங்க என்று சொல்ல...ஐயோ நீங்க பெரியவங்க எவ்ளோ பெரிய பிள்ளைகளுக்கு அம்மா உங்களை எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்ல சார் சார் ப்ளீஸ் என்று சொல்ல அவர் என்னை மாதிரி வேகமாக நடந்து பேசி காண்பிக்க எல்லாரும் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது..நான் அவ்வளவு வேகமாக நடப்பேன் பேசுவேன் என்பதே எனக்கு அப்போது தான் புரிந்தது...பின் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் எங்கள் வீட்டுக்கு நண்பர்கள் என்று வர நட்பு அழகாக சென்றது....அதன் பின் முதலில் சுபா அவர்களுக்கு வேலை கிடைத்து ஆஸ்திரேலியா செல்ல, ராம் சார் கத்தார் செல்ல, கணேஷ் அவர்களும் ஆஸ்திரேலியா செல்ல அந்த சுவராஸ்யமும் அவர்களுடனே சென்று விட்டது...என் மகனுக்கு கிட்னி ஸ்டோன் வந்த போது நான் மிக கலக்குமுற்று இருந்தேன்...ராம் சார் கத்தாரில் இருந்த போதும் அவர் மனைவியிடம் அவர்கள் பையன் மேல் பயங்கர பிரியம் நீ போய் நேரில் பார்த்து தைரியம் சொல்லு என்று சொல்ல அவர்களும் (இப்போது கைனகாலாஜி மேற்படிப்பு படிக்கிறார்கள்) வந்து பார்த்து விஜயா ஹாஸ்பிட்டலில் ப்ரெண்ட் டாக்டர்கள் இருக்கிறார்கள் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் இதெல்லாம் சாதாரணம் என்று கூறிய ஆறுதல் அந்த நேரத்தில் எனக்கு மிக பெரிய பலம்....

கத்தார் போய் சில மாதங்கள் கழித்து திரும்பி வந்த போது குரல் மாற்றி என் பெயரை சொல்லி அது நீங்க தானே நீங்க ---- அங்க தானே வேலை பார்கறீங்க நான் டிவில இருந்து பேசுறேன் என்று என்னை குழப்பி நான் அப்போது இரவு சாப்பாடு என் கணவருக்கு வைத்து கொண்டு இருந்தேன்...என் கணவர் ஹேய் ஏதாவது ராங் நம்பரா இருக்க போகுது பசிக்குது கட் பண்ணு என்று சொல்ல நான் இல்லைங்க என் பெயர், வேலை பார்க்கும் இடம் எல்லாம் சரியா சொல்லறாங்களே என்று குழம்ப என் கணவர் சரி போனை குடு உனக்கு நேத்து பேசினவங்களே நியாபகம் இருக்காது என்று வாங்க போக மேம் நான் ராம் பேசுறேன் என்று சொல்லி என்னை வழிய வைத்தது மறக்கவே முடியாது....

இப்போது முகநூலிலும்,போனிலும் என்று நட்பு தொடர்கிறது.....நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் நண்பர்களாக அமைந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதை சில விஷயங்கள் அசை போடும் போது புரிகிறது... அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்த நாட்கள் நெஞ்சில் என்றும் பசுமையாக...........

மறக்க முடியா மனிதர்கள்

நான் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள் :

சென்னை புதிது அப்போது எங்களுக்கு ..என் சிறிய மகன் கைக்குழந்தை வயிற்று போக்கு நிக்காமல் அன்று சனிக்கிழமை வேறு மயிலாப்பூரில் டாக்டரிடம் காண்பிக்க மருந்து கொடுத்து சரியாகிவிடும் என்று அனுப்பிவிட்டார்கள்...ஆனால் மறுநாள் நிற்கவே இல்லை ஞாயிறு டாக்டர்களும் வரவில்லை...என்ன செய்ய என்று தெரியவில்லை...பெரிய மகன் அம்மா வீட்டில் வளர்த்ததால் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது..இந்தளவு போன் தொடர்பும் அப்போது இல்லை ..என் கணவரும் நானும் செய்வதரியாமல் மனம் கலங்கி நிற்க எதிர் வீட்டு மாமி " தேவகி ஹாஸ்பிடல்" போ அங்கு கண்டிப்பாக யாராவது டாக்டர்கள் இருப்பார்கள் என்று சொல்ல நானும் கணவரும் சென்றோம்..

