Tuesday, 10 December 2013

மனிதர்கள்

பரதேசி படம் பார்த்து கொத்தடிமை வாழ்க்கை முறை பற்றி நிறைய பரிதாப்படுகிறோம்..ஆனால் அதற்கு நிகரான உழைப்பு சுரண்டல் நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது...கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு தான் கடந்து செல்கிறோம்...

நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது என் கணவருக்கு வேண்டியவரின் கம்பெனியில்..அது ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம்...ஒரு டிபார்மெண்ட் இன்சார்ஜ்ஜாக எனக்கு வேலை எனக்கு கீழ் இரண்டு பெண் பிள்ளைகள் வோர்கர்ஸ்ஸாக.. நான் வீட்டிலிருந்து அப்போது தான் பிராக்டிக்கலாக வெளி உலகம் வருகிறேன்...என் கணவர் மேல் பயமும் MD க்கு அவர் நெருக்கமானவர் என்பதாலும் என்னிடம் அனைவருமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தனர்..

எனக்கு கீழ் இருந்த இரண்டு பெண்களிடமும் பேச்சு கொடுக்க அவர்களில் ஒருவர் பி,எஸ் .சி பயோ கெமிஸ்ட்ரி முடித்திருந்தார் இன்னொருவர் டிப்ளோமா முடித்திருந்தார்...நீங்கள் இருவரும் படித்துவிட்டு ஏன் ஹெல்பராக வேலை செய்கிறீர்கள் இங்கு என்று கேட்டேன்..அதில் ஒருவர் பஸ் வசதி இல்லாத கிராமம் அந்த பெண் B.Sc., படித்திருந்தாலும் விவரம் தெரியாமல் பார்க்க வேறு சுமாராக இருந்தாள் அந்த பெண் காலை 4 - 5 மணிக்கே எழுந்துவிடுவாளாம் கம்பெனி பஸ் 6 மணிக்கு வரும் அதில் வந்துவிடுவேன் காலை மதியம் இரண்டு வேலையும் கம்பெனில டிபன் சாப்ப்பாடு, மாலை டீ பிஸ்கட் கொடுத்துடுவாங்க..வீட்டுக்கு போக 9 -10 ஆயிடும் ..500/- ரூபாய் என்பது என் குடும்பத்துக்கு பெரிய வருமானம் என்று சொல்ல நீ நான் படித்து இருக்கிறேன் எனக்கு வேறு வேலை கொடுங்க அப்படின்னு கேக்கலாமே என்று சொல்ல அதெல்லாம் அழகா இருந்தா தான்க்கா ஸ்டாப் இல்லைன்னா வோர்கர் தான் என்று சொல்ல...அதன் பின் நான் அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை இல்லாத நேரத்தில் கம்யூட்டர் பற்றி அடிப்படை சொல்லி கொடுத்தேன்...இது போல அந்த கம்பெனியில் பல இடங்களில் நிறைய விஷயங்கள் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னால் என் கணவருக்கும் தர்ம சங்கடம்...என்னால் முடிந்தது அந்த இரண்டு பெண்களுக்கும் ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு கிளம்ப வேண்டும் என்று HR டிபார்ட்மெண்ட்ல பேசி இருவரையும் வேறு ப்ராஞ்ச்க்கு ஸ்டாப்பா ப்ரொமொட் செய்து அனுப்பிவிட்டு நானும் ரிசைன் செய்துவிட்டு வந்து விட்டேன்...

எனக்கு தெரிந்து நிறைய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரி தான் பெண்கள் நிலை...கிராமங்களில் இருந்து பெண்களை இலவச பஸ், சாப்பாடு என்று கூட்டி வந்து காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை உழைப்பை சுரண்டி எடுக்கிறார்கள்...இங்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட், அவருக்கு கமிஷன் எல்லாம் உண்டு....அதை விட அந்த பெண்களிடம் இருந்தும் ஒரு தொகை வேலைக்கு சேர்த்துவிட வாங்கி கொள்கிறார்கள்.... . மேற்பார்வையாளர்கள் 10,,000 மேல் சம்பளம் பெற இவர்கள் வெறும் 500க்கும் ஆயிரத்துக்கும் மாடு மாதிரி உழைக்கிறார்கள்..............

