Wednesday 29 July 2015

உபாரா - அன்னியன் லட்சுமன் மானே அவர்கள் எழுதி எஸ்.பாலசந்திரன் மொழிபெயர்த்த புத்தகம் ஒரு பார்வை

“உபாரா””  அன்னியன் என்னும் நூல் லட்சுமணன் மானே அவர்கள் மராத்தியில் எழுதி தமிழில் எஸ். பாலசந்திரன் அவர்களால் மொழி பெயர்க்ப்பட்ட்து. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

ஆசிரியரின் சொந்த கதை இது. ஜாதி அமைப்பு என்பது எந்த அளவு சமூகத்தில் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட நாடோடி பழங்குடியினியரிடமும் வேரூன்றி இருக்கிறது என்பதை வாசித்து முடிக்கும்போது உணர முடிகிறது.

இந்த பழங்குடியினரை ஆதிக்க சாதியினர் நடத்தும் விதம் மனிதர்கள் விலங்கை வீட கீழானவர்கள் என்று புரிய வைப்பது ஒரு புறம் என்றால் ஜாதி என்ற ஒன்றை விட்டு விடாமல் பற்றி கொண்டு அந்த அமைப்புக்குள் கட்டுப்பட்டு போவதையே அதை தாண்டி வெளியே வர முயற்சிக்காத அப்படியே போராடி முன்னேறி வருபவனையும் ஜாதி எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் படிக்க படித்து முடிக்கும்போது மிக பெரும் அயர்ச்சியை உணர முடிகிறது.

கைக்காடி என்ற நாடோடி பழங்குடியினரின் வாழ்கை பாட்டைஅவர்கள் இனம் சார்ந்த ஒருவரே அவரது மொழியில் பதிவு செய்திருக்கிறார். அவர் சாதாரணமாக அவர்களை பற்றி சொல்லும் செய்திகள் கூட படிக்கும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களையும் கொண்டது தான் இந்த சமூகம் இது தெரியாமல் எவ்வளவு பக்ட்டுகளை கடக்கிறோம் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நம்மை போன்ற சக மனிதர்களை ஜாதியின் பெயரால் பிரித்து வைத்து அவர்களும் தங்கள் ஜாதியை பற்றிய பெருமையை விடாது பிடித்து கொண்டு என்று எல்லா சாதியினரிடமும் தன ஜாதி பற்றிய பீற்றலும் அதை தீவிரமாக பிடித்து கொள்ளும் புத்தியும் இருப்பதை தன் வாழ்வின் மூலம் சொல்கிறார்.

ஊசிப்போன ரொட்டிகளும் பிச்சை எடுத்து கொண்டு வரும் குழம்புகளும் அந்த ஊசிப்போனதை சாப்பிட அதை புளியிலும் உப்பிலும் ஊறவைத்து சாப்பிடுவதும், மனிதர்கள் மலம் கழிக்கும் இடங்களிலும் சுடுகாட்டிலும் தங்கள் இருப்பிடங்களை கூடாரங்களை அமைத்து கொண்டு பருவ நிலை மாற்றத்துக்கு தகுந்தாற்போல் வேலை இருக்கும் இடங்களுக்கு இடம் பெயர்ந்தும் வாழ்ந்து வரும் அவர்கள் வாழ்வியலும், வசவுகளை சாதாரணமாக எதிர்கொள்ளுவதும், அடி வாங்குவதும் அவர்கள் கடவுள் நம்பிக்கையும், என்று கதை பயணிப்பது ஒரு வாழ்வியிலில்.

அழகிய எழுத்து நடை, தத்துவங்கள், உவமானங்கள், இலக்கிய மேதமை எதுவும் இல்லாமல் வாழ்வியலின் உண்மையை ஆசிரியர் எழுதி இருக்கிறார்.  அந்த கைக்காடி இனத்தில் பிறந்த ஒருவர் எந்த சந்தர்ப்பத்திலும் படிப்பை நிறுத்த கூடாது என்ற உறுதியுடன் பல அவமானங்களை புறக்கணிப்பை பள்ளியில் சந்தித்தபோதும் வாழ்க்கையுடன் போராடி பட்டப்படிப்பு வரை தொடர்கிறார். பள்ளியில் அவர் அவமானப்படுத்த பட்டாலும் மெட்ரிக் முடித்த பின் நகரத்தின் பள்ளியில் அவர் சேர்ந்தபின் அவ்வளவாக ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பழகும் நண்பர்கள் கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் எல்லா இடத்திலும் யாரோ ஒருவர் அவர் மீது காட்டும் பரிவிலும் நண்பர்களின் தயவிலும் பட்டபடிப்பு முடிக்கிறார்.

