Saturday, 14 March 2020

சுளுந்தீ - ஒரு பார்வை

வாழ்ந்து கெட்டவர்களை பற்றி பேசுவதிலும் அதை கேட்பதிலும் பலருக்கும் அலாதியான சுகம் உண்டு. சுளுந்தீ கூடுதலாகவே வாழ்ந்து கெட்ட தமிழ் பண்டுவத்தை, அதை தொழிலாக செய்த நாவிதர்களை அவர்களுக்கு இருந்த மரியாதையை (!) ராஜ தந்திரிகளாக அரண்மனைக்கு சேவை செய்ததையும், அரசியல் சூதால் பலியானதையும், விரிவாக பேசுகிறது நாவல். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் ஆட்சி தான் நாவலின் கதைக்களம். நாவிதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் என்னென்ன வேலைகள் செய்தார்கள்? அந்த வேலையில் இருக்கும் முக்கியத்துவம் , அந்த தொழிலில் மூலம் நடக்கும் அரசியல் கொலைகள் என நாவல் பயணிக்கிறது.
ஆரம்பத்தில் அரச குடும்பத்திற்கு நாவிதம் செய்யும் ராமனின் மகன் மாடனுடன் நடக்கப்போகும் மல்யுத்த போட்டியோடு அவனோடு மோதப்போகும் வங்காரனுடன் தொடங்கினாலும், அடுத்தஅத்தியாத்திலேயே நாவல் இருபத்தைந்து வருடம் பின்னோக்கி பயணிக்கிறது.
மாடனின் தந்தையான ராமன் அரண்மனை நாவிதனாக இருப்பதோடு, பன்றிமலையில் வாழும் சித்தரிடம் சீடனாக பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க பழகுகிறான். இவன் திறமையால் மகிழும் அரண்மனை இவனுக்கு குதிரை வழங்குகிறது. குலத்தொழில் மட்டுமே வழி வழியாக விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நாவிதன் குலத்தில் பிறந்த ராமனுக்கு படை வீரனாகும் ஆசை வருகிறது. அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டாலும், அவனால் படை வீரனாக முடியாது என்று தெரிய வருகிறபோது தனது மகனான மாடனை அரண்மனை படை வீரனாக்கி பார்க்க ஆசைப்படுகிறான். அதற்காக மகனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று தருகிறான். ஆனாலும் அரண்மனை தரப்பில் அனுமதி மறுக்கப்பட, தனக்குள்ளாக குமைந்து வேகிறான். இதனிடையே அரசியல் சூதில் ராமன் பண்டுவ மருந்து தயாரிக்கும்போது இறந்து போகிறான். தந்தை ஊட்டிய ஆசையும், அரண்மனைபடை வீரன் மோகமும் அலைக்கழிக்க அரண்மனை உத்தரவை ஏற்று நாவிதனாக தொழில் செய்ய செல்கிறான். மாடனின் தந்தைக்கு அரண்மனையில் இருக்கும் செல்வாக்கால் ஏற்கனவே கொதித்து கிடக்கும் தளபதி செய்யும் சதியோலசனைகள், மாடனை முடக்கிப்போட , ஒரு கட்டத்தில் ராபின் ஹூட்டாக மாற வேண்டிய சூழலுக்கு மாடன் தள்ளப்படுகிறான். முடிவில் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகிறான். ராமன் மூலமாக சித்த மருத்துவம்மட்டுமல்லாது அப்போதை மக்களின் வாழ்க்கை முறை, அரசாண்டவர்கள், அவர்களுக்கு ஏவல் புரிந்த தளபதி, குடிப்படையினர் சாதாரண மக்கள் மீது ஏவிய அடக்குமுறைகள், அதில் ஒன்றான குலநீக்கம் என்னும் கொடூர சட்டம் என நாவல் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு பயன்படும் மருத்துவ பொருட்களை கொண்டு வெடி பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்ட பின்னர் அந்த பொருட்களை வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், அதையும் மீறி அந்த மூல பொருட்களை வாங்கி குலநீக்கமானவர்களும்,ஊரை விட்டு விரட்டப்பட்டவர்களும் காட்டில் கிணறு முறித்து விவசாயம் செய்து, ஆள்பவர்களுக்கு எதிராக போருக்கு தயாராகும் அரசியலை நாவல் பேசுகிறது. மழையை மட்டும் நம்பியிருந்த மக்கள் மழை பொய்த்த போது கடும் பஞ்சத்தை சந்தித்ததையும், விளைச்சல் இல்லாத போதும் வரி கேட்டு மக்களை கொடுமைப்படுத்திய குடிப்படைகளும், வரிகட்ட முடியாது மறுத்து எதிர்த்தவர்களை குல நீக்கம் செய்ததையும் நாவல் பேசுகிறது. பஞ்ச காலத்தில் புளியங்கொட்டைஉணவாகவும், மருந்தாகவும்,விஷமாகவும் பயன்பட்ட தகவல் ஆச்சரியமூட்டியது. இன்று சாலையோரங்களில் புளியமரங்கள் இருப்பதற்குபின் இருக்கும் வரலாற்றையும் நாவல் பேசுகிறது. சைவம், வைணவம், குதிரையை பயிற்றுவிக்கும் ராவுத்தர்கள், சுல்தான்கள், கிருஸ்துவ சபை இந்தியாவில் காலூன்றிய அந்த நாட்களில் சைவ மடங்கள், குலகுரு ஆகியோர்களின் செயல்பாடுகள் என பதினெட்டாம் நூற்றாண்டின் சமய அரசியலுக்கும் கதையின் ஊடாக வாசகனை அழைத்து சென்றிருக்கிறார் ஆசிரியர் அதே போல செவி வழி கதைகள் பலவற்றையும்ஆசிரியர் ஆங்காங்கு இடைச்செறுகலாக கதையினூடாக சொல்லியிருக்கிறார் நாவலின் கனமும் அதற்காக ஆசிரியரின்மெனக்கெடலும் அசாத்தியமானது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சாதிய படிநிலையில் மேல் அடுக்கில் இருந்தவர்கள் இன்று ஒடுக்கப்பட்டவர்களாக எஞ்சி நிற்கும் அவலத்தையும் நாவல் எடுத்துரைக்கிறது. அதிலும் ராமன் தனது மகனான மாடனுக்கு நாவித தொழில் மேன்மை பற்றி எடுத்து சொல்லி, புரிய வைக்கும் போது வாசகனுக்கும் நிறைய விஷயங்களை தெள்ள தெளிவாக புரிய வைக்கிறார் ஆசிரியர். இந்த நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் சொற்களில் பல நம்மை விட்டு மறைந்தாலும் சில சொற்களை மட்டும் அதன் அர்த்தம் புரியாமல் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். அதிலும்”வெங்கம் பய” என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் காரணப்பெயர் இனி அந்த வார்த்தையைஉச்சரிக்கும் முன் யோசிக்க வைக்கும். திருநங்கைகளுக்கு ”இருபிறவி” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். மிக அழகான வார்த்தை. நாவல் மனிதர்கள் மருத்துவம் மட்டுமல்லாது, ஆடு, மாடு,குதிரை உள்ளிட்ட பல ஜுவராசிகளின் மருத்துவமும் பேசுகிறது. ராமனின்அறிமுகத்தில் இருந்து அடுத்தடுத்து பக்கங்கள் முழுதும் அடுத்தடுத்து சித்த மருத்துவ குறிப்புகள் வாசிக்கும்போது பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது, அப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதன் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நாவல் வாசிக்கிறோமோ அல்லது சித்த மருத்துவ புத்தகம் ஏதும் வாசிக்கிறோமா என்ற ஐயப்பாடே எழுந்தது. கதைக்கு தேவையில்லாத விவரங்களை பக்கம் பக்கமாக கொடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இந்த நாவலின் ஊடாக சொல்லப்பட்டுள்ளசெவி வழிக்கதைகளும், சொலவாடைகளும் பலஇடங்களில் பொருந்திப்போனாலும் சில இடங்களில் துருத்திகொண்டு தெரிகிறது. நாவல் வாசிக்கும்போது ஆங்காங்கு நாம் நாவல் வாசிக்கிறோமோ இல்லை ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறோமா என்ற உணர்வு தவிர்க்கமுடியவில்லை. ஆசிரியர் - இரா. முத்துநாகு. ஆதி பதிப்பகம்