ஹாஸ்பிட்டலில் ட்ரிப்ஸ் ஏற்றவேண்டும் உடனே அட்மிட் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள்... 3 மாத குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு நரம்பு எடுக்க ஊசியில் குத்த என்னையும் என் கணவரையும் வெளியே அனுப்பி விட்டார்கள் என் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்க நாங்கள் இருவருமே அழ ஆரம்பித்துவிட்டோம்..பெரியவர்கள், உறவினர்கள் யாரும் இல்லாத கொடுமை அப்போது தான் தெரிந்தது...என் பிள்ளையை பார்க்க பார்க்க அழுகை வேறு ட்ரிப்ஸ் தவிர பால், தாய்ப்பால் எதுவும் தரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. இரவு பையன் கண் விழித்து பசியில் கத்துகிறான்..என்ன செய்ய என்று தெரியவில்லை நர்ஸ் போன் பண்ணி டாக்டரிடம் சொல்ல டாக்டர் பொட்டுகடலை மாவு கஞ்சி சிறிது உப்பு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம் என்று கூறிவிட்டார்...கீழே செல்ல கேண்ட்டீன் பூட்டி விட்டார்கள் என்று கணவர் சொன்னார் இரவு பதினோருமணி...ஆஸ்பிட்டல் விட்டு வெளியேயும் வர முடியாது குழந்தையோ அழுகிறது...நர்ஸ் கொஞ்சம் இருங்கள் என்று குழந்தை கையில் மருந்து ஏற்றி கொண்டு இருந்த ட்ரிப்ஸ் கழட்டி நீங்கள் அணையுங்கள் குழந்தையை நான் கஞ்சிக்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று என் கணவரை கூட்டி கொண்டு சென்றார்...

அவர்கள் வரும் வரை என் குழந்தையை வைத்து கொண்டு தவித்தேன்...நர்ஸ் யாரையோ எழுப்பி எப்படியோ கஞ்சி செய்து எடுத்து கொண்டு வந்து குழந்தைக்கு கொடுக்க குழந்தை அழுகை நிறுத்தியது...நான் சோர்ந்துவிட்டேன் அழுதழுது..நர்ஸ் நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள்.. விடியும் வரை உங்கள் குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன்...வயிறு நிரம்பிவிட்டது ட்ரிப்ஸ்ல மருந்தும் இருப்பதால் குழந்தை தூங்கும் என்று சொல்லி அவர் கூடவே இருந்து கவனித்து கொண்டார்..அந்த நர்ஸ் பெண் ஒரு கிறிஸ்துவ மலையாளி பெண்...

அதன் பின் குழந்தை படிப்படியாக சீரடைய அதற்குள் என் உறவினர்கள் வந்து விட்டார்கள் என்னையும் குழந்தையும் கவனித்து கொள்ள ஆனால் அந்த இரண்டு நாட்களும் அந்த பெண் ஆஸ்பத்ரியில் செய்த சேவை மறக்க முடியாதது...நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது என் கணவர் தனியாக அந்த பெண்ணிடம் பணம் கொடுக்க அவர் வாங்க மறுத்து விட்டார்...என் வேலைக்கு நான் சம்பளம் வாங்குகிறேன்...உங்கள் குழந்தை பசியில் அழுதது அதை பார்த்து நீங்கள் அழுதது எல்லாம் என் உணர்வையும் உலுக்கியது அது உணர்வு அதற்கு எல்லாம் பணம் கொடுத்து அதன் மதிப்பை குறைக்காதீர்கள் என்று சொல்லினார் ...நான் அந்த பெண்ணின் கையை பற்றி கொண்டேன் .. சம்பளத்துக்கு தான் வேலை செய்கிறார்கள் ஆனாலும் அதையும் தன வேலையின் பொறுப்பு உணர்ந்து செய்பவர்கள் எத்தனை பேர்....எந்த ஹாஸ்பிடல் சென்றாலும் அந்த பெண்ணை என் கண்கள் தேடும்...தேவகி ஹாஸ்பிடல் என்று ஏதாவது செய்தி கேட்டாலே அந்த பெண்ணின் முகம் தான் மனக்கண்ணில் வரும்.........

ஆட்டோ கிராப்

இப்போது பெரும்பாலும் யாரும் கடிகாரம் மணி பார்க்க உபயோகிப்பதில்லை..மொபைல் அந்த வேலையை செய்துவிடுகிறது...

