Friday 6 February 2015

ஞானம் - பிப்ரவரி கவிதை

காதல் கனவு காணும்
யுவதியின் கனவில்
கடவுள் தோன்றி
வேண்டிய வரம் கேள் என்றான்.


மனதுக்கு பிடித்தவன்
வேண்டும் என்றாள்
அப்படியே ஆகட்டும்
எப்படிபட்டவன் வேண்டும்

செல்வம் நிறைந்தவனா
ஆம்
ஆனால் அது மட்டும் போதாது
பிறகு
செல்வாக்குடையவனா
அறிவு நிறைந்தவனா
ஆற்றல்மிக்கவனா
வீரம் நிறைந்தவனா
விவேகம் நிறைந்தவனா
அனைவரையும் கவரும் பேரழகனா
அன்பை அனைவருக்கும் பொழிபவனா என வரிசையாக கேட்க
முதலில் சொன்ன பதிலையே
மீண்டும் மீண்டும் சொன்னாள்.

ஆயாசத்துடன் கடவுள்
எப்படி என நீயே
சொல்லிவிடு என்றார்
என்னுணர்வுகளை சிதைக்காது
நுண்ணுர்வுகளையும் புரிந்து
தன்னில் பாதியாக வரிக்கும் மதிக்கும்
உணர்வுகளால் நிரம்பியவன்
வேண்டுமென்றாள்.

அப்படிப்பட்ட ஆண்
இன்னும் உருவாகவில்லை
உன் உணர்வை
உனையன்றி பிறிதொருவரால்
உன்னை போல்
மதிக்க இயலாது
ஆதலால்
உன் பாதியை
உன்னிடமே தேடு
என மறைந்தார்.

கனவிலிருந்து கலைந்தவளுக்கு
விழிப்பு வந்தது
கூடவே ஞானமும்...

No comments:

Post a Comment