இறுதியில் கலப்பு திருமணமும் செய்து கொண்டு அவர் படும் கஷ்டங்கள், அரசாங்கத்தால் பிற்படுத்தப்பட்ட கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் ஜாதியை ஒழிக்க என்று செயல்படும் அமைப்பு ஜாதியை வலுவாக நிறுவுவதை என்று சமூகத்தின் அத்தனை அவலங்களையும் பதிவு செய்திருக்கிறார். ஜாதியின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தங்கள் பெற்றோர்களுக்காக அவர் அழித்து விட முயற்சித்த ஜாதி என்னும் கறை அவர் மேல் எப்படி அடர்த்தியாக படிகிறது என்பதாக ஆசிரியர் முடித்திருக்கிறார்.

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

“பசித்த மானுடம்” கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய நாவல், கிளாசிக் வரிசைகளில் வருகிறது. காலச்சுவடு பதிப்பக வெளியீடு.
எதை பற்றியும் யோசிக்காமல் வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு செல்லும் கணேசன், வாழ்கையை தன் இஷ்டத்துக்கு வளைக்கும் கிட்டா இருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் அவர்கள் எங்கு இட்டு செல்கிறது என்பது தான் கதைகளம்.

விரசத்த்துகும் கெட்ட வார்த்தைகள் உபயோகிக்கவும் அதிக வெளி இருக்கும் களம். ஆனால் ஆசிரியர் படிப்பவர் எந்த இடத்திலும் முகம் சுழிக்காத அளவு கனகச்சிதமாக கதையை நகர்த்தி இருக்கிறார். வார்த்தை பிரயோகங்கள் அவ்வளவு நேர்த்தி. கெட்ட வார்த்தையோ புனர்ச்சிகளின் விவரணையோ அப்படியே கொச்சையாக சொல்வது இலக்கியம் என்று நம்புபவர்கள் இத்தகைய நாவலை வாசித்து பின் தான் சொல்கிறார்களா என்று சந்தேகம் தவிர்க்க முடியவில்லை நாவலை வாசித்து முடித்த போது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கொஞ்சம் புதிது.

கணேசன், கிட்டா என்ற இருவரின் பிள்ளை பிராயத்தில் இருந்து தொடங்குகிறது கதை. கும்பகோணத்தில் பிறந்து அனாதையான கணேசன் அங்கிருந்த ஒரு மடத்தில் சங்கரி மாமியிடம் அடைக்கலாமாகி அவர்களுக்கு வேலைகள் செய்து கொடுத்து அந்த சத்திரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு எச்சில் எடுத்து வாழ்க்கையை தொடங்குகிறான். சத்திரத்துக்கு வரும் குழந்தை இல்லா வாத்தியார் அவனை கூட்டி கொண்டு தோப்பூர் என்ற கிராமத்துக்கு செல்கிறார். அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்து பார்த்து கொள்வதாக. கணேசனும் செல்கிறான். அவரிடம் இருக்கும் வரை நன்றாக இருக்கும் அவன் பின் படிப்புக்காக கிராமம் விட்டு வெளியேறி நகரத்தில் வாழ்க்கை தொடங்கும் போது ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரின் ஆசை வார்த்தையால் தடம் புரள்கிறது.

வயிற்று பசியில் ஆரம்பிக்கும் கணேசனின் வாழ்க்கை காமப்பசி உள்ளவர்களுக்கு இரையாகி அவனும் அதில் சிக்குண்டு வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு செல்கிறான். சின்ன குழந்தையைக் இருக்கும் போது வாத்தியாரால் தத்து எடுக்கப்பட்டு கிராமத்துக்கு செல்லும் அவனை ஊரே கண்ணாக நினைத்து கொண்டாடுவதும் கடைசியில் தொழுநோயாளியாகி ஒருவருமே அவனை சீண்டாமல் போக கும்பகோணம் முத்து பிள்ளை மண்டபத்தில் தொழு நோய் சிகிச்சை பெற்று ஓரளவு விகாரம் குறைந்தும் அவனின் காமம் அலைகழிக்க அங்கிருந்து ஓடி தொழுநோய் பிச்சைக்காரனாகி ஒரு குருட்டு பிச்சைக்காரியுடன் வாழ்வை பிணைத்து கொள்கிறான்.

