Monday, 27 March 2017

சிலுவையில் தொங்கும் சாத்தான்.


சிலுவையில் தொங்கும் சாத்தான். -  கூகி வா தியாங்கோ – கென்ய எழுத்தாளர். தமிழில் - அமரந்த்தா – சிங்கராயர்

இந்நூல் ஆசிரியர் ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் இருந்த போது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

இடது சாரி இலக்கியத்தை பேசும் இந்த புத்தகம், காலனி ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றாலும், இன்றும் அவர்களின் கீழ் தான் இருக்கிறோம் என்பதை பற்றி பேசுகிறது. ஆப்ரிக்கா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதையும், அவர்கள் விடுதலை என்பதை பெயரளவில் வழங்கிவிட்டு, முதலாளித்துவம் மூலம் நம் மக்களின் வியர்வையை, உழைப்பை நம்மவர்களே உறிஞ்சுவதை, நம் மக்களாலேயே நாம்  சுரண்டுப்படுவதை பற்றி தெளிவாக கூறுகிறது.

வரியங்கா என்ற பெண்ணின் மூலம் தொடங்கும் கதை அவளைமையப்படுத்தி நகர்கின்றது. நைரோபியில் ஸ்டெனோவாக வேலை பார்க்கும் அவள் முதலாளியின் சுகர் கேர்ளாக (ஆசைநாயகியாக) இருக்க மறுத்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுகிறாள். காதலனிடம் சென்று தான் சுகர் கேர்ளாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டதை தெரிவிக்க, அவன் அவளை கீழ்தரமான வார்த்தைகளால் திட்டுகிறான். அவள் சிறுவயதிலேயே பரிசு பொருட்களுக்காக கிழவனுடன், உறவு வைத்து கொண்டு பிள்ளை பெற்றவள் தானே, உன் முதலாளியிடமும் இருந்துகொண்டு பலருடன் தொடர்பு வைத்திருந்திருப்பாய். அது தெரிந்ததால் தான் முதலாளி வேலையை விட்டு நீக்கியிருப்பான் என கூசாமல் சொல்கிறான். மனம் நொந்து தனது சொந்த ஊருக்கு போக முடிவெடுத்து மன உளைச்சலுடன் தெருவில் மயங்கி சரியும் அவளை ஒருவன் காப்பாற்றுகிறான். அவன் விடைபெறும்போது சாத்தானின் விருந்திற்கான‌ அழைப்புக்கான நோட்டீஸ் ஒன்றை கொடுத்து செல்கிறான். அந்த விருந்து அவள் சொந்த ஊரான இல்மொராக்கில் நடக்கிறது. 

அந்த நோட்டீஸில் ந‌வீன‌ திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன‌ ஏழு நிபுண‌ர்க‌ளைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடப்பதாக பகிங்கிரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விழாவில் கலந்து கொள்ள அடிப்படை தகுதிஒரு முறையாவ‌து கோடிக்க‌ண‌க்கில் திருடி இருக்க‌ வேண்டும் என்று அச்சிடப்பட்ட காகிதத்தை கண்டு வரீயங்கா திகைக்கிறாள். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று குழப்பமும், சந்தேகமுமாக அது பொய்யாக தான் இருக்கும் என நினைத்து அதை தனது கைப்பையில் போட்டு விட்டு ஊருக்கு போக ஆயுத்தமாகிறாள்.

மட்டாட்டுவில் (பயணிகளை ஏற்றி செல்லும் வாகனம்) தனது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறாள் வரியங்கா. அவளுட‌ன், முதூரி என்கிற முதியவர் ஒருவரும், ஆங்கில படைக்கு எதிராக போராடிய பெண்ணான‌ வ‌ங்காரியும், க‌ல்லூரியில் நாட்டுப்புற‌ இசை ப‌ற்றி ப‌டிக்கும் மாண‌வ‌னான‌ க‌த்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராயும் பயணிக்கின்றனர். மாட்டுடாவை ஓட்டும் டிரைவராக முவாரா.  இவர்களின் கலந்துரையாடலில்‌‌ கென்ய‌ விடுத‌லை போராட்ட‌ வரலாற்றையும், விடுத‌லைக்கு பின்னான‌ நிலையையும் பேசப்படுகிறது. இந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே கென்ய விடுதலை போராட்டம் பற்றி தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தூய்ரியா பணக்கார ஆப்ரிக்க குடும்பத்தில் பிறந்தாலும், கென்ய மக்கள், கென்ய முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் மனப்பாங்கு உள்ளவனாக இருக்கிறான். மண்ணின் இசையை மீட்டெடுக்க வேண்டி பூர்வகுடிகளின் இசையை ஆராய்கிறான். இந்த மாட்டுடாவில் பயணிக்கும் அனைவரும் சாத்தான் விருந்துக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அந்த விருந்தில் நவீன திருடன் கிரீடம் சூட்ட வந்திருக்கும், மக்களை சுரண்டும் பெருமுதலாளிகள் (நவீன திருடர்கள்) தாங்கள் எப்படியெல்லாம் மக்களிடம் இருந்து உழைப்பை, பணத்தை சுரண்டுகிறோம் என்பதை எல்லாம் விரிவாக கூறுகிறார்கள். பிரிட்டிஷ் விட்டு சென்ற ஆட்சிக்கு பிரதிநிதியாக மாறி தங்கள், பண வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக் கருதுகின்றனர். இவர்களின் சொத்துகள், இவர்களுக்கு இருக்கும் கார்கள், பங்களாக்கள், மனைவிகள், சுகர் கேர்ள்ஸ்,  மூலம் தெரியப்படுத்துகின்றனர்.

அந்த நவீன திருடர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை பதிவு செய்கிறது. நாமும் சுரண்டப்படும் ஒரு வர்க்கம் என்பதை வாசிக்கும் போது உணரமுடிகிறது. ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும் சுரண்டப்படும் தன்மை வாசிப்பவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ப்ரிட்டிஷ் காலனி மதத்தை துணைக்கு வைத்து மக்களை எப்படி சிந்திக்க விடாமல் மழுங்கடித்தது என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதமும், ஆங்கிலேயர்கள் சுரண்டும் வரை சுரண்டிவிட்டு எஞ்சியதை சுரண்ட, தனது கூலியாட்களை நியமித்து சென்றிருப்பதையும் முகத்தில் அறைந்தாற் போல எழுதியிருக்கிறார் ஆசிரியர். கென்யாவை எடுத்துவிட்டு இந்தியாவை அந்த இடத்தில் பொருத்தி பார்த்தால், அதே அழிவு நம்மிடையேயும் அவர்கள் நிகழ்த்தியிருப்பதை உணர முடியும். இந்த நூல் பேசும் அரசியல் முக்கியமானது. முதலாளித்துவத்துக்கு அடிமையாகிபோய் கிடக்கும் மக்களின் உணர்வுகளை மதம் எப்படி எழ விடாமல் பார்த்து கொள்கிறது என்பதை தெளிவாக பேசுகிறது.
அரசியல் தவிர்த்து பெண்ணின் நிலையை பார்த்தால், அவள் மீதான பாலியல் சுரண்டல், தேசம் கடந்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதை தான் வரீயங்கா, வங்காரி கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.  

வங்காரி திருடர்கள் நடத்தும் விருந்துக்கு போலீசாரை கூட்டிவர அவள் கலகம் செய்ய முயற்சிப்பதாக கைது செய்யப்படுகிறாள். அதிகார வர்க்கம் என்பது சில்லறை திருடர்களை பிடிக்கவே, பெரும் திருடர்களுக்கு அவை சாமரம் வீசுகிறது என்பதை வங்காரி கைதின் மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறர். நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நிற்பது போல தோன்றினாலும், அது ஆளும்வர்க்கத்தின் கைப்பாவை தான் என்பதை வங்காரி கைதின் மூலம் ஆசிரியர் மறைமுகமாக சொல்கிறார். போராளியாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை வங்காரி கதாப்பாத்திரம் மூலம் சொல்கிறார் ஆசிரியர்.

சிறுமியில் இருந்து இளம்பெண்ணாக மாறும் நேரத்தில் வரீயங்கா மனதில் சிறகடிக்கும் கனவுகளும், கற்பனைகளும், கள்ளம்கபடமில்லா அவள் குழந்தைத்தனமும் உலகம் முழுதும் உள்ள பெண்களுக்கான பதின் பருவ உணர்வு. அவளின் ஆசை, அவளது  உள்ளத்தை பற்றி கவலை இல்லாமல், அவளின் இளமையால் ஈர்க்கப்படும் பணக்கார கிழவன் ஒருவன் ஆசை வார்த்தைகளால் அவளுக்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதாக பகட்டான உலகத்தை காட்டுகிறான். அந்த பகட்டில் மயங்கும் வரீயங்கா பணக்காரனின் படுக்கையறை விளையாட்டு பொம்மையாக தான் ஆக்கப்படுவது தெரியாமல் அவனுடன் சந்தோஷமாக நாட்களை கடத்துகிறாள். விளைவு எஞ்ஜினீயரிங் கனவில், படிப்பில் முதல் மாணவியாக வரும் அவள் படிப்பின் மீது நாட்டம் குறைந்து கேளிக்கையில் நாட்டம் கொள்கிறாள். அவனால் கர்பமாகிறாள். அவள் கர்பமானவுடன் காணாமல் போகிறான், போகும் போது அவளை எளிதில் எவருக்கும் இணங்க கூடிய க்ரீந்தி என்று சொல்லி செல்கிறான்.

மனமுடைந்து தற்கொலைக்கு இருமுறை முயற்சிக்க இருமுறையும் காப்பாற்றப்படுகிறாள். அப்பா அம்மாவிடம் தங்கி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுக்கிறாள். அம்மாவிடமே குழந்தையை வளர்க்கிறாள். யதார்த்த உலகம் புரிபட கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வருகிறாள். கடுமையாக படித்தாலும் முன்பு போல முடியாமல் செகரட்ரி வேலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு வேலையை தேடி கொள்கிறாள். அப்போது ஒரு இளைஞன் மீது மீண்டும் காதல் வயப்படுகிறாள். அவன் படிப்பு செலவுக்கு பணம் தருகிறாள் தன் சம்பாத்தியத்தில், அவனின் வார்த்தைகள் மீண்டும் அவளுக்குள் காதல் மலர செய்கிறது. ஆனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டதும், அவளின் ஆரம்ப கால கதை தெரிந்த அவன் அவளை க்ரீந்தி (பலருடன் உறவு கொள்பவள்) என்று சொல்லி புறக்கணிக்கிறான்.

இந்த கதையெல்லாம் தன்னுடன் பயணிக்கும் கத்தூர்யாவிடம் கூறுகிறாள். பின் எதற்காக அவனிடம் கூறினோம் என்று தன்னை தானே ஆச்சரியத்துடன் கேட்டு கொள்கிறாள். கத்தூர்யாவுக்கும் வரீயங்கா மீது ஒரு அன்பு மலர்கிறது. அவள் மெல்ல மெல்ல போராடி தனது பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கிறாள். தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்த வரீயங்கா, போராடி பொறியியல் படிக்கிறாள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்கிறாள். கந்தூர்யவுடன் மலரும் அன்பு அவர்களுக்கிடையேயான உறவு மிக யதார்த்தமாக உணர்வு தளத்தில் அழகாக நிகழ்கிறது. கந்தூர்யா யார் என்று தெரியுமிடம் கதையின் மற்றொரு திருப்பம்.  

இறுதியில் வரியங்கா சிறுவ‌ய‌தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய‌ வயதான‌ ப‌ண‌க்கார‌னை கொல்வ‌துடன் நாவ‌ல் முடிகின்ற‌து.

இடதுசாரி சிந்தனைகளும், முதலாளித்துவத்துக்கு எதிரான சிந்தனையும் நாவல் ஒரு சேர பேசுகிறது. மக்கள் பயத்தையும், உழைப்பையும் மூலதனமாக கொண்டு சுரண்டும் வர்க்கம் வளருவதையும், சுரண்டப்படும் வர்க்கம் மதம், விசுவாசம், என்று ஏதோ ஒன்றில் கட்டுண்டு கிடப்பதும் பற்றியும் வாசிக்கும் போது உணர முடிகிறது.

சிலுவையில் தொங்கும் சாத்தான் கதையே மறைமுகமாக அழகிய குறியீடை தாங்கி வருகிறது என்பதை கதையை வாசித்துவிட்டு தலைப்பை வாசிக்கும்போது உணர முடிகிறது. சினுவ அச்சிபியின் சிதைவுகள், ஆப்ரிக்க மக்களிடம் கிருஸ்துவ மதம் எப்படி நுழைந்தது என்பதை பதிவு செய்தது. கூகி வா தியாங்கோவின் இந்த படைப்போ மதத்தை கையில் எடுத்து கொண்டு ஆப்ரிக்காவில் காலடி எடுத்து வைத்த காலனி அரசு, மதத்தின் பெயரால் மக்களை அடிமையாக்கி மழுங்கடித்ததையும், தங்கள் ஆதிக்கத்தை விட்டு போனாலும், மறைமுகமாக அம்மக்களிடம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதையும் பேசுகிறது.


Saturday, 25 February 2017

மார்க்ஸிம் கார்க்கி - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

மார்க்ஸிம் கார்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு – அகல் வெளியீடு – ரஷ்ய மொழி கதையை தமிழில் மொழிப்பெயர்த்திருப்பவர்கள் பூ. சோமசுந்தரம் & நா. முக்கம்து ஷெரீபு.

பதினான்கு சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில், சில கதைகள் குறுநாவல் என்றே சொல்லலாம். பெரும்பாலான கதைகள் செவி வழி கேட்ட கதைகளாகவும், நாடோடிகளின் வாழ்க்கையை பேசும் கதையாகவும் இருக்கிறது. அந்த கால ரஷ்ய பிரபுத்துவ வாழ்க்கையை சில கதைகள் பிரபலித்தாலும், பெரும்பாலான கதைகள் நாடோடிகள் மற்றும் அடிதட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கிறது.

ஒரு சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை முதல் கதை வாசகரை ஈர்க்குமாறு அமைந்தால், அந்த மொத்த தொகுப்பும் வாசித்து முடிக்கும் வரை எதிர்பார்ப்புகள் இருக்கும். மார்க்ஸிம் கார்கியின் இந்த தொகுப்பில் முதல் கதை என்று இல்லை அனைத்து கதைகளும் வெவ்வேறு தளத்தில் நின்று சாமானியனின் உள்ளத்து உணர்வுகளையும், அவர்கள் சிக்கல்களையும், அடிமை வாழ்க்கை முறைகளையும் பேசுகிறது.

முதல் கதையான ஜிப்சி என்ற நாடோடி இனத்தவரின் வாழ்க்கை முறையையும், அவர்களில் அழகான பெண் ஒருத்தியின் வீரத்தையும், அவள் காதலனை தேர்ந்தெடுக்கும் விதம், அவள் காதல் அவனை கிறங்கடித்து அவன் அறிவை அழித்து அவள் முன் மண்டியிட வைக்கும் என்று சொல்லி காதலித்தாலும் ஏற்க மறுக்கும் ராத்தா, அவளில்லாமல் வாழ முடியாது அவளை அடைந்தாலும் வீரனாக இருக்க முடியாது என்று அவளை கொன்று, அவள் தந்தையின் கையால் மரித்து போகும் லோய்கோ என்று செவி வழி கதையாக கேட்ட ஜிப்சி கதையை இந்த முதல் கதை பதிவு செய்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் ஜிப்சி இனத்தவரின் காதலும், வீரமும் தனித்த ஒரு உணர்வு தளத்தில் வெளிப்பட்டுள்ளது.

இஸெர்கீல் கிழவி கதை பெண் ஒருத்தி தன் வாழ்க்கையை ஒரு நாடோடிக்கு சொல்கிறாள். அவள் வாழ்வில் சந்தித்த காதலன்களை, அவர்களை சர்வ சாதரணமாக சூழலுக்காகவும், தன் சுயநலத்துக்காகவும் கொலை செய்தத ஒருத்தி இறுதியில் ஒருவனிடம் காதல் வயப்பட்டு அவனுக்காக பைத்தியம் போல அலைகிறாள். ஆனால் அவனோ இவள் காதல் மூலம் சிறையில் இருந்து தப்பிவிட்டு பின் இவளை புறக்கணித்து செல்கிறான். இந்த கிழவியின் கதை வாசிக்கும்போது பல்வேறு உணர்வுகள் பெண்ணின் காமம், காதல் சார்ந்து நமக்குள் விதைத்து செல்கிறது. முதலில் கதை கேட்டவன் நம்ப முடியாதது போலவே பல இடங்களில் இப்படியா இப்படியா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

திருடன் கதை, திருட்டையே பிழைப்பாக வைத்திருக்கும் ஒருவனை வாழ்வில் நேர்மையான, கடவுளின் சட்ட திட்டங்களுக்கு பயந்த ஒருவன் சந்திக்கிறான். திருடனுடைய தொழிலில் உதவி செய்கின்ற வேலை என்று தெரியாமலே திருட்டு வேலைக்கு ஒத்து கொள்கிறான். ஒரு நாள் இரவு திருட்டில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்து திருடன் திருடி வர அவனுக்கு துடுப்பு வலிக்கும் வேலைக்காக ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் பேசி திருடனுடன் செல்கிறான் . அவன் திருடும் போது இவனுக்கு தன்னை திருடன் தனது தொழிலுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தன் புனிதம் கெட்டுவிட்டதாக அழுது புலம்பும் இவன் பின்பு திருடிய பொருளை விற்றுகிடைக்கும் பணத்தின் மீது ஆசைப்பட்டு திருடனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். அதிர்ந்து போகும் திருடனின் அக உணர்வும், கடவுளின் பெயரால் ஒழுக்க விதிகளை பின்பற்றும் ஒருவனின் அக உணர்வும் அவர்களுக்குள் இருக்கும் முரணை விவரித்திருக்கும் பாங்கும்,  அந்த திருட்டை அப்போதைய பயணத்தை சாகசத்தை விவரித்திருக்கும் இடம் எல்லாம் வாசகர்களை கதையில் கட்டி போடுகிறது.

சலிப்பை போக்க கதை, ஒரு கிராமத்தில் ரயில் நிலையத்தையும் அதில் பணி புரிபவர்களையும் பற்றி பேசுகிற கதை. ஒரு ரயில் வந்து போகும் போது சில நேர பரபரப்பு மட்டுமே அந்த ஊர் மக்களின் பொழுதுபோக்கு வேறு பொழுது போக வழியில்லாத அந்த கிராமத்தில் ரயில் நிலைய தலைவரின் வீட்டில் பணி செய்யும் அழகற்ற பெண். அம்மை தழும்புகளும், சீரற்ற அங்க அமைப்புகளும் கலந்து அருவெறுப்பான தோற்றத்தின் காரணமாகவே திருமணம் நடக்காமல் இருக்க சமையல்காரியாக அந்த நிலைய தலைவரின் மனைவிக்கு குழந்தைகளை கவனித்து கொள்ளும் சேடியாக வேலை செய்கிறாள் அந்த அழகற்ற பெண் அரினா.

அவளை அந்த ரயில்வே நிலையத்தில் பணி புரியும் இன்னொரு ஊழியனான கமோஸான் கவனிக்கிறான். அவளிடம் தன் சொந்த வேலைகளை ஏவுகிறான். அவளும் ஒரு வித அடிமை போல அதையெல்லாம் செய்கிறாள். ஒரு நாள் பேச்சு வாக்கில் அவள் தனியானவள், அவளின் உருவம் காரணமாக யாரும் நெருங்கவில்லை என்பதெல்லாம் கமோசானுக்கு தெரிய வருகிறது. தன் வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு யாருக்கும் தெரியாமல் வருமாறு அவளை அழைக்கிறான், அவளிடம் கடனாக பெற்ற பணத்தை அப்போது தருவதாக கூறுகிறான். அவளும் செல்கிறாள். விடிந்து தான் திரும்புகிறாள்.

கமோசான் அதன் பின் அவளை அழைக்கவில்லை, அவளிடம் கடனாக பெற்ற பணத்தையும் கொடுக்கவில்லை. தானாகவே அவள் அவனை தேடி போனாள். அவளிடம் இந்த உறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறான். அவள் மூலம் வேறு என்னென்ன வேலைகள் எல்லாம் பெற்று கொள்ள முடியுமோ அத்தனையும் பெற்று கொள்கிறான். அவள் கிட்டத்தட்ட அடிமை போல அவன் இட்ட வேலைகளை செய்தாள். அவன் அவளுக்கு ஏதோ பிச்சை இடுவது போல அவள் அவலட்சணத்தை குத்தி காட்டுவான். அவள் சில நாட்கள் போகாமல் இருந்தால் இன்று வா என்று யாருக்கும் தெரியாமல் முணுமுணுத்துவிட்டு செல்வான். அவளும் உடனே கட்டளைக்கு கீழ்படிந்து செல்வாள்.

