Saturday, 12 December 2015

தனிமைத் தளிர் - ஆசிரியர் ஆர். சூடாமணி



“தனிமைத் தளிர்” ஆர். சூடாமணி அவர்களின் சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.

அறுபத்திமூன்று சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களின் அன்பு கருணை என்று வெளிச்சமான பக்கங்களை தான் அதிகம் காட்டியிருக்கிறார். அதற்காக யதார்த்தத்துக்கு முரணாக இல்லாதவாறு கருவை தேர்ந்தெடுத்து அழகிய கதையாக பின்னி அதில் மனதின் இருண்ட பக்கங்களையும் அழகாக காட்டி இருக்கிறார். கடினமான இலக்கிய நடை இல்லை என்றபோதிலும் அவர் சொல்ல வந்த கருத்தை எந்த சமூக போலித்தன வரையறைக்குள்ளும் உட்படுத்தாமல் சொல்லியிருப்பதில் அவரின் எழுத்தின் வலிமை தெரிகிறது. 

இவர் எழுதியிருக்கும் கதைகளில் சில மட்டுமே புனைவு வகையை சாரும். மற்ற எல்லாமே நிதர்சனம் தான். கதைகள் பெரும்பாலும் நுண்ணர்வுகளை மையப்படுத்தியே. விளையாடும் சின்ன பிள்ளையின் மனநிலைகள் அவர்கள் உலகம் எப்படி இருக்கும் அவர்கள் உலகத்தின் நியதிகள் அவர்கள் உணர்வுகள் அவர்களின் உளவியல் அதை தாண்டி பதின்பருவம் வரும்போது ஆணகுழந்தையும் பெண் குழந்தையும் என்ன மாதிரி மனநிலைக்கு உள்ளாகும், பெண்ணின் தாய்மை, அந்த தாய்மைக்கு பின் இருக்கும் சுயநலம், பொறாமை, சென்சிடிவ்னஸ், அமைதியான வன்மம், குரூரம், அவளின் தேடல், தியாகம், என்று எல்லாவற்றையும் பேசுகிறார். 

மனித மனத்தின் சிக்கல்கள் பல எழுத்தாளர்கள் எழுதியது தான் எனும்போதும் சொல்லப்படும் விதத்தில் தான் அதற்கான முக்கியத்துவம் கிடைக்க பெறுகிறது. இவரது காலகட்டத்தில் இருந்த பெண் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட தளத்துக்குள் தன்னை பொதித்துகொள்ள இவர் எல்லா இடங்களிலும் பயணித்திருக்கிறார். அறிவான பெண்ணின் தேடலை சொல்லும் “நான்காம் ஆசிரமம்” ஆகட்டும், பெண்ணின் அமைதியான வன்மத்தை சொல்லும் “ பெருமையின் முடிவில் கதை, உரிமையை நிலைநாட்ட குழந்தையின் மீது தாய்மை என்ற பெயரில் காட்டும் ஆதிக்கத்தை சொல்லும் “உரிமைப் பொருள்” கதை, விடலைப்பருவத்தில் ஆண் கொடுத்த காதல் கடிதத்தை வைத்து கொண்டு விழிக்கும் விடலை பருவத்து பெண்ணின் உணர்வுகளை சொல்லும் “கடிதம் வந்தது” கதை, விவரம் தெரியா வயதில் அம்மாவின் மறுமணத்தை மறுத்த மகன் அம்மாவின் மரணப்படுக்கையில் அந்த அம்மாவை நேசித்த மனிதரை தேடி கண்டடைய முயற்சிப்பதும் அந்த மனிதர் அம்மாவை மரண தருவாயில் சந்திக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கான நேரத்தை கொடுத்து விலகி நின்று தவறை நினைத்து புழுங்கும் மகனின் உணர்வுகளை “ இறுக மூடிய கதைகள்” கதையில் என்று ஒவ்வொரு கதையில் இவர் தொட்டிருக்கும் ஆழ்மன உணர்வுகள் அசாத்தியமானது. 

