Friday, 17 April 2015

“ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” - பிரபஞ்சன் எழுதிய புத்தகம் பற்றி ஒரு பார்வை.

“ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” பிரபஞ்சன் எழுதிய சிறுகதை தொகுப்பு. நற்றிணை பதிப்பக வெளியீடு. பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கிய புத்தகம்..பிரபஞ்சனை முதல் முறையாக இப்போது தான் வாசிக்கிறேன். மிக எளிமையான எழுத்து நடை. பெரும்பாலான கதை பின்புலங்கள் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் தான்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் கதை ஒரு அரிசிக்கடை வைத்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி கடன் கொடுத்து வியாபாரம் நொடித்து விட அவனிடம் கடன் வாங்கியவனிடம் சாத்வீகமாக கேட்டு நடையாக நடக்க அவன் காட்டும் அலட்சியம் கடைசியில் இறங்கி குரல் கொடுத்து ஒரு முறை மிரட்ட அதன் பின் பயந்து அவன் கடனை அடைக்க என்ன செய்கிறான் கடனை வாங்கி கொண்டு கிருஷ்ணமூர்த்தி நடந்து கொள்ளும் முறை என்று கதை கிளாசிக் வகை.

பிரும்மம் கதை தான் இந்த தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை. ரொம்ப எளிய ஒற்றை வரி கதை ஆனால் அந்த கதையை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் தான் அழகு. வீட்டுக்கு முன் இருக்கும் ஒரு துண்டு நிலத்தை என்ன செய்யலாம் என்று யோசித்து பலவாறு குடும்ப உறுப்பினர்களால் ஆலோசனை செய்யப்பட்டு பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு கடைசியாக முருங்கை மரம் வளர்ப்பது என முடிவாகிறது. கதை முழுதும் அந்த முருங்கை மரத்தை சுற்றியே பின்னப்பட்டிருக்கும் விதம் முருங்கை குடும்பத்தில் அக்கம்பக்கத்தில் ஒரு அங்கமாக மாறிவிடும் விதம் திடீரென ஒரு புயலில் முருங்கை சாய அந்த வெற்றிடம் மனதுக்கு கொடுக்கும் வெறுமை. சில நாட்களில் விழுந்துவிட்ட அடிமரத்தில் இருந்து இலைகள் துளிர்த்திருப்பதை உயிர் துளிர்த்திருப்பதாக முடித்திருப்பார்.. வெறும் ஒரு முருங்கை மரத்தை சுற்றி இவ்வளவு அழகாக ஒரு கதை பின்ன முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்த கதை.

பகல் நேர நாடகம் அந்த கால கட்டங்களில் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச்சில் வேலைக்காக பதிவு செய்ய போகும் ஒருவனின் பார்வையில் அந்த அலுவலகம் அரசாங்க அலுவலர்களின் அலட்சியமும் அன்றைய இளைஞர்களின் நிலையும் தெள்ள தெளிவாக விவரித்து செல்கிறார்.
அம்மா இந்த கதை படித்து முடித்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. சிறு வயதிலேயே விதவையான அம்மாவை பற்றி வளர்ந்து விட்ட மகன் அவள் ஏன இப்படி இருக்கிறாள் என்று உளவியல் பார்வையோடு சிந்தித்து தன சின்ன வயதில் நடந்த சில சம்பவங்களை வைத்து அம்மாவின் உளவியலை தன் பார்வையில் பார்க்க முயற்சிக்கும் கதை. வித்தியாசமான கதை.

பலி கதை ஐந்து வயது பிச்சைக்கார சிறுமியை பற்றியது. ஒரு காபி க்ளப் வாசலில் பிச்சை எடுக்கும் அந்த சிறுமியின் அழகும் அந்த குழந்தைக்கு துணியும் கடையில் எஞ்சிய சாப்பாட்டை கொடுக்கும் குழந்தைக்கு நீரா என்று பெயரிட்டு அழைக்கும் முதலாளிக்கும் இருக்கும் ப்ரியம் பற்றியது. ஒரு முறை ஒரு வெள்ளைக்கார தம்பதி காபி குடிக்க வர அந்த குழந்தை அவர்களை பார்த்து சிரிக்கிறது. போகும் போது அந்த வெள்ளைக்கார பெண்மணி சாப்பாடு வேண்டுமா என்று வாங்கி கொடுக்க குழந்தை மறுக்கிறது, அவள் காசு கொடுக்க அதையும் மறுத்து அவள் கழுத்தையே பார்க்கிறது அந்த வெள்ளைக்கார பெண்மணி ஒரு மணி அணிந்திருக்க அது வேண்டுமா என்று கேட்டு அந்த பெண்மணி அதை கழுத்தில் மாட்ட சந்தோசமாக அதை தொட்டு பார்க்கும் குழந்தையை தட்டி கொடுத்து அந்த தம்பதியர் சென்றுவிட தூரத்தில் இதை பார்த்து கொண்டிருந்த அந்த பிச்சைக்கார பெண்ணின் தாய் காசு கொடுத்தா வாங்க மாட்டியா பெரிய மகாராணி மணி வாங்கி போட்ட்டுக்கனுமா என்று அந்த குழந்தையை அடித்து மணியை அறுத்தெறிய படிக்கும் நம்மால் நீராவுக்காக அழாமல் இருக்க முடியவில்லை