தொழுநோயாளி ஆகும் வரை அவனின் வாழ்க்கையில் எந்த சிந்தனையும் இல்லை. அவனை யார் யாரோ பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆண் பெண் இருபாலருமே. எல்லாரின் காம விகாரங்களுக்கும் தன்னை தாரை வார்த்துவிட்டு இவன் சந்தோசப்படுத்திய ஒரு பெண் மருத்துவர் இவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இவனை ரயில்வே ஸ்டேசனில் இனி இந்த பக்கம் வரக்கூடாது என்று நிர்கதியாக விட்டுவிடுகிறார். .

அதன் பின் தான வாழ்க்கையை திரும்பி பார்க்கிறான். கிட்டத்தட்ட அவனுடைய நாற்பதுகளில் அதன் பின் அவனுள் ஏற்படும் மாற்றங்கள் தத்துவ விசாரங்கள் என்று கணேசன் தொட்டிருக்கும் இடத்தை ஆசரியர் மனித வாழ்க்கையின் தத்துவ விசாரங்களை எல்லாம் சொல்கிறார். கடைசியால் ஊரே ஞானியாக பார்க்கும் கணேசனின் உண்மை மனநிலை அவனின் சிந்தனையில் மனதில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் நம்மையயும் அகத்தேடலையும் வாழ்வையும் பற்றி சிந்திக்க வைக்கிறது.


கிட்டா ஊரால் ஊதாரி, திண்ணை தூங்கி, கிடாமாடு என்று கிட்டத்தட்ட அத்தனை பேராலும் புறக்கணிக்கப்பட வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான் கணேசனும் சரி கிட்டாவும் சரி கிராமத்தை விட்டு வெளியேறிய பின் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அவர்களை எங்கு எல்லாம் இட்டு செல்கிறார்கள் வாழ்க்கை அவர்களை எப்படி புரட்டி போடுகிறது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் கணேசன் வாழ்வு ஒரு மாதிரியாகவும் வாழ்வில் பணம் சம்பாரிக்க வேண்டும் தன்னை உதாசீனப்படுத்திய கிராமத்துக்கு வாழ்வில் ஜெயித்து பணக்காரனாக வரவேண்டும் என்ற ஆசையுடன் புறப்படும் கிட்டா மன்னார்குடி சென்று கார் ஓட்ட பழகி அதன் பின் படிப்படியாக எங்கெல்லாம் செல்கிறான்.

இதற்கிடையில் அவன் வாழ்வில் வரும் பெண்களை அவன் தேவைக்கு எப்படி உபயோகித்து கொள்கிறான். வசதி வந்தவுடன் தன்னை புறக்கணித்த தான் தூக்கி வளர்த்த அம்முவை வயது வித்தியாசம் அதிகமிருந்தும் திருமணம் செய்து கொள்வதும், அண்ணி, அம்முவின் அக்கா மாஞ்சி, அவனுக்கு தொழில் கற்று கொடுக்கும் சீமாவின் மனைவி பூமா என்று பெண்களுடன் உறவும் பணம், கார் சமூகத்தில் அந்தஸ்து என்று கிட்டா வாழ்க்கையும் நகர்கிறது.
கிட்டாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு கட்டத்தில் கிட்டா தன் அந்தஸ்து எல்லாம் மனைவியாலும் மற்றவர்களாலும் தன் பிள்ளையாலும் தகர்க்கப்பட கண் முன் அவன் அதிகாரம் அந்தஸ்து எல்லாம் பொடிபொடியாக உதிர்வதை அதிர்ச்சியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதும் பின் அவற்றை பெற அவன் எடுக்கும் தீர்மானங்களும் அது எதுவும் முடியாமல் கண் முன் அவன் எழுப்பிய அத்தனையும் அவனை கை கொட்டி சிரிப்பதை பார்த்து மன நிம்மதி இழந்து தவிக்கிறான்.

