Monday, 25 April 2022

பாதி இரவு கடந்து விட்டது


அமிதபா பக்‌ஷியின் ஆங்கில நாவலை பாதி இரவு கடந்து விட்டது என சுபத்ரா தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நவாப் கால மாங்கே ராம் என்கிற மல்யுத்த வீரனின் வாழ்க்கையில் இருந்து கதை தொடங்கி, அவன் மகன் பர்சாதி, ராம்தாஸ் என முடிகிறது.மல்யுத்தம் குறித்து பெருமிதமும், அதன் மீது அளப்பரிய காதலும் கொண்ட அப்பாவியான மாங்கே ராமை, கால சூழல், லாலா மோதி சந்த் என்ற பணக்காரர் குடும்பத்துக்குள் அடியாளாகவும், விசுவாசமான வேலைக்காரனாகவும் உழல வைக்கிறது.

கதையை எழுதிய அமிதபா பக்‌ஷி பற்றி தெரியவில்லை. ஆனால் அவர் ராமாயணத்தின் வைத்திருந்த மையல் தெரிகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை கதையாக வரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முன் இருந்த ஜமீன்காலம், பின் ஆங்கில ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த காலம், அதன் பின் 70கள் வரையான அரசியல், ஆன்மீகம், இலக்கியம், அகவயம், புறவயம் அனைத்தையும் வாழ்வியல் வழியாக பதிவு செய்ய முனைந்திருக்கிறார். ஆனால் அதிக ஆன்மீகம் மற்றும் ராமனின் அருமை பெருமைகள் விளக்கத்தாலும் பல இடங்களில் கதை மையத்தில் இருந்து விலகி செல்கிறது.

முதல் பகுதியில் லாலா மோதிசந்தில் ஆரம்பித்து அவரது வாரிசுகள், அதற்கடுத்த தலைமுறை என ஒரு பணக்கார வியாபார குடும்பம், மாங்கே ராம், அவனை தொடந்து, அவன் மகன், பேரன் பரம்பரை பரம்பரையான விசுவாச வேலைக்காரனாக என்னென்ன அடைகிறார்கள், என்னென்ன இழக்கிறார்கள். அதில் மல்யுத்த வீரனான மாங்கே ராம் கம்பீரத்தை தனது பண பலத்தால் நுட்பமாக அடித்து ஒடுக்கும் லாலா, ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மாங்கே அந்த ஒடுக்குதலை பெண்கள் விவகாரத்தில் செலுத்தி எவ்வாறு தணித்து கொள்கிறான்.

கடைசியில் வயதாகி படுத்த படுக்கையாக கிடக்கும்போதும் அவன் மருமகளிடம் தகாத முறையில் நடந்து அவளால் கத்தி குத்துக்கும் ஆளாகி இறுதியில் இறக்கிறான். அதற்கு பின் அந்த மருமகள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்படுவதை பிற்பகுதியிலும் ஆசிரியர் அழகாக பொருத்தியிருக்கிறார்.

கதையை முழுதுமாக இரண்டாம் பகுதி தாங்கி பிடிக்கிறது. இந்நாவலில் எனக்கு பிடித்த பகுதியும் கூட, சுபத்ராவின் மொழிப்பெயர்ப்பில் அந்த வாக்கியங்கள் வழியாக கடத்தப்பட்டிருக்கும் நுட்பமான உணர்வுகள் தான் என்னால் இந்நாவலை முழுதாக வாசிக்கவைத்தது. அதில் கதையில் லாலா மோதி சந்தின் இரண்டாம் மகனாக வரும் திவான் சந்தின் மீது அவனது அண்ணி ஸ்வர்ணதாவுக்கு ஏற்படும் ஈர்ப்பை, “ அவன் மீது தனக்கும் இயல்பானதும் மறுக்கப்பட்டதுமான ஒரு வகை ஈர்ப்பு இருக்கிறதென்பதை ஒப்புக்கொண்டாள்”என்ற வரிகளின் வழியாக அழகாக நமக்குள் கடத்தியிருப்பார். இதே போல அவளது தோழி கமலாவிற்கும் அவளுக்குமிடையே இருக்கும் நட்பிற்கு பின் ஒளிந்திருக்கும் போட்டி பொறாமையை அகதிறப்பாக ஆசிரியர் காட்டியிருப்பதை அதன் உணர்வு மாறாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.