Saturday, 28 September 2019

உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்



மகாபாரதம் என்னை பொறுத்து வரை ஒரு அமுதசுரபி போல.. பல நூறு கதைகளை உள்ளடக்கிய அந்த இதிகாசத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் அது பேசும் தத்துவங்களும் எக்காலத்துக்குமானது. அந்த கதாபாத்திரங்களை தங்களின் கற்பனைத் திறத்தோடும், அக ஆராய்ச்சியோடும் எப்படி வேண்டுமானாலும் உருமாற்றிக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில் எஸ்.ரா உபபாண்டவத்தில் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய உருவம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மகாபாரத்த்தில் வரும் வலுவான பெண் கதாபாத்திரங்கள் தான் அந்த இதிகாசத்தை கட்டி எழுப்புகின்றனர். அவ்வகையில் காந்தாரி, குந்தி, பாஞ்சாலி, மாத்ரி, அம்பை ஆகிய மாந்தர்களை ஆசிரியர் வேறு ஒரு அச்சில் வார்த்திருக்கிறார். புராணக்கதை என்றால் அதை கடினமான மொழியில் தான் கொடுத்தாக வேண்டுமென்று யாரோ அழுத்தமாக எழுத்தாளர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள் போல.. மொழி நடை ஆரம்பத்தில் கொஞ்சம் பக்கங்கள் புத்தகத்துடன் ஒன்ற முடியாமல் செய்தது.. பின் மெல்ல மெல்ல கதைக்குள் இழுத்து கொண்டு விட்டார் எஸ்.ரா..
நிறைய இடங்களில் மூலத்துடன் முரண்படுவதாக வார்த்தை ஜாலம் காட்டி வசீகரிக்க முயன்றாலும், அதிக தூரம் எஸ்.ரா அதில் பயணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எஸ்.ராவின் எளிய நடைக்கு பழகிய வாசகர்களுக்கு இந்த வாக்கிய அமைப்புகளும், கடினமான புதிய வார்த்தைகளும் ஆச்சரியப்பட வைக்கவில்லை.. மாறாக ஏமாற்றமே.. மகாபாரதத்தின் மூலத்துடன் ஓப்பிட்டு குழப்பிக்கொள்ளாமல் படிப்பவர்களுக்கு, நவீன எழுத்தின் மற்றொரு படிவமாக உபபாண்டவம் இருக்கும்.

பனி - ஓரான் பாமுக்


ஒரு முறை ட்ராவல் லிவ்விங் சேனலில் துருக்கி மற்றும் இஸ்தான்புல் பற்றிய ஒரு நிகழ்ச்சி பார்க்க பனி தோய்ந்த அந்த நகரத்தையும், அங்குள்ள ஆண் பெண்களையும் பார்த்து ஏதோ ஒரு அதீத பரவச உணர்வு தொற்றிக்கொண்டது. வாழ்க்கையில் ஒரு முறையாவது இஸ்தான்புல் சென்று வர வேண்டுமென்ற ஆசையும். எதனால் அந்த நகரம் ஈர்த்தது என்று இதுவரை தெரியவில்லை.
துருக்கியின் மீதான இந்த என் காதலில் தான் துருக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை வாங்கினேன். ஆனால் நாவல் வாசித்த சில அத்தியாயங்களிலேயே புரிந்து கொள்ள கடினமாகவும், எழுத்து நடையும்  விவரணைகளும் சலிப்பூட்டுவதாக இருந்ததால் ஒரிரு அத்தியாயங்களிலேயே புத்தகத்தை  தூர வைத்துவிட்டேன். அப்போது என் மகன் கோவை புத்தக கண்காட்சியில்  இருந்து எனக்காக ஓரான் பாமுக்கின் பனி நாவலை வாங்கி வந்தான். என் பெயர் சிவப்பு கொடுத்த அயர்ச்சியால் பனியை தொடாமலேயே ஓராண்டுக்கு மேலாக வைத்திருந்தேன்.
பதினைந்து  இருபது நாட்களுக்கு முன் தான் வாசிக்க எடுத்தேன். எனக்கு தெரிந்து நான் வாசிக்க அதிக காலம் எடுத்துக்கொண்ட புத்தகம் பனி தான்.  துருக்கிய அரசியல் அதுவும் இந்த நூற்றாண்டு அரசியலை பேசுகிறது. ஐரோப்பாவிலும் இல்லாமல் கீழை நாடுகளிலும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில்  இருக்கும் துருக்கியின் வரலாறை தெரிந்து கொண்டால் தான் இந்த கதையில் நுழைய முடியும். அதற்காக இந்த கதை வாசிக்கும்போதே இடையிடையே துருக்கிய வரலாற்றையும் கொஞ்சம் தேடி தேடி வாசிக்க வேண்டியதாகியது. அதனாலும் நாவல் வாசித்து முடிக்க தாமதமாகியது. நாவலுக்குள் செல்வோம்.
மிகவும் பழமையான கலாச்சார மதிப்பீடுகளை கொண்ட துருக்கியின் கார்ஸ் என்னும் நகரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மக்களின் மீது மதத்தை திணிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும், அவற்றை சுத்தமாக அழித்தொழிக்க நினைக்கும் மதசார்பற்றவர்களுக்கும் இடையே நடக்கும் அரசியலில் கார்ஸ் நகர மக்கள், மாணவர்கள், கலைஞர்கள், ராணுவ வீரர்கள், மதத்தலைவர்கள், ஒருபுறம் நாத்திகம், மறுபுறம் அடிப்படைவாதம் இரண்டுக்குமிடையே எந்தப்பக்கமும் போக முடியாமல் தவிக்கும் நடுநிலையாளர்கள் என அரசியலையும் அத்துடன் இபெக், கா, கடிஃபே, நீலம், பாசில் இவர்கள் வழியாக காதலையும் நாவலில் விவரித்திருக்கிறார்,
பனியின் நாயகன் “கா” . கவிஞனான இவன், ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் வசித்து வருகிறான். தனது குழந்தை பருவத்தை கழித்த கார்ஸ்க்கு ஒரு உறை பனி காலத்தில் வருகிறான். நகரத்தில் பல மாற்றங்களை பார்க்கிறான், அந்த மாற்றங்கள் ஊடாக கா சிறுவனாக இருந்ததற்கும் இப்போதிருக்கும் காலத்திற்குள்ளான அரசியல் மாற்றங்களை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
கார்ஸில் பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போவது குறித்து ஆராய்வதற்காக புகழ்பெற்ற பத்திரிக்கையின் சார்ப்பாக வந்திருப்பதாக கூறினாலும் உண்மையில் அவன் காதலிக்கும் ஐபெக் என்ற அழகியை பார்க்க வருகிறான். அவளுக்கு திருமணமாகி இருந்தாலும், கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரிய வந்ததால், அவளின் அன்பை பெற்று எப்படியும் அவளை தன்னோடு ஜெர்மனி கூட்டி செல்ல வேண்டும் என்ற எண்ண ஓட்டமே அவனை விடாப்பிடியாக துரத்தி வந்திருந்தது அந்த நகரத்துக்கு. அவன் வரும்போது பனிப்புயல் மற்றும் கடுமையான பனிபொழிவு காரணமாக அந்த நகரம் பிற நகரங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கபட்டுவிடுகிறது. இதனால் அந்த நகரத்தில் நடப்பது துருக்கி ஊடகங்களுக்கு தெரியாமல் போகிறது.
இந்நிலையில் கார்ஸ் நகரத்தில் அரசு தங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு என்று காட்ட வேண்டும் என்பதற்காக பெண்கள் அணிந்துள்ள முக்காடுகளை விலக்க சொல்கிறது. பள்ளிகள் கல்லூரிகளில் இருந்து முக்காடிடும் பெண்கள் நீக்கப்படுவார்கள் என்று சட்டம் இயற்றுகிறது. ஆனால் தலைமுடி மூடாமல் இருப்பவர்கள் அல்லாவை மதிக்காதவர்கள், விபச்சாரிகள் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திணித்து வைத்துள்ளதில் இருந்து வெளியே வரமுடியாமல் பெண்கள் குழப்பமடைந்து தவித்து மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள் என்பது”கா” விற்கு தெரிய வருகிறது.
இபெக்கின் தந்தை நடத்தும் ஹோட்டலில் தங்கும் “கா” தனது காதலியான இபெக்கை சந்திக்கிறான். முதல் சந்திப்பு காபி ஷாப்பில் நடக்க, அப்போது அதே ஷாப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கல்வியக இயக்குநர் சுடப்படுகிறார். அந்த கொலையில் சாட்சியாக ”கா” சேர்க்கப்படுகிறான். இதனைத்தொடர்ந்து அரசு தரப்பில் மத்தியஸ்தராகவும், உளவாளியாகவும் ஆகிறான். அதே போல இஸ்லாமிஸ்ட் அடிப்படை வாதிகளும் இவனை மத்தியஸ்தராக ஆக்குகிறார்கள். இதற்கிடையே இபெக்கின் காதலையும் பெறுகிறான். காதல், கார்ஸ் நகரத்தின் பனிப்பொழிவு, கார்ஸ்  நகரை சுற்றி வரும் அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கம், கிட்டத்தட்ட அவன் சில வருடங்கள் மறந்தே போயிருந்த கவிதை அவனுக்குள் ஊற்றெடுக்க தொடங்குகிறது.