இந்த அறுபத்திமூன்று கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தான் கொஞ்சம் வலிய திணிக்கப்பட்ட உணர்வுகளை சொல்வதாகப்படுகிறது.. மற்ற எல்லாமே படித்து முடித்தவுடன் நம் அகத்தை கூறு போட்டு பார்ப்பது போன்ற உணர்வை தரும். 

சில கதைகளில் சொல்லப்பட்ட உணர்வுகளை அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பகிர்கிறேன்.

“இரண்டின் இடையில்” என்ற சிறுகதையில் விடலை பருவத்தில் அடி எடுத்து வைக்கும் பதினாலு வயது பையனின் மனதில் இருக்கும் குழப்பம் உணர்வுகள், ஆசிரியை மீது அவனுக்கு வரும் விடலைக் காதல் அது உடையும் போது அவனின் கண்ணீர் அதை எதிர்கொள்ளும் அவன் தாயின் முதிர்ந்த மனநிலை என்று ஒரு ஆண் பிள்ளையின் விடலை பருவத்து உணர்வுகளை ஆசிரியர் சொல்லி இருக்கும் விதம் அழகாக இருக்கும்.
“அன்னையின் முகத்துப் புன்னகை” என்ற கதையில் இளவயதில் கைக்குழந்தையுடன் விதவையாகும் அவனை சுற்றி தன் உலகத்தை சிருஷ்டித்து கொள்ளும் தாய் மகன் வளர்ந்து திருமண பருவம் வர அவள் அடையும் பதட்டம் ஆனால் அந்த பதட்டத்தை வெளியே காட்டாமல் போடும் வேஷம், என்று அந்த தாயின் உணர்வுகளின் சுயநலத்தை அது தெரியாமல் நாடக மேடை வசனம் போல தனக்கு மகனின் திருமணத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டுவது போல நடிக்கும் அவளின் உணர்வை அவள் மனதை படிக்கும் மகன் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும் இறுதியில் கதையின் முடிவை வாசகரின் ஊகத்துக்கு விட்டு முடித்திருக்கும் விதம் எழுத்தின் தனித்தன்மையை காட்டுகிறது. இக்கதையில் பெண்ணின் தாய்மைக்குள் ஒளிந்திருக்கும் சுயநல உணர்வை இது போன்ற வேறு சில கதைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

“மன்னிப்புக்காக” எனற கதையில் தன் மனைவி இறந்துவிட அவளின் சடலத்தை அணைத்து கதற துடிக்கும் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்த சமூகம் சடங்குகள் என்ற பெயரில் அவன் மகனையும் ஏனைய உறவுகளையும் வைத்து செய்ய தன மனைவியின் பிரேதத்தை தொட முடியாமல் தவிக்கும் அவன் இறுதியல் எதற்க்காக மன்னிப்பு கேட்க நினைத்தானோ அதே இடத்திற்கு சென்று கதறி அழும் கதையில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுகள் இந்த சமூகம் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் எப்படி மனிதனின் ஆழ மன தவிப்பை புறக்கணிக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார். 

நான்காம் ஆசிரமம் கதை எழுபதுகளில் ஒரு பெண் படைப்பாளியால் துணிச்சலுடன் சொல்லப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியம். ஏன் இந்த படைப்பாளி அதிகம் பேரால் அறியப்படாமல் போனார் என்பது அதைவிட ஆச்சரியம். உணர்ச்சியும் கனவும் உயிர்சிலிர்ப்பும் அரும்பிய வயதில் மனோகரன் என்பவனை மணக்கும் சங்கரி அவன் இறப்புக்கு பின் மூர்த்தி என்பவரை மணந்து இயல்பான தாம்பத்யம் நடத்தி குழந்தைகளையும் பெறுகிறாள். உடலாய் பெண்ணாய் தாயாய் அவள் பூரனம்டைந்தாலும் உடல் தாண்டி அறிவும சிந்தனையும் உள்விரிவும் அலைகழிக்க மூர்த்தியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு அறிவின் சுவையை காட்டும் வயதான ப்ரொபசர் ஒருவரை மணக்கிறாள். அறிவையும் கடந்து “தான்” என்கிற தனிமையில் மட்டுமே நிறைவடைகிற முதிர்ச்சி வந்த பின் ப்ரோபசரிடமிருந்து மண விலக்கு கோருகிறாள். ஆனால் அவரால் அவளை விட்டு விலக முடியாமல் விவாகரத்துக்கு மறுக்க தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த கதையில் தனித்துவமான ஒரு பெண்ணின் உணர்வை இரு ஆண்களின் பார்வையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

