Tuesday 30 July 2013

செவ்வாய் பிள்ளையார்

எங்கள் ஊர் பக்கம் செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை என்று ஒன்று ஆடி, தை, மாசி மாதங்களில் வளர்பிறை செவ்வாய் கிழமைகளில் இரவுகளில் செய்வார்கள்...

அன்று இரவு உணவு சீக்கிரம் முடித்துவிட்டு ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறிட வேண்டும்...ஆண்களுக்கு அனுமதி இல்லை..சிறு ஆண் பிள்ளைகள் கூட திண்ணை தாண்டி உள்ளே வரகூடாது...பெண்கள் மட்டும் தான். எங்கள் வீடு பெரியது.. சுற்று கட்டு வீடு என்று சொல்லப்படும் முற்றம் , தாழ்வாரம் எல்லாம் உள்ளது...அக்கம் பக்கம் பெண்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து ஊறவைத்த அரிசி தேங்காய் கொண்டு வருவார்கள்....

எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் குடைக்கல், உரல்  பதிக்கபட்டிருக்கும்.. வயது பெண்கள் சிலர் உலக்கையை எடுத்து அரிசி குத்துவார்கள் சிலர் இடித்த மாவை சலிப்பார்கள், சிலர் தேங்காய் துருவுவார்கள், சிலர் தேங்காயை சில்லு சில்லாக அறிவார்கள்...வயதில் பெரியவர்கள் (பாட்டி , அந்த வயது) மாவை ஒன்று சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை செய்து கொண்டே சிறு பிள்ளைகளுக்கும் சொல்லி தருவார்கள்...மத்திம வயது பெண்கள் (சித்தி, அத்தை) அடுப்பை பார்த்து கொள்வார்கள்....

கிண்டலும், கேலியுமாக வீடு அமர்க்களப்படும்....இப்படி எல்லாம் கூட இவர்கள் பேசுவார்களா என்று ஆச்சரியமாக இருக்கும்...அதன் பின் மாவு  சலித்த கப்பியில் கோலம் போட்டு பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலையில் வேக வைத்த கொழுக்கட்டை அடைகளை  வைத்து எல்லா பெண்களும் வந்த அமர்ந்தவுடன் கதை சொல்லப்படும்.. ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் சொல்லுவார்கள்.. அவரவர் கற்பனைக்கு ஏற்ப வார்த்தைகளை கூட்டி குறைத்து அழகாக சொல்லுவார்கள் இன்றும் ஆழமாக நினைவடுக்கில்  உள்ளது.." ஊரடங்கி, ஒத்த சாமமிட்டு" போன்ற வழக்கில் இருக்கும் சொற்கள் கதையில் நிறைய வரும்... சிறு பெண்கள் கையில் ஒரு தட்டும் புங்க குச்சியும், புளிய குச்சியும் வழங்கப்படும்..நாங்கள் கதை முடியும் வரை  ஊம் கொட்டி தட்டில் குச்சியால் தட்ட வேண்டும் அதன் பின் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடுவோம் ..அவ்வளவு ருசியாக இருக்கும் இவ்வளவுக்கு உப்பு கூட சேர்க்காமல் செய்யும் கொழுக்கட்டை அது....ஆனால் மனம் நிறைவாக சந்தோஷமாக இருக்கும்...

டிவி அழித்த எத்தனையோ நல்ல விஷயங்களில் ஒன்று இந்த கொண்டாட்டம்..இப்போது ஊரில் கூட கொண்டாடப்படுவதில்லை என்று அம்மா சொன்னார்கள்... நான் சாப்பிடனும் போல இருக்கு மா என்று சொல்ல என் அம்மா இங்கு வந்த போது என் தங்கை நான் அம்மா மூன்று பேரும்  சேர்ந்து செய்து சாப்பிட்டோம்...ருசி நாவை தொட்டாலும்  மனம் நிறையவே இல்லை ..ஏதோ ஒன்று இழந்தது போல..........

No comments:

Post a Comment