Wednesday, 27 April 2016

காதல் தேவதை


“Venus in Furs”  Leopold von Sacher-Masoch என்ற ஆஸ்திரிய ஆசிரியர் ஜெர்மன் மொழியில் எழுதிய இந்நாவல் 1870 களில் வெளிவந்தது. ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகப்பெரும் சர்சைக்குள்ளாகி விவாதத்துக்குள்ளான நூல். ஜெர்மன் மூலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளியாகி தமிழில் யுனைட்டட் ரைட்டர்ஸ் பப்ளிக்கேஷன்ஸ் மூலமாக "காதல் தேவதை” ஆக 2003 ல் முதல் பதிப்பு கண்டது. தமிழாக்கம் ஜெகதீஷ்.

சாடிஸம் என்றால் பிறரை துன்புறுத்தி மகிழ்ச்சி காணுதல் மிக பரவலாக இந்த வார்த்தை பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆனால் சாடிஸத்துக்கு எதிர் மனநிலையான ”மாஸோகிஸம் (Masochism)” (தன்னை தானே வருத்திக்கொள்ளும் மன இயல்பு) என்ற கலைச்சொல் உருவாக காரணமாக இருந்தது இந்த நூல் தான்.

நாவல் ஆரம்பிக்கும்போது மிகுந்த நாடகத்தன்மையுடன் தான் ஆரம்பிக்கிறது. அநேகமாக முழுமையடையும் வரை நாடகத்தன்மை மிகுதியாக காணப்பட்டாலும், நாவல் உணர்வு தளங்களில் பிரயாணிக்கும் போது தொட்டிருக்கும் ஆழமும் உண்மையும் நம்மை உலுக்குகிறது. இது காதல் கதை என்றாலும் அதன் மூலம் காதலின் இயல்புதன்மை, ஆழ்மனம், ஆணவம், மோகம், ஆண் பெண்ணின் தீரா உணர்வுசிக்கல்கள், என்று பயணிக்க நாம் அணிந்து கொண்டுள்ள முகமூடிகளை எல்லாம் கழட்டி வீசுகிறது.

சமூக நெறிமுறைகளுக்குள் மனதை அடைத்து வைத்துகொண்டு இதை வாசிக்கும் யாராலும் இந்த நாவல் சொல்லும் உளவியலை விளங்கி கொள்ள முடியாது. எல்லாவற்றையும் புறம் தள்ளி நம்மை எதற்குள்ளும் திணித்து கொள்ளாமல் வாசித்தால் மனதின் இருண்ட மூலைகளில் ஒளிந்து கிடக்கும், காம காதல் உணர்வுகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

நாவலின் நாயகன் செவரின் இலக்கிய, கவித்துவமான, உச்சபட்ட உணர்ச்சிகளை உடையவன், என்றாலும் உளவியல் சிக்கல்கள் உள்ளவன். அவன் கற்பனையில் தன்னை நேசிக்கும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை கொள்கிறான், அதை பற்றி காதல் தேவதையான வீனஸிடம் முறையிடுகிறான். இவன் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிஜமாக பெண் ரூபத்தில் பார்க்கிறான். வாண்டா என்ற அந்த பெண்ணின் அழகில் மயங்கும் அவன் அவளின் அழகுக்கு அடிமையாகிறான்.

கண்மூடித்தனமாக அவளை காதலிக்கும் செவரின், அவளிடம் தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்துவிட்டு அவள் காலடியிலேயே விழுந்து கிடக்க துடிக்கிறான். ஆனால் வாண்டா அழகும் அறிவும் சுதந்திர எண்ணமும் உடையவள் இவனின் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கிறாள். மேலும் தான் திருமணம் செய்து தனக்கு கணவராக வருபவன் முழுமையான ஆண்மகனாக இருக்கவேண்டும் என்று கூறுகிறாள். அத்தகைய ஆணை தான் தேடுவதாகவும் கூறுகிறாள்.

“ஒரு ஆணிடம் என் வாழ்நாள் முழுதையும் ஒப்படைத்து விடுவேன். ஆனால் அவன் தன் அக ஆற்றலால் என்னை ஆளுமை செய்பவனாக இருக்க வேண்டும்.. ஆனால் அத்தகைய ஆண் கிடைப்பதில்லை”.

நீ காதலிக்கும் தகுதியுடையவனாக இருந்தாலும் அடிமையாக இருக்க விரும்பவது காதலில் சரிபட்டு வரும் என்று தோன்றவில்லை என்று மறுக்கிறாள். ஆனால் அவன் தொடர்ந்து காதலுக்காக இறைஞ்ச சரி நாம் இருவரும் ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்போம், காதலனுக்கான அனைத்து உரிமைகளையும் தருகிறேன் ஆனால் இறுதியில் எனக்கு பிடித்தால் தான் நீ என் கணவன் என்கிறாள்.

ஆனால் அவன் வற்புறுத்துகிறான், நான் என்னை சிறுமைப்படுத்தும், கொடுமைப்படுத்தும், ஒரு பெண்ணிடம் காதல் துய்க்க விரும்புகிறேன் , உன்னிடம் எனக்கு அந்த இன்பம் கிடைக்கும் நீ என் மீது இரக்கம் காட்டாமல் என்னை ஆளுமையும், அதிகாரமும் செய்ய வேண்டும்,என்னை சாட்டையால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். ஆனால் வாண்டா மறுக்கிறாள் இதெல்லாம் மிக மோசமாக முடியும் என்கிறாள். ஆனால் செவரின் மறுக்கிறான். இல்லை அப்படி இருந்தால் சாவு தவிர நம்மை வேறு எதுவும் பிரிக்க முடியாது காலம் முழுதும் உன் அடிமையாக காதலித்து கொண்டே நான் வீழ்ந்து கிடக்கிறேன் என்கிறான்.