இவனும் கணேசனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். எல்லா பற்றிலிருந்தும் தன்னை விடுவித்து கொண்டு பிச்சைக்காரனாக கணேசன் அடைந்திருக்கும் சந்தோசமும் மலர்ச்சியும் எல்லாம் இருந்து நிம்மதி இன்றி தவிக்கும் கிட்டாவும் பேசும் வார்த்தைகள் எல்லாரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று..

“ தனியா உக்காந்து யோசிச்சு பாரு. முன்னெல்லாம் எல்லாரையும் எல்லாத்தையும் உனக்கு பிடிச்சுதுன்னு வச்சுண்டு இருந்தே இல்ல அதுக்கு காரணம் அவாளையும் அதுகளையும் நீ உன்னுடைய சொந்த பிரியத்துக்காகத்தான் அவ்வளவு பிரியமா வச்சுண்டு இருந்தே. அதே மாதிரி தான் அவாளும் அதுகளும் உனக்காக இல்லவே இல்லை, தங்களுக்காகத் தங்கள் பிரியத்துக்காக உங்கிட்டே பிரியமா இருந்ததுகள். இந்த உலகத்துல யாருக்குமே, தங்களைவிட வேறு எதுவுமே பிரியமாக இருக்க முடியாது. “
நாம் எதையெதையோ சாப்பிடுகிறோம், நம்மையும் எது எதெல்லாமோ முழுங்கி ஏப்பம் விடுறதுகள். தானும் எதுவும் சாப்பிடாமை, தன்னை எதுவுமே சாப்பிடவிடாமை... இந்த உலகம் அத்தனையிலும் பரவி ஊடுருவி இருக்கிறதுதான் நாமாம

Wednesday 8 July 2015

ராஜன் மகள் - பா. வெங்கடேசன்

பா. வெங்கடேசன் அவர்களின் ராஜன் மகள் புத்தகம் அவரின் நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியது. அந்த கதைகளை சிறுகதை என்று சொல்ல முடியாது ஒவ்வொரு கதையும் ஒரு நாவல் படித்த உணர்வை தந்தது. இந்த கதைகள் வரலாறா புனைவோ என்று பிரித்து பார்க்க முடியாமல் கதைக்குள் நம்மை இழுத்து கொள்வது தான் ஆசிரியரின் வெற்றி. மிக மிக நுண்ணிய மனிதனின் உள்ளுணர்வுகளை ஆசிரியர் புனைவில் புகுத்தியிருப்பதால் உண்மையா புனைவா என்று இனம் பிரிக்க முடியாமல் பல இடங்களில் நாமும் கதைகளின் சூழலுக்குள் சிக்கி கொள்கிறோம்.

நீளம் நீளமான வாக்கியங்கள் கடினம் என்றாலும் எனக்கு சுவராஸ்யம் கொடுத்தது அந்த நீளமான வாக்கியங்கள் தான். படிப்பவர்கள் ஜாக்கிரதையாக உள்வாங்கவில்லை என்றால் கதை நம்மை விட்டு நழுவிவிடும்.. ஆனால் கதைகளின் சுவராஸ்யம் நம்மை அந்த சூழலுக்குள் பொருத்திவிடுவதால் நம்க்கு நகரவும் மனம் வராது.

நான்கு கதைகளின் களங்களும் தருமபுரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நிகழ்வதாக ஆசிரியரால் சொல்லப்படுகிறது..முதல் கதையில் வரும் மழை வீட்டில் ஆரம்பித்து நான்கு கதைகளிலும் நுண்ணுர்வால் நிரம்பி இருக்கும் ஒரு மனிதனின் வெவ்வேறு கதாப்பாத்திரங்களாக அல்லது வெவ்வேறு வடிவமாக தான் எல்லா கதைகளையும் அமைத்து இருக்கிறார் ஆசிரியர்.

