Monday 27 March 2017

சமூக வலைத்தளத்தில் பெண்கள்

சமூக வலைத்தளம் பெண்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் பல நல்லவை, அதிலும் குறிப்பாக ஆரோக்கியம், விழிப்புணர்வு அதிகளவில் (வதந்தியும் கூட :P)  சென்று சேர்கிறது. அதுவும் தனிமையில் இருக்கும் பெண்களுக்கு Fb மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். ஆனால் நாம் லேசாக சறுக்கினால் மிகப்பெரிய மன உளைச்சலை கொடுப்பதும் இது தான்.  இன்றைய இளைய தலைமுறை பெண்கள் மத்திம வயது பெண்களை விட அழகாகவே சமூக வலைத்தளத்தை கையாளுகிறார்கள்.

ஆனால் மத்திம வயதில், பிள்ளைகள் ஓரளவு வளர்ந்துவிட்டு தங்கள் உலகத்துக்குள் நுழையும்போது அவர்களை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்டு வந்த பெண்கள் ஒரு மிகப்பெரும் வெறுமையை உணர்வார்கள். உடல்  தோற்றத்தில் இயற்கையாய்  நிகழும் மாற்றங்கள், ஹார்மோன்களின் மாற்றத்தினால் நிகழும் உளவியல் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் கழிவிரக்கமும் பெரிதும் பாதிப்பதால் நிலைகுலைந்து போகின்றனர் பல பெண்கள். பெரும்பாலான பெண்கள் மனம்விட்டு பேசகூட யாரும் இல்லாமல் புழுங்கிகொண்டிருக்கும் சூழ்நிலையில் யார் மூலமோ அல்லது குடும்பத்தினர் மூலமோ சமூக வலைத்தளத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள்.

பேசுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பெண்களின் இன்பாக்ஸ்கள் ஆண்களால் தட்டப்படும்போது, அவர்களை எதை நோக்கி நகர்கிறோம் என்று அறியாமலே செல்கின்றனர்.

சாட்டிங் சரி, தவறு என்ற பிரச்சனைக்குள் போக விரும்பவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பல பெண்கள் இந்த சாட்டிங் என்ற விஷயத்தை கையாள தெரியாமல் பல விபரீத சிக்கலுக்குள் சிக்கி கொள்வதுடன் அதனால் மன நிம்மதியை இழக்கிறார்கள். சில பெண்கள் என்னுடன் பகிர்ந்ததின் அடிப்படையில் சில விஷயங்களை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு பெண் நான் ஜோவியலாக பேசுபவள் மேம், அதே போல தான் பேசினேன், ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் He cracked my mind, I don’t know whr I slipped, அதன் பின் என்னால் நார்மலாக இருக்க முடியவில்லை. மிக அழகான குடும்பம், சொந்த பிஸினஸ் ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இதிலிருந்து மீள வழி தெரியவில்லை என்றார்.

வேறு ஒரு பெண், காபி சாப்பிட கூப்பிட நான் சென்றேன், அதை பற்றி தவறாக என் உறவினரிடம் எல்லாம் சொல்லி எனக்கு வீட்டில் ஏகப்பிரச்சனை என்றார்.  மற்றோருவர் சாட்டிங்கில் இருக்கும் போது ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சமயத்தில் பகிர்ந்து கொண்ட விஷயத்தை வைத்து மிரட்டுவதாக கூறினார். இவர்கள் அனைவருமே எந்த உள்நோக்கமுமின்றி பழகிய போதும் அது ஏதோ ஒரு இடத்தில் தவறியிருக்கிறது. இதில் அந்த ஆண் மேல் தவறு, இந்த பெண் மேல் தவறு என்பதை எல்லாம் தாண்டி நாம் சாட்டிங் செய்ய, நமது பிரச்சனைகளை பகிர தேர்ந்தெடுக்கும் நட்பு, அது ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி இங்கு தான் அறிமுகமாகிறார்கள் என்றால், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கள் பாலியல் தேவைக்காக தான் வருகிறார்கள் என்கிற அபத்தங்கள் அதிகம் என்பதால், நாம் தேர்ந்தெடுக்கும் நட்புகளையும், நமது தேடலில் உள்ள தெளிவையும் பொறுத்தே அனைத்தும் அமையும்.  ஒரு விஷயத்தை பெண்கள் தெளிவாக புரிந்து கொண்டாலே பல சிக்கலில் விழாமல் தப்பிக்கலாம். நமது பிரச்சனையை கேட்கும் அனைவராலும் அதனை புரிந்து கொள்ளவோ, உணரவோ முடியாது என்ற புரிதலை ஏற்படுத்தி கொள்வது அவசியம்.

