Tuesday, 30 July 2013

செவ்வாய் பிள்ளையார்

எங்கள் ஊர் பக்கம் செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை என்று ஒன்று ஆடி, தை, மாசி மாதங்களில் வளர்பிறை செவ்வாய் கிழமைகளில் இரவுகளில் செய்வார்கள்...

அன்று இரவு உணவு சீக்கிரம் முடித்துவிட்டு ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறிட வேண்டும்...ஆண்களுக்கு அனுமதி இல்லை..சிறு ஆண் பிள்ளைகள் கூட திண்ணை தாண்டி உள்ளே வரகூடாது...பெண்கள் மட்டும் தான். எங்கள் வீடு பெரியது.. சுற்று கட்டு வீடு என்று சொல்லப்படும் முற்றம் , தாழ்வாரம் எல்லாம் உள்ளது...அக்கம் பக்கம் பெண்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து ஊறவைத்த அரிசி தேங்காய் கொண்டு வருவார்கள்....

எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் குடைக்கல், உரல்  பதிக்கபட்டிருக்கும்.. வயது பெண்கள் சிலர் உலக்கையை எடுத்து அரிசி குத்துவார்கள் சிலர் இடித்த மாவை சலிப்பார்கள், சிலர் தேங்காய் துருவுவார்கள், சிலர் தேங்காயை சில்லு சில்லாக அறிவார்கள்...வயதில் பெரியவர்கள் (பாட்டி , அந்த வயது) மாவை ஒன்று சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை செய்து கொண்டே சிறு பிள்ளைகளுக்கும் சொல்லி தருவார்கள்...மத்திம வயது பெண்கள் (சித்தி, அத்தை) அடுப்பை பார்த்து கொள்வார்கள்....

கிண்டலும், கேலியுமாக வீடு அமர்க்களப்படும்....இப்படி எல்லாம் கூட இவர்கள் பேசுவார்களா என்று ஆச்சரியமாக இருக்கும்...அதன் பின் மாவு  சலித்த கப்பியில் கோலம் போட்டு பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலையில் வேக வைத்த கொழுக்கட்டை அடைகளை  வைத்து எல்லா பெண்களும் வந்த அமர்ந்தவுடன் கதை சொல்லப்படும்.. ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் சொல்லுவார்கள்.. அவரவர் கற்பனைக்கு ஏற்ப வார்த்தைகளை கூட்டி குறைத்து அழகாக சொல்லுவார்கள் இன்றும் ஆழமாக நினைவடுக்கில்  உள்ளது.." ஊரடங்கி, ஒத்த சாமமிட்டு" போன்ற வழக்கில் இருக்கும் சொற்கள் கதையில் நிறைய வரும்... சிறு பெண்கள் கையில் ஒரு தட்டும் புங்க குச்சியும், புளிய குச்சியும் வழங்கப்படும்..நாங்கள் கதை முடியும் வரை  ஊம் கொட்டி தட்டில் குச்சியால் தட்ட வேண்டும் அதன் பின் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடுவோம் ..அவ்வளவு ருசியாக இருக்கும் இவ்வளவுக்கு உப்பு கூட சேர்க்காமல் செய்யும் கொழுக்கட்டை அது....ஆனால் மனம் நிறைவாக சந்தோஷமாக இருக்கும்...

டிவி அழித்த எத்தனையோ நல்ல விஷயங்களில் ஒன்று இந்த கொண்டாட்டம்..இப்போது ஊரில் கூட கொண்டாடப்படுவதில்லை என்று அம்மா சொன்னார்கள்... நான் சாப்பிடனும் போல இருக்கு மா என்று சொல்ல என் அம்மா இங்கு வந்த போது என் தங்கை நான் அம்மா மூன்று பேரும்  சேர்ந்து செய்து சாப்பிட்டோம்...ருசி நாவை தொட்டாலும்  மனம் நிறையவே இல்லை ..ஏதோ ஒன்று இழந்தது போல..........

கிறுக்கல்கள்

மிரளும் மான்கள் அறிவதுமில்லை 
அவற்றிற்கு தெரிவதுமில்லை 
அதன் அழகும் கம்பீரமும் 
புலிகளின் வேட்கைக்கு 
எப்போதும் இரை தான் என்று .......
-------------------------

மலர் என்றாய் 
மான் என்றாய் 
மயில் என்றாய் 
குயில் என்றாய் 
தென்றல் என்றாய் 
நிலவு என்றாய் 
மழை என்றாய் 
கோவம் வரும்போது 
பேய் என்றாய் 
புயல் என்றாய் 
இன்னும் என்னேலோமா 
சொன்னாய் 
எல்லாம் சரி 
எப்போது நீயும் 
என்னை போல சக மனித உயிர் என்பாய் 
-----------------

சலசலவென்று வாய் மூடாமல் 
பேசும் என்னை 
குறுகுறுவென பார்க்கும்  ஒரு 
பார்வையால் மௌனிக்க வைக்க 
உன்னால் மட்டும் தான் முடியும்....
  -----------------.
---------------------------------

கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில்
மழலையின் மொழியில் 
தத்தி தவழும் தளிர் நடையில் 
பள்ளி பேருந்தில் கையசைத்து 
செல்லும் முகமறியா
குட்டி குழந்தைகளின் குதுகலத்தில்
தந்தை, தாயின் கை பிடித்து செல்லும்
குழந்தையின் பூரிப்பில்
பள்ளி செல்லும் விடலைகளின் 
கவலை அறியா துள்ளலில் 
கல்லூரி செல்லும் இளைஞர்களின்
நம்பிக்கை முகங்களில் 
உலகை மறந்து தாங்களே உலகென நினைத்து 
சாலை ஓரங்களிலும், பேருந்து நிறுத்ததிலும் 
பேசும் இளம் காதலர்களின் சந்தோஷத்தில் 
வேலைக்கு செல்லும் ஆண், பெண் 
முகங்களின் பரபரப்பில் 

