Friday, 26 December 2014

பயம்



தனிமை பயம்
நெரிசலும் பயம்

இருள் பயம்
அதீத வெளிச்சமும் பயம்

வெயில் பயம்
குளிரும் பயம்

உறவு பயம்
பிரிவும் பயம்

மனிதர்கள் பயம்
விலங்குகளும் பயம்

இயற்கை பயம்
செயற்கையும் பயம்

பேச பயம்
பேசாமல் இருக்கவும் பயம்

உணர்வுகளை சொல்ல பயம்
உணர்வுகளை கொல்லவும் பயம்

எல்லா பயங்களையும் உள்ளே ஓரத்தில் தூங்கவிட்டு
தைரியமாக இன்றைய நாளை எதிர்கொள்வதில் மட்டும் தைரியம்....

New year



ஒவ்வொரு வருடமும் சந்தோசங்களும் துக்கங்களும் கலந்து தான் நம் வாழ்வை கடந்து செல்கிறதுசில கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிடுகிறது....சில கல்வெட்டுகளாக சாகும் வரை பதிந்து விடுகிறது... சந்தோசத்திற்கு குதுகாலித்து துக்கத்திற்கு மனம் வெம்பி என்று நம் மனமும் கூடவே பக்குவப்படாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இரண்டையும் சமமாக பார்க்கும் நிலையை அடைய எவ்வளவு வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை.

சில நண்பர்கள் என்னை விட்டு விலகியதும் சிலரிடம் இருந்து நான் விலகியதும் எதுவும் திட்டமிட்டு எல்லாம் இல்லை. அந்ததந்த உணர்வு கணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளே. பெரும்பாலும் யார் மீதும் தனிப்பட்ட விரோதமில்லை. இவர்களின் கருத்துடன் என்னால் ஒத்து போக முடியாது மாற்று கருத்து என்ற பெயரில் பெரும்பாலும் குதர்க்க கருத்துக்களே வருவதால் தொடர்ந்து நட்பில் இருப்பது எனக்கு மன உளைச்சலை தரும் என்று தோன்றியவர்களிடம்  இருந்து விலகிவிட்டேன். நான் விலகிய விலக்கிய யாரையும் புண்படுத்த செய்யவில்லை.. யாருடனும் ஒட்டி ஒட்டாமல் பழகியதால் விலகி இருப்பதும் எனக்கு எளிதாகவே படுகிறது.   
இந்த வருடம் எனக்கு பல புதிய அனுபவங்களை கொடுத்து கடந்து செல்கிறது.. வேலை நிமித்தமாக இந்த வருடம் பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதது. என் மனதில் ஆழ பதிந்துள்ளது சில நிகழ்வுகள். அதை கண்டிப்பாக பின்னாளில் எழுத வேண்டும்.. 

வரும் வருடத்துக்கு என்று எந்த ஒரு குறிக்கோளோ லட்சியமோ எதிர்ப்பார்ப்போ இல்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்று கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கூடுமானவரை யாரையும் எதன் பொருட்டும் சார்ந்திருக்காத மனநிலை வாய்க்க பெற வேண்டும் என்பதை அன்றி பெரிதாக எந்த பிரார்த்தனையுமில்லை...

புத்தாண்டு என்பதும் மற்றொரு நாளே, நாளொன்று கடப்பதை கொண்டாட தேவையில்லை என்போருண்டு. ஆம் எல்லா நாட்களும் கடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்றோ ஒரு நாள் தான் நின்று நிதானித்து நாம் கடந்து வந்த பாதையை பற்றி சிந்திக்க செய்கிறோம். அப்படி திரும்பி பார்க்கும் போது கடந்து வந்த தூரமும் கடக்க வேண்டிய தூரமும் நம் பயணம் எதை நோக்கி என்று நம்மை உணர வைக்கலாம். அதனால் திரும்பி பார்ப்பதில் தவறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது..
எல்லாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Thursday, 11 December 2014

பெண் விடுதலை

இயல்பாகவே பெண்கள் மீது ஆண்களுக்கு மரியாதை குறைவாகவே இருக்கிறது. காரணம் பெண் என்பவளை ஒரு சொத்தாக உடைமையாக பார்க்கும் ஆணின் மனோபாவம் இன்று நேற்றல்ல ரொம்ப காலமாக இருந்து கொண்டு இருக்கிறது. அதை அவ்வளவு எளிதில் மாற்றி கொள்ள சுயமாக எல்லா ஆண்களாலும் முடியாது. பரந்துபட்ட பார்வை, ஆழமான புரிதல் உள்ள ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம்.. நிலைமை அப்படி இருக்க பெண் தன் செயல்கள் மூலம் மரியாதை குறையாமல் பார்த்து கொண்டால் தான் உண்டு..

பெண்கள் தங்கள் சுயமரியாதையை எங்கெல்லாம் விட்டு கொடுக்கிறார்களோ, தன் தனித் திறமைகளை வளர்த்து கொள்ளாமல் தான் பெண் என்பதை ஒரு காரணியாகவும், அழகை உணர்வுகளை மூலதனமாகவும், ஆண்களின் பலகீனத்தை சாத்காமக்கி கொள்ளவும் செய்கிறார்களோ அங்கெல்லாம் பெண் தோற்று போவதுடன், பெண்களின் மீது மரியாதையும் குறைக்கிறாள். பெண்மையை சவால்களை சமாளிக்கும் சந்திக்கும் விதமாக வளர்த்து கொள்ளாமல், அப்படி தனித்துவமாக வளரும் பெண்களை போல தாங்கள் இல்லாத தாழ்வு மனப்பான்மையால் சக பெண்ணுக்கே எதிரியாக மாறுகிறாள்.