“பெருமையின் முடிவில்” என்ற கதையில் ஒரு பெண்ணின் அமைதியான வன்மத்தை ஆசிரியர் சொல்லியிருப்பார். திருமணமாகி அவள் பிறந்த வீட்டுடன் சண்டை வர அவள் பிறந்த வீட்டுடன் இருக்கும் உறவை முற்றிலும் துண்டித்தால் தான் தன்னுடன் வாழ இயலும் என கணவன் கட்டளையிடுகிறான். ஆறுவயது தம்பி உட்பட தங்கை பிறந்த வீட்டை முற்றிலும் துறந்து வரும் அவள் அதன் பின் பிறந்த வீட்டை பற்றி எந்த சந்தர்பத்திலும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கிறாள். வருடங்கள் உருண்டோட தம்பி இளைஞனாகிறான். அவள் கணவரின் நண்பர் தம் மகளுக்கு திருமணம் முடிக்க முயற்சிக்கும்போது வரும் மாப்பிள்ளை ஜாதகத்தில் அவள் தம்பியின் ஜாதகமும் அவன் ராணுவத்தில் பணி புரிவதும் தெரிகிறது. சில நாட்களில் அவன் ஒரு போரில் இறந்துவிடுவதும் அந்த நண்பர் மூலம் தெரியவர அவள் அப்போது கூட கணவரிடம் கதறி அழாமல் தனியாக அழுதுவிட்டு கண்ணீரை துடைத்து கொண்டு கணவரிடம் இயல்பாக பேசும் போது தான் கணவருக்கு அவள் முழுமையில் அவன் இல்லை மனதளவில் எப்போதோ ஒதுக்கிவிட்டாள் என்று புரிந்து அதிர்ச்சியில் உறைகிறார். அவரின் உணர்வுகளை பெண்ணின் அமைதியான வன்மத்தை இதைவிட சிறப்பாக யாராவது எழுதியிருக்க முடியுமா தெரியவில்லை..

“மேதையின் மனைவி” கதையும் ஒரு புகழ் பெற்ற சங்கீத வித்வானின் மறைவுக்கு பின் அவரை பற்றிய விஷயங்களை கேட்க வரும் பத்திரிகை நிருபர்களிடம் முகம் கொடுத்து பேச மறுக்கும் அவரின் மனைவி அதன் பின் தனிமையில் கணவரின் புகைப்படத்தை வெறித்து பார்த்து உலகே கொண்டாடும் அவரின் மேல் இருக்கும் வன்மத்தையும் அது எவ்வாறு தணிகிறது என்பதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறார். 

“வீடு திரும்பினாள்” கதையில் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு வரும் ஒரு மத்திம வயது பெண்ணை அவள் குழந்தைகள் உட்பட எப்படி எதிர்கொள்கிறது என்பதும் அவள் எப்படி புரிந்துகொள்ளபடுகிறாள் என்பதும் சொல்லப்பட்டிருக்கும்..

பெரும்பாலான கதைகள் வித்தியாசமான கோணத்தில் உணர்வுகளை பேரன்பை, மனிதர்களின் தனித்தன்மையை பேசுகின்றன. வார்த்தை ஜாலங்களில் வர்ணிப்புகளில் நம்மை கட்டி போடவில்லை ஆனால் எளிமையில் நேர்மையில் எல்லாரும் வாசிக்க கூடிய சாதாரண நடையில் எழுதியிருக்கும் சூடாமணி அவர்களின் கதை தொகுப்பு வாசிப்பின்பத்தை தாண்டி பேரன்பின் ஒரு பகுதியை நம்மில் இருந்து பீறிட்டு எழச்  செய்கிறது பல கதைகளில்....








Tuesday, 3 November 2015

பேரன்பு

காற்றில் கரையும் கற்பூரமாய்
காணாமல் போகிறாய்
அழுது உருகி ஈரம் வற்றி
பாலையாய் வெடித்து
ஏகாந்தம் நோக்கி
வெறித்து கிடக்க
எதிர்பாரா தருணமொன்றில் பெருமழையென பொழிந்த
உன் அன்பில்
குழைந்த கணத்தில்
விரிசல்கள் சுவடற்று மறைய
குளிர்ந்து முளைக்க தொடங்குகிறது
பேரன்பின் விதை

இது தான் வாழ்கை - பஞ்சாபி கதையின் மொழிபெயர்ப்பு



“இதுதான் நம் வாழ்க்கை” தலீப் கௌர் டிவானா எழுதிய பஞ்சாபி நாவலின் மொழிபெயர்ப்பு. ”நேஷனல் புக் ட்ரஸ்ட்” வெளியீடு.எனக்கு மொழிபெயர்ப்பு நாவல்கள் மேல் தனி மோகமுண்டு. மொழி பெயர்ப்பின் மூலம் முற்றலும் நமக்கு தெரியாத மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம். மொழிப்பெயர்ப்பு உணர்வை துல்லியமாக பிரதிபலிக்காது என்ற கூற்று இருக்கும்போதும் வேறு ஒரு மொழி இடம் சார்ந்த வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் மொழிப்பெயர்ப்பின் மீது ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்கிறது.

பானோ என்கிற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் கங்கையில் தற்கொலைக்கு முயல அவளை நாராயணன் என்கிறவன் காப்பாற்றி அவன் வீட்டுக்கு கூட்டி வருவதில் கதை தொடங்குகிறது. பானோ ஏற்கனவே திருமணமானவள் கணவர் இறந்துவிட கணவரின் தம்பிகள் அவளை அடைய முயற்சிக்க அது பிடிக்காமல் அப்பா வீட்டுக்கு வருகிறாள். ஒரே தம்பி நோய வாய்ப்பட்டு கிடக்க அவனுக்கு வைத்தியம் செய்வதில் அவர் தந்தை தன்னிடம் இருக்கும் எருது, நிலம் எல்லாம் வைத்தியத்துக்காக செலவு செய்தும் அவன் பிழைக்காமல் இறந்து விடுகிறான். 

அந்த ஊரில் பெண்களை விற்கும் பழக்கம் இருக்கிறது. பானோவின் தந்தை அவளை விற்றுவிட முனைய அப்போது தான் கங்கையில் உயிரை மாயத்து கொள்ள முயற்சிக்க காப்பாற்றபடுகிறாள் நாராயணனால். நாராயணனும் குடிகாரம் ஹூக்கா, மது என்று போதையில் கிடப்பவன். பெண்கள் யாருமில்லாத அந்த வீட்டுக்கு வரும் பானோ அந்த வீட்டை சீராக்குகிறாள். இவன் குடிகாரன் என்பதால் குத்தகைக்காரர்கள் சரியாக கணக்கு தராமல் ஏமாற்ற இவள் எல்லாம் சீராக்குகிறாள் ஆனாலும் நாராயணனிடம் மனம் ஒட்டாமல் அவள் முன்னாள் கணவன் சரவணன் நினைவிலேயே இருக்கிறாள். அவனுக்கு மனைவியாக இல்லாமல் ஆனால் அந்த வீட்டில் ஒருத்தியாக ஒன்றுகிறாள். நாராயணன் எவ்வளவு முயற்சித்தும் அவனிடம் ஒட்டாமல் இருக்கிறாள்.