மழை வீட்டின் சாரங்கன் ஆகட்டும், ஆயிரம் சாரதா அனுமந்தப்பா, மயில்வாகனன் ஆகட்டும் நீல விதி வஸந்தராம் என்கிற ஸ்ரீவத்ஸ்னாகட்டும் ராஜன் மகளில் வரும் வைத்தியர் (நாவிதர்) ஆகட்டும் அவர்கள் ஆசிரியரின் கற்பனை படைப்பா இல்லை அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்ததற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று அதிகம் குழப்பி கொள்ள விடாமல் கதையில் பயணிக்க தொடங்கும் போது கதையில் நம்மையும் பொருத்தி அந்த காலகட்டத்திற்குள் இழுத்து கொண்டு சென்று விடுவதால் நம்மால் அதை நடந்த ஒரு சம்பவமாக மட்டுமே மனதில் வரிக்க முடிகிறது.

இதில் வரும் நான்கு கதைகளும் பெரும்பாலும் அகத்துகுள்ளே தான் பயணிக்கிறது. மழையின் குரல் தனிமையில் கொஞ்சம் வாஸ்து என்கிற கட்டிடகலையுடன் புற உலகுக்குள் பிரயாணித்தாலும் அதிகம் அக உலகின் விகாரங்களும், ஏக்கங்களும், அக்ச்சிக்கல்களும் அவற்றின் குணங்களும் மணங்களும் நிறங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.. அதிலும் ஆசிரியர் சொல்லும் மணங்கள் ஆச்சரியத்தின் உச்சம்.

கதையை பற்றி நான் விரிவாக எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த நான்கு கதைகளுமே அகத்தையும் நுண்ணர்வையும் மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் இதை வாசித்து மட்டுமே அனுபவிக்க முடியும்.. (கதை பற்றிய விரிவான பதிவை Raja Rajendran அவரது பிளாக்கில் பதிந்திருக்கிறார் விருப்பமிருப்பவர்கள் அவரது ப்ளாக்கில் வாசிக்கவும்.

கதைகளில் வந்த எனக்கு ரொம்ப பிடித்த சில வரிகளை மட்டும் கீழே பகிர்கிறேன்.

பொறுப்புகளையெல்லாம் அவன் கரைக்க முயன்ற போது பெரியவர்களின் உலகை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கத் துவங்கின. அவனிடமிருந்த குழந்தைமை மெதுமெதுவாக விடைபெற்றுக்கொண்டன.
விலக்கப்பட்டவற்றின் மீதான விருப்பத்தை ஒருவனுக்குள் விதைப்பது அவன் முதியவனாயிருந்தால் தொழில் விரோதியும் இளைஞனாயிருந்தால் காதலியும்..

தலை தரையில் மோத அப்படியே பின்புறமாக சாய்ந்துவிட்டான். அத்தோடு நிஜத்தையும் கற்பனையையும் பிரிக்கும் பிரக்ஞையின் மெல்லிய இழையையும் தவறவிட்டுவிட்டான்.

பெண்ணை அவளின் அந்தரங்கத்தின் மீதான அவமான உணர்விலிருந்து விடுவிப்பவன் அவள் காதலைனத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
படைப்பின் ஆகச் சிறந்த பொக்கிஷமும் ஆகப் பெரிய ரகசியமுமான பெண்ணுடலை புலன்களால் ஸ்பரிசிக்கும் அதிர்ஷ்டம் காதலனைத் தவிர பிறருக்கு வாய்காதிருக்க கடவது

உமிழ்நீரில் இருந்து பொய்யை பிரித்தெடுக்கும் அன்னம் என்னும் சிறப்பு பெயரால் அறியப்பட்ட நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த ராஜகோபால்

பொய் என்பது பொருந்தி வராத எதிரெதிர் உண்மைகளின் கூறுகளாகவே இருந்ததையும் பொய் தான் உச்ச்சரிக்கப்படுவதற்க்கான சூழலைத் தானே உருவாக்கிக்கொள்வதையும் யதார்த்த உலகிற்கு மாற்றான இன்னொரு கண்ணுக்குத் தெரியாத அற்புதமான உலகத்தைப் பொய்யர்கள் தங்களின் பிரத்யேக சந்தோசத்திதிற்காக கட்டி கொள்கிறார்கள் என்பதை ராஜகோபால் கண்டுபிடித்தார். பொய்க்கு தனி மணமும் நிறமும் உண்டென்றும் அவரின் அறிவுக்கு புலனாயிற்று

ஒரு தனி உயிரின் உடற்காயமும் வலியும் அதை மிகவும் நேசிக்கும் சக உயிர்களில் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது நடக்கிற விஷயம்.
தெரியவில்லை என்கிற பதில் மனப்பிறழ்வையும் ஒன்றுமில்லை என்கிற
பதில் மனச்சஞ்சலத்தையும் காட்டவல்லவை.