அவனிடம்  உனக்கு புரியவில்லை அடிமையாக இருந்தால், நான் உன்னை கொடுமைப்படுத்த தொடங்கினால் கண்டிப்பாக என்னை வெறுக்க தொடங்குவாய், உனக்கு என் மீது காதல் வராது என்று எவ்வளவோ சொல்லியும் மறுக்கிறான் செவரின், சரி இந்த ஊரில் நீ என் அடிமையாக இருக்கமுடியாது நாம் வேறு புது ஊர் செல்வோம் அங்கு நம்மை யாருக்கும் தெரியாது நீ என் அடிமையாக தொடரலாம் என்கிறாள்.

ஊருக்கு கிளம்பும் முன் நான் நேசிக்கிறேன் ஆனால் இந்த அடிமை விளையாட்டு தேவையா, நாம் இப்போது நண்பர்கள் நாளை முதல் நீ அடிமையானால் உன் நிலையில் இதையெல்லாம் இழப்பாய் என்று சொல்லியும் தன் முடிவில் பிடிவாதமாக அவளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்கவும் சம்மதிக்கிறான் செவரின்.

அடிமையாக கிரிகர் என்று பெயர் சூட்டப்பட்டு வாண்டாவுடன் வேறு ஊருக்கு செல்கிறான். அவளிடம் சாட்டையால் அடிபடுகிறான், ஆனாலும் அவளின் காலடியில் கிடக்க ஏங்குகிறான். அவள் வேறு ஆண்மகனின் பால் ஈர்க்கப்படும்போது அவளை இழந்துவிடுவோமோ என்று அஞ்சி நடுங்குகிறான். அவளிடம் நான் உன் காலடியிலேயே கிடக்கிறேன் வேறு ஆணிடம் செல்லாதே என்கிறான்.

ஆரம்பத்தில் அவன் காதலில் கிறங்கினாலும், அவனின் பைத்தியகாரத்தனம் அவளுக்கு சலிப்பூட்டுகிறது. அதனால் மனதளவில் விலகுகிறாள். இதனிடையில் ஒரு ஒவியன் மீது காதல் வந்ததாக அவனின் ஈகோவை தூண்ட முனைகிறாள். ஆனால் அதிலும் தோல்வியே மிஞ்சுகிறது. மீண்டும் அவனை தனது காதலனாக மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அவளின் முயற்சி வெற்றி பெறவில்லை. செவரினை கூப்பிட்டு காதலின் ஸ்னேகத்தை கொடுக்கிறாள். அதை ரசித்தாலும், அவன் அவளின் கொடூரத்தை தான் விரும்புவதாக பிதற்றுகிறான். 

நீ செய்வதை நன்றாக பரிசீலித்து பார். நான் அளவற்று உன்னை காதலித்தேன். உன் கனவு நிறைவேற உன்னிடம் கொடுமைக்காரியாக நடந்து கொண்டேன். உன் மீதான தற்போதைய உணர்ச்சி ஆரம்ப நாட்களின் காதலால் ஏதோ ஒரு பரிதாப உணர்வு, அது இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. அது போய்விட்டால் உனக்கு விடுதலை அளிப்பேனா இல்லை மேலும் ஈவு இரக்கமற்ற கொடியவளாக மாறி உன்னை சித்ரவதை செய்வேனா தெரியவில்லை. இன்னொருவனை கூட காதலிக்கலாம். நன்றாக யோசித்து முடிவெடு ..என்கிறாள்.

ஆனால் அப்போதும் நீயில்லாமல் வாழ முடியாது, நீ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தால் செத்து போவேன், உன் அடிமையாக இருக்க செய் என்கிறான். அப்படியானால் என் அடிமையாகவே இரு நான் இனியும் உன்னை காதலிக்கவில்லை, உன் காதல் ஒரு நாயின் விசுவாசம் என்பதை நினைவில் கொள் என்கிறாள்.. 

அப்போது ஒரு கிரேக்க ஆணை சந்திக்கிறாள். அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் வாண்டா. அவனை காதலிக்க தொடங்குகிறாள். அதை பொறுக்க முடியாமல் செவரின் சண்டையிடுகிறான். கோவத்தின் உச்சத்தில் உன்னை கொலை கூட செய்வேன் என்கிறான். அப்போது வாண்டா கூறும் அனைத்தும் உணர்வு தளத்தில் மிக ஆழமாக  பேசுகிறது.

வாண்டா பொறுமையாக நான் உன்னை தண்டிப்பேன் சவுக்கால் அல்ல உண்மைகளால் என்று பேச தொடங்குகிறாள். என் மீது குற்றம் சுமத்த உனக்கு உரிமை கிடையாது. நான் உன்னிடம் நேர்மையாக நடக்கவில்லையா? பலமுறை உன்னை நான் எச்சரிக்கவில்லையா?என் முழு மனதுடன் உன்னை காதலிக்கவில்லையா? நானா உன்னை அதிகாரம் செய்ய விரும்பினேன்? உன்னை முற்றாக என்னிடம் ஒப்படைப்பது ஆபத்தானது என்று எத்தனை முறை சொன்னேன்? என் முன் உன்னை சிறுமைப்படுத்தி கொள்ளாதே என்று சொல்லவில்லையா? காலடியில் விழுந்து கிடப்பதில் நீ உச்சகட்ட இன்பத்தை விரும்பினாய். இப்போது நீ என்ன விரும்புகிறாய்? என்னுள் தூங்கி கிடந்த ஆழ்மனதில் புதைந்து கிடந்த அதிகார இச்சைகளைத் தூண்டிவிட்டவன் நீ. நான் இப்போது உன்னை கொடுமைப்படுத்துவதில் இன்பம் காண்கிறேன் என்றால் அதற்கு முழு முதல் காரணம் நீயே தான். இப்போது என் மீது பழி போடுகிறாய் என்கிறாள்.

