என்
பெயர் சிவப்பு – ஓரான் பாமுக். இந்த புத்தகத்தை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்
வாசிப்பதற்காக எடுத்தேன். ஆனால் நாவலின் கடினத்தன்மையும், அதன் களமும்,
காலசூழலும், என்னை நாவலுக்குள் நுழைய விடவில்லை. எனவே புத்தகத்தை தூக்கி தூர
வைத்துவிட்டேன். ஓரானின் பனி நாவலை என் மகன் பரிசாக தர அதை வாசிக்க அந்த
புத்தகத்தின் மூலம் ஆசிரியர் எனக்குள் வெளிச்சமிட்டு காட்டிய அகத்திறப்புகள் அவர்
எழுத்தின் மீது காதலை கொடுத்தது. இன்றும் பனி நாவலை நான் வாசித்த சிறந்த
நாவல்களுள் ஒன்று என்று கூறுவேன். பனியின் கதை மாந்தர்களான இஃபெக், கா, கடிபே,
நீலம் என பலரும் உறைந்து போயுள்ளனர்.
அந்த
புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும், ஓரானின் எழுத்தின் மீதான காதலும் என்
பெயர் சிகப்பை மீண்டும் வாசித்தே தீர வேண்டும் என்ற உந்துதலை தந்து கொண்டே இருந்தது.
ஆனால் அதற்கான நேரமும் மனமும் இப்போது தான் கை கூடியது. நான் எதிர்ப்பார்த்த அகத்திறப்புகள்
இந்நாவலில் கிடைக்கவில்லை என்பதுடன், புத்தகத்தை முடிக்க ரொம்ப சிரமமாக இருந்தது. பாதியிலேயே
நிறுத்திவிடலாம் என்று பலமுறை தோன்றிய போதும், எழுத்தாளரின் எழுத்துநடையின்
மீதிருந்த காதல் தான் முழுவதும் வாசிக்க வைத்தது.
பதினாறாம்
நூற்றாண்டின் இஸ்தான்புல் நகர இஸ்லாமிய நுண்ணோவியர்களின் உலகம் தான் நாவலின்
மையக்கரு. ஓவியங்களின் புதிய முயற்சிகளை புகுத்தும் ஒரு சாராரும், அது மரபுக்கு
எதிரானது, கடவுளை நிந்திக்கும் செயல் என்றும் அவர்களுக்குள்ளாகவே பிளவுப்பட்டு,
மரபை நேசிப்பவர்கள் புதிய முயற்சிகளை ஆதரிப்பவர்களை கொலை செய்வது, இறுதியில்
கொலைக்காரன் பிடிபடுவதும் என்று நாவல் பதினாறாம் நாற்றாண்டின் துருக்கி,
இஸ்தான்புல் நகரத்துக்கு நம்மையும் இழுத்து செல்கிறது.
துருக்கியின்
வரலாறை ஓரளவாவது படித்திருந்தால் தான் ஓரான் பாமுக்கை எளிதில் உள்வாங்க முடியும்,
பனி நாவலிலேயே இது ஒரளவு பிடிப்பட்டிருந்தாலும், பதினாறாம் நூற்றாண்டுக்குள் பயணி ப்பது
சற்று கடினமாக தான் இருந்த்து. காரணம் நுண்ணோவிய உலகம். ஓவியம் பற்றிய அரிச்சுவடி
கூட தெரியாத எனக்கு பக்கம் பக்கமாக நீளும், ஓவியக்குறிப்புகள், சித்திர சுவடிகள்,
நிறங்கள், அதன் நுட்பங்கள் எல்லாம் பெரும் ஆயாசத்தை தந்தன. எளிய நடை மொழிப்பெயர்ப்பு
மட்டுமே இந்நாவலுக்குள் ஓரளவாவது தட்டு தடுமாறி பயணிக்க செய்தது.