மீன் கதை வாடிக்கையாக மீன் வாங்கும் ஆனந்தாயிக்கும் அவள் வாடிக்கையாக மீன் வாங்கும் பவுனுக்கும் அவளுக்கும் எப்படி சிநேகம் ஆரம்பிகிறது என்ற கதை. தினமும் மீன் சாப்பிட்டு மீனை கண்டாலே வெறுக்கும் மகன் திருமணம் முடித்து வரும் மனைவியாவது மீன் மேல் அதிகம் விருப்பமில்லாதவளாக இருக்க வேண்டும் என்று நினைத்து முதலிரவிலேயே அவளிடம் அவன் கேட்க அவள் பிடிக்கும் ஆனால் அவ்வளவாக விருப்பமில்லை என்றவுடன் ஆசுவாசமடையும் அவன் மறுநாள் காலை வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது மீன் குழம்பை ரசித்து இட்லிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடும் மனைவியை பார்ப்பதுடன் கதை முடிகிறது.

முறிவு கதை காதலித்து திருமணம் நிச்சியக்கப்பட்டு பத்து நாளில் திருமணம் என்று பத்திரிக்கை எல்லாம் கொடுக்கப்பட்டு கொண்டு இருக்க கல்யாணம் பற்றி ஏகக்கனவுகளுடன் இருக்கிறாள் நாயகி திருமணத்துக்கு பின் எல்லாமே புதுசாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வாங்கும் அவளிடம் காதலன் திருமணத்துக்கு முன் ஒரு முறை சேர்ந்து இருக்க விண்ணப்பம் வைக்க இன்னும் பத்து நாள் தானே எனக்கு எல்லாமே கல்யாணத்துக்கு புதுசா இருக்கணும் அதற்காக எவ்வளவு மெனக்கேடுறேன் என்று மறுத்தும் அவன் வற்புறத்த ஒரு அவனுக்கு தெரிந்த நண்பரின் லாட்ஜில் சென்று தங்குகின்றனர். அதன் பின் அவள் வெறுப்புடன் நடந்து செல்ல நாயகன் எதிர் திசையில் நடக்க தொடங்குவதுடன் கதை முடிகிறது. முடிவை வாசகரின் யூகத்துக்கே விட்டுவிடுகிறார்.

சலிப்பு கதை ஒரு குழந்தையின் அப்பாவின் பார்வையில் தொடங்கி குழந்தையின் பார்வையில் நகர்ந்து குழந்தை அப்பாவை கேட்கும் கேள்வியில் முடிகிறது. வீட்டில் சண்டை நடக்க மனைவியை அடித்துவிட்டு குழந்தையுடன் வெளியே வரும் அவனிடம் ஏம்ப்பா அம்மாவை அடிச்சே என குழநதை கேட்க, கோவத்துல தப்பு பண்ணிட்டேன் பா, யாரா இருந்தாலும் அடிச்சது தப்பு என்று சொல்ல அம்மாவுக்குந்தானே கோவம் அவங்க மட்டும் உன்னை ஏன் அடிக்கல என்று கேட்க அப்பா ஏன் என்று சிந்திப்பதுடன் கதை முடிகிறது.

தலை சாய்க்க கதை வாழ்வின் அடித்தட்டு மனிதரின் ஒரு நாள் இரவு கழிய அதுவும் மழையில் விருந்தினர் வந்துவிட்டால் இருக்க இடம் இல்லாமல் நகரத்தில் சினமா தியேட்டரில் இரவை கழிக்க முற்பட இரவு ஆட்டம் முடிந்த பின் வீட்டுக்கு வந்தும் தூங்க முடியாமல் தூக்கத்துக்கு ஏங்கும் மனிதனின் கதை.
.
சங்கம் கதை ஜாதிகள் எத்தனை வருடமானாலும் போகுமா நம்மை விட்டு என்ற சந்தேகத்தை ஆழமாக விதைத்து செல்கிறது.. ஒட்டக்கூத்தர் கம்பர் எல்லாம் கூட ஜாதியில் சேர்த்து பார்க்கும் கொடுமையை பார்க்கும்போது என்னத்தை சொல்ல என்று தான் தோன்றுகிறது.

