Monday 7 September 2020

தாண்டவராயன் கதை

 

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின்  ஆதி பூர்வ குடியில் கதை ஆரம்பிக்கிறது அங்கிருந்து பல்கலைப்பழகம் வரும் பெண்ணான எலினார், கணிதத்தில் வல்லவனும், சாகசத்தில் விருப்பம் உள்ளவனுமான ட்ரிஸ்ட்ராம் என்பவன் மீது ஏற்படும் காதலால் ஊர் எல்லையில் இருக்கும் சாபக்காட்டிற்கு சென்று பார்வையை தொலைக்கிறாள். அவள் பார்வை பறிபோனதற்கு காரணம் தான் என்று மருகும் ட்ரிஸ்ட்ராம் அவளை மணந்து கொண்டு அவள் கண் பார்வை திரும்ப கிடைக்க முயற்சி மேற்கொள்கிறான். அதன் ஒரு பகுதியாக  ப்ரான்ஸில் பாரீஸில் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை மேற்கொள்ள  எலினாரும் ட்ரிஸ்ட்ராமும் வருகிறார்கள். அப்போது அங்கு ப்ரெஞ்ச் புரட்சி வெடிக்கிறது. அங்கே எதிர்ப்பாராதவிதமாக பிரெஞ்ச் அரசாங்கத்திடம் உதவி எதிர்ப்பார்த்து வரும் திப்பு சுல்தான் அரசு அனுப்பி வைத்திருக்கும் இந்தியர்களை சந்திக்கிறார்கள்

இதனிடையே ப்ரெஞ்ச் புரட்சியின் தீவிரமடைய, எலினாருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரும் இறந்து போக இங்கிலாந்து திரும்புகிறார்கள்.. அதன் பின் சில வருடங்கள் கழித்து கிழக்கிந்திய கம்பெனியின் கணக்கு வழக்கை சரிப்பார்ப்பதற்காக அனுப்ப்படும் குழுவில் ட்ரிஸ்ட்ராமும் இந்தியா வருகிறான். திப்புவின் அதிகாரத்திலிருக்கும் மைசூர் பகுதிகளும் அதை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகள் என கர்நாடக மற்றும் தமிழ்மாநில பரப்பையும் அதன் வனப்பகுதிகளையும் சுற்றி கதையை விரித்தெடுக்கிறார் 

கதை ட்ரிஸ்ட்ராம் ராயக்கோட்டை வந்த பின் தான் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுக்கிறது. எழுத்து நடையும் வாசகன் மேல் சற்றே கருணையை காட்டியிருக்கிறது அல்லது வாசகனை தன்னுள் வாரி சுருட்டி கொள்கிறது. மாயாஜாலமென விரியும்  கதையில் புனைவின் உச்சத்தை ஆசிரியர் தொட்டிருப்பதோடு வாசகனையும் அந்த புனைவிற்குள் இழுத்து பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார்.  அடுத்தடுத்து புதிர்களாக அடுக்கி அந்த புதிர்களையும் ஒவ்வொன்றாக விடுவித்து கொண்டே வரும் சாகசம் வாசகனை கட்டி போட்டுள்ளது. இடையிடையே இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடந்திருக்கா சாத்தியமிருக்குமா என்ற சிந்தனையே கூட அற்றுப்போய் வேறு ஒரு உலகத்திற்குள் வாசகனை மிதக்க விட்டுள்ளார். அதிலும் கோணய்யன் மற்றும் தாண்டவராயன் கதையை நாட்டார் புராண கதையின்  எழுத்து நடையை அதன் வாசிப்பனுபவத்தை வாசிப்பதன் மூலம் மட்டுமே உணர முடியும்.

