Tuesday, 22 August 2017

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரனின் “ நெடுஞ்சாலை” ஒரு வாழ்வியலை அதன் இயல்போடு சொல்லி சென்றிருக்கிறது. நாவலின் மாந்தர்கள் நம் அன்றாட வாழ்வில் கடந்து போகிறவர்கள் தான் என்ற போதிலும், அவர்களின் தொழில் சார்ந்த பின்புலம் பற்றி பெரிதாக நமக்கு தெரியாது. அத்தகைய ஒரு பின்புலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சில வருடங்கள் முன்பு வரை இவ்வளவு தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு கிடையாது, திருவள்ளுவர், பெரியார், சோழன், தீரன் என இவர்களை நம்பியே தான் மக்களின் வெளியூர் பயணங்கள் இருக்கும்.  பெரியார்ல வந்துட்டுருக்கேன், சோழன்ல போயிட்டுருக்கேன், டிடிசில சென்னைக்கு டிக்கட் போட்டிருக்கேன் என்பது போன்று பேருந்துகளாக மனதில் பதியாமல் போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் சர்வ சாதாரணமாக மக்கள் வழக்கில் புழங்கியது. இப்போது தனியார் பஸ்களின் பெருக்கமும், ஸ்லீப்பர், A./c உள்ளிட்ட வசதிகளும், உலகமயமாக்கலுக்கு பின்னர் நடுத்தர மக்கள் கையில் புரள ஆரம்பித்துவிட்ட பணமும் அரசு போக்குவரத்து கழகத்தை கொஞ்சம் மறக்க செய்து வருகிறது எனலாம்.

ஆனால் இவையெல்லாம் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தை நம்பி இருந்த காலகட்டத்தில் அவை எவ்வாறு இயங்கின, அவற்றில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன, என்ன மாதிரி சிக்கல்களை எதிர்கொண்டார்கள், அதில் பணிபுரிந்தவர்களின் பின்புலமும் கனவும், அவர்களின் வாழ்வியலும் எவ்வாறு இருந்தது, இருந்திருக்கும். நிரந்தர தொழிலாளர்கள் தவிர்த்து சி.எல் என்ற கேட்டக்கிரியில் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று பார்ப்பதற்கு நம்மை டீசல் நெடி மணக்கும் பெரியார் டெப்போவுக்குள் கூட்டி செல்கிறார்.

தொழில் முறை வார்த்தைகள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தபோதிலும், மனிதர்களின் சிக்கல்களை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, நெடுஞ்சாலையில் வழுக்கி ஓடும் வெண்ணையாய் கதை தங்கு தடையின்றி பாய்கிறது. கொத்தனாராக பணிபுரிந்து, மெக்கானிக்கல் ஐடிய முடித்து பெரியாரில் அப்ரண்டீஸ்சாக பணிபுரிந்த அனுபவத்தில் சி.எல்லாக சேரும் அய்யனார், தந்தை செட்டி மளிகை கடை வைத்து, ஓரளவு பணம் புழங்கும் குடும்பமாக இருந்தாலும், அரசு உத்தியோகம் கவுரவம் என சி.எல் கண்டக்டராக பணிக்கு சேரும் தமிழரசன், ட்ராக்டர் வண்டி ஓட்டும் ஏழைமுத்து சி.எல் டிரைவராக மூவரும் பெரியார் போக்குவரத்து கழகத்தில் ஒரே நேரத்தில் சேருகிறார்கள். சி.எல் என்பது தற்காலிக பணி. பணி நிரந்தரம் ஆகும் வரை ஏவும் அத்தனை வேலையையும் செய்து, கிட்டத்தட்ட கொத்தடிமைகளுக்கு நிகரான ஒரு வாழ்க்கை, எப்போது வேண்டுமானாலும் வேலை பறி போகும் அபாயம் என அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தையாய் வேலை. அவ்வளவையும் நிரந்தர பணி பெறுவதற்காக பொறுத்து கொள்கிறார்கள்.

அந்த வேலையிலும் தமிழுக்கு மலரும் காதல் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனை, ஏழைமுத்துவுக்கு குடும்பம் அம்மா, மனைவி சண்டைகள், இதனிடையே தெரிந்த பெண் ஒருவளின் குடும்ப விவகாரத்தில் தலையிட அதனால் சந்திக்கும் பிரச்சனை, இதனால் இருவரின் வேலையும் முடங்க, தமிழ் மளிகை கடை நோக்கியும், ஏழைமுத்து ட்ராக்டர் ஓட்டவும் திரும்புகிறார்கள்.