ஒரு பக்கம் வர்த்தக உலகம் பெண்கள் அழகு என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்துவிடாமல் இருக்க எவ்வளவு வகைகளில் மூளை சலவை செய்ய முடியுமோ அவ்வளவு மூளை சலவை செய்கிறது.. அதன் மாயையில் படித்த படிக்காத என்ற பாரபட்சமே இல்லாமல் எல்லாரும் பலி ஆகி கொண்டு தான் இருக்கிறோம் நம்மை அறியாமல்.

இன்னொரு பக்கம் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களை ஆயுதமாக உபயோகிக்கும் ஆண்கள். தன்னை நம்பாமல் ஆணை தான் அதீத பாதுகாப்பு என்று நம்பும் பெண்கள் கிடைத்த ஆணை தக்க வைத்து கொள்வதிலும் அல்லது அத்தகைய பாதுக்காப்புக்காக ஆண்களை தேடுவதிலும் தங்கள் திறமைகளை சாமார்த்தியங்களை வீணடிக்கும் பெண்கள்.

இந்த இரண்டிலிருந்தும் பெண் விடுதலை ஆகி தன்னை நம்பி தன் திறமைகளை வளர்த்து கொண்டு சமூகத்தில் முன்னேறி ஏற்றம் பெற தொடங்குகிறாளோ அப்போது தான் பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம். அப்போது மட்டுமே பெண் உண்மையாக மதிக்கப்படுவாள். ஆனால் இதெல்லாம் எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை..

சமூக வலைத்தளங்களின் உள் பெட்டி அலப்பரைகள்..




இன்பாக்ஸ் அலப்பறைகள்:

குட் மார்னிங். குட் நூன், குட் இவினிங், குட் நைட் ல ஆரம்பித்து காலை வணக்கம்,மாலை வணக்கம் இரவு வணக்கம் என்று சளைக்காமல் அனுப்புவது

இந்த குட் மார்னிங், காலை வணக்கம் எல்லாம் அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து சொன்னால் அட்லீஸ்ட் பிரமோசனின் போது அவர் உங்களை நினைவு கூற உப்யோகாமாக இருக்கும்..

நான் எனக்கு சாட்டில் விருப்பமில்லை, எனக்கு வணக்கங்கள் எல்லாம் வேண்டாம் என்று சொன்ன பின் அதை நிறுத்தி கொண்டவர்கள் உண்டு. அதன் பின்னும் தொடர்ந்து அனுப்புபவர்களை நான் பெரும்பாலும் கண்டு கொள்ளாமல் தான் செல்கிறேன்..

ஒருவருக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தால் அவர்கள் அனைவர்க்கும் ஒருவர் வணக்கம் சொல்ல ஆரம்பித்தால் வணக்கம் தவிர வேறு எந்த பதிவும் போட முடியாது..

நான் எழுதும் பதிவுகள் எல்லாம் பத்தி பத்தியாக தான் இருக்கும் அதுவும் பெரும்பாலும் அப்படியே கூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் தமிழில் மாற்றி என் டைம்லைனில் டைப் செய்து அப்படியே போஸ்ட் செய்வேன். அப்படி இருக்க தொடர்ந்து அந்த நேரத்தில் பாப் அப் ஆகும் மெசேஜ் சில நேரங்களில் எரிச்சல் மனநிலையே கொடுக்கிறது..

கூடுமானவரை என்னிடம் பதிவு தொடர்ப்பாக திருத்தம் சொல்பவர்களுக்கு, அல்லது ஏதாவது பகிர நினைப்பவர்களிடம் என்னை மதிப்பவர்களுக்கு நான் பதில் அளிக்கவே செய்கிறேன். ஆனால் இந்த வணக்கங்கள், சாப்ட்டியா? நல்லா இருக்கியா? இதை எல்லாம் தவிர்த்து விடுலாமே

வணக்கம் சொல்றது ஒரு குத்தமா என்று கேட்கும் முன் அது அவசியமா என்று கேட்டு பார்த்து கொள்ளுங்கள்...


இன்பாக்ஸ் அலப்பறைகள்  :

இந்த வகை பக்கா சைக்கோக்கள். கோழைகள். நம் நட்பு வட்டத்திலேயே இருக்க மாட்டார்கள். சொந்த படம் ப்ரோபைலில் இருக்காது. படித்தது சென்னை யுனிவர்சிட்டியாக இருக்கும். இருப்பதாக சொல்லி கொள்வது நாம் கேள்விப்படாத ஊராக இருக்கும் . ஆனால் இன்பாக்ஸ்க்கு மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்தவுடனே தெரிந்துவிடும் பக்கா லோக்கல் என்று..

உன்னை தெரியாதா நீ பெரிய இவளா அவளா என்றோ இல்லை ஆரம்பத்திலயே பச்சை பச்சையான வார்த்தைகள் குறித்தோ. பெரும்பாலும் மெசேஜ் பார்த்தவுடன் ப்ளாக் செய்துவிடுவோம். அப்படி இருந்தும் எனக்கு நாப்பது பேக் ஐடி இருக்கு தெரியுமா நான் உன்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் நீ ப்ளாக் செய்தா பெரிய இவளா என்ற ரீதியில் வேறு ஐடியில் இருந்து மெசேஜ் வரும். . ஒருவர் நாப்பது ஐடி வைத்து கொண்டு இயக்குகிறேன் என்றாலே அவரின் லட்சணம் தெரிந்துவிடும். ஒரு பெண்ணிடம் பேச முகம் காட்ட தைரியமில்லாத ஆணுக்கு இருக்கும் வீரம் ஆண்மை கண்டு அப்படியே மெய் சிலிர்த்துவிடும்.. :) :) :)

