Tuesday, 10 December 2013

தேடல்


இம்முறை கும்பகோணம் சென்ற போது என் பால்ய வயது நண்பனை சந்தித்து அளவளாவ சிறிது நேரம் கிடைத்தது.மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்...எங்கள் வீட்டு மாடி பகுதியில் குடியிருந்தவர்கள்....சிறு வயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம்.மகாமகம் தெப்ப குளத்தில் என் தம்பி குழந்தைகளுடன் தெப்பம் பார்த்த போது மனம் ரொம்ப லேசாக இருந்தது...

என் நண்பன் எப்படி இருக்கிறது வாழ்க்கை என்றான்... நல்லா போய்கிட்டு இருக்கு.. நீ ஏன் சென்னை பக்கம் வரவில்லை. ட்ரைனிங் முடிச்சதோட சரி.. அப்புறம் இங்கயே செட்டில் ஆயிட்டியே ஏன்னு கேட்டேன்? கமலி காலைல எழுந்து பஸ் புடிக்க ஒட வேணாம், பொறுமையா எழுந்து நிதானமா 9 - 10 மணிக்கு கடைக்கு போனா போதும், மதியம் வீட்டில வந்து சாப்ட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் திருப்பி காபி குடிச்சுட்டு கோயில ஒரு சுத்து சுத்திட்டு திருப்பி கடைக்கு போய்ட்டு ராத்திரி வீட்டுக்கு வரேன்.. ரொம்ப சம்பாரிக்கல, கும்பகோணத்துலயே வீடு கட்டிட்டேன், தங்கைகு கல்யாணம் பண்ணிட்டேன், பையன மெட்ரிகுலெஷன்ல படிக்க வைக்கிறேன், பெரிய பரபரப்பு இல்ல.. எனக்கு இது புடிச்சிருக்கு,,,

எங்கப்பா வற்புருத்தல நான் சென்னை வந்திருந்தா இவ்ளோ நிம்மதியா இருந்திருப்பேனா தெரியல கமலி.. ஆரம்பத்துல என் அப்பாக்கு பயங்கர வருத்தம்,.. ஆனா நான் இங்கயே இருக்கனும்னு முடிவு பண்ணினது சென்னைக்கு ட்ரெயினிங் வந்தப்போ தான்.. சொந்தகாரவங்க, ஃப்ரண்ட்ஸ், எல்லாம் நின்னு பேச கூட நேரம் இல்லாம ஒடறத பார்த்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தென்.. உண்மைய சொல்லு, நீ என்ன இந்த நாட்கள்ல எத்தனை நாள் நினைச்சு பார்த்திருப்ப அப்படின்னு கேட்டான்.. என்னால் பதில் சொல்ல முடியல.. நீ என் மனைவியிடம் கேள் அப்படின்னான்.. அவன் மனைவி கண்டிப்பா ஒரு நாளுக்கு ஒரு வாட்டியாச்சும் உங்க பேர சொல்லாம இருக்க மாட்டாங்க என்று சொன்ன போது வருத்தபட்டேன்.. அவன் நீ சங்கடபடாத உனக்கு அந்த பரபரப்பு வாழ்க்கை புடிச்சிருக்கு, அந்த பரபரப்புக்கு விலை, ஃப்ரண்ட்ஸ் மட்டும் இல்ல, சொந்தம் பந்தங்களும் தான், நான் இந்த வாழ்க்கையில் கிடைத்த எதையும் இழக்க தயாரில்லை.. எனக்கு இது போதும் என்று சொன்ன பொது நான் வாழ்க்கையில் மனிதர்களிடம் இருப்பதை விட்டு எதை புத்தகங்களில் தேடுகிறேன் என்று சிறிது நேரம் நினைத்தேன்…..

விரிசல்

கூரிய முனை போதும்
அடைத்து வைக்கப்பட்ட காற்றை
வேகமாக வெளியேற்ற

அடைக்க முடியா
துளை போதும்
கப்பலை மூழ்கடிக்க

கவனிக்காத விரிசல் போதும்
தண்ணீர் அடைத்து வைக்கும்
அணையை உடைக்க.

ஒரு சொல்
சிறு அலட்சியம் போதும்
அன்யோன்மான உறவுகளை
அந்நியமாக்க...