இயற்கையின் எழிலில் 
மலரின் அழகில் 
கவிதையின் வரியில்
இசையின் லயத்தில் 
தனிமையின் அமைதியில் 
எங்கும் நிறைந்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளியில் 
என எல்லா இடங்களிலும் 
தேடுகின்றேன்...........
எங்கோ என்னை அறியாமல் 
தொலைந்து போன என் முகத்தை 
மீட்டு எடுத்து.........
மீண்டும் தொலைந்து போக .........

---------------------------

Saturday, 27 July 2013

தவமணி

பள்ளியில் இருக்கும் அந்த பெரிய மரத்தடியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் உட்கார்ந்து இருந்தனர்..சில ஆசிரியர்கள் வகுப்பை மரத்தடியில் எடுப்பார்கள்..
 படித்து பெரிய டீச்சர் ஆகணும் டீ என்று தவமணி சொல்லுவாள்.. விமலாவோ பெரிய டாக்டர் ஆகனும் என்ற கனவை சுமந்து கொண்டு இருந்தார்கள்..படிப்பில் விமலா சராசரிக்கு மேல் என்றால் தவமணி சராசரி...
ஒரு நாள் தவமணி தன புத்தகத்தில் இருந்து மடிக்கப்பட்ட அந்த கடிதத்தை எடுத்து வாசித்துவிட்டு நமுட்டு சிரிப்பாய் சிரித்தாள்..என்னடி என்று பக்கத்தில் அமர்ந்திருந்த விமலா கேட்க இவள் கடிதத்தை காட்டினாள்.
 அது ஒரு காதல் கடிதம். முதல் முறையாக அப்படி ஒரு கடிதத்தை அப்போது தான் வாசிக்கிறாள்..லவ் லெட்டர்..வாசித்தவுடன் இது தப்பு இல்லையா டீ என்று கேட்க நான் என்ன பண்ணட்டும் தினமும் நான் வரும் பஸ்ஸில் தான் வருகிறான். கொடுத்தான் நான் யோசிக்கும்முன்னே என் கையில் திணித்துவிட்டு சென்று விட்டான்..என்ன செய்ய என்று தெரியவில்லை. இங்கு வந்து வாசித்தேன்.எனக்கு வந்த முதல் லெட்டர் டீ என்ன செய்றதுன்னு தெரியல என்று தவமணி கிசுகிசுக்க..சரி சரி மதியம் பேசலாம் அப்படியே வை என்று விட்டு பாடம் கவனிக்க (!) தொடங்கினார்கள்.
 மதியம் உணவு முடித்து இருவரும் தனியாக சென்று மீண்டும் வாசிக்க இருவருக்கும் இனம் புரியாத குதூகலம். சரி டீ இதுக்கு பதில் எழுதலாம் என்று இருவரும் திருட்டுத்தனமாக அவனின் ஒவ்வொரு கவிதை வரிக்கும் பதில் எழுதினார்கள். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே.
 அதன் பின் தவமணியும் ஒரு விளையாட்டாக இதை ஒரு தொடர்கதையாக தொடர ஒரு கட்டத்தில் அவன் பள்ளி வாசலுக்கு வர ஆரம்பித்தான். ஒரு நாள் எங்காவது வெளியில் சந்திக்கலாம் என்று அவன் அழைக்க அவளும் சரி என்று சம்மதிக்க துணைக்கு விமலாவையும் கூப்பிட்டாள்.
சந்திக்க இடம் முடிவு செய்து ஒரு நாள் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லி விமலாவும் தவமணியும் சந்திக்க சென்றார்கள்.. அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியாக சென்ற விமலாவின் சொந்தகாரர் பார்த்து வீட்டில் சொல்லிவிட பிரச்சனை வெடித்தது. பள்ளிக்கு தகவல் அனுப்பப்பட்டது. பள்ளியில் இருவரின் பெற்றோரும் வரவைக்கப்பட்டு விவரம் சொல்லப்பட்டது..
வீட்டுக்கு சென்ற தவமணிக்கு சூடு வைக்கப்பட்டு அவள் எவ்வளவோ மறுத்தும்  அவசரம் அவசரமாக அவள் மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்கப்பட்டது... விமலாவின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு அவள் அத்தை ஊருக்கு அனுப்பபட்டாள்..
இப்படியாக இந்த நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நல்ல டீச்சரையும்  ஒரு நல்ல டாக்டரையும்  ஒரு விளையாட்டால் இந்த நாடு இழந்துவிட்டது....






Monday, 22 July 2013

அலாரம்

மொபைல் அவ்வளவாக ஆக்ரமிக்காத காலகட்டம் அது... என் பிள்ளைகள் ஸ்கூல் சென்று வந்து கொண்டு இருந்த நேரம்..அலாரம் டைம்பீஸ் தான் எழுப்ப..என் தம்பி என்னுடன் தங்கி இருந்தான் சென்னையில் ட்ரெயினிங் எதற்காகவோ .சென்னையில் தங்கி சென்று வந்து கொண்டு இருந்தான்..