அதிகார மையத்தால் அள்ளி வீசப்படும் வராகன்களுக்காக அவர்கள் ஏவும் கட்டளைகளை சிரமேற்று கங்காணிகளாக மாறி பூர்வகுடிகளை அழித்தொழித்தும், அடிமைகளாக அவர் தம் ரத்தத்தை உறிஞ்சும் மனித இனம் உலகெங்கும் ஒரே முகத்தை கொண்டுள்ளதை நாவல் பேசுகிறது. சேரிப்பெண்ணாக வரும் கெங்கம்மாவாக இருக்கட்டும், ஆங்கில சிப்பாய்களால் வன்புணரப்ட்டு வாழ்க்கையை தொலைக்கும் செல்லியாகட்டும், பூசாரியால் வேசியாகும் பெண்ணாகட்டும் காலம் காலமாக ஆண்களின் அதிகார வேட்கைக்கும், மதத்தை கொண்டு மக்களை கட்டிப்போடும் மடாதிபதிகளுக்கும் பலியாகும் பெண்களின் துயரம் ஒரே மாதிரியாக தான் இந்த நூற்றாண்டு வரை தொடர்கிறது. அதிலும் கெங்கம்மா மூலமாக கீழ்நிலையில் இருக்கும் பெண்களை இந்த சமூகம் யார் வென்றாலும் தோற்றாலும் தங்களை சாக்கடைகளாக வைத்துகொள்வதில் யாரும் சளைத்தவர்களில்லை என்னும் உண்மையை பதிவு செய்திருக்கிறார். 

இந்த கதையின் முக்கிய திருப்பமாக வரும் நீலவேணியின் பாதையும் அதை தொடர்ந்து கதைக்குள் விரிந்து கொண்டே செல்லும் கதைக்களமும் துப்பறியும் சாகஸ கதை போல தோன்றினாலும், கதையை விரித்தெடுத்திருக்கும் முறையில் இது சாகஸத்தையும் தாண்டி வேறொரு எல்லைக்கு வாசகனை கொண்டு சேர்க்கிறது. இந்த கதையினூடாக எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலாகட்டும், கதையின் ஊடாக ஆசரியர் பதிவு செய்திருக்கும் சமூக பார்வையாகட்டும் புனைவு என்ற ஒற்றை வார்த்தைக்குள் சுருக்கிவிடாத முடியாதபடி செய்துள்ளன,

ஆசிரியரே முடிச்சுகளால் கதையை பின்னி பின் அதனை ஒவ்வொன்றாக அழகாக விடுவித்தாலும், கதையில் புரியாத புதிராக சில எஞ்சி விடுகிறது. அதே போல எலினாரின் கண் நோய்க்கான மருந்து கடைசியில் ட்ரிஸ்ட்ராமுக்கு கிடைத்த்தா? அல்லது ட்ரிஸ்ட்ராமும் பார்வையிழந்தானா? போன்ற பல கேள்விகளின் சிடுக்குகள் அப்படியே நிற்கின்றன. புத்தகம் முடித்த பின் மேலும் பக்கங்கள் இருக்க கூடுமா என்ற ஐயப்பாட்டில் புத்தகத்தின் பக்கங்களை பார்த்தால் சரியாக தான் இருந்தது. ஏனோ அவ்வளவு விரிவாக எழுதி வந்த ஆசிரியர் இறுதியில் ஆதி முடிச்சை அவிழ்க்காமல் அப்படியே விட்டார் என்று தெரியவில்லை.

ஒரே நாவலில் இவ்வளவு விஷயங்களை ஆசிரியர் பொதித்து வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும்., ஏன் வாசகனை கதைக்குள் நுழைய விடாமல் திணறடிக்கும் எழுத்து நடையை ஆசிரியர் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை.. முற்றுப்புள்ளியே இல்லாத நீள நீள வார்த்தைகள் பத்திகளாகவும், பக்கங்களாகவும் நீள்வது கொடுக்கும் அயர்வு ஒருபுறம் என்றால், மறுபுறம் அடைப்புகுறிக்குள் ஒரு கதையையே சொல்லி முடிப்பதுவும் என்ன மாதிரியான எழுத்து பாணி என புரியவில்லை. இந்த நாவலின் எழுத்து நடை சற்று இலகுவாக இருந்திருந்தால், பல வாசகர்களை சென்றடைந்திருக்கும். இக்கதையின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதுடன், ஒரே மூச்சில் இதை பற்றி சொல்ல முடிவது எனக்கு சாத்தியப்படாத்தால், இந்நாவலை பற்றி இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

Tuesday 28 April 2020

சேப்பியன்ஸ் - புத்தகம் ஒரு பார்வை


சேப்பியன்ஸ் நான் வாசித்த முதல் Non-fiction புத்தகம் என்று கூட சொல்லலாம். வால்கா முதல் கங்கை வரை நாவல் தாய் வழி சமூகமாக மனிதன் பரிணமத்தில் இருந்து பயணித்ததை பேசிய நாவல். நாவல் நமது நாட்டை பற்றி பேசிய நிலையில் சேப்பியன்ஸ் உலகத்தில் ஆதி மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்து தொடங்குகிறது. அதாவது விலங்காக இருந்து மனிதனாக பரிணமித்த்தில் இருந்து ஆரம்பித்து தற்போதைய அறிவியல் யுகம் வரை படிப்படியாக மனிதன் புவியில் நிகழ்த்திய மாற்றங்களை பதிவு செய்துள்ளது.