உனக்கு தான் பொழப்பு இல்லை இல்லை வக்கிரத்துக்கு வடிகால்னு கொட்டிக்கிட்டு இருக்கே வக்கிரத்தைனா அதை எல்லாம் கேட்டு டென்சன் ஆக நாங்க என்ன முட்டாள்களா??? அதையும் ஒரு ஸ்டேட்ஸ் போட்டுட்டு போயிட்டே இருப்போம்ல..எங்ககிட்டேயா :) :) :) :)

ஐ லவ்

லேனா தமிழ்வாணன் பேசி நான் சிறுவயதில் கேட்டது

ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமென்றால் தேர்வில் தோல்வியடைந்தவரிடம் கேள்
ஒரு வாரத்தின் அருமை தெரியவேண்டுமென்றால் ஒரு பத்திரிகை ஆசிரியனை கேள்
ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமென்றால் ரயிலை தவறவிட்டவனை கேள்
ஒரு மைக்ரோ செகன்ட்டின் அருமை தெரியவேண்டுமென்றால் ஓட்டபந்தயத்தில் இரண்டாவதாக வந்தவனை கேள் என்று

அது போல சுதந்திர தினத்தின் அருமை தெரியவேண்டுமென்றால் ஏதோவொரு காரணத்தினால் அடிமைகளாக அல்லது கிட்டதட்ட அடிமைதனத்தில் இருக்கும் நாடுகளில் சென்று சில நாட்கள் தங்கி இருந்து வாருங்கள்.. அப்போது சுதந்திரத்தின் அருமை புரியலாம்..

உலகளவில் ஒரு சாதனை நிகழ்த்தியவர் பெயர் சொல்லும் போது அவர் இந்தியர் என்றோ இந்திய வம்சாவளி என்றோ சொல்லும்போது நமக்குள் நம்மையறியாமல் ஒரு சந்தோஷ கீற்று எட்டி பார்க்கிறதே.. மாஸ்டர் செப், புதிர் போட்டிகள் ,அந்நிய டிவி ஷோக்களில் பார்க்கும்போது வெற்றி பெற்றவர் இந்தியர் எனும்போது சொல்ல முடியா சந்தோசம் வருகிறதே.. இதெல்லாம் யாரும் சொல்லி வருவதில்லை.. தானாக எழும் உணர்வு..

proud to be indian...I ♥ India

ஏர்டெல் - புதிய விளம்பரம் ஒரு பார்வை

ஏர்டெல் விளம்பரம் அட என்று கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கிறது. மனைவி கணவனுக்கு பாஸாக அலுவலகத்தில் உத்தரவுகள் இட்டு பின் வீட்டில் கணவருக்காக காதலுடன் காத்திருப்பதுமாக கொஞ்சம் மாடர்ன் கவிதையாக தான் இருக்கிறது..

மனைவி பாஸ் ஆறது சந்தோசமா என்று ஆணாதிக்கவாதிகளும், என்ன பாஸ்சா இருந்தாலும் வீட்டில் சமைதது காத்திருப்பது போல தான் காட்டணுமா என்று பெண்ணியவாதிகளும் பொங்கும் முன்..

பெண் வேலைக்கு போவதையே ஏற்று கொள்ளாத சமூகம், அப்படியே வேலைக்கு போனாலும் கணவனை விட ஒரு படி கீழ் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தில் மனைவியை கணவரின் மேலதிகாரியாக காட்ட தலைபப்பட்டிருப்பதே வரவேற்கபட வேண்டிய விஷயம்...

பி.கு : விளம்பரம் தான் ஈர்க்கிறதே தவிர ஏர்டெல் டேட்டா கார்ட் நெட் சேவை சரியாக இல்லை என்பது வேறு விஷயம்.

சென்னை டே

எப்பவும் நம்முடனே இருக்கும் நம்முடன் கலந்துவிட்ட ஒன்றை அது உறவாக இருந்தாலும் சரி இடமாக இருந்தாலும் சரி நம்மிலிருந்து பிரித்து பார்ப்பதில்லை அதனாலேயே அதன் அருமையும் அவ்வளவாக உணர்வதில்லை உறவை பாராட்ட ஏதோ ஒரு நாள் போல இடத்தை பாராட்ட ஒரு தினம். சென்னை தினமும் அப்படியான ஒன்றாக தான் நினைக்கிறேன்.

சென்னை தின்று செரித்த கனவுகள் ஏராளம். எத்தனையோ ஊர் பெயர் முகவரி தெரியாதவர்களை, படித்தவர்களை, படிக்காதவர்களை, கனவுகள் சுமந்து திரிபவர்களை, வெறியுடன் உழைப்பவர்களை எந்த பாரபட்சமில்லாமல் தூக்கிவிட்டும், தூர வீசிவிட்டும் அமைதியாக இருக்கிறது.

அதிக ஆண் பெண் பேதமில்லாமல், சாதி, இன, மொழி பேதமில்லாமல் எல்லாரையும் சமமாக நினைக்க உணர வைத்து கொண்டிருக்கும் நகரம் சென்னை. என்ன தான் புறாகூண்டு அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை என்றாலும் சொந்த ஊரில் கனவாக ஒரு காலத்தில் தோன்றியதெல்லாம் நினைவாக சாத்தியமானது சென்னையில் தான்.

பெண்ணாக எனக்கான அடையாளமும் அங்கீகாரமும் எனக்கு சென்னையில் தான் கிடைத்தது. கும்பகோணத்தில் இருந்திருந்தால் இவ்வளவு உத்வேகம் வந்திருக்குமா, இவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்குமா, இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். என்ன தான் தேடல் இருந்தாலும் வழி இல்லாத இடத்தில் முட்டி மோதி வெளிவர நிறைய போராட வேண்டியிருக்கும். ஒரு குறுகிய வட்டம் தாண்டி வெளியே வந்திருக்க முடியாது. அப்படியே வந்தாலும் நம்முடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு விமர்சிக்கப்படும். ஆனால் சென்னை பல வழிகளை நம் கண் முன் வைத்திருக்கிறது. திறமையோடு வருவோருக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக்கி தருகிறது.