பெண்கள் பேச்சால் அதிகம் ஈர்க்கப்படுவதால், மிக எளிதில் வார்த்தைகளை நம்பிவிடுகின்றனர். வார்த்தைகளுக்கு பின் இருக்கும் உண்மையின் நம்பகத்தன்மையை பற்றி சந்தேகிக்காமல் இருந்துவிடுவதால் பல சிக்கல்களில் சிக்கி கொள்கிறார்கள். கணவனுக்கு தெரியாமல் பணம் கொடுத்து அதனால் சிக்கலுக்குள் சிக்கிகொண்ட பெண்களும் உண்டு. ஆண்கள் ஏமாந்ததாகவும் கூறி பெரிய பஞ்சாய்த்துகள் நடந்தது. இதில் தவறு இருவர் பேரிலும் தான்.. பண விவகாரங்கள் நெருங்கிய உறவினர்களிடம் கூட பகையை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்க, அதிக பழக்கமில்லாத, இன்னும் சொல்லப்போனால் நேரில் பார்த்திராதவர்களுக்கு கூட எதன் அடிப்படையில் பணம் கொடுக்கிறார்கள் என்பது பெரிய புதிர். இதனால் பணம் மட்டுமல்லாமல் தங்கள் நிம்மதையையும் தொலைத்த பெண்களும் உண்டு.

நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும். பெரும்பாலான ஆண்கள் பெண்ணிடம் பேசுவதில் உண்டாகும் கிளர்ச்சிக்காக பேசுகிறார்களே தவிர, எந்த கமிட்மெண்டுக்குள்ளும், சிக்கி கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களும் அந்த கிளர்ச்சி தேவைப்படுவதால் தான் பேசுகிறார்கள் என்றாலும், அதை அவர்களாலேயே ஒத்துக்கொள்ள முடியாது. ஆழ்மனதில் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் கற்பு, ஒழுக்கம் சாந்த நெறிமுறை அவர்களை ஒத்துக்கொள்ள வைக்காது. இதனால் பெண்கள் செண்டிமெண்ட், காதல், என்று ஏதாவது புனித பிம்பத்திற்குள் தங்கள் ஈர்ப்பையும் கிளர்ச்சியையும் பொதித்து வைப்பதால் வெகு எளிதில் சிக்கலுக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பொறுப்புகள் பற்றிய பேச்சுகளில் ஆண்கள் கழுவுகிற மீனில் நழுவிகிற மீனாக தான் பேசுவார்கள். அனைத்து ஆண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. தோழமையாக பகிர்வதற்காக நட்புகளை தேடுகிற ஆண்களும் உண்டு என்றாலும் அது வெகு சிலரே. வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்று நுழையும் ஆண்கள் பெண்ணிடம் பேசுவது கிளர்ச்சிக்காக தான் என்பதை தெளிவாக  உணர முடியாத பெண்கள் அவர்களின் அன்பான ஒன்றிரண்டு வார்த்தைகளில்யே சிக்கிக்கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அடுத்து டெலி செக்ஸ் (இது பற்றி விரிவாக பதிய வேண்டும் என்றாலும் நீளம் கருதி சுருக்கமாக) என்ற கட்டத்துக்குள் நகரும் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இயற்கையில் ஆண் பெண் உறவு, கற்பனையில் இருப்பது போல எல்லா தருணங்களும் அமையாது. பாலியல் உறவு உடல் சார்ந்து மட்டுமல்லாமல், மனம், குடும்பம்,  பாதுகாப்பு, ஆரோக்கியம் இவை அனைத்தும் சார்ந்தே அமையும். இது பற்றிய புரிதல் பெண்களுக்கு அவசியம். சில ஆண்களால் மிகைப்படுத்தி சொல்லப்படுகின்ற டெலி செக்ஸ், வார்த்தைகளை நம்பி நன்றாக செல்லும் குடும்ப வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்கி கொள்ளும் பெண்கள் இழப்பது என்னவென்று தெரியாமலே இழக்கிறார்கள்.





No comments:

Post a Comment