சுமார் 450  கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி உருவானதாக கூறும் ஆசிரியர் அதன் பின்னர் சுமார் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்ரிக்காவில் இப்போதிருக்கும் மனிதருக்கு முந்தைய இனமான ஹோமோ நியாண்டர்தாஸ், ஹோமோ எரெடெக்ஸ், ஹோமோ சோலோ என்ஸிஸ் உள்ளிட்ட மனித இனத்தின் பல்வேறு வகையினர் தோன்றியதாக கூறுகிறார். பின்னர் அவர்கள் மெல்ல பல்வேறு இடங்களுக்கு பரவுகின்றனர். அதன் பின் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் சேப்பியன்ஸ் என்று இப்போதிருக்கும் மனித குலத்தினர் தோன்றியதை ஆதாரபூர்வமாக விளக்குகிறார் ஆசிரியர்.

பின்னர் இந்த சேப்பியன்ஸ்க்கு ஏற்படும் அறிவுப்புரட்சியால் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து, சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவுக்கு வெளியே பரவ தொடங்குகின்றனர். இப்படி பரவ தொடங்கும் இவர்கள் தங்கள் அறிவால் பிற விலங்குகளை அழிப்பதுடன், தங்கள் மூதாதையர்களான நியாண்டர்தால் இனத்தவரையே பூண்டோடு அழித்ததாக கூறுகிறார். இப்படி பல்வேறு மனித இனத்தை அழிக்க இறுதியில் தற்போதுள்ள சேப்பியன்ஸ் இனம் ஆகிய நாம் மட்டுமே எஞ்சியிருக்கிறோம். அதன் பின் மனிதன் அறிவால் கண்டுபிடிக்கப்பட்ட விவசாயம் மனிதனை எவ்வாறு மாற்றியது அதனை தொடர்ந்து நிரந்தர குடியேற்றம் அதன் தொடர்ச்சியாக மன்னராட்சி என்று இப்போதிருக்கும் நிலை வரை அனைத்தையும் ஆசிரியர் நோவா ஹராரி விளக்கும் போது அடுத்தடுத்த பக்கங்களை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டே செல்ல முயலும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.


பணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், பேங்க என்ற நிறுவனத்தின் தொடக்கமும் தனி மனித மகிழ்ச்சி, மதங்கள் உருவான கதை குறித்த ஆசிரியரின் பார்வையும் உண்மையில் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய பக்கங்கள் எனலாம். எல்லாம் மாயை என்ற எண்ணம் நம் அனைவருக்கும் எப்போதாவது தோன்றும். இந்த புத்தகம் வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த புத்தகம் முழுவதுமே வரலாறு கட்டுரை வடிவில் இருப்பதால் இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலமே அது நமக்குள் ஏற்படுத்தும் திறப்புகளை உணர முடியும்.

குற்றமும் தண்டனையும் - நாவல் ஒரு பார்வை



தத்வஸ்கியின் வெண்ணிற இரவுகள் எனக்கு பிடித்த நாவல் என்பதுடன், குற்றமும் தண்டனையும் நாவலை பற்றி பல ஆளுமைகள் சிலாகித்தது கொடுத்த தாக்கத்தால் இந்த நாவலை சில வருடங்களுக்கு முன் வாசிக்க கையில் எடுத்தேன். ஆனால் ஏதேதோ காரணங்களால் முடியாமல் போக, இப்போது இந்த கொரானா முழு அடைப்பு நாட்களை வாசிக்க பயன்படுத்திக்கொண்டேன். மனிதர்களின் உளவியலை தெரிந்து கொள்வதில் எனக்கு சுவராஸ்யமுண்டு. தத்வஸ்கி மனிதனின் அகசிக்கலை அழகாக எழுதுவார் என்பதுடன், மனதின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதில் வல்லவர். இந்த நாவல் தொட்டிருக்கும் ஆழமும், இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் நுண்ணர்வுகளும் கையாளப்பட்டிருக்கும் வார்த்தைகளும், ஆங்காங்கு பளிச்சென மின்னல் வெட்டு போல திறந்து காட்டப்படும் நாவல் மாந்தர்களின் கதாபாத்திரங்களிலும் நம் அகத்தை தரிசிக்க வைப்பது தான் எழுத்தாளனின் வெற்றி. 

