Monday, 15 February 2016

துரோகம்

நட்பின் துரோகம்
காதலின் துரோகத்தை விட
ருசியானது.
ருசிக்காமல் இருக்காதீர்கள்.
காதலின் துரோகம்
உயிர் பிரியும் வலியைவிட
வீரியமானது.
அனுபவிக்காது இருந்துவிடாதீர்கள்.
துரோகத்தின் ருசியையும்
உயிர் பிரிதலை விட வீரியமான
வலியையும்
சந்தித்த பின் கிட்டும்
ஏகாந்தம் ஆனந்தம்!!
பின் வாழ்தல் எளிது!
அனுபவமில்லாதோர்
வாழவே தொடங்கவில்லை
மெல்ல வரட்டும்
நான் தனித்து பதிக்கும் தடத்தினூடாக...

கட்டுண்ட காதல்

ஒற்றை ரோஜாவுக்கு ஏங்கியதில்லை
அழகின் சிகரமென்ற பொய்யுக்கும் மயங்கியதில்லை
அள்ளி அள்ளி வழங்கிய பரிசுகளில் பூரித்ததில்லை
தேகம் சிலிர்க்க வைத்த தீண்டலில்
கிறங்கி கரைந்துவிடவில்லை
வெளியே சொல்லமுடியா
பயத்தில் அடிவயிறு கலங்கி
பதட்டத்தில் என் கைகளுடன் குரலும் நடுங்க தட்டு தடுமாறி
மருண்ட பொழுதினில்
பேசிய ஆறுதல் வார்த்தைகளில்
கட்டுண்டு கிடக்கிறது
என் காதல்.,.

Friday, 12 February 2016

சோஃபியின் உலகம் - புத்தகம் பற்றி ஒரு பார்வை

“சோஃபியின் உலகம்” யொஸ்டைன் கார்டேர் நார்வேஜிய மொழியில் எழுதியது, அதை Paulettter Moller  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஆர். சிவக்குமார் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ளும் மிக எளிமையான அதே சமயம் அழகிய தெளிவான  நடையில் மொழிபெயர்த்திருக்கும் விதம் ஒரு தெள்ளிய நீரோட்டத்தில் பயணித்த அனுபவத்தை தருகிறது.

தத்துவமும் உளவியலும் உண்மைக்கு பக்கத்தில் கொண்டு போய் நம்மை சேர்ப்பதால் அதன் மீது மிகப்பெரும் ஈர்ப்பு உண்டு. கடவுள் தேடல் குறித்து குழப்பமான மனநிலை உள்ளவர்களும் அதில் பயணிக்க நினைப்பவர்களையும், நான் என்ற தேடலில் உள்ள தன்முனைப்பு மெல்ல மெல்ல நம்மை ஆக்கிரமித்து அதைத் தேடி நம் பயணத்தை நகர்த்துகிறது. குறிக்கோளற்ற பயணமாக செல்லும் வாழ்க்கையில் இந்த தேடல் தான் உயிர்ப்புடன்  வைக்கிறது.

பதினைந்து வயது பெண்ணான சோஃபிக்கு தத்துவ பாடம் கடிதத்தில் வருகிறது. புனைவாக ஆரம்பிக்கும் கதை தத்துவ பாடம் வாசிக்க ஆரம்பிக்க நேராக யதார்த்தத்துக்குள் நுழைகிறது. அப்பா வெளிநாட்டில் இருக்க, அம்மாவுடன் வசித்து வரும் சோஃபி கடிதங்கள் முலம் மெல்ல மெல்ல தத்துவ பாடம் கற்கிறாள். பாடம் ஆதி மனிதனுக்கு இருந்த நம்பிக்கைகள் அது மெல்ல மெல்ல கடவுள் என்ற உருவத்துக்குள் போனது, அதன் பின் தத்துவவியலார்கள் தோன்ற அவர்களின் சிந்தனைகள் என்று மெல்ல நகர்கிறது. ஆனால் அதிகம் மேற்கித்திய தத்துவத்தையே பேசுகிறது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கீழை நாடுகளில் நாகரீக உச்சத்தில் இருந்ததாக சொல்லும் ஆசிரியர், கீழை நாட்டு தத்துவியலாளர்களை பற்றி அவ்வளவாக சொல்லவில்லை. அப்படி அவர்களையும் சேர்த்திருந்தால் இன்னும் முழுமையடைந்திருக்கும்.

புராணக்கதைகள், இயற்கை தத்துவவாதிகள், கிரேக்கர்களில் – மிலீட்டஸ், இத்தாலியின் – பர்மெனிட்டீஸ், ஹெரக்லீய்ட்டஸ் என்ற தத்துவவாதிகளிக்கிடையே அடிப்படை கருத்தில் இருந்த மிகப்பெரிய முரணில் ஆரம்பிக்கும் தத்துவ முரண் புத்தகம் நெடுகிலும் கருத்து முரண்களையும் ஒருவரின் கருத்திலிருந்து மற்றவர் எப்படி முரண்படுகிறார் என்பதை பேசிகிறது. முரண்பட காரணம் எல்லாம் வாசிக்க தொடங்க நமது சிந்தனையோட்டத்தில் மிகப்பெரும் மாற்றமும் தத்துவியலார்களின் கருத்தில் ஏதோ ஒன்றோடு இயைந்தோ அல்லது முரண்பட்டோ, மறுத்தோ புத்தகம் முழுதும் பயணிக்க்கிறோம். எம்பெடொக்ளீஸ் மூலம் முதன் முதலாக தத்துவத்துக்குள் விஞ்ஞானத்தின் முதல் புள்ளி நுழைந்திருப்பதும் அதன் பின் தத்துவம் விஞ்ஞானத்தோடு சேர்ந்து பின்னி பிணைந்தும், விஞ்ஞானத்திலிருந்து விலகி மெய்மையிலும், உளவியலிலும்  என்று தத்துவவியலார்களுடன் இன்று வரை தொடர்கிறது.
கி,முவில் ஆரம்பித்து, சாக்ரடீஸ், பிளேட்டோ , அரிஸ்டாட்டில் என்று வரிசையாக தத்துவவியலார்களின் கருத்துகள் தத்துவத்துக்குள் மதம் எப்படி மெல்ல மெல்ல நுழைகிறது அதன் பின் இறையுணர்வு கோட்பாடுகள், இந்தோ ஐரோப்பிய (இந்து புத்த மதமும் இந்த இந்தோ ஐரோப்பியத்துக்குள் அடக்கம்) தத்துவவியலார்கள் (இவர்களை பற்றி விரிவான தகவல்கள் இல்லை) என்று விரிகிறது. பிரபஞ்ச ஆன்மாவோடு ஒன்றிணையும் அனுபவமே இறையுணர்வு அனுபவம் ஆனால் கடவுளுக்கும் படைப்புக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகப் பல மதங்கள் சொல்கின்றது.  கீழ்திசை (இந்து, புத்த) மறுபிறப்பின் சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவது தான் நோக்கம் என்கிறது. ஆனால் மேற்குலக மதங்கள் ( யூதம், இஸ்லாம், கிருஸ்து). பாவத்திலிருந்தும், பழியிலிருந்தும், மீட்கப்படுவது தான் என்கிறது.
காலங்களாக பிரித்து ஆசிரியர் தொகுத்திருப்பது இன்னும் எளிதாக இருக்கிறது வகைபபடுத்த. கிமுவில் ஆரம்பித்த கிரேக்க காலம் என்று சொல்லும் ஆசிரியர் அதன் பின் இடைக்காலம் அதில் கிருஸ்து பிறப்புக்கு முன் பின் ரோமானியக்காலங்கள், அப்போது தோன்றிய தத்துவவியாலார்கள்  பதினான்காம் நூற்றாண்டில் ஆரம்பித்த  மறுமலர்ச்சிக்காலம் அப்போது இருந்த தத்தவவியலார்கள் பரோக்கலை (ஒழுங்கு முறை இன்மை இதன் தன்மை) அப்போது ஆரம்பித்த பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதம் வரலாறு முழுதும் தொடர்கிறது.

