Monday, 30 June 2014

கூடு

கூட்டில் நம்பிக்கையில்லாத போதும்
அழகிய பொருட்கள் சேர
மரத்தின் மீது
கூடோன்று அமைத்தேன்

வானமே எல்லையாக இருந்த போதும்
கூட்டிற்குள் அமர
அதன் பாதுகாப்பில்
புது சுகமொன்றும் கண்டேன்

கூடு போதும்
அந்த சுகம் சாஸ்வதம் என்று
சிறகிருந்தும் பறக்காமல் அடைந்தேன்

பெரும் புயலிலும், பெரும் மழையிலும்
உதிரும் இலைகளும் கிளைகளும்
கிலியை தந்து கூட்டை விட்டு
நெடுந்தூரம் பறந்திட எத்தனித்தாலும்

கூடு தந்த சுகமும் பாதுகாப்பும்
மீண்டும் கூட்டுக்கு
திரும்பும் வழியில் தான்
சிறகை திருப்பின..

புதிதாக துளிர்த்த
இலைகளும் கிளைகளும்
நம்பிக்கையை தர
லேசாக கலைந்த கூட்டை
செப்பனிட்டு
மீண்டும் கூட்டுக்குள் சுகமாய்
முடங்கி கிலிகள் மறந்தேன்.

கோடாலி கொண்டு
வேரை சாய்த்த பின் தான்
கூடு இளைப்பாறலே அன்றி
என்றும் நிரந்ததரமில்லை
பறத்தலே சுகம் என புரிகிறது..

பெண்மை

மழலையில் கரைந்து போகும் குழந்தை உள்ளம் உண்டு
வலிகளை மறந்து சிரிக்கும் வழியும் தெரியும்
காதலில் குழைந்திடும் இதயம் உண்டு
காமத்தில் உடல் அனிச்சையாய் இயங்க
வேடிக்கை பார்க்கும் வெற்று மனமும் உண்டு

பொறாமையில் புழுங்கி வெந்திடும் நெஞ்சம் உண்டு
சிறுமை கண்டு பொங்கிடும் ஆற்றல் உண்டு
அகங்காரத்தில் ஆர்பரிக்கும் கர்வமும் உண்டு
துரோகத்தில் கொதித்து துரோகியை
துவம்சம் செய்திடும் வீரமும் உண்டு

உடைந்து போன உள்ளத்தை ஆறுதல்படுத்தும்
கருணை உண்டு.
கோவத்தில் எரிமலையாய் குமுறிடும்
குணமும் உண்டு
கோபப்பட்ட வேகத்த்தில் குளிர்ந்து போகும்
நேசமும் உண்டு.
அறிவை சிலாகிக்கும் விவேகமும் உண்டு

எல்லாம் இருந்தும் அன்பின் முன
நிராயுதபாணியாக நிற்கும் பெண்மையை
என்ன செய்யவென தெரியவில்லை...

Friday, 25 April 2014

விசித்திரம்

அழகான குடும்பம் 
அன்பான குழந்தைகள்
பொறுப்பான கணவர்
மரியாதைக்குரிய உறவுகள்
அக்கறை காட்டும் நண்பர்கள்
இத்தனை இருந்தும் சமயங்களில் 
பெருநகர வீதியில் தனித்து விடப்பட்ட 
அனாதைக் குழந்தை போல அழுது தீர்க்கிறது மனசு....