அவன் முதல் கவிதையை வாசிக்கும் நேஷனல் திரையரங்கில் புரட்சி வெடிக்கிறது. இஸ்லாமிஸ்ட் அடிப்படை வாதிகளையும், சமயக்கல்லூரி மாணவர்களில் சிலரையும் சுட்டு கொல்கிறது. பலரை சிறை பிடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நீளும் கதையில் இபெக்கின் காதல், அவள் தங்கை கடிஃபேக்கு இஸ்லாமிஸ்ட் அடிப்படைவாதி நீலத்துடனான உறவு, கடிஃபேவை காதலிக்கும் நெஸிப் துப்பாக்கி சூட்டில் இறக்க, அவன் நண்பனான பாசிலுக்கு கடிஃபேவுடன் ஏற்படும் காதல் என பலதரப்பட்ட காதலை இந்த அரசியல் பின்னணிக்கிடையே அழகாக பின்னி பிணைத்திருக்கிறார் ஆசிரியர். இபெக் “கா” வின் காதல் உணர்வுகளை ஆசிரியர் விவரித்திருக்கும் விதத்தில் இபெக் மீது நமக்கே காதல் பிறக்கிறது.
”கா” ஒரு சிலர் நாத்திகன் என நம்ப தொடங்க, ( அவனே அப்படி நம்புகிறான் முதலில் ) ஆனால் கடைசி வரை நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்குமிடையே அல்லாடும் மனமுடையவனாக தான் இருக்கிறான்.இதே ஊசலாட்டம் இபெக்குடனான காதலிலும் அவனுக்கு வருகிறது. அவனது மனக்குழப்பங்கள் மூலம் வாசகனின் சில அகதரிசன குழப்பங்களுக்கும் விடை கிடைப்பது நாவலுடன் நம்மை ஒன்ற செய்கிறது.
கடைசியாக ஒரு நேரடி ஒலிபரப்பு நாடகத்தில் கடிஃபே தனது முக்காடை நீக்கினால், ராணுவத்திடம் சிக்கியிருக்கும் நீலத்தை விடுவிப்பதாக “கா” மூலம் தூது அனுப்பபடுகிறது. வெளியில் வருவதற்காக அதற்கு ஒப்புக்கொள்ளும் நீலம், வெளியில் வந்த பின் “கா” வை வரவழைத்து கடிஃபே தனது முக்காடை நீக்க கூடாது என்று ஒரு கடிதம் எழுதி இதை கடிஃபேவிடம் தருமாறு அனுப்புகிறான். (அப்போது அவனை மடக்கும் போலீஸ் தான்  நீலத்துக்கும் இபெக்குமான உறவை சொல்கிறது.)
இருபுறமும் மத்தியஸ்தராக இருக்கும் கா கடைசியில் இஸ்லாமிய மத அடிப்படைவாதியான நீலம் தனது காதலியான இபெக்கின் முன்னால் காதலன் என வரும்போது உடைந்து போகிறான். ஆனால் இபெக் மீதான தன் காதலை இழக்க விரும்பாமல், அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல் அவளிடமே அழுது அடைக்கலமாகிறான். அவள் நீலத்தை காதலித்தது உண்மை என்றும் அதற்கு தன் கணவரே காரணம் என்றும், இப்போது அவனுடன் தொடர்பில் இல்லை என்றும் எவ்வளவோ எடுத்து கூறுகிறாள் ஆனாலும் நம்பியும், நம்ப மறுத்தும் பல்வேறு உணர்வு சுமைகளுக்குள் “கா” உழலுகிறான்.
இபெக்கிடம் கடைசியாக பேசிவிட்டு நீ ஜெர்மனிக்கு செல்ல காத்திரு, பாதைகள் இன்று இரவு திறக்கப்படும் முதல் ரயிலில் நாம் சென்றுவிட வேண்டும் என்று கூறிவிட்டு இதை தொடர்ந்து கடிஃபே வை சந்திக்கிறான், அவனையறியாமல் நீலத்தின் மீதான பொறாமை வலுக்கிறது.  இதனிடையே நீலம் ராணுவத்தாரால் சுட்டு கொல்லப்படுகிறான். அவன் இருக்கும் இடம் “கா” ஒருவனுக்கே தெரியும் என்பதால் நீலம் மீதான பொறாமையால் தான் அவனை காட்டி கொடுத்துவிட்டான் என்று இபெக் அவனுடன் ஜெர்மன் வர மறுத்திவிட்டு, தனது தங்கை கடிஃபேவிடம் முக்காடை நீக்கி இஸ்லாமிஸ்டுகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்று சொல்ல ஓடுகிறாள். ஆனால் நீலம் இறந்ததை கேட்ட பின்பும்,  நாடகத்தில் கடிஃப முக்காடை நீக்குகிறாள், ஆனால் புரட்சிக்கு காரணமான நாடக நடிகனான சுனய்யை சுட்டு கொன்ற வழக்கில் சிறை செல்கிறாள்.  
ப்ராங்க்பெட் செல்லும் “கா” நான்கு வருடங்கள் கழித்து சுட்டு கொல்லப்படுகிறான். அதை தொடர்ந்து நாவலின் ஆசிரியர் கா வின் நண்பனாக அவனது கவிதை நூலை தேடி அலைகிறார். கா வின் விவரணை வழியாக அனைத்தையும் பார்க்கும் அவர் அதன் தொடர்ச்சியாக கார்ஸ்க்கும் வருகிறார். இபெக்கின் மீது அவரும் காதல் வசப்படுகிறார். ஆனால் இபெக் காதலை மறுத்து கூறும் வார்த்தைகள் பெண்ணின் ஆழ்மனத்தில் புதையுண்டு கிடக்கும் வரிகள்.
இதில் இபெக், கடிஃபே பேசும் பெண்கள் உலகம் தனித்துவமானது. ஆசிரியர் இவர்களுக்கிடையயான உறவை, உணர்வுகளை, பொறாமைகளை, அதை தாண்டிய பாசத்தை மிக மிக நுணுக்கமாக விவரித்திருக்கிறார். அதேபோல தனது காதலி வேறு ஒருவனின் மனைவியாக இருந்து அவனுடன் வாழப்பிடிக்காமல் திரும்பியிருப்பதை ஏற்றுக்கொளும் ”கா”, இபெக் வேறு ஒருவனின் காதலி என்பதை ஏற்கமுடியாமல் நொறுங்கும் இடத்தில் ஆண் தன்மையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அரசியலும், காதலும், அடிப்படை மதவாதமும் அது மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கததையும் ஒரு சேர ஒரு நாவலில் விவரித்திருக்கும் விதத்தில் ஓரான் பாமுக் தனித்து தெரிகிறார்.


