Saturday 21 March 2015

ஒற்றை சொல்

தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க
மெல்ல பின்னிருந்து கழுத்தை கட்டி
கன்னம் தடவி, மூக்கை நிமண்டி,
உதடு கிள்ளி
உன் கவனம் கலைத்து
மெல்ல என் கை பிடிக்கும் தருணத்தில்
காதை கடித்து
சட்டென ஓடிடும் விளையாடடுததனம் உண்டு,


தோள் சாய்ந்து
மடியில் கிடந்து
கைவிரல் கொண்டு
நெஞ்சு முடி அலைந்து
உன்னழகை பருகி
உன் கண் பார்த்து
மெல்ல கரைந்து போகும்
காதலும் உண்டு


உணர்வின் உச்சத்தில்
நகைச்சுவை சொல்லி
நீ இயங்க மறந்து துள்ளி சிரித்து
"உனக்கு விவஸ்த்தையிருக்கா
எப்போ என்ன பேசணும்னு" என
தலையில் தட்டி சிரிக்க
உன் செல்ல கோபம் ரசிக்கும்
குறும்புத்தனம் உண்டு


புற உலகின் பிரச்சனைகளால்
தாங்கவியலா துயரில்
உடைந்திருக்கும் பொழுதுகளில்
என்னுள் உன்னை புதைத்து
நானிருக்கிறேன் என
தைரியம் சொல்லி
தேற்றும்
தாய்மையும் உண்டு..


இருவரும் இணைந்து நடந்திடும் பொழுதுகளில்
முன்னால் செல்லும் பெண்ணின்
நீண்ட சடையின் பின்னல் அழகை ரசிக்க
விரைந்து அந்த பெண்ணிடம் சென்று
உன் பார்வையை விளக்கி
நீ திருதிருவென விழித்து அசடு வழிய
உன் வெட்கம் ரசிக்கும்
தோழமையும் உண்டு.


எல்லாம் இருந்தும்
கோவத்தில் சொல்லும்
நெஞ்சை அறுக்கும் ஒற்றை சொல்லில்
நத்தையாய் சுருங்கும் மனம்
உணர்வுகளை
தன்னுள் புதைத்து கொண்டு
ஆமையின் ஓடு போல
கடினமாகிவிடுகிறது.

2 comments: