Thursday, 11 December 2014

சிந்து பைரவி - திரைப்படத்தின் இரு காட்சிகள் பற்றி ஒரு சிறு நுணுக்கமான பார்வை.

:

காட்சி 1: அறிவு கம்மி, ரசனை கெட்ட ஜென்மம், முட்டாள் என்று கதை நாயகன் "ஜே.கே.பி. " யால் நினைக்கப்படும் கதாபாத்திரமான சுலோக்சனா. ஒரு காட்சியில் நாயகன் லதா மங்கேஷ்கர் வரிகளில் லயித்து மூழ்கி இருக்க சுலோக்சனா வெளியூர் புறப்படும் கணவருக்கு பருப்பு பொடி தயாரிப்பதற்காக மிக்சியை ஓட விட அது தொந்திராவாகிவிட்டது என்று நாயகன் நாயகியை கடிந்து கொள்ள நாயகி ஒரே கேள்வியில் அசால்ட்டாக உறைய வைத்து செல்வார். 'லதா மங்கேஷ்கர்" ரா நாளைக்கு உங்களுக்கு பருப்பு பொடி அரைத்து தருவார் என்று... அந்த கேள்விக்கு பின் இருக்கும் உண்மை முகத்தில் அறைய வைக்கும்.

காட்சி 2: படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் திருமணம் பற்றி எல்லாரும் பேச அதற்கு இன்னொரு நாயகி சொல்லும் வசனம்... நாளை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்பும் பலரும் "ஜே. கே.பி" ஏ இரண்டாம் தாரம் பண்ணிக்கிட்டாரு என்று தப்பான முன்னுதாரணம் காட்ட நான் காரணம் ஆக வேண்டுமா என்று கேள்வி முன் வைப்பார்..தன் வாழ்க்கையை விட தான் தவறான முன்னுதாரணமாகிவிட கூடாது என்ற தெளிவு..

படத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் தவறான முன்னுதாரணமாக தான் இருக்க கூடாது என்ற பொறுப்பு எத்தனை பேரிடம் இருக்கிறது...:) :) :)

பிள்ளைகளுக்காக

என் பிள்ளைக்கு பெண்ணுக்கு எதுவுமே தெரியாது என்று பீற்றி கொள்ளும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் அவர்களையே தெரியாமல் போகும் போது நொந்து போகிறார்கள். கூட்டு குடும்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட இந்த நாளில் நேரடி உடல் விளையாட்டுகளையும் டிவியும் கம்ப்யூட்டரும் வீடியோ கேம்ஸ் அபகரித்து கொண்டதில் நம் பிள்ளைகள் நாம் நாற்பது வயது கடந்து அனுபவிக்கும் ஸ்ட்ரஸ்களை இன்றே அனுபவிக்கிறார்கள்.

சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமில்லை சிறு ஊர்களில் கூட இதே நிலை தான் பிள்ளைகள் பள்ளி பள்ளி முடிந்தவுடன் டியூசன் பின் இரவு சோட்டா பீம், ஏதோ ஒரு கார்ட்டூனோ பார்த்து தூக்கம் லீவ் நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்போ அல்லது வீடியோ கேம்ஸ் டிவியுடன் ஐக்கியம்.

பிள்ளைகளுக்கு உறவுகளை சொல்லி தருவதுமில்லை உறவுகள் சங்கமிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வதுமில்லை காரணம் ஒன்று பிள்ளையின் படிப்பு, தேர்வு அல்லது பெரியவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் அல்லது அதெல்லாம் பிள்ளைகள் பழக மாட்டார்கள் அவர்களுக்கு அதெல்லாம் ஒத்த்க்காது என்று ஏதோ ஒரு காரணத்தை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் பிள்ளைகளின் மனநிலை பற்றி அறிய ஆர்வம் கூட காட்டுவதில்லை..

ஒரு முறை பிள்ளைகளை கூட்டி போய் சொந்தங்களின் திருமண வீடுகளில் அவர்களை விட்டு பாருங்கள் ஆனால் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அதை செய்யாதே இதை செய்யாதே அவரிடம் பேசாதே இவரிடம் பேசாதே என்ற விழி மிரட்டல், மொழி மிரட்டல் எல்லாம் விட்டு சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு பாருங்கள். உறவுகளை இவர் பெரியப்பா இவர் சித்தி, இவர் மாமா இது அவர்கள் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்துங்கள். யாருக்கும் இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று நீங்கள் டிஸ்க்ளெய்மர் கொடுக்காதீர்கள். அவர்களுக்கே பழக பழக புரியும்.

கோடை விடுமுறைகளுக்கு அல்லது சேர்ந்தாற்போல ஒரு பத்து நாட்கள் விடுமுறை என்றால் அவர்களின் பாட்டி தாத்தா வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். ஏ ஸி இல்லைன்னா என் பிள்ளை தூங்க மாட்டான், நடக்கவே தெரியாது என்று எல்லாம் நீங்களே பில்டப் கொடுக்காதீர்கள். சிறு வயதில் இருந்தே கொஞ்சம் உங்கள் விடுமுறை சிறப்பு வகுப்புகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை அவர்கள் உலக்த்தில் சுதந்திரமாக உலவ விட்டு பாருங்கள்..

உங்கள் பிள்ளைகள் டீன் ஏஜ் வரும்போதோ அதற்கு முன்னோ புத்தகம் வாசிக்க கற்று கொடுங்கள். அதன் பின் அவர்களை பற்றி நீங்கள் எந்த வயதிலும் கவலைபப்ட வேண்டி இருக்காது. எந்த கெட்ட பழக்கம் பக்கமும் போக மாட்டார்கள். என் பிள்ளைகளை முக்கிய உறவினர் திருமணங்கள், அலல்து எங்கள் குடும்ப ஒன்று கூடுதல் எதையும் எந்த கிளாஸ் படிக்கும்போதும் நான் படிப்புக்காக காம்பரமைஸ் செய்து கொண்டதில்லை இன்று வரை.. அதனால் என் பிள்ளைகள் படிப்பில் சோடை போகவும் இல்லை..

வாழ்க்கையை அவர்கள விருப்பத்துக்கு அனுபவிக்கட்டும் சிறு வயதில் நாம் சரியான வழியை காட்டிவிட்டால் எந்த வயதிலும் அவர்கள் தவறான வழிக்கு செல்ல மாட்டார்க்ள் என உறுதியாக நம்புகிறேன்.. இன்று என் பிள்ளைகளுக்கு சென்னையில் எவ்வளவு நண்பர்கள் உண்டோ அதே அளவு அவன் தாத்தா ஊரிலும் உண்டு. என் கணவரின் உறவினர்கள் வீட்டுக்கு போய்விட்டால் எங்கள் குடும்ப உறவுகளே போதும் நட்பு தேவையே இருக்காது எல்லா கலாய்த்தலும் எங்கள் குடும்பத்திலேயே நடக்கும்... ஆயிரம் அறிவுரைகளையும், நூறு பயிற்சி வகுப்புகளையும் விட பிள்ளைகளை சிறு வயதில் இருந்து பட்டாம்பூச்சியாக பறக்க விட்டால் அவர்கள் வளர்ந்த பின் ரொம்ப தெளிவாக இருப்பார்கள்....பிள்ளைகளை வளர்க்கிறோம் என்று வளர்ப்பதை விட நமது பாதுகாப்பில் அவர்களாக வளர விடுங்கள்..

பெண் சுதந்திரம் - ஒரு பார்வை

பெண் சுதந்திரம், பெண்ணியம் ஒரு பார்வை. இந்த பதிவுக்கு இருபாலருமே எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள். கண்டிப்பாக நான் சொல்லும் கோணம் திரிக்கப்படும் என்று தெரிந்தே பதிகிறேன். யாராவது ஓரிருவர் கொஞ்சம் சிந்தித்தால் போதும்..

ஒரு பெண் வலுவாக தன் கருத்துக்களை முன்வைத்தால் உடன் அனைவரும் சொல்வது அவள் பெண்ணியவாதி. அவள் சொல்ல வருவது என்ன? அது நியாயமாக இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிறகு தான். உண்மையில் பெண்ணியவாதி என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் பயன்படுத்தும் சொல் “பெண்ணியவாதி” ”.. இப்படி சொல்வதில் ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை..

