Sunday, 22 December 2013

நாற்பதுகளில்

மனதின் குப்பைகளை
கழிவிரக்கங்களை
வன்மம், துரோகங்கள் என
வேண்டாத பாரத்தை
எல்லாம் சுமந்து
உள்ளுக்குள்
அகத்தில் பேயாட்டம் ஆடி
உதிரம் கண்ட பின்
எல்லாம் அடங்கி
மூளை(லை)யில் சுருண்டு
அணைத்து ஆறுதல்படுத்தும்
அன்புக்கு ஏங்கி
என ஒரு சூறாவாளியை
நாற்பதை தாண்டிய பெண்கள்
ஒவ்வொரு மாதமும் கடக்கின்றனர்..
இந்த சூறாவளிக்கு சிக்காமல்
தப்புபவர்கள் வெகு சிலரே...

ப்ரியம், பிரிவு

எல்லோரும் சூழ்ந்து இருக்க
தனித்த ஏகாந்தம் தேடும்
பிரிந்திருக்கும் வேளையில்
சந்திக்க மனம் துடிக்கும்..

பேச வேண்டிய வார்த்தைகள்
அலை அலையாய்
நெஞ்சுக்குள்ள் முட்டி மோதும்
சந்தித்து பேசிடும் போதோ
எல்லாம் மறந்து தொலைக்கும்

மூழ்கி கொண்டு இருக்கும்
எண்ண சூழலை விட்டு
விலகவும் முடிவதில்லை
விலக்கி வைக்கவும் முடிவதில்லை
பிரியத்தை போல பெரும்
கொடுமையில்லை...
***********
சாகும் வரை கைவிடமாட்டேன்
என்று கைபிடித்து
சொன்ன ஒற்றை வார்த்தை
சாகா வரம் பெற்று
நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
முட்டி மோதுகிறது
ஒவ்வொரு சண்டைக்கும் பின்பான
உன் விலகல்களின் போது..
 
 
 
 

Wednesday, 18 December 2013

மலரும் நினைவுகள் 2


சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு

ஊர் பயணம். என் குழந்தைகள் இருவருக்கும் பள்ளி விடுமுறை. வீட்டில் இருந்து புறப்படும் போதே திட்டு..இவ்வளவு தான் மூட்டை கட்ட முடியுமா? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி வச்சிருக்கியா..உனக்கு என்ன அம்மா மகாராணி மாதிரி கைய வீசிட்டு போவ நான் இல்லை எடுத்துட்டு வரணும்..என்ன என்ன போர்ட்டர்னு நினைச்சியானு.. நான் வேணும்னா ஒரு பெட்டி இல்ல பை எடுத்துக்றேங்க (ஃபார்மாலிட்டிக்கு தான்) என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு சொல்ல..

ஒண்ணும் வேணாம் பிள்ளைகளை பத்திரமா கூட்டிட்டு பேர் பார்த்து ஏறுனு ஒரு உறுமு உறும சரி இப்போ எது சொன்னாலும் டோஸ் விழும்னு பேசாம பசங்கள கூட்டிட்டு கம்பார்ட்மண்ட் பார்த்து ஏறி உட்கார்ந்தேன்.. இவர் மெதுவாக பின்னால் (திட்டிகிட்டே தான் வந்திருப்பாரு) வந்தார். அப்போது கூட்டத்தில் வந்த யாரோ ஒருவரின் ஸுட்கேஸ் வீலில் எங்கள் பை மாட்டி அவர் இழுத்து செல்ல என் கணவர் இருந்த இடத்திலிருந்து காலை மட்டும் முன்னே நகர்த்தி பையை இழுக்க முற்பட அப்போது எதிர்பாராதவிதமாக என் கணவர் பேண்ட் தையல்விட்டு விட்டது...உடனே என் கணவர் கையால் பையை கெட்டியாக பிடித்து கொண்டு ஸூட்கேஸ் ஆசாமியை நோக்கி குரல் கொடுத்து ஒரு வழியாய் பையை வாங்கிவிட்டார்..அங்கிருந்து என்னை நோக்கி கோபமாக குரல் கொடுக்க..நான் ஏற்கனவே கம்பார்ட்மென்டில் ஏறிவிட்டதால் பை மாட்டின டென்சன்ல தான் திட்றாங்க போலனு நினைச்சுகிட்டு பசங்க பக்கம் திரும்பிகிட்டு எங்க சீட்ல போய் உட்கார்ந்துட்டேன் (எனக்கு பேண்ட் தையல் விட்டது ஜோசியமா தெரியும்). அவர் அங்கேயே பை திறந்து மேலாக இருந்த லுங்கியை எடுத்து கட்டினவுடன் தான் எனக்கு ஒரளவு விஷயம் யூகிக்க முடிந்தது....