இவர்களின் உறவு அங்கு பணி புரியும் ஊழியன் மூலம் தெரியவர ஒரு நாள் அரினா கமோசான் அறைக்குள் இருக்கும்போது பூட்டிவிடுகிறான். அப்படி மாட்டிக்கொண்ட அன்று இரவு கமோசான் திட்டி தீர்க்கிறான் அரினாவை. தன் மானமே போய்விட்டதாக குமைகிறான். மறுநாள் காலை கதவை திறக்கும் ரயில் நிலைய அதிகாரி, ஊழியர்கள்,அனைவருக்கும் தங்கள் சலிப்பை மறக்க ஒரு விஷயம் கிடைத்த சந்தோசத்தில் இருவரையும் கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். ஏற்கனவே கமோசானின் வார்த்தையாலும் அவமானத்தாலும் சுருண்டிருந்த அரினா ஊர் மக்களின் கிண்டல் கேலியால் மேலும் மனதுக்குள் உடைந்து போய் தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிகிறது. 

இந்த கதை என்னை மிகவும் உலுக்கியது.  இதில் பகிரப்பட்டிருக்கும் ஆண் மனதின் ஆதிக்க உணர்வு, ஆதரவற்ற அழகற்ற பெண்ணை உபயோகப்படுத்தி கொள்ளும் ஆண் அவளையே பாவத்துக்கு காரணமானவள் என்று ஏசுமிடம், அழகற்ற தன் உடல் மீதும் ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதை பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளும் பெண் அவன் அடிமையாக மாறும் விதம் அவளின் உணர்வு போராட்டம் ,  பொதுபுத்தி அனைத்தையும் இந்த கதை பேசுகிறது.

நான் சில  கதைகளை மட்டுமே பகிர்ந்தேன் . மார்க்ஸிம் கார்க்கியின் எழுத்துகளின் ஆழம் , அகச்சிக்கல்கள்ளை நுணுக்கமாக பதிவு செய்திருக்கும் விதத்தில் நிறைய இடங்களில் நம் அகத்தை ஒப்பு நோக்கி கொள்ள முடிகிறது. இவரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு இவரின் தாய் புத்தகத்தை வாங்கியுள்ளேன். மார்க்ஸிம் கார்க்கி கண்டிப்பாக தவற விட கூடாத எழுத்தாளர்.





Friday, 24 February 2017

சிதைவுகள் - சினுவ அச்சிபி

சிதைவுகள் – சினுவ அச்சிபி “Things fall apart “ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம். வின்செண்ட் மொழிப்பெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. முதன் முதலில் ஆப்ரிக்க இனத்தின் கலாச்சார, பண்பாட்டு கூறுகளை ஆப்ரிக்கர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலத்தில்.. இந்த நாவலை வகைமைப்படுத்துவது சற்று சிரமம். ஏனென்றால் இலக்கியம் வரையறுக்கும் வரையரைகளுக்கு அப்பால் ஆப்ரிக்க இனத்தவரின் வாழ்விடத்துக்கு நம்மை கூட்டி செல்லும் ஆசிரியர். அவர்களுடனேயே இருத்தி விடுகிறார்.
உலகெங்கும் மிக வேகமாக பரவிய கிருஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும், பழங்குடியினரின் ஆன்மாவை திருகி போட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனைய மதங்கள் மிக எளிதாக ஊடுருவ காரணமாக அமைவது அம்மக்களிடம் இருந்த சில மூடநம்பிக்கைகளும், காட்டு மிராண்டிதனங்களும் தான் என்று தேற்றிக்கொண்டாலும், அவர்களின் காட்டு மிராண்டித்தனத்துக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் நிகழ்த்துகிறது கிருஸ்துவின் பெயரை சொல்லி உள்ளே நுழையும் கிருஸ்துவ மதம்.
ஆப்ரிக்க பழங்குடி மக்களின் ஒருவனான ஓக்கோங்கோ என்ற மல்யுத்த வீரனின் இளமை பருவத்திலிருந்து அவன் இறப்பு வரை நடக்கும் சம்பவங்கள். அவனை சுற்றி உள்ள மனிதர்கள், அவர்களின் சமூக பழக்க வழக்கங்கள், அவர்களின் குடும்ப அமைப்பு, அவர்கள் வழிபடும் தெய்வங்கள், அசைக்க முடியாத நம்பிக்கைகள், கட்டுபாடுகள், என்று ஆசிரியர் நம்மை நைஜீரிய பழங்குடியினருடன் வசிக்க வைக்கிறார் நாவலில்.
வீரமே தங்கள் இனக்குழுவின் முக்கியமாக கருதப்படுவதுடன் அதற்காக போராடுபவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் தான் அந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தாக கருதப்படுகிறது.
ஓக்காங்கோவின் தந்தை உனேக்கா மிக மென்மையான மனதுடையவராக இருக்கிறார். மகனின் பார்வையில் சோம்பேறி. வெறுமனே புல்லாங்குழல் வாசித்து சமூகத்தில் பட்டங்கள் எதுவும் வாங்காமல், கடனாளியாக இறந்து போகிறார். தன் தந்தை போல தான் இருக்க கூடாது என்பது மட்டுமே சிறுவயதிலிருந்து ஓக்காங்கோவின் லட்சியமாக இருக்கிறது. கரடுமுரடாக தான் வளர்கிறார் .வீரத்தால் பட்டங்ககள் வாங்குகிறார். கடினமாக உழைக்கிறார். அந்த இபோ கிராமத்திலும், அவர்கள் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்துக்கு நகர்கிறார். மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி குடிசைகள் தனக்கென் ஆபி என்று வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேறுகிறார்.
இவரின் வாழ்க்கை முறையை விவரிக்கும்போது அம்மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை, பெண்களின் நிலை, அவர்கள் உரிமைகள்,  வைத்திய முறை, பிறப்பு முதல் இறப்பு வரை பின்பற்றப்படும் சடங்குகள , போர்கள், பஞ்சாயத்துகள் அனைத்தும் எளிய முறையில் விவரித்து விடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் எழுத்து நடையால் நாமும் அந்த ஊர் மக்களுடன் நம்மை பிணைத்து கொள்வது எளிதாகிறது. என்னை மிகவும் ஈர்த்தது, அவர்களின் குட்டி குட்டி நாடோடிக்கதைகள், அதில் ஒன்று கொசு ஏன் காதருகே ரீங்காரமிடுகிறது .
ஓக்காங்கோவின் வாழ்க்கை மிக அழகாக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு இறப்பு வீட்டில் அவன் தெரியாமல் செய்துவிடும் ஒரு தவறுக்காக மிகுந்த கடுமையான தண்டனைக்குள்ளாகிறான். ஏழு வருடங்கள் அந்த ஊரை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். தனது தாய்மாமன் கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் குடிபெயருகிறான். இந்த சமூகத்தில் பெண்ணுக்கான இடத்தை ஆசிரியர் மிக அழகாக இந்த இடத்தில் பதிவு செய்கிறார் ஓக்காங்கோவின் தாய் மாமன் மூலம். ஒரு பெண் இறந்துவிட்டாள் அவர்கள் சமூகத்தில் ஏன் பெண்ணை அவளது பிறந்த வீட்டில் புதைக்கிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம்,  அம்மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு மரியாதையை ஏற்ப்டுத்தியது. 
அந்த ஏழு வருடத்திற்குள் கிருஸ்துவ மதம் அவனது இபொ கிராமத்துக்குள் எப்படி நுழைந்து பரவுகிறது என்பது மீதி கதை. வெள்ளையர்கள் கொண்டு வந்த சைக்கிளை இரும்புக்குதிரை என்று அந்த ஊர் மக்கள் பெயரிடுவது, அது போல அவர்களை என்ன காரணத்துக்காக ஊருக்குள் அனுமதிக்கிறார்கள் அனைத்திற்கு நாவல் வாசிக்கும்போது தெளிவு கிடைக்கும்.
ஒக்கோங்கொவின் மூத்த மகன் தங்களது மதத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளாலும், பழக்க வழக்கத்தாலும், மென்மையான மனம் சொல்ல முடியாத துயரத்தில் இருக்க அப்போது கிருஸ்துவ மதத்தினரால் செய்யப்படும் ப்ரார்த்தனையில் நெக்குருகி தன்னை அந்த மதத்தோடு இணைத்து கொள்கிறான். கிருஸ்துவர்களையோ தனது மக்களையோ எவரையும் குறை சொல்லவில்லை, எதையும் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இது தான் நடந்தது என்று ஒரு பார்வையாளனாக அனைத்தையும் நேர்மையாக பதிவு செய்கிறார்.
கிருஸ்துவ மதம் கல்வி, மருத்துவம் என்று ஈர்த்தது, மிக கடுமையான தண்டனைகள் மூலம் அந்த கிராமத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்து கொண்டு தான் உள்ளே நுழைகிறது. பின்னர் படிப்படியாக அந்த மக்களின் கலாச்சாரத்தை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி கொண்டு மிக நேர்த்தியாக ஒரு நியாயம் கற்பித்து கொண்டு அம்மக்களை முற்றிலும் சிதைத்ததை தான் “சிதைவுகள்:” நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வரலாறல்ல . இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கதை தான். நான் நாவலை ஒரே மூச்சில் படித்தேன். எடுத்த புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. விரிவாக எழுதவில்லை. ஆனால் கிருஸ்துவ மதம் பரவும் முறை மிக நுணுக்கமாக வாசிப்பவர் உள்வாங்கும் போதும் நம் நாட்டில் நடக்கும் மதமாற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து நமக்கு புரியாத ஒரு கோணம் புலப்படும்.