என்ன தான் சொந்த ஊர் பெருமை பீற்றிகொன்டாலும் சென்னை எனக்குள் நிகழ்த்தியிருக்கும் அற்புதங்கள் ஏராளம். ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல பெரிய கட்டுரையாக ஆகிவிடும்.. அவ்வளவு இருக்கு சென்னை எனக்கு கொடுத்து இருக்கும் அனுபங்கள்.. அதை எல்லாம் இன்று அசை போட்டு பார்க்க ஒரு தினமாக சென்னை தினத்தை நினைக்கிறேன்.. லவ் யூ சென்னை ♥ ...

ஆணின் வெட்கம் - :)

எப்போதும் தானியங்கி படிக்கட்டுகளில் (எக்ச்லேட்டர்) ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பயமும் தயக்கமும் காட்டுவார்கள். நான் செல்லும் போது அப்படி யாராவது தடுமாறி தயங்கினால் அவர்களை கை பிடித்து கூட்டி செல்வேன்.

இன்று அவ்வாறு வரும் போது இரு இளைஞர்கள் இசை கலைஞர்கள் தடுமாறி கொண்டு நின்றார்கள். . நாதஸ்வரம் தோளில் மாட்டி ஒருவரும், தவில் மாட்டி கொண்டு இருந்த ஒருவரும். இருவரும் தழைய தழைய வேஷ்டி உடுத்தி இருந்தனர். அதில் தவில் மாட்டி இருந்தவர் ஒருவாறு சமாளித்து ஏறிவிட்டார், ஆனால் நாதஸ்வரம் மாட்டியவர் முன்னும் பின்னும் அலைமோதினார். நான் அவரிடம் வேஷ்டியை அந்த கையால் கொஞ்சம் தூக்கி பிடித்து என் கையை பிடித்து கொள்ளுங்கள் என்னுடன் சேர்ந்து காலை எடுத்து வையுங்கள் என்று சொல்ல தயங்கி பின் பிடித்து கொண்டார்.

என் கையை பிடித்த அவரின் கையில் பயத்தையும் பதட்டத்தையும் உணர முடிந்தது. ஏறி முடித்த பின் கையை விடுவிக்க சொன்னேன். அப்போது தான் அவரின் செயல் அவருக்கு உரைத்து இருக்கு போல கூச்சத்துடன் கையை விடுவித்து கொண்டார்.. இன்னும் சென்னையின் இயந்திர "தாங்கஸ்" க்கு பழகவில்லை போலும். இதுதாங்க முத தடவ அதான் கொஞ்சம் பயமா இருந்துச்சு என்று முகத்தில் ஒரு வெட்கம் காட்டினார் பாருங்கள்.. சான்ஸே இல்லை.. நான் வேஷ்டியை மட்டும் கொஞ்சம் தூக்கி கட்டி கொள்ளுங்கள் போக போக பயம் இருக்காது என்று சொல்லி விடை பெற்று ரயில் நிலையம் விரைந்தேன்..

யாருங்க சொன்னது பெண்ணின் வெட்கம் தான் அழகு என்று..கள்ளம்கபடமற்ற ஆணின் வெட்கம் பெண்ணின் வெட்கத்தை விட கொள்ளை அழகு..

வளர் இளம் கவிஞர்களே கொஞ்சம் இதை எல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. ஏற்கனவே பெண்ணின் வெட்கத்தை பி.ஹெச். டி லெவலுக்கு எல்லாரும் ஆராய்ந்து விட்டார்கள். நீங்களாவது கொஞ்சம் ஆண்கள் வெட்கப்படும் தருணம் குறித்து எழுதுங்களேன்.....



சிந்து பைரவி - திரைப்படத்தின் இரு காட்சிகள் பற்றி ஒரு சிறு நுணுக்கமான பார்வை.

:

காட்சி 1: அறிவு கம்மி, ரசனை கெட்ட ஜென்மம், முட்டாள் என்று கதை நாயகன் "ஜே.கே.பி. " யால் நினைக்கப்படும் கதாபாத்திரமான சுலோக்சனா. ஒரு காட்சியில் நாயகன் லதா மங்கேஷ்கர் வரிகளில் லயித்து மூழ்கி இருக்க சுலோக்சனா வெளியூர் புறப்படும் கணவருக்கு பருப்பு பொடி தயாரிப்பதற்காக மிக்சியை ஓட விட அது தொந்திராவாகிவிட்டது என்று நாயகன் நாயகியை கடிந்து கொள்ள நாயகி ஒரே கேள்வியில் அசால்ட்டாக உறைய வைத்து செல்வார். 'லதா மங்கேஷ்கர்" ரா நாளைக்கு உங்களுக்கு பருப்பு பொடி அரைத்து தருவார் என்று... அந்த கேள்விக்கு பின் இருக்கும் உண்மை முகத்தில் அறைய வைக்கும்.

காட்சி 2: படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் திருமணம் பற்றி எல்லாரும் பேச அதற்கு இன்னொரு நாயகி சொல்லும் வசனம்... நாளை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்பும் பலரும் "ஜே. கே.பி" ஏ இரண்டாம் தாரம் பண்ணிக்கிட்டாரு என்று தப்பான முன்னுதாரணம் காட்ட நான் காரணம் ஆக வேண்டுமா என்று கேள்வி முன் வைப்பார்..தன் வாழ்க்கையை விட தான் தவறான முன்னுதாரணமாகிவிட கூடாது என்ற தெளிவு..