இந்நாவல் ஏழ்மை வறுமையில் உழலும் ஒரு மாணவன், வட்டிக்கு விடும் ஒரு கிழவியை கொலை செய்வதையும் அதன் பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் பேசுகிறது. கொலையும் அந்த கொலைக்கு முன்னும் பின்னும் ரஸ்கோல்னிகோவ் சந்திக்கும் மன உளைச்சல்களும் அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் தான் கதையின் மையச்சரடு.

வட்டிக்கு விட்டு வாழும் கிழவியை கொன்றுவிட்டு அவளிடம் இருந்து பணத்தை அபகரித்து எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்ட நினைக்கிறான். கிழவியை கொல்லப்போகும் போது எதிர்பாராதவிதமாக அவள் தங்கையையும் கொல்ல நேரிடுகிறது. கொலை செய்வது குறித்து அவனுக்குள் நடக்கும் நியாய தர்க்க விவாதங்களால் கிழவியை கொல்வதற்கு முன்பே இருதலைக்கொள்ளியாக தவிக்கும் அவன், கொலை நடக்கும்போதும் அதே மனச்சிக்கலில் தவிக்கிறான். ஆனாலும் எப்படியோ கொலையை செய்துவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பிக்கிறான். கொள்ளையடித்த பொருட்களை பத்திரப்படுத்திவிட்டு தன் அறைக்கு வந்து விழும் அவன் தனக்குள் நடக்கும் மனப்போராட்டத்தினால் உடல் நிலை பாதிப்படைகிறான். சுயநினைவற்று கிடக்கும் அவனை அவனது நண்பன் ரஸ்மிகின் கவனித்து கொள்கிறான்.

இந்நிலையில் அவன் தங்கை துனியா ஊரில் வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு, இறுதியாக தன் குடும்ப சூழல், மற்றும் சகோதரனின் நிலை காரணமாக லூசின் என்பவரை மணமுடிக்க நினைக்கிறாள். ஆனால் ரஸ்கோல்னிகோவ் தன் பொருட்டு தன் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்யாததை விரும்பாததுடன் தன் தாய் கடிதத்தில் எழுதியிருக்கும் சில வார்த்தைகளை கொண்டு லூசினை பார்க்காமலே வெறுக்கிறான். இதற்கிடையே துனியாவும் அவரது தாயாரும் மகன் இருக்கும் நகரத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருவதற்கு முன்பே நாயகனுக்கும், லூசினுக்குமான முதல் சந்திப்பு  மிக மோசமாக அமைய அகங்கார மனம் படைத்த லூசின், ரஸ்கோல்னிகோவை அவமானப்படுத்தி அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க நினைக்கிறான். ஆனால் அதற்குள்ளாக அவனின் அகங்கார குணமே துனியாவுடனான அவனது திருமண ஒப்பந்தம் முடிய காரணமாகிறது.