நான் முதன் முதலில் வாட்ச் கட்டியது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் தந்தையின் நண்பர் வெளிநாடு சென்று வர அவரிடம் இருந்து என் தந்தை வாங்கி எனக்கு அன்பளிப்பாக தந்தது...அப்போது அதன் விலை ஐநூறு(அப்போது அது கொஞ்சம் காஸ்ட்லி) வாங்கி கொடுத்து இருந்தார்கள்...ஆலிவ் கிரீன்ல சின்னதா ஓவல் சைஸ்ல ரேடியம் உள்ள வாட்ச், கிழமை, தேதி எல்லாம் தெரியும் ஆட்டோமேடிக் வாட்ச்..(அப்போது கீ கொடுக்கும் வாட்ச்சுகள் தான் அதிகம் )

நான் அதை என்னுடைய பதினோராம் வகுப்பு வரை கட்டியிருந்தேன்...வளையல் மறந்தாலும் வாட்ச் கட்ட மறந்ததில்லை... வாலிபால் விளையாட போகும் போது கழட்டி வைத்து விடுவேன்...ஒரு நாள் கழட்டாமல் செல்ல விளையாடும் போது சட்டென்று கழட்டி ஸ்கர்ட் பாக்கெட்டில் போட்டு விளையாட ஆரம்பித்துவிட்டேன்.. ப்ராக்டீஸ் முடிந்து கை கால் முகம் கழுவி சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்ப நேரம் பார்க்கும் போது தான் வாட்ச் நியாபகம்... பார்த்தால் காணவில்லை..இருட்ட ஆரம்பிக்கும் நேரம், நானும் நான் விளையாடிய இடம், முகம் கழுவிய இடம் எல்லாம் தேடி கிடைக்கவில்லை ..

மனம் ரொம்ப சங்கடம்...வீட்டில் வந்தால் அம்மா இவளுக்கு என்னைக்கு பொறுப்பு இருந்திருக்கு என்று டோஸ் ... எவ்வளவோ பொருட்கள் தொலைத்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளாத நான் அந்த வாட்ச் தொலைத்தற்கு ரொம்ப பீல் பண்ணினேன்...அதன் பின் மறுநாள் தேடியும் பள்ளியில் சொல்லியும் கிடைக்கவில்லை...இன்று வரை அதற்கு பின் எவ்வளவோ வாட்சுகள் மாற்றி மாற்றி வாங்கிவிட்டேன்..ஆனால் ஓடும் வரை அதன் பின் வேறு ஒன்று என்ற ரீதியில் தான் போய் கொண்டு இருக்கிறது...

குழந்தை உலகம்

குழந்தைகளின் உலகம் எவ்வளவு ரம்மியமானது...அதுவும் விவரம் புரியாமல் அந்த பருவத்தில் அவற்றின் பயங்களும், கேள்விகளும் நமக்கு எத்தனை வயதானாலும் மறப்பதில்லை..அதை அவர்கள் வளர்ந்தவுடன் சொல்லி கலாய்ப்பது இருக்கே.......

என் சிறிய மகன் சிறு வயதில் நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பான்..அப்போது அவன் எல்.கே.ஜி. படித்துகொண்டு இருந்தான்....நாங்கள் அவனின் இந்த இடைவிடாத கொறிக்கும் பழக்கத்தை கிண்டல் செய்வோம்...என் தங்கை ஒரு நாள் நல்ல வேளை பெண்ணாக பிறக்கவில்லை பிறந்து வளர்ந்தால் நாளை பிள்ளை பெக்க்ரப்போ வயிற்றையும் , வாயையும் கட்றது பெரிய கஷ்டமா இல்ல இருக்கும் என்று சொல்லி சிரிக்க...நாங்கள் அதன் பின் வேலை என்று பிஸி ஆகிவிட்டோம்..