உண்மையாகவே பெண்ணியம் பேசுபவர்கள் பெண்களுக்காக அக்கறை கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அவர்களுக்கு ஒரு சல்யூட். ஆனால் அதிலும் சிலர் பெண்ணியம் பேசுவதாக வெளியில் காட்டி கொண்டு தன் வீட்டு பெண்களை பூட்டி வைத்து எந்த சுதந்திரமும் கொடுக்காமல் பிற பெண்களை நெருங்க உபயோகிக்கிறார்கள். பெண்கள் இந்த போலி பெண்ணியவாதிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஆனால் அந்த போலிகளை கண்டறிய முதலில் பெண்கள் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் அவர்கள் பார்வையையும் மாற்றி கொள்ள முன் வரவேண்டும்..

என்ன தான் வேலைக்கு போனாலும் சம உரிமை பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. பெண் வேலைக்கு போக வேண்டும் ஆனால் உத்தியோகம் சம்பளம் எல்லாம் தன்னை விட அதிகம் இருக்ககூடாது என்ற மனப்போக்கு உடைய ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஆண் மட்டும் வேலைக்கு போனால் பிரச்சனையில்லை. ஆனால் பெண்கள் மட்டும் வேலைக்கு சென்று ஆண்கள வீட்டை கவனித்து கொண்டால் நெருங்கிய பெண்களே கேவலமாக பேசுகிறார்கள்.. முதலில் இந்த வம்பை பெண்கள் நிறுத்த தொடங்க வேண்டும்..

ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் உயர் பதவியில் இருந்தால் அவளுக்கு கீழ் பணி புரியும் ஆண்கள் அவளை பற்றி தெரியாதா இந்த பதவிக்கு எப்படி வந்தாள் என்று ஏளனமாக சொல்லும் வார்த்தைகளை கடந்து வராத பெண்கள் வெகு குறைவு. .சில நேரங்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் இந்தப் பேச்சுகளை கூர்மையாக்குகிறார்கள்.

ஒரு ஆண் பலரோடு மோசமான முறையில் பழகினால் அதை ‘ஆண்களின் குணம்’ என்று பொது வரையறைக்குள் உட்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பெண்கள் கூட, பெண்கள் யாருடனாவது நட்பாக பழகத் தொடங்கினால் கூட அவர்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதெல்லாம் பெண் சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது..

சுதந்திரம் என்பது கல்வியிலோ, பணிகளிலோ, பதவிகளிலோ இருப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கடைபிடிப்பதில்தான் இருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமைகள் இருக்கிறதா என்பதை மனம் திறந்து யோசித்து பாருங்கள்?? மாற்றம் ஆண்களிடம் நிறைய வரவேண்டும் மறுப்பதற்கில்லை ஆனால் பெண்களிடம் அதிகம் வரவேண்டும்.. அப்போது தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைக்கும்..

Tuesday, 9 December 2014

நாளை மற்றொரு நாளே - புத்தகம்



“நாளை மற்றொரு நாளே” ஜி. நாகராஜன் எழுதிய நாவல் கிளாசிக் வரிசை, காலச்சுவடு வெளியீடு. ஒரு கீழ்த்தட்ட மனிதனின் ஒரு நாளை வெகு பக்கத்தில் சென்று நமக்கு காட்டியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களின் வாழ்வியலை உற்று நோக்கும்போது பல விஷயங்கள் புரிகிறது. 