17ஆம் நூற்றாண்டின் – தெய்கார்த் & ஸ்பினோஸா என்ற இரு தத்துவவாதிகளின் கருத்துகளும் தவிர்க்கவே முடியாதது.

தெய்கார்த்: 

தத்துவம் எளிதானதிலிருந்து சிக்கலானதற்கு போக வேண்டும். அப்போது தான் புதிய நுண்ணறிவை உருவாக்குவது சாத்தியம்.

நம்முடைய புலன்களால் புரிந்து கொள்வதை விட பகுத்தறிவால் புரிந்து கொள்வது அதிக நிஜத்தன்மை கொண்டது.

கடவுளை குறித்த எண்ணம் உள்ளார்ந்த ஒன்று.

இருத்தல் என்பது இல்லாமல் ஒரு முழு நிறைவு பெற்ற பொருள் இருக்கவே முடியாது.

ஸ்பினோஸா:

இயற்கையின் முழு வாழ்க்கையில் நீ ஒரு நுண்ணிய பகுதியை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். ஒரு பிரம்மாண்ட முழுமையின் ஒரு பகுதிதான் நீ.

நான் நம்முடைய உணர்வுகளிலிருந்தும், மிகு உணர்ச்சிகளிலுருந்தும் நம்மை விடுவித்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் மன நிறைவடைந்து மகிழ்ச்சியாக இருப்போம்.

உன்னுடைய கைப்பெருவிரலை எப்படி வேண்டுமானாலும் அசைப்பதற்கு உனக்கு உரிமையுண்டு. ஆனால் உன்னுடைய கை விரல் அதனுடைய இயல்புப்படிதான் அசையும். அதுபோல இருப்பின் அமைப்பாக்கத்தில் உன்னுடைய இடம் உனக்கு இருக்கிறது. ஆனால் கடவுளின் உடலில் நீ ஒரு விரல் தான்.
அரசியல் சூழல்கள் நம்முடைய சொந்த வளர்ச்சியை பாதிக்கலாம். புறச் சூழல்கள் நம்மைக் கட்டுபடுத்தலாம். நம்முடைய உள்ளார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வதற்குரிய சுதந்திரம் இருந்தால் தான் நம்மால் சுதந்திரமான உயிருருக்களாக வாழ முடியும்.

இவர்கள் இருவரின் தத்துவங்களும் முற்றிலும் புதிய கோணத்தையும் புதிய தேடலையும் விதைக்கிறது.

 அதன் பின் வந்த ஜான் லாக் ஆண் பெண்  என்ற இரண்டு பால்களுக்குமிடையே சமத்துவம் வேண்டும், பெண்களின் மீதான ஆண்களின் மேலாதிக்கம் மனிதன் உண்டாக்கியது அது மாற்றப்பட கூடியது என்றும் லாக் நம்பினார்.

ஜான் ஸ்டூவர்ட் மில் அவரால் மிகப்பெரிய அளவில் தாக்கம் பெற்றவர். ஆண் பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தில் அடுத்த முக்கிய பங்கை வகித்தவர் மில்.  பதினெட்டாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் அறிவொளிக் காலத்தில் முழு வடிவம் பெற்ற பல முற்போக்கான கருத்துகளுக்கு லாக் ஒரு முன்னோடி.

ஹ்யூம், பார்க்கிலி மற்றும் காண்ட் என்று ஐரோப்பிய தத்துவவியலார்கள் அதன் பின் அறிவொளிக்காலத்தில் தத்துவத்தில் அதாவது பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் படிக்கும் போது மிக ஆழ்ந்து தான் உள்வாங்க வேண்டி இருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பயணித்த கற்பனை நவிற்சி வாதம் மனிதர்களின் உணர்ச்சி, கற்பனை, அனுபவம் மற்றும் ஏக்கம் ஆகியவற்றை பற்றி அதிகம் பேசுகிறது. இலக்கியமும் இசையும் போட்டி போட்டு செழித்து வளர்ந்த காலமாக  அப்போது தோன்றிய இலக்கியவாதிகள், இசை மேதைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல மார்க்சியத்துக்குள் தத்துவம் நுழைந்து டார்வின், சிக்மன்ட் ப்ராய்ட், நீட்ஷே அதற்கு பின் வந்த சர்தார் வரை நீளுகிறது. இவர்களின் கருத்துகள், அதற்கான சிந்தனைகள், கருத்துகளுக்கிடையே இருந்த முரண் என்று புத்தகம் முழுதும் அழகாக தொக்குக்கப்பட்டிருக்கும் விதம் மிக எளிமை.

புனைவுக்கும் யதார்த்ததுக்குமிடையே நகரும் கதையில் சோஃபி தான் நாயகி அவளின் தத்துவ பேராசிரியர் ஆல்பெர்ட்டோ தான் கதையின் முக்கிய பாத்திரம் என்று நாம் நினைக்க, அவர்கள் இருவருமே ஒரு மேஜர் எழுதும் கதையின் கதாப்பாத்திரங்கள் என்று தெரிய வருவது வியப்பின் உச்சம். யதார்த்த கதைக்குள் புனைவை நுழைத்து, அந்த புனைவையும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை போல நகர்த்தி அதிலும் உச்சத்தை தொட்டிருக்கும் நடை முற்றிலும் புதிய யுக்தி. வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமலும், அதே சமயம் குழப்பாமலும் புரியும் படியும் மாற்றி புனைவிலும், அதிபுனைவிலும், யதார்த்தத்திலும், என்று மாறி மாறி பயணிக்க வைக்கிறார். இது மெட்டா பிக்ஷன் வகை கதையை சார்ந்தது.

வெறும் எழுத்துகளை போல்ட் செய்திருப்பதன் மூலமே புனைவையும், உண்மையையும் பிரித்திருக்கிறார். தத்துவங்களை மட்டும் தொகுக்க நினைப்பவர்களுக்கு இது இன்னும் எளிது. ஹில்டே கதைக்குள் நுழையும்போது புனைவு தலைகீழாக மாறுகிறது. ஹில்டேவின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க அவளது தந்தையான மேஜர் எழுதிய புத்தகத்தில் வரும் கதை மாந்தர்களே சோஃபியும், ஆல்பெர்ட்டோ- வான தத்துவ பேராசிரியரும் என்று தெரிய வருமிடம வாசகருக்கு பயங்கர திருப்பம். அதன் பிறகு கதை பிரிகிறது. ஒரு திகில் கதை போல விறுவிறுப்புடனும்  புனைவின் உச்சமும், அதிபுனைவும், யதார்த்தமும் போட்டி போட்டு கதை நகருகிறது. அறிவொளிக் காலத்தில் இந்த மூன்றும் சந்திக்கும்  உச்சம் நிகழ்கிறது என்று சொல்லலாம். வாசகரை கொஞ்சம் குழப்பியது போல மாய தோற்றம் தருகிறது .