Saturday, 30 June 2018

ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேவி



ஏழு தலைமுறைகள் அலெக்ஸ் ஹேவி எழுதிய மிகப்பெரிய நாவலை தமிழில் சுருக்கி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சினுவ அச்சிபிக்கு பிறகு நான் வாசிக்கும் மற்றொரு ஆப்ரிக்க எழுத்தாளரின் கதை. இல்லை ஆப்ரிக்க எழுத்தாளர் இல்லை, ஆப்ரிக்க – அமெரிக்க எழுத்தாளர். மிக சுதந்திரமாக இனங்களாக காட்டில் சுற்றித்திரிந்து, கிராம வாழ்க்கையை அனுபவித்து பால்யத்தை தன் குடும்பம், தன் சார்ந்த மக்களுடன் கொண்டாடிய ஒரு 16 வயது சிறுவன் வெள்ளையர்களுக்கு அடிமை வேலை செய்வதற்காக கடத்தி வரப்படுகிறான்.

குண்டட்டா என்னும் அந்த சிறுவன் பிறப்பிலிருந்து அவன் கடத்தப்படும் வரை வாழும் வாழ்க்கையும், அதன் ஊடாக ஆப்ரிக்க கிராம மக்களின் கலாச்சாரம், பண்பாடு, அந்த கால கட்டத்தில் அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் பண்டிகைகள், ஆட்டம் பாட்டம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். வரலாறா புனைவா என்று பிரித்து பார்க்க முடியாதளவு , கதையின் ஆரம்பத்திலேயே குண்ட்டாவுடன் நம்மை இருத்தி ஆணி அடித்து விடுகிறார் ஆசிரியர்.

காலை ஒரு நூறு பக்கம் வரை வாசித்து பின் அன்றாட வேலையில் மூழ்கிவிட இரவு உணவிற்கு பிறகு கையில் எடுத்த புத்தகத்தை இன்று காலையில் முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.

அடிமைகளின் வலியை பேசுகிற நாவலை புனைவு என்று ஒற்றை வர்த்தையில் புறம் தள்ளி விட முடியாது. தனது வேரை தேடி அலையும் அலெக்ஸ் ஹேவி, அதற்காக  மேற்கொண்ட பயணமும், இறுதியில் ஏழு தலைமுறைகளுக்கு பிறகு தனது வேரையும், தனது மக்களையும் கண்டு அடையும் பரவசம், இந்த ஏழு தலைமுறைகள் வரை அந்த வேரை விடாமல் கொண்டு சேர்த்த நீக்ரோ பெண்கள் என்று கதை சொல்லப்பட்டிருக்கும் போக்கில்  ஆப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்பட்ட அடிமைகளின் வாழ்வியலை முற்றிலுமாக பதிவு செய்துள்ளார். 

கருப்பர்களில் சிலரே தங்கள் இனத்தவரை காட்டி கொடுப்பதுடன், அவர்களை அடிமைகளாக கடத்தி செல்லவும் துணை புரிகின்றனர். காட்டிற்கு தனித்து வரும் திடகாத்திரமான ஆண், பெண்களை கடத்தி படகின் மூலம் கப்பல் கொண்டு சென்று சங்கிலிகளால் பிணைத்து மொத்தமாக அமெரிக்கா கூட்டி சென்று ஏலத்தில் விற்கின்றனர். கப்பலில் கறுப்பர்கள் படும் நரக வேதனைகளை வாசிக்க இது கதையல்ல உண்மை என்பது முகத்திலறையும் .. அந்த நாவலில் வரும் வரி, மனிதர்களை விட மோசமான மிருகம் கிடையாது. ஆம் என்பதை காலம் இன்றளவும் பதிவு செய்து கொண்டு தான் உள்ளது.

அடிமைகளாக வரும் பெண்களின் நிலை ஆண்களின் நிலைக்கு சற்றும் சளைத்ததல்ல.. அவர்கள் உழைப்பை சுரண்டி நகரங்களும், பண்ணைகளும் உருவாகின்றன.   ஆனால் அவர்களின் வாழ்க்கையில்  சந்திக்கும் அவமானங்கள், வலிகள்,  நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவை. கிட்டத்தட்ட ஐந்தாறு தலைமுறைகளில் பலரின் குடும்ப வேர்கள் முற்றிலும் அழிந்து போய்விட, அலெக்ஸ் ஹேவி போன்ற  ஒரு சிலர் சிரமப்பட்டு தங்கள் வேரை கண்டைந்துள்ளனர். இதற்கு காரணம் அவ்வளவு வலிகளிலும் ஒரு சிலர் தங்கள் வேரை, வரலாறை, அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டே செல்வதால் தான்.. செவி வழி கதைகளாக சிறுவயதிலேயே ஆழமாக பதிக்கப்படுகிறது. 

இந்த நாவலின் மூலம் துயரத்தையே சுமந்து கிட்டத்தட்ட ஏழு தலைமுறைகள் கடந்து அவர்கள் சுவாசிக்கும் சுதந்திரம் என்னும் வார்த்தைக்கு பின் இருக்கும் வலிகளை உணர முடியும். உலகுக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்ததாக கூறும் வெள்ளையர்களின் அநாகரீகமான, மனித தன்மையற்ற, மிருகத்தை விட கொடூரமான மறுபக்கத்தை தோலுரித்து காட்டியுள்ளது இந்நாவல்.