ஆம் நான் தவறிழைத்துவிட்டேன், ஒப்புகொள்கிறேன், இந்த ஆட்டத்துக்கு முடிவுக்கட்டலாம் என்கிறான் செவரின்.

“தீப்பற்றிய வைக்கோற்புதர், நிறையப் புகை வீசி சீக்கிரமே எரிந்து கருகிவிடும், என் மீது நிறைய பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நினைத்தூ உன்னையே நீ அபத்தமாக்கி கொள்கிறாய். நான் முதன்முதலில் நினைத்தபடி உறுதியான, தீவிரமான ஆணாக நீ இருந்திருந்தால் நான் உன்னை காதலித்து, உன் மனைவியாகி, விசுவசமானவளாக இருந்திருப்பேன். ஆனால் என் காலடியில் உன் கழுத்தை வைக்கிறாய். பெண் பொம்மைகளை ரசிப்பாள், ஆனால் சலிப்படையும் போது தூக்கி வீசி விடுவாள்.

இறுதியில் இவன் தனக்கேற்றவன் இல்லை என்று வாண்டா அவன் பித்து நிலையில் இருந்து தெளிவடைய மிக கொடூரமாக அவனிடம் நடந்து கொண்டு அவனை பிரிந்து செல்கிறாள். அதன் பின் பெண்கள் பற்றிய வழக்கமான புலம்பலான இயற்கையில் ஆணின் எதிரி பெண் என்கிற புலம்பலும் பெண் எப்போதும் ஆணுடன் தோழமையாக இருக்க முடியாது என்று செவரின் மூலம் சொல்லும் ஆசிரியர் அதற்கு தீர்வாக அந்த எதிரித்தன்மையை உருவாக்குவதும் ஆண் என்கிறார். சமூக உரிமைகளிலும், வேலைகளிலும், கல்வியிலும் அவளுக்கு ஆணுக்கு நிகரான இடம் கிடைத்தால் தான் பெண் தோழமையாக மாறுவாள் என்கிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டு முடிந்த பின்னும் அது மட்டும் நடக்கவில்லை..

நாவல் பேசும் உளவியல் சற்றும் நாம் எதிர்பார்க்காத, நம் ஆழ் மனதின் விலங்குதன்மை. எல்லா மனிதனுக்குள்ளும் இருப்பது ஆதி விலங்குத்தன்மை. அது வெளியே வரும்போது எவ்வாறு இருக்கும் என்று நினைத்தால் நம் மீதே நமக்கு அச்சம் வரும். அதனாலேயே இது தனித்து தெரிகிறது. இந்த புத்தகத்தை வரி வரியாக படிக்கும் போது கிடைக்கும் கிளர்ச்சியை வாசித்து அனுபவித்து மட்டுமே உணர முடியும். இந்நாவல் முழுதும் வாசித்து முடித்த போது தோன்றிய சிந்தனைகளும், இது விதைத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இறக்கும் வரை தொடரும்………

Thursday, 31 March 2016

துளிகள்

ஆககி்ரமிக்கப்படுவதை உணராமலே 
ஆககி்ரமித்துவிட்டதாக
உனக்குள் புன்னகைப்பதை
மௌனமாக பார்க்கிறேன். :) 

========

கரைந்து போகும் மனமில்லாமல்
கரைய வைக்கும்
எண்ணமுமில்லாமல்
முழுமையை தேடும்
முயற்சியை விடாது தொடரும்
விசித்ர மனம். . 


===============

சொல்ல தயங்கிய வார்த்தைகள் 
நிர்ணயிக்கின்றது
நமக்கான நெருக்கத்தையும் தூரத்தையும்.

=============

மிகப்பெரும் பரவசமும், சோர்வும் நாணயத்தின் இருபக்கமாக தான் பயணிக்கிறது. சுண்டிவிடுபவர்களுக்கும் தெரிவதில்லை எந்த பக்கம் விழும் என்று..

================

விழி சொல்லாததையா மொழி சொல்ல போகிறது...

======


கொல்லத் துணிந்த பின்
கருணை காண்பித்து பயனில்லை.
உன் பார்வையில்
மறைத்து வைத்த
என் பார்வையை
கண்ணாடி விலக்கி காட்டுகிறேன்.
சிக்கிக் கொள்ளாமல் இருக்க
சிரமப்பட்டு சுதாரிக்கும் முன்
புன்னகையை ஈட்டியாய்
சொருகுகிறேன்.
வறண்டு தவிக்கும் இதழை
என் இதழ் ஈரத்தால்
ஒற்றி எடுத்த கணத்தின்
விழி வீச்சில் மயங்கியிருக்க
ஆயுதமில்லா யுத்தத்தில்
கண்களையும் புன்னகையும்
ஆயுதமாக்கி மென் முத்தத்தில்
வெற்றியை கைகொள்கிறேன்.
==============