தத்துவம் மதத்துக்குள் எப்படி நுழைந்தது, கடவுளை எப்படி சுவீகரித்து கொண்டது, கடவுள் யார்? கடவுள் பற்றி சொல்லப்படுவது என்ன? புராணக் கதைகள் என்பது எப்படி வந்தது? உண்மையில் பூமி எப்படி தான் தோன்றியது,? கிருஸ்து பிறப்பதற்கு முன் இருந்த மதம்? அதற்கு பின் வந்த கிருஸ்துவ மதம் எப்படி பரவியது? மேலை நாட்டு மதங்களின் வேர்கள் எங்கே ? ஒரு சில தத்துவவியலார்களை தவிர மற்றவர்கள் சம பாலினமான பெண்கள் பற்றி அவ்வளவாக சொல்லாதது என்று நிறைய கேள்விகளை வாசகர்களுக்கு சொல்வதோடு கேள்விக்ககான பதில்கள் எல்லாவற்றையும் சொல்லாமல் சில பதில்களை நமது சிந்தனைக்கே விட்டிருப்பது வாசகனுக்கு அதிக அறிவு கிளர்ச்சியை தருகிறது.

தத்துவத்தின் ஊடாக ஆசிரியர் மனிதன் சிந்தனையின் உச்சம் நோக்கி நகர்வதையும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் விளக்கி இருப்பதோடு, மார்க்சியம் என்று மறுமலர்ச்சி ஏற்படுத்திய காலங்களையும் விட்டு வைக்கவில்லை. இத்தகைய சாதக பாதகங்களை சமன்படுத்த அந்ததந்த காலகட்டத்திலும் தத்துவவியலார்கள் கூறி வரும் கருத்துகளை, சுற்று சூழலை பாதுக்காக வேண்டிய அவசியத்தை, என்று ஆசிரியர் இயற்கை, கடவுள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழில்துறை என்று மனிதர்கள் வாழும் வாழ்க்கை தொடர்பான அனைத்து துறைகள் சார்ந்தும் தத்துவ சிந்தனைகளை தொகுத்தும், சில நம் சிந்தனையின் போக்குக்கு உட்பட்டும், அதற்கு மாற்றாகவும் என்று அனைத்தையும் சோஃபியின் உலகம் பேசுகிறது.

இது நாவல் என்று சொல்வதை விட, ஒரு தத்துவ ஆய்வு கட்டுரையின் அத்தனை குணாம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று தொகுப்பு என்று கூட சொல்லலாம்.

வாசிப்பவர்களுக்கு அறிவு கிளர்ச்சியையும், மனதுக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும், வாசிப்பவர்களை தேடல்களுக்குள் ஆழமாகவும் நகர்த்தும் நாவல்.  



Sunday, 27 December 2015

“ செஸர்யோஷா” - வேரா பானோவா - ரஷ்ய மொழிப்பெயர்ப்பு பற்றிய ஒரு பார்வை

“ செஸர்யோஷா” வேரா பானோவா என்ற ருஷ்ய எழுத்தாளரின் படைப்பு. கதையின் நாயகன் செஸர்யோஷா என்ற ஐந்து வயதுக்குள் இருக்கும் சிறுவன் தான். இவ்வளவு துல்லியமாக ஒரு குழந்தையின் உலகத்துக்குள் வளர்ந்துவிட்ட மனிதர்களால் ஊடுருவ முடியுமா என்று ஆச்சரியமும்., தான் மட்டும் ஊடுருவாமல் வாசிப்பவரையும் அதற்குள் ஊடுருவ செய்ய முடியுமா என்ற பிரமிப்பும் இன்னும் அகலவில்லை.

செஸர்யோஷாவின் உலகம் ஒரு ருஷ்ய கிராமத்தில் ஆரம்பிக்கிறது. தாய் மற்றும் பாசா அத்தை, லுக்யானிச் மாமா ஆகியோருடன் வசிக்கிறான். அவனுக்கு தந்தை கிடையாது. அதை பெரிதாக உணர தெரியவில்லை. அந்த தெரு குழந்தைகளுடன் விளையாடுவதும் அத்தை அம்மாவிடம் கதை கேட்பதும், தன்னை சுற்றியுள்ள உலகத்தை உற்று கவனிப்பதும், எல்லாவற்றையும் வியந்து ஆச்சரியப்படவும் பிற உயிரினங்களில் சிலவற்றை கண்டு பயப்படுவதும, சிலவற்றுடன் நட்பு பாராட்டுவதும் எங்காவது ஏறுவதும் கீழே விழுவதும் அதை அவன் பார்வையில் இருந்து பெரிய விஷயமாக பார்ப்பதும் பெரியவர்கள் அவனின் பெரிய விஷயத்தை சின்ன விஷயமாக நினைப்பதுவும், ஓடத்தில் ஏறி தண்ணீரில் விழுவதும் நீச்சல் தெரியாமல் காப்பாற்றப்படுவதும் அதை அவன் பார்வையில் என்று கதை விரியும் கோணத்தில் நாம் ரஷ்ய கிராமத்தில் அந்த சிறுவனுடன் சிறுவனின் உணர்வுகளில் ஒன்றிவிடுகிறோம.

ஒருநாள் செஸர்யோஷாவின் தாயார் அவனை கூப்பிட்டு உனக்கு அப்பா வரப்போகிறார் என்கிறாள். தாயின் முழங்காலுக்கிடையில் நின்று குழம்பி அம்மாவை பார்க்கிறான். அம்மா அப்பா வந்தால் என்னவெல்லாம் அவனுக்கு கிடைக்கும் என சொல்ல அவன் சந்தோசமாகி தன் சக நண்பர்களுடன் பெருமை பட்டு கொள்கிறான். ஆனால் நண்பர்களில் சிலர் அப்படி எல்லாம் இல்லை அப்பா என்றால் தோல் பெல்ட்டால் விளாசுவார் என்று சொல்ல பயப்படுகிறான். கொரஸ்தெல்யான் என்ற முன்னாள் இராணுவ வீரனும் இந்நாள் பண்ணை உயரதிகாரியும் தான் தந்தை என்று தாய் சொல்கிறார். ஏகப்பட்ட கலக்கம் இருந்தாலும் வீடே அவனை வரவேற்க தயாராகும் நிகழ்வில் சிறுவனும் கரைந்துவிடுகிறான்.

கொரஸ்தெல்யா வீட்டுக்கு வர அவன் செஸர்யோஷாவிடம்
நான் உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டேன் உனக்கு ஆட்சேபனை இல்லையே என கேட்கிறான்.

செஸர்யோஷா நீ எங்களுடன் எப்போதும் இருக்க போகிறாயா எனக்கேட்கிறான்

ஆமாம் எப்போதும் என்று பதில் சொல்கிறான்

நீ என்னை இடுப்பு வாரால் அடிப்பாயா என்று கேட்கிறான்
அவன் ஆச்சரியமடைகிறான்

நான் உன்னை எதற்காக இடுப்புவாரால் அடிக்க போகிறேன்?