மெக்கானிக்கலான அய்யனாரோ இடையில் அவன் பழுது பார்த்த வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பத்து நாட்கள் போல வீட்டில் வேலையில்லாமல் முடங்குகிறான். ஆனால் வேலை இல்லாமல் இருப்பதை சொல்லவும் முடியாமல், வீட்டை விட்டு கிளம்பும் அவன் கொத்தனாராக இருந்த போது பார்த்த சந்திரா என்ற பெண்ணை சந்திக்க, அவளுடன் மீண்டும் கொளுத்து வேலைக்கு செல்கிறான். சந்திரா மூலம் ஆசிரியர் அந்த பெண்ணின் எதார்தத வாழ்வியலை பதிவு செய்திருக்கிறார்.

கணவன் விட்டு சென்றுவிட, இரண்டு குழந்தைகளுடன் சந்திரா மிக சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் வாழ்க்கை, வேறு தளத்தில் இயங்கும் பெண்களின் மன உறுதிக்கும், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் அவர்களின் ஆற்றலையும் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை எப்படி சொல்வது. அதுவும் அய்யானாருக்கும் அவளுக்குமான உறவு, மிக சகஜமாக பாலியலை எந்த வித கட்டுக்குள்ளும் கொண்டு வராமல், சுதந்திரமாக அனுபவித்து, கைக்கொடுத்து பிரிந்து செல்லும் சந்திரா கதாப்பாத்திரம் மனதுக்குள் கிளர்த்திய சிந்தனைகள் ஏராளம்.  

அய்யனார் தற்காலிகமாக நீக்கப்பட்டாலும், மீண்டும் சி.எல்லாக தொடர அனுமதிக்கப்பட, பெரியாரை மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிட்ட தமிழும், ஏழைமுத்துவும் தங்கள் லைசன்சை திரும்ப பெறுவதற்காக மீண்டும் பெரியார் டெப்போவுக்கு வருகிறார்கள். அப்போது அவசர ஸ்பெஷல் வண்டியை ஓட்ட ஆள் இல்லை என லைசன்ஸ் பெற வந்தவர்களை ஒரு இத்துப்போன பஸ்சுக்கு ட்ரைவராகவும், கண்டக்டராகவும் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். மிக மோசமான நிலையில் இருக்கும் அந்த வண்டியை வைத்துக்கொண்டு தமிழும், ஏழையும் படும் பாடு, இந்தப்பக்கம் அந்த வண்டியின் நிலை அறிந்த அய்யனாரின் தவிப்பு, அந்த வண்டி பக்கத்து ஊர் திருவிழா ட்ரிப் அடித்து நல்லபடியாக ஷெட்டுக்கு திருமப வேண்டும் என்று பதைபதைப்புடன் காத்திருக்க, அந்த வண்டி மக்கள் கூட்டம் காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்படுகிறது.

தமிழும் ஏழையும் அந்த வண்டியுடன் போராடி சென்னை சென்று , மீண்டு வண்டியை விருத்தாசலம் சேர்ப்பார்களா என்ற பதைபதைப்பு புத்தகத்தை கீழே வைக்க விடாமல் செய்தது. அதுவும் விருத்தாசலம் டூ சென்னை ட்ரிப்பில் அரசு போக்குவரத்து ட்ரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்குகள், உயரதிக்காரிகளில் ஆரம்பித்து டீசல் பிடிப்பவர் வரை நிரந்தர ஊழியர்களின் நிலை, சி.எல்லாக பணிபுரிபவர்களின் நிலை, வண்டிகளின் பராமாரிப்புகளில் காட்டப்படும் அலட்சியம் என்று போக்குவரத்து துறையில் நடக்கும் அத்தனையையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

நாவல் முழுதும் பகடிகள், ஊர் மக்களின் எள்ளல், டிரைவர் கண்டக்டர்கள், மெக்கானிக்கலின் வாழ்க்கைகளின் சுவராஸ்யமான சம்பவங்கள் , அவர்களின் துன்பியல் சம்பவங்களை கூட நாவலில் பகடி நடையில் தான் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஆம் அந்த மக்களின் வாழ்வில் இப்படி அனைத்தையும் லகுவாக எடுத்துக்கொள்ள பழகவில்லை என்றால்,  மனப்பிறழ்வுடன் தான் உழல வேண்டி வரும்…..