பூக்களை மிதிக்க கூடாது, சூரியனைப் பார்க்காமல் இரண்டும் சிறுவர்களின் பார்வையில் அவர்கள் உலகத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.. கண்டிப்பாக நம் குழந்தை பருவம் நிழலாடும் வாசிக்கும் போது.

பிம்பம் ஒருவனின் அகத்தாய்வு பற்றிய கதை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல மாட்டி கொண்டிருக்கும் முகமூடியை கழட்டி கீழே போட்டுவிட்டு இது சிநேகிதனுக்காக இது அம்மாவுக்காக என்று வரிசையாக கழட்டி வீசிய முகமூடிகளை சொல்கிறான். கடைசியாக உன்னுடைய முகம் எது என்ற கேள்விக்கு எனக்கு முகமே கிடையாது என்று சொல்வதாக கதை முடியும். இதை படித்து தான் புரிந்து கொள்ள முடியும்.

பகை கதை ஒரு சொறிநாய்க்கு பயந்து அதை பற்றிய சிந்தனையுடனே இரண்டு நாட்களை கடக்கும் ஒருவன் கடைசியல் அந்த நாய் இறந்துவிட்டது என்று கேள்விபப்ட்டதும் அடையும் துக்கம் என்று வித்தியாசமான ஒரு மன ஓட்டத்தை பற்றியது.
 
விழுது, மாமன் உறவு என்றும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மனிதர்களில் சிலர் கதை. அனேகமாக இது போல வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று ஊரில் சில குடும்பங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . இந்த் கதையும் அதுபோல ஒரு கதை ..

Wednesday, 8 April 2015

ஆபிரகாம் லிங்கன் - புத்தகம் பற்றிய பார்வை.

"ஆபிரகாம் லிங்கன்" அடிமைகளின் சூரியன் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு.. ஓரளவு வரலாறு, அரசியல் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் என்றால் கிழக்கு பதிப்பகம் நல்ல சாய்ஸ் என்றே நினைக்கிறேன். பாலுசத்யா எழுதிய மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு , ஓஷோவின் வாழ்க்கை வராலாறு எல்லாம் இவரது எழுத்தில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மிக எளிமையாக இருக்கும் இவரது எழுத்து நடை..

பொதுவாக இது மாதிரி தலைவர்கள் வரலாறு, போர் வரலாறுகள் எல்லாம் பெரும்பாலும் பல புத்தகங்களை ரெபரன்ஸ் செய்து அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும். அதனால் பல புத்தகங்களில் உள்ள முக்கிய விஷயங்களை வாசிக்க முடியும் என்பது கூடுதல் ப்ளஸ்.

துண்டு துண்டாக வடக்கு தெற்கு மாகாணங்களாக உள்நாட்டு கலவரங்களால் மோசமான நிலையில் இருந்த நாட்டை யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற இன்றைய வலுவான வல்லரசு அமைய அஸ்திவாரம் அமைத்தவர். இவரது காலகட்டம் 1809 - 1865 வரை.

வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உணவு, உடைக்கே கஷ்டப்படும் இடத்தில் இருந்து வந்தவர். வாழ்வில் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்து வந்தவர். அவர் ஜனாதிபாதியாக இருந்த கால கட்டங்களில் கூட சுகவாசியாக இருக்க முடிந்ததில்லை.

அடிமைகள் பிரச்சனை இவர் மனதை சிறுவயதிலேயே பாதித்தது. குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக வைத்திருந்த பழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடுத்த்தில் இருந்து அடிமைகள் வரலாறு ஆரம்பிக்கிறது. அப்போது அங்கு குடியேறிய ஐரோப்பியர்களுக்கும், போர்சுக்கீசியர்களுக்கும், வேலை பார்க்க ஆட்கள் தேவைப்பட்டார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்க இரண்டு வேலை சோறு, துணிமணிங்க மட்டும் கொடுங்க சாமி நாங்க உழைக்கிறோம் என்ற குரல் ஆப்ரிக்காவிலிருந்து " நீக்ரோ" என்று அழைக்கப்பட்ட பஞ்சத்தில் அடிபட்டு கிடந்த ஆப்ரிக்க கறுப்பின மக்களிடமிருந்து வந்தது.