நான் சொன்னபடி கேட்காவிட்டால் என்று விளக்குகிறான் செஸர்யோஷா

மாட்டேன் என் கருத்துப்படி இடுப்புவாரால் அடிப்பது முட்டாள்தனம் இல்லையா என்றான்.

முட்டாள்தனம் என்று உறுதிப்படுத்தினான் செஸர்யோஷா, குழந்தைகளும் அழுவார்கள் என்றான்.

நீயும் நானும் ஆம்பிள்ளைகள் ஆயிற்றே , ஒருவருக்கொருவர் பேசி சரி கட்டிக்கொள்வோம் என்கிறான். சரி ஞாயிற்றுக்கிழமை நீயும் நானும் விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைக்கு போவோம் உனக்கு வேண்டியதை நீயே தேர்ந்தேடுத்துக்கொள் சரி தானா என்கிறான்
அப்போ எனக்கு சைக்கிள் வேண்டும் என்கிறான்.

சரி என்கிறான் . ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்குகிறான்.

அப்பா வந்த முதல் நாள் அவன் பாசா அத்தை அறையில் படுக்க வைக்கப்பட இனம்புரியாத உணர்வால் அலைக்கழிக்கபடுகிறான். காலை கண்விழித்து பார்க்கும்போது தான் தெரிகிறது, அம்மாவை தேடி அவன் அறைக்கு செல்ல அறை தாழிடப்பட்டு இருக்கிறது, கதவை தட்டுகிறான் அத்தை வந்து தூங்குபவர்களை எழுப்ப கூடாது என்கிறாள் என் விளையாட்டு சாமான் எல்லாம் அங்கே இருக்கு என்று சொல்ல அவர்கள் எழுந்த பின் எடுத்து கொள்ளலாம் என்று சொல்ல நிம்மதியின்மையுடன் தெருவுக்கு வருகிறான். அங்கு அமைதியாக உட்கார்ந்திருக்க அவன் சக நண்பர்கள் இவன் ஏங்கி போயிருப்பதை பார்த்து கவலைப்படாதே அவர் ஒன்றும் மோசமானவர் இல்லை என்று அந்த கூட்டத்திலேயே பெரிய பையன் சொல்கிறான். அவன் ஆமாம் எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்கிறான்.

ஒரு குழந்தையின் உணர்வு எப்படி இருக்கும் தான் ஆசைப்பட்டதை வாங்க போகும் போது, எப்படி பொறுமையிழந்து தவிக்கும், எப்படி பரபரக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர் நடையில் வாசிக்க இது போல ஒரு பரபரப்பை நாமும் சின்ன வயதில் அனுபவத்திருப்பதால் அத்தனையும் உள்வாங்கி சிறுவனாக மாறுகிறோம்.

அதன் பின் சைக்கிள் வாங்கி வந்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டி அதை உடைத்து கீழே விழுந்து ஓட்ட கற்று கொண்டு அப்புறம் அந்த சைக்கிள் சலித்து போவது கொஞ்சம் கொஞ்சமாக புது அப்பாவுடன் அவன் ஒட்டி கொள்வது அவருடனும் நண்பர்களுடனும் சந்தோசமாக பொழுதை கழிப்பது, பாட்டி ஒருவர் இறந்து விட அந்த இறுதி சடங்கை பார்க்கும் சிறுவன் பீதியடைந்து கத்துவது, அங்கு வரும் ஒருவர் எல்லாரும் சாகத்தான் போகிறோம் என சொல்ல அப்பாவிடம் அதுபற்றி கேட்க இல்லை நாமெல்லாம் சாகமாட்டோம் என்று அப்பா உறுதியளிக்க சிறுவன் நிம்ம்திய்டைவதும் ,நண்பர் ஒருவரின் மாமா வர அவர் உடம்பில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து சிறுவர்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் பச்சை குத்தி கொள்ள முயற்சிப்பது அதன் விளைவாக செஸர்யோஷாவுக்கு காய்ச்சல் வருவது மருத்தவரை குழந்தை விரோதியாக பார்ப்பது என்று முழுக்க குழந்தை உலகம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இவன் தாய் கர்ப்பமுற அப்பா இவனிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க தம்பி என்று சொல்ல குழந்தை எப்படி வரும் என்பதை பற்றி அவனுக்கு இருக்கும் அறிவை கொண்டு ஆஸ்பத்திரியில் குழந்தை விற்பார்கள் என்று நம்புகிறான். தம்பியும் பிறக்க இவன் பார்வையில் இருந்து குழந்தையை எப்படி எதிர்கொள்கிறான் பெரியவர்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்ல வரும் இடத்தில் பெரியவர்களின் அபத்தத்தை ஆசிரியர் சொல்லி இருப்பார்.

காய்ச்சல் சரியாகி கொஞ்ச நாட்களில் இவனுக்கு டான்ஸில் வர அதனால் அதிகம் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் சோர்வாகிறான். பள்ளிக்கு பிள்ளைகள் சென்றுவிட தனிமையில் துவள்கிறான். இதற்கிடையில் இவன் தந்தைக்கு ஹோல்ம்கோரீ என்று தொலைதூர ஊருக்கு மாற்றல் வர புது இடம் என்று சிறுவனை பாசா அத்தையிடம் விட்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். கோடை காலத்தில் வந்து கூட்டி செல்லலாம் என.

ஆனால் செஸர்யோஷா அழுது முரண்டு பிடிக்கிறான், தாய் கண்டிக்கிறார். அப்பா அவனை கூட்டி போய் ஆறுதல் நிறைய சொல்கிறார். இருந்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை சிறுவனால் அவன் அப்பா வாக்குறுதி தருகிறார் அதில் சிறிதளவு நம்பிக்கை வைத்தாலும் சந்தேகம் நிறைய ஆட்கொள்ள அழுது கொண்டே இருக்கிறான். ஒரு நாள் இரவு எல்லாரும் சாமான்களை மூட்டை கட்டி அயர்ச்சியில் தூங்க செஸர்யோஷா அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு அழுகிறான். அவர் நிலைமையை சொல்லி டாக்டர் உன்னை கூட்டி போககூடாது என்று சொல்லி இருக்கார் இல்லையா நான் கண்டிப்பாக கோடையில் கூட்டி போகிறேன் அழகூடாது என்கிறார்.

அதன் பின் அழாமல் இருக்க முயற்சித்தாலும் உள்ளுக்குள் புழுங்குகிறான். பெரியவனாகி என்னலாம் செய்யணும் என்று எல்லாம் சொல்லி கொண்டாலும் வீட்டில் சாமான்கள் கட்டி அடுக்கப்பட தனித்து விடப்பட்ட உணர்வில் இருந்து அவனால் வெளியேவர முடியாமல் வெளியேயும் காட்டாமல் தவிக்கிறான்

புறப்படும் நாள் வந்து லாரியில் எல்லாம் ஏற்றப்பட செஸர்யோஷா அழுகையை அடக்கிக்கொண்டு பார்க்கிறான். அம்மா அணைக்க வர அவள் அணைப்பில் இருந்து விலகி மருகுகிறான். வண்டி புறப்பட சிறுவன் ஓவென வெடித்து அழ தயார் நிலையில் அதே நேரம் அப்பா அழக்கூடாது என்று சொன்னதுக்கு கட்டுப்பட்டு நிற்கிறான்.