வெளியே தப்பிச் செல்லும் வழியைத் தேடித்தேடி உள்ளே தன் மனச்சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டான்.

எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப்படும்போது வீழ்த்தப்பட்டதன் எச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னை தப்புவித்துக்கொண்டுவிடுகிறது.

காகித மலர்கள் - ஆதவன்.



பசுபதி என்கிற அரசாங்க உயரதிகாரி அவர் மகன்கள் விசுவம், செல்லப்பா, பத்ரி செல்லப்பாவின் நண்பன் ரமணி,  பத்ரியின் நண்பன் கணேசன், கணேசனின் தந்தை, பசுபதியின் உயரதிகாரி எஸ்.ஏ, என்கிற கதாப்பத்திரங்களின் மூலம் ஆதவன் வெளிப்படுத்தி இருக்கும் ஆண்களின் நுண்ணுர்வுகள் அவ்வளவு நுட்பமானது. என் பெயர் ராம்ஷேசனில் இவ்வளவு நுணுக்கமாக சொல்லவில்லை அல்லது நான் உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்பர் மிடில் கிளாஸ் பிராமண குடும்பம் டில்லியில் எழுபதுகளின் கலாச்சாரங்களுடன் எப்படி தங்களை பிணைத்து கொள்கிறார்கள் அவர்களின் அகத்துக்குள்ளும், வாழ்வியலிலும் அதனால் ஏற்படும் மாற்றங்கள், குடும்பத்தில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளின் ஓட்டங்கள் அதற்குள் இருக்கும் முரண்கள் என்று அந்த பாத்திரபடைப்புகளின் மூலம் ஆதவன் தொட்டிருக்கும் ஆழம் அனாயாசம்.

பசுபதியின் மனைவி பாக்கியம், விசுவத்தின் மனைவி பத்மினி மூலமும் பெண்ணின் அகத்தை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் என்ற போதிலும் ஆண்களின் உலகுக்குள் இருக்கும் இருண்ட பக்கங்களை எல்லாம் காட்டியது போல பெண்களின் இருண்ட பக்கங்களின் ஆழம் தொட முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது. கொஞ்சம் பட்டும் படாமல் தான் பெண்ணின் உணர்வுகளை எழுதி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

பாத்திரங்களின் ஊடாக அவர் சொல்லியிருக்கும் உவமைகள் உண்மைகளை பக்கத்தில் தரிசிக்க வழி செய்கிறது. பேருந்து ஜன்னலை மூட முயற்சிக்கும் போது அவை மூட செய்யும் முயற்சிகளை ஒரு உறுதியான தீர்மானத்துடன் எதிர்ப்பதை – சில பழக்கங்களிலும் அபிப்ராயங்களிலும் ஸ்திரப்பட்டுவிட்ட மனிதர்கள் அவற்றை மாற்றிக்கொள்ள மறுப்பதை போல என்று உவமைப்படுத்துகிறார்.

“ஒவ்வொருவரை பற்றியும் நாம் உருவாக்கி கொள்ளும் பிம்பங்கள் பற்றி சொல்லும்போது பத்திரிக்கை கதைகளும் கார்டூன்களும் அப்பா என்றால் இப்படி அம்மா என்றால் இப்படி கலைஞன் என்றால் இப்படி என்று திட்டவட்டமான பிம்பங்களை உருவாக்கி பிரத்யேக இயல்புகளையும் வித்தியாசங்களையும் அடிக்கோடிட்டு காட்டும் முயற்சியில் உண்மைக்குச் சாயமடித்து மறைக்கின்றன. இவை பொய்யாகவே இருந்தாலும் தேவை போலவு தோன்றுகிறது. உண்மையை விட பொய் தான் சுவையானது என்பதால்  ஆம் இது போல பெண்களை பற்றி நூற்றாண்டுகளாக கற்பிதம் செய்ய்பப்ட்டிருகும் பிம்பங்கள் அவற்றுக்கு இடையில் மூச்சு திணறும் பெண்கள் ஒரு பக்கம, இன்னொரு பக்கம் அந்த பிம்பம் தான் உண்மையில் என்று நம்பும் பெண்கள் இரண்டுக்கும் நடுவில் விழி பிதுங்கும் பெண்கள் என்று எத்தனை எத்தனை பிம்பங்களை சுமந்து அந்த சுமையின் எரிச்சலை வேறு வேறு விதமாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இது போல புத்தகம் முழுதும் உண்மைக்கு வெகு அருகில் ஆதவன் நம்மை இட்டு செல்கிறார்.