ஷிபட் பேஸிசில் வேலை வீட்டு சாப்பாடு தவிர வேறு எதுவும் சாப்பிடமாட்டான் அப்போது..அதனால் அவனுக்கு ஆறு மணி ஷிப்ட் என்றால் காலை ஐந்து மணிக்குள் டிபன், சாப்பாடு இரண்டும் கட்டி கொடுத்து விடுவேன்.

ஒரு முறை தீபாவளிக்கு ஊருக்கு சென்று வந்த மறுநாள் காலை விடிகாலை கிளம்ப அலாரம் வைக்க சொல்லிவிட்டு அவன் தூங்கிவிட்டான் இரவு ..நானும் தூக்க கலக்கத்தில் அலாரம் நேரத்தை சரியாக கவனிக்காமல் பனிரெண்டுக்கு வைத்து விட்டு தூங்கி விட்டேன்.. அலாரம் அடித்தவுடன் அவனை எழுப்ப அவன் ஊரில் இருந்த வந்த அசதியில் இருந்ததால் நேரத்தை கூட சரியாக கவனிக்காமல் நான் எழுந்திருக்காமல் இருப்பதை பார்த்து என்ன கமலி உடம்பு சரியில்லையா சரி நான் இன்று காலை இட்லி ஏதாவது சாப்பிட்டு கொள்கிறேன் மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு கொள்கிறேன் நீ எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்லி போய் குளித்து ட்ரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்

ஒரு மணிக்கு தெரு முனையில் போய் நின்று இருக்கிறான்..கம்பெனி பஸ் வரவில்லை..பக்கத்தில் இருந்த டீ கடை திறக்கவில்லை..ஏன் என்று சந்தேகம் வர ஒரு வேளை கடைக்காரர் தீபாவளி காரணமாக கடை மூடி சென்று இருபார் என்று நினைத்து மேலும் சிறிது நின்று இருக்கிறான்..நேரம் ஆக ஆக அவனுக்கு யாருமே வரவில்லையே என்ற சந்தேகம் வர கிராஸ் செய்த ஒருவரிடம் மணி கேட்டுள்ளான் அவர் ஒன்றரை என்று சொல்ல இவன் வீட்டுக்கு வந்துவிட்டான் அப்போது தான் ஹால் கடிகாரம் நின்று இருப்பது தெரிந்தது..

நான் என்னடா உடம்பு சரியில்லையா திரும்பிட்ட என்று கேட்க அவன் நீ என்னத்தை அலாரம் வைச்ச மணி என்ன பாரு என்று அவன் சொல்ல நான் பார்க்க ஐயோ ஒன்றரை தான் ஆகுதா அதான் என்னால எழுந்திருக்கவே முடியலையா என்று சொல்ல நல்லவேலை நான் குளித்து மட்டும் சென்றேன் இந்த நேரத்தில் நீயும் எழுந்து சமைச்சிருந்த இன்னும் காமெடியா இருக்கும் பேய் உலாவுற நேரத்துல சமையல் குளியல சுத்தம் போ என்று சொல்ல அதன் பின் டென்சன் போய் எல்லாரும் சிரித்து கடைசியில் அன்று அவன் வேலைக்கும் போகல நானும் அதன் பின் தூங்கி லேட்டா எழுந்ததால் என் பிள்ளைகளும் பள்ளிக்கு போகமால் விடுமுறை தான் எல்லாருக்கும்....


அன்றிலிருந்து இன்று வரை அலாரம் வைக்கும் வேலை மட்டும் என்னிடம் யாருமே கொடுக்க மாட்டார்கள்...:) J J J

Saturday, 20 July 2013

அம்மா

நான் என் அம்மாவை பற்றி யோசிததேன்..என் அப்பா அளவு என் அம்மாவை நான் இன்று வரை நேசித்ததில்லை..ஏனென்று யோசித்தேன்..

என் அம்மா பார்த்து பாரத்து சிறு வயதில் செய்தது கிடையாது..அப்பாவே தான் எல்லாம் செய்வார்கள.. வீட்டில் வேறு நிறைய பேர் இருந்ததால் அதிகம் அம்மாவிடம் ஓட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது..வீட்டில் முதல் குழந்தை அதுவும் தந்தையின் செல்ல பெண் என்பதால் மாமா, பாட்டி என்று எல்லாரும் என்னையே தாங்க இதனால் என் தங்கை, தம்பி இருவருக்கும் எல்லாமே எனக்கு பின் தான்..அதனாலோ என்னவோ அம்மா என்னை விட என் தங்கை தம்பிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்..

தம்பியும், தங்கையும் அம்மா சொல்வதை கேட்க எனக்கு இருக்கும்செல்லத்தால் நான் அம்மா எது சொன்னாலும் எதிர்ப்பேன்..அவர் வீட்டு வேலையில் உதவ சொன்னால் முடியாது என்று சொல்வேன்..அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர் அதனால் என்னை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்த போது பெண் பிள்ளைக்கு எதுக்கு காசு செலவு பண்ணி இந்த படிப்பெல்லாம் என்று எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார்....

அதன் பின்னும் அப்பா அவர் நண்பர்களுடன் அரசியல் ,இலக்கியம் பேச நான் அங்கு போய் உட்கார்ந்துவிடுவேன்.. கிட்டத்தட்ட ஆண் பிள்ளை போல சைக்கிள், பைக் ஓட்ட, விளையாட என்று எல்லாம்பழக்க நான் அம்மாவிடம் இருந்து ரொம்ப விலகி போனேன்.. இதெல்லாம் என் தாய்க்கு அறவே பிடிக்காது..