நாராயணின் குடிகார நண்பர்கள் ஆசை காட்டி அவளை இழுக்க முயற்சிக்க அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்கிறாள். அதன் பின் குருத்துவாரிலேயே பலியாக பூசை பஜனை என்று இருக்க அந்த பூசாரியும் ஒரு நாள் அவளை அடைய முயற்சிக்க அங்கு போவதையும் குறைத்து கொள்கிறாள். இதற்கிடையில் அவள் கணவர் வாரிசுக்காக வேறு திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறான்.
திக்பிரமை பிடித்தாற்போல பானோ வீட்டு வேலைகள் செய்ய மயக்கமுற்று கீழே விழுந்து மண்டை உடைகிறது. மருத்துவமனையில் ஒன்றரை மாதம் போல தங்கி சிகிச்சை பெறுகிறாள். தினமும் சாப்பாடு கொண்டு வந்து தருகிறான் நாராயணன். சிகிச்சை முடிந்து வீடு வரும் போது வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்திருப்பது தெரிகிறது. மனம் கனக்கிறது எதுவும் செய்ய இயலா கையாலாகாத்தனத்துடன் தன படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றி கொள்கிறாள்.

குழந்தை பிறக்கிறது. இவள் இளைய தாரத்தின் ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாகிறாள். கடைசியில் நாராயணன் பாவனாவை வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான். வாங்குபவன் வரும் போது உணர்ச்சியற்று நடை பிணமாக அவன் பின் செல்கிறாள். 

இது கதை மட்டுமே இதில் எழுத படிக்க தெரியாமல் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமே தெரிந்த பஞ்சாப் கிராமத்து பெண்களின் நிலை கண் முன் விரிகிறது. ஏறக்குறைய அநேக இந்திய பெண்களின் நிலை சற்று முன்பின்னாக இப்படி தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த நாவலில் ஸிந்தியாக வரும் பக்கத்து வீட்டு பெண்ணும் பாவனாவும் உரையாடும் இடங்களில் எல்லாம் பெண்களின் அறியாமையும், ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களின் நிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம். நாராயணன் குடித்து வந்து பாவனாவை அடிக்குமிடம் அனாதையாக போக்கிடம் இல்லாத பாவனா கங்கையிலேயே மூழ்கி செத்திருக்கலாம் உயிரோடு இருப்பதனால் என்ன சுகம் என்ற ரீதியில் சிந்தனை ஓடவிட பெண்களின் நிலை மனதை அழுத்துகிறது.

நாராயணன் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லை பாவனாவிடம் அவன் நன்றாக தான் பேசுகிறான் அன்பாகவும் இருக்கிறான் என்கிற போதிலும் அவளை பற்றி அவன் குடிகார நண்பன் சொன்ன பேச்சை கேட்டு அடிக்கும்போதும் பின் தவறு உணர்ந்து அவளுக்கு ஒத்தடம் கொடுப்பதும் அவன் திருமணம் செய்து கொள்வதும் புதிதாக வந்தவள் கொடுமைப்படுத்த அவளை கண்டித்து பாவனாவிடம் இரக்கம் காட்டினாலும் கையாலாகாதனத்துடன் அவளை வேறு ஒருவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் அங்கு ஆண்கள் எல்லாம் இப்படி தான் இதெல்லாம் சகஜம் தான் என்று ஆசிரியர் சொல்லி இருப்பதன் மூலம் சராசரி இந்திய ஆணின் மனநிலையை நாராயணன் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

Sunday, 1 November 2015

பைத்திய ருசி - கணேசகுமாரன் புத்தகம் பற்றி ஒரு பார்வை



“பைத்திய ருசி” கணேசகுமாரன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. தக்கை வெளியீடு. அவரின் பதினைந்து சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எல்லா கதைகளும் மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சத்தை நூலிழை போலும், மெழுகுவர்த்தி போலும், சில இடங்களில் சூரிய வெளிச்சத்துக்கு ஒப்பான வெளிச்சத்தையும் பாய்ச்சி இருக்கிறார் எழுத்தாளர். சில இருண்ட பக்கங்களை திடுக்கிடலுடன் தான் கடக்க முடிகிறது.