ஏற்கனவே மன உளைச்சலில் சிக்கி தவித்து தன்னை தானே துன்புறித்தி கொண்டு முடங்கி கிடக்கும் ரஸ்கோல்னிகோவ் தாயையும் சகோதரியையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தவிப்பை எரிச்சலாக்கி அவர்களை விட்டு விலகி ஓட எத்தனிக்கிறான். இதனிடையே ஒரு குடிகாரனின் குடும்பத்துடன் நாயகனுக்கு எதேச்சையாக ஏற்படும் தொடர்பு நாயகனை வேறு பாதைக்கு திருப்புகிற்து. அந்த குடிகாரனின் மகளான சோனியா தன் குடும்பத்தை காக்க விபச்சாரியாகிறாள். இந்நிலையில் குடிகாரன் இறந்துபோக, அவளுக்கும் நாயகனுக்கும் ஏற்படும் தொடர்பும், அவளை பார்த்த பிறகு நாயகனுக்குள் ஏற்படும் மாற்றங்களும், அவளிடம் பாவ மன்னிப்பு கோருவது போல தன் உள்ளக்கிடக்கு அனைத்தையும் கொட்டி தீர்க்கும் அவன், சோனியா அவனை கொலைக்காக சட்டத்திடம் சரணடையும்படி கூறும்போது ஆவேசமடைகிறான். தான் கொலை செய்தது தவறே இல்லை என்று தனது கொள்கை குறித்து கூறி அவளையும் வெறுக்கும் அவன் அதன் பின் முடிவில் அவள் மீது இருக்கும் காதலை உணரும் இடமும் அழகாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே துனியாவை ஊரில் இருந்தே விரட்டி வரும் மைனர் ஸ்விட்ரிகைகோவ் அவனுக்கும் ரஸ்கோலினிக்கோவுக்குமான சந்திப்பு, அதன் பின் துனியாவை அடைய அவன் எடுக்கும் முயற்சியில் தோற்று இறுதியில் தன்னை தானே சுட்டு கொல்கிறான். அவன் ரஸ்கோல்னிகோவுடனான நீண்ட உரையாடலில் தன்னை பற்றி கூறும் போது பெண்களின் குணநலன்களையும் இயல்புகளையும் ஒரு ஆணின் பார்வையில் பதிவு செய்கிறார். அதில் காதல் உணர்வு ஒரு பெண்ணை எந்தளவுக்கு முட்டாள்தனமாக இழுத்து செல்லும் என்பதை தனக்கு வாழ்க்கை கொடுத்த தனது மனைவி மூலம் உணரலாம் என்கிறான். துனியாவிற்கும் அவனுக்கும் பழக்கம் ஏற்பட அவன் அவளிடம் நாடகமாடியதை கூறும் போது ”ஒரு பெண்ணின் இதயம் ஆணுக்காக இரக்கப்பட ஆரம்பித்துவிட்டால் அவள் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள் என்பது அர்த்தம். அவனை காப்பாற்ற போவதாக நினைக்கும் அவள் அவனுக்கு புத்திமதி சொல்லவும், வழிக்காட்டவும் தொடங்கிவிடுவாள்:. அவள் கூறுவதை கேட்பதாக பாசாங்கு செய்தாலே நம்பிவிடுவாள்” அப்படித்தான் உன் தங்கையை நம்ப வைத்தேன் என்று கூறுகிறான். இன்று வரை இந்த உளவியலை பெண்ணின் மீது ஆண்கள் பிரயோகித்து கொண்டுதான் இருக்கிறார்கள் .. இதே போல எக்காலத்துக்குமான உளவியலை நாவல் நெடுக த்த்வஸ்கி வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் விவரிக்கிறார்.

அதேபோல இந்த கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, ரஸ்கோல்னிகோவ் மீது சன்னமாக பிரயோகிக்கும் உளவியல் ரீதியான விசாரணைகள் நாயகனை மேலும் மன நிலை பாதிப்புக்குள்ளாக்க, இறுதியில் போலீஸில் சரணடைகிறான்.

நாவல் நெடுகிலும் ரஸ்கோல்னிகோவ்வின் அகப்போராட்டம் தான் நீடிக்கிறது. மீண்டும் மீண்டும் அகப்போராட்டங்களை நுணுக்கமாக விவரத்திருப்பதில் ஆரம்ப அத்தியாயங்களில் ஆயாசமே அதிகமாக நீள்கிறது. அதிலும் லூசின் சோனியாவை திருடி என்று நிரூபிக்க செய்யும் நடவடிக்கைகள் எல்லாம் அதீத நாடகத்தனமாகவே தோன்றுகிறது. அந்த கால கட்டத்தில் திருட்டு பழியை பிறர் மீது சுமத்துவது போன்றவையெல்லாம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் சமீப காலங்களாக இதை பல்வேறு கதைகள், சினிமாக்கள், சீரியல்கள் என பார்த்து பார்த்து சலித்து போனதால் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதை நாவல் என்று சொல்வதை விட எக்காலத்திற்குமான உளவியல் ஆராய்ச்சி நூல் என்று சொல்ல்லாம், நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களாகட்டும், அவர்களின் காதல், தியாகம் மற்றும் அவர்களின் பல்வேறு அகக்கூறுகளும் எக்காலத்திற்குமானது என்றே சொல்ல தோன்றுகிறது. நாவல் பல அகத்திறப்புகளை காட்டினாலும், பல்வேறு இடங்களில் அகச்சோர்வையே தந்தது.. அந்த சோர்வு குற்ற செயல்களை நியாயப்படுத்த துடிக்கும் நம் மனதின் தர்க்கவாதத்தின் காரணமாக கூட இருக்கலாம்.