வயது வந்த பருவம் வந்த பின் ஏகப்பட்ட கெடுபிடிகள் என் அம்மா போட எனக்கும் அம்மாவுக்கும் பயங்கர சண்டை நடக்கும்...நாளை இன்னொருவர் வீட்டிற்கு போக போகிறவள் இவள் செய்வது எதுவும் சரியில்லை என்ற ரீதியில் தான் அம்மா ஆரம்பிப்பார்கள்...ஒரு முறை இப்படியே செல்லம் குடுங்க நாளை எவனையாவது காதலிச்சுட்டு அவனை தான் கட்டிக்க போறேன்னு நிக்க போறா என்று என் அம்மா சொல்ல நான் அந்த வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாமல் ஆமாம் அப்படி தான் செய்வேன் என்று சொன்னேன்..

அன்றிலிருந்து அம்மாவை பயம் பிடித்து கொண்டுள்ளது..என் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்த காலகட்டத்தில் உறவினர்களுடன் பேசி என் தந்தை மனதை மாற்றி திருமண ஏற்பாடுகள் செய்துவிட்டார்...சில வருடங்கள் வரை அம்மா மேல் பயங்கர கோவம் இருந்தது...திருமணம் ஆன பின் என் வீட்டிற்கு வரவே மாட்டார்கள்.. ஏனென்றால் நான் என் அம்மாவை வார்த்தையால் வீருவேன்....

என் பிரசவத்தின் போது மற்ற ஆஸ்பத்திர் வாசத்திற்கும் , சித்தி, பெரிம்மா தான் உடன் இருப்பார்கள் நான் அம்மாவை பக்கத்திலேயே விடமாட்டேன்.. குழந்தை பிறந்த போது கூட...ஒரு சில வருடம் முன் ஏதோ ஒரு பேச்சின் போது என் பொண்ணு வேலைக்கு எல்லாம் போய் கஷ்டப்படுது என்று சொல்ல படிக்கணும் நிறைய சாதிக்கணும் அப்படின்னு இருந்த என் வாழ்க்கையை தான் ஒண்ணும் இல்லாம ஆக்கிட்ட இல்ல இப்ப எதுக்கு ரொம்ப சீன போடுற என்று கத்திவிட்டேன்..என் அம்மா நாளைக்கு உன் பிள்ளைக்கு கல்யாணம் பன்ன்றபோ கூட என் வாழ்க்கையை கெடுத்துட்னு சொல்லு என்று குரல் கம்ம...நான் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டேன்...

ஆரம்பத்தில் அம்மா வீட்டில் இருந்து எல்லாம் வரும் ஆனால் அம்மா என் வீடு வரமாட்டார்கள்... அப்பா மூலம் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படும்... என் குணம் தெரியும் ஆதலால் தந்தையும் வற்புறத்த மாட்டார்கள்...ஒரு விருந்தாளி மாதிரி தான் அம்மாக்கும் எனக்கும் உள்ள உறவு..

எனக்கு வயது ஆக ஆக இப்போது புரிகிறது.. படிப்பறிவில்லாத என் அம்மாவை நான் அதிகம் அந்த காலகட்டத்தில் கலவரப்படுத்தி இருக்கேன்...அம்மா அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத துரோகம் செய்யவில்லை...இப்போது என்ன நான் பேசினாலும் என் அம்மாவால் என்னிடம் அவ்வளவு ஓட்ட முடியவில்லை...என் தங்கை வீட்டில் உரிமையோடு இருக்கும் அம்மா என் வீட்டில் ஒரு நாள் இரண்டு நாட்கள் இருந்தாலே அபூர்வம்....வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பதற்கும் சில பிரிவுகளுக்கும் காரணம் புரிபடுவதில்லை....ஆனால் நடந்து விடுகிறது.....

தாயுமான தந்தை



ஒரு தந்தையின் முழு அன்பில் மூழ்கி திளைத்த எந்த ஒரு பெண்ணுக்கும தந்தையர் தினம் என்று ஒன்று தனியாக எல்லாம் இல்லை...அவளின் எல்லா உணர்வுகளிலும் அப்பா காற்றை போல கலந்து இருப்பார்....பிரித்தே பார்க்க முடியாது..வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அது பெண்ணின் அடியாழத்தில் உறைந்திருக்கும உணர்வு..

தாய் இல்லாத பிள்ளைகளுக்கு தாயுமானவரான பல தந்தைகள் உண்டு..ஆனால் தாய் இருக்கும் போதே தாயுமான தந்தை சிலரே..என் அப்பா தாயுமானவர் மட்டும் இல்லை அதற்கு மேலே....வார்த்தையில் எல்லாம் சொல்ல முடியாது...

முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த நேரம்..வயதின் காரணமாக விபரம் தெரியவில்லை..கரு தரித்ததில் இருந்து வாந்தி, மசக்கை .. எதுவும் சாப்பிடமுடியாது..என் கணவர் வீட்டில் தண்ணீர் கூட செல்லாமல் வாந்தி எடுப்பதை பார்த்து பயந்து என் வீட்டிற்கு தகவல் சொல்ல என் தந்தை வந்து என்னை அழைத்து வந்துவிட்டார்கள்..வீட்டிற்கு வந்த பின் என் தந்தை தான் சாப்பிட வைப்பார்கள் வேண்டாம் பா வாந்தி எடுக்கும் பயமா இருக்கு என்றால் பரவாயில்லை உள்ளே சென்று வெளியே வந்தால் தெம்பு தான் நீ எழுந்திருக்க எல்லாம் வேண்டாம் முற்றத்திலேயே வாந்தி வந்தால் எடு தண்ணீர் ஊற்றினால் போச்சு என்று சொல்லி வாந்தி எடுக்கும் போது என் தலையை பிடித்து கொள்வார்...என் கணவர் வாந்தி எடுப்பதை பார்த்தால் தனக்கும் வாந்தி வரும் என்று தள்ளி தான் நிற்பார்...