டென்ஷன்ல அவர் முகம் போன போக்கு. அவர் லுங்கிய எடுத்து பேண்ட் மேலேயே என்னை திட்டிகொண்டே கட்டிய விதம் ஆகியவற்றை பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியல..சிரித்தா நான் தொலைந்தேன். பசங்க பார்த்து சொன்னாலும் அவ்ளோ தான்..சீட்டுக்கு அடியில் ஏதோ தேடுறாப் போல குனிந்து சிரித்துவிட்டு கஷ்டபட்டு முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு அவர் கம்பார்ட்மெண்டில் ஏறும் போது பேக் வாங்கி சீட்டிற்கு எடுத்து சென்றேன்......ஒன்றும் பேசல.. அவர் ரியாக்சன் பார்க்க எனக்கு சிரிப்பு வேறு அடக்கமுடியல...அப்புறம் அவர் வேறு பேண்ட் மாற்றி கொஞ்சம் அசுவாசமடையும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தேன்...
 
அப்புறம் இந்த டெய்லர் சரி இல்லை  இனி வேற டைலர்கிட்ட பேண்ட் தைக்க குடுக்கணும் இல்லங்க என சீரியசாக முகத்தை வைத்துகொண்டு அப்பாவியாய் நான் சொன்னவுடன் அவரும் டென்ஷன்லாம் போய் சிரிச்சிட்டாரு.....அன்று முதல் இன்று வரை ட்ரெஸ் எடுத்து வைக்கும்போது ஏங்க எதுக்கும் ஒரு வாட்டி கால நல்லா நீட்டி செக் பண்ணிக்குங்க என சொல்ல தவறுவதில்லை... அவரும் என் மண்டையில் குட்ட (செல்லமாக தான்) தவறுவதுமில்லை. :)

மலரும் நினைவுகள் 1

என் திருமணத்தின் முன்
என் வீட்டில் நடந்த சுவையான நிகழ்வுகள்,
இன்றைய கால கட்டத்தில் அரிதான...
இனி வரும் காலகட்டத்தில் காணவே முடியாத விஷயங்கள்...