அதேபோல இளவயது விதவையான கமலாவின் உணர்வுகளை, திவான்சந்தின் மீது அவளுக்கு ஏற்படும் காதல் உணர்வை , தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிந்த அவள், ஒருபோதும் அடைய முயல தேவையில்லாத பொருளின் மீது தான் கொண்டிருக்கும் விருப்பம், அதை சுதந்திரமாக நேசிக்கும் வாய்ப்பை தருகிறது என காதலுக்கான வேறு ஒரு விளக்கத்தை ஆசிரியர் கூறியிருப்பார்.

காதலின் இருப்பு ஒரு பெண்ணிடம் ஏற்படுத்துகிற உணர்வுகளும், அது கட்டுப்படுத்தஇயலாமல் பெருகி, வெளிப்படுகிற விதம் கண்டிப்பாக ஆபத்தாய் முடியும் என்பதையும் வாசித்த போது, நமது காதல் உணர்வுடன் பொருத்தி பார்க்க முடியாமல் கடக்க முடியாது.

ஸ்வர்ணலதா, கமலா, சகுந்தலா, திவான்சந்த் இவர்கள் வாழ்வியலை சொல்லும் பகுதிகளில் நிறைய அகதிறப்புகளை நிகழ்த்திய ஆசிரியர், அதன் பின் துளஸிதாஸர் ராமாயணத்தின் மீது கொண்ட மோகத்தை சொல்லவே அதிக பக்கங்களை எடுத்து கொண்டார்.

அதன் பின் தொடர்ந்த கதை குறிப்பாக கடிதங்களில் எல்லாம் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன உணர்வு. ஆசிரியர் நிறைய பக்கங்களை எழுதாமல் தவிர்த்து சுருக்கியிருக்கலாம். அதிலும் லாலாவின் மரணபடுக்கையின் போது நடக்கும் ராம பாராயணம் எல்லாம் இரக்கமே இல்லாமல் பல பக்கங்கள் நீள்கிறது. மொழியின் உதவியால் தான் நாவலை முழுக்க வாசிக்க முடிந்தது.

நாவல்: பாதி இரவு கடந்து விட்டது

ஆசிரியர்: அமிதபா பக்‌ஷி

தமிழில் : சுபத்ரா

Like
Comment
Share

0

Friday, 16 July 2021

ஆயிரம் சூரிய பேரொளி

 A thousand splendid suns என்ற காலித் ஹுசைனியின் நாவல், ஆயிரம் சூரியப் பேரொளி என ஷகிதா அவர்களால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