இந்த நிறவெறிக்கு சற்றும் குறைவில்லாத ஒன்று தான் நமது நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அரங்கேறிய, அரங்கேறி வரும் வன்முறைகள்.. இந்த அநாகரீக செயலை செய்து கொண்டிருக்கும், அல்லது செய்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான முன்னுதாரணங்களாக  இருக்க போவது தவிர்க்கமுடியாதது.




Wednesday, 11 October 2017

பிள்ளை கடத்தல்காரன் - அ,முத்துலிங்கம்.

அ.முத்துலிங்கத்தின் “பிள்ளைகடத்தல்காரன்” சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.  இருபது சிறுகதைகள் இதில் இலையுதிர் காலம் என்ற ஒரு சிறுகதை மட்டும் வேறு தொகுப்பில் படித்திருக்கிறேன். மற்றவை எல்லாம் முதல் முறை வாசிப்பு தான். அவரது எழுத்தில் எனக்கு பிடித்த விஷயம் உலகில் பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் செய்த அனுபவங்களை, மிக எளிமையாகவும், அங்கத சுவை குறையாமலும் வாசகனுக்கு தருபவர். அதனாலேயே இவரது எழுத்துகள் எனக்கு பிடிக்கும்.  இந்த சிறுகதை தொகுப்பும் நிறைவையே தந்தது.

இயக்கம் பற்றியும், ஈழ மக்களின் துயர் பற்றியும் இவர் எழுத்துகள் பேசவில்லை என்று இவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அந்த இயக்கங்கள் பற்றிய சிறு சிறு ரசனையான கூறுகளை சிறுகதையாக முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் இவர் எழுத்தில் உணர முடியும். அதுபோல இயல்பான சம்பவங்களை நுணுக்கமாக கவனித்து அதை கதையாக வடிக்கும் இவர் அந்த கதையை விவரிக்கும் போது, ஊடாக ஓடும் சில வரிகளில் தெறிக்கும் இலக்கிய சுவை அநாயசமானது. இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளில் பலவும் நாம் அன்றாடம் கடக்கும் சம்பவங்கள் தான், உப்பு சப்பில்லாத அதிக சுவராஸ்யமற்ற சம்பவங்களை கூட இவ்வளவு சுவையாக சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

அதுபோல நம் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாத தருணங்கள் பற்றியும், அதை சாதாரணமாக கடந்து வந்ததையும் அலட்டல் இல்லாமல் அவர் முன்வைக்கும் விதமும் பிடிக்கும். 

பிழிய பிழிய அழவைக்கும் சோகம் இவர் கதைகளில் இருக்காது, ஆனால் அங்கத சுவையின் ஊடாக போகிற போக்கில் ஒரு சுமையை நம் இதயத்தில் வைத்துவிட்டு போகிற லாவகம் இவர் எழுத்தில் நான் வியப்பது. கடினமான இலக்கியத்திற்குள் தலை கொடுக்கும் முன் ஒரு நல்ல ஸ்டார்ட் அப்பாக நான் முத்துலிங்கத்தை கையில் எடுப்பேன். நான் பார்த்தே யிராத கனடாவின் குளிர் பிரதேசங்களுக்கும், பாகிஸ்தான் மக்களின் வீடுகளுக்கும், ஆப்ரிக்க மக்களின் வெள்ளை மனசுக்குள்ளும், சென்று வந்த ஒரு புத்துணர்வு கிடைக்கும். அதே போல இலங்கை மக்களின் பழக்க வழக்கங்களும், புலம் பெயர்ந்து பல இடங்களுக்கு சென்று விட்ட போதும் தொடரும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் , அனைத்தையும் விட அந்த  அழகு இலங்கை தமிழையும் நுகரும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி அலாதியானது.

அந்த வகையில் இந்த கதை தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும், உன்னுடைய கால அவகாசம் இப்போது தொடங்குகிறது  (திகில் கதை ஆசிரியருக்கு கை கூடவில்லை ) கதை தவிர மற்றவை அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தவை.



Sunday, 8 October 2017

கீழை நாட்டு கதை தொகுப்பு - மார்கெரித் யூர்ஸ்னார்

கீழை நாட்டு கதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. அனைத்துமே நாடோடிக்கதைகள். மார்கெரித் யூர்ஸ்னார் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் செவி வழி கதைகளில் புனைவு கலந்த எழுத்து. ”தலை வெட்டப்பட்ட காளி” கதையில் இருக்கும் தத்துவம் அழகியல் தாண்டி அந்த கதை எழுத்தாளர் மீது ஒரு சறுக்கலை கொடுத்தது. அங்கும் ஜாதிய மனம் இங்கை விட மோசமாக இருந்ததா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. தலை வெட்டப்பட்டு முண்டமாக இருக்கும் காளியின் உடல் நரகத்தினுள் தொலைந்து போக தேவர்கள் அத்தலையை விபச்சாரி ஒருவரின் உடலோடு பொருத்துகிறார்கள்

ஆனாலும் காளி, இந்திரனின் தேவலோகத்தில் ஆட்சிபுரியத் திரும்பிச் செல்லவில்லை. காரணம் விலைமகளுக்கான பழைய நினைவுகளே தெய்வீகத் தலை பொருத்தப்பட்டிருந்த அவளுடைய உடலுக்குள் வளைய வந்து கொண்டிருந்தன அதனைத்தொடர்ந்து காளி மிகவும் பயங்கரமாக உக்கிரமாக மாறுகிறாள். இந்நிலையில் காளியின் செயல்கள் பற்றிய வருணனைகள் தான் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறமற்ற மனநிலையை பறை சாற்றுகிறது.