படத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் தவறான முன்னுதாரணமாக தான் இருக்க கூடாது என்ற பொறுப்பு எத்தனை பேரிடம் இருக்கிறது...:) :) :)

பிள்ளைகளுக்காக

என் பிள்ளைக்கு பெண்ணுக்கு எதுவுமே தெரியாது என்று பீற்றி கொள்ளும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் அவர்களையே தெரியாமல் போகும் போது நொந்து போகிறார்கள். கூட்டு குடும்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட இந்த நாளில் நேரடி உடல் விளையாட்டுகளையும் டிவியும் கம்ப்யூட்டரும் வீடியோ கேம்ஸ் அபகரித்து கொண்டதில் நம் பிள்ளைகள் நாம் நாற்பது வயது கடந்து அனுபவிக்கும் ஸ்ட்ரஸ்களை இன்றே அனுபவிக்கிறார்கள்.

சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமில்லை சிறு ஊர்களில் கூட இதே நிலை தான் பிள்ளைகள் பள்ளி பள்ளி முடிந்தவுடன் டியூசன் பின் இரவு சோட்டா பீம், ஏதோ ஒரு கார்ட்டூனோ பார்த்து தூக்கம் லீவ் நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்போ அல்லது வீடியோ கேம்ஸ் டிவியுடன் ஐக்கியம்.

பிள்ளைகளுக்கு உறவுகளை சொல்லி தருவதுமில்லை உறவுகள் சங்கமிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வதுமில்லை காரணம் ஒன்று பிள்ளையின் படிப்பு, தேர்வு அல்லது பெரியவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் அல்லது அதெல்லாம் பிள்ளைகள் பழக மாட்டார்கள் அவர்களுக்கு அதெல்லாம் ஒத்த்க்காது என்று ஏதோ ஒரு காரணத்தை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் பிள்ளைகளின் மனநிலை பற்றி அறிய ஆர்வம் கூட காட்டுவதில்லை..

ஒரு முறை பிள்ளைகளை கூட்டி போய் சொந்தங்களின் திருமண வீடுகளில் அவர்களை விட்டு பாருங்கள் ஆனால் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அதை செய்யாதே இதை செய்யாதே அவரிடம் பேசாதே இவரிடம் பேசாதே என்ற விழி மிரட்டல், மொழி மிரட்டல் எல்லாம் விட்டு சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு பாருங்கள். உறவுகளை இவர் பெரியப்பா இவர் சித்தி, இவர் மாமா இது அவர்கள் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்துங்கள். யாருக்கும் இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று நீங்கள் டிஸ்க்ளெய்மர் கொடுக்காதீர்கள். அவர்களுக்கே பழக பழக புரியும்.

கோடை விடுமுறைகளுக்கு அல்லது சேர்ந்தாற்போல ஒரு பத்து நாட்கள் விடுமுறை என்றால் அவர்களின் பாட்டி தாத்தா வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். ஏ ஸி இல்லைன்னா என் பிள்ளை தூங்க மாட்டான், நடக்கவே தெரியாது என்று எல்லாம் நீங்களே பில்டப் கொடுக்காதீர்கள். சிறு வயதில் இருந்தே கொஞ்சம் உங்கள் விடுமுறை சிறப்பு வகுப்புகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை அவர்கள் உலக்த்தில் சுதந்திரமாக உலவ விட்டு பாருங்கள்..

உங்கள் பிள்ளைகள் டீன் ஏஜ் வரும்போதோ அதற்கு முன்னோ புத்தகம் வாசிக்க கற்று கொடுங்கள். அதன் பின் அவர்களை பற்றி நீங்கள் எந்த வயதிலும் கவலைபப்ட வேண்டி இருக்காது. எந்த கெட்ட பழக்கம் பக்கமும் போக மாட்டார்கள். என் பிள்ளைகளை முக்கிய உறவினர் திருமணங்கள், அலல்து எங்கள் குடும்ப ஒன்று கூடுதல் எதையும் எந்த கிளாஸ் படிக்கும்போதும் நான் படிப்புக்காக காம்பரமைஸ் செய்து கொண்டதில்லை இன்று வரை.. அதனால் என் பிள்ளைகள் படிப்பில் சோடை போகவும் இல்லை..

வாழ்க்கையை அவர்கள விருப்பத்துக்கு அனுபவிக்கட்டும் சிறு வயதில் நாம் சரியான வழியை காட்டிவிட்டால் எந்த வயதிலும் அவர்கள் தவறான வழிக்கு செல்ல மாட்டார்க்ள் என உறுதியாக நம்புகிறேன்.. இன்று என் பிள்ளைகளுக்கு சென்னையில் எவ்வளவு நண்பர்கள் உண்டோ அதே அளவு அவன் தாத்தா ஊரிலும் உண்டு. என் கணவரின் உறவினர்கள் வீட்டுக்கு போய்விட்டால் எங்கள் குடும்ப உறவுகளே போதும் நட்பு தேவையே இருக்காது எல்லா கலாய்த்தலும் எங்கள் குடும்பத்திலேயே நடக்கும்... ஆயிரம் அறிவுரைகளையும், நூறு பயிற்சி வகுப்புகளையும் விட பிள்ளைகளை சிறு வயதில் இருந்து பட்டாம்பூச்சியாக பறக்க விட்டால் அவர்கள் வளர்ந்த பின் ரொம்ப தெளிவாக இருப்பார்கள்....பிள்ளைகளை வளர்க்கிறோம் என்று வளர்ப்பதை விட நமது பாதுகாப்பில் அவர்களாக வளர விடுங்கள்..