லாரி புறப்பட தொடங்க அவன் அப்பா லாரியில் இருந்து குதிக்கிறார். செஸர்யோஷா ம்ம் தயாராகு மளமளவென்று புறப்படு என்று சொல்ல பாசா அத்தை உனக்கு மூளை பிசகிவிட்டதா டாகடர் சொன்னதை மறந்து விட்டாயா என்று கேட்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன் அவனை விட்டு போவது ஏதோ ஒரு அங்கத்தை விட்டு போவது போல இருக்கு நீ போ உன் சாமான்களை எடு செஸர்யோஷா என்று சொல்ல முதலில் மலைத்து நிற்கும் அவன் பின் அத்தை மற்றவர்கள் எல்லாம் பேசி அப்பா மனதை மாற்றிவிட கூடாதே என்று பரபரப்பில் கிளம்பும் வேகம் ஹப்பா செஸர்யோஷாவுடன சேர்ந்து வாசிப்பவர்களும் கண் கலங்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். இந்த கடைசி அத்தியாயம் முழுதும் ஆசிரியர் சிறுவனின் உணர்வுகளில் நம்மை சொருகி விடுகிறார்.

நம் சிறுவயதின் ஏக்கம், ஆசை, பொருமல் எல்லாவற்றையும் அதன் அடி ஆழம் சென்று கண்டுவிட்ட உணர்வும் நம் பிள்ளைகளை நாம் புறக்கணிக்கும் போது அவர்கள் உலகம் புரியாமல் அவர்கள் மீது நாம் ஆதிக்கம் செலுத்தும் போது அவர்கள் இப்படி தானே இருந்திருப்பார்கள் என்ற உணர்வும் ஒரு சேர எழுகிறது.

Friday, 25 December 2015

"பாரென்ஹீட் 451" ரே பிராட்பரி என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் தமிழில் வெ.ஸ்ரீராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. க்ரியா பதிப்பக வெளியீடு.

ஸ்ரீராமின் பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பான சின்ன சின்ன வாக்கியங்கள் ஏற்கனவே வாசித்திருப்பதால் நம்பிக்கையுடன் தான் புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். ஆனால் முதல் பாகம் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப்பட்டேன். இந்நாவலுக்கான முன்னுரை ஏதும் கொடுக்கப்படாமல் புத்தகம் ஆரம்பத்திலேயே கதைக்குள் பிரவேசிக்கிறது. புத்தகம் முழுதும் வாசித்த பின் தான் பின்னுரை இருப்பதை பார்த்தேன். அதை முன்பே படித்திருந்தால் இன்னும எளிதில் கஷ்டப்படாமல் வாசித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கஷ்டப்பட்டு நாமாக கண்டடையும் புரிந்துகொள்ளும் எதுவும் கொடுக்கும் கிளர்ச்சி அலாதியானது. அதை விரும்புவோர் பின்னுரை பக்கம் போகாமல் முதலில் நாவலை வாசித்துவிட்டு பின் பின்னுரையுடன் நம் புரிதலையும் ஒப்பிட்டு சந்தோசப்பட்டு கொள்ளலாம்..

எதிர்காலத்த்தை பற்றி அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிட வேண்டாம் என்ற அச்சத்தை தெரிவிப்பதாக இருந்தால் அது மருட்சி இலக்கிய வகை (dystopian literature) . இந்த புத்தகம் அந்த இலக்கிய வகையை சார்ந்தது.

இந்த நாவல் புனைவு என்ற போதும் எதிர்காலத்தில் நடக்க சாத்தியமிருக்கும் விஷயமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளில் தான் கதை வித்தியாசப்படுகிறது. முற்றிலும் தொழில்நுட்பமும் கேளிக்கைகளும் மனிதனை ஆக்ரமிக்க தொடங்க மனிதன் எதை நோக்கி பயணிப்பான், அவனை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன மாதிரி இருப்பார்கள், அறிவு மழுங்கடிக்கப்பட்டு எப்படி மக்கள் மாற்றப்படுவார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். தொலைகாட்சி வந்து ஏற்கனவே நம்மை ஆக்கிரமித்து கொண்டுவிட்டதையும் இப்போது சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமிப்பதையும் கொஞ்சம் ஆராய தொடங்கினால் உண்மை புலப்பட தொடங்கும். 1951 –ல் ஆசிரியர் இந்த கதையை எழுதியிருக்கிறார். அதாவது டெக்னாலஜி எல்லாம் அவ்வளவாக ஆக்ரமிக்கபடாத காலகட்டத்தில் எதிர்காலத்தை குறித்து அவர் எழுதியது ஆச்சரியப்பட வைக்கிறது.

மேன்டாக் என்ற தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஒருவன் புத்தகங்களை எரிப்பதில் இன்பம் காண்பதில் ஆரம்பிக்கும் கதை அவனை சுற்றியே பயணிக்கிறது. அவன் மனைவி மில்ட்ரெட் தொலைகாட்சியுனே தன் வாழ்வை பிணைத்து கொண்டு வெறுமை தாக்க தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்க அவளை மேன்டாக் காப்பாற்றுவதில் தொடங்குகிறது. ஆடை அணிந்த ஊரில் ஆடை அணிந்தவன் பைத்தியக்காரன் என்பது போல இந்த கேளிக்கைகளில் எல்லாம் நாட்டமில்லாமல் இயற்கையில் நாட்டம் கொண்ட க்லாரின் என்ற பதினேழு வயது பெண்ணை மேன்டாக் சந்திக்கிறான். மிக சாதாரணமாக தொடங்கும் உரையாடல்கள் மூலம் மக்களின் அப்போதைய நிலையும் அதன் அபத்தமும் பட்டும் படாமல் புரிவது போல மேன்டாக் உணர்கிறான்.

முதல் அத்தியாயம் முழுதுமே மேன்டாக்கின் தொழில் பற்றி விரிவாக செல்கிறது. மக்களை சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக பார்க்கப்பட்டு அவை இருக்கும் வீடுகள் எரிக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது. மேன்டாக் ஒரு தீயணைப்பு படை வீரன் ஆனால் தீயணைப்பு துறை அரசால் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்படுகிறது. ஒரு வீட்டில் புத்தகங்கள் இருப்பதாக தகவல் வர மேன்டாக்கின் மேலதிகாரி பியாட்டி உத்தரவின் பேரில் ஒரு வீட்டுக்கு செல்கிறார்கள் தீயணைப்பு குழுவினர்.