மாதுளங்கா ரசம், யார் யார் எதெல்லாம் சாப்பிட்டால் வாந்தி வராது என்று சொல்கிறார்களோ அவ்வளவும் வாங்கி வருவார்...சிறு வயதில் எனக்கு தலையில் அடிப்பட்டதால் தலை வலி வரும்போது வலி நிவாரணி மாத்திரை எடுத்து கொள்வேன், ஆனால் குழந்தை வயிற்றில் சுமக்கும் போது அந்த மாத்திரை எடுத்துகொள்ள கூடாது என்று சொல்லிவிட்டார்கள்..அது மட்டுமல்ல அப்போது கும்பகோணத்தில் பிரபலமாக இருந்த மகப்பேறு மருத்துவர்கள் எனக்கு பிரசவம் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்..பிரசவ நேரத்தில் தலை வலி அதிகம் இருந்தால் பிட்ஸ் வர வாய்ப்பு அதிகம் ரிஸ்க் என்று.. மருத்துவருக்காக என் தந்தை என் கேஸ் ஹிஸ்டரி எடுத்து கொண்டு அலைந்து ஒரு வழியாக சொர்ணலதா என்று அப்போது தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த ஒரு அரசு மருத்துவர் தனியாக கிளினிக் ஆரம்பித்திருப்பவரிடம் பேசி அவர் நான் சொல்லும் அறிவுரைப்படி பிள்ளை பெரிதாகிடும் என்று அக்கம் பக்கம் பேச்சை எல்லாம் கேட்காமல் உங்கள் மகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பதாக இருந்தால் பார்கிறேன் என்று சொன்னார்...சிசேரியன் செய்ய வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் ( 20 வருடம் முன் சிசேரியன் எல்லாம் அரிது) அப்பாவும் சம்மதிக்க அவரின் அறிவுரையின் பெயரில் தான் எல்லாமே..

ஐந்து மாதம் கழித்து வாந்தி குறைந்தது ஆனால் திடீர் திடீர் என்று தலைவலி வரும்..அதுவும் இரவில் மாத்திரைக்கு பழக்கப்பட்ட வலி குறையாது..மண்டையை தூணில் முட்டி கொள்வேன்..என் அப்பா இல்லை என்றால் என் அருகில் யாரும் நெருங்க கூட முடியாது அப்பா பொறுமையாக என்னை முற்றத்தில் ஈசிசேர் போட்டு அதில் உட்காரவைத்து தலை பிடித்து விடுவார்கள் இதமாக தைலம் தேய்த்து என் வலி மறக்க ஏதேதோ கதை எல்லாம் சொல்லுவார்கள்...வலி தாங்கி பழகணும் இதை விட உலகில் எவ்வளவோ கொடிய வலிகள் எல்லாம் இருக்கு என்று என் அப்பா சொல்லும் விதமே தனி... நான் கண்ணயரும் வரை கைவைத்தியமாக சுக்கு உரைத்து பற்று போட, கிராம்பை பாலில் உரைத்து, ஈர துணியை போட்டு போட்டு எடுப்பது தலை லேசாக அமுக்கிவிடுவது என்று பேசிக்கொண்டே செய்வார்கள்...தலைவலி மாத்திரை எடுக்காமலே சமாளித்தேன் என் அப்பாவால்..

அதன் பின் அக்கம்பக்கம் எல்லாம் பிள்ளை தாய்சசி பெண் இப்படி வேலை செய்யாமல் இருந்தால் பிரசவம் கஷ்டம் என்று சொல்ல என் அப்பா சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு முற்றத்தில் இருக்கும் தூணோடு இறுக கட்டி விடுவார்கள்... என்னை சும்மா இருக்கும் போது எல்லாம் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து பெடல் பண்ண சொல்லுவார்கள்... அவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை அல்லது சுவையான ஏதாவது செய்திகளை சொல்லி கொண்டே... நானும் செய்வேன்.. பிள்ளை பிறக்கும் வரை அது மட்டும் தான் எனக்கு தெரிந்து நான் செய்த பிஸிக்கல் வொர்க் அப்போது...

காபிக்கு பழக்கமாகி இருந்த என்னை காலையில் வெறும் வயிற்றில் வெந்திய பொடி மோர் சாப்பிட வைப்பார் அப்பா ப்ளீஸ் பா என்று எவ்வளவு கெஞ்சினாலும் பேசியே எப்படியோ சாப்பிட வைப்பார்.அவரின் பேச்சை மறுக்கவே தோன்றாது... கொதிநீரில் நெய், கஷாயம்,என்னென்ன சாப்பிடனுமோ அத்தனையும் பாட்டி என் அப்பாவிடம் கொடுத்து சாப்பிட வைத்துவிடுவார்கள்.