கேட்டதை தருவதாக சொல்லி அழைத்து வந்த அவர்கள் வஞ்சிக்கப்பட்டு சுரண்டப்பட்டார்கள். உழைப்பு மட்டுமில்லை, உயிர், மானம்  எல்லாம் சேர்ந்தே சுரண்டப்பட்டது. உடல் பழம் இருந்தாலும் கல்வியறிவற்ற சிதறி இருந்த அவர்கள் ஆயதங்களால் அடிபணிய வைக்கப்பட்டார்கள். அடிமைகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக ஆனால் தெளிவாக அழுத்தமாக  ஆசரியர் பதிவு செய்திருக்கிறார். மனதை அழுத்துகிறது நம் மனிதர்களின் வக்கிரம்..

ஆபிரகாம் ஒரு முறை கிராமத்தில் இருந்து நகருக்கு வந்து நகரை சுற்றி பார்த்த போது அடிமை சந்தையில் கறுப்பின மக்கள் விலங்குகளால் பிணைக்கப்பட்டு இருந்ததையும் வெள்ளையர்கள்  அவர்களை சுவுக்கால் விளாசி கொண்டிருந்ததை பார்த்தார். ஒரு நீக்ரோ பெண்ணை ஏலம்விட்ட போது அவளை வாங்க வந்தவர்கள் அவளது அங்கங்களை தொட்டு தடவி, அமுக்கி பார்க்க அதை பார்தது துடித்து போனார் லிங்கன். அடிமை வியாபாரத்தில் கறுப்பின மக்கள் நடத்தப்பட்ட விதம் அவரால் தாங்கி கொள்ள முடியாததாக இருந்தது. அப்போது கூட வந்த நண்பரிடம் இதை ஒழிப்பதற்கு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக ஒழிப்பேன் என்று கூறுகிறார். அப்போது அவர் இருபதுகளில் இருந்தார்.

ஏழ்மையில் இருந்த போதும் வாசிக்க புத்தகங்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்த போதும் இரவல் வாங்கியாவது புத்தகங்கள் வாங்கி தன்னை வளர்த்து கொண்டார். வழக்கறிஞர் தொழில் இவரை பெரிதும் ஈர்க்க அதற்கு படித்து வழக்கறிஞராக வாழ்வை தொடங்குகிறார். பெரிதாக வருமானம் இல்லாத போதும் தேங்காய் மூடிக்கு கச்சேரி செய்வது போல வழக்குகள் எடுத்து நடத்தி காலம் தள்ளுகிறார். திருமண வாழ்வும் அவருக்கு தோல்வியே. தேர்தலில் போட்டியிடுகிறார். அங்கும் தோல்வியை சந்திக்கிறார். பேச்சு திறமையால் மெல்ல மெல்ல அரசியலுக்குள் தோல்விகள் பல சந்தித்து முன்னேறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி பதிவிக்கு போட்டியிட்டு இறுதியில் வெற்றி பெறுகிறார். வெற்றி பெற்றும் அப்போது அமெரிக்காவில் நடக்கும் உட்ப்பூசலால் அதிகம் தோல்விகள் சந்திக்கிறார். ஆனாலும் அமெரிக்காவை ஒன்றாக இணைக்கும் கொள்கையிலும், அடிமை முறையை ஒழிப்பதிலும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெறுகிறார். இரண்டாம் முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஒரு நாடகம் பார்க்க சென்ற போது வெள்ளையர் ஒருவரால் சுட்டு கொல்லப்படுகிறார்.

ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு தன்ன்னம்பிககை புத்தகம். அவரின் ஆளுமை அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று...

Monday, 6 April 2015

"ஏற்கனவே" - யுவன் சந்திரசேகர் எழுதிய கதை பற்றி ஒரு பார்வை

" ஏற்கனவே" யுவன் சந்திரசேகர் எழுதிய கதை தொகுப்பு.. உயிர்மை வெளியீடு. இதில் உள்ள கதைகள் எல்லாமே ஆசிரியர் சொந்த வாழ்வில் நடந்தது அவர் கேட்டது, அவர் நண்பர்கள் கதைகளுடன் சில புனைவு கதைகளும் சில விறுவிறுப்பான நம்ப முடியாத கதைகள் கலந்த தொகுப்பாக உள்ளது. சில கதைகள் அட போட வைக்கிற ரகம். சில கதைகளில் நடை கொஞ்சம் சுவராஸ்யம் குறைச்சலாக இருக்கிறது.

" ஏமாறும் கலை" தான் நான் படித்த யுவனின் முதல் புத்தகம். அதன் பின் யுவன் புத்தகம் இப்போது தான் வாசிக்கிறேன். முதல் கதை

"மீகாமரே..மீகாமரே " ஏதோ மொழி பெயர்ப்பு கதையோ என்று நினைத்தேன். ஆனால் வாசித்து முடிக்கும் போது அழகிய புனைவை நிஜம் போலும் சொல்ல ஆசிரியர் சொல்ல முயற்சித்திருக்கிறார் என்பது புரிந்தது.

"மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு" கதை பதின்பருவத்தில் இருக்கும் ஆண் வேறு ஒரு ஆணால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படும் கதை படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

நூற்றிச் சொச்சம் நண்பர்கள் சற்றே பெரிய சிறுகதை. அதில் நிறைய நுணுக்கமான தத்துவ விசாரங்களை ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

சோம்பேறியின் நாட்குறிப்பு மொழிபெயர்ப்பு புத்தகங்கள், ஆசிரியர்கள் என்று வேறு புத்தகங்கள் குறித்தும் அதன் ஆசரியர்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கும் கதை.

நார்ட்டன் துரையின் மாற்றம் ஆசிரியர் மாமா தன் வாழ்வில் சநதித்த ஒரு நிகழ்வை கதையாக சொல்வதும் அந்த கதையை அவர் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி சொல்வதும் என்று கொஞ்சம் ஹாஸ்யமாக நகரும் கதை.

" தெரிந்தவர்" கதை நம் வாழ்வில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு அதை ஆசிரியர் யோசித்து கொடுத்திருக்கும் விதம் தான் நம்மிலிருந்து வித்தியாசப்படுகிறது. தினசரியில் அவர் பார்க்கும் ஒரு அமைச்சரின் முகம் அவருக்குள் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று ஒரு நாள் முழுதும் அவரின் நினைவடுக்கில் இருக்கும் முகங்களுடன் தொடர்பு படுத்தி அவரின் முகத்தை நினைவு கொள்ள முனைவதும் அப்போது அந்த முகங்கள் சம்மந்த்ப்பட்டவர்களுடனான அவருக்கு இருக்கும் தொடர்புகள் என்று நீளும் விவரிப்பு அருமை.. எல்லோருமே இப்படி யாராவது ஒருவரை பார்த்து எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று நினைத்து சில நிமிடங்கள் குழப்பி பின் மறந்து வேறு பக்கம் கவனம் திருப்பிவிடுவோம். அப்படியல்லாமல் ஆசிரியர் அந்த முகத்தை மீட்டெடுக்க பயணிக்கும் தடங்கள் தான் கதையை நினைவில் நிறுத்துகிறது..

"அவமானம்" கதையும் அட்டகாசம். நாம் ஏதாவது ஒரு செயலை செய்துவிட்டு உள்ளுக்குள் குற்ற உணர்வாலும் அவமானத்தாலும் மருகி கொண்டே இருப்போம். அது போல சில சம்பவங்களை செய்துவிட்டு நொந்து கொள்ளும் ஆணின் மருகலும் அவனின் உள்ள உணர்வு தளங்களும் அவனுக்குள் வரும் தத்துவ விசாரங்கள் என இந்த கதையும் மனதில் பதிகிறது.
ஏற்கனவே கதை வாழ்வில் சிலருக்கு நடப்பவை தான் சில சம்பவங்களையோ, சில இடங்களுக்கு செல்லும் போதோ இது நம் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றும். அப்படியாக ஆசிரியருக்கு தோன்றும் சில சம்பவங்களில் கொஞ்சம் புனைவு சேர்த்து தந்திருக்கிறார். அந்த கதையை முடித்திருக்கும் விதம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை வாசித்து போல உணர செய்தது.

விருந்தாளி கதை ஒரு காக்கைக்கும் ஆசிரியருக்குமான உரையாடலாக இருந்த இந்த கதை என்னை அதிகம் ரசிக்க வைத்தது. ஆசரியர் கதை சொல்லியிருக்கும் விதம் தான் காரணம் . ஒரு காக்கை பேசினால் மனிதன் எப்படி ரியாக்ட் செய்வான் காக்கை என்னவெல்லாம் பேசும் என்று யூகிக்கவே முடியாத அளவு அழகாக படு ஹாஸ்யமாக கதை நகரும்.. இனி காகம் பார்க்கும்போது நம் எண்ணம் கொஞ்சம் வேறு விதமாக இருக்க கூடும்..

கரு நிற மை கதை நம்பமுடியவில்லை. புனைவா இல்லை அப்படி ஒரு சம்பவம் உண்டா என்று கொஞ்சம் யோசிக்க தான் வேண்டி இருக்கிறது. வெற்றிலையில் மை போட்டு நம் வாழ்வில் நடந்த பழைய நிகழ்வுகளை அப்படியே வெற்றிலையில் பார்ப்பது பற்றிய ஒரு கதை. ஆசிரியர் அப்படியான ஒரு இடத்துக்கு சென்று தன வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு பின் நினைவுக்கு திரும்பி ஊருக்கு வரும்போது அடையும் குழப்பம் நமக்கும் வரவே செய்கிறது.