அங்கு ஒரு முதியவள் புத்தகங்கள் எரிக்கப்படப்போவதை அறிந்து ஆனால் எந்த எதிர்ப்பும் செல்லாது என்று தெரிந்து மௌனமாக அதை எதிர்கொள்வதும் தீயணைப்பு அதிகாரிகள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் புத்தக குவியலுடன் தன்னை மாய்த்து கொள்கிறாள். தன்னையே மாயத்து கொள்ள துணியும் அளவு புத்தகத்தில் என்ன இருக்கும் என்ற சிந்தனை மேன்டாக்குக்கு வர ஒரு புத்தகத்தை தனது தீயணைப்பு உடைக்குள் பிறரறியாமல் வைத்து எடுத்து செல்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக தீக்கிரையாக்கும் இடங்களில் இருந்து எல்லாம் புத்தகங்களை எடுத்து தன வீட்டில் மனைவிக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். மேன்டாக்கின் மேலதிகாரியாக பியாட்டி என்பவர் கதையில் நுழைந்த பின் தான் கதை புரிபடவே தொடங்குகிறது.. இன்னும் சொல்லப்போனால் மூன்று பகுதிகளாக பிரிக்க்பட்டிருக்கும் கதையில் இரண்டாம் பகுதிக்குள் செல்லும் வரை தான் தடுமாற்றம் வாசிப்பவருக்கு அதன் பின் வெண்ணையாக வழுக்கி செல்கிறது நாவல்.
அந்த முதியவள் தீக்கிரையானது மேன்டாக் மனதை பாதிக்க அவன் உடல்நிலை சரியில்ல்லாமல் போகிறான் அப்போது அவனை காண வரும் உயரதிகாரி அவனுடன் பேச தொடங்க மேன்டாக்குக்கு பல கேள்விகள் எழுகிறது.

அவர் சென்ற பின் புத்தகங்களை எடுகிறான் மறைவிடங்களில் இருந்து புத்தகங்களை எடுக்க அவன் மனைவி அஞ்சி கத்துகிறாள். இந்த விஷயம் தெரிந்தால் வீடு தீக்கிரையாக்கப்படும் என்று அழ அவளுக்கு ஆறுதல் சொல்லி முதலில் இதை வாசித்து பார்ப்போம் அப்படி என்ன இருக்கு என்று எதுவும் இல்லையென்றால் அரசு சொல்வது போல நம்மை அழ வைக்கும் விஷயங்கள் இருந்தால் நாமே கொளுத்திவிடுவோம் என்ற உத்திரவாதத்துடன் வாசிக்க தொடங்குகிறான். வாசிக்க வாசிக்க அவனுக்கு நிறைய சந்தேகம் எழுகிறது அதை விளக்க பேபர் என்கிற வயது முதிர்ந்தவரை நாடி செல்கிறான்.

அவனுக்கும் அவருக்கும நடக்கும் உரையாடல்கள் எல்லாம் க்ளாஸ். அதை வாசித்து தான் உணர முடியும். எழுத்தால் என்ன செய்ய முடியும் என்பதையும் எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் வகைப்படுத்தி பேபர் சொல்வதை மட்டும் இங்கு சொல்கிறேன். “ நல்ல எழுத்தாளர்கள் மனிதர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் தொட்டுவிடுகிறார்கள், சாதாரணமானவர்கள் அதன் மேல் கையை ஓடவிடுகிறார்கள், மோசமான எழுத்தாளர்கள் அதனுடன் வன்புணர்ச்சி கொண்டு அதன் மேல் ஈக்களை மொய்க்கவிடுகிறார்கள்.

புத்தகங்கள் ஏன் வெறுக்கப்பட்டு பயம்ளிக்கிறது தெரியுமா? வாழ்க்கையின் முகத்திலுள்ள நுண்ணிய துவாரங்களை அவை காட்டுகிறது. துவாரங்கள் இல்லாத, உணர்ச்சிகள் இல்லாத, ரோமம் இல்லாத மெழுகு முகங்கள் தான் வசதியாக இருக்க விரும்பும் மனிதர்களுக்கு தேவையாக இருக்கிறது.
இப்படியாக நீளும் உரையாடலில் மேன்டாக் பேபரிடம் தனக்கு அவர் தான் வழிகாட்ட வேண்டும் என்று கூற முதலில் அவனை நமப மறுக்கும் அவர் பின் மேன்டாக்கின் உறுதியால் நம்பி அவனுக்கு காதில் பொருத்திக்கொள்ள ஒரு கருவியை தருகிறார். இதன் மூலம் நீ எங்கிருந்தாலும் என்னை கேட்கலாம் நீ ஓய்வில் இருக்கும்போது உனக்கு நான் புத்தகங்களை உன் காதில் வாசிப்பேன் என்கிறார். அவரிடம் விடைப்பெற்று வீட்டுக்கு வரும் மேன்டக் அலுவலகம் செல்ல அதன்பின் பியாட்டிக்கும் மேன்டாக்குக்கும் நடக்கும் உரையாடலை எல்லாம் காதில் வாங்கும் பேபர் அவனுக்கு காதில் ஆலோசனைகள் வழங்கிறார்.

இதற்கிடையில் மேன்டாக் புத்தகம் ஒளித்து வைத்திருப்பதை அவன் மனைவியே அரசுக்கு சொல்ல அவன் வீடு அவனாலேயே பியாட்டியின் உத்தரவின் பேரில் தீக்கிரையாக்கப்படுகிறது. அப்போது மேன்டாக் காதில் பொருத்தியிருக்கும் கருவி பியாட்டிக்கு தெரிய வர அதை பறிக்கிறார் இதனால் ஆவேசமடையும் மேன்டாக் பியாட்டியை கொல்கிறான். சக ஊழியர்களை அடித்துவிட்டு தப்புகிறான். அவனை தேடி அரசு இறங்க அவன் பேபர் வீட்டுக்கு சென்று அவருடன் பேச அவர் சில வழிமுறைகள் சொல்ல அதை பின்பற்றி தப்பிக்கிறான்.அதன் பின் அவன் சந்திப்பது சிந்திப்பது இரண்டுமே நாவலின் முக்கிய பகுதி.
 
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க அரசை பற்றி கொண்ட பயம் குடிமக்களின் நடவடிக்கைகள் என்ன எழுதிகிறார்கள் என்ன படிக்கிறார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டு தடைகள் விதிக்க்ப்பட்டது.

உலகப்போருக்கு பின் அமெரிக்காவிடம் தாராளமாக புழங்கிய பணம் நுகர்வு க்லாச்ச்சரத்துக்கு வாசல் திறந்ததையும் தொலைகாட்சி அவற்றில் முக்கியமாக எப்படி மக்களை ஆக்கிரமித்தது சிந்தனைகளை மழுங்கடிக்க செய்தன என்பதை நாவல் பேசுகிறது.
 
சிந்தனையிலிருந்து மக்களை விலக்கிவைக்கும் இந்த வெகுஜன கலாச்சாரம் அரசுக்கும் எதிர்ப்பின் பயம் இல்லாமல் ஆள வசதியாக அமைந்தது. . சிந்தனைகளை ஒதுக்கும் கலாச்சாரமும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது தான் நாவலின் மையம். 
 
மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தை குறைக்கும் அரசைவிட மக்களை கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சக கேளிக்கைகள் தான் அதிகம் பயப்பட வைக்கிறது என்கிறார் ஆசிரியர். அவர் சொன்னது அறுபது ஆண்டுகளுக்கு முன். ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் சில நிமிடங்களுக்கு மேல் ஒரு செய்தியை கிரகிக்க பல மனதுக்கு பொறுமை இல்லாமல் போய்விட்ட சூழல் இக்கதை உண்மையாகி வருவதை சொல்வதாக பின்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நாவல் பல விஷயங்களில் நமது சிந்தனை தடத்தை இன்னும் கூர்மையாக்குகிறது.