Saturday 14 March 2020

சுளுந்தீ - ஒரு பார்வை

வாழ்ந்து கெட்டவர்களை பற்றி பேசுவதிலும் அதை கேட்பதிலும் பலருக்கும் அலாதியான சுகம் உண்டு. சுளுந்தீ கூடுதலாகவே வாழ்ந்து கெட்ட தமிழ் பண்டுவத்தை, அதை தொழிலாக செய்த நாவிதர்களை அவர்களுக்கு இருந்த மரியாதையை (!) ராஜ தந்திரிகளாக அரண்மனைக்கு சேவை செய்ததையும், அரசியல் சூதால் பலியானதையும், விரிவாக பேசுகிறது நாவல். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் ஆட்சி தான் நாவலின் கதைக்களம். நாவிதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் என்னென்ன வேலைகள் செய்தார்கள்? அந்த வேலையில் இருக்கும் முக்கியத்துவம் , அந்த தொழிலில் மூலம் நடக்கும் அரசியல் கொலைகள் என நாவல் பயணிக்கிறது.
ஆரம்பத்தில் அரச குடும்பத்திற்கு நாவிதம் செய்யும் ராமனின் மகன் மாடனுடன் நடக்கப்போகும் மல்யுத்த போட்டியோடு அவனோடு மோதப்போகும் வங்காரனுடன் தொடங்கினாலும், அடுத்தஅத்தியாத்திலேயே நாவல் இருபத்தைந்து வருடம் பின்னோக்கி பயணிக்கிறது.
மாடனின் தந்தையான ராமன் அரண்மனை நாவிதனாக இருப்பதோடு, பன்றிமலையில் வாழும் சித்தரிடம் சீடனாக பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க பழகுகிறான். இவன் திறமையால் மகிழும் அரண்மனை இவனுக்கு குதிரை வழங்குகிறது. குலத்தொழில் மட்டுமே வழி வழியாக விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நாவிதன் குலத்தில் பிறந்த ராமனுக்கு படை வீரனாகும் ஆசை வருகிறது. அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டாலும், அவனால் படை வீரனாக முடியாது என்று தெரிய வருகிறபோது தனது மகனான மாடனை அரண்மனை படை வீரனாக்கி பார்க்க ஆசைப்படுகிறான். அதற்காக மகனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று தருகிறான். ஆனாலும் அரண்மனை தரப்பில் அனுமதி மறுக்கப்பட, தனக்குள்ளாக குமைந்து வேகிறான். இதனிடையே அரசியல் சூதில் ராமன் பண்டுவ மருந்து தயாரிக்கும்போது இறந்து போகிறான். தந்தை ஊட்டிய ஆசையும், அரண்மனைபடை வீரன் மோகமும் அலைக்கழிக்க அரண்மனை உத்தரவை ஏற்று நாவிதனாக தொழில் செய்ய செல்கிறான். மாடனின் தந்தைக்கு அரண்மனையில் இருக்கும் செல்வாக்கால் ஏற்கனவே கொதித்து கிடக்கும் தளபதி செய்யும் சதியோலசனைகள், மாடனை முடக்கிப்போட , ஒரு கட்டத்தில் ராபின் ஹூட்டாக மாற வேண்டிய சூழலுக்கு மாடன் தள்ளப்படுகிறான். முடிவில் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகிறான். ராமன் மூலமாக சித்த மருத்துவம்மட்டுமல்லாது அப்போதை மக்களின் வாழ்க்கை முறை, அரசாண்டவர்கள், அவர்களுக்கு ஏவல் புரிந்த தளபதி, குடிப்படையினர் சாதாரண மக்கள் மீது ஏவிய அடக்குமுறைகள், அதில் ஒன்றான குலநீக்கம் என்னும் கொடூர சட்டம் என நாவல் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு பயன்படும் மருத்துவ பொருட்களை கொண்டு வெடி பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்ட பின்னர் அந்த பொருட்களை வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், அதையும் மீறி அந்த மூல பொருட்களை வாங்கி குலநீக்கமானவர்களும்,ஊரை விட்டு விரட்டப்பட்டவர்களும் காட்டில் கிணறு