Monday, 23 March 2015

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - புத்தகம் ஒரு பார்வை




“பதினெட்டாம் நூற்றாண்டின் மழை” எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. உயிர்மை வெளியீடு. இருபத்தி ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் சிறுகதை, மாலிக்கபூர், புத்தன் இறங்காத குளம் என்ற மூன்று சிறுகதைகள் தவிர மற்ற கதைகள் அனைத்துமே அன்றாட சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகளில் நாம் அன்றாடம் கடக்கும் சில விசித்திர விஷ்யங்கள், நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் விசித்திரங்கள் குணங்கள் என்று தான் நீள்கிறது.

“ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவிற்கும் சம்பந்தமில்லை” என்னும் சிறுகதை இயந்திர வாழ்க்கைக்குள் சுயம் தொலைத்த பெண் ஒரு நாள் எல்லாம் உதறி காலை முதல் மாலை வரை தன விருப்பபடி வாழும் வாழ்வு பற்றிய கதை. அனேகமாக எல்லாருக்குள்ளும் ஒரு சிந்தாமணி ஒளிந்து இருக்கிறாள், இல்லை வெளியே வரமுடியாமல் புதைந்து போயிருக்கிறாள் என்பதை இக்கதை வாசித்து முடித்த போது உணர முடிந்தது.

நம்மில் ஒருவன் வாசித்து முடித்த போது புத்தகத்தை தூக்கி கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டேன். அதற்கு அடுத்த கதைக்குள் போக முடியவில்லை.. அந்தளவு மனதை பாதித்தது தன்னையே விற்றுகொள்ள முன்வரும் ஒருவனும், அவனை வாங்க வரும் மனிதர்களும், விற்று கொள்ள முன்வருபவனின் தனிமையில் உள்ள குமுறலும், அவன் சாப்பிட்ட கம்பளி பூச்சிகள் எல்லாம் சமூகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருப்பது போன்று ஒரு அசூயை வந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை கதை கிளாஸ் வகை. கிருஸ்துவ மதத்தை பரப்ப வரும் ஒருவன் காட்டில் வாழும் பூர்வ குடியினரிடம் எப்படியாவது கிருஸ்துவ மதத்தை பரப்புவேன் என்று சபதமெடுத்து வந்து அங்கு வாழும் முதுவ இனத்தவரிடம் எதுவும் பரப்ப முடியாமல் காட்டின் வளத்தில் பிரமித்து தன்னையே கரைத்து கொள்ளும் ஆங்கிலேயே மத போதகர்  வலேசா என்பவனின் கதை.


கூந்தலில் எரிந்த நெருப்பு என்னும் சிறுகதையை வேறு ஒரு கதை தொகுப்பில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்..

விசித்ரி கதை தான் அதிக துக்கத்துகுள்ளாக்குகிறது. பனிரெண்டு வயதில் நிர்வாணமாக கத்தி கொண்டு ஊருக்குள் ஓடிவரும் ஒரு பெண் அதன் மனசிதைவு அடைய துணி பொட்டலமாக தன்னை ,முழுதும் துணிகளாலேயே (இருவது முப்பது  ஆடைகள் வரை )  மூடிக்கொண்டு துணி பொட்டலமாக எந்த நேரத்திலும் அவிழ்க்காமல் இறுக துணியை பற்றி கொள்ளும் பெண்ணின் கதை. அந்த சம்பவத்தின் காரணம் தேடி சந்தேகமாக நிறைய பேரை யூகித்து கடைசியில் யாரால் அந்த கதி என்று அறியவே முடியாமல் போகும் பெண்ணை பற்றிய கதை. “காமம் தனிநபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை, அது ஒரு புதைசுழல்,” என்று ஆசிரியர் முடித்திருக்கிறார். இந்த விசித்ரி போல எத்தனை விசித்ரிகளோ என்று எண்ணாமல் புத்தகத்தை மூட முடியவில்லை..

நான் ஒரு சில கதைகள் பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன். இருபத்தி ஏழு கதைகளும் வெவ்வேறு வகை கதைகள் வாசித்து முடிக்கும் போது நம்மை சுற்றி உள்ள மனிதர்களை அவர்களின் செயல்களை இன்னும் கொஞ்சம்  உன்னிப்பாக பார்ப்போம் என்றே தோன்றுகிறது..