“ஆணும் பெண்ணும் தம்முடைய இயற்கையான நாற்றங்களை ரசிக்கத தொடங்கினால் காஸ்மெடிக் இண்டஸ்ட்ரியே தவிடு பொடியாகிவிடும்

“ இரண்டு மனிதர்கள் பத்து வருடங்கள் நெருங்கிப் பழகியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் போகலாம், வேறு இருவர் ஒரே கணத்தில் ஒரே பார்வையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுவிடலாம்

“ அந்ததந்த கட்டங்களில் நிகழ வேண்டியவை நிகழாமல் அமிழ்த்தி வைக்கப்படும்போது பின்னால் எதிர்பாராத தருணங்களில் அவை வெளிக்கிளம்பி பொருத்தமற்ற காட்சிகளுக்கு அடிகோலுகின்றன.

“மனிதனின் சிந்தனை மாறுதல்களுக்கு ஏங்குகிறது, பரபரக்கிறது. வேகம் வேகம் வேகம் ஆனால் உடல்?

“மனிதர்களுடைய பெரும் பிரச்சனை பேச்சு தான். தினசரி புதிதாக பேசவேண்டும் என்ன பேசுவது?

“மரணத்தின் வாயிலிலும் பெண் உடம்பினருகிலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் தாம்

“எல்லாருக்குமே தர்க்க ரீதியான, ஆதார பூர்வமான சிந்தனைகளிலிருந்து இளைப்பாறல் தேவைப்படுகிறது

“மனிதனின் இயல்பே ஆக்கிரமிப்பு தானா? இயற்கையை சூழ்நிலையை , வடுப்படுத்த்தி தன்னைத்தானே நிரூபித்து கொள்வது தானா! (இதில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக அடுத்தவரை ஆக்கிரமித்து கொள்ள தான் முயற்சிக்கிறோம். ஆனால் சுதந்த்திரமகவும் இருக்க முயலுகிறோம் என்று யோசித்த போது ஹப்பா நம் முரண் களையவே ஒரு ஜென்மம் போறாது போல என்று தோன்றியது)

“இயற்கையின் சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம் தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாகக் முயலுகிறான்

“பிம்பங்கள் கனவுகள் இவை தான் மனிதனுக்கு உந்துதலை அளிக்கின்றன அவன் வாழ்க்கையை உருவாக்குகின்றன

“மந்தையிலிருந்து வேருபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் ஜனநாயகம் மந்தைத்தனத்தை உருவாக்குகிறது. காந்தியை போன்றவர்கள் மந்தைக்கு அறிவூட்ட முயலுகிறார்கள் ஹிட்லர் போன்றவர்கள் மந்தையின் மனப்போக்கை, முடமான உணர்ச்சித் தாகத்தை தம்முடைய சொந்த நோக்கங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் வார்த்தைகள் – பல வருடங்கள் புழக்கத்திலிருந்து வரும் தூசும் அழுக்கும் படிந்த வார்த்தைகள் – இந்த வார்த்தைகள் சார்ந்து ஸதிரப்பட்டிருக்கும் பிம்பங்கள் ஆகியவை மூலம் ஒருவரையொருவர் அணுகாமல் இருப்பது நல்லது

உன் இயல்புகள் என்னைப் பலவிதங்களில் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் தவிர்க்க முடியாமல் வார்த்தைகளாக உருப்பெறுகின்றன.