முறித்து விவசாயம் செய்து, ஆள்பவர்களுக்கு எதிராக போருக்கு தயாராகும் அரசியலை நாவல் பேசுகிறது. மழையை மட்டும் நம்பியிருந்த மக்கள் மழை பொய்த்த போது கடும் பஞ்சத்தை சந்தித்ததையும், விளைச்சல் இல்லாத போதும் வரி கேட்டு மக்களை கொடுமைப்படுத்திய குடிப்படைகளும், வரிகட்ட முடியாது மறுத்து எதிர்த்தவர்களை குல நீக்கம் செய்ததையும் நாவல் பேசுகிறது. பஞ்ச காலத்தில் புளியங்கொட்டைஉணவாகவும், மருந்தாகவும்,விஷமாகவும் பயன்பட்ட தகவல் ஆச்சரியமூட்டியது. இன்று சாலையோரங்களில் புளியமரங்கள் இருப்பதற்குபின் இருக்கும் வரலாற்றையும் நாவல் பேசுகிறது. சைவம், வைணவம், குதிரையை பயிற்றுவிக்கும் ராவுத்தர்கள், சுல்தான்கள், கிருஸ்துவ சபை இந்தியாவில் காலூன்றிய அந்த நாட்களில் சைவ மடங்கள், குலகுரு ஆகியோர்களின் செயல்பாடுகள் என பதினெட்டாம் நூற்றாண்டின் சமய அரசியலுக்கும் கதையின் ஊடாக வாசகனை அழைத்து சென்றிருக்கிறார் ஆசிரியர் அதே போல செவி வழி கதைகள் பலவற்றையும்ஆசிரியர் ஆங்காங்கு இடைச்செறுகலாக கதையினூடாக சொல்லியிருக்கிறார் நாவலின் கனமும் அதற்காக ஆசிரியரின்மெனக்கெடலும் அசாத்தியமானது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சாதிய படிநிலையில் மேல் அடுக்கில் இருந்தவர்கள் இன்று ஒடுக்கப்பட்டவர்களாக எஞ்சி நிற்கும் அவலத்தையும் நாவல் எடுத்துரைக்கிறது. அதிலும் ராமன் தனது மகனான மாடனுக்கு நாவித தொழில் மேன்மை பற்றி எடுத்து சொல்லி, புரிய வைக்கும் போது வாசகனுக்கும் நிறைய விஷயங்களை தெள்ள தெளிவாக புரிய வைக்கிறார் ஆசிரியர். இந்த நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் சொற்களில் பல நம்மை விட்டு மறைந்தாலும் சில சொற்களை மட்டும் அதன் அர்த்தம் புரியாமல் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். அதிலும்”வெங்கம் பய” என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் காரணப்பெயர் இனி அந்த வார்த்தையைஉச்சரிக்கும் முன் யோசிக்க வைக்கும். திருநங்கைகளுக்கு ”இருபிறவி” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். மிக அழகான வார்த்தை. நாவல் மனிதர்கள் மருத்துவம் மட்டுமல்லாது, ஆடு, மாடு,குதிரை உள்ளிட்ட பல ஜுவராசிகளின் மருத்துவமும் பேசுகிறது. ராமனின்அறிமுகத்தில் இருந்து அடுத்தடுத்து பக்கங்கள் முழுதும் அடுத்தடுத்து சித்த மருத்துவ குறிப்புகள் வாசிக்கும்போது பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது, அப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நாவல் வாசிக்கிறோமோ அல்லது சித்த மருத்துவ புத்தகம் ஏதும் வாசிக்கிறோமா என்ற ஐயப்பாடே எழுந்தது. கதைக்கு தேவையில்லாத விவரங்களை பக்கம் பக்கமாக கொடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இந்த நாவலின் ஊடாக சொல்லப்பட்டுள்ளசெவி வழிக்கதைகளும், சொலவாடைகளும் பலஇடங்களில் பொருந்திப்போனாலும் சில இடங்களில் துருத்திகொண்டு தெரிகிறது. நாவல் வாசிக்கும்போது ஆங்காங்கு நாம் நாவல் வாசிக்கிறோமோ இல்லை ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறோமா என்ற உணர்வு தவிர்க்கமுடியவில்லை. ஆசிரியர் - இரா. முத்துநாகு. ஆதி பதிப்பகம்