Saturday, 21 March 2015

நான் ஆண்

காரணங்கள் இன்றி
வெறுமனே பார்வை இன்பத்துக்கு
அறைக்குள் அடிக்கடி வரவழைப்பேன்
பெருகும் உதிர போக்கால்
காலும் இடுப்பும் உளைந்து அதிகம் எழ முடியாமல்
அழுத்தும் உன் சோர்வை பற்றி எனக்கென்ன அக்கறை

நான் ஆண்

உள்ளே நுழைந்த உன்னை உட்கார சொல்லாமல்
வாய் கடித சாராம்சத்தை சொல்ல
பார்வையாலே மேலும் கீழும் மேய்வேன்
அறை அல்மாரியினுள் இருக்கும் கோப்பு ஒன்றை
மேலே எம்பியோ கீழே குனிந்தோ தேட சொல்லி
உன் வளைவு நெளிவை வெறிப்பேன்
நான் ஆண்

தேடி எடுத்து வரும் கோப்பை
கையில் தருகையில் கைவிரல் தீண்டுவேன்.
கணினியில் தகவல் தேட சொல்லி
அருகமர்ந்து கோப்பை திருப்புவது போல
இடுப்பை முழங்கையால் உராய்வேன்
கணினிக்குள் தகவல் தேடுவது போல
மெல்ல கழுத்தோடு உராய்ந்து வாசம் பிடித்து
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து
நேர் பார்வையாகவே என் விரசத்தை வெளியிடுவேன்
நான் ஆண்

பணி நேரம் முடிந்த பின்னும் பணி இருப்பதாக சொல்வேன்
நேரமாகிவிட்டால் காரில் இறக்கிவிடுகிறேன் என்பேன்
காரில் போகும்போது மேலதிகாரி எல்லாம் அலுவலகத்தில்
பக்கத்தில் அமர் என கதவை திறந்துவிடுவேன்
சீட் பெல்ட்டை மாட்டிவிடுகிறேன் என்று
மார்பை லேசாய் உராய்ந்திடுவேன்
கியர் மாற்றும் சாக்கில் தொடையில்
பட்டும் படாமல் உரசிடுவேன்
நான் ஆண்

லேசாக முறைத்தாலோ
எரிச்சலை பார்வையில் வெளிப்படுத்தினாலோ
சரியாக வேலை செய்யவில்லை
வேலைக்கு வந்தால்
எல்லாமும் தான் எதிர்கொள்ள வேண்டும்
எதுக்கு வேலைக்கு வருகிறீர்கள்
வீட்டில் சமைத்து பிள்ளைகள் பார்க்க வேண்டியது தானே
என்பேன்.
நான் ஆண்...

ஒற்றை சொல்

தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க
மெல்ல பின்னிருந்து கழுத்தை கட்டி
கன்னம் தடவி, மூக்கை நிமண்டி,
உதடு கிள்ளி
உன் கவனம் கலைத்து
மெல்ல என் கை பிடிக்கும் தருணத்தில்
காதை கடித்து
சட்டென ஓடிடும் விளையாடடுததனம் உண்டு,


தோள் சாய்ந்து
மடியில் கிடந்து
கைவிரல் கொண்டு
நெஞ்சு முடி அலைந்து
உன்னழகை பருகி
உன் கண் பார்த்து
மெல்ல கரைந்து போகும்
காதலும் உண்டு


உணர்வின் உச்சத்தில்
நகைச்சுவை சொல்லி
நீ இயங்க மறந்து துள்ளி சிரித்து
"உனக்கு விவஸ்த்தையிருக்கா
எப்போ என்ன பேசணும்னு" என
தலையில் தட்டி சிரிக்க
உன் செல்ல கோபம் ரசிக்கும்
குறும்புத்தனம் உண்டு


புற உலகின் பிரச்சனைகளால்
தாங்கவியலா துயரில்
உடைந்திருக்கும் பொழுதுகளில்
என்னுள் உன்னை புதைத்து
நானிருக்கிறேன் என
தைரியம் சொல்லி
தேற்றும்
தாய்மையும் உண்டு..


இருவரும் இணைந்து நடந்திடும் பொழுதுகளில்
முன்னால் செல்லும் பெண்ணின்
நீண்ட சடையின் பின்னல் அழகை ரசிக்க
விரைந்து அந்த பெண்ணிடம் சென்று
உன் பார்வையை விளக்கி
நீ திருதிருவென விழித்து அசடு வழிய
உன் வெட்கம் ரசிக்கும்
தோழமையும் உண்டு.


எல்லாம் இருந்தும்
கோவத்தில் சொல்லும்
நெஞ்சை அறுக்கும் ஒற்றை சொல்லில்
நத்தையாய் சுருங்கும் மனம்
உணர்வுகளை
தன்னுள் புதைத்து கொண்டு
ஆமையின் ஓடு போல
கடினமாகிவிடுகிறது.

