Friday 25 December 2015

"பாரென்ஹீட் 451" ரே பிராட்பரி என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் தமிழில் வெ.ஸ்ரீராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. க்ரியா பதிப்பக வெளியீடு.

ஸ்ரீராமின் பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பான சின்ன சின்ன வாக்கியங்கள் ஏற்கனவே வாசித்திருப்பதால் நம்பிக்கையுடன் தான் புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். ஆனால் முதல் பாகம் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப்பட்டேன். இந்நாவலுக்கான முன்னுரை ஏதும் கொடுக்கப்படாமல் புத்தகம் ஆரம்பத்திலேயே கதைக்குள் பிரவேசிக்கிறது. புத்தகம் முழுதும் வாசித்த பின் தான் பின்னுரை இருப்பதை பார்த்தேன். அதை முன்பே படித்திருந்தால் இன்னும எளிதில் கஷ்டப்படாமல் வாசித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கஷ்டப்பட்டு நாமாக கண்டடையும் புரிந்துகொள்ளும் எதுவும் கொடுக்கும் கிளர்ச்சி அலாதியானது. அதை விரும்புவோர் பின்னுரை பக்கம் போகாமல் முதலில் நாவலை வாசித்துவிட்டு பின் பின்னுரையுடன் நம் புரிதலையும் ஒப்பிட்டு சந்தோசப்பட்டு கொள்ளலாம்..

எதிர்காலத்த்தை பற்றி அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிட வேண்டாம் என்ற அச்சத்தை தெரிவிப்பதாக இருந்தால் அது மருட்சி இலக்கிய வகை (dystopian literature) . இந்த புத்தகம் அந்த இலக்கிய வகையை சார்ந்தது.

இந்த நாவல் புனைவு என்ற போதும் எதிர்காலத்தில் நடக்க சாத்தியமிருக்கும் விஷயமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளில் தான் கதை வித்தியாசப்படுகிறது. முற்றிலும் தொழில்நுட்பமும் கேளிக்கைகளும் மனிதனை ஆக்ரமிக்க தொடங்க மனிதன் எதை நோக்கி பயணிப்பான், அவனை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன மாதிரி இருப்பார்கள், அறிவு மழுங்கடிக்கப்பட்டு எப்படி மக்கள் மாற்றப்படுவார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். தொலைகாட்சி வந்து ஏற்கனவே நம்மை ஆக்கிரமித்து கொண்டுவிட்டதையும் இப்போது சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமிப்பதையும் கொஞ்சம் ஆராய தொடங்கினால் உண்மை புலப்பட தொடங்கும். 1951 –ல் ஆசிரியர் இந்த கதையை எழுதியிருக்கிறார். அதாவது டெக்னாலஜி எல்லாம் அவ்வளவாக ஆக்ரமிக்கபடாத காலகட்டத்தில் எதிர்காலத்தை குறித்து அவர் எழுதியது ஆச்சரியப்பட வைக்கிறது.

மேன்டாக் என்ற தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஒருவன் புத்தகங்களை எரிப்பதில் இன்பம் காண்பதில் ஆரம்பிக்கும் கதை அவனை சுற்றியே பயணிக்கிறது. அவன் மனைவி மில்ட்ரெட் தொலைகாட்சியுனே தன் வாழ்வை பிணைத்து கொண்டு வெறுமை தாக்க தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்க அவளை மேன்டாக் காப்பாற்றுவதில் தொடங்குகிறது. ஆடை அணிந்த ஊரில் ஆடை அணிந்தவன் பைத்தியக்காரன் என்பது போல இந்த கேளிக்கைகளில் எல்லாம் நாட்டமில்லாமல் இயற்கையில் நாட்டம் கொண்ட க்லாரின் என்ற பதினேழு வயது பெண்ணை மேன்டாக் சந்திக்கிறான். மிக சாதாரணமாக தொடங்கும் உரையாடல்கள் மூலம் மக்களின் அப்போதைய நிலையும் அதன் அபத்தமும் பட்டும் படாமல் புரிவது போல மேன்டாக் உணர்கிறான்.

