Monday 27 March 2017

Menopause - 1

நாற்பது நெருங்கும் அல்லது நாற்பதை கடக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அதே நேரம் கடுமையான காலகட்டத்தை கடக்கிறார்கள். மெனொபாஸ்சுக்கு முந்தைய இந்த காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எல்லா பெண்களும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்பது தான் சிக்கலே. அதனால் பிரச்சனைகளுக்கு தகுந்த மருத்துவம் எடுத்து கொள்வது தான் சரியான வழி.

உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் மிக சாதாரணமாக இந்த மெனோபாஸை கடப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் மெனொபாஸ்சுக்கு முந்தைய நிலையான (PMS) & (PCOS, PCOD)  என்கிற நிலையை கடக்கும் பெண்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். என்னுடைய இந்த கட்டுரை அத்தகைய பெண்களுக்கானது. அத்தகைய நிலையை கடந்து வருவதாலும், அதுபோன்ற நிலையை கடக்கும் பெண்கள் பலருடன் பேசியதிலும் அவர்கள் பிரச்சனைகளையும் சேர்த்தே எழுத முயற்சிக்கிறேன். கண்டிப்பாக யாருக்காவது உதவக்கூடும்.

முதலில் PMS -  அதாவது ப்ரீ மெனோபாஸ்  - முப்பதுகளின் இறுதியில் ஆரம்பிக்கும் இது சிலருக்கு நாற்பதுக்கு மேல் தொடங்கலாம். இந்த வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள், கால் வலியாக இருக்கலாம், அல்லது தலைவலி, முதுகுவலி, பசியின்மை, திடிரென்று அதிக உதிரப்போக்கு, உதிரப்போக்கு கண்ணில் படும் ஆனால் முதல் மூன்று நாட்கள் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று நான்காம் ஐந்தாம் நாள் அதீத உதிரம் என்று பிரச்சனை சிறியதாக ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் கவனமெடுத்து ஒரு இரண்டு மாத மாதாந்திர ப்ரீயட்ஸை நோட் செய்யவும். இது தவிர அதீத மூட் ஸ்விங் உணரலாம். திடீரென்று காரணமே இல்லாமல் சந்தோசமாக பாடி ஆட வேண்டும் என்ற உணர்வோ அல்லது அதீத எரிச்சலோ, கோவமோ ஒன்றின் முடிவில் இன்னொன்று என்று சட்டென உணர்ச்சிகள் மாறி மாறி ஆட்கொள்ளலாம்.

எந்த மருத்துவரை சந்திக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெளிவாக கூறுங்கள். வயதை எக்காரணம் கொண்டும் குறைக்காதீர்கள்.  சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன், அல்லது பிரீயட்ஸ் நடக்கும் போது நீங்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளை  முதலிலேயே கூறினால் தான் மருத்துவரால் டயாக்னைஸ் செய்ய முடியும். இல்லை உங்களுக்கு PMS இருப்பதை டாக்டர் உணரவே நாட்கள் பிடிக்கும்.

அதுபோல பருக்கள் இதனை ஆங்கில மருத்துவர்கள் Acne என்கிறார்கள். இந்த பருக்கள் சாதாரணமாக பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் போது வந்து, பிரியட்ஸ் முடிந்தவுடன் மறையும் பருக்களாக இருக்காது. தாடைகளில் அதிகளவும், கன்னத்திலும் நீங்கள் எதிர்பார்காத, இன்னும் சொல்ல போனால் நீங்கள் டீன் ஏஜில் கூட அனுபவித்திராத அளவு இருக்கும். இதற்கு ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்வதை விட, இந்த வயதில் இருக்கும் பெண்கள், ஒரு நல்ல கைனாகலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்வது நல்லது. ஏனென்றால் எனக்கு முதலில் பரு வந்தபோது ஸ்கின் டாக்டரை தான் கன்சல்ட் செய்தேன். அவர் அதற்கான மருந்துகளை கொடுக்க பின் பக்கவிளைவுகள் என்று நகர்ந்தது தனி கதை.

இந்த பருக்கள், உங்கள் கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கு உருவாகும் கட்டிகளால் கூட இருக்கலாம். ஆரம்பத்திலேயே கைனகாலஜிஸ்ட் இது குறித்து பரிசோதனைகள் செய்யும் போது ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் கர்ப்பபையை காப்பாற்றி கொள்ளலாம். உங்களுக்கு கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டல் உடனடியாக எந்த ஸ்பெலிஸ்ட்டை பார்த்தாலும் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்யவும்.

-       சாதாரணமாக பீரியட்ஸ் சமயத்தில் வரும் வயிற்றுவலி, கால்வலி, முதுகு வலி  லேசாக இருந்தாலும் பொருட்படத்தாமல் கடப்பவர்களுக்கு வலி அதிகரிக்கும். வலியே தெரியாதவர்கள் கூட வலியை உணருவார்கள்.

-       ஹார்மோனலின் தாறுமாறான சுழற்சி காரணமாக பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் தலைவலி ஆரம்பித்து  பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் வரை இருக்கும் தலை வலி, உதிரப்போக்கு ஆரம்பித்தவுடன் நின்றுவிடும்.