Monday, 21 December 2015

மலேசியன் ஏர்லைன் 370 - ஆசிரியர் நடேசன் - புத்தகம் பற்றி ஒரு பார்வை

“மலேசியன் ஏர்லைன் 370” சிறுகதைகளின் தொகுப்பு. நடேசன் எழுதியது. மலைகள் வெளியீடு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆ(வு)ஸ்திரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றிய எழுத்தாளர் அவரது பார்வையில் இலங்கையையும் அவர் பணிபுரிந்த அவர் சென்று பார்த்த இடங்களையும் பற்றிய அனுபங்களையும் அழகாக தொகுத்திருக்கிறார்.

இலங்கை தமிழர்கள் என்ன தான் சொந்த மண்ணை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசதியாக வாழ்கின்ற போதும் தங்கள் மண்ணை மக்களை பிரிந்த வேதனையை சுமக்கவே செய்கிறார்கள். சிங்களவர்கள் எல்லாரையும் எதிரியாகவும் இயக்க்கத்தவர் எல்லாரையும் கடவுள் போலவும் பார்க்கும் மனிதர்களை நோக்கி தமது அனுபவங்களை சொல்லிவிட்டு எந்த நியாயமும் கேட்காமல் வாசிப்பவரின் பார்வைக்கே சில கதைகளில் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

ஆஸ்திரேலியா சென்று செட்டிலாகிவிட்ட ஒருவர் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் சொந்த மண்ணை பார்க்க நண்பருடன் வருகிறார். அப்போது இயக்கத்தை சேர்ந்தவருக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி

“போருக்கு பிறகு நிலைமை எப்படி? என்றேன்

என்னத்தை சொல்ல மக்கள் உயிர் வாழ்கிறார்கள். உணவுக்காக மட்டும் தான் வாயை திறக்கிறார்கள். மலஜலம் கழிக்கும் இடத்தில் கூட ராணுவம் நிற்கிறது  எனச்சொல்லிய போது முகத்தில் சோகம் தெரிந்தது.

இந்த மாதிரி தான் வன்னியில் விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள். இது புதிய விடயம் இல்லையே என்றேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவர் பிறகு அவரை மவுனத்தை கலைத்தார்.

“ விடுதலைப்புலிகள் காலத்தில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள்தான். அதை ஏற்றுகொள்கிறேன். அப்போது விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது, கஷ்டம் தெரியவில்லை ஆனால் இப்போது எதிர்காலத்தை நினைக்காமல் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம்.. விடுதலைப்புலிகள் ஆட்சியில் தமிழ்ப்பிரேதசங்களில் பதினைந்து வருடங்கள் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கட்டாய வரிகள், கட்டாய ஆட்சேர்ப்பு, தண்டனைகள் எனக் கொடூரமாக இருந்தது. உடலுறுவுக்கு மட்டும் வரிவிதிக்காமல் மற்ற எல்லாவற்றுக்கும் வரி விதித்தார்கள் என்று வன்னியில் இருப்பவர்கள் சொன்னார்கள்.

அப்படி செய்ய காரணம் தமிழ் ஈழத்திற்கு அதிகமானவர்கள் தேவை என்பதாலாகும் எனச் சொல்லிவிட்டு நீங்கள் விடுதலைப்புலிகள் எதிர்ப்பவரா?

நான் விடுதலைப்புலிகள் போராட்ட வழி முறைகளை மட்டுமல்ல இலங்கையில் பிரிவினையும் எதிர்ப்பவன்.

நீங்கள் சிங்களவர்களை நம்புகிறீர்களா?

நம்புவது நம்பாதது இங்கே விடயமல்ல. இந்த நாடு பிரிந்து வாழ சர்வதேசம் அனுமதிக்காது. இந்த பிரிவினை போராட்டம் ஒடுக்கப்படும் போது மக்கள் அநியாயமாக அழிவார்கள்.. என்று நீளும் உரையாடலின் பின் இருக்கும் உண்மை யோசிக்க வைக்கிறது.

இது போல இயக்கத்தால்  தற்கொலைப்படைக்கு  தயாராகும் ஒரு சிறுவனை பற்றிய கதை படித்த போது துக்கம் மனதை பிசைய அசுவாசம் அடையும் வரை புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். புலிகளால் ஒரே இரவில் வெளிய்ற்றப்பட முஸ்லீம்கள் அனுபவத்தில் மிளிரும் கதை தொட்டிருக்கும் ஆழமும் அனாயசமானது.

சிங்கள ராணுவத்தில் பணிபுரியும் ஒருவன் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் செய்யும் செயல்கள் அதனால் அவள் இறுதியில் புலிகளால் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகி கயிற்றில் நாற்சந்தியில் துரோகிக்கு தண்டனை என்ற வாசகத்துடன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கதை இரண்டு திமிர் எடுத்த போராட்ட குழுக்களுக்கிடையே அப்பாவியாக உயிரை விட்ட பெண்ணின் கதையை பேசுகிறது.

இயக்கம் போராட்டம் தாண்டி அவர் வாழ்வில் நடந்த சிறு சிறு அனுபவங்களை கோர்த்திருக்கிறார். மனநோயாளி ஒருவன் அவர் மருத்துவமனையில் புகுந்து தொலைபேசியை கையில் வைத்து கொண்டு செய்யும் செயல்கள் அவனை போலீசில் ஒப்படைக்க முயல அப்போது நடக்கும் நிகழ்வுகள், எமி என்கிற டீன் ஏஜ் பெண் சிறைச்சாலைகளில் இருக்கும் மனிதர்களுக்கு அன்பாக அனுப்பும் கடிதங்கள் என்று மனிதனின் மெல்லுணர்வுகளை சொல்லும் கதைகளையும், இலங்கை வட்டார மொழியில் ஆசிரியர் விவரித்திருக்கும் முறை இக்கதை தொகுப்பில் இருக்கும் பன்முகத்தன்மை எல்லாமாக  தொகுப்பு நம்மை வெகுவாக ஈர்க்கிறது. 

சிவப்பு விளக்கு எரியும் தெரு என்ற கதை கூட அழகாக ஆரம்பித்து அழகாக பயணித்து கடைசியில் முடித்திருக்கும் விதம் கொஞ்சம் கதையின் சுவராஸ்யத்தை குறைத்துவிட்டது. அனேகமாக கதையை ஹாஸ்யமாக முடிக்க ஆசிரியர் அந்த முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை ஆனால் பட்டி மன்ற துணுக்கு தோரணம் ஒன்றை கேட்டது போல சட்டென  இயல்பான ஒரு அழகிய கதையை ஏன் இப்படி என்று கேள்வி எட்டி பார்க்கிறது.

இயக்கம் பற்றிய மாற்று பார்வையை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க செய்கிறது இத்தொகுப்பில் இருக்கும் சில கதைகள். போர் சூழல் தாண்டிய கதைகள் காமம், காதல், அன்பு, நகைச்சுவை, அழுகை, சந்தோசம், துக்கம் என்று மனித வாழ்வியலின் அனைத்து பக்கங்களையும் கண் முன் நிறுத்துகிறது.