மத்திம வயதில் இருக்கும் பலரும் ஆப்கானிஸ்தானில் தாலிபனால், ஆப்கன் மக்களுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரங்களை செய்திகளாக நம் பதின் வயதிலோ, இளவயதிலோ செய்திகளாக கேள்விப்பட்டு கடந்திருப்போம். அந்த ஆப்கானிஸ்தானையும், அம்மண்ணின் மாந்தர்களையும் மனக்கண்ணில் தனது படைப்பின் மூலம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்,
மிக தொன்மையான நாகரீகம் கொண்ட ஆப்கானிஸ்தானில் கலாச்சார சுவடுகளில் பலவும் அழிந்து போய்விட்டன. இயற்கை வளத்துக்கு பஞ்சமில்லாத நாடு என்பதாலேயே அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், அவர்கள் அரசியல் சூழ்ச்சிக்கும் இரையாகி, தன் மக்களை பலிகொடுத்த நாடு. மன்னராட்சி முடிவுக்கு வந்தபோது சோவியத் கட்டுப்பாட்டில் வந்து பின்னர் நாட்டில் நடைபெற்ற புரட்சியினால் சோவியத் படைகள் விரட்டியடிக்கப்பட்டு , ஆப்கனின் பூர்வக்குடிகளாக இருந்த பல்வேறு இனக்குழுவினருக்கு ஆட்சி பொறுப்பு கைமாறியது. அதில் முக்கியமானவர்களான முஹாஹிதின்களும், தாலிபன்களும் மதத்தின் பெயரால் தன் சொந்த இனமக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் உலகையே ஆப்கானிஸ்தான் என்ற பெயரை அதிர்ச்சியோடும், பயத்தோடும் உச்சரிக்க வைத்தது.
போர் என்றாலே அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான். அதிலும் மதத்தின் பெயரால் பிற்போக்குதனங்களை கட்டவிழ்த்துவிடும் பாஸிஸ்டுகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கும்போது அங்கு பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? மரியம், லைலா என்ற இரு பெண்களின் மூலமாக அதனை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
மரியம் என்ற பெண்ணின் குழந்தைப்பருவத்தில் தொடங்குகிறது கதை. மூன்று மனைவிகளை உடைய ஜலீல் என்பவருக்கு வேலைக்காரி ஒருவள் மூலம் பிறக்கும் மரியம் முறைகேடாக பிறந்த பெண் என்ற காரணத்தினால் அவள் தாயை இழந்தது முதல் அலைக்கழிக்கப்பட்டு, பல சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கிறாள். பதினைந்து வயதில் 45 வயதான ரசூல் என்பவனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
ஒரு குழந்தை பிறந்தால் அதனை கொண்டு தனது வாழ்வின் வெறுமையை துடைத்தெறி விடலாம் என்று கனவு காணும் மரியத்துக்கு தொடர் கருக்கலைதலும் அதனால் கணவனின் ஏச்சு பேச்சுக்கும், அடி உதைக்கும் பழகி வேறு கதியன்றி அவனுடனே குடும்பம் நடத்தி வருகிறாள். அதே பகுதியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவரின் மகள் லைலா தாயாரின் மனநிலை பாதிப்பால், அன்புக்கு ஏங்கும் குழந்தையாக ,அவள் வயதையுடைய கன்னிவெடியால் ஒரு காலை இழந்த தாரிக் என்பவனின் ஸ்நேகத்தால் மகிழ்ச்சியாக குழந்தை பருவத்தை கழிக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி சோவியத்தின் படைகள் விலகி உள்நாட்டு கலவரங்களால் பறிக்கப்படுகிறது.
குழந்தையான லைலா பதினான்கு வயது பெண்ணாக தாரிக்கின் நட்பு காதலாக விரிகிறது. உள்நாட்டு கலவரத்தால் தாரிக் தனது பெற்றோருடன் நாட்டை விட்டு வெளியேற இறுதியாக லைலாவிடம் விடைபெற வருகிறான். இனி தன் காதலனை பார்க்கவே முடியாதோ என்ற பரிதவிப்பில் மருகி தவிக்க, இருவருக்கிடையே ஆறுதலும், தன்னம்பிக்கையுமாக தொடங்கும் உடையாடல் இருவரின் இணைதலில் முடிகிறது.