அதன் பின் இரவு என் பையனுக்கு எப்போதும் கதை சொல்ல வேண்டும் இல்லை அவன் கதை சொல்வதை கேட்க வேண்டும் அன்று படுத்தவுடன் எப்பமா குழந்தை பிறக்கும் என்று கேட்டான்...நானும் அது பெரியவர்களா வளர்ந்த பின் என்று சொல்ல அப்ப நானும் பெரியவனான பின் எனக்கும் குழந்தை பிறக்குமா என்று கேட்க ஆமாம் டா இப்ப உனக்கு புரியாது நீ வளர்ந்த பின் சொல்கிறேன் என்று சொல்ல அவன் அழ ஆரம்பித்துவிட்டான்....என்னடா என்னடா என்று கேட்க சித்தி சொன்னுச்சே குழந்தை பிறந்தா 3 நாள் ஹாஸ்பிட்டலில் இருக்கனுமாம் ...சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டார்களாம் ...அப்ப எனக்கும் 3 நாள் சாப்பிட கொடுக்க மாட்டாங்களா என்று அழ........... எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை அவனை நிறைய சொல்லி சமாதானம் செய்தோம் ...பெண் பிள்ளைக்கு தான் பிறக்கும் உனக்கு ஒன்றும் இல்லை அப்படி இப்படின்னு அதை இன்று வரை சொல்லி அவனை கலாய்த்து கொண்டு இருக்கிறோம்.............உண்ணாவிரதம் இருக்க சொன்ன உன்னை தாண்டா முதலில் அனுப்பனும் என்று....

தேடல்


இம்முறை கும்பகோணம் சென்ற போது என் பால்ய வயது நண்பனை சந்தித்து அளவளாவ சிறிது நேரம் கிடைத்தது.மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்...எங்கள் வீட்டு மாடி பகுதியில் குடியிருந்தவர்கள்....சிறு வயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம்.மகாமகம் தெப்ப குளத்தில் என் தம்பி குழந்தைகளுடன் தெப்பம் பார்த்த போது மனம் ரொம்ப லேசாக இருந்தது...

என் நண்பன் எப்படி இருக்கிறது வாழ்க்கை என்றான்... நல்லா போய்கிட்டு இருக்கு.. நீ ஏன் சென்னை பக்கம் வரவில்லை. ட்ரைனிங் முடிச்சதோட சரி.. அப்புறம் இங்கயே செட்டில் ஆயிட்டியே ஏன்னு கேட்டேன்? கமலி காலைல எழுந்து பஸ் புடிக்க ஒட வேணாம், பொறுமையா எழுந்து நிதானமா 9 - 10 மணிக்கு கடைக்கு போனா போதும், மதியம் வீட்டில வந்து சாப்ட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் திருப்பி காபி குடிச்சுட்டு கோயில ஒரு சுத்து சுத்திட்டு திருப்பி கடைக்கு போய்ட்டு ராத்திரி வீட்டுக்கு வரேன்.. ரொம்ப சம்பாரிக்கல, கும்பகோணத்துலயே வீடு கட்டிட்டேன், தங்கைகு கல்யாணம் பண்ணிட்டேன், பையன மெட்ரிகுலெஷன்ல படிக்க வைக்கிறேன், பெரிய பரபரப்பு இல்ல.. எனக்கு இது புடிச்சிருக்கு,,,

எங்கப்பா வற்புருத்தல நான் சென்னை வந்திருந்தா இவ்ளோ நிம்மதியா இருந்திருப்பேனா தெரியல கமலி.. ஆரம்பத்துல என் அப்பாக்கு பயங்கர வருத்தம்,.. ஆனா நான் இங்கயே இருக்கனும்னு முடிவு பண்ணினது சென்னைக்கு ட்ரெயினிங் வந்தப்போ தான்.. சொந்தகாரவங்க, ஃப்ரண்ட்ஸ், எல்லாம் நின்னு பேச கூட நேரம் இல்லாம ஒடறத பார்த்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தென்.. உண்மைய சொல்லு, நீ என்ன இந்த நாட்கள்ல எத்தனை நாள் நினைச்சு பார்த்திருப்ப அப்படின்னு கேட்டான்.. என்னால் பதில் சொல்ல முடியல.. நீ என் மனைவியிடம் கேள் அப்படின்னான்.. அவன் மனைவி கண்டிப்பா ஒரு நாளுக்கு ஒரு வாட்டியாச்சும் உங்க பேர சொல்லாம இருக்க மாட்டாங்க என்று சொன்ன போது வருத்தபட்டேன்.. அவன் நீ சங்கடபடாத உனக்கு அந்த பரபரப்பு வாழ்க்கை புடிச்சிருக்கு, அந்த பரபரப்புக்கு விலை, ஃப்ரண்ட்ஸ் மட்டும் இல்ல, சொந்தம் பந்தங்களும் தான், நான் இந்த வாழ்க்கையில் கிடைத்த எதையும் இழக்க தயாரில்லை.. எனக்கு இது போதும் என்று சொன்ன பொது நான் வாழ்க்கையில் மனிதர்களிடம் இருப்பதை விட்டு எதை புத்தகங்களில் தேடுகிறேன் என்று சிறிது நேரம் நினைத்தேன்…..

