Monday 27 March 2017

Menopause - 2

ஹார்மோனல் இம்பாலன்ஸ்  காரணமாக Pre menopause, Peri menopause & PCOD , இதில் முதல் இரண்டு  நிலைகளில் பிரச்சனைகள் மனரீதியானது அதிகம். அதன் காரணமாக உடலில்  ஏற்படும் குளறுபடிகள். முட்டையிலிருந்து கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததால் என்ற கேள்விக்கு பதில் தெரியாதது போல,  மனரீதியான பிரச்சனைகளால் உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து உடல் சோர்வாகிறதா? அல்லது  உடல் ரீதியான பிரச்சனைகளால் மனம் பாதிக்கப்பட்டு சோர்வாகிறதா என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முதல் மையக்காரணம் கிட்டத்தட்ட நமது பதினான்கு வயதில் இருந்து உருவாகி வரும் சினைமுட்டைகள், அதன் காரணமாக உடலில் ஏற்படும் மாதாந்திர சுழற்சி தன்னுடைய சேவையை நிறுத்தி கொள்ள ஆரம்பிப்பதே ஆகும். எனவே சினை முட்டைகள் உருவாக காரணமான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஸ்ட்ரோஜன் ஹார்மோர்ன் இரண்டும் அதீதமாக சுரப்பது அல்லது சரியான அளவில் சுரக்காமல் இருப்பது. சொல்லப்போனால் ரோலர் கோஸ்டர் போல ஹார்மோர்ன் உற்பத்தி ஏறி இறங்குவது என்கின்றனர் மருத்துவர்கள். அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல, உதிரப்போக்கு நிற்கபோவதை நமக்கு அலாரம் அடித்து நமது உடல் தெரியப்படுத்துகிறது என்று கூறலாம்.

இத்தகைய ஹார்மோர்னின் தாறுமாறான சுழற்சிக்கு இது தான் காரணம் என்று மருத்துவர்களால் அறுதியிட்டு கூறமுடியாத போதும், இன்றைய ஸ்ட்ரெஸ்சான வாழ்க்கை முறை மிக முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இன்னொன்று ஹெரிடிட்டி மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிக்கும் போது இருந்த பிரச்சனைகள் மகளுக்கு வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அம்மாவுக்கு இல்லாமல் கூட மகளுக்கு இருக்கலாம், காரணம் தற்போதைய ஸ்ட்ரெஸ்.

கூட்டுக்குடும்ப சிதைவு  ப்ரீ மெனோபாஸ் காலகட்டத்தை கடக்கும் பெண்களுக்கு பேரிழப்பு என்று சொல்லுவேன். இந்த வயது பெண்கள் பெரும்பாலோருக்கு டீன் ஏஜ் குழந்தைகள் இருக்கும் காலம். இயற்கையாகவே இந்த டீன் ஏஜ் பருவத்தில் தான் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமிடையே கொஞ்சம் பிரச்சனைகள் முளைவிட தொடங்கும், மெனோபாஸில் இருக்கும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது அந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாக ஏற்பட்டு உறவில் விரிசல் ஆரம்பிக்கும்.

மற்றொரு பக்கம் மெனோபாஸை கடக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் இருந்தால், அவர்கள் படிப்பிற்காகவோ, வேலை நிமித்தமாகவோ, அல்லது திருமணம் செய்து கொண்டோ பிரிந்து செல்லும் சூழல் வரலாம்.. இதனால் ஏற்படும் தனிமையும் வெறுமையும் வேறு வகை பிரச்சனையாக இந்த வயது பெண்களை பிடித்து ஆட்டி வைக்கிறது.

வாழ்க்கையில் மிக சாதாரணமாக கடந்து வந்த விஷயம் கூட பயமும் பதட்டமும் உடையதாக மாறி நாம் எதிர்பார்க்காதவிதமாக அலைகழிக்கும். சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாக தோன்றும். இது எனக்கு நேர்ந்திருக்கிறது. என்னுடைய ஆவேசத்தை பின்னால் யோசித்து பார்த்தால் நாம் தானா என்று தோன்றினாலும், அந்த நேரத்தில் அவுட் பர்ஸ்ட்டை கைகொள்வது எளிதல்ல.