இதற்கிடையே நாட்டின் ஆட்சி முஜாஹிதன்களிடமிருந்து தாலிபன்கள் கைகளுக்கு ஆட்சி செல்ல, முன்பில்லாத வகையில் பசி பஞ்சம் ஒரு பக்கமும், தாலிபன்களின் சட்டத்திட்டங்களால், வன்முறையும், கொலைகளும் தலைவிரித்தாடுகிறது. முதலில் தனது மகன்கள் உயிர் தியாகம் செய்த நாட்டை விட்டு வெளியேற மறுத்து வரும் லைலாவின் தாய், நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கிறாள்.
அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, லைலாவின் வீட்டை ஏவுகணை தாக்க, அவளது பெற்றோர் தாக்கப்பட, குற்றுயிராக லைலா உயிர்பிழைக்கிறாள். அவளை ரசூல் தனது வீட்டுக்கு கொண்டு வந்து மரியம் உதவியோடு அவளை காப்பாற்றுகிறான். அதற்கு மாறாக அவளையே மணமுடிக்க அவன் செய்யும் செயல்களும், வயிற்றில் தாரிக்கின் வாரிசு உருவாகியிருப்பதை உணரும் லைலா, அந்த திருமணத்திற்கு சம்மதிப்பதும், அதனால் மரியம் அவளின் எதிரியாக, பின் லைலாவின் மீது வாஞ்சை ஏற்பட இருவருக்குள்ளும் நட்பு மலர்வதும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஒருமுறை லைலாவும், மரியமும் குழந்தையுடன் தப்பிக்க முயற்சிக்க, அவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்ப வர ரசூலிடம் பெறும் அடி உதைகளும், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளும் கதறி அழவைக்கின்றன. தாலிபன்களின் காட்டாட்சியில் பெண்கள் ஒரு உயிராக கூட மதிக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் அடைந்த வேதனைகளும், மருத்துவம் என்பது அதிலும் பிரசவம் என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையாக நடந்திருக்கிறது என்பதை வாசிக்கும்போது மனம் பதைக்கிறது. அத்தகைய கொடுமையான ரசூலிடமிருந்து இருவரும் எப்படி தப்புகின்றனர். மரியமின் முடிவு, லைலாவின் புதுவாழ்வு தொடக்கம், அதனைத்தொடர்ந்து அரங்கேறும் மாற்றங்கள் என நாவல் நீள்கிறது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால, பார்க்கப்போனால் நம் சமகால ஆப்கானிஸ்தான் அரசியலை இரண்டு பெண்கள் வாழ்வியல் மூலம் ஆசிரியர் கட்டமைத்திருக்கும் விதம் அலாதியானது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஆப்கன் மக்கள் அனைவரும் மரணத்தாலும், தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த துயரத்தாலும், பட்டினியாலும் அடைந்த துயரங்கள் அனைத்தையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆசிரியர் இரண்டு பெண்கள் வாயிலாக ஒரளவு அதனை நமக்கு கடத்த முயன்றிருக்கிறார். ஷாஹிதாவின் எளிய மொழிப்பெயர்ப்பினால் நம்மாலும் மரியத்தின் துயரத்தையும், வலியையும் உணர முடிகிறது.
தற்போதைய ஆப்கன் சுதந்திர தேசமாகி, ஒரளவுக்கு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் துயரங்கள் துடைத்தெறியப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.. தாரிக் போன்ற ஒரு சில ஆண்களால் சில லைலாக்கள் பிழைத்திருக்ககூடும், மற்றவர்கள்??????
Like
Comment
Share