Tuesday, 21 February 2017

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - வா.மு.கோமு

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள். வா.மு.கோமுவின் சிறுகதை தொகுப்பு. எதிர் வெளியீடு. இவரின் ”இரண்டாம் டேபிளுக்கு காரப்பொறி” நான் வாசித்த முதல் படைப்பு. அந்த கதை களமும், கதை மாந்தர்களும், அவர்களின் வட்டார வழக்கும், ஏதார்த்தமான நடையும் ஈர்க்க “கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” என்ற நாவல் வாங்கினேன். ஆனால் ஏனோ அந்த படைப்பை முழுதாக வாசிக்க முடியவில்லை. ஓவர்டோஸ் பாலியல் கதைகளமாக தோன்ற பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இந்த புத்தகவிழாவில் இரு மனதாக தான் இந்த சிறுகதை தொகுப்பை எடுத்தேன். ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளில் ஒன்றை தவிர மற்ற எல்லாமே பெரிதும் ஈர்த்தன.

முதலில் ஆசிரியருக்கு வரும் சரளமான பகடி நடை, அதற்கு ஸ்ருதி சேர்க்கின்ற வட்டார வழக்கு, இந்த வட்டார வழக்கு எந்த இடத்திலும் கதையோட்டத்தில் இருந்து துருத்தி தனித்து தெரியாமல் கதையோடு இயைந்து வருவது தான் எழுத்தாளரின் ப்ளஸ். கதையின் மாந்தர்கள் அன்றாடம் நம் வாழ்வில் எதிர்படும் எளிமையான மனிதர்கள். அந்த எளிமையான மனிதர்களின் வாழ்வின் யதார்த்தங்கள், அவர்களின் வலிகள், சந்தோஷங்கள், சிக்கல்கள் அனைத்தும் வாசகர்களை பயமுறத்தாத நடையில் எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

மொத்தம் 13 சிறுகதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ”சொல்வதெல்லாம் மடமை”  கதை படிப்பவர்கள் கண்ணில் நீர் வர சிரிப்பது உறுதி. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்திருக்கிறார் ஆசிரியர்.  ”ஸ்னேக சம்மந்தம்” கதை வெகு ஹாஸ்யமாக தொடங்கி இறுதியில் மனதை கனக்க செய்கிறது. ”ஆனந்தி வீட்டு தேனீர்” கதையின் ஆனந்தியை திருமணத்துக்கு  முன் தன் ஆதர்சன தீர்க்கதரிசியாக நினைக்கும் அவள் நண்பன், அவளின் திருமணம் முடிந்து அவளை விசாரிக்க போகும் போது நண்பனுக்கு நேரும் அனுபவத்தை, அவனின் ஆதர்ச் நாயகியின் நிலையை பேசுகிறது.
சூரம்பட்டியில் ஒரு இரவு கதை, தொழுவம் புகுந்த ஆடுகள் இரண்டு கதைகளும் எதிர்பாராமல் வாழ்வில் நடக்கும் சுவையான திருப்பங்கள், சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு துயரமாகவும் முடிவதை பேசுகிறது.

இரு மனம் விலகுது கதையின் யதார்த்த அதே சமய சோக முடிவை பகடியாக முடித்திருக்கும் விதமும், அந்த கதையில் காதலை வெகு இயல்பாக, ஹாஸ்யமாக சொல்லி கொண்டு சென்ற விதம் பிடித்தது. புத்தகத்தின் தலைப்பான “என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்” சிறுகதை க்ளாஸ் வகை. பெறாத பிள்ளைக்கு தகப்பனாக மாறும் ஒரு யாழ் போராளியின் கதை. ”நான் ஒருத்தரை மனசுல நெனச்சுட்டேன்” கதை சினிமாத்தனமான முடிவு.

எனக்கு அதிகம் தெரியாத, நான் அதிகம் பழகாத ஒரு பகுதி மக்களுடன் மிக சரளமாக நெருங்கி பழகிய உணர்வை ஆசிரியரின் எழுத்தில் உணர முடிகிறது. கதை மாந்தர்களின் குறைகளை கூட பெரிதுபடுத்த தோன்றாத வகையில் ஹாஸ்ய நடை, கதை மாந்தர்களின் பெயர்கள் பெரிதும் ஈர்க்கின்றன. மிக பொருத்தமாக கதாபாத்திரத்தோடு பொருந்தி போகிறார்கள் அம்சவேணியில் ஆரம்பித்து ஆனந்தி வரை. வா.மு.கோமு வாசிக்காதவர்கள் இந்த சிறுகதை தொகுப்பில் இருந்து ஆரம்பிக்கலாம். மனிதர் எளிமை, பகடி எள்ளலால் அனாயசமாக ஈர்க்கிறார்.


Saturday, 31 December 2016

சாமத்தில் முனகும் கதவு

சாமத்தில் முனகும் கதவு” கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதை தொகுப்பு. இந்த ஆண்டு வாசகசாலை வாசகர்களால் சிறந்த சிறுகதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. இவரின் கதையை முதன் முதலாக இப்போது தான் வாசிக்கிறேன்.

