Thursday 11 December 2014

பெண் சுதந்திரம் - ஒரு பார்வை

பெண் சுதந்திரம், பெண்ணியம் ஒரு பார்வை. இந்த பதிவுக்கு இருபாலருமே எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள். கண்டிப்பாக நான் சொல்லும் கோணம் திரிக்கப்படும் என்று தெரிந்தே பதிகிறேன். யாராவது ஓரிருவர் கொஞ்சம் சிந்தித்தால் போதும்..

ஒரு பெண் வலுவாக தன் கருத்துக்களை முன்வைத்தால் உடன் அனைவரும் சொல்வது அவள் பெண்ணியவாதி. அவள் சொல்ல வருவது என்ன? அது நியாயமாக இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிறகு தான். உண்மையில் பெண்ணியவாதி என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் பயன்படுத்தும் சொல் “பெண்ணியவாதி” ”.. இப்படி சொல்வதில் ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை..

உண்மையாகவே பெண்ணியம் பேசுபவர்கள் பெண்களுக்காக அக்கறை கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அவர்களுக்கு ஒரு சல்யூட். ஆனால் அதிலும் சிலர் பெண்ணியம் பேசுவதாக வெளியில் காட்டி கொண்டு தன் வீட்டு பெண்களை பூட்டி வைத்து எந்த சுதந்திரமும் கொடுக்காமல் பிற பெண்களை நெருங்க உபயோகிக்கிறார்கள். பெண்கள் இந்த போலி பெண்ணியவாதிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஆனால் அந்த போலிகளை கண்டறிய முதலில் பெண்கள் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் அவர்கள் பார்வையையும் மாற்றி கொள்ள முன் வரவேண்டும்..

என்ன தான் வேலைக்கு போனாலும் சம உரிமை பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. பெண் வேலைக்கு போக வேண்டும் ஆனால் உத்தியோகம் சம்பளம் எல்லாம் தன்னை விட அதிகம் இருக்ககூடாது என்ற மனப்போக்கு உடைய ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஆண் மட்டும் வேலைக்கு போனால் பிரச்சனையில்லை. ஆனால் பெண்கள் மட்டும் வேலைக்கு சென்று ஆண்கள வீட்டை கவனித்து கொண்டால் நெருங்கிய பெண்களே கேவலமாக பேசுகிறார்கள்.. முதலில் இந்த வம்பை பெண்கள் நிறுத்த தொடங்க வேண்டும்..

ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் உயர் பதவியில் இருந்தால் அவளுக்கு கீழ் பணி புரியும் ஆண்கள் அவளை பற்றி தெரியாதா இந்த பதவிக்கு எப்படி வந்தாள் என்று ஏளனமாக சொல்லும் வார்த்தைகளை கடந்து வராத பெண்கள் வெகு குறைவு. .சில நேரங்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் இந்தப் பேச்சுகளை கூர்மையாக்குகிறார்கள்.

ஒரு ஆண் பலரோடு மோசமான முறையில் பழகினால் அதை ‘ஆண்களின் குணம்’ என்று பொது வரையறைக்குள் உட்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பெண்கள் கூட, பெண்கள் யாருடனாவது நட்பாக பழகத் தொடங்கினால் கூட அவர்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதெல்லாம் பெண் சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது..

சுதந்திரம் என்பது கல்வியிலோ, பணிகளிலோ, பதவிகளிலோ இருப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கடைபிடிப்பதில்தான் இருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமைகள் இருக்கிறதா என்பதை மனம் திறந்து யோசித்து பாருங்கள்?? மாற்றம் ஆண்களிடம் நிறைய வரவேண்டும் மறுப்பதற்கில்லை ஆனால் பெண்களிடம் அதிகம் வரவேண்டும்.. அப்போது தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைக்கும்..

No comments:

Post a Comment