எந்த வேலையும் இல்லாமல் கட்ட பஞ்சாயத்து, அல்லது கொஞ்சம் சபலக்காரர்களை மிரட்டி காசு வாங்கி, மனைவியாக விபச்சாரம் செய்யும் பெண்ணை காசு கொடுத்து சேர்த்து கொள்ளும் குடிகார கந்தனின் காலை ஆரம்பிப்பது குடியுடன், மனைவியான பின்னும் அவளை விபசாரத்துக்கு அனுப்பும் அதை பெரிதாக அலட்டிகொள்ளாமல் ஏற்று கொள்ளும் மீனாவும் அவர்கள் வாழ்வியலும் கொஞ்சம் மனதை புரட்டி போடுகிறது..
.குடியினால் கந்தன் மோசமாக பாதிக்கப்பட மீனாவுக்கு எதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று தன்னை போல கட்டப்பஞ்சாயத்து பண்ணும் வசதியாக இருக்கும் அந்தோணியிடம் செல்ல அவர் சொல்லும் வாழ்க்கை தத்துவம் அதிர்ச்சியடைய வைத்தாலும் உண்மை நிலையை உணர்த்துகிறது.

ஏமாத்துறவங்களும் ஏமாறுறவங்களும் இருக்கிறது தான் உலகின் தன்மை. எல்லாரும் நேர்மையா நடந்துக்கிட்டா வாழ்க்கையில் போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. வாழ்க்கை சப்ப்னு இருக்கும்.. என்னை பொறுத்தவரை யாரையாவது கவுக்க சூழ்ச்சி செய்யும்போதுதான் உயிரோடிருப்பதாகவே தெரியுது. அந்த திறமை தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம். சூழ்ச்சி செய்ய தெரியாதவன் வாத்தியாராகவோ, குமாஸ்தாவாகவோ வாழ்நாள் பூரா  இருக்க வேண்டியது தான். அவன் அரசியல்வாதியாகவோ, வக்கீலாகவோ, போர்வீரனாகவோ வியாபாரியாகவோ முடியாது. மந்திரம் கிந்திரம்னு பேசுறாங்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது தந்திரம் தான் மந்திரம் ...
பைபிள், கீதை, ராமாயணம் எல்லாமே தந்திரங்களை தான் முன்னிலைப்படுத்தி இருக்கு. நல்லவனா இருந்தா கூட தந்திரம் பண்ணினா தான் ஜெயிக்க முடியும்னு சொல்லுது என்று உதாரணங்களுடன் சொல்ல புனித நூல்களின் இன்னொரு கோணத்தை ஒரு சாமானிய கட்டப்பஞ்சாயத்து அந்தோணியின் பார்வையில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்..

முடிவென்று ஒன்று இல்லாமல் கதையை கந்தனின் அன்றைய வாழ்வு முடியும் இரவுடன் முடித்திருக்கிறார். சில விஷயங்களுக்கு முடிவென்பது இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்..எந்த காலத்திலும் சில மனிதர்களுக்கு நாளை என்பது மற்றொரு நாளே...

Wednesday, 3 December 2014

தூண்டில்

புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்கும் மீன்
சேருமிடம் அறிவதில்லை..

கசாப்பு கடையோ
அழகிய மீன்தொட்டியோ
மரணம் உறுதி..


முன்னதில் வலி சில விநாடி
பின்னதில் தவணை முறையில்
மரணம் நேரும் வரை..

பின்னால் வரும் மரணத்தையும் வலியையும்
சற்று நேரம் மறக்க செய்கிறது
கண்ணின் முன்னால் ஆடும் புழு..

Tuesday, 2 December 2014

குறைவில்லை

உலக மயமாக்கப்பட்ட நாட்டில்
விளம்பரங்களுக்கும் மூளை சலவைக்கும்
குறைவில்லை.

கடவுளின் பெயரால் மதத்தலைவர்களின்
மனதை மயக்கும் வார்த்தைகளுக்கும், மூளை சலவைக்கும்
குறைவில்லை


நாளைய உலகமே நம் கையில் என்ற
அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளுக்கும்
பஞ்சமில்லை.

ஆசைகளுக்கும் நிராசைகளுக்கும் நடுவே
தினம் தினம் பயணிக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதாக
கல்லா கட்டும் தியான முகாம்களுக்கும் பஞ்சமில்லை.

காதலின் பெயரால் ஏமாற்றப்படும்
ஆண் பெண் குமுறல்கள் உணர்வு குழப்பங்கள்
ஆதி காலம் தொட்டு தீர்ந்தபாடில்லை.

