Sunday 8 October 2017

கீழை நாட்டு கதை தொகுப்பு - மார்கெரித் யூர்ஸ்னார்

கீழை நாட்டு கதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. அனைத்துமே நாடோடிக்கதைகள். மார்கெரித் யூர்ஸ்னார் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் செவி வழி கதைகளில் புனைவு கலந்த எழுத்து. ”தலை வெட்டப்பட்ட காளி” கதையில் இருக்கும் தத்துவம் அழகியல் தாண்டி அந்த கதை எழுத்தாளர் மீது ஒரு சறுக்கலை கொடுத்தது. அங்கும் ஜாதிய மனம் இங்கை விட மோசமாக இருந்ததா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. தலை வெட்டப்பட்டு முண்டமாக இருக்கும் காளியின் உடல் நரகத்தினுள் தொலைந்து போக தேவர்கள் அத்தலையை விபச்சாரி ஒருவரின் உடலோடு பொருத்துகிறார்கள்

ஆனாலும் காளி, இந்திரனின் தேவலோகத்தில் ஆட்சிபுரியத் திரும்பிச் செல்லவில்லை. காரணம் விலைமகளுக்கான பழைய நினைவுகளே தெய்வீகத் தலை பொருத்தப்பட்டிருந்த அவளுடைய உடலுக்குள் வளைய வந்து கொண்டிருந்தன அதனைத்தொடர்ந்து காளி மிகவும் பயங்கரமாக உக்கிரமாக மாறுகிறாள். இந்நிலையில் காளியின் செயல்கள் பற்றிய வருணனைகள் தான் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறமற்ற மனநிலையை பறை சாற்றுகிறது.

காளியை பற்றி வருணனையில், அவள் அருவருப்பாக இருக்கிறாள். கீழ்ச்சாதியினரிடமும், பிற்படுத்தப்பட்டோரிடமும் உறவு கொண்டதால் தன்னுடைய தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்தை அவள் இழந்து விட்டிருந்தாள். தொழுநோயாளிகளால் முத்தமிடப்பட்ட அவளுடைய முகத்தில் நட்சத்திரப் பொருக்குகள் தோன்றியிருந்தன. கடுங்குளிரினால் குளிக்காமலேயே இருந்த ஒட்டக ஓட்டிகளின் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். பார்வையிழந்த பிச்சைக்காரர்களின் பூச்சிகள் மண்டிய படுக்கைகளில் படுக்கிறாள். பிராமணர்களின் தழுவல்களிலிருந்து விலகி சவங்களைக் கழுவும் பணியைச் செய்யும் பகல் வெளிச்சத்தை மாசுபடுத்தும் அருவருப்பூட்டும் இனத்தைச் சேர்ந்த வறியவர்களின் அணைப்பைத் தேடிச் செல்கிறாள். இப்படியாக தான் நீளுகிறது. 

காளி சாமானிய மக்களின் ஊர்தெய்வமாக, எல்லை தெய்வமாக போற்றி கொண்டாடப்படும் நாட்டில் காளி பற்றி சிறுவயதில் நான் கேள்விப்பட்ட செவி வழி கதைகள் ஏராளம், ஆனால் இந்த கதையில் வரும் தத்துவார்த்த சிந்தனைகள் அனைத்துமே மிக நன்றாக இருந்தாலும், காளியின் செயல்களை ஒப்பீடு செய்திருக்கும் அனைத்தும் ஜாதிய வன்மமாக தான் உணர முடிகிறது. இந்த தொகுப்பில் பல கதைகள் செவி வழி நாடோடிக்கதைகள் தான் என்பதால், அவர் செவி வழி கேட்ட புனைந்ததாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி செவி வழி என்றால், இந்தியாவின் ஜாதிய சிந்தனை கீழை நாடுகள் வரை பரவியிருக்கும் விதத்தை இதன் மூலம் வராலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தான் பார்க்கிறேன். 

சர்ச்சைக்குரிய இந்த கதையை தவிர்த்து எனக்கு பிடித்த மீதி இரண்டு கதைகளை மட்டும்  கீழே கூறியிருக்கிறேன்.. “இளவரசர் ஜெங்கியின் கடைசிக் காதல்” என்னும் கதை ஒரு பெண்ணின் மாறாக்காதலையும் இறுதியில் அவள் அடையும் ஏமாற்றத்தையும் பேசுகிறது.

நாயகனான இளவரசர் ஜெங்கி காதல் இளவரசனாக வலம் வருகிறார், ஏகப்பட்ட மனைவிகள், ஆசை நாயகிகள் என்று இருப்பதால் அவரால் ஒருவரின் காதலையும் நுணுக்கமாக உள்வாங்கவோ, நினைவுக்கு கொண்டு வரவோ முடியவில்லை. ஐம்பது வயதாகும் போது முதுமை வேறு சிந்தனையை தர தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மலையில் தான் கட்டி வைத்திருக்கும் குடிலுக்கு சென்றுவிடுகிறார். சிறிது வருடங்களில் எல்லாம் உலகத்துடனான தனது தொடர்பை முற்றிலும் துண்டித்து கொள்கிறார்.