காளியை பற்றி வருணனையில், அவள் அருவருப்பாக இருக்கிறாள். கீழ்ச்சாதியினரிடமும், பிற்படுத்தப்பட்டோரிடமும் உறவு கொண்டதால் தன்னுடைய தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்தை அவள் இழந்து விட்டிருந்தாள். தொழுநோயாளிகளால் முத்தமிடப்பட்ட அவளுடைய முகத்தில் நட்சத்திரப் பொருக்குகள் தோன்றியிருந்தன. கடுங்குளிரினால் குளிக்காமலேயே இருந்த ஒட்டக ஓட்டிகளின் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். பார்வையிழந்த பிச்சைக்காரர்களின் பூச்சிகள் மண்டிய படுக்கைகளில் படுக்கிறாள். பிராமணர்களின் தழுவல்களிலிருந்து விலகி சவங்களைக் கழுவும் பணியைச் செய்யும் பகல் வெளிச்சத்தை மாசுபடுத்தும் அருவருப்பூட்டும் இனத்தைச் சேர்ந்த வறியவர்களின் அணைப்பைத் தேடிச் செல்கிறாள். இப்படியாக தான் நீளுகிறது. 

காளி சாமானிய மக்களின் ஊர்தெய்வமாக, எல்லை தெய்வமாக போற்றி கொண்டாடப்படும் நாட்டில் காளி பற்றி சிறுவயதில் நான் கேள்விப்பட்ட செவி வழி கதைகள் ஏராளம், ஆனால் இந்த கதையில் வரும் தத்துவார்த்த சிந்தனைகள் அனைத்துமே மிக நன்றாக இருந்தாலும், காளியின் செயல்களை ஒப்பீடு செய்திருக்கும் அனைத்தும் ஜாதிய வன்மமாக தான் உணர முடிகிறது. இந்த தொகுப்பில் பல கதைகள் செவி வழி நாடோடிக்கதைகள் தான் என்பதால், அவர் செவி வழி கேட்ட புனைந்ததாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி செவி வழி என்றால், இந்தியாவின் ஜாதிய சிந்தனை கீழை நாடுகள் வரை பரவியிருக்கும் விதத்தை இதன் மூலம் வராலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தான் பார்க்கிறேன். 

சர்ச்சைக்குரிய இந்த கதையை தவிர்த்து எனக்கு பிடித்த மீதி இரண்டு கதைகளை மட்டும்  கீழே கூறியிருக்கிறேன்.. “இளவரசர் ஜெங்கியின் கடைசிக் காதல்” என்னும் கதை ஒரு பெண்ணின் மாறாக்காதலையும் இறுதியில் அவள் அடையும் ஏமாற்றத்தையும் பேசுகிறது.

நாயகனான இளவரசர் ஜெங்கி காதல் இளவரசனாக வலம் வருகிறார், ஏகப்பட்ட மனைவிகள், ஆசை நாயகிகள் என்று இருப்பதால் அவரால் ஒருவரின் காதலையும் நுணுக்கமாக உள்வாங்கவோ, நினைவுக்கு கொண்டு வரவோ முடியவில்லை. ஐம்பது வயதாகும் போது முதுமை வேறு சிந்தனையை தர தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மலையில் தான் கட்டி வைத்திருக்கும் குடிலுக்கு சென்றுவிடுகிறார். சிறிது வருடங்களில் எல்லாம் உலகத்துடனான தனது தொடர்பை முற்றிலும் துண்டித்து கொள்கிறார்.

ஆன்மீக புத்தகங்கள் தனிமை என்று இருக்கும் அவரை அவரது ஆசை நாயகியில் ஒருவரும், அவரை மிகவும் நேசிப்பவளுமான பெண் அவருடன் கடைசி காலத்தில் அவருக்கு பணிவிடை செய்து அவருடன் காலம் கழிக்க பிரியப்படுகிறாள். அப்போதாவது தன்னை மட்டும் நேசித்து, தான் அவரை நேசிக்கும் காதலை புரிந்து கொள்வார் என. முதல் முறை பயணித்து அவரின் இருப்பிடம் அடைய, பழைய நினைவுகளை கிளறியதற்காக அவர் கடிந்து அவளை விரட்டிவிடுகிறார். இதனிடையே அவரின் பார்வை மெல்ல மெல்ல மங்குகிறது.

அவர் குடிலில் எப்படியாவது புகுந்து அவருடன் எஞ்சிய காலத்தை கழிக்க முடிவெடுக்கும்பெண் ஒரு குடியானவளாக வேஷம் போட்டு அவரின் குடிலை அடைகிறாள். பார்வை முற்றிலும் மங்காத அவர் , இரவில் தனிமையில் அவள் அழகில் அடைக்கலமாகிறார். பின்னர் அவர் தவறு உரைக்க அவளை விரட்டி விடுகிறார். ஆனாலும் அவள் சென்ற பின் அவருள் இருந்த காதல் உணர்வுகள் தகிக்க தொடங்குவதால், தனிமை வெறுக்கிறது. பார்வையும் முற்றிலும் போய்விடுகிறது.

இப்போது அந்த பெண் வேறு ஒருவனின் மனைவியாக வேடம் போட்டு, புனித யாத்திரை போகப்போவதாக ஒரு இரவு தங்க அனுமதி கேட்கிறாள். இளவரசர் அனுமதிக்க அவள் பாடுகிறாள் அந்த குரலில் உணர்ச்சிவசப்படும் அவர் அந்த பெண்ணிடம் மீண்டும் உறவு கொள்கிறார். அவளை போகவிடாமல் தன்னுடன் தங்க வைத்து கொள்கிறார். அவள் அவருக்கு பணிவிடை செய்து தங்குகிறாள்.

இறக்கும் தருவாய் வருகிறது இளவரசனுக்கு. அப்போது அவர் அவளிடம் தன் வாழ்வில் வந்த போன அனைத்து பெண்களை பற்றியும் கூறுகிறார். அவள் குடியான பெண் வேடம் தரித்து வந்ததை கூட நினைவு கூறும் அவருக்கு ஆசை நாயகியாக இருந்த அவளது பெயர் மட்டும் நினைவுக்கு வரவில்லை.. அவள் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அவரிடம் தன்னுடைய பெயரை கூறி அவளை நினைவில்லையா, அவளை பற்றி கூறுங்கள் என்கிறாள். ஆனால் அதற்குள் இளவரசர் இறந்துவிடுகிறார்.