smile emoticonsmile emoticonsmile emoticon


Monday, 28 March 2016

அன்னா கரீனினா

“அன்னா கரீனினா” இந்த பெயரை இனி உச்சரிக்கும்போதே மனதில் தோன்றும் கலவையான உணர்வை எப்படி வெளிப்படுத்துவது அன்னா கரீனாவில் கொஞ்சமாவது கரைந்தால் மட்டுமே உணர முடியும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகின் சிறந்த நாவல். ஆம் உண்மையிலேயே மிக சிறந்த நாவல் தான் எல்லா காலத்திலும் நிலைத்திருக்கும் மனித உணர்வை, அன்பை, காதலை, அகச்சிக்கலை பேசுகிறது நாவல். இதை எழுதிய போது ஆசிரியர் ஏதோ ஒரு மோன நிலைக்குள் ஆழ்ந்து தன்னை எதற்குள்ளும் திணித்து கொள்ளாது கரைத்து கொண்டு நம்மையும் கரைய வைத்திருக்கிறார். 

நாவலின் மையப்புள்ளி அதீத காதல் என்ற ஒற்றை புள்ளி தான். ஆனால் அந்த மையத்தை சுற்றி டால்ஸ்டாய் வரைந்திருக்கும் வட்டங்கள், அவற்றின் பரிணாமங்கள் வெறும் காதலா என்று பார்த்தால் ஆம் என்றும் சொல்ல தோன்றுகிறது. இல்லை என்றும். காதலுடன் நாட்டின் வரலாற்றையும், அதன் பொருளாதார சிக்கல்களையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் விரிவாக அலசுகிறார். லெவின் பாத்திரம் மூலம் டால்ஸ்டாய் அரை நூற்றாண்டில்ரஷ்ய வரலாற்றில் நடந்த திருப்புமுனையின் இயற்கை தன்மையை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு நுணுக்ககமாக எப்படி ஒரு ஆணாக டால்ஸ்டாய்யால் சொல்ல முடிந்தது என்ற பிரமிப்பிலிருந்து இன்னும் விலக முடியவில்லை.. அன்னா கரீனா பாத்திரத்துக்குள் செல்லும் முன்னமயே டாலி மூலம் பெண்ணின் உணர்வு தளத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். அன்னாவின் அண்ணன் ஸ்டீவ்க்கும் அவன் மனைவி டாலிக்கும் இடையே பிரிந்து வாழும் அளவு போய்விட்ட பிணக்கை தீர்க்க அன்னா ஊரிலிருந்து வருகிறாள். அவள் அண்ணன் அவள் குழந்தைகளுக்கு ஆசிரியையாக வரும் பெண்ணின் அழகில் மயங்கி அவளுடன் உறவு வைக்க அது டாலிக்கு தெரியவருகிறது ஒரு கடிதத்தின் மூலம். அந்த கடிதத்தை பார்த்து மனம் உடையும் டாலி ஆவேசமாகி கணவருடன் சண்டையிடுகிறாள்.

அவளின் ஆவேசம் கண்டு மருளும் கணவன் அவன் பக்க நியாயத்தை மிக சாதாரணமாக அலசுகிறான். இவளுக்கு வீட்டுக்கு என்ன குறை வைத்தோம். ஒரு பெண்ணின் அழகில் ஈர்க்கபட்டு இப்படி நடப்பது சகஜம் தானே என்றும் உள்ளுக்குள் மனைவி மீது இருக்கும் பாசம் அப்படியே தானே இருக்கிறது என்ற ரீதியில் தன்னை சமாதனப்படுத்தி மனைவி அறைக்கு செல்கிறான். ஆனால் அவளின் முகத்தில் தெரியும் வெறுப்பு, ஆவேசம் அவனை நிலை குலையச் செய்கிறது. அவள் கோலம் இதற்கு நான் தானே காரணம் என்று கூச அழுகிறான்.

ஆண்களின் ஆயுதமான குழந்தைகளை காரணம் காட்டி மன்னிக்க சொல்கிறான். அவள் நீங்க என்னை காதலிக்கவே இல்லை. இதயம் கிடையாது. இதோ நான்கு நாட்களாக நான் துரோகத்தில் குமைய உங்களை சிறிதாவது பாதித்திருக்கா. இப்போது கூட என்னை பார்த்தவுடன் உங்களுக்கு வந்திருப்பது இரக்கம் காதலல்ல போய்விடுங்கள் என்று கத்துகிறாள்.

அவளை சமாதனப்படுத்த தெரியாமல் , நம்பிக்கை முழுதும் அற்று , தன் தங்கை வந்து ஏதாவது செய்ய மாட்டாளா என்று வெளியேறுகிறான்.

அன்னா வருகிறாள். அவள் அண்ணிக்கும் அவளுக்கும் நடக்கும் உரையாடல் க்ளாஸ். டாலி அன்னாவிடம் அவளின் வேதனைகளை சொல்லி உனக்கு என் வலி ,உணர்வு புரிகிறதா என்று கதற அதை முழுதும் உள்வாங்கி அவளை அழுது அணைத்து தேற்றும் அன்னாவின் வார்த்தைகள் அன்னாவின் மேல் மையல் கொள்ள செய்கிறது. நான் என் அண்ணணுக்காக பரிந்து பேசவோ, ஆறுதல் கூறவோ வரவில்லை. ஆனால் உன் நிலை என் இதயத்தின் ஆழத்தில் வேதனைப்படுத்துகிறது என டாலியிடம் கரைந்து ப்ரச்சனைக்கு தீர்வு காண முயல்வோம் என படிப்படியாக டாலி மனதுக்குள் நுழைகிறாள்.

