Thursday 8 October 2015

உணர்வுகள் ..

கருண்ட மேகம் சூல் கொள்ளும் பொழுதிலெல்லாம்
பெருமழையை எதிர்நோக்கி காத்திருக்க
வெறும் தூரலாகவோ ஈரகாற்றாகவோ
கடந்து போகிறாய் ..

************

வேடிக்கை பார்த்து தொலைந்த பின்னும்
கைப்பொருளை வாய்பேச்சில் ஏமாந்து பறிகொடுத்த பின்னும்
வழி தெரியாமல் பாதை மாறி சென்ற பின்னும்
அமுதசுரபியாய் எஞ்சியிருக்கும் குழந்தைமை
உயிர்ப்புடன் மீட்கிறது என்னுலகை..

**************

என் ஆகிருதியின் உணர்வுகளனைத்தையும்
நீ வரைந்த பெண்மையின் ஒழுங்குக்குள்
பத்திரமாக பொதிந்து
பளபளக்கும் அறமெனும் பட்டு சுற்றி
என்னை தின்னும் கேள்விகளால்
வேள்வி வளர்த்து
கையாலாகா எண்ணங்களால் நெய்யூற்றி
பொதிந்ததனைத்தையும் எனக்குள்ளேயே 

பிறரியாமல் எரியூட்டியாகிவிட்டது
சாம்பலாகிவிட்ட உணர்வுகளின் அடியில்
கனன்று கொண்டிருக்கும் ஆதி வன்மம்
லேசான வாடைக்கு சீண்டப்படும் பொழுதுகளிலெல்லாம்
என் உதிரம் கொண்டே
நெருப்பை தணியசெய்கிறேன்
தற்காலிகமாக..

***************

மென் தடவலுக்கும்
இதமான அணைப்புக்கும்
அன்பான பார்வைக்கும்
அழுத்தமில்லா முத்தத்துக்கும்
அக்கறை பொதிந்த வார்த்தைக்கும்
தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்க
அன்பின் பரிசாக கிடைப்பதென்னவோ
ஆறாத ரணங்களே
கிளறி வேடிக்கை பார்க்கும்
நேசம் தன்னை புதைத்திடவும் வழியில்லை
திரும்பிபார்க்காமல் கடந்திடவும் முடிவதில்லை
புரிதல் இல்லாத காதலில்
உடைந்து போகும் கணங்களில்
வெறுமை இழுத்தணைக்கும் பொழுதினிலெல்லாம்
மரணத்தை வேண்டியே தொடர்கிறது வாழ்க்கை......


***************

உனக்கும் எனக்குமான சண்டையில்
பெரும் வன்மமெதும் இருக்கபோவதில்லை
எல்லாம் மறந்து பேசி சிரிக்க போகிறோம் எனும் போதும்
கூர் ஊசியால் வார்த்தைகளை தைப்பதை நிறுத்துவதில்லை,

*****************

களைத்து கிடந்தவளின்
அருகமர்ந்து
கழுத்துவரை போர்த்தி
நெற்றியில் விழும் முன்மயிர் ஒதுக்கி
மெல்ல தரும் மென்முத்தத்தில்
உணர்கிறேன் காதலை.


***************

பார்க்க அழகாகவும
உடைத்து உள்புக கடினமாகவும்
சக்கர வியூகம் அமைக்கும்
ஆற்றல் உண்டு

பூ, விதை, பழம், முட்களுடன் அமைத்த
வட்டங்களை வேண்டியபோது விலக்கி
உள்ளும் புறமும் செல்லும்
தந்திரமும் அறிவேன்

பூவின் அழகில் ஈர்க்கப்ட்டு வரும் வண்டோ
பழத்தின் சுவையில் சபலப்பட்டு அமரும் சிறு உயிரோ
விதையை கொத்தி செல்லும் சிறு பறவைகளோ
முள்ளை கண்டு பயந்து பின்வாங்கும் உயிரினமோ
வியூகத்தின் ஆற்றலை அசைக்கமுடிவதில்லை

எல்லா வியூகங்களையும்
அழகாய் விலக்கி
நிராயுதபாணியாய் உள்புகும் அபிமன்யூவின் முன்
வியூகத்தின் ஆற்றல் செயலிழந்துதான் போகிறது.,.

****************

மழைக்கான முன்தயாரிப்பாக
சூரியனை மறைத்து
மேகங்கள் ஒன்றுதிரள்வது போல்
உள்ளுக்குள் இயலாமை மறைத்து
சேகரிக்கிறேன் வார்த்தைகளை
சந்திக்கும் வேளையில் பொழிய..
***********

தூரிகைகளின் தொடலுக்குள் சிக்கிகொள்ளாத
வானமொன்றை பத்திரமாக பொத்திவைத்திருக்கிறேன்
மழைபொழியும் தனித்த
இரவொன்றில்
ரகசியமாய் காட்ட...

*************

உடைந்து விழுந்த நேற்றிற்கும்
எதிர்பார்ப்புகள் நிறைந்த நாளைக்குமிடையில் ஊசலாடி
அனுபவிக்க வேண்டிய இன்றைய பொழுதை
குழந்தை கைப்பொருளாய் தவறவிடுகிறேன்
*************
பிறப்பின் நீட்சி மரணம் வரை
இருளின் நீட்சி வெளிச்சம் வரை
கற்பனையின் நீட்சி க(வி)தை வரை
உறவின் நீட்சி பிரிவு வரை
தேடலின் நீட்சி தான் தெரி(ளி)ந்தபாடில்லலை....


************ 

அதிகாலையின் அழகை
மாலை வெயில் வரையும் ஓவியத்தை
முழங்கா இரவின் ஓசையை
முற்றுப்பெறா கவிதையின் தவிப்பை
முயங்கிட தவிக்கும் காதலை
மழலலைகளின் வெட்கத்தை
மனதை கரைக்கும் இசையை
மௌனிக்க வைக்கும் உன் பார்வையை
இதழோரம் மின்னும் குறுநகையை என
பகிர ஆயிரமுண்டு
கேட்கும் மனதும்
உணரும் இதயமும்
வாய்க்கும் பொழூதுகளை
எதிர்பார்த்தபடி
கடக்கிறேன் இந்த நாளையும்.
*************** 

சேலை பிடித்துறங்கும்
சிறு குழந்தையின்
உறக்கம் கலையாமல்
மாற்று துணி கொடுத்து
மெதுவாய் விடுவித்து
விலகும் தாயைப்போல்
நீ என்னைவிட்டு விலகுதலை
உணராமல்
சேலையின் வாசத்தை
மனசுக்குள் தேக்கியபடியே
நீ அருகிலிருக்கும் நம்பிக்கையுடன் உறங்குகிறேன்...


.************
 

1 comment:

  1. சேலை பிடித்துறங்கும்
    சிறு குழந்தையின்
    உறக்கம் கலையாமல்
    மாற்று துணி கொடுத்து
    மெதுவாய் விடுவித்து
    விலகும் தாயைப்போல்
    நீ என்னைவிட்டு விலகுதலை
    உணராமல்
    சேலையின் வாசத்தை
    மனசுக்குள் தேக்கியபடியே
    நீ அருகிலிருக்கும் நம்பிக்கையுடன் உறங்குகிறேன்..

    ReplyDelete