இந்த தொகுப்பில் பதினெட்டு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான கதைகள் வாழ்வியல் துயரங்களை சொல்கிறது என்றாலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கும் மொழியில் ஆசிரியரின் கதைகள் ஒவ்வொன்றும் ஆழ்மனதில் அடுத்தடுத்து உணர்வலைகளை எழுப்பி சில நிமிடம் ஸ்தம்பிக்க செய்கிறது.

சிறுவனின் பார்வையில் சொல்லும் ”கைக்கு எட்டிய வானம்” கதையிலும், ”ட்ரேடு” கதையிலும் சிறுவர்களின் உலகத்துக்குள் நுழைந்து சொல்லி செல்லும் இடத்திலும் பேண்டஸியும், குழந்தைகளின் பயமும், குழந்தைகள் பெற்றோர்களால் படும் மனக்கஷ்டங்களும், அதிலிருந்து வெளியே வர அவர்கள் கையாளும் உபாயத்தை முதல் கதையிலும், குடும்பத்தார் மீது ஏதோ ஒரு கணத்தில் துளிர்விடும் வெறுப்பு ஆலகால விஷமாக உள்ளேயே தங்கி விடுவதை ட்ரேடு கதையிலும் பதிவு செய்திருக்கிறார்.

”வெளவால்கள் உலவும் வீடு”, “அப்ரஞ்ஜி” இரண்டு கதையின் மாந்தர்களை போன்ற மனிதர்களை நான் தரிசித்திருக்கிறேன். மனித மனத்தின் சிக்கு பிடித்த மனதை துல்லியமாக பதிவு செய்திருப்பார் இதில் ஆசிரியர். குடித்தே தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு அண்ணன், அவன் மீது அலாதி பிரியம் வைத்திருக்கும் அவன் தம்பி அண்ணனின் இறுதி நாட்களின் போது அவனை காண வருகிறான். தம்பியின் நினைவிலிருந்து மேலேழும்பும் அண்ணனின் நினைவு, தன்னுடைய சிறுவயதில் எல்லாரையும் கவனித்து கொண்ட அண்ணன், கவனிப்பாரற்று கந்தல் துணியாக கிடப்பதை கண்டு ஆற்றாமையிலும், இயலாமையிலும் மனம் வெதும்புகிறான்.

உள்ளூரிலேயே இருக்கும் சகோதர சகோதரிகள் எட்டி கூட பார்க்காமல் இருப்பது, தம்பியை பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல அண்ணன் இறந்து விட அவனுக்கு இறுதி சடங்கை செய்கிறான் தம்பி. உயிருடன் இருந்த வரை அந்த வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்காத  உடன் பிறந்தவர்கள் அந்த பரம்பரை விட்டுக்காக எட்டி பார்க்கிற போது எரிச்சலைடையும் தம்பி அதிரடியாக முடிவு எடுப்பதுடன் கதை முடிகிறது. இந்த கதை மனிதர்களின் சுயநலத்தை அப்பட்டமாக பதிவு செய்கிறது.

அது போல அப்ரஞ்ஜி கதை தொன்னூறு வயது விதவையின் கதையை பேசுகிறது. இந்த அப்ரஞ்ஜிகளை எண்பது தொன்னூறுகளில் பார்த்திருக்கிறேன். கல்யாண வீடுகளில் வேலை செய்தும், சாதாரண நாட்களில் ஒரு காபிக்காகவும் ஐந்து ரூபாய் காசுக்காகவும், ஒரு மரக்கால் மாவை முறுக்கு சுற்றி கொடுக்கும் அப்ரஞ்சிகள், அப்பளம் இட்டுக்கொடுக்கும் அப்ரஞ்ஜிகள், துளி கூட அவர்கள் உழைப்பை உரிஞ்சுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்களிடம் பத்திய லேகியம் இடிக்கும் வேலையிலிருந்து, பூ கட்டி வாங்கி கொள்வது உட்பட ஏகப்பட்ட வேலைகளை வாங்கிக்கொள்வர். நீ இல்லைன்னா ஒரு வேலையும் ஓடல என அங்கலாய்த்து, ஒரு வேலை பாக்கி இல்லாமல் வாங்கி கொண்டு, வீட்டில் மிச்சம் மீது இருக்கிறதை கொடுப்பதையே பெரிய தானமாக கொடுக்கும் மகராசிகள் தான் பெரும்பாலான மனிதர்கள்.

உன்னை போல உண்டா என்று கொண்டாடும் அதே வாய், அவர்கள் ஒரு பத்து ரூபாய் பணத்தை தயங்கி தயங்கி கேட்டால், சொத்தையே கேட்டது போல முணு முணுத்து கடுகடுக்கு மனிதர்களை பார்த்திருப்பதால் அப்ரஞ்ஜி கதை மனதை நெகிழச்செய்தது.

எறும்புடன் ஒரு கதை புனைவு தான் எனும்போதும் வாசிக்கும் வாசகனை  எறும்பின் நியாயத்துக்குள் கொஞ்சம் ஹாஸ்யமாக கடத்த முனைந்திருக்கிறார். அது போல புனைவு வகை எழுத்தை அழுத்தமாக சொல்லி இருக்கும் வருகை கதையும் என்னை ஈர்த்த கதைகள். எறும்பு கதைக்குள் எறும்பை பேச விட்டு மனிதனின் குணத்தை பதிவு செய்திருக்கும் ஆசிரியர் புலி கதையில் சமூகத்தின் குணத்தை பதிவு செய்திருப்பதாக தான் நான் பார்க்கிறேன். வாசிப்பவர்களை பொறுத்து இது வேறுபடலாம் என்று தோன்றுகிறது.

முகங்கள் கதை மிக சுவராஸ்யமான கதை. எனக்கு மனித முகங்களை நினைவு வைத்துக்கொள்வது போல கடினமான விஷயம் ஏதுமில்லை. இதில் ஆசிரியர் ஒவ்வொருவர் முகத்தையும் வகைமை படுத்தி, ஒப்பு நோக்கி நினைவு கொள்ளும் மனிதனை பற்றி பேசுகிறார். இணையம் மூலம் பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட அப்போது அவர்கள் முகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆச்சரிய தக்க வகையிலும், சில முகம் அதிர்ச்சி தரும் வகையிலும் இருக்கிறது. இதிலிருந்து மீளாமல் இருக்கும் ஆசிரியரின் நீண்ட நாள் நெருங்கிய நட்பு ஒருவரை பற்றி தகவல் தெரிய அவரை காண கஷ்டப்பட்டு அவர் இருக்கும் இடத்தை தேடி செல்லும் ஆசிரியர் வீட்டுக்கு அருகில் போனதும் நட்பாக இருந்த அந்த பிம்பத்தின் மீது வேறு பிம்பத்தை பொருத்தும் தைரியம் இல்லாமல் திரும்பி விடுவதாக கதை முடியும்.. கொஞ்சம் ஆழமாக இதற்குள் இருக்கும் உளவியலை யோசித்தால் நம்மால் சில மாற்றங்களை ஜீரணிக்கமுடியாத தன்மையை இந்த கதை பிரதிபலிப்பதாக கொள்ளலாம்.