அறிவியலால் விளக்க முடியா விளக்கங்கள்
ஆன்மீகத்தால் புரிய வைக்க முடியா குழப்பங்கள்
இலக்கியத்தால் தீர்க்க முடியா சர்ச்சைகள்
ஓய்ந்தபாடில்லை.

ஆனாலும்
மெல்ல வருடும் மென்காற்றும்
பரபரப்பான காலையில்
மென் இறகென காதில் நுழையும்
மென் இசை கொடுக்கும் சுகமும்
மழலையின் மனதை
மனதுக்கு கொடுத்து
குதூகலிக்க செய்து கொண்டே தான் இருக்கிறது..

Friday, 28 November 2014

ஜனநாயகம்



ஜனநாயகத்தின் மிக பெரிய கோட்பாடு அல்லது ஆதார கொள்கை மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம். அதாவது நம்மால் நமக்காக நாமே தேர்தெடுக்கும் அரசாங்கம். மன்னராட்சி என்பது தனிப்பட்ட் ஒரு குடும்பத்தின் ஆட்சியாக சுய குடும்ப நலமாக போய்விdaட கூடாது என்று பொதுநல அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகத்தின் பேரால் இந்தியாவில் நடப்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

மன்னராட்சி என்றால் அதிகாரத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கடவுள் வாக்கு போல விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும். மன்னரின் நலமே மக்கள் நலம். மன்னர் அவர் தம் குடும்பம் சுகமாக வாழ மக்கள் அடிமைகளாக உழைத்தே ஆகவேண்டும். உழைப்புக்கு தகுந்த கூலி பற்றி மூச் பேச கூடாது அதற்கு பதிலாக மன்னர் அவருடைய பிறந்த நாளிலோ அல்லது அவரது மகாராணி ஆசை நாயகி பிறந்தநாளிலோ, அல்லது பண்டிகைகளின் போதோ நாம் உழைத்து கொடுத்த பணத்திலிருந்து நமக்கு சாப்பாடு, துணிமணிகள் சில சமயம் ஏதோ கொஞ்சம் காசும் தருவார். நாம் உழைத்து கொடுத்ததை தான் அவர் தின்றது போக நமக்கு தருகிறார் என்று அறிவு கூட இல்லாமல் கிடைத்தற்கு மகிழ்ந்து பக்கத்தில் இருப்பவரை விட நமக்கு தேவலாம் என்று நம்மை போல கையேந்தும் இன்னொருவரை ஒப்பிட்டு திருப்தி அடைந்து விடலாம்.

இப்படியே இருந்துவிட கூடாது என்று சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு சிலரால் போராடி பெறப்பட்டது தான் ஜனநாயகம். ஆனால் அதன் பெயரால் நடப்பது என்ன? முன்பு மன்னருக்காக உழைத்த மக்கள் இப்போது கட்சிகளுக்காக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? இதை மக்கள் யோசிக்கவே கூடாது. அப்போது தான் ஆட்சியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியும். மன்னராட்சி என்றால் சிரச்சேதமோ, கழுவேற்றமோ செய்து விடலாம் யோசிப்பவர்களை. ஆனால் ஜனநாயகத்தில் எல்லாருக்கும் கருத்துரிமை இருப்பதால் அது சாத்தியபடாது அதனால் என்ன செய்யலாம் சிந்திக்கவே விடாமல் செய்துவிடலாம். அவ்வப்போது நாயுக்கு எலும்பு துண்டை வீசுவது போல சில சில்ல்றைகளை இறைத்து மொத்தத்தை சுருட்டி கொள்ளலாம். அதற்கு மக்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டும்.