சுவராஸ்யமான மனிதர்கள்

நான் சந்தித்த சுவராஸ்யமான மனிதர்கள்:

நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த இடத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அருமையான சூழலில் வேலை கிடைத்தது.... அவ்வளவு அருமையான மனிதர்கள் படிப்பில், பண்பில் உயர்ந்தவர்களுடன் பணி புரிய என்னுடைய அலுவலக நேரம் அவ்வளவு சந்தோசமாக மாறியது....

மதிய உணவு இடைவெளி நேரங்களில் எவ்வளவு விஷயங்கள் அலசப்படும்..கிண்டல் , கேலி, உலக படிப்பு, உலக சாப்பாடு .ஆன்மிகம், காதல், லோக்கல் ஆஸ்பிட்டலில் நடக்கும் நிகழ்வுகள், என்று நான் தினமும் புதிதாக ஒவ்வொன்று தெரிந்து கொள்வேன்....அதிலும் என்னுடன் பணி புரிந்த ராம்குமார் (தற்போது கத்தாரில் பணி புரிகிறார்) பேசுவது அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும்...பெரும்பாலும் யாரையும் பேச விடாமல் அவரே முந்தி கொள்வார்...அவரின் பேச்சின் சுவராஸ்யம் காரணமாக நாங்கள் அவர் பேசுவதை கேட்கவே விரும்புவோம்...அவரது கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் நடந்தது என ஆரம்பித்து எங்கெங்கோ சென்று விடுவார், இடையில் சுபா நான் எங்க விட்டேன். (இவர் தற்போது ஆஸ்திரேலியாவில்) என்று கேட்க அவர் எடுத்து கொடுக்க இதற்க்கு தான் சுபா பக்கத்துல இருக்கணும் பாருங்க நீங்க எல்லாம் பேச்சு பராக்குல விட்டுட்டீங்க அவங்க கரெக்டா எடுத்து கொடுக்கிறாங்க என்று அவர்களையும் கலாய்ப்பார்.. எப்பவும் நான் தான் பேசணுமா நீங்க யாராச்சும் பேச கூடாதா என்று சொல்லி யாராவது பேச ஆரம்பித்தால் இவர் இப்படி தான் என்று தன் ரூட்டுக்கு பேச்சை கொண்டு சென்று விடுவார்... ..மிமிக்ரி எல்லாரையும் போல செய்வார்...சாப்பிடும் போது புரை ஏறும் அளவுக்கு எல்லாம் சிரித்து இருக்கிறோம்....

ஒரு முறை நான் சார் என்னை போல மிமிக்ரி பண்ணுங்க என்று சொல்ல...ஐயோ நீங்க பெரியவங்க எவ்ளோ பெரிய பிள்ளைகளுக்கு அம்மா உங்களை எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்ல சார் சார் ப்ளீஸ் என்று சொல்ல அவர் என்னை மாதிரி வேகமாக நடந்து பேசி காண்பிக்க எல்லாரும் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது..நான் அவ்வளவு வேகமாக நடப்பேன் பேசுவேன் என்பதே எனக்கு அப்போது தான் புரிந்தது...பின் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் எங்கள் வீட்டுக்கு நண்பர்கள் என்று வர நட்பு அழகாக சென்றது....அதன் பின் முதலில் சுபா அவர்களுக்கு வேலை கிடைத்து ஆஸ்திரேலியா செல்ல, ராம் சார் கத்தார் செல்ல, கணேஷ் அவர்களும் ஆஸ்திரேலியா செல்ல அந்த சுவராஸ்யமும் அவர்களுடனே சென்று விட்டது...என் மகனுக்கு கிட்னி ஸ்டோன் வந்த போது நான் மிக கலக்குமுற்று இருந்தேன்...ராம் சார் கத்தாரில் இருந்த போதும் அவர் மனைவியிடம் அவர்கள் பையன் மேல் பயங்கர பிரியம் நீ போய் நேரில் பார்த்து தைரியம் சொல்லு என்று சொல்ல அவர்களும் (இப்போது கைனகாலாஜி மேற்படிப்பு படிக்கிறார்கள்) வந்து பார்த்து விஜயா ஹாஸ்பிட்டலில் ப்ரெண்ட் டாக்டர்கள் இருக்கிறார்கள் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் இதெல்லாம் சாதாரணம் என்று கூறிய ஆறுதல் அந்த நேரத்தில் எனக்கு மிக பெரிய பலம்....