அன்னாவுக்கு ஈடான உணர்வு தளத்தில் இயங்கும் பெண் டாலி. ஆரம்பத்தில் கணவரின் காதல் தன்னிடம் இல்லை வேறு பெண்ணுடன் என்று தெரிந்து வெறுத்து அவனிடம் இருந்து விலகி போய்விட  போராடினாலும் குழந்தைகள் நலம் கருதியும், சமூகத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாமலும் தனக்கு துரோகமிழைத்த கணவரை சகித்து கொள்கிறாள்.

அன்னா துணிச்சலுடன் விரான்ஸ்கியை காதலித்து அவனுடன் சென்றுவிட மேட்டுகுடி சமூகம் அவளை வெறுத்து ஒதுக்க தனது அன்பை அன்னாவிடம் பதிவு செய்ய டாலி செல்லும் இடங்களில் தன்னை சுய அலசலக்குள் உட்படுத்தி அன்னாவின் முடிவை மனதார பாராட்டி அவளை நேசிக்கிறாள். தன் மீதும் கழிவிரக்கம் கொள்கிறாள். குழந்தைகள் எல்லாம் விட்டுவிட்டு அவள் வண்டியில் தான் மட்டும் தனியாக அன்னாவை காண வரும் அந்த பயணத்தில் பெண்ணின் அந்த கால அடிமை வாழ்க்கை முறையையும் அதில் கட்டுண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் பெண்ணின் உள்ள கிடக்கையும் அந்த தனிமையான சிறிது தூர பயணத்தில் அவள் அடையும் சுதந்திர உணர்வை எல்லாம் பதிவு செய்துவிடுகிறார் ஆசிரியர்.

லெவின் கடவுள் நம்பிக்கை அற்றவன். ஆனால் நல்லவன் . சமூகம் வகுத்திருக்கும் அறத்துக்குள் உண்மையாக பொருந்தி போக ஆசைப்படுகிறான். பெண்ணின் காதல் உணர்வுக்கு சற்றும் குறைந்தது அல்ல என்று லெவினின் காதல் மூலம் உணர வைக்கிறார். டாலியின் தங்கையான கிட்டி லெவின் காதலை முதலில் மறுக்க அவளை மனதார காதலிக்கும் அவன் அதை ஏற்று கொள்ள முடியாமல் உடைந்து ஊருக்கு போய் தன்னை முழுதும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தி கொண்டு அதில் கரைத்து கொள்ள முயற்சிக்கிறான். பின் கிட்டியின் காதல் கிடைக்க முதலில் அதை சந்தேகப்பட்டு குழப்பிகொண்டு பின் காதலில் கரைய தொடங்கும் அந்த புள்ளியில் இருந்து ஆணின் காதல் உணர்வுகளை, அவனின் தடுமாற்றத்தை, அவன் சந்தோசத்தை, அவன் பைத்தியாகாரத்தனமான காதலை பதிவு செய்திருக்கிறார். பெண்ணின் பொஸசிவ்னெஸ்க்கு சற்றும் குறைந்ததில்லை ஆணின் பொஸசிவ்னெஸ் என்பதை லெவின் கதாப்பாத்திரம் மூலம் நிறுவுகிறார்.

கடவுள் நம்பிக்கையற்ற லெவின் மனைவியின் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட கடவுளிடம் கதறுவதும், (மனைவி பிரசவத்தில் ஆண் அனுபவிக்கும் மன வலியை, துன்பத்தை இவ்வளவு நுட்பமாக வேறு யாரும் பதிவு செய்ததில்லை) அதன் பின் அவள் நலமாகி குழந்தையுடன் வந்த பின் கடவுள் நம்பிகையற்ற தான் ஏன் அப்போது கடவுளை நாடினோம் என்று தன் அக தேடலுக்கும், ஆன்ம விகாரத்துக்கும், தேடலுக்கும், தத்துவ விசாரத்துக்கும் இடையில் அல்லாடி குழம்பி தீர்வு காண துடிப்பதும் மிக யதார்த்தமாக கடவுள் நம்பிக்கைக்கு, நம்பிக்கையின்மைக்கு ஊடாடும் மனதை, ஆன்மீக தேடலை பதிவு செய்திருக்கிறார் டால்ஸ்டாய். 

அன்னா ஆன்மாவில் மலரும் பெண். கணவர் நல்லவர். ஆனால் தன் உணர்வுகளுக்கும் உயிர் துடிப்பான ஜீவனுக்கும், வடிகால் இல்லாமல் வெற்று வாழ்க்கையில் தன் மொத்த அன்பையும் குழந்தைக்கு அர்பணித்து குழந்தைக்காக வாழ்கிறாள். இந்நிலையில் தான் விரான்ஸ்கியை சந்திக்கிறாள். விரான்ஸ்கியை சந்திக்கும் வரை கணவருடன் வாழும் வெற்று வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. ஆனால் விரான்ஸ்கியை சந்தித்த பின் கணவருடன் வாழும் வாழ்க்கையில் காதல் இல்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் விரான்ஸ்கியின் காதலுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிகிறாள் அன்னா.