வாசமில்லா மலர் கதை பதிவு செய்யும் பெண்ணின் பொறாமை என்னும்  இருண்ட பக்கத்தை பதிவு செய்கிறது. ஒரு அக்கா, தங்கைகளுக்குள் ஏற்படும் பொறாமையை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். சில பெண்களிடம் இருக்கும் இந்த குணங்களை, அழகு தரும் கர்வத்தையும், கூட பிறந்தவளை கூட அலட்சியப்படுத்துவதையும், அகங்காரத்தையும் சந்திரகலா என்கிற கேரக்டர் மூலமும், பெண்ணிடம் இருக்கும் இன்னொரு குணமான எதையும் வரும் போக்கில் எதிர்கொள்ளும் பெண்ணின் குணத்தை சூர்யகலா என்ற இரு சகோதரிகள் மூலம் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

மாங்காச்சாமி கதையும் வேறோரு தளத்தில் பேசுகிறது. கூட்டுக்குடும்பத்தின் சிதைவுக்கு காரணமாக இருக்கும் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. ஆனால் அந்த குழந்தையை வெளியில் வெறுத்தாலும் உள்ளுக்குள் அந்த குழந்தை மீது இருக்கும் பாசம் வெளிப்படும் இடம் ஆச்சரியப்படுத்துவதுடன், மனித மனதின் ஆழத்தை எளிதில் இனம் காண முடியாததை பேசுகிறது.

வாசலில் நின்ற உருவம் கதையில் படுத்த படுக்கையாய் கிடக்கும் மனிதன், இறப்பை எதிர்கொள்ளும் நொடிகளுக்கு முன் இருக்கும் சில காலம் வரை அவனுக்கு நடக்கும் மனப்போராட்டமும், ஒருகட்டத்தில் மரணம் அவனை சுவீகரிக்க கையாலாகத்தனத்துடன், அதனை எதிர்கொள்ள பயந்து ஆனால் வேறு வழியின்றி மரணத்தின் பிடிக்குள் இழுத்துச்செல்லப்படும் மனிதனின் கதை.

இத்தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு உணர்வை அழுத்தமாக பதிவு செய்கிறது. மொழியும் நடையும், கதையை கொண்டு செல்கிறது என்றாலும் சில கதைகளில் நடை தொய்வாகவும் இருக்கிறது. சாமத்தில் முனகும் கதை வீரியமான கதை என்றாலும் அது தீவிர இலக்கிய வாசகர்களுக்காகவே எழுதப்பட்டது போல தோன்றியது. பிணவாடை கதையும் இதே உணர்வை ஏற்படுத்தியது. எளிய கதையை  அடர்த்தியான மொழி நடைக்குள் புதைத்து வைத்தது போன்ற உணர்வு.. மற்றபடி பல்வேறு உணர்வுகளை, பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் அழகாக பதிவு செய்திருக்கும் விதம் வாசிப்பவர்களை பொறுத்து பல்வேறு சுவைகளையும், பல்வேறு கோணங்களையும் முன் வைக்கும் ஒரு தொகுப்பு..

Friday, 2 December 2016

நாற்பதின் தொடக்கம்

முன்னுச்சியிலும் காதோரத்திலும் நரை
அரும்ப தொடங்கி விட்டது.
முகத்தின் பொலிவும் மெல்ல மங்குகிறது
எப்போது வேண்டுமானாலும் வருவேன்
என் இஷ்டத்துக்கு கொட்டி தீர்ப்பேன்
முடிந்தால் கட்டுப்படுத்திப் பார் என சவால் விடுகிறது
மாதாந்திர உதிரப் போக்கு
உணர்வுகளை மேலும் கீழும் நகர்த்தி
சூறாவளியாய் சுழன்று
சந்தோஷத்தின் உச்சத்துக்கும்
துயரத்தின் விளிம்புக்கும்
வெறுமையின் சூனியத்துக்கும்
அடுத்தடுத்து பயணித்து
ஆட்டம் காட்டுகிறது மனம்
வலியில் துவண்டு விழும்
உடலை கோர்க்கும் வலிமையை
சிதறடித்து கைகொட்டி சிரிக்கிறது வயது.
மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்காமல்
இழுத்தடிக்கிறது இயலாமை
நாற்பதின் ஆரம்பத்தை
அழுந்த பதிவு செய்கிறது காலம்..
வலியில் துவண்டு சரியலாம்
உணர்வுகளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
இழப்பது அறியாமல் இழக்க நேரிடலாம்
வீழ்ந்தாலும் இழந்தாலும்
வீறு கொண்டு எழ தைரியமுண்டு
வெல்லும் ஆற்றலை வளர்க்க
நெஞ்சில் உரமுண்டு.
இதோ மனக்கண்ணில் விரிகிறது
என் பிரபஞ்சம்
பாலினம் கடந்து கைகுலுக்குகிறேன்.
தனித்து பயணிக்க பழகுகிறேன்
குடும்பத்துக்குள் முடக்கிய சிறகுகளை
மெல்ல மெல்ல சீர் செய்கிறேன்.
எனக்கான வெளியை தேடி
பறக்க ஆயுத்தமாகிறேன்.
நரை சிறகுக்கு அழகு சேர்க்கிறது
கைக்குலுக்கும் கரங்கள்
வலுசேர்க்கிறது என் உலகுக்கு
உடலின் தளைகள் அறுபட
ஆசுவாசம் அதிகமாகிறது
எனக்கே எனக்கான உலகு
கை நீட்டி வரவேற்க
கம்பீரமான புன்னகையோடு
பயணப்பட ஆயுத்தமாகிறேன்.......

Thursday, 10 November 2016

பதினொரு நிமிடங்கள் - பாவ்லோ கொய்லோ

பதினொரு நிமிடங்கள் (லெவன் மினிட்ஸ் - Eleven Minutes) - பாவ்லோ கொய்லோ (Paulo Coelho)-வின் புத்தகம். தமிழில் க.சுப்ரமணியன் எதிர் வெளியீடு.

விபச்சாத்தை தனது தொழிலாக செய்த மரியா என்ற பெண்ணின் கதையை பேசுகிறது நாவல். பிரேசிலில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து மரியாவுக்கு புரியாத வயதில் ஒரு காதல் வருகிறது. ஆனால் அது தோல்வியில் முடிய காதல் குறித்த ஏக கற்பனையில் இருந்த மரியா அந்த வலியால் துவண்டு போகிறாள்.  ஆனாலும் உண்மையான காதலுக்கு ஏங்குகிறாள். பள்ளி படிப்பு முடிந்தவுடன் அந்த கிராமத்திலேயே ஒரு கடைக்கு வேலைக்கு போகிறாள். அவள் அழகில் மயங்கும் அந்த கடை முதலாளி அவளை காதலிக்கிறான். ஆனால் அவள் கனவோ நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறது.