Monday, 14 December 2015

நிலவளம் - க. நா. சு. மொழிப்பெயர்ப்பு



The growth of Soil நட்ஹாம்சன் ஆங்கிலத்தில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. நிலவளம் என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். வ.உ.சி. நூலக வெளியீடு. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனும் பருவ காலங்களுடனும் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தான். என்ன விளைவித்தான். காட்டை ஒரே நாளில் சீராக்கிவிட முடியாது. பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவை. அதற்கு பக்க பலமாக இருக்கும் பெண் வரும்போது அவன் வாழ்க்கை எப்படி மலர்கிறது,  அப்போதைய வாழ்க்கை முறை (பெண்களுக்கு ஓட்டுரிமை எல்லாம் இல்லாத காலகட்டம்) அப்போது ஆண் பெண் உறவு நிலை, அவர்களின் உணர்வுகள் எல்லாம் இன்றைய காலகட்டத்துடன் பொருந்தி போவதாகவே இருக்கிறது. 

காட்டை செப்பனிட்டு விளைச்சல் ஆரம்பித்து மெல்ல மெல்ல பண்ணையாக தனி ஒரு மனிதன் உருவாக்குவதும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவனுக்கு சக மனிதர்களின் உதவியும், பிரச்சனையும் கடினமாக உழைக்கும் ஒருவனின் மனநிலையும் இயற்கையை இறை நம்பிக்கை எப்படி வருகிறது என்று எல்லாம் இந்த நாவல் பயணிக்கும் இடங்களுக்கு நம்மையும் ஆசிரியர் இட்டு செல்கிறார். 

ஐசக் என்ற அந்த அவ்வளவு நாகரீகமில்லாத காட்டாள் கிராமத்தை விட்டு பல மைல் தள்ளி இருக்கும் காட்டில் முதலில் ஒரு குடிசை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்டி கிராமத்துக்கு சுமந்து சென்று விற்று பொருட்கள் ஆடு வாங்குவதும் கூட ஒரு பெண் வேலைக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசாரிக்க அவனின் உருவம் பார்த்து எந்த பெண்ணும் வர மறுக்க உதடு பிளவின் காரணமாக கிராமத்தில் புறக்கணிக்கப்பட்ட இங்கர் வந்து ஐசக்குடன் காட்டில் சேர இருவருமாக உழைத்து காட்டை சீராக்கி ஆடு மாடுகளை பெருக்கி உருளை பயிரிட்டு வைக்கோல் போர் அடித்து குடிசையை மரவீடாக்கி அவர்கள் இடத்துக்கு sசெஸ்ஸன்ரா எனற பெயரையும் இடுகிறார்கள. அவர்களின் காதல் அவர்களுக்கு குழந்தைகள் என்று குடும்பம் விரிகிறது. இங்கரை மிகபெரும் பொக்கிசமாக கருத்தும் ஐசக் அவளை அசத்த செய்யும் செயல்கள் வார்த்தைகள் இல்லாமல் ஆதி மனிதன் காதலை வெளிப்படுத்தி இருக்கும் விதம் என்று வியப்படைய செய்கிறது.

கடின உழைப்பால் மட்டும் செழிக்கும் அழகிய இவள் குடும்பத்தை கண்டு ஓலைன் என்ற கிராமத்தை சேர்ந்த கிழவி பொறாமை கொள்கிறாள். இதற்கிடையில் காட்டில் தனியே இரு பிள்ளைகள் பிரசவிக்கும் இங்கர் மூன்றாவதாக உதடு பிளந்து பிறந்த குழந்தையை கொன்று புதைத்து விடுகிறாள் யாருக்கும் தெரியாமல். காட்டில் சுற்றும் லாப் என்னும் நாடோடி மூலம் ஒலைன் விஷயம் அறிந்து இங்கரை சட்டத்தின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறாள். இங்கர சென்றவுடன் சொத்தை அபகரிக்கலாம் என்று ஐசக் வீட்டில் நுழையும் அவளின் எண்ணம் ஐசக்கால் நிறைவேறாமல் போகிறது ஆனால் ஒலைன் ஐசக்கின் இரண்டு குழந்தைகளையும் கவனித்து காட்டு வேலைகளை செய்வதால் அவள் செய்யும் சில்லரைதனங்களை பொருத்து கொள்கிறான். 
.
இங்கர் சிறைக்கு செல்கிறாள். வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு. சிறையில் தையல் உள்ளிட்ட பல வேலைகளை கற்கிறாள். அவள் உதட்டு பிளவையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்கிறாள். எழுத படிக்க கற்கிறாள். நூல் நூற்க, நகரத்து பெண்மணிகள் போல ஆடை அணிகலன் அணிந்து கொள்ள என்று நாகரீகமானவளாக மாறுகிறாள்.
பழைய கிராம அதிகாரி கெய்சர் என்பவரின் உதவியால் இங்கரின் தண்டனை காலம் எட்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட தண்டனை முடிந்து காட்டுக்கு மீண்டும் ஐந்து வயது குழந்தையுடன் வருகிறாள். ஐசக்குடன் அவள் குடும்பம் செய்து பழைய மாதிரி வேலைகள் செய்தாலும் நாகரீக வாழ்க்கைக்கு ஏக்கம் கொள்கிறாள். அதன் பின் சில வருடம் சென்று மனம் மாறி இறைப்பணியில் தன்னை எப்படி ஐக்கியபடுத்துகிறாள். அவளின் தடுமாற்றங்கள் அவள் பிள்ளைக்கு எழுத படிக்க கற்று கொடுக்க அவள் பிள்ளைகளில் ஒருவன் பலமில்லாமல் போவதும் படிக்காத ஒருவன் அப்பாவுக்கு துணையாக கைகொடுப்பதும். இவன் பண்ணை விரிவை பார்த்து மெல்ல மெல்ல பண்ணைகள் உருவாவதும் அங்கிருக்கும் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கை என்று கதை பயணிக்கும் இடமெல்லாம் நாமும் பயணிக்கிறோம் சுகமாக.

இந்த புத்த்கததை முழுதாக வாசித்து முடித்த போது ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, கடின உடல் உழைப்பு இருப்பவர்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள். இயற்கையோடு எப்படி இணைந்து வாழ்கிறார்கள் கொஞ்ச நாள் நகரம் கிராமம் சென்று வந்தவர்கள் பண்ணையில் இருக்க முடியாமல் எப்படி பரபரப்பில் (restlessnes) சிக்கி தவிக்கிறார்கள். என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார். 

கெயிஸ்ஸர், பார்ப்பாரா, ஆகஸ்டேல், பிரட்ரிக், எல்யூஸ் , ஸிவெர்ட், ரிபெக்கா, ஜென்சன், லெபலட்டின் என்று கதை மாந்த்தர்களின் பெயர்கள் தான் அந்நியம், ஆனால் உணர்வுகள் எல்லாம் எல்லா மனித்ரக்ளுக்கும் ஆதி காலம் தொட்டு இப்போது வரை வித்தியாசமில்லை என்பதை இப்புத்தகம் வாசித்து முடிக்கும் போது உணர முடியும். 

காலசக்கரத்தில் பின்னோக்கி சுகமாக பயணித்த ஒரு அழகிய உணர்வு கடந்து இரண்டு நாட்களாக இந்த புத்தகம் வாசிக்கும் போது.....