Wednesday, 4 March 2015

பா. சிங்காரம் - கடலுக்கு அப்பால்

பா. சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி இரண்டு நூல்களும் எனது பார்வையில். முதலில் “ கடலுக்கு அப்பால்” நாவல் பற்றி சொல்லி விடுகிறேன்.

இந்த இரு நாவல்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவை பதிவு செய்யும் வரலாற்று புனைவு என்று கூட சொல்லலாம். இரண்டு நாவல்களும் தனித்தனியாக படிப்பதை விட ஒன்றாக படிக்கும்போது இன்னும் கொஞ்சம் எளிதில் புரிபடலாம். எழுத்து நடை ஆயாசமாக தான் இருந்தது ஆரம்பத்தில் வாசிக்க. அந்த கால கட்டத்துக்குள் நுழைய இருக்கும் சிரமம் தான். இரண்டாம் உலக போர் பற்றிய புத்தகங்கள் வாசித்தவர்க்ளால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர் தொடர்புடைய நிகழ்வுகளுக்குள் எளிதில் புகுந்து விட முடியும். நான் மிகுந்த சிரமத்த்துடன் தான் வாசித்தேன். அப்படி சிரமத்துடனாவது வாசிக்க தூண்டியது வித்தியாசமான எழுத்து நடை, கதைக்களம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், அந்த மாந்தர்கள் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே.

நேதாஜி படையில் பணியாற்றிய இளைஞர்கள், இரண்டாம் உலக போரில் ஜப்பானின் வீழ்ச்சி அதனால் ஏற்பட்ட பின்னடைவால் நேதாஜி ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இளைஞர்களின் நிலை தான் கதையின் பின் புலம் இரண்டு கதைகளிலுமே.

கடலுக்கு அப்பாலில் இரண்டாம் உலக போர் நெருக்கடிகளிலும் செல்லையாவின் மனதில் மலரும் காதலை பற்றி அழகாக சொல்கிறது அந்த கால சூழ்நிலையில் அவனுக்கு ஏற்பட்ட காதலும் அது நிறைவேறாமல் போவதன் காரணமும் அக்கால மனித வாழ்வை மனிதர்களின் மனநிலையை விரிவாக கூறுகிறது.. பெண்ணின் தகப்பனாரான முதலாளியான வானாயீனா செல்லையாவை தன் மருமகனாக ஆக்கி கொள்ளலாம் என்ற நினைப்புடன் அவனை தன்னுடன் பினாங்குக்கு கூட்டி வருகிறார். ஆனால் புரட்சி செல்லையாவை ஈர்க்க முதலாளியின் சொல்லை மீறி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருகிறான். நேதாஜியின் திடீர் மரணம், ஜப்பானின் பின்னடைவு காரணமாக ராணுவத்திலிருந்து வெளியேறி மீண்டும் முதலாளியிடம் சேருகிறான் மரகதத்தை மணக்கும் ஆசையுடன்.
முதலாளியான வானாயீனாவால் இராணுவத்தில் சேர்ந்து உடை, நடை மாற்றி கொண்ட அவனை ஏற்று கொள்ள மனம் வரவில்லை. தம் தொழிலுக்கு தேவையான பணிவு அவனிடம் இல்லாததால் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழில் நசிந்து விட கூடும் என்று அஞ்சி வேறொருவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார் பெண்ணுக்கும் மனைவிக்கும் இதில் உடன்பாடில்லாத போதும். மரகதம் செல்லையாவை காதலித்தாலும் தன்னால் குடும்பத்தை விட்டு வெளியே வர முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்கிறாள்.

இருவரும் சந்திக்கும் இடமும், காதலில் உருகி இணைய முடியாது என்பது தெரிந்து அடையும் மனவேதனையும், கலக்கும், கண்ணீரும், காதலும் அவ்வளவு அழகாக அந்த கால காதலர்களின் மனநிலையை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்கிறது.

செல்லையாவின் நண்பனாக வரும் மாணிக்கம் இடையிடையே பேசும் இலக்கிய விவாதங்கள் அவன் மூலம் சொல்லும் தத்துவ விசாரங்கள் எல்லாம் அருமை. மரகதம் கப்பலேறி திருமணத்துக்காக போனவுடன் மனமுடைந்து வரும் செல்லையா தனக்குள் பேசி தன்னை தேற்றி கொள்ளும் இடத்தில் வரும் எழுத்து மிக யதார்த்தம்.

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பத்தில்லை என்ற வரியுடன் முதல் நாவல் முடிவு முடிவு பெற்றிருக்கும்.