நாவலை வாசித்து முடிக்கும்போது, ஒரு போக்குவரத்து கழக டெப்போவை விட்டு வெளியே வந்தது போன்ற உணர்வு. அவ்வளவு எளிமையான வார்த்தைகளால், சாமானியர்களுக்கு அதிக அறிமுகமில்லாத ஒரு களத்தில் உலவ விட்டிருக்கிறார் வாசகரை…

Tuesday, 8 August 2017

" கிருஷ்ணப்பருந்து” - ஆ.மாதவன்


”கிருஷ்ணப்பருந்து” ஆ.மாதவனின் படைப்பு. ஏற்கனவே இவரின் சிறுகதையின் மொத்த தொகுப்பையும் வாசித்துவிட்ட நிலையில், கிருஷ்ணப்பருந்து அவரின் க்ளாஸ் படைப்பு என்று கூற வாசித்து முடித்தேன். இதை ஒரு குறு நாவல் என்றோ, சற்றே பெரிய சிறுகதை என்றோ கூறலாம்.  வட்டார வழக்கு, மலையாள தமிழில் மனதை அள்ளியது. மாதவனி கதையின் மையமான அதே சாலை கடை பகுதி, இந்த கதையில் சற்றே தள்ளி அந்த சாலைக்கடையை ஒட்டியுள்ள தோப்பு விளை என்னும் பகுதியையும், அதில் வசிக்கும் மனிதர்களையும் சுற்றி கதை நீளுகிறது. கதையின் மையம் மனித மனதில் உறைந்து கிடக்கும் காமவிகாரம் பற்றியது தான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதத்தில் மாதவன் தனித்து தெரிகிறார்.

மனித மனதில் உறைந்துகிடக்கும் காமம், மேலோட்டமாக அவனால் கண்டடையா முடியா ஆழத்தில் தன்னை புதைத்துகொண்டிருப்பது போல தோன்றினாலும், சில கண நேரங்களில் விஷ்வரூபமெடுத்து வெளிப்படும்போது அனைத்து கட்டுகளையும் உடைத்து விடுகிறது.

சுவாமி தான் நாவலின் நாயகன். மத்திம வயதை கடந்து கிட்டத்தட்ட ஐம்பது வயதில் இருக்கும் அவனை சுற்றியே கதை நகருகிறது. தாத்தா, அப்பாக்கள் எல்லாம் ஏகப்பட்ட பரம்பரை சொத்துகள் காரணமாக மைனர் குஞ்சுகளாக, ஆட்டம் போட அந்த சொத்தின் எஞ்சிய பகுதிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழ்க்கை வாழ்கிறான் நாயகன்.

தோப்பு விளையை சுற்றியுள்ள தென்னந்தோப்பு அதில் கிடைக்கும் வருவாய், அந்த விளையிலேயே இருக்கும் ஒரு சிறிய கோவில், அதை சுற்றி வசிக்கும் வசதியற்றவர்கள். அங்கிருக்கும் வீடுகள் மற்றும் தோப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் அதுவே போதுமென்று, புத்தகங்களுடன் வாழ்கிறார்.

மனைவி இறந்துவிட , ஏற்கனவே அப்பாவின் காமகளியாட்டத்தை நேரில் பார்த்ததால்,  தான் அப்படியல்லாமல் நெறியான ஒரு யோக வாழ்க்கையை வைராக்கியமாக வாழ்கிறார். மனைவியுடன் முழுமையான உறவில் இருந்தும், அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. இந்த நேரத்தில் வேலப்பன் என்னும் ஏழு வயது சிறுவன் ஒருவன் அடைக்கலமாக சுவாமியின் வீட்டுக்கு வருகிறான். அந்த வீட்டில் ஒருவனாக சுவாமியை குரு போல ஏற்றுக்கொள்கிறான். அவருடனே வளைய வருகிறான்.

வேலப்பன் வளர்கிறான், அவனை நல்ல இடத்தில் பணிக்கு அமர்த்துகிறார் சுவாமி. அவனுக்கு ராணி என்ற பணக்கார பெண்ணுடன் காதல் வர பல எதிர்ப்புகளுக்கிடையில் அவர்களுக்கு மணம் முடித்து வைக்கிறார். ராணி பணம் அந்தஸ்து அனைத்தையும் உதறி அந்த தோப்பு வளையில் வேலப்பனுடன் குடியேறுகிறாள்.