அவளின் காதலின் முன் எல்லாமே துச்சமாக தான் படுகிறது அவளுக்கு. தன் கணவரை பிரிவதால் சமூகம் சுமத்தும் அத்தனை அவமானங்களையும் சுமக்கிறாள். தன் அன்பு மகனை பிரிகிறாள். விவாகரத்து தர மறுக்கும் கணவரால் விரான்ஸ்கிக்கும் அவளுக்கும் இடையில் ப்ரசனைகள் முளைத்து அது மெல்ல சண்டையாக விஸ்வரூபமெடுத்து காதலை புரட்டி எடுக்கிறது. இருவருக்குமே காதல் இருந்தும் விதி விளையாடும் விளையாட்டின் கைப்பொம்மைகளாக ஏதும் செய்ய இயலாதவர்களாக மனம் நிறைய துக்கத்தை காதலில் மூடி மறைக்க பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் இவை எல்லாம் செய்தும் விரான்ஸ்கிக்கு தன் மீதான காதல் குறைய வருகிறதோ என்ற சந்தேகத்தில் தனக்குள் பிளவுபடுகிறாள் அன்னா.

இறுதியாக விரான்ஸிக்கும் அவளுக்கும் வரும் சண்டையின் போது அவளை சமாதனப்படுத்தாமல் விரான்ஸ்கி தன் அம்மாவை பார்க்க செல்கிறான். அவனுக்கு தன் மீது காதல் சுத்தமாக இல்லை என்று முடிவு செய்யும் அன்னா தாங்கவியலா மனஉளைச்சலுக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள். இறப்பு மட்டுமே தனக்கு நிம்மதி தரும் என்று முடிவு செய்கிறாள்.

அதற்கு முன் தன்னை அலசுகிறாள். விரான்ஸ்கிக்கும் தனக்குமான உறவை சிந்தித்து பார்க்க தொடங்குகிறாள். அவர் என்னிடத்தில் எதை எதிர்பார்த்தார். அவரிடத்தில் இருந்தது காதல் இல்லை தன் எண்ணம் பூர்த்தியாகவேண்டும் என்ற எண்ணம். தந்திரம் செய்து காரியம் சாதித்து கொள்ள என்னை சுற்றி சுற்றி வந்தார், பின் தன் எண்ணம் நிறைவேறிவிட்ட கொக்கரிப்பும் கர்வமும் மட்டுமே அவனிடம் இருந்த்திருக்கிறது. அதில் சிறிதளவு காதலும் இருந்தது. ஆனால் கர்வம் தான் ஒங்கியிருந்தது.

நாங்கள் இருவரும் இணையும் முன்பு வெகுவாக ஈர்க்கப்பட்டு இணைந்தோம். ஆனால் இப்போது தடுக்க முடியாத அளவு ஆனால் மிக மந்தகதியில் பிரிந்து கொண்டிருக்கிறோம். எப்போதும் அவரது அரவணைப்புக்குள், அவரது கொஞ்சுதல்களுக்குள் இருக்க விரும்புகிறேன், பேராசைப்படுகிறேன். ஆனால் என்னுடைய இந்த விருப்பம் வெறுப்பை தருகிறது அவருக்கு. அவருடைய வெறுப்பு எனக்குள் அவர் மேல் கோவத்தை எழுப்புகிறது.

காதல் இல்லாமல் கடமைக்காக என்னிடத்தில் அன்பு காட்டுவது, நான் எதிர்பார்த்த நேசம் அவரிடத்திலிருந்து கிடைக்காவிட்டால் அது அவரது கோவத்தை விட மோசமானது. இது நரக வாழ்க்கை. அவர் என்னை காதலிப்பதை நிறுத்தி வெகு நாளாகிவிட்டது. எங்கே காதல் அழிந்துவிட்டதோ அங்கே வெறுப்பு ஆரம்பித்துவிடும்.

வாழ்க்கை எங்களை பிரிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு அவர் காரணம், அவருடைய துயரத்துக்கு நான் காரணம். இருவரும் மாறிவிட முடியுமா? இருவருடைய சுபாவங்களையும் திடீரென்று மாற்றி கொள்ள முடியுமா? எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் மீது அளவு கடந்த அன்பு இருப்பதாக தானே நினைத்தேன். ஆனால் அவன் மீது எனக்கிருந்த அன்பை இன்னொருவருடைய அன்புக்காக மாற்றி கொண்டேனே. அந்த காதல் திருப்தியளித்த வரையில் நான் குறைப்பட்டு கொள்ளவில்லையே.

நான் அவரை மூர்க்கத்தனமாக காதலிக்கிறேன். அதே நேரம் மூர்க்கத்தனமாக வெறுக்கிறேன். அமைதியின்றி தவித்த அவள் மெல்ல மெல்ல சிதைகிறாள். உணர்வின் மூர்க்கமான பிடியில் சிக்கி தவிக்கும் அவள் அதிலிருந்து மீள முடியா பள்ளத்துக்குள் வீழ்கிறாள்.

வெறும் அழகியலாக மட்டும் சொல்லாமல் உணர்வு தளத்தில் பெண்ணின் உணர்வை பேசுகிறார். அதுவும் துல்லியமாக. அன்னாவுடைய  காதலின் காட்டுத்தீயை அவள் பேரன்பின் துளியை தாங்கவோ கையாளவோ எந்த காலத்திலும், எந்த ஆண்மகனாலும் முடியாது என்று நினைத்தாரோ என்னவோ அன்னாவின் அத்தனை பேரன்பையும், தவிப்பையும், உள்ளகிடக்கையும் பதிவு செய்யவிட்டு அவளை ரயில் சக்கரத்துக்குள் சிதைத்துவிடுகிறார்.

மனதளவில் சிதைந்து போனவள் உடலும் சிதைந்து போவது தானே சரியான முடிவாக இருக்கும் என்று நினைத்தாரோ ஆசிரியர்.