விரிசல்

கூரிய முனை போதும்
அடைத்து வைக்கப்பட்ட காற்றை
வேகமாக வெளியேற்ற

அடைக்க முடியா
துளை போதும்
கப்பலை மூழ்கடிக்க

கவனிக்காத விரிசல் போதும்
தண்ணீர் அடைத்து வைக்கும்
அணையை உடைக்க.

ஒரு சொல்
சிறு அலட்சியம் போதும்
அன்யோன்மான உறவுகளை
அந்நியமாக்க...

ஏக்கம்

காதலுக்காக காமம்
காமத்துக்காக காதல்
காமமின்றி காதலில்லை
காதலின்றி காமமில்லை
என

காதலுக்கும் காமத்துக்கும்
ஆயிரம் இலக்கணங்கள்
சொல்லப்பட்டாலும்

எல்லையில்லா அன்பில்
ஒரு துளியாய் கரைந்திட
துடிக்கும் மனம்
நிறைவான காமத்திலும்
நிலைகொள்வதில்லை..

Thursday 5 December 2013

அகலிகை

ராமனின் பாதம்பட்டு கல்லாய் இருந்து
உயிர்பெற்ற அகலிகை போல
மர(றி)த்து போன பெண்மையும்
உயிர்பெற்றுவிட எத்தனிக்கும்..

பேசப்படும் வார்த்தைகளில்
அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளில்
காட்டப்படும் அக்கறையில்
பொழியப்படும் அன்பில்
பிரகாசிக்கும் அறிவில் ஈர்க்கப்பட்டு...

அக்கறை, அன்பு, எல்லாவற்றிற்கும்
காரணம் புலப்படும் போது
கல்லாகவே இருக்க செய்யும்
சாபம் தேடி நிறைய அகலிகைகள்..

பாலினம்

கிடைக்கும் பாராட்டுகளில் துள்ளி குதித்து
மகிழ்ந்துவிடவில்லை என்றாலும்
புன்னகையுடன் கடந்து செல்வதை கூட 
வறட்டு புன்முறுவலாக சுருங்க செய்துவிடுகிறது 
பாராட்டு எனக்கானது அல்ல
என் பாலினத்துக்கு ஆனது என்ற வார்தைகள் ....

ப்ரியம்

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ 
எல்லாம் மறந்து தொலைக்கும் 

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை............


****************
எல்லையில்லா அன்புக்கு கூட
எல்லைகள் உண்டு என்பது
சில பொழுதுகளில் புரிந்தாலும்
எல்லை கோடு எது என்பதை
வரையறுக்க முடியாததால்
உள்ளுக்குள் சுருங்கி
எல்லை தேடி தொலைந்து போகிறோம்

Wednesday 13 November 2013

சொல்ல தான் நினைத்தேன்

சொல்ல தான் நினைத்தேன்...
எனக்கு பிடித்ததை எல்லாம்
உன் அம்மாவுக்கு இது பிடிக்கும்
உன் தந்தைக்கு இது பிடிக்கும்
தங்கைக்கு இது பிடிக்கும் 
எனக்கு இதெல்லாம் பிடிக்கும்
என வாசித்த பட்டியலின் நீளம்
பார்த்தவுடன்
எனக்கு பிடித்ததை சொல்லாமலே
இருந்துவிட்டேன்..
இவ்வளவு பேருக்கு பிடித்தது
தெரியும் உனக்கு
என்னுடைய விருப்பம் தெரியாமலா
போய்விடும் என்று.........