கத்தார் போய் சில மாதங்கள் கழித்து திரும்பி வந்த போது குரல் மாற்றி என் பெயரை சொல்லி அது நீங்க தானே நீங்க ---- அங்க தானே வேலை பார்கறீங்க நான் டிவில இருந்து பேசுறேன் என்று என்னை குழப்பி நான் அப்போது இரவு சாப்பாடு என் கணவருக்கு வைத்து கொண்டு இருந்தேன்...என் கணவர் ஹேய் ஏதாவது ராங் நம்பரா இருக்க போகுது பசிக்குது கட் பண்ணு என்று சொல்ல நான் இல்லைங்க என் பெயர், வேலை பார்க்கும் இடம் எல்லாம் சரியா சொல்லறாங்களே என்று குழம்ப என் கணவர் சரி போனை குடு உனக்கு நேத்து பேசினவங்களே நியாபகம் இருக்காது என்று வாங்க போக மேம் நான் ராம் பேசுறேன் என்று சொல்லி என்னை வழிய வைத்தது மறக்கவே முடியாது....

இப்போது முகநூலிலும்,போனிலும் என்று நட்பு தொடர்கிறது.....நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் நண்பர்களாக அமைந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதை சில விஷயங்கள் அசை போடும் போது புரிகிறது... அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்த நாட்கள் நெஞ்சில் என்றும் பசுமையாக...........

மறக்க முடியா மனிதர்கள்

நான் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள் :

சென்னை புதிது அப்போது எங்களுக்கு ..என் சிறிய மகன் கைக்குழந்தை வயிற்று போக்கு நிக்காமல் அன்று சனிக்கிழமை வேறு மயிலாப்பூரில் டாக்டரிடம் காண்பிக்க மருந்து கொடுத்து சரியாகிவிடும் என்று அனுப்பிவிட்டார்கள்...ஆனால் மறுநாள் நிற்கவே இல்லை ஞாயிறு டாக்டர்களும் வரவில்லை...என்ன செய்ய என்று தெரியவில்லை...பெரிய மகன் அம்மா வீட்டில் வளர்த்ததால் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது..இந்தளவு போன் தொடர்பும் அப்போது இல்லை ..என் கணவரும் நானும் செய்வதரியாமல் மனம் கலங்கி நிற்க எதிர் வீட்டு மாமி " தேவகி ஹாஸ்பிடல்" போ அங்கு கண்டிப்பாக யாராவது டாக்டர்கள் இருப்பார்கள் என்று சொல்ல நானும் கணவரும் சென்றோம்..

ஹாஸ்பிட்டலில் ட்ரிப்ஸ் ஏற்றவேண்டும் உடனே அட்மிட் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள்... 3 மாத குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு நரம்பு எடுக்க ஊசியில் குத்த என்னையும் என் கணவரையும் வெளியே அனுப்பி விட்டார்கள் என் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்க நாங்கள் இருவருமே அழ ஆரம்பித்துவிட்டோம்..பெரியவர்கள், உறவினர்கள் யாரும் இல்லாத கொடுமை அப்போது தான் தெரிந்தது...என் பிள்ளையை பார்க்க பார்க்க அழுகை வேறு ட்ரிப்ஸ் தவிர பால், தாய்ப்பால் எதுவும் தரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. இரவு பையன் கண் விழித்து பசியில் கத்துகிறான்..என்ன செய்ய என்று தெரியவில்லை நர்ஸ் போன் பண்ணி டாக்டரிடம் சொல்ல டாக்டர் பொட்டுகடலை மாவு கஞ்சி சிறிது உப்பு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம் என்று கூறிவிட்டார்...கீழே செல்ல கேண்ட்டீன் பூட்டி விட்டார்கள் என்று கணவர் சொன்னார் இரவு பதினோருமணி...ஆஸ்பிட்டல் விட்டு வெளியேயும் வர முடியாது குழந்தையோ அழுகிறது...நர்ஸ் கொஞ்சம் இருங்கள் என்று குழந்தை கையில் மருந்து ஏற்றி கொண்டு இருந்த ட்ரிப்ஸ் கழட்டி நீங்கள் அணையுங்கள் குழந்தையை நான் கஞ்சிக்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று என் கணவரை கூட்டி கொண்டு சென்றார்...