ஒரு ஓவியத்திற்கான குறியீடுகள், விதிமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு பின்னுள்ள மதத்தின் பற்று
அல்லது தீவிரத்தன்மையும், அதனை விட்டு சற்றே விலக முற்படுபவர்களுக்கு நேரும்
முடிவுகள் நம்மை திகிலடைய செய்கின்றன.. இஸ்லாம், புனித
குரான், நபிகள், தீர்ப்பு நாள், இறையுணர்வு பக்தியாக அல்லாமல் அச்சமாக நெஞ்சில்
ஆழமாக விதைக்கப்படுவது என பலவற்றை ஓரான் நமக்குள் கடத்தியிருக்கிறார்.
நான்
பிரேதம் என கிணற்றுக்குள் கொலை செய்ய்ப்பட்டு கிடப்பவனின் குரலாக தொடங்கும் நாவல்
அவனை கொலை செய்தவனை கண்டுபிடிக்கும் வரை அந்நாவலின் வரும் மாந்தர்கள் ஏன்
நுண்ணோவிய சித்திரம் குரலாக கூட நாவல் முழுமையும் ஒலிக்கிறது.
கருப்பு
என்கிற மனிதன் பல ஆண்டுகள் கழித்து தனது காதலி ஷெகூரேவை சந்திக்க வருகிறான். அவன்
காதலியின் தந்தை எனிஷ்டே தான் மரபு ஓவியங்களில் இருந்து அப்போதைய நவீன ஓவியங்கள்
மீது காதல் வயப்பட்டு சுல்தானின் உதவியுடன் நுண்ணோவியர்களை காசுக்காக மரபு மீறிய
ஓவியங்களை வரைய சொல்கிறார். இதன் காரணமாக வசீகரன் என்பவனும், அவனை தொடர்ந்து
அவ்வொவியங்களை காசுக்காக வரைய செய்த எனிஷ்டேவும் கொல்லப்படுகின்றனர்.
ஷெகூரே
ஏற்கனவே திருமணமாகி, போருக்கு சென்ற கணவர் திரும்பாமல் இருக்க, கணவர் வீட்டில்
கணவரின் தம்பி ஹசனிடமிருந்து தப்பிக்க தந்தை வீட்டில் தனது இரு குழந்தைகளுடன்
அடைக்கலமாகிறாள். அப்போது அவளின் நினைவாக திரும்பி வரும் கருப்பு அவளை திருமணம்
செய்ய துடிக்கிறான். ஹஸனும் அவளை அடைய துடிக்கிறான். இருவரின்பாலும் ஈர்ப்பும்
முடிவெடுக்க முடியாமல் தவிப்பதும், தந்தையின் மரணத்திற்கு பின் கருப்பை
நிபந்தனையுடன் திருமணம் செய்துக்கொள்ளும் செகூரே, அதன் பின்னும் பாதுகாப்பின்மை
காரணமாக குழப்பத்துடனே இருப்பதும், அவளின் உணர்வுகளை ஆசிரியர் மிக நுட்பமாக
கூறியிருக்கிறார்.
இந்த
புத்தகம் இருவரை மிக ஈர்க்கலாம். ஒன்று ஓவியத்தின் மீதும் பண்டைய ஓவிய கலையின்
மீது ஈடுபாடு உடையவர்களையும், இரண்டாவது துருக்கியின் பண்டைய வரலாறை கலை வடிவாக
தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பவர்களையும். மற்றவர்கள் இதை முழுமையாக வாசிப்பது
கடினம் என்றே நினைக்கிறேன். எனக்கு இஸ்லாமிய மதத்தின் தொன்மையையும், அது மனிதர்கள்
மீது செலுத்தும் ஆதிக்கத்தின் பின் புலத்தையும் புரிந்து கொள்ள உதவியது.
நாவல்
– என் பெயர் சிகப்பு, ஆசிரியர் – ஓரான் பாமுக், தமிழில் – ஜி. குப்புசாமி,
பதிப்பகம் – காலச்சுவடு.