முதல் அத்தியாயம் முழுதுமே மேன்டாக்கின் தொழில் பற்றி விரிவாக செல்கிறது. மக்களை சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக பார்க்கப்பட்டு அவை இருக்கும் வீடுகள் எரிக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது. மேன்டாக் ஒரு தீயணைப்பு படை வீரன் ஆனால் தீயணைப்பு துறை அரசால் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்படுகிறது. ஒரு வீட்டில் புத்தகங்கள் இருப்பதாக தகவல் வர மேன்டாக்கின் மேலதிகாரி பியாட்டி உத்தரவின் பேரில் ஒரு வீட்டுக்கு செல்கிறார்கள் தீயணைப்பு குழுவினர்.

அங்கு ஒரு முதியவள் புத்தகங்கள் எரிக்கப்படப்போவதை அறிந்து ஆனால் எந்த எதிர்ப்பும் செல்லாது என்று தெரிந்து மௌனமாக அதை எதிர்கொள்வதும் தீயணைப்பு அதிகாரிகள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் புத்தக குவியலுடன் தன்னை மாய்த்து கொள்கிறாள். தன்னையே மாயத்து கொள்ள துணியும் அளவு புத்தகத்தில் என்ன இருக்கும் என்ற சிந்தனை மேன்டாக்குக்கு வர ஒரு புத்தகத்தை தனது தீயணைப்பு உடைக்குள் பிறரறியாமல் வைத்து எடுத்து செல்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக தீக்கிரையாக்கும் இடங்களில் இருந்து எல்லாம் புத்தகங்களை எடுத்து தன வீட்டில் மனைவிக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். மேன்டாக்கின் மேலதிகாரியாக பியாட்டி என்பவர் கதையில் நுழைந்த பின் தான் கதை புரிபடவே தொடங்குகிறது.. இன்னும் சொல்லப்போனால் மூன்று பகுதிகளாக பிரிக்க்பட்டிருக்கும் கதையில் இரண்டாம் பகுதிக்குள் செல்லும் வரை தான் தடுமாற்றம் வாசிப்பவருக்கு அதன் பின் வெண்ணையாக வழுக்கி செல்கிறது நாவல்.
அந்த முதியவள் தீக்கிரையானது மேன்டாக் மனதை பாதிக்க அவன் உடல்நிலை சரியில்ல்லாமல் போகிறான் அப்போது அவனை காண வரும் உயரதிகாரி அவனுடன் பேச தொடங்க மேன்டாக்குக்கு பல கேள்விகள் எழுகிறது.

அவர் சென்ற பின் புத்தகங்களை எடுகிறான் மறைவிடங்களில் இருந்து புத்தகங்களை எடுக்க அவன் மனைவி அஞ்சி கத்துகிறாள். இந்த விஷயம் தெரிந்தால் வீடு தீக்கிரையாக்கப்படும் என்று அழ அவளுக்கு ஆறுதல் சொல்லி முதலில் இதை வாசித்து பார்ப்போம் அப்படி என்ன இருக்கு என்று எதுவும் இல்லையென்றால் அரசு சொல்வது போல நம்மை அழ வைக்கும் விஷயங்கள் இருந்தால் நாமே கொளுத்திவிடுவோம் என்ற உத்திரவாதத்துடன் வாசிக்க தொடங்குகிறான். வாசிக்க வாசிக்க அவனுக்கு நிறைய சந்தேகம் எழுகிறது அதை விளக்க பேபர் என்கிற வயது முதிர்ந்தவரை நாடி செல்கிறான்.

அவனுக்கும் அவருக்கும நடக்கும் உரையாடல்கள் எல்லாம் க்ளாஸ். அதை வாசித்து தான் உணர முடியும். எழுத்தால் என்ன செய்ய முடியும் என்பதையும் எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் வகைப்படுத்தி பேபர் சொல்வதை மட்டும் இங்கு சொல்கிறேன். “ நல்ல எழுத்தாளர்கள் மனிதர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் தொட்டுவிடுகிறார்கள், சாதாரணமானவர்கள் அதன் மேல் கையை ஓடவிடுகிறார்கள், மோசமான எழுத்தாளர்கள் அதனுடன் வன்புணர்ச்சி கொண்டு அதன் மேல் ஈக்களை மொய்க்கவிடுகிறார்கள்.