"பாதரச பூனைகளின் நடனம்" அணு உலை பற்றிய உண்மையை வரலாற்று உண்மையுடன் புனைய பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் உண்மை அடிவயிற்றில் அச்சத்தை உறைய வைக்கிறது." இசை " கதையில் பீத்தோவன் இசைக்கு பின் இருக்கும் கதையில் இலக்கியம் பீத்தோவன் இசை போல அவ்வளவு அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. 

எத்தனை விதமான உணர்வு சிக்கல்களில் மனிதன் அலைக்கழிக்கப்படுகிறான். அதில் சிலவற்றை ஆசிரியர் தம் எழுத்தின் வன்மையால் வாசிப்பவர் மனதில் ஆழ பதிய வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஒன்று சந்திரன் பானுமதி மற்றும் வில்சன் கதையில் வரும் ஓரினச்சேர்க்கை மனிதனின் உணர்வுகளை எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.

"பைத்திய ருசி" கதை (!) யில், (கதை அல்ல வாசிக்கும் போது உணர முடியும்) இருந்து மீண்டு வர எனக்கு நீண்ட நேரம் பிடித்தது.

"அக்காக்களின் கதை" எளிய நடையில் ஒரு மத்திய தர குடும்பத்தில் வளரு"ம் பெண்களுடன் வளரும் தம்பியின் பார்வையில் மிக யதார்த்த நடையில் யதார்த்தங்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. இக்கதை நம்மை சுற்றி இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அல்லது நாம் கடந்து கொண்டிருக்கும் நண்பர்களின் குடும்பங்களின் அல்லது நம் குடும்பங்களில் கூட நடக்கும் கதை தான். சொல்லப்பட்டிருக்கும் விதம் கொடுக்கும் உணர்வு நன்றாக இருக்கிறது.

தந்தூரி கசானா 400 ரூபாய் கதையில் பிழைப்புக்காக இலட்சியத்துடன் சென்னை வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் இளைஞனின் பசி பசியுடன் மயங்கி விழும் அவனின் நினைவில் தேடிச்சோறு தினம் தின்று பாடலுடன் மயங்கி விழுவதாக அந்த கதையை முடித்திருக்கும் விதம் பசியின் வலியை உணர முடிந்தது.

"கொம்பன்" கதை மனிதனின் பேராசையை வீரம் என்ற பெயரில் அவன் கொன்று குவிக்கும் பிற உயிரை இயற்கையை சூறையாடி மிருகங்களை நிலை குலைய செய்யும் மனிதனின் சுயநலத்தை வாசிக்க குருதி உயிர்களை நேசிக்கும் எல்லார் இதயத்திலும் வரும்.

"அழுகிய புத்தனிடம் சொன்ன கதை" காலம்காலமாக மனிதனின் மனதில் உறைந்திருக்கும் குரூரம் எதேச்சையாக பார்க்கும் ஒரு சின்ன பெண்ணின் மனப்பிறழ்வை சொல்கிறது.

"அண்ணகர் கதை" எனக்கு புரிந்துகொள்ள சற்று கடினமாக இருந்தது." மார்ச் 13" என்று சில கதைகளில் முழுக்க முழுக்க இலக்கிய ருசியே இருப்பதால் கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. எல்லா கதையும் அக்காக்களின் கதை போல எளிமையாக இருக்க வேண்டுமென்று இல்லை ஆனால் ""தேவைதைக்கு வாழ்க்கைப்பட்டவன்" போன்று எளிதில் புரிந்து கொள்ளுமாறு இருந்திருக்கலாமே என்று தோன்றியது.

