Thursday 11 December 2014

சென்னை டே

எப்பவும் நம்முடனே இருக்கும் நம்முடன் கலந்துவிட்ட ஒன்றை அது உறவாக இருந்தாலும் சரி இடமாக இருந்தாலும் சரி நம்மிலிருந்து பிரித்து பார்ப்பதில்லை அதனாலேயே அதன் அருமையும் அவ்வளவாக உணர்வதில்லை உறவை பாராட்ட ஏதோ ஒரு நாள் போல இடத்தை பாராட்ட ஒரு தினம். சென்னை தினமும் அப்படியான ஒன்றாக தான் நினைக்கிறேன்.

சென்னை தின்று செரித்த கனவுகள் ஏராளம். எத்தனையோ ஊர் பெயர் முகவரி தெரியாதவர்களை, படித்தவர்களை, படிக்காதவர்களை, கனவுகள் சுமந்து திரிபவர்களை, வெறியுடன் உழைப்பவர்களை எந்த பாரபட்சமில்லாமல் தூக்கிவிட்டும், தூர வீசிவிட்டும் அமைதியாக இருக்கிறது.

அதிக ஆண் பெண் பேதமில்லாமல், சாதி, இன, மொழி பேதமில்லாமல் எல்லாரையும் சமமாக நினைக்க உணர வைத்து கொண்டிருக்கும் நகரம் சென்னை. என்ன தான் புறாகூண்டு அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை என்றாலும் சொந்த ஊரில் கனவாக ஒரு காலத்தில் தோன்றியதெல்லாம் நினைவாக சாத்தியமானது சென்னையில் தான்.

பெண்ணாக எனக்கான அடையாளமும் அங்கீகாரமும் எனக்கு சென்னையில் தான் கிடைத்தது. கும்பகோணத்தில் இருந்திருந்தால் இவ்வளவு உத்வேகம் வந்திருக்குமா, இவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்குமா, இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். என்ன தான் தேடல் இருந்தாலும் வழி இல்லாத இடத்தில் முட்டி மோதி வெளிவர நிறைய போராட வேண்டியிருக்கும். ஒரு குறுகிய வட்டம் தாண்டி வெளியே வந்திருக்க முடியாது. அப்படியே வந்தாலும் நம்முடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு விமர்சிக்கப்படும். ஆனால் சென்னை பல வழிகளை நம் கண் முன் வைத்திருக்கிறது. திறமையோடு வருவோருக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக்கி தருகிறது.

என்ன தான் சொந்த ஊர் பெருமை பீற்றிகொன்டாலும் சென்னை எனக்குள் நிகழ்த்தியிருக்கும் அற்புதங்கள் ஏராளம். ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல பெரிய கட்டுரையாக ஆகிவிடும்.. அவ்வளவு இருக்கு சென்னை எனக்கு கொடுத்து இருக்கும் அனுபங்கள்.. அதை எல்லாம் இன்று அசை போட்டு பார்க்க ஒரு தினமாக சென்னை தினத்தை நினைக்கிறேன்.. லவ் யூ சென்னை ♥ ...

No comments:

Post a Comment