வேலைக்கு செல்லும் பெண் சோர்வு, மட்டும் வேறு சில அசெளகரியங்களை அனுபவிக்கிறாள் எனும்போதும், வேலையே ஒருவிதத்தில் ஸ்ட்ரெஸ் மற்றும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து காக்கிறது. இதை நான் என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். ஆரம்பத்தில் உடல் நிலை படுத்தியதில் வீட்டிலுள்ளவர்கள் வேலையை விட சொல்லி வற்புறத்த நான் வேலையை விட்டேன். ஒன்றிரண்டு வருடம் சும்மாவும் இருந்தேன். ஆனால் அது எனக்கு கூடுதல் ஸ்ட்ரெஸ்சாக தான் அமைந்தது. அதனால் மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கினேன். ஒரு கமிட்மெண்ட், பொறுப்பும் இந்த நேரத்தில் என்னை பல தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து விடுதலை பெற செய்கிறது. அதனால் உடல் நிலைக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தாத வரை வேலையை விடுவதை பற்றி தீர யோசித்து முடிவெடுக்கவும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக அக்கம் பக்கமும் இல்லாமல், வீட்டில் அதிக வேலை சுமையும் இல்லாமல் இருப்பவர்கள் அதிகளவில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பார்க்கும் டிவி தொடர்கள் அவர்களின் எதிர்மறை எண்ணத்தையும், கழிவிரக்கத்தையும், பழி உணர்ச்சியும் தூண்டுவதாக தான் இருக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம் உங்களை எந்த விஷயம் பாதிக்கிறதோ அதிலிருந்து முழு முற்றாக வெளியே வந்து விடுங்கள். சில நேரஙக்ளில் டிவி தொடர்களில் வரும் சம்பவங்கள் கூட நீங்கள் என்றோ மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தி உங்களை முழு முற்றாக அலைக்கழிக்கும். எவ்வளவு முயன்றாலும் சில எண்ண சுழற்சியில் இருந்து வெளிவர முடியாமல், மீண்டும் மீண்டும் மனம் அதற்குள்ளேயே நிற்கும். மிக ஜாக்கிரதையாக உங்களை நீங்கள் உற்று கவனித்து உங்களை பாதிக்கும் விஷயத்திலிருந்து வந்துவிடுங்கள்.

மேலும் அந்த மாதிரி ஒரு எண்ண சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டு வெளி வர முடியாமல் நீங்கள் தத்தளிக்கும்போது சட்டென எழுந்து மொட்டை மாடி போன்ற நல்ல காற்றோட்டமான இடத்திற்கோ, இல்லை உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயில் அல்லது அதிகமாக மக்கள் கூட்டமுள்ள ஏதோ ஒரு கடை செல்லுங்கள். விண்டோ ஷாப்பிங் அல்லது, கடற்கரை நான் தேர்ந்தெடுப்பேன். தனிமையில் நீண்ட நேரம் உட்கார, அந்த எண்ண சுழற்சியும், அதனால் ஏற்பட்ட கொதிப்பும் மெல்ல மெல்ல விடைபெறுவதை உங்களால்  உணர முடியும். நான் உணர்ந்திருக்கிறேன்.

என் தோழி ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்வது ஒரு விதத்தில் ஆசுவாசமாக இருக்கிறது. எவருடனும் பேச பழக பிடிக்கவில்லை, நான் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு தனித்தே இருக்கிறேன் என்கிறார். ஆனால், தனிமை கழிவிரக்கமாக மாறி தற்கொலை எண்ணம் வரை கொண்டு போகும் எனவே  தனிமையில் இருந்தாலும் உங்களை நீங்கள் வேறு எதிலாவது முழுமையாக ஈடுபடுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அது உங்களுக்கு பிடித்தமான விஷயமாக தேர்ந்தெடுத்து கொள்வதும் உங்கள் பொறுப்பு. நான் புத்தக வாசிப்பை தேர்ந்தேடுத்தேன்.

ஹார்மோர்ன் மாத்திரைகள் எடுக்கும்போது அதற்கான பக்கவிளைவுகளும் கண்டிப்பாக உண்டு. மருத்துவர்கள் இதனை சொல்லியே தான் தருகிறார்கள். ஆனால் சித்த மருத்துவத்தில் ஹார்மோர்ன் மாத்திரைகள் இல்லாமல் மனரீதியான பதட்டம் குறைக்கவும், ஹார்மோர்ன்கள் சீராக சுரக்கவும், மாதாந்திர உதிரப்போக்கு சீராக வருவதற்கும் மருந்து மாத்திரைகள் தருகிறார்கள். அது பக்க விளைவுகள் இல்லாமல் ஓரளவுக்கு எனக்கு நல்ல பலன் தந்தது. மருத்துவர்களை கவனமாக தேர்ந்தேடுக்க வேண்டியது இதில் முக்கியம்.