இலக்கியம், கலை, கதை  எல்லாம் உழைக்கும் மக்களின் களைப்பை போக்குகிறதா? மக்களை மெய் மறக்க செய்கிறதா? அப்போது அவைகளை வைத்தே மூளை சலவை செய்துவிடலாம். மெல்ல மெல்ல ஜனநாயகத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இலக்கியம் கலைத்துறையில் இருப்பவர்களையே வைத்தே செய்யலாம். இலக்கியம் கலை கதை எல்லாம் உண்மை என்பது போன்ற மாயை உருவாக்கபப்ட்டது. மெல்ல மெல்ல அதை உருவாக்குபவர்கள் அல்லது அதில் பங்கேற்றவர்கள் கடவுளாக அலல்து கடவுள் போல சித்தரிக்கப்பட்டார்கள்.  அதன் பின் மக்களை சிந்திக்க செய்ய விடாமல் இருப்பது கடினமா என்ன? அவரவர் நம்பும் கதையின் நாயகர்களை தெய்வமாக்க அடுத்தவர்கள் நம்பும் நாயகர்கள் தெய்வம் இல்லை என்று நிரூபிக்க நடக்கும் சண்டையில் கடவுளர்கள் எல்லாம் சுகமாக குளிர் காய மக்கள் அவர்கள் நம்புவர்களை கடவுளாகக முனைப்பாக இருக்க அதை தாண்டி சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது??

மன்னராட்சி காலத்தில் பொங்கி போராடியவர்கள் கையில் சுலபமாக கலையும், இலக்கியமும் கொடுத்து நாயகர்களாக செய்துவிட்டார்கள். நாயகர்களை மக்கள் சிறு தெய்வமாக்கி கொண்டாட அந்த புகழின் மயகத்தில் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் அடிப்படை சிந்தித்தலே அடிப்பட்டு போய ஆட்சி செய்யும் கடவுளின் அடியாளாக மாறிப்போனார்கள். சிந்திக்க தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பதவி, பட்டம், பரிசு என்ற பெரிய பெரிய மீன்களும், மக்களுக்கு இலவசங்கள் என்ற சிறிய மீன்களும் வீசப்பட சுறாவை விழுங்கி ஏப்பமிட்டு கொண்டு சுகமாக ஆட்சியாளர்கள் .

மக்களின் சிந்தனை எல்லாம் யார் அதிக மீன்கள் (இலவசங்கள்) தருகிறார்கள் என்ற ரீதியில் மழுங்கடிக்கப்பட்டுவிட. சிந்திக்கும் தைரியமாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் அவர்களுக்கு ஆதாயம் தரும் கடவுளின் ஏஜெண்டுகளாக அவதாரமெடுக்க.அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை மக்கள் சமூகம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாத்வீகமாக நேர்மை, நியாயம் என்று போராடும் இவர்களை இந்த ஏஜென்ட்டுகள் பிழைக்க தெரியாத முட்டாள்கள் என்றும் கொஞ்சம் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பவர்களை, போராடுபவர்களை தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி அதை தமது அறிவால் மக்களை நம்ப செய்யும் வேலைகளை செய்து வருகிறார்கள்..

ஆக மன்னராட்சி மக்களாட்சியாக மாறாமல் கட்சிகளின் ஆட்சியாகவும் இல்லாமல் கட்சியில் இருக்கும் ஒரு குடுமபத்தின் ஆட்சியாக மாற அந்த கட்சியின் தலைவர்கள் கடவுளர்களாக மாறி அவரவர் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எல்லா வளமும் நம்மிடம் இருந்து பிடுங்கி கொடுத்து செழிப்பாக நாம் எந்த கடவுளிடம் சொத்து அதிகம் என்று கணக்கெடுத்து இந்த கடவுளை விட அந்த கடவுளிடம் சொத்து குறைவு என்று சண்டையிட்டு கொண்டு இருக்கிறோம். அடிப்டையில் அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை மறந்து.

ஜனநாயகத்தின் நிலை இப்போது எதில் வந்து முடிந்திருக்கிறதென்றால் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலை போய் திருடியவர்களில் யார் குறைவாக திருடி இருக்கிறார்கள், அலல்து தவறு செய்தவர்களில் யார் குறைவாக செய்திருக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலையில். ஆட்சியாளர்கள் அபாரமாக தங்கள் உணர்ச்சி பேச்சுக்களால் உணர்வு குமுறல்களால் உண்மையை நாம் என்றும் அறிந்து கொண்டுவிடாமலே செய்துவிட்டார்கள்.. நாமும் வாய் பிளந்து செம்மறி ஆட்டு கூட்டமாக சிந்திக்கவே தோன்றாமல் உண்டு, உடுத்தி, வாழ்ந்து செத்து மடிகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..