அவர்கள் வரும் வரை என் குழந்தையை வைத்து கொண்டு தவித்தேன்...நர்ஸ் யாரையோ எழுப்பி எப்படியோ கஞ்சி செய்து எடுத்து கொண்டு வந்து குழந்தைக்கு கொடுக்க குழந்தை அழுகை நிறுத்தியது...நான் சோர்ந்துவிட்டேன் அழுதழுது..நர்ஸ் நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள்.. விடியும் வரை உங்கள் குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன்...வயிறு நிரம்பிவிட்டது ட்ரிப்ஸ்ல மருந்தும் இருப்பதால் குழந்தை தூங்கும் என்று சொல்லி அவர் கூடவே இருந்து கவனித்து கொண்டார்..அந்த நர்ஸ் பெண் ஒரு கிறிஸ்துவ மலையாளி பெண்...

அதன் பின் குழந்தை படிப்படியாக சீரடைய அதற்குள் என் உறவினர்கள் வந்து விட்டார்கள் என்னையும் குழந்தையும் கவனித்து கொள்ள ஆனால் அந்த இரண்டு நாட்களும் அந்த பெண் ஆஸ்பத்ரியில் செய்த சேவை மறக்க முடியாதது...நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது என் கணவர் தனியாக அந்த பெண்ணிடம் பணம் கொடுக்க அவர் வாங்க மறுத்து விட்டார்...என் வேலைக்கு நான் சம்பளம் வாங்குகிறேன்...உங்கள் குழந்தை பசியில் அழுதது அதை பார்த்து நீங்கள் அழுதது எல்லாம் என் உணர்வையும் உலுக்கியது அது உணர்வு அதற்கு எல்லாம் பணம் கொடுத்து அதன் மதிப்பை குறைக்காதீர்கள் என்று சொல்லினார் ...நான் அந்த பெண்ணின் கையை பற்றி கொண்டேன் .. சம்பளத்துக்கு தான் வேலை செய்கிறார்கள் ஆனாலும் அதையும் தன வேலையின் பொறுப்பு உணர்ந்து செய்பவர்கள் எத்தனை பேர்....எந்த ஹாஸ்பிடல் சென்றாலும் அந்த பெண்ணை என் கண்கள் தேடும்...தேவகி ஹாஸ்பிடல் என்று ஏதாவது செய்தி கேட்டாலே அந்த பெண்ணின் முகம் தான் மனக்கண்ணில் வரும்.........

ஆட்டோ கிராப்

இப்போது பெரும்பாலும் யாரும் கடிகாரம் மணி பார்க்க உபயோகிப்பதில்லை..மொபைல் அந்த வேலையை செய்துவிடுகிறது...

நான் முதன் முதலில் வாட்ச் கட்டியது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் தந்தையின் நண்பர் வெளிநாடு சென்று வர அவரிடம் இருந்து என் தந்தை வாங்கி எனக்கு அன்பளிப்பாக தந்தது...அப்போது அதன் விலை ஐநூறு(அப்போது அது கொஞ்சம் காஸ்ட்லி) வாங்கி கொடுத்து இருந்தார்கள்...ஆலிவ் கிரீன்ல சின்னதா ஓவல் சைஸ்ல ரேடியம் உள்ள வாட்ச், கிழமை, தேதி எல்லாம் தெரியும் ஆட்டோமேடிக் வாட்ச்..(அப்போது கீ கொடுக்கும் வாட்ச்சுகள் தான் அதிகம் )

நான் அதை என்னுடைய பதினோராம் வகுப்பு வரை கட்டியிருந்தேன்...வளையல் மறந்தாலும் வாட்ச் கட்ட மறந்ததில்லை... வாலிபால் விளையாட போகும் போது கழட்டி வைத்து விடுவேன்...ஒரு நாள் கழட்டாமல் செல்ல விளையாடும் போது சட்டென்று கழட்டி ஸ்கர்ட் பாக்கெட்டில் போட்டு விளையாட ஆரம்பித்துவிட்டேன்.. ப்ராக்டீஸ் முடிந்து கை கால் முகம் கழுவி சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்ப நேரம் பார்க்கும் போது தான் வாட்ச் நியாபகம்... பார்த்தால் காணவில்லை..இருட்ட ஆரம்பிக்கும் நேரம், நானும் நான் விளையாடிய இடம், முகம் கழுவிய இடம் எல்லாம் தேடி கிடைக்கவில்லை ..

