Monday, 24 November 2014

தெரியாதது

கரை தொட்டு விளையாடும் அலைகள்
எப்போதும் சொல்வதில்லை
ஆழ்கடலில் புதைத்து குமைந்து கொண்டு
கொண்டிருக்கும் எரிமலையை பற்றி

தேவைகள்

தன்னை மறக்கும் காமம்
தேவையில்லா பொழுதுகளிலும்
விழி பார்க்கும் விழிகளும்
அது பேசும் மௌன மொழிகளும்
கன்னம் தாங்கி மூக்கை திருகி
விரல்களால் முகம் வருடி தரும்
மென் முத்தங்களும்
மயிலிறகால் தடவுவது போல்
தலை தடவி இறுத்தி
தோள் சாய்த்து
மார்பில் முகத்தை புதைத்து கொள்ளும்
அணைப்பும்
முதுகு முழுதும் பரவும் அழுத்தமும்
தேவையாக இருக்கிறது

Friday, 21 November 2014

பாதை



வெற்று பாறையாய் இருந்த பொழுதுகளில்
அசைவற்று கிடப்பதே சாஸ்வதம் என்று எண்ணி இருந்தேன்..
போகிற போக்கில் யார் யாரோ சிறிது சிறிதாக நகர்த்த
சிற்ப கூடம் வரை வந்துவிட்டேன்.

சிற்ப கூடத்தின் அழகிய சிலைகள் பார்த்து மயங்கி சிலையாக மாறிட எத்தனிக்க
தன்னை தான் செதுக்கி கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாமல்
சிற்ப கூடத்தை விட்டு போக மனமுமில்லாமல்
சிற்பிகளின் பார்வை பட உளிகளுக்கு பக்கத்தில்..

சிலையாவேனோ இல்லை பாறையாகவே தங்கிடுவேனோ
பாறையாக தனித்திருந்த பொது இல்லாத ஏக்கம்
அழகிய சிலையாக மாறிய பாறைகளை
பார்த்து வருகிறது கூடவே இயலாமையும்...

Wednesday, 29 October 2014

முரண்

பிறந்த கணத்தில் காற்றை எதிர்ப்பார்த்து
அடுத்த சில நிமிடங்களில் 
வயிற்றுக்கு உணவை எதிர்ப்பார்த்து
கிடைக்கவில்லை என்றால் 
அழுது கவனம் ஈர்த்து
அதன் பின் பின் ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு உந்தி தள்ள
வாழ்க்கை
மரணம் வரை தொடர
எதிர்பார்ப்புகளற்று இருக்க சொல்வது
என்ன முரண் என புரியவில்லை.

சக்கர வியூகம்

வெளியேறும் வழி தெரியாது
சக்கரவியூகத்தின் வெளியே நின்ற 
அனைவரையும்
தடுத்தோ வெட்டியோ 
தன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து 
உள் சென்று
எல்லா தர்மங்களும் பொய்த்து போக
நிராயுதபாணியாய் நின்ற
வீரஅபிமன்யூவாக தான்
அதிகம் பேர் சிக்கிகொள்கின்றனர்
காதலின் வியூகத்தில்.

கொக்கு

கொக்கின் தவம் 
தன்னை இரையாக்க
என்பது தெரியாமல்
கொக்கின் மேல் பரிதாபம் கொண்டு
அதன் முன் துள்ளி குதித்து
விளையாடி தவம் கலைக்க
முயற்சிக்கும் அப்பாவி மீன்கள்..

மழை

பெருமழைக்கு பயந்து 
விரைந்து செல்லும் வாகனங்கள்
மரம் தேடி ஒதுங்கும் மனிதர்கள்
துள்ளலுடன் ரசித்து செல்லும் யுவதி
குதூகலத்துடன் அம்மாவின் 
கைப்பிடி உதறி குடைக்கு வெளியே
எட்டி பார்க்கும் சிறுபிள்ளை
வியாபாரத்தை கெடுத்துவிட்டதாக
புலம்பும் தெருவோர கடைக்காரர்
டீக்கடையில் நிதானமாக
தேநீர் அருந்தியபடி
போவார் வருவோரை
கண்களாலும் தன் அனுபவத்தாலும்
அளக்கும் மத்திம வயதுக்காரர்
எல்லாரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே
அகத்தின் அரற்றும் அழுகுரல் மறைத்து
நானும் கடந்து செல்கிறேன்.....