Tuesday, 4 May 2021

வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக்

 வெண்ணிறக் கோட்டை - ஓரான் பாமுக் – காலச்சுவடு பதிப்பகம் – தமிழில் ஜி. குப்புசாமி

வெண்ணிறக் கோட்டை கதை மிக சிக்கலானது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதை. தனக்குள் இருக்கும் மற்றொருவரை அல்லது மற்றவருக்கும் இருக்கும் தன்னை எதிர்கொள்வது தான் கதையின் மையக்கரு. ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவல் படித்த போது எதிர்கொண்ட அதே ஒட்டா தன்மையை இந்த வெண்ணிறக் கோட்டை வாசிக்கும்போதும் எதிர்கொண்டேன். அவரின் பனி நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விடாப்பிடியாக இந்நாவலை இறுதி பக்கம் வரை படித்து முடித்தேன்.
பனி போல சுவராஸ்யம் இல்லை என்றாலும், அகத்தின் இருண்மையை தேடும் மனதுக்கு வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தாலும், கதையினூடாக ஆங்காங்கு தெறிக்கும் சின்ன சின்ன பொறிகள் நாவலுக்குள் உள்ளே இழுப்பதும் வெளியே தள்ளுவதுமான உணர்வை ஏற்படுத்துகின்றன. என்னளவில் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் இல்லை.
பனி நாவல் வாசிப்பின் போது தெரிந்து கொண்டு துருக்கியின் வரலாறு கதைக்களத்துக்குள் நுழைய உந்துதலாக இருந்தாலும், கதை 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிப்பதால் அந்தக்காலத்திற்குள் கொஞ்சம் தடுமாறி தான் புக வேண்டியுள்ளது. வெனீஸ் நகரிலிருந்து ஆராய்ச்சிக்காக கடல் பயணம் மேற்கொள்ளும் ஒருவன் துருக்கியர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான். மருத்துவமும், வானவியலும் தெரிந்தவன் என்பதால், இஸ்தான்புல் பாஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறான். அனைத்து அடிமைகளை போல முதலில் கட்டிட வேலைக்கும், இன்ன பிற அடிமை வேலைகளும் செய்யும் அவன் ஒருநாள் பாசாவின் உடல்நிலை பாதிக்கப்பட அவருக்கு சிகிச்சையளித்து நன்மதிப்பை பெறுகிறான். தொடர்ந்து சுல்தானின் திருமண வைபவம் ஒன்றிற்காக இதுவரை யாருமே பார்த்திராத வாண வேடிக்கையை நடத்துவதற்காக, அவனை துருக்கியின் வானவியில் அறிஞனான ஹோஹா என்பவனிடம் ஒப்படைக்கிறார்கள்.
உருவத்தில் தன்னை ஒத்து இருக்கும் ஹோஹாவுக்கும் இவனுக்கும் அதன்பின்னர் ஏற்படும் ஒட்டலும் விலகலும், ஒட்ட முடியாமையும், விலக முடியாமையும் என கதை வெவ்வேறு படிநிலைகளுக்கும் பிரவேசிக்கிறது. கதை இவ்விருவரை மையப்படுத்தியே. பெண் கதாப்பாத்திரங்களே கிடையாது. கதை நகர இவ்விருவரும் கூட மனதில் இருந்து நகர்ந்து, மனதின் இருண்மைகளுக்குள் ஆழமாக ஊடுருவ தொடங்குகிறது.
ஹோஹாவும், ஆராய்ச்சியாளனும் (கதை நெடுகிலும் ஆராய்ச்சியாளன் ”அவனாக” தான் வருகிறான். பெயர் கிடையாது) வேறு வேறானவர்களா அல்லது இருவரும் ஒருவரே வா என்று குழப்பம் வருகிறது. கடைசி அத்தியாயம் வரை வாசித்தாலும் இந்த குழப்பம் வாசகனை நாவல் நெடுகிலும் சுழற்றி அடித்துக்கொண்டே இருக்கும்.
சுல்தானுக்கு நெருக்கமாக மாறும் ஹோஹா புதிய ஆயுதம் ஒன்றை தயாரிக்க முயல்வதும், அதற்கு ஆராய்ச்சியாளனின் அறிவை கைக்கொள்ள தொடங்கினாலும், வெளியில் அவனை மறுத்து வருகிறான. ஆனால் அவர்களறியாமல் இருவருக்குள் நடக்கும் மாற்றங்களும், அதை உணரத்தொடங்குதலும் தான் நாவலின் மைய இழை.
இதனிடையே அப்போது துருக்கியில் பரவும் ப்ளேக் நோய் இருவருக்குள்ளும் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஒரு கட்டத்தில் அதன் பொருட்டு தப்பி ஓடும் அவன் சுதந்திரமாக உணர்ந்தாலும், மீண்டும் ஹோஹாவிடம் சரணடைய விரும்புகிறான். மனதின் முரண்களை ஒவ்வொரு இடங்களிலும் ஆசிரியர் அவ்விருவர் வாயிலாக வாசகனுக்கு கடத்திக்கொண்டே இருக்கிறார். ஒட்டு மொத்த நாவலிலுமே மனதின் முரண்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆண் பெண்ணாக தான் இருக்க வேண்டுமென்று இல்லை, தனித்த இருவர் ஒருவருக்குள் ஒருவர் அகத்தால் ஊடுருவும் போது என்னவெல்லாம் நடக்கும். மனதின் விகாரங்களை அப்படியே எழுத்தின் மூலம் கொண்டு வருதல் சாத்தியமா, இருவரும் எழுதி எழுதி கிழித்துப்போட்டாலும், ஒருவரை ஒருவர் அந்த எழுத்தின் வாயிலாக அறிந்துக்கொண்டு அவர்களாகவே மாற முற்பட்டாலும், அந்த எழுத்து இல்லாத ஏதோ ஒரு மர்ம்ம் இருவரையும் வெறுத்துக்கொண்டே நேசிக்க செய்கிறதே அது என்ன? ஒருவரை வெறுத்துக்கொண்டே நேசிப்பதென்பது தன்னைத்தானே அறிந்துகொள்ளும் முயற்சியா? ஆனால் நாவலின் பல இடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும். நாவலின் சுவராஸ்யத்தினால் அல்ல, நம்மை நாம் அறிந்து கொள்ளும் சுவராஸ்யத்தில்.
ஒரு மனிதனின் அறிவு, மதம், பழக்கவழக்கங்கள், நாகரிகம், கருத்தியல் அனைத்தும் அவன் வாழும் சூழலினால் கட்டமைக்கப்பட்டே நான் உருவாகிறது. ஆனால் அது தான் நாமா, அல்லது உண்மையில் நாம் யார் என்று நமக்குள் நடக்கும் அகப்போராட்டத்தையும் நாவல் பேசுகிறது.
வெனீஸில் கிருத்துவ மத நம்பிக்கைகளில் பிறந்து வளர்ந்த ஒருவன், அதற்கு சம்மந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் பல ஆண்டுகள் வாழவேண்டிய கட்டாயத்தில் அவனது அடையாளம் எப்படி மாறிப்போகிறது. முதலில் எப்படியாவது அங்கிருந்து தப்பி தன்னுடைய நாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் அவன், ஆரம்பத்தில் கொலை செய்தாலும் மதம் மாற முடியாது என்பவன் கடையில் ஒரு துருக்கியனாக மதமாற்றமடைந்து வாழ்கிறான்.
இந்நாவல் அகத்தை கீறி தன்னை தான் பார்த்து கொள்வதற்கானது மட்டுமே. அதுவே வாசகனை எளிதில் சோர்வடையவும் செய்யக்கூடும்.
மா கோ