பெண் சுதந்திரம் - ஒரு பார்வை

பெண் சுதந்திரம், பெண்ணியம் ஒரு பார்வை. இந்த பதிவுக்கு இருபாலருமே எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள். கண்டிப்பாக நான் சொல்லும் கோணம் திரிக்கப்படும் என்று தெரிந்தே பதிகிறேன். யாராவது ஓரிருவர் கொஞ்சம் சிந்தித்தால் போதும்..

ஒரு பெண் வலுவாக தன் கருத்துக்களை முன்வைத்தால் உடன் அனைவரும் சொல்வது அவள் பெண்ணியவாதி. அவள் சொல்ல வருவது என்ன? அது நியாயமாக இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிறகு தான். உண்மையில் பெண்ணியவாதி என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் பயன்படுத்தும் சொல் “பெண்ணியவாதி” ”.. இப்படி சொல்வதில் ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை..

உண்மையாகவே பெண்ணியம் பேசுபவர்கள் பெண்களுக்காக அக்கறை கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அவர்களுக்கு ஒரு சல்யூட். ஆனால் அதிலும் சிலர் பெண்ணியம் பேசுவதாக வெளியில் காட்டி கொண்டு தன் வீட்டு பெண்களை பூட்டி வைத்து எந்த சுதந்திரமும் கொடுக்காமல் பிற பெண்களை நெருங்க உபயோகிக்கிறார்கள். பெண்கள் இந்த போலி பெண்ணியவாதிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஆனால் அந்த போலிகளை கண்டறிய முதலில் பெண்கள் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் அவர்கள் பார்வையையும் மாற்றி கொள்ள முன் வரவேண்டும்..

என்ன தான் வேலைக்கு போனாலும் சம உரிமை பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. பெண் வேலைக்கு போக வேண்டும் ஆனால் உத்தியோகம் சம்பளம் எல்லாம் தன்னை விட அதிகம் இருக்ககூடாது என்ற மனப்போக்கு உடைய ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஆண் மட்டும் வேலைக்கு போனால் பிரச்சனையில்லை. ஆனால் பெண்கள் மட்டும் வேலைக்கு சென்று ஆண்கள வீட்டை கவனித்து கொண்டால் நெருங்கிய பெண்களே கேவலமாக பேசுகிறார்கள்.. முதலில் இந்த வம்பை பெண்கள் நிறுத்த தொடங்க வேண்டும்..

ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் உயர் பதவியில் இருந்தால் அவளுக்கு கீழ் பணி புரியும் ஆண்கள் அவளை பற்றி தெரியாதா இந்த பதவிக்கு எப்படி வந்தாள் என்று ஏளனமாக சொல்லும் வார்த்தைகளை கடந்து வராத பெண்கள் வெகு குறைவு. .சில நேரங்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் இந்தப் பேச்சுகளை கூர்மையாக்குகிறார்கள்.

ஒரு ஆண் பலரோடு மோசமான முறையில் பழகினால் அதை ‘ஆண்களின் குணம்’ என்று பொது வரையறைக்குள் உட்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பெண்கள் கூட, பெண்கள் யாருடனாவது நட்பாக பழகத் தொடங்கினால் கூட அவர்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதெல்லாம் பெண் சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது..

சுதந்திரம் என்பது கல்வியிலோ, பணிகளிலோ, பதவிகளிலோ இருப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கடைபிடிப்பதில்தான் இருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமைகள் இருக்கிறதா என்பதை மனம் திறந்து யோசித்து பாருங்கள்?? மாற்றம் ஆண்களிடம் நிறைய வரவேண்டும் மறுப்பதற்கில்லை ஆனால் பெண்களிடம் அதிகம் வரவேண்டும்.. அப்போது தான் உண்மையான பெண் சுதந்திரம் கிடைக்கும்..

Tuesday, 9 December 2014

நாளை மற்றொரு நாளே - புத்தகம்



“நாளை மற்றொரு நாளே ஜி. நாகராஜன் எழுதிய நாவல் கிளாசிக் வரிசை, காலச்சுவடு வெளியீடு. ஒரு கீழ்த்தட்ட மனிதனின் ஒரு நாளை வெகு பக்கத்தில் சென்று நமக்கு காட்டியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களின் வாழ்வியலை உற்று நோக்கும்போது பல விஷயங்கள் புரிகிறது. 

எந்த வேலையும் இல்லாமல் கட்ட பஞ்சாயத்து, அல்லது கொஞ்சம் சபலக்காரர்களை மிரட்டி காசு வாங்கி, மனைவியாக விபச்சாரம் செய்யும் பெண்ணை காசு கொடுத்து சேர்த்து கொள்ளும் குடிகார கந்தனின் காலை ஆரம்பிப்பது குடியுடன், மனைவியான பின்னும் அவளை விபசாரத்துக்கு அனுப்பும் அதை பெரிதாக அலட்டிகொள்ளாமல் ஏற்று கொள்ளும் மீனாவும் அவர்கள் வாழ்வியலும் கொஞ்சம் மனதை புரட்டி போடுகிறது..
.குடியினால் கந்தன் மோசமாக பாதிக்கப்பட மீனாவுக்கு எதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று தன்னை போல கட்டப்பஞ்சாயத்து பண்ணும் வசதியாக இருக்கும் அந்தோணியிடம் செல்ல அவர் சொல்லும் வாழ்க்கை தத்துவம் அதிர்ச்சியடைய வைத்தாலும் உண்மை நிலையை உணர்த்துகிறது.