ஆசிரியர் என்னவெல்லாம சொல்லியிருக்கிறார் இந்த நாவலில். உணர்வை, அந்த உணர்வால் விளையும் செயலை, செயலுக்கு பின் இருக்கும் விளைவை, விளைவுகளுக்குள் போய் சிக்கி கொள்ளும் அகத்தை, எதனால் எது விளைந்தது என்று பிரித்து பார்க்க முடியாத சிக்கலை எல்லாவறையும் பேசுகிறார். பெண்ணின் காதலை மட்டுமா சொல்கிறார். ஆணின் காதலை தவிப்பை, அவனின் அக்ச்சிக்கலை, ஆணின் எண்ண ஓட்டத்துக்கும், பெண்ணின் எண்ண ஓட்டத்துக்கும் இடையே இருக்கும் மலையளவு வித்தியாசத்தை, அந்த வித்தியாசத்துக்குள் இருக்கும் பிணைப்பை, சோசியலிசத்தை, அவர் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த அரசியலை, அரசியல் பாதிக்கும் வாழ்க்கை முறையை, விவசாயத்தை, பிறப்பை, மரணத்தை, குதிரை பந்தயத்தை, ஓவியத்தை, மாறும் மனித மனத்தை, அவற்றுக்கு பின் இருக்கும் மனித உணர்வு சிக்கலை, ஆண்களின் கண்ணியத்தை, அறிவை, சமூகத்தின் மீதான கோவத்தை லெவினின் இரண்டு அண்ணன்கள் மூலம், என்று எல்லாம் எல்லாம் சொல்கிறார்...........


பல பெண்களுடன் பழகுவதை தன் வழியில் நியாயப்படுத்தி தனக்கான அறம் கற்பிப்பவன் விரான்ஸ்கி. ஆனால் தான் தோன்றித்தனமாக திரியும் அவனை அன்னாவின் பேரன்பும் காதலும் பட்டை தீட்டி மாற்றுகிறது. அன்னாவுக்காக இராணுவத்தில் தனக்கு கிடைக்கும் பதவி உயர்வை இழக்கிறான். சமுகத்தில் அவனுக்கு கிடைக்கும் அவமானம் எல்லாம் சுமக்கிறான். ஆனாலும் அன்னாவை கையாள தெரியாமல் இறுதியில் அவளை மரணத்துக்கு ஒப்பு கொடுத்துவிட்டு தானும் உயிரற்ற தன் உடலை அழித்து கொள்ள போருக்கு தன்னை ஒப்பு கொடுக்கிறான்.

அன்னாவின் அண்ணன் ஸ்டீவ் மூலம் பெண்ணை போகமாக மட்டும் பார்க்கும் ஆணுக்கு பெண் மீதான பார்வையையும், அதே சமயம் லெவின் என்ற ஆண் மூலம் ஒருவளை காதலிக்கும், அவளுக்காகவே உருகும், அவளிடம் முழுமையடைய துடிக்கும் ஆணின் உயர்வான உணர்வையும், டாலி, அவளின் தங்கை கிட்டி மூலம் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்ணின் உணர்வை நுட்பமாக தொட்டிருக்கிறார்.

ஆசிரியர் டாலி, அன்னா இருவருக்கும் முழுவதுமாக தம்மை ஒப்பு கொடுத்துவிடுவதை ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது. டாலியின் மனக்குமுறலை, அவளின் ஆற்றாமையை, ஒன்பது வருடங்களாக காதலித்தோமே என்ன குறை வைத்தோம் என்ற அவள் உள்ள கிடக்கை, அவள் புழுக்கத்தை தத்ரூபமாக ஆசிரியர் வடித்திருக்கும் விதத்தில்லும், அன்னாவின் காதலில், அவளில் சுய அலசலில், அவளின் அமைதியின்மையில் ஆசிரியர் கண்டிப்பாக பெண்ணாக தன்னை உருமாற்றி எழுதியிருப்பதாக உணர்கிறேன். ஒரு பெண்ணின் உணர்வுகளை எந்த குற்றப்படுத்தலும் இல்லாமல் அப்படியே உள்வாங்க முடிந்த ஆணால் மட்டுமே டாலியை, அன்னாவை படைக்க முடியும்..

பெண்ணின் காமம் தாண்டிய நுட்பமான பெண் உணர்வுகள் ஆண்களால் புரிந்து கொள்ளவோ, கையாளவோ முடியாமல் இன்றளவும் டாலிகள் தங்கள் உள்ள கிடக்கை அடக்கி கொண்டு ஏற்கவும் முடியாமல், விட்டொழிக்கவும் முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்னா போன்ற பெண்கள் துணிச்சலாக தன் விருப்பத்துக்காக போராடினாலும் இறுதியில் வெற்றி அடைய முடியாமல் தங்களை முடித்து கொள்கிறார்கள். 

எதுவாக இருந்தாலும் அன்னா போன்ற பெண்களின் ஆன்மாவை எதிர்கொள்ளும் தைரியம் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எந்த  காதலனுக்கும், சமுகத்திற்கும் இருக்க போவதில்லை. இறப்பு மட்டுமே அவளுக்கு நிரந்தர அமைதியை தரும். ஆம் அவள் இறந்துவிடட்டும் இந்த இரக்கமில்லாத சமூகத்தில் வாழ்வதை விட இறப்பு விடுதலை அவளின் ஆன்மாவுக்கு மட்டுமல்ல, அந்த ஆன்மாவை நேசிக்கும் அது துடிப்பதை காண சகிக்காத யாருக்கும்.

