Monday 23 March 2015

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - புத்தகம் ஒரு பார்வை




“பதினெட்டாம் நூற்றாண்டின் மழை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. உயிர்மை வெளியீடு. இருபத்தி ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் சிறுகதை, மாலிக்கபூர், புத்தன் இறங்காத குளம் என்ற மூன்று சிறுகதைகள் தவிர மற்ற கதைகள் அனைத்துமே அன்றாட சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகளில் நாம் அன்றாடம் கடக்கும் சில விசித்திர விஷ்யங்கள், நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் விசித்திரங்கள் குணங்கள் என்று தான் நீள்கிறது.

“ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவிற்கும் சம்பந்தமில்லை என்னும் சிறுகதை இயந்திர வாழ்க்கைக்குள் சுயம் தொலைத்த பெண் ஒரு நாள் எல்லாம் உதறி காலை முதல் மாலை வரை தன விருப்பபடி வாழும் வாழ்வு பற்றிய கதை. அனேகமாக எல்லாருக்குள்ளும் ஒரு சிந்தாமணி ஒளிந்து இருக்கிறாள், இல்லை வெளியே வரமுடியாமல் புதைந்து போயிருக்கிறாள் என்பதை இக்கதை வாசித்து முடித்த போது உணர முடிந்தது.

நம்மில் ஒருவன் வாசித்து முடித்த போது புத்தகத்தை தூக்கி கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டேன். அதற்கு அடுத்த கதைக்குள் போக முடியவில்லை.. அந்தளவு மனதை பாதித்தது தன்னையே விற்றுகொள்ள முன்வரும் ஒருவனும், அவனை வாங்க வரும் மனிதர்களும், விற்று கொள்ள முன்வருபவனின் தனிமையில் உள்ள குமுறலும், அவன் சாப்பிட்ட கம்பளி பூச்சிகள் எல்லாம் சமூகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருப்பது போன்று ஒரு அசூயை வந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை கதை கிளாஸ் வகை. கிருஸ்துவ மதத்தை பரப்ப வரும் ஒருவன் காட்டில் வாழும் பூர்வ குடியினரிடம் எப்படியாவது கிருஸ்துவ மதத்தை பரப்புவேன் என்று சபதமெடுத்து வந்து அங்கு வாழும் முதுவ இனத்தவரிடம் எதுவும் பரப்ப முடியாமல் காட்டின் வளத்தில் பிரமித்து தன்னையே கரைத்து கொள்ளும் ஆங்கிலேயே மத போதகர்  வலேசா என்பவனின் கதை.


கூந்தலில் எரிந்த நெருப்பு என்னும் சிறுகதையை வேறு ஒரு கதை தொகுப்பில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்..

விசித்ரி கதை தான் அதிக துக்கத்துகுள்ளாக்குகிறது. பனிரெண்டு வயதில் நிர்வாணமாக கத்தி கொண்டு ஊருக்குள் ஓடிவரும் ஒரு பெண் அதன் மனசிதைவு அடைய துணி பொட்டலமாக தன்னை ,முழுதும் துணிகளாலேயே (இருவது முப்பது  ஆடைகள் வரை )  மூடிக்கொண்டு துணி பொட்டலமாக எந்த நேரத்திலும் அவிழ்க்காமல் இறுக துணியை பற்றி கொள்ளும் பெண்ணின் கதை. அந்த சம்பவத்தின் காரணம் தேடி சந்தேகமாக நிறைய பேரை யூகித்து கடைசியில் யாரால் அந்த கதி என்று அறியவே முடியாமல் போகும் பெண்ணை பற்றிய கதை. “காமம் தனிநபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை, அது ஒரு புதைசுழல், என்று ஆசிரியர் முடித்திருக்கிறார். இந்த விசித்ரி போல எத்தனை விசித்ரிகளோ என்று எண்ணாமல் புத்தகத்தை மூட முடியவில்லை..

நான் ஒரு சில கதைகள் பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன். இருபத்தி ஏழு கதைகளும் வெவ்வேறு வகை கதைகள் வாசித்து முடிக்கும் போது நம்மை சுற்றி உள்ள மனிதர்களை அவர்களின் செயல்களை இன்னும் கொஞ்சம்  உன்னிப்பாக பார்ப்போம் என்றே தோன்றுகிறது..

No comments:

Post a Comment