அந்த பெண் வெடித்து அழுவதாக , தன் தலை முடியை எல்லாம் பிய்த்து காற்றில் பறக்க விடுகிறாள் என கதை முடிகிறது. இந்த கதையில் வரும் கவித்துவமான வரிகள் , அழகியல் எல்லாம் சான்ஸே இல்லை….


அடுத்த கதை ஸ்ரீ ராம் மொழிப்பெயர்த்தது. இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் அவர் மொழிப்பெயர்ப்பு தான். ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும். கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதிய”உயிர் தப்பிய வாங்-ஃபோ” சிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம். ஆனால் நீ தூரிகையில் காண்பிக்கும் உலகம், என்னுடைய உடைமகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது. கதை நெடுகிலும் வரும் இலக்கிய வர்ணனைகளும், ஒப்புமை வார்த்தையழகும் மனதை அள்ளுகிறது.  

மார்கோவின் சிரிப்பு, மரணத்தின் பால், மோகினிகளை நேசித்த மனிதன் ஆகிய கதைகளை வாசிக்கும்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது. அவை செவி வழி கதைகள் என்று. ஏனென்றால் கிட்டத்தட்ட இதே போன்று கதைகள் நமது வட்டார கதைகளாக வேறு வேறு பெயரில் நம்மிடையே உலவியவை தான்.. ஆசிரியரின் எழுத்து நடையும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் உவமைகளும், அதிலுள்ள இலக்கிய சுவையும் மனதை கவர்கிறது.

Wednesday, 4 October 2017

உயிர் தப்பிய வாங்-ஃபோ - ப்ரெஞ்ச் சிறுகதை

ப்ரெஞ்ச் கதைகளை ஸ்ரீராமின் மொழிப்பெயர்ப்பில் நம்பி வாசிக்கலாம். ஸ்ரீ ராமின் உறுத்தாத மொழிப்பெயர்ப்பு கடினமான கதைக்களத்துக்குள்ளும் நம்மை பயணிக்க செய்யும்.  கீழை நாட்டு கதை தொகுப்பில் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதிய”உயிர் தப்பிய  வாங்-ஃபோ” சிறுகதை கலையின் எழுச்சியை பேசுகிறது. வாங்-ஃபோ என்ற முதிய ஓவியன். அவன் க்ளப்பில் குடித்துக்கொண்டிருக்கும்போது அவனை சேஃப் சோனில், பதினைந்து வயதில் திருமணம் முடித்து, இளம் மனைவியுடன் அமைதியான (அவனுக்கு கற்பிக்கப்பட்ட) வாழ்க்கை வாழும் பணக்கார வீட்டு பிள்ளை, எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான். ஓவியனுடன் பேச, அவனின் பேச்சாலும், ஓவியத்தாலும் ஈர்க்கப்படுகிறான். அதன் பின்னர் வாழ்க்கை குறித்த அவனது பார்வையே மாறுகிறது.

ஒவியனை வீட்டுக்கு வரவழைக்கிறான். அந்த முதிய ஓவியனுக்கு சிஷ்யனாக சேவை செய்கிறான். இவனின் இளம் மனைவி இவன் பழைய மாதிரி இல்லாததால் தூக்கு போட்டு சாகிறாள். அதையும் ஓவியமாக தீட்டுகிறான். அப்போது கூட அவள் கணவன் அழாமல் தூரிகைக்கு வண்ணம் குழைக்கும் வேலையை செய்கிறான். அவன் ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வாங்க தன்னுடைய அடிமைகள், சொத்துகளை இழக்கிறான். இறுதியில் இழக்க ஒன்றுமில்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த முதிய ஓவியனுக்கு சிருஷ்டை செய்கிறான் இளைஞன் . நாடோடிகளாக திரிகிறார்கள் இருவரும், ஒவியன் வரைந்து தள்ளுகிறான். முடிக்கபடாத ஓவியங்கள் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய குருவுக்காக உணவை கூட திருடி வருகிறான் இளைஞன். அன்றைய இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டு இருவரும் அரசன் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

அரசன் ஓவியனை நீ பொய்யான உலகத்தை சிருஷ்டிக்கிறாய் உன் கற்பனையால், ஆனால் நிஜமான உலகம் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு பைத்தியக்கார ஓவியனால் வெற்று வெளியில் அள்ளித்தெளிக்கப்பட்டு, நம்முடைய கண்ணீரால் ஓயாமல் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் குழப்பமான வண்ணக்கறைகளின் ஒரு திரட்டுதான் உலகம்.  ஆனால் நீ  தூரிகையில் காண்பிக்கும்  உலகம், என்னுடைய உடைமைகளின் மேல் வெறுப்பை உண்டாக்கி , என்னால் பெற முடியாதவற்றின் மேல் என் ஆசையை தூண்டிவிட்டன. அதனால் உன்னுடைய கண்களை சுட்டு பொசுக்குவதுடன், உன்னுடைய கைகளையும் வெட்ட ஆணையிடுகிறேன் என்கிறான்.

தன்னுடைய குருவை அபாண்டமாக பேசியதால் கோபம் கொண்ட இளைஞன், மன்னர் மேல் பாய, அவன் தலை கொய்யப்படுகிறது. அவன் துடித்து இறக்க, அவனின் ரத்தம் பரவுவதையும் ஓவியமாக பார்க்கிறான் ஒவியன். இறுதியாக முடிக்கப்படாத ஒரு ஓவியத்தை அவன் வரைந்தபின் ஒவியனுக்கான தண்டனையை நிறைவேற்ற ஆணையிடுகிறான் அரசன். அந்த ஒவியத்தை வரையும் போது ஓவியனின் மனநிலை, ஓவியம் முடித்த பின் நடப்பதம், கதையின் முடிவும் வாசகனினிடம் பல்வேறு சிந்தனையை கிளர்த்துகிறது.