Saturday, 20 July 2013

அப்பா

இன்று வரை
ஏன் இனியும்
இதற்கு ஈடாக ஏதும் இல்லை

அரசு அலுவல் காரணமாக அடிக்கடி என்
அப்பாவுக்கு பணி இடமாற்றம் இருக்கும்
அதனால் வீடு மாற்றமும் இருக்கும்..

விபரம் தெரியாத வயதில்
வாடகை வீட்டின் கதவை நான் ஆட்ட
வீட்டின் உரிமையாளர் அதற்காக என்னை கோபிக்க
அப்போது வீட்டிற்கு வந்த என் அப்பாவின் காதில் விழ
அந்த நிமிடமே வெளியே சென்று வாடகை வண்டி அமர்த்தி வந்து
கல்லுரலில் அரிசி அரைத்து கொண்டிருந்த என் அம்மாவிடம்
இனி என் குழந்தை வாடகை வீட்டில் வளர கூடாது
நான் கஷ்டபட்டாலும் பரவாயில்லை என்று
சொல்லி அம்மாவை கூட்டிகொண்டு உடனே புறப்பட
என் அம்மா அரிசி ஒரு ஊரிலும்
உளுந்து ஒரு ஊரிலும ஆட்டிய பெருமை என்னையே சேரும்
என்று இன்று வரை அங்கலய்பார்கள்..
அன்றிலிருந்து திருமணம் ஆகும் வரை
உறவினர் வீடு அன்றி வேறு வீட்டில் இருந்ததில்லை..
என் அறியா வயதில் என் தந்தையின் பாசம்
பற்றி காதால் கேட்டதில் இதுவும் ஒன்று..

நான் ஒரு முறை வீட்டின் கூடத்தில்
இருந்த ஊஞ்சலில் இருந்து கீழே விழ
அன்றே ஊஞ்சல் கழட்டி
அதன் பின் நான் பள்ளி சென்ற நாள் முதல்
உறவினர்களின் பேச்சை பொருட்படுத்தாமல்
ஆங்கில வழி கல்வி கற்க வைத்ததில் ஆரம்பித்து
சைக்கிள் ஓட்ட பழக்கி,
விடுமுறையில் புத்தகங்கள் வாசிக்க வைத்து
என்னுடன் அது பற்றி கலந்துரையாடி
கோவில் சென்றால் முன்னால் இருக்கும்
பலி பீடத்திலேயே நான் என்று அகந்தையை
பலி கொடுத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும்
செல்வது பிச்சை கேக்க அல்ல என்று
சிறு வயதிலேயே கோவில் பற்றியும்
கடவுள் தேடல் பற்றியும் ஆழமாக
நெஞ்சில் விதைத்தது இன்றும் கனன்று கொண்டிருக்கிறது ..
அப்பாவின் பாசம் பற்றி சொல்ல சொல்ல சொல்லில் அடங்கா..

மாரடைப்பால் உடலளவில் என் தந்தை
தளர்ந்திருந்தபோது உறவினர் வற்புறுத்தி
என் திருமணம்

திருமணம் பற்றி ஏதும் அறியாமல்
என் திருமண வாழ்கை சிக்கலுக்குள் விழ
குழந்தை பிறந்த பின்னும் நான்
பக்குவம் அடையாமல் இருப்பதாய்
புகுந்த வீடு தூற்ற...
என் வீட்டு முற்றத்தில் உறவினர்
அனைவரும் என் தந்தை என்னை
வளர்த்த முறை சரி இல்லை என குற்றம் சுமத்த
யாவரும் சென்ற பின் என் தந்தை
தப்பு பண்ணிட்டேன் மா..
உனக்கு நான் திருமண வாழ்கை பற்றி
அறியா வயதில் திருமணம் செய்து வைத்திருக்ககூடாது
என் பொண்ணை யாரும் புரிஞ்சுகலையே
என அழ
இனி என் பொருட்டு என் அப்பா அழகூடாது என
படிப்பு, விளையாட்டு, சிந்தனை எல்லாம் விட்டு
பொறுப்புகள் சுமந்து
புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுத்து
குழந்தைகளையும் சிறப்புற நான் வளர்த்ததிற்கு
பின்புலமாய் இருந்தது என் அப்பாவின்
கண்ணீர் என இன்று வரை யாருக்கும் தெரியாது.....

சில மாதம் முன்
என் தந்தை வீட்டிற்கு செல்ல
சென்ற அலுப்பில் சீக்கிரமே உறங்கிவிட
இரவு பால் எடுத்து வந்து எழுப்பி
குடித்துவிட்டு தூங்குமா என கூற
பால் குடிக்கும் பழக்கம் எல்லாம்
விட்டு ரொம்ப நாளாச்சுப்பா என
நான் சொல்ல
உன் உடம்ப பார்துக்கவேணமா மா
என்ற அப்பாவின் கரிசனம நெஞ்சை பாரமாய் அழுத்த
குழந்தையாகவே இருந்திருக்கலாமே என்ற
ஏக்கம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.......

கமலி..

1 comment:

  1. இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட அப்பா எல்லோருக்கும் வாய்ப்பதில்லை .

    அப்பாவிற்கு என்று எத்தனை சிறப்புகள் இருந்தாலும் ஒரு ஊரில் அரிசியும் வேறு ஊரில் உளுந்தும் ஆட்டிய பெருமை எனக்குத் தெரிந்த வரை வேறு எங்கும் வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை

    இந்த அன்பு மிக்க பெற்றோர்களுக்கு பிறந்த நீங்கள் மட்டும் எப்படி சோடை போக முடியும் .

    மனப் பக்குவம் வரும் வரை சிறு சிறு தவறுகள் செய்வது எல்லோருக்கும் இயற்கை தானே .

    அப்பா வீட்டில் இருக்கும் இந்த தருணத்தில் அவர் மனம் சந்தோஷமாக இருக்கும் படி அவரை வைத்திருப்பதும் அடிக்கடி அவரை நேரில் சென்று பார்ப்பதும் பிள்ளைகளை நன்றாக வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு செல்வதும் தான் அவருக்கு செய்யும் சரியான நன்றிக் கடன் .

    அந்தத் திசையில் நீங்கள் மிகவும் செல்லுகிறீர்கள் என்றே நம்புகிறேன்

    அன்பும் பாசமும் கலந்த அழகான கட்டுரை

    ReplyDelete