Saturday, 31 October 2015

சொல்ல மறந்த கதைகள் - புத்தகம் ஒரு பார்வை.

முருகபூபதியின் “சொல்ல மறந்த கதைகள்” புத்தகம் மலைகள் பதிப்பக வெளியீடு. இது கதை அல்ல கட்டுரை தொகுப்பு. இப்புத்தகத்தை விமர்சிக்க இயலாது. இப்புத்தகம் நெடுகிலும் போருக்கு முந்திய இலங்கை அரசியலையும், போர் நடந்த காலகட்டங்களில் இருந்த அரசியலையும் அவற்றுடன் பத்திரிகைகள் நிலையையும் கூடவே இலக்கிய அன்பர்களையும் இயக்கங்களை சார்ந்தவரையும் ஆசிரியருக்கும் அவர்களுக்குமிடையேயான நிகழ்வுகள் அத்துடன் உண்மை சம்பவங்கள் எல்லாம் சேர்த்து தொகுத்திருக்கிறார்.

கட்டுரை தொகுப்பு முழுதும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை முறை, எழுபதுகளில் ஆரம்பித்து அவர்களது நிலை, இலங்கை கலாச்சாரம், அம்மக்களின் வட்டார வழக்கு, என்று ஒரு அழகிய தமிழை புத்தகம் நெடுகிலும் உணர முடிந்தது.

பிழிய பிழிய அழ வைக்க முயற்சிக்காமல் போரின் வலியை நடுநிலையோடு சொல்லி இருக்கிறார். இப்புத்தகம் உண்மையில் எனக்கு இலங்கை பிரச்சனையை முற்றிலும் நான் நினைத்திருந்த கோணத்தில் இருந்து வேறு கோணத்தில் பார்க்க உதவியது. போர் நிறுத்தி இருந்த சமாதான கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் இயக்க தலைவர்கள் சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்டது ஆகியவற்றை சம்பவங்களாக தொகுத்து அதற்கு பின் இருந்த மனிதம் பற்றி ஆசிரியர் சொல்லியது போரை தாண்டியும் மனிதம் இருந்த மனிதர்களை உணர வைத்துள்ளது.

வியட்நாம் தேவதை கிம்புக்குடன் (வியட்நாம் மீது அமெரிக்க படை குண்டு வீசிய போது தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடி வந்து பதிமூன்று வயது சிறுமி) புத்தகத்தை முடித்திருகிறார். கிம்புக்கின் மூலம் ஆதிக்க நாடுகள் வளர் இளம் நாடுகளில் தொடுக்கும் போர்கள் மூலம் பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள் பற்றியும் கிம்புக்கின் சந்திப்பு பற்றியும் அவரின் உரையாடல் குறித்தும் எழுதிய கடைசி அத்தியாயத்தில் கொஞ்சம் கண் கலங்கி தான் போனது.

Wednesday, 21 October 2015

"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" புத்தகம் ஒரு பார்வை..