ஏமாத்துறவங்களும் ஏமாறுறவங்களும் இருக்கிறது தான் உலகின் தன்மை. எல்லாரும் நேர்மையா நடந்துக்கிட்டா வாழ்க்கையில் போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. வாழ்க்கை சப்ப்னு இருக்கும்.. என்னை பொறுத்தவரை யாரையாவது கவுக்க சூழ்ச்சி செய்யும்போதுதான் உயிரோடிருப்பதாகவே தெரியுது. அந்த திறமை தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம். சூழ்ச்சி செய்ய தெரியாதவன் வாத்தியாராகவோ, குமாஸ்தாவாகவோ வாழ்நாள் பூரா  இருக்க வேண்டியது தான். அவன் அரசியல்வாதியாகவோ, வக்கீலாகவோ, போர்வீரனாகவோ வியாபாரியாகவோ முடியாது. மந்திரம் கிந்திரம்னு பேசுறாங்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது தந்திரம் தான் மந்திரம் ...
பைபிள், கீதை, ராமாயணம் எல்லாமே தந்திரங்களை தான் முன்னிலைப்படுத்தி இருக்கு. நல்லவனா இருந்தா கூட தந்திரம் பண்ணினா தான் ஜெயிக்க முடியும்னு சொல்லுது என்று உதாரணங்களுடன் சொல்ல புனித நூல்களின் இன்னொரு கோணத்தை ஒரு சாமானிய கட்டப்பஞ்சாயத்து அந்தோணியின் பார்வையில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்..

முடிவென்று ஒன்று இல்லாமல் கதையை கந்தனின் அன்றைய வாழ்வு முடியும் இரவுடன் முடித்திருக்கிறார். சில விஷயங்களுக்கு முடிவென்பது இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்..எந்த காலத்திலும் சில மனிதர்களுக்கு நாளை என்பது மற்றொரு நாளே...

Wednesday, 3 December 2014

தூண்டில்

புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்கும் மீன்
சேருமிடம் அறிவதில்லை..

கசாப்பு கடையோ
அழகிய மீன்தொட்டியோ
மரணம் உறுதி..


முன்னதில் வலி சில விநாடி
பின்னதில் தவணை முறையில்
மரணம் நேரும் வரை..

பின்னால் வரும் மரணத்தையும் வலியையும்
சற்று நேரம் மறக்க செய்கிறது
கண்ணின் முன்னால் ஆடும் புழு..

Tuesday, 2 December 2014

குறைவில்லை

உலக மயமாக்கப்பட்ட நாட்டில்
விளம்பரங்களுக்கும் மூளை சலவைக்கும்
குறைவில்லை.

கடவுளின் பெயரால் மதத்தலைவர்களின்
மனதை மயக்கும் வார்த்தைகளுக்கும், மூளை சலவைக்கும்
குறைவில்லை


நாளைய உலகமே நம் கையில் என்ற
அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளுக்கும்
பஞ்சமில்லை.

ஆசைகளுக்கும் நிராசைகளுக்கும் நடுவே
தினம் தினம் பயணிக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதாக
கல்லா கட்டும் தியான முகாம்களுக்கும் பஞ்சமில்லை.

காதலின் பெயரால் ஏமாற்றப்படும்
ஆண் பெண் குமுறல்கள் உணர்வு குழப்பங்கள்
ஆதி காலம் தொட்டு தீர்ந்தபாடில்லை.

அறிவியலால் விளக்க முடியா விளக்கங்கள்
ஆன்மீகத்தால் புரிய வைக்க முடியா குழப்பங்கள்
இலக்கியத்தால் தீர்க்க முடியா சர்ச்சைகள்
ஓய்ந்தபாடில்லை.

ஆனாலும்
மெல்ல வருடும் மென்காற்றும்
பரபரப்பான காலையில்
மென் இறகென காதில் நுழையும்
மென் இசை கொடுக்கும் சுகமும்
மழலையின் மனதை
மனதுக்கு கொடுத்து
குதூகலிக்க செய்து கொண்டே தான் இருக்கிறது..

Friday, 28 November 2014

ஜனநாயகம்



ஜனநாயகத்தின் மிக பெரிய கோட்பாடு அல்லது ஆதார கொள்கை மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம். அதாவது நம்மால் நமக்காக நாமே தேர்தெடுக்கும் அரசாங்கம். மன்னராட்சி என்பது தனிப்பட்ட் ஒரு குடும்பத்தின் ஆட்சியாக சுய குடும்ப நலமாக போய்விdaட கூடாது என்று பொதுநல அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகத்தின் பேரால் இந்தியாவில் நடப்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

மன்னராட்சி என்றால் அதிகாரத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கடவுள் வாக்கு போல விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும். மன்னரின் நலமே மக்கள் நலம். மன்னர் அவர் தம் குடும்பம் சுகமாக வாழ மக்கள் அடிமைகளாக உழைத்தே ஆகவேண்டும். உழைப்புக்கு தகுந்த கூலி பற்றி மூச் பேச கூடாது அதற்கு பதிலாக மன்னர் அவருடைய பிறந்த நாளிலோ அல்லது அவரது மகாராணி ஆசை நாயகி பிறந்தநாளிலோ, அல்லது பண்டிகைகளின் போதோ நாம் உழைத்து கொடுத்த பணத்திலிருந்து நமக்கு சாப்பாடு, துணிமணிகள் சில சமயம் ஏதோ கொஞ்சம் காசும் தருவார். நாம் உழைத்து கொடுத்ததை தான் அவர் தின்றது போக நமக்கு தருகிறார் என்று அறிவு கூட இல்லாமல் கிடைத்தற்கு மகிழ்ந்து பக்கத்தில் இருப்பவரை விட நமக்கு தேவலாம் என்று நம்மை போல கையேந்தும் இன்னொருவரை ஒப்பிட்டு திருப்தி அடைந்து விடலாம்.