இந்த வார்த்தைப்படுத்துதல் என் இயல்புகளையும் சரி, அவை உன்மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் சரி கொச்சைப்படுத்துவதாகும். அரூபமானவற்றுக்கு ரூபம் கொடுக்க அவசரப்படுகிறாய். நாமிருவரும் ஒருவர்மேல் ஒருவர் நிகழ்த்தும் பாதிப்புகள் பிரத்யேகமானவை. இந்த பாதிப்புகளால் எழும் உணர்வுகளின் உலகம் பிரத்யேகமானது. திறந்த மனதுடன் இறுதிவரையில் ஒருவரையொருவர் கண்டுபிடித்துக்கொண்டேயிருப்போம். சௌகரியமான பிம்பங்களை ஒருவர் மேல் ஒருவர் திணித்து உண்மையை உணரும் பொறுப்பிலிருந்து நலுவாமலிருப்போம்.

“ஒவ்வொருவரிடமும் ஏதோ சில அம்சங்கள் நம்மைப் பரஸ்பரம் ஈர்க்கின்றன.. நம் அம்சங்கள் எல்லாவற்றையுமே ஒரு ஆண் அல்லது ஒரு பெண் நிறைவு செய்வது சாத்தியமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். பெரும்பாலான அம்சங்கள் நிறைவு பெறச் செய்யும் ஒருவரிடம் சமரசம் செய்து கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.
" பிறரை நாம் நம் உருவத்தில் காண்கிறோம்" நல்ல இயல்புடைய ஒருவன் பிறரையும் அவ்வாறு காண்பான், அப்படியல்லாதவன் கோணலாக தான் காண்பான்"

" இயற்கை பெண்ணைப்போல, மனிதனை இயங்க வைக்கும் சக்தி, மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது, அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்யமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும் அதே சமயத்தில் அதை சூறையாடிவிடக்கூடாது"

"அவன் சமைப்பதில் ஆர்வமெடுத்துக்கொள்வது ஒரு வேஷம், அவனுக்கேற்ற இன்டெலெக்சுவல் கம்பானியனாக அவனைக் கருதி ஏற்றுகொண்டது ஒரு வேஷம். அவனைத் தனியாளாகக் காட்டும் சில தனித்த இயல்புகளுக்காக அவளை நேசிப்பது ஒரு வேஷம் . அவனையறியாமல் அவன் அணியும் அவனையே ஏமாற்றும் வேஷங்கள். உண்மையில்..............

ஆம் உடம்பு, உடம்பு, அது தான் உண்மை அதன் பசி ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சியை மறைத்து கொள்ள மனம் உருவாக்கும் இதமான பிம்பங்கள் -  ஒத்துழைப்புக்குரிய துணைவி, பரிவுக்குரிய தோழி, போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு தாயாக போகிறவள்..

எத்தனை பொய்கள் !!!!!!!

ஆம் அவள் கொஞ்சம் பழங்காலத்து டைப் தான். ஆனால் அதில் சில சௌகரியங்கள் இருக்கின்றன. என்னை கட்டுப்படுத்தும் ஒரு கடிவாளமாக நான் அவளை நினைக்கிறேன். இரண்டு பெரும் ஒரே மாதிரியான மதிப்பீடுகள் உள்ளவர்களாயிருந்தால் எங்கே கோடு போடுவது, எங்கே போய் நிற்பது என்று நிச்சயமில்லாமல் போய்விடுமென்று எனக்கு தோன்றியது. - அதனால் உண்டாகும் விளைவுகள் இருவருக்குமே நன்மை தராது.

நான் எடுத்து தொகுத்திருப்பது எல்லாமே உணர்வுகளின் நுட்பங்கள் எளிதில் நமக்கே பிடிபடாத ஒன்றை இது தான் அகம் பார் என்று பல இடங்களில் அவர் காட்டி இருப்பதை.. இந்த புத்தக்ததில் உணர்வுகள் எப்படி புழங்குகிறதோ அதே அளவுக்கு அறிவியல், அரசியல் என்று ஆதவன் தொட்டிருக்கும் எல்லாமே ஆழம் தான். அதை பற்றி தொகுத்தால் பதிவு இன்னும் விரிவாக கூடும் என்பதால் எனக்கு பிடித்த உணர்வு தளங்களை மட்டும் தொகுத்திருக்கிறேன்..