"ரெண்டாம் டேபிளுக்கு காரப்பொரி" வா.மு.கோமு எழுதியது. பெரும்பாலும் நான் எழுத்தாளரை பற்றி யார் சிலாகித்தாலும் விமர்சித்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் எழுத்து எனக்கு வாசிப்பின்பத்தை தருகிறதா.. உண்மைக்கு பக்கத்தில் இருக்கிறதா. புனைவாக இருக்கும்பட்சத்தில் எழுத்து நடை என்னை ஈர்க்கிறதா என்று தான் பார்ப்பேன். வா.மு. அவர்களை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் தான் வாசித்தேன். புத்தகம் பிடித்திருக்கிறது என்று ஒரு பதிவு எழுதிய பின் தான் அவர் எழுத்து பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் இருப்பது தெரிய வந்தது.. ஆனால் என்ன இந்த நாவல் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை இன்னும் சொல்ல போனால் ஒரு பெண்ணாக நான் அவ்வளவு எளிதில் பயணிக்க முடியாத ஒரு உலகத்துக்கு அவர் எழுத்தில் பயணிக்க முடிந்தது
..
சிம்ரன் சரத்குமார் நடித்திருக்கும் அரசு படத்தில் ஆரம்பகாட்சியில் ஒரு குடிக்காரர் தெருவில் கோடு கிழித்து ரகளை செய்வார். எல்லாரும் பயந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திவிட சிம்ரனும் சாத்திவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பார். இது போன்ற ஒரு நிகழ்வு என் சிறுவயதில் நடந்திருக்கிறது. நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன். புரியாத அந்த வயதில் சிரிப்பாக வேடிக்கையாக இருக்கும். ஏன் குடிப்பவர்கள் எல்லாம் விநோதமாக நடக்கிறார்கள் பேசுகிறார்கள் என்று  நிறைய விடை தெரியா கேள்விகள். பக்கத்தில் சென்று பார்க்கும் ஆர்வமிருந்தாலும் பயமிருக்கும். நம்பர் பெயரிட்ட கள்ளுக்கடைகளை கடக்கும் போது பயத்துடன் பார்த்து கடப்போம்..


ஆசிரியரின் இந்த கதை அத்தகைய சாக்னா கடை எனப்படும் பாரில் காலை முதல் இரவு வரை நடபபவை, அந்த கடையில் குடிக்க வருபவர்கள், அவர்களுக்கு பரிமாறும் இரண்டு விடலைப்பையன்கள், ஓவ்வொரு டேபிளில் அமர்பவர்கள், ஊருக்கு புதிதாக வருபவர்கள், வாடிக்கையாளர்கள், எல்லா வயதிலும் ஆண்கள் அவர்கள் பிரச்சனைகள் என்று ஒரு லோக்கல் பாரை அவர்கள் வாழ்வை அருகில் இருந்து பார்த்த உணர்வை ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார்.

அவரின் எழுத்தில் மத்திய வர்க்க, அதற்கும் கீழ் இருக்கும் கொங்கு மக்களின் எளிய வாழ்க்கை முறையும் அவர்களின் யதார்த்த பேச்சையும் ஆசிரியர் அழகாக பதிந்திருக்கிறார். முதல் அத்தியாயம் தான் அதீத பாலியல் தூக்கலாக இருந்தது. இப்படி தான் இருக்கும்போல என்று நினைத்து கொண்டு இருக்க அது கனவு என்று சொல்லி அடுத்த அத்தியாயத்திற்கு நகர அடுத்த அத்தியாயத்திலிருந்து ய்தார்த்ததுக்குள் ஆசிரியர் நுழைந்து விடுகிறார்.
ஒவ்வொரு டேபிளில் வருபவர்கள் கதைகள் பெரும்பாலான கதையில் வருபவர்களுக்கு பெயர்கள் இல்லை. ஆனால் அது ஒரு குறையாக தெரியாத அளவு  சம்பவங்களை கதைகளாக கோர்த்து  கொங்கு நடையில் ஆசிரியர் அழகாக நகர்த்தி செல்கிறார்.

பெண்கள் நுழைய முடியா இடத்துக்குள் அங்கு வருபவர்களின் பிரச்சனைக்குள் பெண்ணின் கதைகளை ஆண்களின் பார்வையில் சொல்கிறார். அதில் உண்மை இருக்க கூடும் புனைவாகவும் இருக்கலாம் ஆனால் உண்மைக்கு பக்கத்தில் எடுத்து சென்றிருப்பதை ஏற்க தான் வேண்டி இருக்கிறது.. சம்பவங்களை கதையாக கோர்த்திருக்கும் விதம் அதையும் தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு புரியும் எளிய நடையில் பாலியலிலும் அந்த உணர்வை மங்க செய்யும் ஹாஸ்யத்தை அதிகம் சேர்த்து வாசகருக்கு மனதிலும் இதழிலும் ஒரு மென் புன்னகையை எழுத்தில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்....