ஆன்மீக புத்தகங்கள் தனிமை என்று இருக்கும் அவரை அவரது ஆசை நாயகியில் ஒருவரும், அவரை மிகவும் நேசிப்பவளுமான பெண் அவருடன் கடைசி காலத்தில் அவருக்கு பணிவிடை செய்து அவருடன் காலம் கழிக்க பிரியப்படுகிறாள். அப்போதாவது தன்னை மட்டும் நேசித்து, தான் அவரை நேசிக்கும் காதலை புரிந்து கொள்வார் என. முதல் முறை பயணித்து அவரின் இருப்பிடம் அடைய, பழைய நினைவுகளை கிளறியதற்காக அவர் கடிந்து அவளை விரட்டிவிடுகிறார். இதனிடையே அவரின் பார்வை மெல்ல மெல்ல மங்குகிறது.

அவர் குடிலில் எப்படியாவது புகுந்து அவருடன் எஞ்சிய காலத்தை கழிக்க முடிவெடுக்கும்பெண் ஒரு குடியானவளாக வேஷம் போட்டு அவரின் குடிலை அடைகிறாள். பார்வை முற்றிலும் மங்காத அவர் , இரவில் தனிமையில் அவள் அழகில் அடைக்கலமாகிறார். பின்னர் அவர் தவறு உரைக்க அவளை விரட்டி விடுகிறார். ஆனாலும் அவள் சென்ற பின் அவருள் இருந்த காதல் உணர்வுகள் தகிக்க தொடங்குவதால், தனிமை வெறுக்கிறது. பார்வையும் முற்றிலும் போய்விடுகிறது.

இப்போது அந்த பெண் வேறு ஒருவனின் மனைவியாக வேடம் போட்டு, புனித யாத்திரை போகப்போவதாக ஒரு இரவு தங்க அனுமதி கேட்கிறாள். இளவரசர் அனுமதிக்க அவள் பாடுகிறாள் அந்த குரலில் உணர்ச்சிவசப்படும் அவர் அந்த பெண்ணிடம் மீண்டும் உறவு கொள்கிறார். அவளை போகவிடாமல் தன்னுடன் தங்க வைத்து கொள்கிறார். அவள் அவருக்கு பணிவிடை செய்து தங்குகிறாள்.

இறக்கும் தருவாய் வருகிறது இளவரசனுக்கு. அப்போது அவர் அவளிடம் தன் வாழ்வில் வந்த போன அனைத்து பெண்களை பற்றியும் கூறுகிறார். அவள் குடியான பெண் வேடம் தரித்து வந்ததை கூட நினைவு கூறும் அவருக்கு ஆசை நாயகியாக இருந்த அவளது பெயர் மட்டும் நினைவுக்கு வரவில்லை.. அவள் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அவரிடம் தன்னுடைய பெயரை கூறி அவளை நினைவில்லையா, அவளை பற்றி கூறுங்கள் என்கிறாள். ஆனால் அதற்குள் இளவரசர் இறந்துவிடுகிறார்.

அந்த பெண் வெடித்து அழுவதாக , தன் தலை முடியை எல்லாம் பிய்த்து காற்றில் பறக்க விடுகிறாள் என கதை முடிகிறது. இந்த கதையில் வரும் கவித்துவமான வரிகள் , அழகியல் எல்லாம் சான்ஸே இல்லை….


அடுத்த கதை ஸ்ரீ ராம் மொழிப்பெயர்த்தது. இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் அவர் மொழிப்பெயர்ப்பு தான். ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும். கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதிய”உயிர் தப்பிய வாங்-ஃபோ” சிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம். ஆனால் நீ தூரிகையில் காண்பிக்கும் உலகம், என்னுடைய உடைமகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது. கதை நெடுகிலும் வரும் இலக்கிய வர்ணனைகளும், ஒப்புமை வார்த்தையழகும் மனதை அள்ளுகிறது.  

மார்கோவின் சிரிப்பு, மரணத்தின் பால், மோகினிகளை நேசித்த மனிதன் ஆகிய கதைகளை வாசிக்கும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது. அவை செவி வழி கதைகள் என்று. ஏனென்றால் கிட்டத்தட்ட இதே போன்று கதைகள் நமது வட்டார கதைகளாக வேறு வேறு பெயரில் நம்மிடையே உலவியவை தான்.. ஆசிரியரின் எழுத்து நடையும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் உவமைகளும், அதிலுள்ள இலக்கிய சுவையும் மனதை கவர்கிறது.

1 comment:

  1. wow wonderful info thank you for sharing this great post
    http://www.happynewyear2018images.in

    ReplyDelete