அந்த நேரத்தில் ஒற்றை சூடு நீர் எங்கள் வீட்டு இரண்டாம் கட்டு முற்றத்தில் (காலவாய் அடுப்பு, நெல் அவித்து ௦ காய வைக்கும் இடம்) குளிக்க தயார் செய்வது அப்பா தான்..தலை நான் சரியாக தேய்க்காமல் எண்ணெயுடன் இருந்தால் தலைவலி வரும் என்று செண்பகவல்லி என்ற வேலை செய்பவரை துணைக்கு வைத்து கொண்டு தலை அப்பா தான் தேய்த்துவிடுவார்..அந்த அம்மாவை தண்ணீர் விட சொல்லி தலையை அலசிவிட்டு பின் தான் செல்வார்...அந்த அம்மாள் நான் குளிக்கும் வரை காவலுக்கு கூடவே இருப்பார்..

நான் குளித்துவிட்டு வருவதற்குள் சாம்பிராணி ரெடியாக வைக்கபட்டிருக்கும் .தலை காயும் வரை தூங்கவே விட மாட்டார்...உள்ளங்காலில் தினமும் விளக்கெண்ணெய் இரவில் தேய்த்துவிடுவார்..சாதாரண வலிக்கு கூட வீட்டில் உள்ளவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல் வண்டிக்காரரை வண்டி (மாட்டு வண்டி தான் அப்போது) கட்ட சொல்லி ஆஸ்பத்திரி கூட்டி சென்று விடுவார்கள்..எனக்கு பிரசவமாகும் வரை வேறு எங்கும் செல்ல கூடாது என்று வண்டிக்காரரிடம சொல்லி இருந்தார்...

ஒரு ஞாயிறு காலை மகாபாரதம் பார்த்து முடிக்கும் போது லேசாக ஏதோ தோன்றியது..ஏற்கனவே சாதா வலிக்கு எல்லாம் நான் ரகளை அடித்து நானே ஓய்ந்து இருந்தேன்..அதனால் சரி பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..மதியம் ஒரு மணிக்கு "நிழல்கள்" திரைப்படம் அப்போது தூர்தர்ஷன்ல தேசிய மொழி படம்..அதை பார்க்கும் போது வலி கூட ஆரம்பித்தது..அப்பா மாலை வருகிறேன் என்று ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்று இருந்தார்கள்..சித்தி வேறு இவளுக்கு இதே வேலை தான் பனிக்குடம் உடைந்த பின் ஆஸ்பத்திரி செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள்..கஷாயம் போட்டு குடிக்க குடுக்க வலி உச்சம் அதற்குள் என் அப்பா வந்துவிட்டார்கள் நன்கு சாப்பிட கூட இல்லை உடனே வண்டி கட்ட சொல்ல என் வீட்டில் எல்லாரும் ராகு காலம் முடிந்த பின் ஆஸ்பத்திரி செல்லாம் என சொல்ல என் தந்தை செம டென்சனாகி அவ வலில இருக்கா ராகுகாலமாவது ஒன்னாவது என்று என்னை வண்டியில் படுக்கவைத்து என் பெரிம்மாவையும், சித்தியையும் துணைக்கு ஏற்றி அனுப்பிவிட்டு சைக்கிளில் பின்னாலே வந்தார் நான் ஆஸ்பத்திர் வருவதற்குள் எனக்கு முன்னால் டாக்டருடன் ஆஸ்பிட்டல் வாசலில் என் அப்பா... 


குழந்தை பெரியதாகவும் என்னுடைய ஒத்துழைப்பு அவ்வளவாக இல்லாததாலும் கிட்டத்தட்ட் மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பின் தான் என் மகன் எட்டரை மணி வாக்கில பிறந்தான்....டாக்டர்கள் சிசேரியனுக்கு தயாராக இருந்த போதும் கடவுள் அருளா இல்லை என் தந்தையின் அன்பா எதுவோ எனக்கு பிரசவ வலி தாங்க முடிந்தது அதனால் அந்த நேரம் தலைவலி, வலியின் அழுத்தத்தால் வருமோ என்று பயந்த பிட்ஸ் வரவில்லை.. நார்மல் டெலிவரியில் என் மகன் பிறந்தான்...மூன்றே முக்கால் கிலோவில் ....

என் தந்தை நான் கத்திய சத்தம் கேட்டு வெளியில் அழவே செய்திருக்கிறார்கள்..என் அம்மாவுக்கு வேறு திட்டு ஐயோ என் பொண்ணு ஒரு குழந்தை உங்க பேச்சை எல்லாம் கேட்டு கல்யாணம் பண்ணினேனே என்று..உள்ளே நான் அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே இருந்தேன்...ஒரு வழியாக டாக்டர் வெளியே வந்தவுடன் என் தந்தையிடம் உங்கள் மகள் நலம், பேரன் பிறந்திருக்கிறான் என்று சொல்லியவர் என் தந்தை முகம் பார்த்து அவரே ஒரு மாதிரியாகி நாங்கள் ஆண்களை லேபர் வார்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்..ஆனால் நீங்கள் உங்கள் பெண்ணை பார்த்தால் தான் நிம்மதி ஆவீர்கள் கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து அங்கு இருந்தவர்களிடம் ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணுங்க, என்று பெட்சீட் எடுத்து என் மேல் போர்த்திவிட்டு ,அவ அப்பா வந்து அவளை பார்க்கட்டும் என்று சொன்னார்..என் தந்தை லேபர் வார்டுக்குள் வந்து என்னை பார்த்தவுடன் அப்பா கால் எல்லாம் வலிக்குது என்று மீண்டும் நான் அழ கண்ணா நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கு எல்லாம் நான் வரகூடாது இன்னும் சற்று நேரத்தில் உன்னை ரூம் மாற்றுவார்கள் நான் கால் வலிக்கு தைலம் தேய்க்கிறேன்... இங்க பார்த்தியா எவ்வளவு அழகு உன் பையன அப்படின்னு என்று ஆறுதல் சொல்லி தலை கோதிவிட்டு தூங்குடா செல்லம் ..என்று சொல்லி வெளியில் சென்றார்கள்.. அதன் பின் நான் மயங்கிவிட்டேன்..

