Wednesday 18 December 2013

மலரும் நினைவுகள் 1

என் திருமணத்தின் முன்
என் வீட்டில் நடந்த சுவையான நிகழ்வுகள்,
இன்றைய கால கட்டத்தில் அரிதான...
இனி வரும் காலகட்டத்தில் காணவே முடியாத விஷயங்கள்...

எனது திருமணத்தின் போது வீட்டிலேயே அதிரசம், திரட்டு பால்,, கைமுறுக்கு (சுத்து முறுக்கு) என அனைத்தும் செய்தார்கள்..வீட்டின் இரண்டாம் கட்டில் உள்ள முற்றத்தில், காலவாய் அடுப்பில் அதிரசம் சுட்டு திறந்த வெளி முற்றத்தில் ஆற வைப்பதற்காக, மூங்கில் ப்ளாச்சுகளை நெருக்கமாக வைத்து, அதன் மீது வைக்கோல் பரப்பி (அந்த கால டிஷ்யு) அதன் மீது வைத்து எடுத்து வைப்பார்கள்..வீட்டிலேயே ஆட்கள் உரலில் மாவு இடித்து அதிரசம் செய்வார்கள்...அத்தை, 2 சித்தி, 2 பெரிம்மா என அனைவரும் உட்கார்ந்து சுவையாக பேசிக் கொண்டு பாட்டியின் மேற்பார்வையில் ஆளுக்கு ஒரு வேலையாக மாற்றி மாற்றி செய்வார்கள்....நானும் ஏதாச்சும் செய்கிறேன் என்றால்,, கல்யாணப் பொண்ணு அடுப்பு பக்கமே வரக் கூடாது எனக் கடிந்து கொள்வார்கள்..திரட்டு பால் எங்கள் பக்கம் தேங்காயில் செய்வார்கள்..கிட்டதட்ட நூறு காய்களுக்கு மேல், முற்றத்தில் உரித்து போட, தாழ்வாரத்தை சுற்றி ஆட்கள் உட்கார்ந்து தேங்காய் துருவி, (கிரைண்டர்) அரைத்து, பின் பெரிய பித்தளை உருளியில் கொட்டி, என் திருமணத்திற்கு திரட்டு பால் செய்வதற்காகவே செய்த மரதுடுப்பை வைத்து எங்கள் உறவினர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் கிண்டியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.....இப்போது இது எல்லாமே நினைவாக மட்டுமே உள்ளது...

இன்று சிரமமே இல்லை எல்லாம் பணம் கொடுத்தால் காண்டிராக்டர்கள் செய்து விடுகிறார்கள்..வட நாட்டு உணவிலிருந்து, மேற்கத்திய உணவு வரை., அழைப்பிலிருந்து தாம்பூலம் வரை...........ஆனாலும் ஏதோ இழந்தாற்போல் இருக்கிறது.....

No comments:

Post a Comment