ஆனால் சில நாள் கழித்த பின்
தான் தெரிந்தது நான்
உன்னையும் உன்னை சார்ந்தோரையும்
திருப்திபடுத்த உன் வீடு வந்தேன் என்று
சரி என்றாவது புரிந்து கொள்வாய்
என்று ஏக்கத்திலேயே நாட்கள்
நகர்ந்து செல்ல
இப்போது உன் வீட்டாரின் விருபத்தோடு
நம் குழந்தைகளின் விருப்பமும்
சேர்ந்து கொள்ள
என் விருப்பம் என்னவென்ரே
தெரியாமல் போய்விட்டது

விருப்பமே இல்லாமல் இல்லையே
அது மறந்து தானே போய் இருந்தது
மறைந்து போகவில்லையே..
என்றோ ஒரு நாள் விரக்தியின்
உச்ச கட்டத்தில் அது வெடித்து வெளியே வர
அன்று பதறுகிறாய் ....
என் சீற்றம் கண்டு...
ஆனால் என் சீற்றம் நீ
சீண்டாமல் போனதால் என்று
அப்போதும் உணரமாட்டாய்............
இல்லறம் குலைக்க வந்ததாய்
என்னை தான் ஏசுவாய்..............

Wednesday 9 October 2013

வினை பயன்

ஒவ்வோர் வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டன் விதி. அதுபோல நாம் செய்யும் நன்மை தீமைக்கும் பலன் கண்டிப்பாக உண்டு. அது கர்மா, விதி, கடவுள் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழைக்கலாம்.

கதை போலும் நிகழ்வு..

தெருவில் ஒரு நாலு வீடு தள்ளி சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் வீடு உண்டு.. செல்வ செழிப்பு மிக்க குடும்பம். பிள்ளைகளுக்கு எல்லாம், நேரு, காந்தி, போஸ் என்று பெயர்கள்.. முத்த மகன் பெயர் நேரு. செல்வ செழிப்பு, அப்பாவின் புகழ் தந்த செல்வாக்கு, செல்லம், கூடா நட்பு, படிப்பில் நாட்டமில்லாமை எல்லாம் அந்த பையனை ஒரு மோசமான மைனர் பையனாக மாற்றியது. குடி, சிகரெட், பெண் சகவாசம் என எல்லா பழக்கங்களும் சேர பெற்றோர் பையனை சரி பண்ண முயற்சி செய்யாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் சரி ஆகிவிடும் என்று பெண் பார்க்க வசதி ஏகமாக இருந்தாலும் உள்ளூரில் அவ்வளவாக பெண் கிடைக்காமல் மதுரை பக்கம் இருந்து இவர்களுக்கு சம அந்தஸ்த்தில் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தார்கள்.

பெண் அதிகம் சத்தமாக கூட பேச தெரியாத அமைதியான பெண். அப்பா கண்டித்தால் பணம் தர மறுத்தால் வந்து மனைவியை அடிப்பான். வார்த்தைகளால் நோகடிப்பான்.. ஆனாலும் அந்த பெண் அழ மட்டுமே செய்வார். மாமனார் மாமியார், கொழுந்தனார் என்று எல்லாரும் அந்த பெண்ணுக்கு சப்போர்ட் செய்ய அதற்கும் மிக கேவலமான காது கூசும் வார்த்தைகளால் அந்த பெண்ணுக்கு திட்டு.. மற்றவர்களின் அன்பால் அந்த பெண் தன் பிறந்தவீட்டிற்கோ, அக்கம் பக்கம் பேசுவதோ கிடையாது.

இதனிடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.. மனைவி மீது இல்லை என்றாலும் பிள்ளை மீது அதிக அன்பு உண்டு.. ஆனால் மனைவியை அடித்து மிரட்டி காசு வாங்கி குடித்து ஊர் சுற்றுவது, பிற பெண்கள் சகவாசத்தை விடவில்லை..ஒரு நாள் இதே போல சண்டை நடக்க அவன் மனைவி என்னிடம் இருக்கும் நகை எல்லாம் அப்பா அம்மாவிடம் கொடுத்துவிட்டேன் பணமும் இல்லை என்று சொல்ல.. பணம் தரலேன்னா பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டினான். சண்டை தெருவுக்கே கேட்டது.. அன்று எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு சிறிய கோவிலில் அம்மனுக்கு பாலபிஷேகம் என்று ஸ்பீக்கர் சத்தம் வேறு..

தெரு மக்கள் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் உட்பட எல்லாம் தீபாராதனை பார்க்க சென்று விட இவன் மனைவியுடனான சண்டை முற்றி ஒரு வேகத்தில் பெட்ரோல் எடுத்து வந்து ஊற்றி கொளுத்திவிட்டான்.. அக்கம் பக்கம் சத்தம் கேட்டு விஷயம் தெரிந்து வருவதற்குள் பெட்ரோல் காரணமாக அந்த பெண் ஏகத்தில் காயப்பட உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டாள்.