எனது திருமணத்தின் போது வீட்டிலேயே அதிரசம், திரட்டு பால்,, கைமுறுக்கு (சுத்து முறுக்கு) என அனைத்தும் செய்தார்கள்..வீட்டின் இரண்டாம் கட்டில் உள்ள முற்றத்தில், காலவாய் அடுப்பில் அதிரசம் சுட்டு திறந்த வெளி முற்றத்தில் ஆற வைப்பதற்காக, மூங்கில் ப்ளாச்சுகளை நெருக்கமாக வைத்து, அதன் மீது வைக்கோல் பரப்பி (அந்த கால டிஷ்யு) அதன் மீது வைத்து எடுத்து வைப்பார்கள்..வீட்டிலேயே ஆட்கள் உரலில் மாவு இடித்து அதிரசம் செய்வார்கள்...அத்தை, 2 சித்தி, 2 பெரிம்மா என அனைவரும் உட்கார்ந்து சுவையாக பேசிக் கொண்டு பாட்டியின் மேற்பார்வையில் ஆளுக்கு ஒரு வேலையாக மாற்றி மாற்றி செய்வார்கள்....நானும் ஏதாச்சும் செய்கிறேன் என்றால்,, கல்யாணப் பொண்ணு அடுப்பு பக்கமே வரக் கூடாது எனக் கடிந்து கொள்வார்கள்..திரட்டு பால் எங்கள் பக்கம் தேங்காயில் செய்வார்கள்..கிட்டதட்ட நூறு காய்களுக்கு மேல், முற்றத்தில் உரித்து போட, தாழ்வாரத்தை சுற்றி ஆட்கள் உட்கார்ந்து தேங்காய் துருவி, (கிரைண்டர்) அரைத்து, பின் பெரிய பித்தளை உருளியில் கொட்டி, என் திருமணத்திற்கு திரட்டு பால் செய்வதற்காகவே செய்த மரதுடுப்பை வைத்து எங்கள் உறவினர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் கிண்டியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.....இப்போது இது எல்லாமே நினைவாக மட்டுமே உள்ளது...

இன்று சிரமமே இல்லை எல்லாம் பணம் கொடுத்தால் காண்டிராக்டர்கள் செய்து விடுகிறார்கள்..வட நாட்டு உணவிலிருந்து, மேற்கத்திய உணவு வரை., அழைப்பிலிருந்து தாம்பூலம் வரை...........ஆனாலும் ஏதோ இழந்தாற்போல் இருக்கிறது.....

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம்:

அன்று:

அடுக்களை தாண்டி வெளியே வராதே
பெண்ணக்கு படிப்பு எதற்கு?
சமைக்க கற்று கொள்
அனைவரயும் அனுசரிக்க கற்று கொள்
யாரயும் நிமிர்ந்து நோக்காதே
ஆணுக்கு தேவை அதுவே......

அதற்கு பின்:

கல்லூரிக்கு செல், பட்டம் பெறு
பட்டம் பெற்ற பெண் தான்
கல்யாணச் சந்தையில் விலை போவாள்
குழந்தைக்கு வீட்டுப்பாடம் முதல்
வங்கி பரிமாற்றம் வரை
அடுக்களை முதல் அனைத்தும்
படித்தவள் திறம் பட நிர்வகிக்க முடியும்.........

இன்று:

பட்டம் பெறு, ஆணுக்கு நிகராய் வேலைக்கு போ
ஊதியத்தை அப்பாவிடமோ, அண்ணாவிடமோ
சமர்த்தாக சேர்த்து விடு....
நண்பர்கள் எல்லாம் அளவோடு நிருத்திகொள்
இல்லையென்றால் திருமணத்தில் பிரச்சனை வரும்...
திருமணத்திற்கு பின்
ஊதிய கணக்கை கணவனிடம் சேர்த்து விடு....
அழகு நிலையம் செல்வது முதல்
நண்பர்கள் வரை அனைத்திற்கும்
அனுமதியும் சுதந்திரமும் உண்டு
கணவனின் மேற்பார்வையில்...
ஆனால்.........
கணவனுக்கு இஷ்டம் இல்லை என்றால்
அனைத்தயும் விட்டு விட வேண்டும்.........

பெரும்பாலும் பெண்ணின் நிலை இப்படி இருக்க
ஊடகங்கள் முதல், பத்திரிக்கைகள் வரை
உடை முதல் பேச்சு வரை அனைத்திலும்
பெண் சுதந்திரம் முன்பை விட
அதிகமாக இருப்பதாக பெருமையுடன்
பீற்றிக்கொள்கிறோம்....