மனம் ரொம்ப சங்கடம்...வீட்டில் வந்தால் அம்மா இவளுக்கு என்னைக்கு பொறுப்பு இருந்திருக்கு என்று டோஸ் ... எவ்வளவோ பொருட்கள் தொலைத்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளாத நான் அந்த வாட்ச் தொலைத்தற்கு ரொம்ப பீல் பண்ணினேன்...அதன் பின் மறுநாள் தேடியும் பள்ளியில் சொல்லியும் கிடைக்கவில்லை...இன்று வரை அதற்கு பின் எவ்வளவோ வாட்சுகள் மாற்றி மாற்றி வாங்கிவிட்டேன்..ஆனால் ஓடும் வரை அதன் பின் வேறு ஒன்று என்ற ரீதியில் தான் போய் கொண்டு இருக்கிறது...

குழந்தை உலகம்

குழந்தைகளின் உலகம் எவ்வளவு ரம்மியமானது...அதுவும் விவரம் புரியாமல் அந்த பருவத்தில் அவற்றின் பயங்களும், கேள்விகளும் நமக்கு எத்தனை வயதானாலும் மறப்பதில்லை..அதை அவர்கள் வளர்ந்தவுடன் சொல்லி கலாய்ப்பது இருக்கே.......

என் சிறிய மகன் சிறு வயதில் நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பான்..அப்போது அவன் எல்.கே.ஜி. படித்துகொண்டு இருந்தான்....நாங்கள் அவனின் இந்த இடைவிடாத கொறிக்கும் பழக்கத்தை கிண்டல் செய்வோம்...என் தங்கை ஒரு நாள் நல்ல வேளை பெண்ணாக பிறக்கவில்லை பிறந்து வளர்ந்தால் நாளை பிள்ளை பெக்க்ரப்போ வயிற்றையும் , வாயையும் கட்றது பெரிய கஷ்டமா இல்ல இருக்கும் என்று சொல்லி சிரிக்க...நாங்கள் அதன் பின் வேலை என்று பிஸி ஆகிவிட்டோம்..

அதன் பின் இரவு என் பையனுக்கு எப்போதும் கதை சொல்ல வேண்டும் இல்லை அவன் கதை சொல்வதை கேட்க வேண்டும் அன்று படுத்தவுடன் எப்பமா குழந்தை பிறக்கும் என்று கேட்டான்...நானும் அது பெரியவர்களா வளர்ந்த பின் என்று சொல்ல அப்ப நானும் பெரியவனான பின் எனக்கும் குழந்தை பிறக்குமா என்று கேட்க ஆமாம் டா இப்ப உனக்கு புரியாது நீ வளர்ந்த பின் சொல்கிறேன் என்று சொல்ல அவன் அழ ஆரம்பித்துவிட்டான்....என்னடா என்னடா என்று கேட்க சித்தி சொன்னுச்சே குழந்தை பிறந்தா 3 நாள் ஹாஸ்பிட்டலில் இருக்கனுமாம் ...சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டார்களாம் ...அப்ப எனக்கும் 3 நாள் சாப்பிட கொடுக்க மாட்டாங்களா என்று அழ........... எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை அவனை நிறைய சொல்லி சமாதானம் செய்தோம் ...பெண் பிள்ளைக்கு தான் பிறக்கும் உனக்கு ஒன்றும் இல்லை அப்படி இப்படின்னு அதை இன்று வரை சொல்லி அவனை கலாய்த்து கொண்டு இருக்கிறோம்.............உண்ணாவிரதம் இருக்க சொன்ன உன்னை தாண்டா முதலில் அனுப்பனும் என்று....