0 Co

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

 பண்பாட்டு அசைவுகள் (அறியப்படாத தமிழகம் & தெய்வங்களும் சமூக மரபுகளும்)

ஆசிரியர்: தொ. பரமசிவன். காலச்சுவடு பதிப்பகம் .
மிகவும் தொன்மையான மொழியான தமிழின் ஆதிக்கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமென்பது நமது வேர்களை தேடி கண்டடைகின்ற குதூகலம் தரவல்லது.
நாம் ஒரு பொருட்டாக கருதாதில் கூட வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிந்துள்ளன என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்களின் கட்டுரை வாயிலாக தான் அறிய முடியும்.
சங்க இலக்கியம் காலம் தொட்டு தமிழர்களின் பண்பாடு, சமண மதத்திற்கு சென்று, பின் பக்தி இயக்கமாக சைவமும் வைணவமும் செழித்தோங்க, சமண மதம் சந்தித்த சரிவும், பரத்தமை உருவான விதம், சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், விஜயநகர பேரரசு செலுத்திய ஆதிக்கம், அதன் விளைவாக தெலுங்கர்கள் குடியேற்றம், அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்டவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என விரிவாக பேசுகிறது
இந்தநூல் வாசிக்க வாசிக்க தமிழர் பண்பாடு எது என்பது குறித்த ஐயம் பலமாக எழுகிறது. பண்பாட்டின் எச்சங்கள் ஆங்காங்கு இன்றும் நடைமுறையில் இருந்தாலும், உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனித்த அடையாளத்தை கிட்டத்தட்ட அழித்தே வருகிறது எனலாம்.
சிறுதெய்வ வழிபாடு மட்டுமே தமிழர்களின் வாழ்வியலாக இருந்த நிலையில், பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய விதமும், அது பல இடங்களில் சிறு தெய்வ வழிபாட்டை தனக்குள் இணைத்து கொண்ட விதம் குறித்தும் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவற்றை மேற்கோள் காட்டி ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக முற்றிலும் அழியாமல், சூழலுக்கு தக்க தங்கள் பண்பாட்டில் சில கூறுகளை மாற்றிக்கொண்டு பயணித்திருக்கிற
தமிழர்களின் உணவு, உடை, வாழ்வியல் , அவர்களின் சடங்குகள், வழிப்பாட்டு முறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் போது எழும் வியப்பு இந்நூல் முழுவதும் விரவியிருக்கிறது.
ஒரு பெண் விதவையானால் பெண்ணின் சகோதரன் அவளுக்கு கோடித்துணி போர்த்தும் வழக்கமொன்று இன்று வரை நடைமுறையில் உண்டு. கோவையில் மட்டும் இச்சடங்கு இன்று வரை வித்தியாசமாக நடப்பதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கைம்பெண் ஆனவளின் கையில் அவளது சகோதரன் நூல் நூற்கும் தக்களியையும் கொஞ்சம் பஞ்சையும் கொடுத்து, “கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டு பஞ்சு இருக்கு, நூறு வயசுக்கும் நூற்று பிழைச்சுக்கோ ” என்று சொல்லும் வழக்கம் இருக்காம்.
இது போல நிறைய இன்றும் மறையாமல் இருக்கும் சடங்குகள் குறித்தும் , பார்ப்பனரல்லாதோரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ மதம் எப்படி உருமாறியது, பார்ப்பனீயம் எப்படி அதனை உள்ளிழுத்துக்கொண்டது. திராவிடம் மக்களின் பண்பாட்டில் செய்த மாற்றம் என பலவற்றை ஆசிரியர் தொகுத்திருக்கிறார்.
இப்போது நாம் பண்பாடு, கலாச்சாரம் என பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் மூலத்திலிருந்து எந்தளவு உருமாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்’.
Like
Comment
Share