மாமனார், மாமியார் எல்லாரும் ஐயோ ஒரு பெண்ணை இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டோம் என்று அழ பெண்ணின் மாமனார் அந்த பெண்ணின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுமா என்று ஊரே அரற்ற கதறினார்.. போலீஸ் வாக்குமூலம் கேட்க அந்த பெண் வயிற்று வலி தாங்காமல் எல்லோரும் கோவிலுக்கு போய் இருந்த நேரம் நானே தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று அவரே வாக்குமூலம் கொடுத்தார்..

பின் மாமனாரிடம், இந்த குடும்பத்துக்கு மூத்த மருமகள் நான் என்னால் இந்த குடும்ப மானம் வெளியே போக வேண்டாம் மாமா என்று சொல்லிவிட்டு ஆனால் ஒன்று மட்டும் என் அம்மா அண்ணன் எல்லாம் வரும் வரை நான் உயிரோடு இருப்பேனா தெரியாது.. எனக்கு ஒரே ஒரு உறுதி மட்டும் கொடுங்கள் இந்த பிள்ளை என் அம்மா வீட்டில் தான் இருக்கணும் உங்க பிள்ளை நிழல் கூட அவன் மேல் பட கூடாது என்று சொல்லி இறந்து விட்டாள்...

அந்த குடும்பமே உடைந்தது.. போலீஸ் விசாரணை தண்டனை எதுவும் இல்லை. அந்த பெண்ணின் பெற்றோர் என் ஒரே பொண்ணை குடுத்தேன் அவளை சாம்பலா கொடுத்துட்டீங்களே நல்லா இருங்க என்று சொல்லி குழந்தையை மட்டும் எடுத்து கொண்டு சென்று விட்டனர். 

அந்த குடும்பம் அதன் பின் அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறியது..மாமனார் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கினார். அவரது இன்னொரு மகன் சில வருடங்கள் கழித்து கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற கோவிலின் பிரகாரத்தில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டான்.

அந்த மனைவியை கொளுத்தியவன் பின் வேறு திருமணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குற்ற உணர்வு அவனை கூறு போட இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் சொத்து எழுதி தனியாக இருக்க சொல்லி பிரிந்துவிட்டான்.

இப்போது கிட்டத்தட்ட பைத்தியம் போல பிதற்றி கொண்டு அந்த வீட்டில் அவளை கொளுத்திய அறையில் போய் படுத்து கொண்டு என்னை கூட்டிட்டு போ என்னை ஏன் இன்னும் உயிரோடு விட்டு வச்சிருக்க என்று இரவில் அவன் அலறும் சத்தம் தெருவில் கேட்கிறது.. இம்முறை நான் ஊருக்கு போயிருந்த போது பிள்ளையார் பார்க்க தெருவில் நிற்க, என் மகனை பார்த்தவுடன் பக்கத்தில் வந்தான் நந்தாக்கு (அவன் முதல் மகன் பிறந்த காலகட்டத்தில் தான் என் பெரிய மகனும் பிறந்தான்..)இவன் வயசு தானே இருக்கும்.. நான் கண்ணால கூட பார்க்கல மா என்று சொல்லி சென்றுவிட்டான்..
அவள் இறந்து கிட்டத்தட்ட இருவது வருடங்கள் கடந்துவிட்டது... இன்னும் இவன் செய்த செயல் இவனை பின்னி பின்னி இழுக்கிறது. இவன் போலீஸ் ஜெயில் என்று சென்று இருந்தால் கூட இவ்வளவு தண்டனை அனுபவித்திருக்க மாட்டான் என்று தோன்றியது... இன்னும் அரற்றி கொண்டு சாவை எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்..

இருபது வருடம் முன் ஒரு ஹீரோ போல தெருவை பைக்கில், காரில் வலம் வந்தவன் இன்று அழுது கொண்டே மனநிலை பிரழ்ந்தவனாக யார் வீட்டு திண்ணையிலோ கார் ஷெட்டிலோ, கோவிலிலோ உருண்டு கொண்டு இருக்கிறான். தெருவில் உள்ளோர் எல்லாருக்கும் தெரியும் அந்த கத்தல் குரலின் பின் இருக்கும் நிஜத்தின் வீரியம்.. தெரியாதவர்கள் விசாரிக்க தெரிந்தவர்கள் மௌனமாக கடந்து செல்கிறோம் பார்வையாளராக.....