ஏக்கம்

காதலுக்காக காமம்
காமத்துக்காக காதல்
காமமின்றி காதலில்லை
காதலின்றி காமமில்லை
என

காதலுக்கும் காமத்துக்கும்
ஆயிரம் இலக்கணங்கள்
சொல்லப்பட்டாலும்

எல்லையில்லா அன்பில்
ஒரு துளியாய் கரைந்திட
துடிக்கும் மனம்
நிறைவான காமத்திலும்
நிலைகொள்வதில்லை..

Thursday, 5 December 2013

அகலிகை

ராமனின் பாதம்பட்டு கல்லாய் இருந்து
உயிர்பெற்ற அகலிகை போல
மர(றி)த்து போன பெண்மையும்
உயிர்பெற்றுவிட எத்தனிக்கும்..

பேசப்படும் வார்த்தைகளில்
அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளில்
காட்டப்படும் அக்கறையில்
பொழியப்படும் அன்பில்
பிரகாசிக்கும் அறிவில் ஈர்க்கப்பட்டு...

அக்கறை, அன்பு, எல்லாவற்றிற்கும்
காரணம் புலப்படும் போது
கல்லாகவே இருக்க செய்யும்
சாபம் தேடி நிறைய அகலிகைகள்..

பாலினம்

கிடைக்கும் பாராட்டுகளில் துள்ளி குதித்து
மகிழ்ந்துவிடவில்லை என்றாலும்
புன்னகையுடன் கடந்து செல்வதை கூட 
வறட்டு புன்முறுவலாக சுருங்க செய்துவிடுகிறது 
பாராட்டு எனக்கானது அல்ல
என் பாலினத்துக்கு ஆனது என்ற வார்தைகள் ....

ப்ரியம்

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ 
எல்லாம் மறந்து தொலைக்கும் 

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை............


****************
எல்லையில்லா அன்புக்கு கூட
எல்லைகள் உண்டு என்பது
சில பொழுதுகளில் புரிந்தாலும்
எல்லை கோடு எது என்பதை
வரையறுக்க முடியாததால்
உள்ளுக்குள் சுருங்கி
எல்லை தேடி தொலைந்து போகிறோம்

Wednesday, 13 November 2013

சொல்ல தான் நினைத்தேன்

சொல்ல தான் நினைத்தேன்...
எனக்கு பிடித்ததை எல்லாம்
உன் அம்மாவுக்கு இது பிடிக்கும்
உன் தந்தைக்கு இது பிடிக்கும்
தங்கைக்கு இது பிடிக்கும் 
எனக்கு இதெல்லாம் பிடிக்கும்
என வாசித்த பட்டியலின் நீளம்
பார்த்தவுடன்
எனக்கு பிடித்ததை சொல்லாமலே
இருந்துவிட்டேன்..
இவ்வளவு பேருக்கு பிடித்தது
தெரியும் உனக்கு
என்னுடைய விருப்பம் தெரியாமலா
போய்விடும் என்று.........

ஆனால் சில நாள் கழித்த பின்
தான் தெரிந்தது நான்
உன்னையும் உன்னை சார்ந்தோரையும்
திருப்திபடுத்த உன் வீடு வந்தேன் என்று
சரி என்றாவது புரிந்து கொள்வாய்
என்று ஏக்கத்திலேயே நாட்கள்
நகர்ந்து செல்ல
இப்போது உன் வீட்டாரின் விருபத்தோடு
நம் குழந்தைகளின் விருப்பமும்
சேர்ந்து கொள்ள
என் விருப்பம் என்னவென்ரே
தெரியாமல் போய்விட்டது

விருப்பமே இல்லாமல் இல்லையே
அது மறந்து தானே போய் இருந்தது
மறைந்து போகவில்லையே..
என்றோ ஒரு நாள் விரக்தியின்
உச்ச கட்டத்தில் அது வெடித்து வெளியே வர
அன்று பதறுகிறாய் ....
என் சீற்றம் கண்டு...
ஆனால் என் சீற்றம் நீ
சீண்டாமல் போனதால் என்று
அப்போதும் உணரமாட்டாய்............
இல்லறம் குலைக்க வந்ததாய்
என்னை தான் ஏசுவாய்..............