5 Co

Monday, 7 September 2020

தாண்டவராயன் கதை

 

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின்  ஆதி பூர்வ குடியில் கதை ஆரம்பிக்கிறது அங்கிருந்து பல்கலைப்பழகம் வரும் பெண்ணான எலினார், கணிதத்தில் வல்லவனும், சாகசத்தில் விருப்பம் உள்ளவனுமான ட்ரிஸ்ட்ராம் என்பவன் மீது ஏற்படும் காதலால் ஊர் எல்லையில் இருக்கும் சாபக்காட்டிற்கு சென்று பார்வையை தொலைக்கிறாள். அவள் பார்வை பறிபோனதற்கு காரணம் தான் என்று மருகும் ட்ரிஸ்ட்ராம் அவளை மணந்து கொண்டு அவள் கண் பார்வை திரும்ப கிடைக்க முயற்சி மேற்கொள்கிறான். அதன் ஒரு பகுதியாக  ப்ரான்ஸில் பாரீஸில் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை மேற்கொள்ள  எலினாரும் ட்ரிஸ்ட்ராமும் வருகிறார்கள். அப்போது அங்கு ப்ரெஞ்ச் புரட்சி வெடிக்கிறது. அங்கே எதிர்ப்பாராதவிதமாக பிரெஞ்ச் அரசாங்கத்திடம் உதவி எதிர்ப்பார்த்து வரும் திப்பு சுல்தான் அரசு அனுப்பி வைத்திருக்கும் இந்தியர்களை சந்திக்கிறார்கள்

இதனிடையே ப்ரெஞ்ச் புரட்சியின் தீவிரமடைய, எலினாருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரும் இறந்து போக இங்கிலாந்து திரும்புகிறார்கள்.. அதன் பின் சில வருடங்கள் கழித்து கிழக்கிந்திய கம்பெனியின் கணக்கு வழக்கை சரிப்பார்ப்பதற்காக அனுப்ப்படும் குழுவில் ட்ரிஸ்ட்ராமும் இந்தியா வருகிறான். திப்புவின் அதிகாரத்திலிருக்கும் மைசூர் பகுதிகளும் அதை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகள் என கர்நாடக மற்றும் தமிழ்மாநில பரப்பையும் அதன் வனப்பகுதிகளையும் சுற்றி கதையை விரித்தெடுக்கிறார் 

கதை ட்ரிஸ்ட்ராம் ராயக்கோட்டை வந்த பின் தான் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுக்கிறது. எழுத்து நடையும் வாசகன் மேல் சற்றே கருணையை காட்டியிருக்கிறது அல்லது வாசகனை தன்னுள் வாரி சுருட்டி கொள்கிறது. மாயாஜாலமென விரியும்  கதையில் புனைவின் உச்சத்தை ஆசிரியர் தொட்டிருப்பதோடு வாசகனையும் அந்த புனைவிற்குள் இழுத்து பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார்.  அடுத்தடுத்து புதிர்களாக அடுக்கி அந்த புதிர்களையும் ஒவ்வொன்றாக விடுவித்து கொண்டே வரும் சாகசம் வாசகனை கட்டி போட்டுள்ளது. இடையிடையே இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடந்திருக்கா சாத்தியமிருக்குமா என்ற சிந்தனையே கூட அற்றுப்போய் வேறு ஒரு உலகத்திற்குள் வாசகனை மிதக்க விட்டுள்ளார். அதிலும் கோணய்யன் மற்றும் தாண்டவராயன் கதையை நாட்டார் புராண கதையின்  எழுத்து நடையை அதன் வாசிப்பனுபவத்தை வாசிப்பதன் மூலம் மட்டுமே உணர முடியும்.