புத்தகங்கள் ஏன் வெறுக்கப்பட்டு பயம்ளிக்கிறது தெரியுமா? வாழ்க்கையின் முகத்திலுள்ள நுண்ணிய துவாரங்களை அவை காட்டுகிறது. துவாரங்கள் இல்லாத, உணர்ச்சிகள் இல்லாத, ரோமம் இல்லாத மெழுகு முகங்கள் தான் வசதியாக இருக்க விரும்பும் மனிதர்களுக்கு தேவையாக இருக்கிறது.
இப்படியாக நீளும் உரையாடலில் மேன்டாக் பேபரிடம் தனக்கு அவர் தான் வழிகாட்ட வேண்டும் என்று கூற முதலில் அவனை நமப மறுக்கும் அவர் பின் மேன்டாக்கின் உறுதியால் நம்பி அவனுக்கு காதில் பொருத்திக்கொள்ள ஒரு கருவியை தருகிறார். இதன் மூலம் நீ எங்கிருந்தாலும் என்னை கேட்கலாம் நீ ஓய்வில் இருக்கும்போது உனக்கு நான் புத்தகங்களை உன் காதில் வாசிப்பேன் என்கிறார். அவரிடம் விடைப்பெற்று வீட்டுக்கு வரும் மேன்டக் அலுவலகம் செல்ல அதன்பின் பியாட்டிக்கும் மேன்டாக்குக்கும் நடக்கும் உரையாடலை எல்லாம் காதில் வாங்கும் பேபர் அவனுக்கு காதில் ஆலோசனைகள் வழங்கிறார்.

இதற்கிடையில் மேன்டாக் புத்தகம் ஒளித்து வைத்திருப்பதை அவன் மனைவியே அரசுக்கு சொல்ல அவன் வீடு அவனாலேயே பியாட்டியின் உத்தரவின் பேரில் தீக்கிரையாக்கப்படுகிறது. அப்போது மேன்டாக் காதில் பொருத்தியிருக்கும் கருவி பியாட்டிக்கு தெரிய வர அதை பறிக்கிறார் இதனால் ஆவேசமடையும் மேன்டாக் பியாட்டியை கொல்கிறான். சக ஊழியர்களை அடித்துவிட்டு தப்புகிறான். அவனை தேடி அரசு இறங்க அவன் பேபர் வீட்டுக்கு சென்று அவருடன் பேச அவர் சில வழிமுறைகள் சொல்ல அதை பின்பற்றி தப்பிக்கிறான்.அதன் பின் அவன் சந்திப்பது சிந்திப்பது இரண்டுமே நாவலின் முக்கிய பகுதி.
 
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க அரசை பற்றி கொண்ட பயம் குடிமக்களின் நடவடிக்கைகள் என்ன எழுதிகிறார்கள் என்ன படிக்கிறார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டு தடைகள் விதிக்க்ப்பட்டது.

உலகப்போருக்கு பின் அமெரிக்காவிடம் தாராளமாக புழங்கிய பணம் நுகர்வு க்லாச்ச்சரத்துக்கு வாசல் திறந்ததையும் தொலைகாட்சி அவற்றில் முக்கியமாக எப்படி மக்களை ஆக்கிரமித்தது சிந்தனைகளை மழுங்கடிக்க செய்தன என்பதை நாவல் பேசுகிறது.
 
சிந்தனையிலிருந்து மக்களை விலக்கிவைக்கும் இந்த வெகுஜன கலாச்சாரம் அரசுக்கும் எதிர்ப்பின் பயம் இல்லாமல் ஆள வசதியாக அமைந்தது. . சிந்தனைகளை ஒதுக்கும் கலாச்சாரமும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது தான் நாவலின் மையம். 
 
மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தை குறைக்கும் அரசைவிட மக்களை கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சக கேளிக்கைகள் தான் அதிகம் பயப்பட வைக்கிறது என்கிறார் ஆசிரியர். அவர் சொன்னது அறுபது ஆண்டுகளுக்கு முன். ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் சில நிமிடங்களுக்கு மேல் ஒரு செய்தியை கிரகிக்க பல மனதுக்கு பொறுமை இல்லாமல் போய்விட்ட சூழல் இக்கதை உண்மையாகி வருவதை சொல்வதாக பின்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நாவல் பல விஷயங்களில் நமது சிந்தனை தடத்தை இன்னும் கூர்மையாக்குகிறது.


3 comments:

  1. அழகான விமர்சனம் ." பாரென்ஹீட் 451 " புத்தகத்தை உடனே வாங்கி படிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது

    ReplyDelete
  2. ஹா கமலி தங்கள் உரை முழு புத்தகம் படித்து பார்தது முடித்தது போல உள்ளது.. நல்ல ஒரு நட்பு எனக்கு

    ReplyDelete
  3. முழு புத்தகம் வாசித்த உணர்வை தருகிறது...

    ReplyDelete