மைக்ரேன் என்னும் தலைவலி கொடிய அரக்கனாக நம்மை பந்தாடும். இந்த மைக்ரேன் எனக்கு இருபது வருடங்களுக்கு மேலாக இருப்பதால் இதனுடன் கொஞ்சம் பரிச்சயமாகிவிட்டதால் முன்னேற்பாடாக சில ஏற்பாடுகளை செய்து தவிர்க்க முயற்சிப்பேன். அப்படியும் மாதவிலக்கும் ஆரம்பிக்கும் முன் வரும் வலி மாத்திரைகளுக்கு எல்லாம் போக்கு காட்டி இரண்டு அல்லது மூன்று தினங்கள் விருந்தினராக இருந்து படுத்தி எடுத்து விட்டு தான் செல்லும். ஓய்வு மட்டுமே இந்த தலைவலிக்கு தீர்வாக இருந்திருக்கிறது. உங்கள் மனதை பாதிக்கும் அல்லது உங்களுக்கு எரிச்சல் மூட்டுபவர்களை இந்த நாட்களில் கூடுமானவரை தவிருங்கள், அல்லது அவர்களிடம் எந்த பேச்சும் கொடுக்காமல் இருங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவும், சாத்துக்குடி ஜூஸ் சர்கரை, ஐஸ் சேர்க்காமல் இரண்டும் நல்ல பலனை கொடுத்தது எனக்கு. எவ்வளவு முன் ஜாக்கிரைதயாக இருந்தும், சில நேரங்களில் தலைவலியில் தப்பிக்காமல் இருக்க முடியாது. நமக்கு ஒவ்வாத விஷயங்கள் அத்தனையும் வரிசைகட்டி அரங்கேறி நம்மை டென்ஷனாக்கி விட்டு தான் செல்லும்.. J

எனக்கு முகத்தில் வந்து நர்த்தனமாடிய பரு மிகப்பெரும் சோர்வை தந்தது. பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்து ஆங்கில, சித்தா, ஆயூர்வேதிக் என அனைத்து முறைகளையும் பின்பற்றினேன். ஒருகட்டத்தில் ரோட்டில் பார்ப்பவர்கள், என்னுடன் பயணிப்பவர்கள் எல்லாம் என் முகத்தின்  கரும்புள்ளிகளை பார்த்து டிப்ஸ் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையும் செய்தும் எதற்கும் பருக்கள் குறையவே இல்லை. இறுதியாக ஆப்பிள் சிடிகர் வினிகர் (organic with mother) ஆன்லைனில் வாங்கினேன். ஏனென்றால் ஆர்கானிக் எனக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் கிடைக்கவில்லை. இந்த வினிகரை ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு தண்ணீர் கலந்து பஞ்சில் தோய்த்து தாடைப்பகுதிகளிலும், கன்னத்திலும் போட அதன் வீரியம் ஓரளவு குறைந்தது. இது எந்த மருத்துவத்திலும் எனக்கு கூறப்படவில்லை. நானாக நண்பர்கள் அனுபவத்தின் மூலமும், இணையத்தில் இது பற்றி தகவல்கள் திரட்டியும் முயற்சித்தேன். ஓரளவு பலன் கிடைத்தது. இதை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய இடத்தில் இந்த வினிகரை தடவி, பாதிப்பில்லை என்றால் தொடரலாம்.  குறிப்பாக இந்த காலகட்டங்களில் மேக்கப்பை தவிர்த்து விடவும். பவுடர் கூட போடாமல் இருத்தல் நலம். டாக்டர் பரிந்துரைக்கும் பேஸ் வாஷ் மட்டும் உபயோகிக்கவும்.

இந்த ப்ரீ மெனோபாஸ் நான்கு வருடங்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் அல்லது அடுத்த மாதமே கூட சரியாகலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். ஆங்கில மருத்துவரே பரிந்துரைப்பது யோகாவும், உடற்பயிற்சியும். அதுமட்டுமல்லாமல் லைப் ஸ்டைல், உணவு பழக்கம் மாற்றம் கண்டிப்பாக வேண்டும் என்கின்றனர். மருத்துவர்களுடன், உங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் இருந்தால் நீங்கள் இந்த காலகட்டத்தை எளிதில் கடந்துவிடலாம். மருத்துவரிடம் ஆலோசனை செல்லும்போது குடும்பத்தினரை அழைத்து செல்வதுடன், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனம் திறந்து குடும்பத்தினரிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

அனைத்தையும் விட மிக முக்கியமானது, உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் நீங்கள் காட்டும் அக்கறை மட்டுமே இந்த மெனோபாஸை கடக்க உதவும்.. உடற்பயிற்சி, யோகாவை சோம்பல் இல்லாமல் செய்தால் இந்த ப்ரீ மெனோபாஸை எளிதில் முறியடித்துவிடலாம். பெண்கள் எவ்வளவோ தடைகளை தாண்டிவிட்டோம். இதனை தாண்ட மாட்டோமா.. சியர்ஸ்..


கமலி பன்னீர்செல்வம்

No comments:

Post a Comment