அதிகார மையத்தால் அள்ளி வீசப்படும் வராகன்களுக்காக அவர்கள் ஏவும் கட்டளைகளை சிரமேற்று கங்காணிகளாக மாறி பூர்வகுடிகளை அழித்தொழித்தும், அடிமைகளாக அவர் தம் ரத்தத்தை உறிஞ்சும் மனித இனம் உலகெங்கும் ஒரே முகத்தை கொண்டுள்ளதை நாவல் பேசுகிறது. சேரிப்பெண்ணாக வரும் கெங்கம்மாவாக இருக்கட்டும், ஆங்கில சிப்பாய்களால் வன்புணரப்ட்டு வாழ்க்கையை தொலைக்கும் செல்லியாகட்டும், பூசாரியால் வேசியாகும் பெண்ணாகட்டும் காலம் காலமாக ஆண்களின் அதிகார வேட்கைக்கும், மதத்தை கொண்டு மக்களை கட்டிப்போடும் மடாதிபதிகளுக்கும் பலியாகும் பெண்களின் துயரம் ஒரே மாதிரியாக தான் இந்த நூற்றாண்டு வரை தொடர்கிறது. அதிலும் கெங்கம்மா மூலமாக கீழ்நிலையில் இருக்கும் பெண்களை இந்த சமூகம் யார் வென்றாலும் தோற்றாலும் தங்களை சாக்கடைகளாக வைத்துகொள்வதில் யாரும் சளைத்தவர்களில்லை என்னும் உண்மையை பதிவு செய்திருக்கிறார். 

இந்த கதையின் முக்கிய திருப்பமாக வரும் நீலவேணியின் பாதையும் அதை தொடர்ந்து கதைக்குள் விரிந்து கொண்டே செல்லும் கதைக்களமும் துப்பறியும் சாகஸ கதை போல தோன்றினாலும், கதையை விரித்தெடுத்திருக்கும் முறையில் இது சாகஸத்தையும் தாண்டி வேறொரு எல்லைக்கு வாசகனை கொண்டு சேர்க்கிறது. இந்த கதையினூடாக எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலாகட்டும், கதையின் ஊடாக ஆசரியர் பதிவு செய்திருக்கும் சமூக பார்வையாகட்டும் புனைவு என்ற ஒற்றை வார்த்தைக்குள் சுருக்கிவிடாத முடியாதபடி செய்துள்ளன,

ஆசிரியரே முடிச்சுகளால் கதையை பின்னி பின் அதனை ஒவ்வொன்றாக அழகாக விடுவித்தாலும், கதையில் புரியாத புதிராக சில எஞ்சி விடுகிறது. அதே போல எலினாரின் கண் நோய்க்கான மருந்து கடைசியில் ட்ரிஸ்ட்ராமுக்கு கிடைத்த்தா? அல்லது ட்ரிஸ்ட்ராமும் பார்வையிழந்தானா? போன்ற பல கேள்விகளின் சிடுக்குகள் அப்படியே நிற்கின்றன. புத்தகம் முடித்த பின் மேலும் பக்கங்கள் இருக்க கூடுமா என்ற ஐயப்பாட்டில் புத்தகத்தின் பக்கங்களை பார்த்தால் சரியாக தான் இருந்தது. ஏனோ அவ்வளவு விரிவாக எழுதி வந்த ஆசிரியர் இறுதியில் ஆதி முடிச்சை அவிழ்க்காமல் அப்படியே விட்டார் என்று தெரியவில்லை.

ஒரே நாவலில் இவ்வளவு விஷயங்களை ஆசிரியர் பொதித்து வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும்., ஏன் வாசகனை கதைக்குள் நுழைய விடாமல் திணறடிக்கும் எழுத்து நடையை ஆசிரியர் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை.. முற்றுப்புள்ளியே இல்லாத நீள நீள வார்த்தைகள் பத்திகளாகவும், பக்கங்களாகவும் நீள்வது கொடுக்கும் அயர்வு ஒருபுறம் என்றால், மறுபுறம் அடைப்புகுறிக்குள் ஒரு கதையையே சொல்லி முடிப்பதுவும் என்ன மாதிரியான எழுத்து பாணி என புரியவில்லை. இந்த நாவலின் எழுத்து நடை சற்று இலகுவாக இருந்திருந்தால், பல வாசகர்களை சென்றடைந்திருக்கும். இக்கதையின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதுடன், ஒரே மூச்சில் இதை பற்றி சொல்ல முடிவது எனக்கு சாத்தியப்படாத்தால், இந்நாவலை பற்றி இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.