இப்படியே இருந்துவிட கூடாது என்று சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு சிலரால் போராடி பெறப்பட்டது தான் ஜனநாயகம். ஆனால் அதன் பெயரால் நடப்பது என்ன? முன்பு மன்னருக்காக உழைத்த மக்கள் இப்போது கட்சிகளுக்காக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? இதை மக்கள் யோசிக்கவே கூடாது. அப்போது தான் ஆட்சியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியும். மன்னராட்சி என்றால் சிரச்சேதமோ, கழுவேற்றமோ செய்து விடலாம் யோசிப்பவர்களை. ஆனால் ஜனநாயகத்தில் எல்லாருக்கும் கருத்துரிமை இருப்பதால் அது சாத்தியபடாது அதனால் என்ன செய்யலாம் சிந்திக்கவே விடாமல் செய்துவிடலாம். அவ்வப்போது நாயுக்கு எலும்பு துண்டை வீசுவது போல சில சில்ல்றைகளை இறைத்து மொத்தத்தை சுருட்டி கொள்ளலாம். அதற்கு மக்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டும்.

இலக்கியம், கலை, கதை  எல்லாம் உழைக்கும் மக்களின் களைப்பை போக்குகிறதா? மக்களை மெய் மறக்க செய்கிறதா? அப்போது அவைகளை வைத்தே மூளை சலவை செய்துவிடலாம். மெல்ல மெல்ல ஜனநாயகத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இலக்கியம் கலைத்துறையில் இருப்பவர்களையே வைத்தே செய்யலாம். இலக்கியம் கலை கதை எல்லாம் உண்மை என்பது போன்ற மாயை உருவாக்கபப்ட்டது. மெல்ல மெல்ல அதை உருவாக்குபவர்கள் அல்லது அதில் பங்கேற்றவர்கள் கடவுளாக அலல்து கடவுள் போல சித்தரிக்கப்பட்டார்கள்.  அதன் பின் மக்களை சிந்திக்க செய்ய விடாமல் இருப்பது கடினமா என்ன? அவரவர் நம்பும் கதையின் நாயகர்களை தெய்வமாக்க அடுத்தவர்கள் நம்பும் நாயகர்கள் தெய்வம் இல்லை என்று நிரூபிக்க நடக்கும் சண்டையில் கடவுளர்கள் எல்லாம் சுகமாக குளிர் காய மக்கள் அவர்கள் நம்புவர்களை கடவுளாகக முனைப்பாக இருக்க அதை தாண்டி சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது??

மன்னராட்சி காலத்தில் பொங்கி போராடியவர்கள் கையில் சுலபமாக கலையும், இலக்கியமும் கொடுத்து நாயகர்களாக செய்துவிட்டார்கள். நாயகர்களை மக்கள் சிறு தெய்வமாக்கி கொண்டாட அந்த புகழின் மயகத்தில் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் அடிப்படை சிந்தித்தலே அடிப்பட்டு போய ஆட்சி செய்யும் கடவுளின் அடியாளாக மாறிப்போனார்கள். சிந்திக்க தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பதவி, பட்டம், பரிசு என்ற பெரிய பெரிய மீன்களும், மக்களுக்கு இலவசங்கள் என்ற சிறிய மீன்களும் வீசப்பட சுறாவை விழுங்கி ஏப்பமிட்டு கொண்டு சுகமாக ஆட்சியாளர்கள் .

மக்களின் சிந்தனை எல்லாம் யார் அதிக மீன்கள் (இலவசங்கள்) தருகிறார்கள் என்ற ரீதியில் மழுங்கடிக்கப்பட்டுவிட. சிந்திக்கும் தைரியமாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் அவர்களுக்கு ஆதாயம் தரும் கடவுளின் ஏஜெண்டுகளாக அவதாரமெடுக்க.அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை மக்கள் சமூகம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாத்வீகமாக நேர்மை, நியாயம் என்று போராடும் இவர்களை இந்த ஏஜென்ட்டுகள் பிழைக்க தெரியாத முட்டாள்கள் என்றும் கொஞ்சம் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பவர்களை, போராடுபவர்களை தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி அதை தமது அறிவால் மக்களை நம்ப செய்யும் வேலைகளை செய்து வருகிறார்கள்..

ஆக மன்னராட்சி மக்களாட்சியாக மாறாமல் கட்சிகளின் ஆட்சியாகவும் இல்லாமல் கட்சியில் இருக்கும் ஒரு குடுமபத்தின் ஆட்சியாக மாற அந்த கட்சியின் தலைவர்கள் கடவுளர்களாக மாறி அவரவர் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எல்லா வளமும் நம்மிடம் இருந்து பிடுங்கி கொடுத்து செழிப்பாக நாம் எந்த கடவுளிடம் சொத்து அதிகம் என்று கணக்கெடுத்து இந்த கடவுளை விட அந்த கடவுளிடம் சொத்து குறைவு என்று சண்டையிட்டு கொண்டு இருக்கிறோம். அடிப்டையில் அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை மறந்து.

ஜனநாயகத்தின் நிலை இப்போது எதில் வந்து முடிந்திருக்கிறதென்றால் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலை போய் திருடியவர்களில் யார் குறைவாக திருடி இருக்கிறார்கள், அலல்து தவறு செய்தவர்களில் யார் குறைவாக செய்திருக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்போம் என்ற நிலையில். ஆட்சியாளர்கள் அபாரமாக தங்கள் உணர்ச்சி பேச்சுக்களால் உணர்வு குமுறல்களால் உண்மையை நாம் என்றும் அறிந்து கொண்டுவிடாமலே செய்துவிட்டார்கள்.. நாமும் வாய் பிளந்து செம்மறி ஆட்டு கூட்டமாக சிந்திக்கவே தோன்றாமல் உண்டு, உடுத்தி, வாழ்ந்து செத்து மடிகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..