மனித மனம்

குற்றுயிராய் விழ நேர்ந்தால்
ஓடி வந்து தாங்கிடுவேன்

அன்பை களிம்பாக்கி
ரணம் எல்லாம் ஆறிட
செய்திடுவேன்

அணைத்து ஆறுதல்படுத்தி
என்னுயிர் தந்துனை
உயிர்பிப்பேன்

காயப்படுத்தியது
நானாக இல்லையென்றால்

Sunday, 16 March 2014

கணக்குகள்

உன் பொண்ணு ஊரில் இருந்து வந்திருக்கா
இந்தா கீரையும் நாட்டு கத்திரிக்காயும்
எப்போ ஊருக்கு போகும் சொல்லு
சுண்டைக்காய் வத்தலும் மணத்தக்காளி வத்தலும்
கொண்டு வந்து தரேன்

தினமும் முடுக்கத்தான் வேண்டாம்
வாரம் இரண்டு முறை கொடு போதும்
நாளை மணத்தக்காளி கீரையும் வெள்ளரி பிஞ்சும்
எடுத்து வாரேன் 
என வாழைபூவும் வாழை தண்டும் அள்ளி
அம்மாவிடம் கொடுத்து செல்லும்
நம்மை அறியாமலே
பாசம் காட்டும் காய்காரம்மாவிடம்
ஐம்பது ரூபாய் நீட்ட

எதுக்கு என்று கேட்க
வற்றல் கொண்டு வந்து தருகிறேன்
என்று சொன்னீர்களே
என சொன்னவுடன்
வயலில் விளைந்து கிடக்கு
பறித்து காய வைத்து கொண்டு
வந்து கொடுக்க காசா

கிராமத்தில் இருந்து ஊருக்கு எடுத்து சென்று
விற்பதற்கு முன் தலை சுமை இறக்கி வைக்க
விற்காத காய் பழத்தை உங்க வீட்டில் வைத்து விட்டு
வெறுங்கை வீசி ஊருக்கு செல்கிறேன் ..
மாலை வந்தால் இருப்பதை கொடுத்து
சாப்பிட்டு போக சொல்லும்
அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இன்னி வரை கூலி
கொடுத்ததில்லை தாயி
எல்லா கணக்கும் இந்த தாளில் வராது
அதை பத்திரமா நீயே வச்சுக்கோ
என்று சொல்லி சென்றவரின்
கணக்குகள் புரிய தான் இல்லை .....

Monday, 17 February 2014

காதல் எனபது என்ன

காதல் என்றால் என்ன என்று
எல்லாரிடமும் கேட்டேன்

பார்த்து கொண்டே இருப்பது
என்றனர் ஒரு சாரர்

பேசி கொண்டே இருப்பது
என்றனர் ஒரு சாரர்

அவன் இல்லாத வாழ்க்கை 
வெறுமை என்றனர் ஒரு சாரர்

அவனு க்காக என்னையே தருவேன்
என்றனர் ஒரு சாரர்

உணர்ச்சிவசப்பட்ட இன்னும் சிலரோ
அவனின்றி நான் இல்லை என்றனர்

நானும் காதல் கடவுள் போல
விளங்க முடியா விஷயம் என்று
கடந்து விட எத்தனிக்க

அவன் மௌனமாக புன்னகைத்து
இழுத்து அணைத்து முத்தமிட்டு

உன்னை என்னிலிருந்தும் என்னை உன்னிலிருந்தும்
பிரித்து பார்க்கவே முடியாத
அறிவு கொண்டு அளக்க முடியா
உணர்வு தான் காதல் என்றான்

ஏமாற்றம்

ஏமாற்றங்களை ஜீரணிக்க பழக்கும்
சுயமரியாதை சுரண்டப்படுவதை வேடிக்கை பார்க்கும்
ஆசைகளை வெறுக்க கற்று கொடுக்கும்
தனிமையை விரட்டுவது போல போக்குக்காட்டி 
பெருந்தனிமையில் தள்ளும் 

அழுகையில் உணர்வுகளை கரைக்க முடியாது
என்பது புரிந்தாலும் 
வெளியேற வழி தெரியாமல் 
விழி பிதுங்கும்
வாழும் போதே சாகும் துணிச்சலை
கொடுக்கும்..

உணவே மருந்து மருந்தே உணவு
என்று நோய்களுக்கு சொல்வதுண்டு
அது போல
காதலே நோய்
காதலே மருந்தாகும்
விந்தையும் காதலில் தான் சாத்தியம்..