-       சிலருக்கு மார்பில் பாரத்தை சுமப்பது போன்ற வலியிருக்கும். கட்டிகள் தென்பட வாய்ப்புண்டு. அது கேன்சர் கட்டி என்று அலற வேண்டாம். சாதாரண கட்டிகளாக கூட இருக்க வாய்ப்புண்டு. ஆனால் மருத்துவரிடம் செக் செய்ய வேண்டியது அவசியம். எனக்கு ஒன்றிரண்டு கட்டிகள் இருந்தது. மருத்துவர்கள் சோதித்து பயப்பட தேவையில்லை என கூற பின் அவை கரைந்தும்போனது. பிரீயட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்  மார்பை, சில நேரங்களில் அதன் காம்பை தொட்டால் கூட வலி தாங்க முடியாததாக இருக்கும்.  நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போல தோன்றும். இதுவும் பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

-       சில நேரங்களில் பிரீயட்ஸ் ஆரம்பிக்கும் முன்னர் ஒன்று அதீதமாக பசிக்கும், இல்லை சாப்பிடவே பிடிக்காது. பீரியட்ஸ் முடியும் வரை இந்த மனநிலை தொடரும்.

-       பாலியல் சார்ந்த உணர்வும் அதீதம், வெறுப்பு இரண்டு நிலைக்கும் மாறி மாறி பயணிக்கும்.

-       சாதாரணமாகவே நீங்கள் கோவப்படுபவர், கொஞ்சம் சென்ஸிடிவ் என்றால் இந்த காலகட்டம் உங்களை  அதீத கோவத்துக்கும், உணர்ச்சி குவியலுக்கும் கொண்டு செல்லும். உங்கள் குடும்பத்தினரையும் டாக்டரை கன்சல்ட் செய்யும் போது அவசியம் அழைத்து செல்லவும்.

-       மூட் ஸ்விங்க்ஸ் & டிப்ரஷன், இரண்டும் சேர்ந்து ஆட்டிபடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் ஒரு சுழல் போல உங்களை உள்ளிழுக்கும். நீங்கள் போராடினாலும் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வருவது இயலாததாக இருக்கும், உங்கள் மனதை மாற்ற மிகுந்த போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வாய் விட்டு கதறி அழ வேண்டும் என்ற உணர்வு சந்தர்ப்பத்தை எதிர்பபார்த்து காத்திருக்கும். ஒன்று யாரையாவது வார்த்தைகளால் காயப்படுத்த முயற்சிப்பீர்கள், அல்லது உங்களை நீங்களே தேவையில்லாத எண்ணங்களால் காயப்படுத்தி கொள்வீர்கள். ஸ்ட்ரஸ் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். PCOD & PCOS இரண்டு நிலையிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

-       பீரியட்ஸ் தாறுமாறாக வரத்தொடங்கும் மாதத்தில் இருமுறை, அல்லது நாற்பது, நாற்பதைந்து நாட்கள் என்ற இடைவெளியில் வருவதுடன், உதிரப்போக்கும் அதிகளவில் இருக்கும். கிட்டதத்ட்ட அது வரை சமச்சீரான உதிரப்போக்கை சந்தித்த பெண்கள் மன ரீதியாக பீதியடைவதுடன், உடல் ரீதியாக சோர்ந்து போவார்கள்.

-       இரத்த அழுத்தமும், படபடப்பும் அதிகரிப்பதுடன், இரவில் ஏஸியிலும் வியர்த்து கொட்டி எழுவீர்கள். சில நேரங்களில் தூக்கம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

-       ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சியால், உதிரப்போக்கு  மட்டுமன்றி, இரத்ததில் சர்க்கரை அளவும், ரத்த கொதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அம்மாவுக்கு இருந்தால் உங்களுக்கு வர வாய்ப்பிருப்பதால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமிது.  

-       கிட்டத்தட்ட இருபது வயதிலிருந்து நாற்பது வரை பருக்கள் வராமல் இருந்தவர்கள் முகத்தில் தாறுமாறாக பருக்கள் வந்தால் கண்டிப்பாக அது ஹார்மோர்ன் சுழற்சியால் என்பதால் கைனாகாலஜிஸ்ட்டை கன்சல்ட் செய்தல் நலம்.

முதலில் ஒரு நல்ல கைனாகாலஜிஸ்டை கன்சல்ட் செய்து உங்கள் பிரச்சனைகளை தெளிவாக பட்டியலிடுங்கள். மருந்துகளை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டியிருக்கும். ஆயூர்வேதம், சித்தாவிலும் (PMS) க்கும் அதனால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் மருத்துவம் உண்டு.

கண்டிப்பாக ஒரு ஸ்கேனும், (inculdued vaginal Scan) அவசியம். அதுபோல Pap Smear டெஸ்ட் வலியாக இருந்தாலும் செய்து கொள்ளுங்கள். ஓரளவு ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை கண்டறிய உதவும்.

என் பிரச்சனைகள் குறித்து ஓரளவு தெரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இதனால் நான் அடைந்த வலிகளும், இழந்தவைகளும் அதிகம். என்னை போல பிரச்சனையை சந்திக்கும் ஒரு தோழியும் சொன்னார் அவருக்கும் டயாக்னைஸ் செய்யவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதென்று. நான் இதனை எழுத காரணம் வாசிக்கும் பெண்கள் தங்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து கொள்ள உதவும், ஆண்கள் அத்தகைய காலகட்டத்தை கடக்கும் பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள உதவும் என்பதற்காக தான்…

கமலி பன்னீர் செல்வம்.


================= 

No comments:

Post a Comment