Thursday 12 December 2013

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே நியாபகம் வருதே பொக்கிஷமாய் நெஞ்சில் புதைந்த நினைவுகள்......................

கோடையில் காலை சாப்பிட்ட கை காயும் முன் திண்ணையிலும் தெருவிலும் ஆட்டம் போட்டது..

பிற்பகலில் வீட்டு கொல்லை பக்கத்தில் மரநிழலில் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்டது...

இரவில் முற்றத்தில் உறவினர்கள் எல்லாருக்கும் ஊட்டிவிட சாப்பிட்ட தயிர் சாதத்தின் ருசி..

சித்தி, அத்தை, பாட்டி யாரையாவது கதை சொல்ல கெஞ்சி கதை கேட்டு கொண்டே தாழ்வாரத்தில் உறங்கிய நாட்கள்..

..பூ சடை தைத்து, (தாழம்பூ சடை, மல்லி பூ வைத்து தைத்த சடை) போட்டோ எடுத்து எல்லாருக்கும் சடையின் அழகு காண்பித்து வலம் வந்த நாட்கள்.

புளி ஆட்கள் அறிய அவர்களிடம் எனக்கு தான் புளியாங்ககொட்டை என்று மல்லுக்கு நின்றது..திருக்கையில் உளுந்து நெறிக்க நானும் சுத்துறேன் என்று திருக்கை வாங்கி அச்சு உடைத்தது...உலக்கையில் பயிறு குத்த அவர்கள் அஸ் அஸ் என்று மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே குத்துவதை கண் கொட்டாமல் பார்ப்பது...

பத்தயாத்தில் நிரப்பி இருக்கும் நெல்லை எடுக்க கீழே இருக்கும் பலகையை நான் தான் திறப்பேன் என்று திறக்க போட்டி போடுவது...குமித்து வைக்கும் நெல்லில் ஏறி குதிப்பது...அதை காலால் அலைந்து காய வைப்பது..

வைக்கோல் போரில் ஓடி பிடித்து விளையாடியது..மாமரம் ஏறி ஒளிந்து கொண்டது.. பக்கத்து வீட்டு பாப்பு கண்ணாத்தா கத்த கத்த ஓட்டில் ஏறி ஓடியது..(உடைந்த ஓடுகளுக்காக அவர் வீட்டில் வந்து திட்ட அம்மாவிடம் வாங்கிய அடி)

மாட்டுவண்டியில் (எனக்கு விவரம் தெரிந்த சிறு வயதில் மாட்டு வண்டி தான்.) கம்பியை ஒட்டி உட்கார சண்டை பிடித்தது...

வீட்டிலேயே தயாரித்த நன்னாரி சர்பத்..

பெரிய பலாப்பழங்கள்  வாங்கி அப்பா அதை அறுக்க எல்லாரும் முற்றத்தில் உட்கார்ந்து போட்டி போட்டு சாப்பிட்டது..

சித்திரை தேர் திருவிழாக்கள் , மகாமக குளக்கரையை சுற்றி போடப்பட்டிருந்த கடைகளில் சிறு சிறு பொருட்கள் வாங்கி மகிழந்த நாட்கள்..

வீட்டை ஒட்டி இருக்கும் பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை துணைக்கு அழைத்து கொண்டு அடித்த லூட்டிகள்...

கமலி ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணலாம் இல்லையா எப்படி உன்னால இப்படி எல்லாத்தையும் மறக்க முடியுது என்று நேற்று என் ஊரில் இருந்து பால்ய நண்பன் போன் செய்த போது அவனுடன் அடித்த எல்லா லூட்டிகளும் மறக்காமல் நியாபகம் வந்தது... :) :) :)

No comments:

Post a Comment