ஓரளவு பணம் சேர்த்து பக்கத்தில் இருக்கும் ரியோ நகரத்தை நான்கு நாட்கள் சுற்றி பார்க்க செல்கிறாள். அவளிடம் நல்ல உடையோ, செருப்போ கூட இல்லை. இவளிடம் இருக்கும் அரத பழசான ஒரு நீச்சலுடையில் குளிக்க இவளின் அழகை வைத்து நல்ல வியாபாரம் செய்யலாம் என நினைக்குமொருவன் இவளை ஜெனீவாவுக்கு கூட்டி செல்கிறான். அங்கு காபரே டான்ஸராக ஒப்பந்த ஆளாக இவள் வேலை செய்ய நகர வாழ்க்கை இவள் நினைத்தது போல சந்தோசமாக இல்லை. டான்ஸராக போதிய பணம் சம்பாரிக்க முடியாது என்பதை உணர்ந்து ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் ஒப்பந்தத்தால் அங்கேயே தங்க நிர்பந்தம்.

சில நாளிலேயே சந்திக்கும் ஒருவன் மூலம் இவளை ஜெனீவாவுக்கு அழைத்து வந்தவனை வழக்கு போடுவேன் என மிரட்டி கொஞ்சம் பணத்துடன் அவன் விடுதியிலிருந்து வெளியேறுகிறாள். பெரிய மாடலாக வர முயற்சிக்க ஆனால் பணம் சம்பாரிக்கும் நிர்பந்தம் இவளை விபச்சாரியாக மாற்றுகிறது.

பல ஆண்களை சந்தித்தாலும், பாலுறவை ஒரு தொழிலாக வாடிக்கையாளரை திருப்திபடுத்த என்னவெல்லாம் செய்யலாம் அதன் மூலம் அதிகம் பணம் சம்பாரிப்பது என்கிற ரீதியிலேயே சிந்திக்கிறாள். பாலுறவு அவளை பொறுத்தவரை விருப்பு வெறுப்பெல்லாம் கடந்த ஒன்றாக தான் பார்க்கிறாள். அவள் ஆசை எல்லாம் கொஞ்சம் பணத்துடன் பிரேசில் சென்று பண்ணை ஒன்று, வீடு, அம்மா அப்பாவுடன் என்பதாக குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பாரிக்க வேண்டிய பணம் ஒன்றே லட்சியமாக இருக்கிறது.

ஓரளவு பணம் சம்பாரித்து ஊருக்கு திரும்ப முடிவெடுக்கும் நேரம் வரும் போது இரண்டு ஆண்களை சந்திக்கிறாள். இருவராலும் பெரிதும் ஈர்க்கப்படுகிறாள். அதில் ஒருவன் ஓவியன், மற்றொருவன் சாடிஸ்ட். சாடிஸ்ட் மூலம் அவள் காணும் உலகை, வலியின் மூலம் உணரும் உணர்வை தான் உச்சம் என்று நினைக்க ஓவியன் அது இல்லை உண்மையான வலி எது என்பதை அவளை உணர வைக்கிறான். வோட்காவின் துணையுடன் அடையும் உச்சத்தை கேள்விக்குள்ளாக்கும் ஓவியன், அவளுக்கு வேறு விதத்தில் உச்சம் காட்டுகிறான். ஓவியன் , சாடிஸ்ட் இருவரின் மூலமும் இரு வேறு அனுபவங்களை பெறுகிறாள் மரியா. வீனஸ் இன் ஃபர் கதையின் சில இடங்க்ளை மேற்கோடிட்டு காட்டி சாடிஸ்ட் கூறும் வார்த்தைகளும் உண்மைக்கு பக்கத்திலேயே இருக்கிறது உண்மையைவிட கவர்ச்சிகரமாக. 

ஒவியனை காதலித்தாலும், ஒரு அவ நம்பிக்கையிலேயே இருக்கிறாள். மரியாவின் அகப்போராட்டங்களும், பாலுறவு குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது எல்லாம் வார்த்தைகளில் கூற முடியாது. ஓஷோவின் சாயல் கொய்லாவிடம் இருந்தாலும் உணர்வுகளை சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் பாவ்லோ.

பெண்ணின் உச்ச கட்டத்தை ஆராய்ச்சிக்கெல்லாம் உட்படுத்தாமல், வேறு விதமாக அதன் மூலம் ஆன்மாவின் இருப்பை உணர செய்யும் முறையை மரியாவின் மூலம் நுணுக்கமாக ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். என்ன அறிவு தளத்தில் உச்சமாக சுதந்திரத்தை விரும்பினாலும், அதை பிறருக்கு கொடுக்க நினைத்தாலும், பொறாமை உட்பட அனைத்து உணர்வுகளையும் எதிர்கொள்ளும் இடத்தில் பெண்மையின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறார். அறிவாக சிந்தித்து காதல் வலி கொடுக்கும், சுதந்திரத்தை பறிக்கும் அந்த இனிக்கும் உறவு அலுத்துப்போகும்  என்று பலவற்றையும் குழப்பிக்கொள்ளும் மரியா ஓவியனை பிரிய நினைத்து அவனை விட்டு பிரேஸிலுக்கு விமானம் ஏறுகிறாள். ஆனால் இன்னொரு பக்கம் அவனுடன் இருக்க ஏங்கி கொண்டு தன்னை வந்து தடுத்து அணைத்து கூட்டி செல்ல மாட்டானா என்று ஏங்கியவாறே ஒரு இரண்டாம் கட்ட மனநிலையில் பயணிக்கிறாள். அவள் தடுமாற்றத்திலும், எதிர்பார்ப்பிலும் அனைத்து பெண்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார். ஓவியனுடனான பாலுறுவு உச்சத்தின்  மூலம் ஆன்ம சந்திப்பை நிகழ்த்தி இருந்தாலும் சினிமா பாணியில் காதலை எதிர்பார்க்கும் அவள் மனதை அதை நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தும் ஓவியன் என்று நிறைவான முடிவு.

பாலுறவின் வலி, இழப்பு , மேன்மை என்று அனைத்து நுணுக்கங்களையும், பெண்ணின் நுட்பமான அகச்சிக்கலையும், உடல் சிக்கலையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பேசுகிறது நூல். நூலகரகராகவும், மரியாவின் ஒரே தோழியாகவும் வரும் பெண்ணுக்கும் மரியாவுக்குமிடையேவான பாலுறவு குறித்த உரையாடல்கள் மூலம் பெண்களின் பிரச்சனைகளை அலசி இருக்கும் விதம் அருமை.   பாலுறவின் புனிதத்தை ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு பின்  புத்தகத்துக்கு பின் கிட்டதட்ட அதே கருத்தையொட்டி இருக்கும் பதினொரு நிமிடங்கள் பாலுறவு குறித்தான தெளிவான புரிதலை தருகிறது.


ஆசிரியர் சில இடங்களில் அதிகமாக சில உணர்வுகளை குழப்பியிருப்பது போல தோன்றினாலும் இதில் கூறப்பட்டிருக்கும் பாலுறவு குறித்த பார்வைகளும், மரியாவின் தன்னை கண்டடைய எடுக்கும் முயற்சியும், அவளின் துணிவும், சிந்தனை குழப்பமும் அதற்கு விடை தேடும் விதமும் , சுதந்திர உணர்வும் அனைத்தையும் தொடர்புபடுத்தி கூறப்பட்டிருக்கும் விதமும் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்க தூண்டும்.