இந்த உணர்வு கிட்டத்தட்ட நூறு ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் உணர்வு என்றாலும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வு ஆதலால் இன்னும் நூறு வருடம் கழித்து படித்தாலும் இந்த நாவல் ஈர்க்கும்..





Wednesday, 23 March 2016

ப்ரியங்களூம் வலிகளும்

உலகையே நேசிக்கும்
உன் ப்ரியத்தில்
எனக்கான ப்ரியங்கள்
எப்போதும் இருப்பதில்லை...

=======

சேமித்த ப்ரியங்கள் 
உள்ளுக்குள்
செல்லரிக்க தொடங்குகின்றன
விழியிடை நீரை
உறையவைத்தபடி,..

=======

விரும்பியோ விரும்பாமாலோ
திணிக்கப்பட்ட
ஆலகால விஷத்தை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
எனக்குள்
சிக்கிகொண்ட பொழுதினில்
மெல்ல மெல்ல
உறுப்புகள் சிதலமடைவதை
ரசிக்கும் குரூரம்
விஷத்தை வலிய திணித்த உன்னிடமிருந்து
எனக்கும் பரவுகிறது
ஆர்பாட்டமாக...


===============


சொல்ல மறந்த வார்த்தையில்
சிதறி கிடந்த காதலை
சுமந்தலைய முடியாமல்
விழி வழி சொல்லிட
எத்தனித்து
தோற்ற பொழுதினில்

முகம் நிமிர்த்தி
இதழ் பதித்த ஈரத்தில்
மெல்ல கரைய தொடங்குகிறது
தவறவிட்ட. வார்த்தைகள்
=========

உடலும் மனமும் பிரிக்கமுடியாது 
முயங்கிய பொழுதில்
உணரமுடியா உணர்வை
நினைவின் கதகதப்பில்
மீட்டெடுத்து
உணர முயல்கிறேன்.

=======
பேசி பேசி தீர்த்தபின்
பேசிய களைப்பு தீர
தோளில் தலை சாய்த்து
விழி மூடி மெளனமாக
கிறங்கிய பொழுதினில்
தோள் சுற்றி கைபடர்ந்து
சேர்த்தணைத்த
மெல்லிய அணைப்பில்
பேசாத உன் வார்த்தைகள்
உயிர்த்தெழுந்து உயிர் தீண்டுகிறது..

==========

குழம்பி சமனமாகும் 
அடி ஆழ சேற்றுக்கும்
மெல்லிய இழையாக ஆரம்பித்து
அடர் பச்சையாக பரவி
மேலே ஆக்ரமித்த
பாசிக்குமிடையே
தெளிவாக சலனமற்று இருக்கிறது எனதன்பு.

===========

இறகிலிருந்து
வலியில்லாமல் பிரிந்த
ஒற்றை சிறகாய்
எந்த பிடிப்புமின்றி
காற்றின் போக்குக்கு
ஒப்புக்கொடுத்துவிட்டு
மெல்ல மெல்ல
பறக்கிறேன்.

திசையறியும் நோக்கமில்லை
சேருமிடம் குறித்து பதட்டமில்லை
வெற்று பார்வையாளயராய்
வெளி எங்கும் காணும் சுகமொன்றே
போதுமானதாய்...

==============

வாசம்


அடியாழத்தில் புதைந்து கிடக்கும்
உன் வாசம்
மெல்ல மேலெழும்பி
வரும் தருணங்களில்
முத்தத்தின் ஈரம் உணர்கிறேன்
விழிகளுக்குள்.


===============

என் வாசம் உணரசெய்து
மயங்கி கிறங்கிய பொழுதினில்
மெல்ல மீட்டுகிறாய்
மேனி நோகாமல்
தீண்டல் உணர்ந்து
சிலிர்த்த தேகத்தை
செல்லமாய்
இதழ்களால் வருடுகிறாய்
முத்தத்தின் ஈரம
முழுதும் படரவிடாமல்
பார்வையில்
அங்கமெங்கும் தணல் மூட்டுகிறாய்
உறையவும் விடாமல்
எரியவும் விடாமல்
புலன்களுடன்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்.
வெற்றி தோல்வி இல்லா
விளையாட்டில்
வென்ற மிதப்பில்
இருவருமே தோற்கிறோம்.. heart emoticon

பிரிவு

விழிகளால் விடைபெற எத்தனித்து
முடியாது போக
வார்த்தைகள் கொண்டு
கோர்க்கிறேன்
தாங்கவியலா பாரத்தை
ஏற்றியது போல்
தடுமாறும் மனதை
தாங்கிபிடிக்க சந்தோஷத்துடன்
விடைபெறுவதாக
சமாதானப்படுத்தி
உன் உள்ளங்கையில் பாரமனைத்தையும்
உணர்த்தி
இதயத்தின் வலியை
விழியிடை நீர் தெரியாமல்
இதழ் மலர்த்தி பிரிகிறேன். heart emoticon

துரோகம்

நின் பாதம் சரணடைந்த
என்னை
மெல்ல நிமிர்த்தி
ஆறுதலாய் தோள்சாய்த்து
அசுவாசப்படுத்தினாய்.
என் விழி நீரை
இதழால் ஒற்றி எடுத்தாய்.
காயங்களில களிம்பாக உனையே பூசினாய்.
ஆற தொடங்கிய ரணங்களை
உவகையுடன் வருடி
தலை சாய்த்து விழி மூடச் செய்தாய்
வருடிய விரலுக்குள்
ஆழமாய் கிழிக்கும்
ஆணி மறைத்து...