என் அப்பா அந்த நேரத்தில் அங்கு என்னுடன் அறையில் பணிபுரிந்த அத்தனை நர்ஸ்கள் எல்லாருக்கும் அவர்கள் கேட்ட சாப்பாடு, எல்லாருக்கும் இனிப்பு என்று ஏக தடபுடல்..நான் ஸ்பெஷல் ரூமுக்கு வந்த பின் நான் கண் விழித்து பார்த்த போது என் அப்பா என் கால் பிடித்து விட்டு கொண்டு இருந்தார்...என் சித்தி என் குழந்தையை வைத்து கொண்டு இருந்தார்...

அதன் பின்னும் என் பையனை சிறிது காலம் வரை என் தந்தை தான் வளர்த்தார்..நான் சென்னை வரும்வரை..இதோ இன்று நான் வீட்டுக்கு போகிறேன் என்றாலும் எனக்கு என்னலாம் பிடிக்குமோ அதெல்லாம் என் அம்மாவை சமைக்க சொல்லி நான் வரும்வரை சாப்பிடாமல் காத்து இருப்பதில் ஆகட்டும், இன்றும் இரவு பால் குடிக்க வற்புறுத்துவதில் ஆகட்டும்....அந்த அன்புக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது... இப்போது கூட என் கணவர் கிண்டல் செய்வார் என்ன அப்பா ஊட்டி விட்டாங்களா.. ஒரு பொண்ணை எப்படி கெடுத்து வளர்க்கனுமோ அப்படி வளர்த்திருக்கார் என்று...நான் சொல்லுவேன் அதை உங்களுக்கு ஒரு பெண் பிறந்து நீங்கள் வளர்த்தால் தான் உங்களுக்கு சொல்ல தகுதி உண்டு என்று....மறு ஜென்மம் உண்டா இல்லையா தெரியவில்லை ஆனால் அப்படி ஒன்று இருந்தால் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வேண்டும்....என்னுடைய மற்ற எல்லா உறவுகளும் என் அப்பாக்கு பிறகு தான்.....

அப்பா

இன்று வரை
ஏன் இனியும்
இதற்கு ஈடாக ஏதும் இல்லை

அரசு அலுவல் காரணமாக அடிக்கடி என்
அப்பாவுக்கு பணி இடமாற்றம் இருக்கும்
அதனால் வீடு மாற்றமும் இருக்கும்..

விபரம் தெரியாத வயதில்
வாடகை வீட்டின் கதவை நான் ஆட்ட
வீட்டின் உரிமையாளர் அதற்காக என்னை கோபிக்க
அப்போது வீட்டிற்கு வந்த என் அப்பாவின் காதில் விழ
அந்த நிமிடமே வெளியே சென்று வாடகை வண்டி அமர்த்தி வந்து
கல்லுரலில் அரிசி அரைத்து கொண்டிருந்த என் அம்மாவிடம்
இனி என் குழந்தை வாடகை வீட்டில் வளர கூடாது
நான் கஷ்டபட்டாலும் பரவாயில்லை என்று
சொல்லி அம்மாவை கூட்டிகொண்டு உடனே புறப்பட
என் அம்மா அரிசி ஒரு ஊரிலும்
உளுந்து ஒரு ஊரிலும ஆட்டிய பெருமை என்னையே சேரும்
என்று இன்று வரை அங்கலய்பார்கள்..
அன்றிலிருந்து திருமணம் ஆகும் வரை
உறவினர் வீடு அன்றி வேறு வீட்டில் இருந்ததில்லை..
என் அறியா வயதில் என் தந்தையின் பாசம்
பற்றி காதால் கேட்டதில் இதுவும் ஒன்று..

நான் ஒரு முறை வீட்டின் கூடத்தில்
இருந்த ஊஞ்சலில் இருந்து கீழே விழ
அன்றே ஊஞ்சல் கழட்டி
அதன் பின் நான் பள்ளி சென்ற நாள் முதல்
உறவினர்களின் பேச்சை பொருட்படுத்தாமல்
ஆங்கில வழி கல்வி கற்க வைத்ததில் ஆரம்பித்து
சைக்கிள் ஓட்ட பழக்கி,
விடுமுறையில் புத்தகங்கள் வாசிக்க வைத்து
என்னுடன் அது பற்றி கலந்துரையாடி
கோவில் சென்றால் முன்னால் இருக்கும்
பலி பீடத்திலேயே நான் என்று அகந்தையை
பலி கொடுத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும்
செல்வது பிச்சை கேக்க அல்ல என்று
சிறு வயதிலேயே கோவில் பற்றியும்
கடவுள் தேடல் பற்றியும் ஆழமாக
நெஞ்சில் விதைத்தது இன்றும் கனன்று கொண்டிருக்கிறது ..
அப்பாவின் பாசம் பற்றி சொல்ல சொல்ல சொல்லில் அடங்கா..