ஒரு நாள் சுவாமியின் வீட்டில் பார்க்கும் பெண்ணின் அரை நிர்வாணச்சிலை ஒன்றை பார்த்து வேலப்பன் துணுக்குறுகிறான். அவனின் சகவாச தோஷம் அவனை சுவாமியை பற்றிய வேறு கோணத்தை சிந்திக்க வைக்கிறது. அந்த சவகாச தோசத்தால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். குடி அவனை மேலும் வக்கிரமாக சிந்திக்க வைக்கிறது. வளர்கிறான். பால் சொஸைட்டியில் பதவிகள் கிடைக்கின்றன வேலப்பனுக்கும் ஆனால் சிறு பொறியென விழுந்த சுவாமியை  பற்றிய சந்தேகமும், வளர்கிறது. அவருடன் தன் மனைவி ராணியையும் சம்மந்தப்படுத்தி சந்தேகப்பட்டு அவளுடனும் சண்டையிடுகிறான்.

சுவாமி போல பிம்பம் அமைத்து வளைய வந்தாலும், உள்ளுக்குள் காமம் அவரை கீழே இழுக்கிறது. ஒரு கட்டத்தில் ராணியின் பால் இவர் மனம் மையல் கொள்ளுகிறது. காமத்தில் மனம் தகிக்கிறது. ராணி இவரை சுவாமியாக நினைத்து யதார்த்தமாக பழகுகிறாள், வேலப்பன் சண்டையிடும்போதெல்லாம் முறையிடுகிறாள் சுவாமியிடம்.

ஒரு பந்தின்போது அடிப்பட்டு கிடக்கும் சுவாமிக்கு ராணி பணிவிடை செய்கிறாள். அவரை தொட்டு தூக்கி அவள் உதவி செய்ய, நீண்ட நாட்களாக பெண்ணின் ஸ்பரிசம் படாமல் இருந்தவருக்குள் இருக்கும் காம உணர்வுகள் தகிக்க தொடங்குகிறது. உடல் நலம் தேற தொடங்க, ராணி நீங்க இந்த தாடியெல்லாம் மழிச்சுட்டா மாப்பிள்ளை போல இருப்பீங்க என்று கூறிய வார்த்தைகள் அவரை இழுக்க தாடியெல்லாம் எடுத்து ராணி மீது கடும் மையல் கொள்கிறார்.

அப்போது வேலப்பன் குடிபோதையில் கலவரம் ஒன்றில் போலீசாரை கொலை செய்ய முயற்சிக்க, கைது செய்யப்படுகிறான். கட்சியாட்கள் என பலரும் முயற்சித்தும் அவனை வெளியில் கொண்டு வர முடியவில்லை. சுவாமி நினைத்தால் முடியும் என்று சொல்ல ராணி சுவாமியிடம் கதறுகிறாள். ஆனால் சுவாமி மறுக்கிறார். இதனிடையே தன் உளக்கிடக்கை அரசல் புரசலாக ராணியிடம் தெரிவிக்க, தன்னை தர ஆயுத்தமாகிறாள் ராணி.

சுவாமியை நெருங்கி அவரின் மேல் சாய்ந்து அவரின் நெருப்பை தணிக்க முடிவு செய்து அவரிடம் சிருங்காரம் ஆரம்பிக்கும் ராணி எப்படியாவது வேலப்பனை வெளியே கொண்டு வர கோரிக்கை வைக்கிறாள். பொறி தட்டியது போல சுவாமி உலும்பி எழுகிறார். ராணியை விட்டு வெளியேறுகிறார் வேலப்பனை மீட்பதாக என கதை முடிகிறது.

இறுதி முடிவு திணிக்கப்பட்டதாக தான் தோன்றுகிறது. ராணி மீது அவ்வளவு தகிக்கும் காமத்தை சுமந்தலையும் , அவளுக்காக தனது யோக பிம்பத்தை உடைத்தெறியும் சுவாமி இறுதியில் ராணியை உதறி செல்வது செயற்கையான முடிவாக தான் தோன்றியது. அந்த கட்டத்தில் வந்து மனம் மாறுவது சாத்தியமற்றதாக தான் தோன்றுகிறது.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட சுவாமி - ராணி இறுதி உரையாடலுக்கு முன்பு வரை கிருஷ்ணப்பருந்து ஒன்று வருகிறது. அந்த கிருஷ்ணப்பருந்தின் குறியீடு மனிதனின் உள்ளுக்குள் இருக்கும் காம விகாரம் தான். மனித மனதின் நெருக்கடிகடிகள், அகச்சிக்கல்கள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க அதன் அடியில் காமம் ஒளிந்து கொண்டிருக்கும், கிருஷ்ணப்பருந்து உயரத்தில் பறக்கும் போதும் அதன் வெண்மையை பார்க்க முடியும் என்றாலும், அருகில் வரும் போது இன்னும் தெளிவாகவே பார்க்கலாம். காம விகாரமும் அப்படியே தான் என்பதாக ஆசிரியர் கூற முனைந்திருக்கிறாரோ..