Thursday, 12 December 2013

லவ் யூ

சில வருடங்கள் முன் நான் வேலைக்கு வந்த புதிதில் ஒருவர் வந்து என்னிடம் ஐ லவ் யூங்க என்றார் நான் சரிங்க என்று சொல்ல அவர் சற்று தடுமாறினார்..அதன் பின் நான் என் வேலையை கவனிக்க நான் உண்மையாவே லவ் பண்றேங்க அப்படின்னு சொன்னார்...நானும் சரிங்க என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க மேடம் நீங்க ஒண்ணுமே சொல்லலையே என்று கேட்டார்...நான் என்னங்க சொல்ல முடியும் யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் லவ் பண்ணலாம் இதெல்ல்லாம் உங்க உரிமை என்று சொல்ல அவரால் மேலே பேச்சை தொடர முடியாமல் திணறினார்...

நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா என்று கேட்டார்..நான் நிறைய பேரை லவ் பண்றேன் அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்டேன்..அப்ப என்னை லவ் பண்ண மாட்டீங்களா என்று கேட்க நான் அவரிடம் லவ் அப்படின்னா என்னங்க என்று கேட்க? உயிருக்கு உயிராய் நேசிப்பது லவ் என்றார்...அப்படின்னா சாகற வரைக்குமா என்று கேட்க அவர் ஆம் என்றார்...சரி அப்படின்னா யார் சாகிற வரைக்கும் என்றேன்...சிறிது முழித்து பின் நான் சாகிற வரை என்று சொன்னார்....ரொம்ப சந்தோசம் அப்படியே செய்ங்க என்று சொல்ல நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலை என்று முறைக்க நான் அவரிடம் என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக நீங்க தான் சொன்னீங்க...சாகிற வரைக்கும் நேசிங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அப்படின்னு சொல்லிட்டு சிரித்துவிட்டு சென்று விட்டேன்...

ஊர் பழக்கம்

ஏரியா விட்டு ஏரியா மாறினாலே சில பழக்கவழக்கங்கள் கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஆரம்பத்தில் கொடுக்கிறது...

அதில் ஒன்று வா, போ என்று கூப்பிடுவது..சென்னையில் பெரியவர் சிறியவர் அனைவரையும் சர்வ சாதாரணமாக வா போ என்று கூப்பிடுவது முதலில் அதிர்ச்சியாய் இருந்தது...அப்புறம் பழகிக்கொண்டேன்...

அதற்கடுத்து அதிர்ச்சி திருமண வீட்டில் நடந்தது...எங்கள் பக்கம் திருமணத்திற்கு வந்தவர்களை சாப்பிட வாங்க வாங்க என்று கூப்பிட்டு பந்தி நடக்கும் இடம் வரை அழைத்து சென்று சாப்பிட சொல்லுவோம்...அது போல அவர்கள் விடை பெறும் போது சாப்ட்டீங்களா என்று கேட்க்காமல் இருக்க மாட்டோம்..

எங்கள் வீட்டில் திருமண வேலை உதவிக்காக வரும் அக்கம் பக்கத்தினர் கூட சாப்பிடும் நேரம் அவர்கள் வீட்டில் சென்று அழைத்தால் தான் சாப்பிடுவார்கள்...இல்லை என்றால் உதவி செய்துவிட்டு சரியாக அந்த நேரம் வரும்போது  நழுவி விடுவார்கள்....

ஆனால் சென்னையில் உறவினர்கள் அல்லாது முதல் முறையாக நண்பர்கள் திருமணம் செல்ல  பந்திக்கு கியூவில் நிற்பதை பார்த்து செம ஷாக்....என்னங்க இது என்று கேட்க என் கணவர் இங்கு எல்லாம் அப்படி தான் என்று சொல்ல எனக்கு சாப்பாடே வேண்டாம் வெளியில் சாப்பிட்டுக்கலாம் என்று திருமணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்...அதன் பின் ரொம்ப யோசித்து தான் திருமண வீடுகளுக்கு செல்வேன்... தற்போது அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போவதால் அரட்டை அது இதுவென்று அவ்வளவாக தெரியவில்லை... தனியாக பெரும்பாலும் செல்வதில்லை.....ஆனாலும் இன்னும் சென்னையில் திருமண வீடுகளில் சாப்பிட தயக்கம் இருக்கவே செய்கிறது....