தேடல்


இம்முறை கும்பகோணம் சென்ற போது என் பால்ய வயது நண்பனை சந்தித்து அளவளாவ சிறிது நேரம் கிடைத்தது.மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்...எங்கள் வீட்டு மாடி பகுதியில் குடியிருந்தவர்கள்....சிறு வயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம்.மகாமகம் தெப்ப குளத்தில் என் தம்பி குழந்தைகளுடன் தெப்பம் பார்த்த போது மனம் ரொம்ப லேசாக இருந்தது...

என் நண்பன் எப்படி இருக்கிறது வாழ்க்கை என்றான்... நல்லா போய்கிட்டு இருக்கு.. நீ ஏன் சென்னை பக்கம் வரவில்லை. ட்ரைனிங் முடிச்சதோட சரி.. அப்புறம் இங்கயே செட்டில் ஆயிட்டியே ஏன்னு கேட்டேன்? கமலி காலைல எழுந்து பஸ் புடிக்க ஒட வேணாம், பொறுமையா எழுந்து நிதானமா 9 - 10 மணிக்கு கடைக்கு போனா போதும், மதியம் வீட்டில வந்து சாப்ட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் திருப்பி காபி குடிச்சுட்டு கோயில ஒரு சுத்து சுத்திட்டு திருப்பி கடைக்கு போய்ட்டு ராத்திரி வீட்டுக்கு வரேன்.. ரொம்ப சம்பாரிக்கல, கும்பகோணத்துலயே வீடு கட்டிட்டேன், தங்கைகு கல்யாணம் பண்ணிட்டேன், பையன மெட்ரிகுலெஷன்ல படிக்க வைக்கிறேன், பெரிய பரபரப்பு இல்ல.. எனக்கு இது புடிச்சிருக்கு,,,

எங்கப்பா வற்புருத்தல நான் சென்னை வந்திருந்தா இவ்ளோ நிம்மதியா இருந்திருப்பேனா தெரியல கமலி.. ஆரம்பத்துல என் அப்பாக்கு பயங்கர வருத்தம்,.. ஆனா நான் இங்கயே இருக்கனும்னு முடிவு பண்ணினது சென்னைக்கு ட்ரெயினிங் வந்தப்போ தான்.. சொந்தகாரவங்க, ஃப்ரண்ட்ஸ், எல்லாம் நின்னு பேச கூட நேரம் இல்லாம ஒடறத பார்த்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தென்.. உண்மைய சொல்லு, நீ என்ன இந்த நாட்கள்ல எத்தனை நாள் நினைச்சு பார்த்திருப்ப அப்படின்னு கேட்டான்.. என்னால் பதில் சொல்ல முடியல.. நீ என் மனைவியிடம் கேள் அப்படின்னான்.. அவன் மனைவி கண்டிப்பா ஒரு நாளுக்கு ஒரு வாட்டியாச்சும் உங்க பேர சொல்லாம இருக்க மாட்டாங்க என்று சொன்ன போது வருத்தபட்டேன்.. அவன் நீ சங்கடபடாத உனக்கு அந்த பரபரப்பு வாழ்க்கை புடிச்சிருக்கு, அந்த பரபரப்புக்கு விலை, ஃப்ரண்ட்ஸ் மட்டும் இல்ல, சொந்தம் பந்தங்களும் தான், நான் இந்த வாழ்க்கையில் கிடைத்த எதையும் இழக்க தயாரில்லை.. எனக்கு இது போதும் என்று சொன்ன பொது நான் வாழ்க்கையில் மனிதர்களிடம் இருப்பதை விட்டு எதை புத்தகங்களில் தேடுகிறேன் என்று சிறிது நேரம் நினைத்தேன்…..

விரிசல்

கூரிய முனை போதும்
அடைத்து வைக்கப்பட்ட காற்றை
வேகமாக வெளியேற்ற

அடைக்க முடியா
துளை போதும்
கப்பலை மூழ்கடிக்க

கவனிக்காத விரிசல் போதும்
தண்ணீர் அடைத்து வைக்கும்
அணையை உடைக்க.

ஒரு சொல்
சிறு அலட்சியம் போதும்
அன்யோன்மான உறவுகளை
அந்நியமாக்க...