மாரடைப்பால் உடலளவில் என் தந்தை
தளர்ந்திருந்தபோது உறவினர் வற்புறுத்தி
என் திருமணம்

திருமணம் பற்றி ஏதும் அறியாமல்
என் திருமண வாழ்கை சிக்கலுக்குள் விழ
குழந்தை பிறந்த பின்னும் நான்
பக்குவம் அடையாமல் இருப்பதாய்
புகுந்த வீடு தூற்ற...
என் வீட்டு முற்றத்தில் உறவினர்
அனைவரும் என் தந்தை என்னை
வளர்த்த முறை சரி இல்லை என குற்றம் சுமத்த
யாவரும் சென்ற பின் என் தந்தை
தப்பு பண்ணிட்டேன் மா..
உனக்கு நான் திருமண வாழ்கை பற்றி
அறியா வயதில் திருமணம் செய்து வைத்திருக்ககூடாது
என் பொண்ணை யாரும் புரிஞ்சுகலையே
என அழ
இனி என் பொருட்டு என் அப்பா அழகூடாது என
படிப்பு, விளையாட்டு, சிந்தனை எல்லாம் விட்டு
பொறுப்புகள் சுமந்து
புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுத்து
குழந்தைகளையும் சிறப்புற நான் வளர்த்ததிற்கு
பின்புலமாய் இருந்தது என் அப்பாவின்
கண்ணீர் என இன்று வரை யாருக்கும் தெரியாது.....

சில மாதம் முன்
என் தந்தை வீட்டிற்கு செல்ல
சென்ற அலுப்பில் சீக்கிரமே உறங்கிவிட
இரவு பால் எடுத்து வந்து எழுப்பி
குடித்துவிட்டு தூங்குமா என கூற
பால் குடிக்கும் பழக்கம் எல்லாம்
விட்டு ரொம்ப நாளாச்சுப்பா என
நான் சொல்ல
உன் உடம்ப பார்துக்கவேணமா மா
என்ற அப்பாவின் கரிசனம நெஞ்சை பாரமாய் அழுத்த
குழந்தையாகவே இருந்திருக்கலாமே என்ற
ஏக்கம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.......

கமலி..
பெண்ணின் உடை பற்றி விமர்சிக்காத ஆண்களே இல்லை..ஒரு பெண்ணுக்கு அது எந்த மாதிரியான மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதை அறியாமலே.. ஓரிரு நாட்கள் முன் விஜய் எழுதிய பதிவில் நாம் அறியாமல் நம்மை நிர்வாணமாக்கி அதை அம்ப்லப்படுத்த்துபவரை கண்டு நாம் பயப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்..

மிக சரி நம்மை அறியாமல் எடுக்கப்படும் படத்துக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டாம்.. ஆனால் இந்த சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் அந்த பெண்ணை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி சில சமயம் தற்கொலை வரை கொண்டு போய் விடுகிறது..

பெண்ணிற்கு சிறு வயதில் இருந்து உடை இப்படி இருக்க வேண்டும், (உடனே பொண்ணுங்க எங்கே முழுசா உடுததுறாங்கனு குதர்க்கம் பேசாதீர்கள்)அப்படி இருக்க வேண்டும் உடை உன் முழு உடலையும் மறைக்க வேண்டும். உன் உடல் கணவன் மட்டும் தான் பார்க்க வேண்டும என்ற ரீதியில் வளர்க்கப்படும் போது அவள் சிறு வயதில் இருந்தே அவளையறியாமல் அந்த சுமையை ஆழ் மனதில் சுமக்க தொடங்கிவிடுகிறாள்... அதன் விளைவு தான் அவள் நிர்வாணம் , அரை நிர்வாணம் அவளையறியாமல் வெளியிடப்படும் போது உடைந்து போகிறாள்... அது மட்டுமல்ல
இதனால் அவளுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உட்பட பல உடல் ரீதியான உபாதைகளை அவள் வெளியில் சொல்லாமல் அது முற்றி மரணத்தில் போய் முடிகிறது...ஒரு பெண் தன் உடல் உபாதையை கூட வெளியில் சொல்ல முடியாத காண்பிக்க முடியாத மன நெருக்கடி எதனால்?

ஒரு பெண் சுயநிலை இல்லாமல் இருக்கும்போது அல்லது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட முதலில் அவள் கண்விழித்தவுடன் உடையை தான் சரி செய்வாள்....ஒரு சைக்கிளில் இருந்தோ பைக்கில் இருந்தோ கீழே விழும்போது கூட அடிபட்டதை முதலில் கவனிக்காமல் உடையை தான் கவனிக்கிறாள் என்றால் உடலை தாண்டி உடை பற்றிய சிந்தனை அவள் மனதில் எந்த அளவு ஆழ பதிந்திருக்கு என்று சிந்தியுங்கள்.

மானம், கவுரவம் எல்லாமே முக்கியம் தான் ஆனால் அதைவிட உயிரும் பாதுக்காப்பும் முக்கியம் என்பதை குழந்தை முதல் சொல்லி வளர்ப்போம்...

உடை உடலுக்கு மட்டுமே அதை ஒரு “ கை விலங்காக” நினைக்க வைத்தனால் தான் சில பெண்கள் சுதந்திரத்தின் அடையாளமாக உடையை தேர்ந்தெடுக்கிறார்கள்.. எதிலும் காட்ட முடியாமல் அடக்கப்பட்ட சுதந்திர உணர்வை உடையில் காட்டி தீர்த்து கொள்கிறார்கள்...

இந்த கட்டுரையின் சாராம்சம் எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என்பது இல்லை..... ஒரு பெண் பிறந்ததில் இருந்து விவரம் அறிந்தத்தில் இருந்து சாகும் வரை இப்படி இரு அப்படி இரு இப்படி உடுத்து அப்படி உடுத்து என்று ஒவ்வொரு நொடியும் அவள் உடலை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்வதை தவிர்க்கலாமே ..........